இமைகளின் இடையில் நீ ..2
காரை மௌனமாக ஓட்டிக் கொண்டு இருந்தான் அஷ்வின்.. தன் கைக்குட்டையை தண்ணீரில் நனைத்து ரத்தம் வழிந்து கொண்டிருந்த மூக்கில் ஒற்றி எடுத்ததில் ரத்தம் வருவது நின்றிருந்தது.. ஆனாலும் முகத்தை உம்மென்று வைத்தபடி காரை ஓட்டியபடி வந்து கொண்டிருந்தான்..
அவன் கோபம் உணர்ந்து தானும் மௌனமாக சாலையை வேடிக்கை பார்த்தபடி வந்து கொண்டிருந்தாள்.. சில நிமிடங்கள் பொறுத்து பார்த்த அஷ்வின், “நான் கோபமாக இருக்கேன் நீ என்னை சமாதானம் செய்ய மாட்டியா பேப்..? அஷ்வின் ஆதங்கமாக கேட்க
“எதுக்கு கோபம் நான் என்ன செஞ்சேன் அஷ்ஷீ..?” என அவள் கேட்க, “உனக்கு எதுவும் புரியலயா பேபி.. நான் எதுக்கு கோபமாக இருக்கேன்னு.. உன் கூட டைம் ஸ்பெண்ட் செய்ய நான் எல்லா வேலையும் விட்டு வந்ததுக்கு யாரோ ஒருத்தன் கையால் அடி வாங்கி இருக்கேன்.. நீ சாதரணமாக எதுக்கு கோபம் என்று கேட்கிற.. நீ மட்டும் அங்க இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் அங்க நடந்திருப்பதே வேறு.. உனக்காக மட்டும் தான் என் கோபத்தை கட்டுப்படுத்திட்டு வந்திருக்கேன்.. ஆனால் நீ.. என்னை கண்டுக்காம வர்ற?.. ஆதங்கமாக கேட்டவனை அவள் பரிதாபமாக பார்க்க
அஷ்வின் விடாமல், “நான் காரணமே இல்லாமல் கோபமாக இருந்தாலும், நீ தான் காரணம் கேட்காமல் என்னை சமாதானம் செய்யணும் பேபி..” என்று கட்டளையாக கூற, அவள் புரியாமல் விழித்தாள்.. “எதுக்காக கோபம் என்று தெரியாமல் எப்படி சமாதானம் செய்றது..” என்று சந்தேகம் கேட்டவளை முறைத்துப் பார்த்த அஷ்வின்
“எப்படி என்று என்கிட்ட கேட்கிற பேபி?.. என் மேல உண்மையான அன்பு இருந்தால் உனக்கே அது எப்படி என்று தெரியும்..” என்ற அஷ்வினை பெருமூச்சுடன் பார்த்தபடி சரி அஷ்ஷீ இனி சமாதானம் செய்றேன் நீங்க கோப படாதிங்க” என்று சமாதானம் செய்தவளின் நெற்றியில் முட்டியவன் “தட்ஸ் குட்..!” என்று பாராட்டியவன், “நான் இன்னும் கோபமாக தான் இருக்கேன் எங்கே இப்போ என்னை சமாதானம் செய்ய என் கன்னத்தில் ஒரு கிஸ் கொடு பார்ப்போம்..” என்று அவள் உதடு நோக்கி தன் கன்னத்தை கொண்டு வர
அவன் செய்கையில் அசௌகரியமாக உணர்ந்தவள், “இன்னும் ரெண்டு மாசம் தானே அப்பறம் என்ன தடை இருக்க போகுது.. ப்ளீஸ் அஷ்ஷீ நம்ம கல்யாணத்துக்கு பிறகு இதெல்லாம் வச்சிக்கலாமே..” என்று தயங்கினாலும் தன் மனதில் நினைத்ததை கூற,
“அதெப்படி கல்யாணத்துக்கு பிறகு நீ என் மனைவியாகிடுவ.. உன்கிட்ட நான் ஏன் கேட்க போறேன்..? எனக்கு தேவையானதை நானே எடுத்துப்பேன்.. ஆனால் இப்போ காதலியாக நீ கொடுக்கிற கிஸ் அது ரொம்ப கிக்கா இருக்கும்..” என்று கண் சிமிட்டி கூறியவன்
“நானும் நமக்கு நிச்சயம் ஆன நாளில் இருந்து கேட்கிறேன்.. ஒரு முத்தம் கூட கொடுக்க மாட்டிங்கிற.. உன்னை பார்க்க வந்த நேரத்தில் பேசாம ஆபிஸில இருந்து நான் வேலையாவது பார்த்திட்டு இருந்திருப்பேன்.. போன பத்து லட்சத்தை இருபது லட்சமாக மாத்திருப்பேன்..” என்று சலித்து கொள்ள, இத்தனை நேரம் இருந்த மாறி மனம் கணக்க அவள் அமைதியாக இருந்தாள்..
அவள்.. எழில் மதி பெயருக்கேற்றார் போல் அழகும், அறிவும் ஒருங்கே பெற்றவள்.. அஷ்வின் அவளின் அழகில் மயங்கி தான் அவளிடம் சரணடைந்திருக்கிறான்..
கல்லுரி ஒன்றில் இளங்கலை கணிதம் இறுதி ஆண்டு படித்து கொண்டு இருக்கிறாள்.. அவள் தந்தை பரசுராமன் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்ற, அவள் அன்னை சிவகாமி இல்லத்தரசியாக இருக்கிறார்.. தங்கை திவ்யா பதினொன்றாம் வகுப்பு படித்து கொண்டு இருக்கிறாள்..
எழில் படிக்கும் கல்லூரி விழா ஒன்றில் தந்தைக்கு பதிலாக தலைமையேற்க வந்திருந்த அஷ்வின், நடன போட்டியில் பங்கேற்று பரிசு வாங்கிய எழில் அழகில் மயங்கி காதல் கொண்டவன், எழிலிடம் தன் காதலை கூற,
அந்த இளம் வயதில் ஒரு அழகான ஆண்மகன் தன்னிடம் காதல் கூறவும் அந்த இளமைக்கே உரிய சிறு குறுகுறுப்பும், மகிழ்ச்சியும் மனதின் ஓரத்தில் இருக்கவே செய்தது.. ஆனாலும் அனைத்தையும் விட படிப்பில் இருக்கும் ஆர்வம், அஷ்வின் காதலுக்கு மறுப்பு கூற, அவள் மறுப்பே அஸ்வினுக்கு அவள் மேல் இருக்கும் காதலை இன்னும் அதிகப்படுத்தியது..
கூடவே தன்னை ஒருத்தி மறுப்பதா?..” என்று ஒரு சில ஆண்களுக்கு இயல்பாக இருக்கும் ஆண் என்ற கர்வம் அஷ்வினை ஆக்கிரமிக்க, தன் தந்தையிடம் தன் விருப்பத்தை கூறி, எழில் வீட்டில் பேசி அவள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் வரை கொண்டு வந்துவிட்டான்.. தன் மகள் அழகிற்கு ராஜகுமாரன் வந்து பெண் கேட்பான் என்று எழில் மதியின் அன்னை சிவகாமி அடிக்கடி கூறி கொண்டே இருப்பார்.. அதற்கேற்ப அஷ்வின் குடும்பத்தோடு வந்து பெண் கேட்கவும், சிறு மறுப்பு கூட கூறாமல் சந்தோஷமாக சம்மதித்தனர்..
தனிமையில் தன்னிடம் பேசிய அஸ்வினிடம் “தான் படிக்க வேண்டும் என்று தன் விருப்பத்தை கூற, அவள் கரங்களை மென்மையாக பற்றி தடவி கொடுத்தவன், “உன் படிப்பு முடிஞ்சதும் தான் நம்ம கல்யாணம்.. அதோடு உன் படிப்பு முடிஞ்சதும், நீ வீட்டில் இருக்க தேவை இல்லை பேபி.. அடுத்து எம்.பி.ஏ. படிச்சு முடி.. என்னோட சேர்ந்து நம்ம பிசினஸ்ல எனக்கு உதவியாக இரு.. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து, நம்ம பிசினஸ்ஸை இன்னும் இம்ப்ரூவ் செய்யலாம்..” என்று மென்மையாக கூற
அவனின் மென்மையான பேச்சிலும், திருமணத்திற்கு பிறகு படிக்கலாம் என்று கூறியதிலும் மனம் மகிழ்ந்து அஷ்வினுடன் திருமணத்திற்கு சந்தோஷமாக சம்மதித்தாள்.. எப்போதும் எழிலிடம் ஆசையாக பேசுபவன், அவ்வப்போது அவள் உள்ளங்கையில் மட்டும் இதழ் பதித்து விலகுபவன், இன்று அவளின் மறுப்பையும் மீறி, சற்று எல்லை மீற முயற்சித்து மூக்கில் அடி வாங்கி வந்து கொண்டு இருக்கிறான்..
அவனின் கோபத்தை சாந்தபடுத்த எழில் தானாக அவன் தோள் சாய அதில் முகம் மலர்ந்து அஷ்வின் முகத்தில் கர்வம் தானாக வந்து ஒட்டிக் கொண்டது.. “நீ அழுக்கா தான் இருக்க ஆனாலும் நீயாக வந்து என்னை ஹக் செஞ்சது ஹேப்பி பேபி..” நம்ம ஹோட்டல்ல எதாவது சாப்பிட்டு போகலாமா?..”என்று கேட்க, “இல்லை வேண்டாம் அஷ்ஷீ என் ட்ரெஸ் ஈரமாக, மணலா இருக்கு.. வீட்டுக்கு போகலாம்..” என்று மறுக்க
“ப்ச் எல்லாத்துக்கும் இப்படி மறுத்தா எப்படி பேபி?.. நான் மதியம் சாப்பிடவே இல்லை வேலை பிஸில சாப்பிட மறந்துட்டேன்.. சாப்பிட கூட நேரம் இல்லாமல் வேலை பார்த்தேன்.. எனக்கு சாப்பாட்டை விட நீ தான் முக்கியம் என்று நினைத்து வேலை முடிந்த உடனே சாப்பிடாமல் உன்னை பார்க்க வந்தேன்.. ஆனால் நீ?..
“இல்லை நாம எங்கேயாவது சாப்பிட்டு போகலாம்..” அஷ்வின் அடுத்து பேசுவதை கேட்க பிடிக்காமல் அவளே வெளியே சாப்பிட சம்மதம் கூற, “தட்ஸ் மை பேபி..” என்று அவள் கன்னம் பிடித்து ஆட்டியவன், பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் காரை நிறுத்தினான்.. எழில் தயங்கி கொண்டே இறங்க,
“உனக்கு ரொம்ப தயக்கமாக இருந்தால் இங்க ஒரு ரூம் எடுத்துப்போம்.. நீ உன் ட்ரெஸ் காய வச்சுக்க..” என்று யோசனை கூறியவனை திகைத்து பார்த்தவள், “அது எப்படி காய வைக்க முடியும்?.. என்று புரியாமல் கேட்க, “அங்க டவல் இருக்கும் உன் ட்ரெஸ் காயற வரை அந்த டவல் கட்டிக்கோ..
அதை கட்டிக்க பிடிக்கலைன்னா நான் எதுக்கு இருக்கேன் அதுவரை நீ என்னை..” என்றவனை எழில் தீயாக உறுத்து விழிக்க “ஓய்..! ரிலாக்ஸ் பேபி நான் என்னோட கோர்ட் தர்றேன் அதை போட்டுக்க சொல்ல வந்தேன்..” என்று குறும்பாக கண்சிமிட்டி கூறியவனை எழில் முகம் சுளித்தபடி பார்க்க,
“சரி.. சரி ரொம்ப கோப படாத நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் இந்த கவர்ல வேற ட்ரெஸ் இருக்கு.. இங்க ரூம் எடுக்கிறேன் நீ அங்க இந்த ட்ரெஸ் மாத்திக்கோ..” என்றபடி பின் இருக்கையில் இருந்து ஒரு கவரை எழிலிடம் கொடுக்க, அதை வாங்கி கொண்ட எழில் “ஏற்கனவே ட்ரெஸ் வாங்கி வச்சிருந்திங்களா?.. என்று வியப்பாக கேட்க,
“ம் வரும் வழியில் இந்த ட்ரெஸ் பார்த்தேன்.. பார்த்ததும் உன் நினைப்பு தான் வந்தது.. யோசிக்கவே இல்லை உடனே எடுத்துட்டேன்.. அது இப்போ யூஸ் ஆகுது..” என்றபடி எழிலை அந்த ஹோட்டல் உள்ளே அழைத்து சென்றவனை, கண்கள் மின்ன பார்த்தபடி அவனை பின் தொடர்ந்தாள்..
“நீ இங்க இரு பேபி நான் ரூம் புக் செஞ்சிட்டு உன்னை கூப்பிட்றேன்..” என்ற அஷ்வின் அவளை வரவேற்பில் அமர வைத்துவிட்டு சென்றான்.. இருக்கையில் அமர்ந்திருந்த எழில் ஆர்வத்தில் கவரில் இருந்த உடையை வெளியே எடுத்து பார்த்தாள்.. அவளின் நிறத்திற்கு மிக பொருத்தமாக இருந்தது அந்த உடை..
உடையின் அழகை விட அவன் தனக்காக தன்னை மட்டும் யோசித்து எடுத்த அவன் அன்பு, அவள் மனதை நிறைக்க, “அஷ்ஷீ எப்பவும் உங்களுக்கு என் நினைப்பு தானா?.. நம்ம கல்யாணத்துக்கு பிறகு நீங்க இப்போ என்கிட்ட என்னவெல்லாம் எதிர்பார்க்கிறிங்களோ நீங்க கேட்காமல் கொடுப்பேன்.. நிச்சயமாக உங்க அன்பிற்கு பதிலாக பலமடங்கு அன்பை நான் திருப்பி கொடுப்பேன்..” என்று மனதில் சங்கல்பம் செய்து கொண்டவள்,
“சே.. கொஞ்ச நேரத்தில் நான் தான் அஷ்ஷீவ தப்பா நினைச்சிட்டேன்.. கல்யாணம் செய்து கொள்ள போகும் பெண் என்று அஷ்ஷீ கொஞ்சம் நெருங்கிட்டாங்க அதை போய் தப்பாக நினைத்து இவ்வளவு நேரம் எனக்குள்ள குழம்பிட்டே இருந்திருக்கேன்..” என்று சுற்றம் மறந்து சிறு புன்னகையுடன் தன் நெற்றியில் தட்டிக் கொண்டு நிமிர,
அங்கு அஷ்வின் வரவேற்பில் இருந்த பெண்ணிடம் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்தான்.. சிறு பதட்டத்துடன் அவன் அருகில் வந்த எழில், “என்னாச்சு அஷ்ஷீ?.. எதுக்காக சண்டை போட்றிங்க?..” என்றவளை முறைத்துப் பார்த்த அஷ்வின்
“என்னை பார்த்தா சண்டை போட்ற மாதிரி இருக்கா?..” என்று அவளிடம் எரிந்து விழ, எழில் அவனை அதிர்ந்து பார்த்தாள்.. அத்தனைபேர் முன்னிலையில் அவன் திட்டியது அவள் கண்களில் கண்ணீரை வரவழைக்க, மௌனமாக அவன் பின்னே நின்றிருந்தாள்..
அவள் கண்ணீரை கண்டு கோபத்தை கட்டுப்படுத்திய அஷ்வின், “இங்க ரூம் இல்லையாம் பேபி..” என்று கோபமாக கூற, “சரி ரூம் இல்லன்னா பரவாயில்ல நம்ம வீட்டுக்கு போகலாம் அஷ்ஷீ..” அவன் கைபிடித்து இழுக்க, “ரூம் வேகெண்ட் இல்லன்னா பரவாயில்ல பேபி.. ஆனால் ரூம் இருக்கு நமக்கு மட்டும் ரூம் இல்லை சொல்றாங்க அதான் கோபம் வருது..” என்று அந்த வரவேற்பில் இருந்த பெண்ணை முறைத்துப் பார்த்தபடி கூற
“ஏன் அப்படி சொல்றாங்க?..” எழில் புரியாமல் கேட்க, “இங்க கணவன் மனைவி, ஃபேமிலியாக வந்தால் தான் ரூம் கொடுப்பாங்களாம்.. நம்ம ரெண்டு பேரும் லவ் மேக் செய்றதுக்காக ரூம் கேட்கிறோம் சொல்லி ரூம் தர மறுக்கிறாங்க.. அதெப்படி நம்மளை இவங்க ஜட்ஜ் பண்ணலாம்?.. இத நான் சும்மா விட போறது இல்லை.. இப்போவே கன்ஸ்யூமர் கோர்ட் கம்ப்ளைன்ட் செய்ய போறேன்..” என்று கருவிக் கொண்டு தன் செல்போனை எடுக்க
அவன் கையை மெதுவாக சுரண்டிய எழில் “லவ்மேக்கிங்னா என்ன அஷ்ஷீ?..” என்று சந்தேகம் கேட்டவளை, அஷ்வினோடு சேர்த்து அந்த வரவேற்பறை பெண்ணும் எழிலை வியப்பாக பார்த்தாள்.. “இப்போ அதை பத்தி தெரிஞ்சிக்கிறது ரொம்ப முக்கியமா?.. என்று எரிந்து விழுந்தவன், அந்த ரிஷப்சனிஸ்ட்டிடம் திரும்பி “உங்க ஹோட்டல் மேனேஜர் இப்போ இங்க வரணும்.. இல்லன்னா பின்விளைவுகள் ரொம்ப மோசமாக இருக்கும்.. “என்று எச்சரிக்க செய்ய
அத்தனை பேர் பார்க்க அஷ்வின் சண்டை போடுவது எழிலிற்கு சங்கடமாக இருக்க நம்ம சண்டை போட வேண்டாம் அஷ்ஷீ இங்க ஹோட்டல் ரூல்ஸ் அப்படி இருக்கலாம்.. எனக்கு ட்ரெஸ் காஞ்சிருச்சு.. ரூம் எதுவும் வேண்டாம்.. “என்று எழில் அவனை சமாதானம் செய்ய, “ஹேய்.. கொஞ்ச நேரம் சும்மா இருக்கிறியா.. ஒவ்வொரு இடத்திலும் நான் தான் அவமான பட்றேன்.. எல்லாம் பார்த்திட்டு சும்மா வர நான் என்ன கோழையா?..” என்று எழிலை சத்தம் போட அவள் அவனை அதிர்ந்து பார்த்தாள்..
திடீரென அவள் அடிவயிற்றில் லேசாக வலி எடுக்க தொடங்க, அவள் ஹாலில் மாட்டி இருந்த காலண்டரை பார்த்தவள், இன்னும் மூணு நாள் இருக்கே..” என்று தனக்குள் யோசித்தபடி நிற்க, அவள் சிந்தனையை கலைப்பது போல் அஷ்வின் குரல் சத்தமாக ஒலித்தது
“என்னை யாருன்னு நினைச்சாங்க இவங்க?.. ரோட் சைட் ரோமியோ நினைச்சிட்டாங்களா.. இவங்களுக்கு இருக்கு.. இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த ஹோட்டல் மூட வைக்கிறேன்..” என்று சூளுரைக்க “அச்சோ கடவுளே இந்த நாள் ஏன் இப்படி நீளுது.. இந்த நாள் முடிஞ்சு சீக்கிரம் என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போக வைங்களேன்..” மானசீகமாக கடவுளிடம் முறையிட்டு கொண்டிருக்க, “நான் யார் என்று தெரியாமல் என்னை இன்சல்ட் பண்ணிட்டிங்க இதுக்கு நிச்சயம் நீங்கள் பதில் சொல்லியே ஆகணும்.. இந்த ஹோட்டல் மேனேஜர் இப்போ வந்தே ஆகணும்.. என்று மிரட்டி கொண்டிருக்க
“இங்கே என்ன பிரச்சினை?..” என்ற அழுத்தமாக கேட்ட ஆண் குரலில் இருவருமே திரும்பி பார்த்தனர்.. அந்த ஆடவன் இவர்களையே பார்த்தபடி எட்டுக்கள் வைத்து அவர்களிடம் வர, அஷ்வினை விட அழகாக, அவனை விட கம்பீரமாக தங்களை நோக்கி வந்து கொண்டிருந்த புதியவனை எழில் விழி அகலாமல் பார்த்து கொண்டு இருந்தாள்..
தொடரும்…