இமை 15
காரில் கண்மூடி அமர்ந்திருந்த விஜய்க்கு தன் குடும்ப மருத்துவர் சொன்னதை நம்ப முடியவில்லை… நம்பாமல் இருக்க முடியவும் இல்லை.. “என்னடா விஜய் இது உனக்கு வந்த சோதனை?!! அப்ப நீ கஜினி சூர்யா மாதிரி அப்பப்போ எல்லாத்தையும் மறந்துடுவியோ?!!.. ஆனால் இத்தனை வருஷம் உனக்கு அதுக்கான அறிகுறியே இல்லையேடா!!” என்று தனக்கு தானே புலம்பி கொண்டு இருக்க
அப்படி எதுவும் எனக்கு மறந்தது மாதிரி ஞாபகமே இல்லையே!… அம்மா ஞாபகம் இருக்காங்க.. அப்பா ஞாபகம் இருக்காங்க.. என் பிரண்ட்ஸ்.. நான் படிச்ச ஸ்கூல் படிச்ச படிப்பு, என் பிஸினஸ் எல்லாம் ஞாபகம் இருக்கு.. அப்ப நான் எதை மறந்து இருப்பேன்?..” என்று கண்கள் மூடி தனக்கு தானே யோசித்து கொண்டு இருந்த விஜய்க்கு
தான் காலையில் பேசிக் கொண்டிருக்கும் போது தன் பெற்றோரின் பார்வை பரிமாற்றத்தை இப்போது நினைவிற்கு வர, கண்கள் மூடி இருந்தவன் சட்டென்று கண் விழித்தான்.. காலையில நான் கனவை பற்றி சொல்லும்போது அம்மாவும், அப்பாவும் அதிர்ந்து பாத்துக்கிட்டாங்களே.. அப்ப அவங்களுக்கு எதாவது தெரிஞ்சிருக்கும்..”
“ஆமா எனக்கு ஆக்சிடென்ட் நடந்தது அவங்களுக்கு தெரியாம எப்படி இருக்கும்?. ஆனால் ஏன் என்கிட்ட இத பத்தி எதுவுமே சொல்லவே இவல்லை.. என்று சிந்தித்தவன் அடுத்த நொடி காரை தன் வீடு நோக்கி செலுத்தினான்..
இங்கு விஜய் வீட்டில் என்னங்க இவன் இப்படி சொல்லிட்டு போறான்?.. ஏதோ கனவுங்கிறான்.. யாரையோ பாதியில விட்டுட்டேன் சொல்றான்.. நமக்கு தெரியாம நம்ம பையன் வாழ்க்கையில எதுவும் நடக்கலையே..” என்று சுமித்ரா தன் கணவரிடம் குழப்பமாக கேட்டுக் கொண்டிருக்க..
“எனக்கும் அதுதான் தெரியல சுமி.. நம் அப்படி இருந்திருந்தால் பையன் நம்மகிட்ட மறைக்க மாட்டான்.. ஆனால் அவனுக்கே அது தெரியாம இருந்திருக்கலாம்.. என்னன்னு தெரியலையே அவனுக்கு ஞாபகம் வந்தா மட்டும் தான் நமக்கும் தெரியும்..” என்று கூற, இத்தனை வருஷம் கழிச்சு இப்ப இப்படி பேசறானே..
இதனால நம்ம பையனுக்கு எதுவும் ஆபத்து வந்துடாதில்ல?.. ஒரு அன்னையாக சுமித்ரா மகன் நிலையை எண்ணி கலங்க.. “அது தான் டாக்டர் சொல்லிட்டாங்களே.. இதனால் ஆபத்து எதுவும் இல்லை என்று.. ஒண்ணும் ஆகாது சுமி..” என்று மணிகண்டன் ஆறுதல் சொல்ல, கணவரின் சமாதானத்தில் மனம் ஓரளவு சமாதானம் அடைந்த சுமித்ரா வேறு வேலையில் கவனம் செலுத்தினார்..
“சுமித்ரா!!.. மணிகண்டன்!.. ரெண்டு பேரும் எங்க இருக்கிங்க?. என்று சத்தமாக அழைத்தபடி உள்ளே வந்து கொண்டிருந்த விஜய்யை பார்த்து, பூஜை அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த சுமித்ராவும், தோட்டத்தில் நின்று தோட்டக்காரனிடம் பேசிக்கொண்டு இருந்த மணிகண்டன் இருவரும் அவன் அழைப்பில் திகைத்து வேகமாக ஹால் வர, அங்கு இடுப்பில் கை வைத்தபடி விஜய் இருவரையும் முறைத்துப் பார்த்து கொண்டு நின்றிருந்தான்..
“என்னாச்சு விஜி!?.. ஹோட்டல் போறேன் சொல்லிட்டு போன.. உடனே திரும்பி வந்துட்ட?.. உடம்பு எதுவும் சரியில்லையா?..” என்று பதட்டமாக கேட்டபடி விஜய்யின் நெற்றி, கழுத்தை தொட்டு பார்த்தபடி சுமித்ரா கேட்க..
“எனக்கு என்ன ஆச்சு என்று நீங்க தான் சொல்லணும்..” என்ற புதிர் போட்ட தங்கள் மகனை இருவரும் புரியாமல் பார்க்க, “எனக்கு ஏதோ விபத்து நடந்து நான் செலக்டிவ் அம்னீஷியாவால பாதிக்கப் பட்டிருக்கேன்னு டாக்டர் அங்கிள் சொன்னாங்க அது நிஜமா?. என கேட்க, “அட உளறுவாயன் சுரேஷ்.. ஃபாரின்ல இருந்து ரிட்டர்ன் வந்தது எங்களை பங்கம் பண்ணவா வந்த?..” என்று மனதில் கறுவிக்கொண்ட மணிகண்டன்
“அது வந்து விஜி..” என்று இருவரும் தயங்க “பிளீஸ் மா.. அப்பா எனக்கு என்ன நடந்தது?.. எப்போ ஆக்ஸிடென்ட் ஆச்சு?.. ஏன் எனக்கு ஆக்ஸிடென்ட் ஆனது எதுவும் ஞாபகம் இல்லை.. ஆனால் நடுவில கொஞ்சம் பக்கத்தை காணோம் சொல்ற மாதிரி, இடையில் எதையோ நான் விட்டு விட்ட மாதிரி தோணிட்டே இருக்கு.. அப்போ அதுக்கு காரணம் இந்த செலக்டிவ் அம்னீஷியா வா?..” அவர்களிடம் கேட்க, “என்கிட்ட மறைக்காமல் எல்லாம் சொல்லுங்கம்மா” என்ற விஜய்யை பெருமூச்சுடன் பார்த்தவர்கள்
“தம்பி சில வருஷங்களுக்கு முன்னாடி நானும் அப்பாவும் கன்னியாகுமரிக்கு நம்ம மேனேஜர் கல்யாணத்துக்கு போனோம் அது ஞாபகம் இருக்கா?..” என்று சுமித்ரா கேட்க ஞாபகம் இல்லை என்பது போல் விஜய் மறுப்பாக தலையசைக்க சுமித்ரா ஒரு பெருமூச்சுடன்
“அந்த சமயத்தில் தான் உனக்கு ஆக்சிடென்ட் ஆச்சு.. நீ கன்னியாகுமரில நடந்த விசயங்கள், அதுக்கு முன்னாடி நடந்த சில விசயங்கள் எல்லாம் அந்த விபத்தில் நீ மறந்துட்ட செலெக்ட்டிவ் அம்னீஷியாவால உனக்கு எந்த பெரிய பாதிப்பும் இல்லைங்கிறதால அதை ஞாபகம் வச்சுக்கற அளவுக்கு அந்த நேரத்தில் முக்கியமான விஷயம் எதுவும் உன் வாழ்க்கையில் நடக்கவில்லை என்பதாலும் நாங்களும் உன்கிட்ட அத பத்தி எதுவும் சொல்லாமல் விட்டுட்டோம்.. ஆனா இப்ப நீ ஏதோ குழப்பமா இருக்கிற மாதிரி இருக்கு.. ஏதோ ஞாபகம் வர்ற மாதிரி உனக்கு தோணுது போல.. அதனால அன்னைக்கு என்ன நடந்தது என்ன நாங்க சொல்றோம்…
“நானும் அப்பாவும் கன்னியாகுமரி கல்யாணத்துக்கு போன போது அங்க மண்டபத்தில் ஒரு பொண்ணை கடத்திட்டாங்க.. அந்த பொண்ணு உனக்கு.. இல்லை நமக்கு அதற்கு முன்பே ஒரு நகை கடையில் நாம பார்த்திருக்கோம்… நாங்க போன கல்யாணத்துக்கு அந்த பொண்ணும் வந்து இருந்தாள்..
திடீர்னு அந்த பொண்ணை யாரோ கடத்திட்டாங்க.. அப்போ நான் தான் அந்த பெண்ணை கடத்தினதை உன்கிட்ட சொன்னேன்.. அப்பறம் சிலமணி நேரத்தில் அந்த பெண்ணை காப்பாத்திட்டாங்க என்றும் அந்த பெண்ணோட குடும்பமும், அவ வருங்கால கணவனும் அந்த பெண்ணை நல்லா பார்த்துக்கிறாங்க இனி அந்த பெண்ணுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று சொன்ன..” எங்களுக்கும் நிம்மதி அதன் பிறகு அந்தப் பெண்ணை பத்தி நாம யாரும் பேசலை
அப்பறம் நீ உன்னோட லட்சியமான, வெளிநாடுகளில் நம்ம ஹோட்டல் பிரான்ச் தொடங்குவதை பற்றி யோசிச்சு அதுக்கு நீ சில நாடுகளுக்கு போக பிளான் செஞ்சிருந்த.. நீ வெளிநாட்டுக்கு போக ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் உனக்கு ஆக்சிடென்ட் ஆச்சு..
“நீ கார் ஓட்டி வர்றது தெரியாமல் ஒரு சின்ன பொண்ணு ரோட்டை கிராஸ் செய்ய.. திடீர்னு ஒரு பொண்ணு கார் முன்னாடி வரவும், நீ அந்த பொண்ணு மேல மோதாம இருக்குறதுக்காக கார வளைத்து திருப்ப அது ஒரு பள்ளத்தில் விழுந்திடுச்சு நல்லவேளை அது பெரிய பள்ளம் இல்லாமல் போனது நம்ம அதிர்ஷ்டம்.. பெரிய அடி எதுவும் இல்லாமல் உன்னை காப்பாத்திட்டோம்.. அதுல உனக்கு தலையில் அடிபட்டு உனக்கு சில விஷயங்கள் மறந்து போச்சு..” என்று சுமித்ரா நடந்த விஷயங்களை கூற, விஜய்யிடம் இருந்து மீண்டும் ஒரு பெருமூச்சு வந்தது..
“என் வாழ்க்கையில இவ்வளவு பெரிய சோகம் நடந்திருக்கா?.. என்று வருத்தமாக கேட்ட விஜய்யின் முகத்தில் துளியும் வருத்தம் இல்லை.. செய்தித்தாள்களில் சினிமாக்களில் பார்த்த விஷயங்கள் தனக்கு நடந்த நினைத்து சிறிது ஆச்சரியம் தான் தோன்றியது.. அங்கு சிறிது நேரம் அமைதி நிலவியது
“அந்த பொண்ணு யாரும்மா?.. திடீரென்று விஜய் கேட்க “எனக்கு தெரியலயே.. ஆனால் அவ ரொம்ப அழகா இருப்பாள்.. அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் பண்ணி இருக்காங்கன்னு நீ தான் என்கிட்ட சொன்ன.. அப்படி இல்லாமல் இருந்திருந்தா நிச்சயம் அந்த நேரம் அந்த பெண்ணை உனக்கு நான் பார்த்து முடிச்சிருப்பேன்..” என்று ஆதங்கமாக கூறிய அன்னையை விஜய் போலியாக முறைத்துப் பார்க்க இந்நேரம் அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி குழந்தை கூட இருக்கும்..” என்று சுமித்ரா கூற
“அப்போ என் கனவில் கேட்ட குரல்..” என்று குழம்பி நின்ற விஜய், அது கனவாகவே போகட்டும்.. இனி அதை பற்றி நினைக்க வேண்டாம்..” என்று மனதில் உறுதியாக முடிவெடுத்து கொண்டான்..
இங்கு பள்ளிக்குள் நுழைந்த எழில் மனம் அமைதியாக இருந்தது.. காலையில் தன் அன்னையின் வருகையால் சஞ்சலம் அடைந்து இருந்தவள்.. மன அமைதிக்காக கோவில் சென்றவளுக்கு என்றும் இல்லாதவாறு இன்று அந்த ஆறுமுகன் அழகிய வனத்தை பார்த்தவளுக்கு இறுக்கம் தளர்ந்து மனம் அமைதியாக இருந்தது.. அதன் காரணம் என்ன என்று அவளுக்கு புரியவில்லை..
கோவிலில் தன்னை புறம் பேசியவர்கள் தன்னிடம் வந்து மன்னிப்பு கேட்டதாலா.. இல்லை தன் முகத்தை பார்த்ததும் அன்று போல் இன்று அதிர்ச்சி அடையாமல் இயல்பாக பேசிய விஜயேந்திரனாலா?!!. என்று காரணம் அவளறியாள்.. ஆனால் இறுகிய பனிப்பாறையாக இருக்கும் அவள் மனம்.. இன்று உருகிய பனியாக மாறியது மட்டும் உண்மை.. ஆனால் அந்த உருகிய நிலயை நீடித்திருக்க விடாமல் அவளை மீண்டும் இறுக செய்ய கங்கணம் கட்டியது போல அவளை இம்சை செய்ய வந்திருந்தான் ஒருவன்..
வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த எழில் தன் பாடத்தை முடித்து விட்டு மாணவர்களிடம் அதை பற்றி கேள்வி கேட்டு கொண்டு இருக்க.. பியூன் வந்து அவளை பார்க்க யாரோ வந்திருப்பதாக கூறவும், மறுபடியும் தன் அன்னை தான் தன்னை பார்க்க வந்திருக்கிறாரோ என்று சிறிது கோபமும் எரிச்சலுமுமாக வரவேற்பறைக்கு வந்தவள், அங்கு அவளுக்காக காத்து கொண்டு இருந்தவனை பார்த்து, பேரதிர்ச்சியில் உறைந்து நின்றாள்..
வரவேற்பறையில் தன் செல்போனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த அஸ்வின் ஆள் வரும் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்க்க அங்கு எழிலை பார்த்ததும், அவள் முகம் பார்த்தவன் அருவருப்பில் முகம் சுளித்தான்.. எழில் முகத்தை பார்க்க பிடிக்காமல் தன முகத்தை திருப்பி கொண்டான்..
அவன் முக திரும்பலில் கோபமடைந்த எழில், அவனிடம் எதுவும் பேசாமல் மீண்டும் திரும்பி செல்ல, அந்த சத்தத்தில் அவசரமாக திரும்பிய அஷ்வின், அவள் தன்னிடம் பேசாமல் திரும்ப செல்வதில் ஆத்திரம் அடைந்தான்.. தன்னை பார்த்ததும் அனைத்து மறந்து தன் காலடியில் விழுந்து தன்னை அவனோடு அழைத்து செல்லுமாறு கெஞ்ச வேண்டும் என்று எதிர்பார்த்தானோ என்னவோ
ஆனால் எழில் அதற்கு மாறாக அவனிடம் அலட்சியம் காட்டி சென்றதில், “ஹேய் என்னடி திமிரா?.. நான் உன்னை பாக்க தான் வந்து இருக்கேன்னு தெரிஞ்சும் கண்டுக்காம போற..” என அஸ்வின் கோபமாக கேட்க,
“என்னை பார்க்க வந்தவங்க நான் வந்ததும் முகத்தை ஏன் திருப்பணும்?..” அதே அலட்சியமான கேள்வி அவளிடம்.. “ம் உன்னோட இந்த கோர முகத்தை பார்த்தால் எனக்கு குமட்டிக் கொண்டு வருதே..” என்று ஏளனமாக கூறிய அஷ்வின் பேச்சை காதில் வாங்காமல்
“என் முகத்தை பார்க்க பிடிக்காதவங்க எதுக்காக இத்தனை தூரம் என்னை தேடி வரணும்?.. என்று உதடு வளைத்து அலட்சியமாக கேட்டவளை அஷ்வின் முறைத்துப் பார்த்தான்..
எங்கிட்ட பேசறதுக்காக என்னை தேடி நீங்கள் இத்தனை தூரம் வந்திருந்தாலும், உங்க கிட்ட பேச எதுவும் இல்லை.. அதில் எனக்கு விருப்பமில்லை.. நீங்க போகலாம் என அலட்சியமாக கூறியபடி அந்த அறையை விட்டு வெளியே செல்ல, “உனக்கு எதிரியே இந்த திமிர் தாண்டி..!! இப்படி அடிபட்டும் உனக்கு இந்த திமிர் குறையவே இல்லை..” என்று எகத்தாளம் பேசியவன்
“நான் வந்தது இந்த அழகான முகத்தை பார்த்து கொஞ்சிட்டு போக வரலை.. என்னோடது ஒண்ணு உன்கிட்ட இருக்கு அதை வாங்கிட்டு போகத்தான் வந்தேன்..” என்று அவள் முகத்தை தவிர்த்து அவள் அங்கங்களை வக்கிரமாக பார்த்து கூற, அவன் பேச்சில் எழில் உள்ளே அதிரந்தாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல்,
“என்ன உளறீங்க உங்களோடது என்னிடம் என்ன இருக்கு?.. அதான் நமக்குள்ளே எல்லாம் முடிஞ்சாச்சுல்ல..” என்று எரிச்சாலக கூற, ஓ நமக்குள்ளே எல்லாம் முடிஞ்சிருச்சா!?” என்று இரு பொருள் பட கூறிய அஷ்வினை இப்போது எழில் அருவருப்பாக பார்த்தாள்..
“நமக்குள்ள எல்லாம் முடிஞ்சதுன்னா எனக்கு சொந்தமானதை நீ ஏன் வச்சிருக்க அதை திருப்பி கொடுக்க வேண்டியது தானே..” என்று நக்கலாக கேட்க, “உங்களுக்கு சொந்தமானது எதுவும் என்கிட்ட இல்லை.. அப்படி இருந்தால் அந்த நொடியே நான் அதை பெட்ரோல் ஊத்தி கொழுத்நிடுவேன்.. உன்னையே வேண்டாம் சொல்லிட்டு வந்த நான் உனக்கு சொந்தமானதையா எடுத்துட்டு வர போறேன்..” அவனை விட படு நக்கலாக ஒலித்தது எழில் குரல்..
“இனி என்னை எப்போதும் நீங்க பார்க்க வர கூடாது..இங்க வந்து வம்பு செய்யாமல் வந்த வழியே போங்க..” என்று கண்களால் அஷ்வினை எரித்தபடி வாசலை நோக்கி கை காட்ட
“நான் நல்ல பிள்ளையாக உன்கிட்ட கேட்கிறேன் மரியாதையாக என்னோடது எனக்கு கொடுத்திடு.. இல்லன்னா அதோட பின்விளைவுகள் நீ தான் சந்திக்கணும்.. நான் முன்பு இருந்த அஷ்வின் என்று என்னை சாதரணமாக நினைச்சே நீ தான் அதுக்கான தண்டனை அனுபவிப்ப..” என்று எச்சரித்த அஷ்வினை பார்த்த எழிலிற்கு, தன்னை விட வலிமை குறைந்த மிருகங்களை வேட்டையாடும் ஓநாய் போல தோன்றியது..
நீங்க எப்படி இருந்தால் எனக்கென்ன?.. நீங்க சொல்றதுக்கெல்லாம் தலையாட்டி பொம்மை போல ஆமா சாமி போட்ட பழைய எழில் நான் என்று நீங்க நினைத்து வந்தால் தோல்வி உங்களுக்கு தான்.. அவன் பேச்சை கொண்டே அவனுக்கு பதில் அளித்த எழில், கோபத்தில் செந்நாயாக மாறி இருந்த அஷ்வினை கண்டு கொள்ளாமல் எழில் தன் வகுப்பை நோக்கி செல்ல..
தன்னை அலட்சியமாக கடந்து செல்லும் எழிலை மனதில் வன்மத்தோடு பார்த்து கொண்டு இருந்தான்
அஷ்வின்..
இமை சிமிட்டும்…