இமை 35
சங்கவி நேத்ராவை யாரோ கடத்தி சென்றதாக வந்து சொல்லவும், அனைவரும் உச்சபட்ச அதிர்ச்சியில் திகைத்து நின்றனர்.. “எப்ப நடந்து எவ்வளவு நேரம் ஆச்சு என்று சங்கவியிடம் கேட்டவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல், நொடியும் தாமதிக்காமல் புயல் வேகத்தில் அறையை விட்டு வெளியேறிய விஜய் நேராக மருத்துவமனை வாசலில் வந்து நின்றான்..
இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்து எந்த வாகனமும் வெளியே போக கூடாது.. அப்படி மீறி போனால் அதற்கான பின்விளைவுகள் இந்த ஹாஸ்பிடல் ஏற்க நேரிடும்..” என்று அங்கிருந்து செக்யூரிட்டியிடம் கடுங்குரலில் எச்சரித்து விட்டு மருத்துவமனை முழுதும் சுற்றி வந்தவன்..
தான் சந்தேகம் கொள்ளும்படி யாரும் இல்லாததை உணர்ந்து, தன் ஆட்களை அழைத்து இந்த மருத்துவமனைக்கு சிலரை அனுப்பி வைக்குமாறு பணித்து விட்டு மீண்டும் மருத்துவமனை வாசலை நோக்கி சென்றான்.. அங்கு ஒரே கூச்சலாக இருக்க, விஜய்யை பார்த்ததும் செக்யூரிட்டி வேகமாக அவனிடம் வந்து, “சார் நான் எந்த காரையும் வெளியே விடல சார்.. ஆனால் இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இருந்தா பெரிய பிரச்சினையாகிடும் சார் ப்ளீஸ் சார் எல்லா காரையும் வெளியே போக அலோவ் பண்ணுங்க..” செக்யூரிட்டி விஜய்யிடம் கெஞ்சி கேட்டு கொண்டு இருக்க
பூட்டிய இருந்த கதவின் முன்பு வந்து நின்ற விஜய், “என் குழந்தையை முகம் தெரியாத ஒரு பிட்ச் தூக்கிட்டு போயிட்டான் அவன் இந்த கூட்டத்தில் தான் இருப்பான் என்று ஒரு சின்ன சந்தேகம் அதனால் நான் ஒவ்வொரு காரையும் செக் பண்ண போறேன்.. ஒரு பத்து நிமிஷம் நீங்க பொறுமையா இருந்தீங்கன்னா போதும்..” என்று சத்தமாக சொல்லியபடி ஒரு காரின் அருகில் வர
“சார் யாரோ செஞ்ச தப்புக்கு எங்களை ஏன் டென்ஷன் பண்றிங்க.. எங்களுக்கு வேறு வேலை இல்லை என்று நினைச்சிங்களா..? கதவை திறங்க சார்” என்று ஒருவன் எரிச்சலில் கோபமாக கூற,
“ஏன் இங்க காத்திருகாகிற ஒரு பத்து நிமிஷத்துல இந்த உலகத்தை தலைகீழா மாத்திருவீங்களா..?!. என்று நக்கலாக கேட்ட விஜய் “நீங்க அப்படியே மாத்துனாலும்.. பத்து நிமிஷம் கழிச்சு தான் உங்களால் செய்ய முடியும்..வேற வழி இல்லை.. எனக்கு என் பொண்ணு முக்கியம் நான் செக் செஞ்சு முடிக்கிற வரை அமைதியாக இருக்கணும்..” என்று அலட்சியமாக கூறிவிட்டு ஒவ்வொரு காரையும் சோதனை செய்ய தொடங்கினான்.. அதற்குள் விஜய்யின் ஆட்கள் வந்துவிட “ஒரு கார் விடாமல் செக் பண்ணி அனுப்புங்க..” என்று உத்தரவிட்டு எழில் இருக்கும் அறைக்கு வர
என்ன சொல்றே சங்கவி இந்த பட்ட பகல்ல இவ்வளவு ஆள் நடமாட்டம் இருக்க இடத்தில் சின்ன குழந்தையை கடத்திட்டாங்களா?..” சுமித்ரா நம்ப முடியாத வியப்பில் கேட்க எல்லாமே நிமிசத்தில நடந்து போச்சு மேடம்.. நான் முடிஞ்ச அளவு தடுக்க முயற்சி செஞ்சேன் அந்த ஆள் பாப்பா கழுத்தை பிடிக்கவும் என்னால அதுக்கு மேல முடியல..” என்று குற்ற உணர்வில் அழுதபடி கூறிய சங்கவியை சுமித்ரா தோளில் தட்டி கொடுத்தார்.. “பாப்பாக்கு ஒண்ணும் ஆகாது..” என்று ஆறுதல் கூற எழில் எந்த உணர்வும் இல்லாமல் ஸ்தம்பித்து இருக்க
சுமித்ரா சங்கவியிடம் நடந்ததை விசாரித்து கொண்டு இருப்பதை கேட்டபடி உள்ளே வந்த விஜய் எழில் இருந்த நிலை கண்டு “ஹேய் லிட்டில் கேர்ள்..!!” அவளின் தோளை பற்றி உலுக்க அதில் திடுக்கிட்டு அவன் நிமிர்ந்து பார்த்த எழில், “நான் சொன்னேன்ல என் பொண்ணுக்கு ஆபத்து இருக்கு அவளை அதிகமாக வெளியே கூட்டிட்டு போக வேண்டாம் என்று சொன்னேன்ல்ல..
என்னை மீறி எதுவும் நடக்காது என்று சொன்னிங்களே இப்போ பாருங்க என்ன ஆச்சுன்னு?. என் அம்முவை யாரோ கடத்திட்டு போய்ட்டாங்க..” என்று விஜய்யின் சட்டையை பிடித்து கோபமாக பேசிய எழில்,
“என்ன செய்விங்களோ எனக்கு தெரியாது என் பொண்ணை நீங்க தான் கண்டுபிடிச்சு கூட்டிட்டு வரணும்.. நான் உங்களை தான் நம்பறேன்.. போங்க அம்முவோட வாங்க.. ப்ளீஸ் ஹோட்டல்கார் என் அம்முவை எப்படியாவது கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்திருங்க.. எனக்கு உங்களை தவிர யாரையும் தெரியாது.. நான் போலிஸ்க்கும் போக மாட்டேன்.. பிளீஸ் அம்மு வேணும்..” என்று அவன் மார்பில் சாய்ந்து அழுத எழிலின் தோளை அணைத்தபடி நின்றிருந்த விஜய்,
நேத்ராவை யாரோ கடத்தி சென்றதாக சங்கவி சொன்னதும் விஜய் சில நொடிகள் தான் என்ன செய்வதென்று தெரியாமல் ஸ்தம்பித்து நின்றவன் அடுத்த நொடி தன் ஆட்களை முடுக்கி விட்டு தேட சொல்லி விட்டு தான் இங்கு வந்திருந்தான்.. எழில் அவனிடம் கூறியது அனைத்தும் அவன் காதில் விழுந்தாலும் கருத்தில் பதியவில்லை அவன் எண்ணமெல்லாம் நேத்ராவை யார் கடத்தி சென்று இருப்பார்கள் என்று யோசனை தான் ஓடி கொண்டிருந்தது.. எழில் தலையை தன் மார்பில் அழுத்தியபடி சிந்தித்து கொண்டு இருந்த
விஜய்யின் அலைபேசி சத்தம் கொடுக்க எடுத்துப் பார்த்தவன் தன் ஆட்களில் ஒருவன் தான் அழைத்திருக்க கண்டு அழைப்பை ஏற்று “என்ன ஆச்சு.? எதாவது க்ளூ கிடச்சதா என வினவ “சார் இங்க ஹாஸ்பிடல் இருக்கிற கார் எல்லாமே செக் பண்ணிட்டோம்.. சந்தேகப்படுற மாதிரி எதுவும் இல்ல சார் என ஒருவன் சொல்ல
“ஓகே எல்லா காரையும் அனுப்பிடுங்க நீங்களும் போய் பேபியை தேடுங்க என்று கூறிவிட்டு இணைப்பை துண்டிக்கும் முன் இங்க சி சி டிவி யை செக் பண்ணுங்க.. சந்தேகம் பட்ற மாதிரி எதுவும் இருந்தால் ஃபோன் பண்ணுங்க என்று உத்தரவிடட்டு இணைப்பை துண்டித்தான்
லிட்டில் கேர்ள் நேத்ராவிற்கு ஆபத்து என்று கூறியதை தான் சீரியஸாக எடுத்திருக்க வேண்டுமோ..” என்று இப்போது நினைத்து வருந்திய விஜய், “ம்கூம் இது வருந்துவதற்கான நேரம் இல்லை.. என்று உணர்ந்து, எழிலை தன்னிடமிருந்து விலக்கிகியவன், “மதி பேபிக்கு ஆபத்து வரும் என்று அடிக்கடி சொல்லிட்டே இருக்கியே அது யாரால ஆபத்து வரும்?.. என்று கேட்க
எழில் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க அதில் கோபமடைந்த விஜய், “ஹேய் இங்க பாரு உன்னோட வீம்பு பிடிச்ச பிடிவாதத்தால ஒரு மண்ணும் ஆக போறது இல்லை.. நீ என்கிட்ட எல்லா உண்மையும் சொல்ல வேண்டாம் பேபிக்கு யாரால் ஆபத்து ன்னு அது மட்டும் சொல்.. நீ தாமதிக்கிற ஒவ்வொரு நொடியும் பேபியை காப்பாத்திறதுல தள்ளி போய்ட்டே இருக்கும்.. இப்படி இருக்காத ஒழுங்கா உண்மையை சொல்லுடி..” என்று அதட்டி கேட்க
“தான் பார்த்த இத்தனை நாட்களில் ஒரு முறை கூட தன்னிடம் கோப முகத்தை காட்டிடாத விஜய் இன்று தன் குழந்தைக்காக தன்னிடம் கோபம் கொள்வது எழில் மனதை அசைத்தது.. ஒரு பெருமூச்சுடன், “அம்முக்கு ஆபத்து அவ அப்பாவால் தான்..” என்று மெதுவாக சொல்ல,
“நேத்ரா பேபியோட அப்பா யார்?..” என்று விஜய் அழுத்தமாக கேட்க, சில நொடிகள் பதில் சொல்லாமல் மௌனம் காத்த எழிலலை ஒரு பொறுமை இழந்த பெருமூச்சுடன் “நேத்ரா பேபியோட அப்பா அந்த வீணாக போன அஷ்வினா?..” என்று அவனே பதில் சொல்லி தன் பதில் சரியா என்று கேள்வியுடன் எழிலை கூர்பார்வையாக பார்க்க, ஆம் என்று தலையசைத்த எழில்
“அம்மு பூமிக்கு வர்றது காரணம் வேண்டுமானால் யாரோவாக இருக்கலாம்.. ஆனால் அம்முவோட அம்மா நான் தான்.. அவளை நான் யாருக்கும் விட்டு தர மாட்டேன்..!!” என்று ஆங்காரத்தோடு அறிவிக்க, “பேபியை யாரும் உன்னை விட்டு தர சொல்லலை.. அதுக்கு நான் விடவும் மாட்டேன்..” என்று அழுத்தமாக கூறி எழில் மனதில் பதிய வைத்த விஜய்க்கு எழில் அஷ்வின் பெயரை சொன்னதும் தான் இன்று காலையில் தான் இங்கு அஷ்வினை பார்த்ததும் நினைவிற்கு வந்தது.. இப்போது அவன் தான் நேத்ராவை கடத்தி இருக்க வேண்டும் என்று சந்தேகம் தோன்ற
“அவனுக்கு நேத்ரா தான் தன் குழந்தை என்று தெரியுமா?.” என்று விசாரிக்க எழில் இல்லை என்று மறுப்பாக தலையசைத்தாள்.. “நம்ம நேத்ராவை கடத்தினது அவன் தான்..” என்று விஜய் சொல்ல எழில் விலுக்கென்று நிமிர்ந்து அவனை பார்த்து “அப்போ அவனுக்கு அம்முவை பத்தி தெரிஞ்சிருச்சா?” என்று பதட்டமாக கேட்க,
“உன்னோட கேள்விக்கு எல்லாம் வந்து பதில் சொல்றேன்.. இப்ப பேபி தான் பர்ஸ்ட்.. நிச்சயமாக நான் பேபியை கூட்டிட்டு வந்திருவேன்..” என்று எழிலிடம் உறுதியாக கூறிவிட்டு விஜய் வெளியே செல்ல, “நானும் உங்க கூட வர்றேன்.. அம்முவை பார்க்கிற வரைக்கும் எனக்கு நிம்மதியா இருக்காது..” என்று எழில் படுக்கையில் இருந்து எழ அவளின் கண்களை நேராகப் பார்த்து,
“பேபியை நான் கூட்டிட்டு வர மாட்டேன் என்று என் மேல நம்பிக்கை இல்லைன்னா நீ தாராளமா என்கூட வரலாம்..” என்று விஜயின் அழுத்தமான குரல் கேட்டு, படுக்கையில் இருந்து எழுந்த ஏழில் அப்படியே இருக்கையில் அமர்ந்து கொண்டு விஜய்யை முறைத்துப் பார்த்தாலும் அந்த இடத்தை விட்டு நகரவில்லை..
நான் உன்னை நம்பறேன் என்று வார்த்தையால் கூறாமல் எழிலின் முறைப்பே அவனுக்கு விடையாக வர, சிறு புன்னகையுடன் “மதியை பத்திரமாக பார்த்துக்கோங்க நான் வந்திட்றேன்.. என்று சங்கவியிடம் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்..
அஷ்வினின் கார் ஒரு காட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது.. காரை ஓட்டிக் கொண்டிருந்த அஸ்வின் அவப்பொழுது பின் இருக்கையை பார்த்தபடி காரை செலுத்தி கொண்டு இருக்க அவன் முகத்தில் வன்மம் கொட்டி கிடந்தது.. அஸ்வின் பின்னிருக்கையில் நேத்ராவை படுக்க வைத்திருந்தான்.. சிறு ஏளன புன்னகையுடன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.. மனம் முழுவதும் வன்மம் மட்டுமே நிறைந்த இருந்தது…
“உன் பேர் கூட எனக்கு தெரியாது ஆனால் என்னைய அடிச்சிட்டேல்ல நீ.. எனக்கு வலி அந்த நிமிசம் மட்டும் தான்.. ஆனால் உனக்கு காலம் முழுவதும் உயிர் போற வலியை கொடுக்க போறேன்டா.. முதல்ல உன் குழந்தையை சிகப்பு விளக்கு ஏரியால தான் விட நினச்சேன்.. ஆனால் பாரு உன் பொண்ணுக்கு கொஞ்சம் இரக்கம் காட்டி நான் கொஞ்சமே கொஞ்சம் நல்லவன்னு உனக்கு நிரூபிக்க போறேன்..
அதான் உன் குழந்தையை ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுல விட போறேன்.. எந்த மிருகத்திற்காவது ஒரு நாள் உணவாகட்டும்.. உன் அன்பு குழந்தை..” என்று எள்ளளாக நினைத்தவன், பார்க்கும் போதெல்லாம் என்னை வம்பிழுக்கிறல்ல நீ.. எல்லாத்துக்கும் மொத்தமாக உன் குழந்தையை பழி வாங்க போறேன் டா..
பெத்தவங்க செஞ்ச பாவம் பிள்ளையை சேரும் என்று சொல்வாங்க.. அது உங்க விசயத்தில் உண்மை ஆகிருச்சே.. என்கிட்ட வம்பிழுத்து நீ.. ஆனால் கஷ்டம் அனுபவிக்க போறது உன் குழந்தை அய்யோ பாவம்..” என்று போலியாக பரிதாபம் கொண்ட அஷ்வின் மனதில் தனனிடம் மோதிய விஜய்யை நிலை நினைத்து சிரிப்பாக இருந்தது..
நேத்ராவை பார்க்கும் போதெல்லாம் ஏனோ அஷ்வினுக்கு விஜய் முகமும் அவன் தன்னை அடித்தது மட்டும் நினைவில் வர காரை இன்னும் வேகமாக செலுத்தினான்.. இவ என்ன இன்னும் முழிக்காம இருக்கா.. முழிச்சு பயந்து அழுவா என்று நினச்சா இவ சொகுசா தூங்கிட்டு வர்றா..தூங்கு தூங்கு இன்னும் எவ்வளவு நேரம் தூங்க போற.. அப்பறம் உன் அலறல் சத்தம் மட்டும் தான் கேட்க போகுது..” என்று குரூரமாக நினைத்தபடி காரை செலுத்தினான்..
அவன் நினைத்த இடம் வரவும் காரை நிறுத்திய அஷ்வினுக்கு சிறு யோசனை, அவனுக்கு அவன் குழந்தையை நான் தான் கடத்தினேன் என்று தெரிய வேண்டாமா?.. தெரியனுமே அப்போ தானே அவனுக்கு நான் யார் என்று தெரியும்.. என்கிட்ட ஏன் மோதினோம் என்று அவன் வருத்தப்படுவான்.. சோ அவன் குழந்தையை நான் தான் கடத்தினேன் என்று அவனுக்கு தகவல் கண்டிப்பாக சொல்லணும் சொல்லியே ஆகணும் எப்படி சொல்றது?.. என்று தனக்கு தானே சத்தமாக கேட்டு கொண்டு இருக்க..
“உனக்கு அந்த கஷ்டம் வேண்டாம் அஷ்வின்.. இதோ இங்க தான் உன் முன்னாடி தான் இருக்கேன் நான்.. நீ தாரளமாக என்கிட்ட சொல்லலாம்..” என்று குரலில் எகத்தாளம் இருக்க கோபத்தில் கண்கள் நெருப்பாக ஜொலிக்க அஷ்வின் முன் ருத்ர மூர்த்தியாக நின்றிருந்தான் விஜயேந்திரன்..
இமை சிமிட்டும்