நாட்கள் மாதங்களாக பாய்ந்தோடும் நதியாக யாருக்கும் காத்திராமல் வேகமாக செல்ல, விஜய் மனதில் அந்த கல்லூரியில் பார்த்த பெண் அடிக்கடி வந்து போனாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவன்.. இதோ விஜய் எதிர்பார்த்தது போலவே மலரை உயிராக நேசித்து அவளை கரம் பிடித்து தன்னுடன் அழைத்து கொண்டான் ஷக்திதரன்..
இதற்கு முன் விதுரன் வெண்பாவை காதலித்து கரம் பிடித்திருக்க, விதுரன் வெண்பா காதலை ரசனையாக பார்த்திருந்த விஜய் ஷக்தி மலரிடம் காட்டிய காதலை பார்த்து பிரமித்து இருந்தான்.. இருவரின் காதல் வாழ்க்கை பார்த்து தானும் இது போலவே ஒரு பெண்ணை உயிராக நேசித்து திருமணம் செய்ய வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்து இருந்தான்..
அந்த முடிவின் இறுதியில் அவன் மனதில் வந்தது அந்த கல்லூரி பெண் தான்.. “நோ அந்த ராங்கி வேண்டவே வேண்டாம்..” என்று உடனே மறுக்க, “ஏன் ஏன் அந்த பொண்ணு வேண்டாம்..” மனம் கேள்வி எழுப்ப “அவ சரியான திமிர் பிடிச்சவ அன்றைக்கு எவ்வளவு அலட்சியமாக என்னை பார்த்திட்டு போனா?.. அவளை எப்படி லவ் பண்ணுவேன்..” என்றவன் ஆமா இப்ப எதுக்கு நீ அந்த ராங்கிக்கு குடைபிடிக்கிற!! என் கேட்க,
“அவ தான் அடிக்கடி என்கிட்ட வந்து வந்து போறா.. அதான் அவளுக்கும், உனக்கும் தான் பொருத்தம் தோணுது..” என்று கேலி பேசிய மனதை அடக்கியவன், அடுத்து மனதை அதன் போக்கில் விட பிடிக்காமல் தன் வீட்டில் இருந்த உடற்பயிற்சி கூடத்திற்கு கிளம்பினான்.. அங்கு மலரின் குழந்தையோடு விளையாடிய நினைவுகள் மனதில் வலம் வர, “மிஸ் யூ பாப்பா.. நீ என்னை மிஸ் செய்வியா?.. குழந்தையிடம் மனதில் கேட்டு கொண்டு இருக்கும் போதே அவன் செல்ஃபோன் ஒலி எழுப்பியது.. மலர் தான் அழைத்திருந்தாள்..
அவன் உற்சாகமாக அழைப்பை ஏற்று பேசினான்.. குழந்தையோடு வீடியோ கால் பேசிவிட்டு அடுத்து ஷக்தியை கேட்க அவன் குளிக்க சென்றிருப்பதாக மலர் சொல்ல மேலும் சில நிமிடங்கள் மலரிடமும் குழந்தையிடமும் பேசி விட்டு இணைப்பை துண்டித்தான்..
இத்தனை மாதங்கள் தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக இருந்த மலரும், அவள் குழந்தையும் இல்லாத வீடு நூலகம் போல அமைதியாக இருக்க, விஜய்க்கு மன வருத்தம் தான்.. ஆனால், நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத விசயத்தில் வருத்தப்பட்டு எதுவும் ஆகாது என்று உணர்ந்து தன் மனதை தேற்றி கொண்டான்.. அதிலும் மலர் தங்கள் வீட்டில் இருந்ததை விட ஷக்தியுடன் இருக்கும் போது அவள் சந்தோஷமாக இருப்பதை உணர்ந்தவன், அவள் சந்தோஷத்தில் தானும் மகிழ்ந்தான்..
நடைமுறை ஏற்றுக் கொண்டு விஜய் தன் மனதை தேற்றிக்கொள்ள அவனின் அன்னை சுமித்ரா “இத்தனை நாள் மலரும், பாப்பாவும் இருந்தாங்க வீடே கலகலப்பாக இருந்தது.. இப்ப என்னடான்னா அமைதியாக இருக்கு..” என்று தன் கணவரிடம் புலம்ப, “அதுக்கு என்ன சுமி செய்ய முடியும்?.. மலருக்கும் ஒரு வாழ்க்கை வேண்டும் தான.. நல்லவேளை அது அவ மனசுக்கு பிடித்த வாழ்க்கையாக அமைஞ்சிருச்சு அதுக்கு நம்ம சந்தோஷம் தான் படணும்.. இப்படி புலம்ப கூடாது..”என்று மணிகண்டன் கூற
“அச்சோ நான் என்ன சொல்ல வர்றேன் என்று புரிஞ்சிக்காம நீங்களா எதாவது பேசாதிங்கப்பா.. மலர் கல்யாணம் செஞ்சிட்டு போனதில் எனக்கு ரொம்ப சந்தோஷம் தான் இத்தனை நாளாக நம்ம கைக்குள்ள இருந்த குழந்தை இப்ப நம்மளோட இல்லை என்று ஏக்கத்தில் சொன்னேன்..” என்று ஆதங்கப்பட
“எனக்கும் அப்படி தான் இருக்கு.. சாயந்திரம் ஆனால் குழந்தையை தூக்கிட்டு வாக்கிங் போவோம். இப்போ நம்ம மட்டும் போறோம்.. பிராக்டிகல் என்று ஒன்று இருக்கே அதை நம்ம ஏத்துக்கத் தான் செய்யணும் சுமி.. நம்ம விஜிக்கிட்ட ஒட்டின மாதிரி அந்த தம்பி கிட்டயும் நல்லா ஒட்டிக்கிட்டாள்ல பாப்பா.. அதுவரை சந்தோஷப்படு சுமி..” என்று மனைவியை சமாதானம் செய்ய “அதுக்கு தான் இந்த விஜி பையனை ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் செஞ்சிக்கோ என்று சொல்றேன் கேட்கிறானா?..
ரெண்டு வருஷம் டைம் கேட்டான்.. இப்போ அஞ்சு வருஷம் கடந்து போயிருச்சு.. இன்னும் சம்மதம் சொல்ல மாட்டிங்கிறான் கேட்டா அவனும் அவன் ஃப்ரெண்ட்ஸ் போல லவ் மேரேஜ் தான் செய்வேன் பிடிவாதமாக இருக்கான்.. சரி அதையாவது செய்ய சொன்னா மனசுக்கு பிடிச்ச பொண்ணு இன்னும் பார்க்கல என்று சாக்கு சொல்றானே..” என்று சுமித்ரா புலம்பி தவிக்க, மனைவியை பரிதாபமாக பார்த்தார்
ஹோட்டல் செல்ல கிளம்பி வந்த விஜய் தன் பெற்றோர் பேசுவதை கேட்டபடி கீழே வந்து கொண்டிருந்தான்.., “ம்மஆ பசிக்குது சாப்பாடு வைங்க..” என்று கூறி கொண்டு உணவு மேசையில் அமர, மகன் களையிழந்த முகத்தை பார்த்து திகைத்த சுமித்ரா, “விஜி என்னப்பா ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு..” என்று கேட்க, எனக்கு பார்க்க அப்படி தெரியலயே அவன் நல்லா தான இருக்கான் சுமி..” இடையிட்டு கூறிய கணவரை முறைத்துப் பார்த்த சுமித்ரா நீங்க அவனை கவனிச்சது அவ்வளவுதான் கண்ணை பாருங்க லேசா சோர்ந்து போய் தெரியுது..” என்று கூறிய அன்னையை தோளோடு அணைத்து கொண்டவன்,
“யுவர் சோ ஸ்வீட் மம்மி..” என்று அவர் கண்ணத்தோட தன் கன்னம் வைத்து லேசாக அழுத்தி விடுவித்தவன், நைட் சரியா தூக்கம் இல்ல அதனால இருக்கும்”.. என்று இருவரையும் பொதுவாக பார்த்து கூறிய விஜய்யிடம் “ஏன் பா வேலை அதிகமாக இருக்கா?..” சுமித்ரா சிறு கவலையுடன் கேட்க தன் அன்னையை நிமிர்ந்து பார்த்து, வேலை என்னை எப்பவும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.. சோர்ந்து போக வைக்காது மம்மி” என்றவன் முகம் சிந்தனையில் ஆழ்ந்தது
“நான் பழைய விசயம் எதாவது மறந்துட்டேனாம்மா?..” ஏதோ சிந்தனையில் கேட்ட விஜய்யை இருவரும் திகைப்போடு பார்த்தவரகள், நொடிக்கும் குறைவான நேரத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் அதிர்ந்து பார்த்து கொண்டு, “என்னப்பா திடீர்னு இப்படி கேக்குற?.. என்று சுமித்ரா தன் அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு கேட்க “என்னமோ ஒன்னை எனக்கு பாதியிலே விட்டு வந்த மாதிரி தோணுதும்மா.. என்னமோ என் மனசுக்குள்ள ஒரு தவிப்பு..” என்று நெற்றியை நீவியபடி கூற
“அதான் விஜி திடீரென இப்படி ஏன் தோணுது உனக்கு?.. மணிகண்டன் கேட்க நைட் ஒரு கனவுப்பா..” என்று தன் போக்கில் கூறியவனிடம் என்ன கனவு விஜி?.. என்று இருவரும் கேட்க, அது என்று ஏதோ கூற தொடங்கியவன் இருவரின் அதிர்ந்த முகத்தை பார்த்து தன்னை சுதாரித்துக் கொண்டவன், “அது என்ன கனவு என்று சரியா ஞாபகம் வரல..
“ஞாபகம் வந்தா கண்டிப்பா சொல்றேன்..” என்று அவசரமாக பதில் கூறியவன் மலரும், அவள் குழந்தையும் தன்னிடம் பேசியதை கூறி பேச்சை மாற்ற, இருவரின் கவனமும் அதில் சென்றது.. இருவரும் மலரைப் பற்றியும் குழந்தை பற்றியும் விசாரிக்க அவர்கள் பேச்சு வேறு திசைக்கு மாறியதை நிம்மதியுடன் உணர்ந்த விஜய் காலை உணவை உண்டு விட்டு இருவரிடம் கூறிக்கொண்டு அலுவலகம் சென்றான்.. காரை செலுத்திக் கொண்டிருந்த விஜய்க்கு நேற்று இரவு வந்த கனவு நினைவிற்கு வந்தது..
“ஆதவன் தன் பணியை முடித்து விட்டு ஓய்வெடுக்க கடல் அன்னை மடி செல்ல, இதை அறியாத நிலவு பெண் தன் ஆதவனை தேடி வானில் உலாவி கொண்டிருந்த நேரம், மக்கள் அனைவரும் உறக்கத்தில் இருக்க,
“நீங்க என்னை விட்டுட்டிங்க.. இத்தனை வருஷம் என்னை பார்க்காமல் எங்க போனிங்க?.. ஏன் என்னை தனியா விட்டிங்க?.. உங்க முன்னாடி வந்து நின்ன என்ன அடையாளம் தெரியலையா? உங்களை எனக்கு அடையாளம் தெரிஞ்சது.. அப்பறம் ஏன் என்னை தெரியலை உங்களுக்கு?.. எனக்கு பயமா இருக்கு?.. ஏன் என்னை தனியாக விட்டு போனீங்க?.. சீக்கிரம் வாங்க?..” என்று ஒரு பெண்ணின் அழுகை குரல் காதில் ஒலிக்க, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த விஜய் பட்டென்று கண் விழித்தான்..
முகம் எல்லாம் வியர்வை பூத்திருக்க அருகில் இருந்த மேசையின் மேல் இருந்த தண்ணீர் பாட்டில் இருந்து தண்ணீர் குடித்து தன்னை நிதானப்படுத்தி கொண்டவன், “இதென்ன கனவு?..”என்று திகைத்து விழித்தவன், “நிஜமாகவே யாரோ என்னை கூப்பிடற மாதிரி இருக்கே..” என்று வியப்பாக நினைத்தவன், கண்களை மூடி கொண்டு அந்த குரலை நினைவிற் கொண்டு வர முயன்றான்.. அந்த குரல் கேட்கவே இல்லை.. மீண்டும் படுக்கையில் படுத்தவனுக்கு அடுத்து உறக்கம் வர மறுத்தது.. தான் யாரையோ தவிக்க விட்டது போல் இவன் மனம் தவித்து கொண்டு இருந்தது..
இப்போதும் அந்த கனவு அவன் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டு இருந்தது.. எனக்கு எதுவும் ஞாபகம் இல்லையே.. இந்த குரல் நிஜமா கற்பனையா என்று தெரியலையே..” என்று தனக்குள் உழன்று கொண்டிருக்க..
அதே நேரம், விஜய்க்கு கனவு வந்த அதே நேரத்தில்..
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த எழில் “நீ என்னை விட்டு விலகினால் நான் விட்ருவேனா?.. நீ என்னோட பட்சி!.. நீ எங்கே போனாலும் உன்னை தேடி வந்து பிடிப்பேன்..” என்ற அழுத்தமான குரலில் அடித்து பிடித்து எழுந்தாள் எழில்.. இதென்ன கனவு?.. அவங்க எதுக்கு என் கனவில் வர்றாங்க..?” என்று குழப்பமாக நினைத்த எழில் எதிரே சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தில் நேரம் பார்க்க அது அதிகாலை நான்கு என காட்டியது.. சிறிது நேரம் உறங்க முயற்சி செய்ய அவளுக்கு உறக்கம் வருவேனா என்றது.. அதற்கு மேல் படுக்க பிடிக்காமல்,
குளியலறை சென்று முகம் கழுவி வந்தவள், சிறிது நேரம் யோகா செய்து விட்டு, சமையலறை சென்று தன் அன்றாட வேலைகளை செய்ய ஆரம்பித்தவள்.. காலைக்கும் மதியத்திற்கும் உணவை செய்து முடித்துவிட்டு அவசரமாக பள்ளி கிளம்ப ஆயத்தமானாள்.. வாசலில் யாரோ சத்தம் போடும் சத்தம் கேட்க யார் என்று பார்க்க வெளியே வந்த எழில் அங்கு நின்றிருந்தவர்களை பார்த்து முகம் சுளித்தபடி உள்ளே செல்ல போக.
“அம்மாடி மதி!!..” தன் அன்னை சிவகாமியின் பலவீனமான குரலில் எழில் அங்கேயே நிற்க, “எங்களை மன்னிக்கவே மாட்டியா?.. நாங்க செஞ்சது தப்பு தான். பெரிய தப்பு தான்.. என் பொண்ணு வசதியான வாழ்க்கை வாழணும் நினச்சு இப்படி செஞ்சோம் அது தப்பாக போய்ருச்சு அதுக்காக நீ எங்களை விட்டு பிரிஞ்சு இருக்கிறது எங்களுக்கு உயிர் போகிற வலியை தருது மதி எங்க கூட வந்திடுமா.. இந்த வயசான காலத்துல தனிமை எங்களை ரொம்ப கஷ்டப்படுத்துது.. எங்க பக்கத்துல இருந்தே எங்களுக்கு தண்டனை கொடு மதி.. என் கூட வாடாம்மா..” என்று அழுதபடி அழைக்க
அவர்களை பார்வையால் எரித்தபடி, “நான் அன்னைக்கு அவ்வளவு கெஞ்சினேன் இந்த கல்யாணம் வேண்டாம் என்று.. யாராவது என் பேச்சுப் கேட்டிங்களா?.. எல்லாம் முடிஞ்ச பிறகு இப்ப வந்து மன்னிப்பு கேட்டு அழுதா மட்டும் என்ன ஆக போகுது.. உங்களுக்கு உங்க மகளோட சந்தோஷத்தை விட பணம் காசு தான் முக்கியமா போச்சு..”
“நான் தான் எதுவும் வேணாம் என்று ஒதுங்கி வர்றேன்ல அப்புறம் ஏன் திரும்பத் திரும்ப என்கிட்ட வந்து என்னை இப்படி தொந்தரவு செய்றிங்க.. தயவுசெய்து என் கண்ணு முன்னாடி வந்து என் நிம்மதியை கெடுக்காதீங்க உங்களை கையெடுத்து கும்பிடுறேன்..” என்ற மதியை வேதனையோடு பார்த்த சிவகாமியின் அவள் மனதை மாற்ற முடியாமல் வந்த வழியே திரும்பிச் சென்றார்..
நான் அப்போ அவ்வளவு கெஞ்சினேன் அப்போ எதுவும் கேட்காமல் இப்ப வந்து மன்னிப்பு கேட்டா எல்லாம் மாறிடுமா..” தன் மனதில் கோபமாக புலம்பி கொண்டு சமையலை முடித்த எழில் அவசரமாக பள்ளிக்கு கிளம்ப, வாசலில் அழைப்பு மணி சத்தம் கேட்கவும் நேரம் பார்த்தாள்.. மகேஸ் அக்கா வந்துட்டாங்களா?..” என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டு கதவை திறக்க, அங்கு வீட்டு வேலை செய்யும் பெண் மகேஸ்வரி நின்றிருக்க அவளுக்கு வரவேற்பாக புன்னகை செய்து வழி விட்டவள்..
“பார்த்துக்கோங்க அக்கா.. யார் வந்தாலும் கதவை திறக்காதிங்க.. நான் வந்து சத்தம் கொடுத்தால் மட்டும் கதவை திறங்க.. என்று பலமுறை எச்சரித்து விட்டே வேலைக்கு சென்றாள்..
விஜய் வீட்டில் அவன் அலுவலகம் சென்றதும், “விஜிப்பா இவன் என்ன இப்படி சொல்லிட்டு போறான்.. அவனுக்கு பழைய விசயங்கள் எதுவும் ஞாபகம் வந்திருக்குமோ..” என்று கேட்க ம்கூம் இன்னும் வரல சுமி அப்படி வந்திருந்தா நம்மக்கிட்ட எதுவும் கேட்டிருக்க மாட்டான்..ஆனால் பழைய நினைவுகள் திரும்ப வர போறதுக்கான அறிகுறி தான் இது..” என்று மணிகண்டன் கூற
“கடவுளே!!.. என் புள்ளைக்கு பழைய நினைவுகள் எல்லாம் வந்தால் நான் பால்குடம் எடுத்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்றேன்..” என்று அவசர வேண்டுதல் வைக்க, மணிகண்டன் தானும் வேண்டிக் கொண்டார் ..
விஜய்க்கு பழைய நினைவுகள் மறக்கும் அளவுக்கு அவனுக்கு என்ன நடந்திருக்கும்?.. அடுத்த பதிவில் பார்ப்போம்..
இமை சிமிட்டும்