1,079 views

         சென்னையின் தொழில்நுட்ப நகரமான டைட்டல் பார்க்கில் இருந்து சற்று தொலைவில் இருந்தது அந்த வானளாவிய உயர அடுக்கு மாடிக் கட்டிடம். இரண்டாம் அடுக்கில் கண்ணாடி வழியே தெரிந்த கடலலைகளை ரசிக்க மனமின்றி ஏதோ ஒரு பரபரப்பில் அமர்ந்திருந்தாள் ஒரு பெண்.

அவளுக்கு சற்று அருகில் அமர்ந்திருந்த மற்றொருவன், “ஏன் ஒரு மாதிரி பதட்டமா இருக்கீங்க? இது ஃபார்மல் இண்டர்வியூ தான். பயப்படற அளவு கேள்வில்லாம் கேட்க மாட்டாங்க.” என்றான்.

அவனை ஒரு மாதிரி பார்த்தவள், “இப்ப நான் பதில் சொல்ல தெரியாம இப்படி இருக்கேனு உங்ககிட்ட சொன்னனா? என் கவலையே வேற. நான் மெரிட்ல பாஸ் பண்ணி இன்ஃபோஸிஸ்ல ஒன் இயர் வொர்க் பண்ணியிருக்கேன். உங்க வேலையை பார்க்கறீங்களா?” என்றாள்.

அவனுக்கு அருகில் அமர்ந்து இருந்தவனுக்கும் அது கேட்க, இவனை பார்த்து, ‘உனக்கு இது தேவையா?’ என்ற ரீதியில் சிரித்தான். “இந்த பொண்ணுங்களே இப்படிதான் பாஸ். நம்பள மட்டம் தட்ட ரெடியா இருப்பாங்க.” என அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறியவன், தன்னை ஆகாஷ் என அறிமுகம் செய்து கொண்டான்.

பின்பு மீண்டும் அவளிடம் திரும்பி, “ஐ ஆம் ஆகாஷ். மே ஐ நோ யுவர் ஸ்வீட் நேம்?” என்றான் ஆங்கிலத்தில். “ஏன் ஏதாவது சொத்து என் பேர்ல வாங்க போறீங்களா? ஸ்வீட்டோட பேர்லாம் எனக்கு வைக்கல.” என்றாள் கடுப்பாக.

அதற்குபின் ஆகாஷ் உள்ளே கூப்பிடும்வரை அவளிடம் எதுவும் பேசவில்லை. பி.டி.எஸ் என்ற மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தில் நடந்த நேர்காணலுக்கு தான் அவர்கள் அனைவரும் அங்கு வந்திருந்தனர்.

ஏற்கனவே பலகட்ட பரீட்சைகளும், சோதனைகளும் நடத்தப்பட்டு இன்று இறுதி நேர்காணல் நடக்க இருந்தது. கிட்டத்தட்ட அனைவருமே தேர்வாகி இருக்க, எம்.டியை நேரடியாக பார்த்து பணி நியமன ஆணை வாங்குவதற்காக ஒரு சந்திப்பு என்றும் கூறலாம்.

ஒவ்வொருவராக உள்ளே சென்று வர, அந்த பெண் சென்று வந்த பின் ஆகாஷின் முறை வந்தபோது மிகவும் உற்சாகமாக எழுந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நண்பனை பார்க்க போகும் பரவசம் அவனிடம் இருந்தது.

ஆனால் உள்ளே சென்று வெளியில் வந்தபோது நிச்சயம் அது குறைந்திருந்தது. “என்ன சார் வேலை இல்லனு சொல்லிட்டாங்களா? டல்லா வரீங்க. நீங்கதான் டென்ஷனே ஆக மாட்டீங்களே?” என கேட்டுவிட்டு யோசிப்பது போல பாவனை செய்தாள் அந்த பெண்.

அவன் அவளை முறைத்துவிட்டு வேறுபுறம் திரும்பி நடக்க ஆரம்பிக்க, அவளோ அவனோடே நடந்தபடி, “இங்க கேண்டீன்ல டீ நல்லா இருக்குமாம். நாம போலாமா?” எனக் கேட்டாள். அதற்கும் அவன் எதுவும் பேசாமல் இருக்க, “ஓகே. ஓகே. என்னை பத்தி சொல்றேன். பேரு மகிழ். வீட்ல மகி. அப்ப வேற டென்ஷன். சாரி.” என்றாள் இயல்பாக.

“இப்ப மட்டும் எதுக்கு வந்து பேசறீங்க?” என்றான் ஆகாஷ். “ஏன்னா, இப்ப நம்ப எல்லாரும் ஒன்னா வேலை பார்க்க போறோம். ஒருத்தருக்கு ஒருத்தர் மூஞ்ச தூக்கி வைச்சிட்டு இருந்தா நல்லாவா இருக்கும் அதான். ஃப்ரண்ட்ஸ்.” என தனது கைகளை நீட்ட, அவனும் பழையதை மறந்து அவளுக்கு கைக்கொடுத்தான்.

அதற்குள் கேண்டீன் வந்திருக்க இருவரும் உணவு கொடுக்கும் இடத்திற்கு வர அங்கே மளமளவென சில பதார்த்தங்களை ஆர்டர் செய்தவள், ஒரு தோசையை மட்டும் வாங்கி கொண்டு, “ரொம்ப பசிக்குது. மீதியை நீங்க வாங்கிட்டு வரீங்களா? நான் போய் சாப்பிடறேன்.” என்றபடி டேபிளுக்கு சென்று விட்டாள்.

அவன் அவள் கூறிய பதார்த்தங்களை எல்லாம் வாங்கி கொண்டு வருகையில், “எவ்வளவு நேரம்?” என்றதோடு வேகமாக சாப்பிட சற்று நேரத்தில் அனைத்து தட்டுகளோடு சேர்த்து காலியானது ஆகாஷின் பர்ஸூம்தான்.

“காலைல வேற சாப்பிடாம வந்துட்டனா அதான் கொஞ்சம் பசி. நீங்க எதுவும் வாங்கிக்கலயா?” என்றாள் மகி. ஆகாஷ், “நீங்க டீ நல்லா இருக்கும்னு சொன்னீங்கள்ளா அது மட்டும் வாங்கிட்டேன். அதை விடுங்க. அப்படி என்ன டென்ஷன். ஆமா நீங்க ஏன் அங்க வேலையை விட்டீங்க?” எனக் கேட்டான்.

“அதுவா, நான் கேம்பஸ் செலக்ட் ஆகி அங்க வொர்க் பண்ணேன். ஒன் இயர் ஆகி பெங்களூர் பிரான்ச்ல தான் வொர்க் பண்ணனும்னு சொல்லிட்டாங்க. அதான் நான் ரிசைன் பண்ணிட்டேன். இங்க செலக்ட் ஆகிட்டாலும் ஒருவேளை வேற ஊருக்கு போக சொல்லிடுவாங்களோனு ஒரு பதட்டம் அவ்வளவுதான்.” என்றாள் மகி.

“இல்ல வேற எங்கையும் போட மாட்டாங்க. ஏன்னா இந்த ஒரு பிரான்ச் மட்டும்தான் இருக்கு. ஆனா அந்த அளவு இது பெரிய கம்பெனி இல்லையே. வேற ஊரா இருந்தாலும் பெனிஃபிட் நிறைய இருக்குமே?” எனக் கேட்டான் ஆகாஷ்.

“ஓ. ஓகே. ஓகே. இந்த கம்பெனி எம்.டி சித்தார்த் சார் இப்ப இங்க இல்லாததால வேற பிரான்ச் இருக்கும்னு நினைச்சேன். வீட்ல வெளி ஊர்க்கெல்லாம் வேலைக்கு அனுப்ப மாட்டாங்க. அதான்.” என்றாள் மகி.

“ஓ. சித்தார்த் சார் இங்க இல்லயா? நான் அப்படி எதுவும் கேள்விப்படலயே.” என்றவாறே யோசித்தான் ஆகாஷ். அதற்கு மகி, “ஆமா நமக்கு போஸ்டிங் ஆர்டர் குடுத்தது சந்திர பிரகாஷ் சார் தானே.” என்றாள்.

“எனக்கு ஓனர் சித்தார்த் சார்னு மட்டும்தான் தெரியும். மத்தபடி கம்பெனி பத்தி நான் எதுவும் விசாரிக்கவே இல்ல. ஆமா அவர் எங்க? இவர் யாரு?” எனக் கேட்டான் ஆகாஷ்.

“சந்துரு சார் சித்தார்த் சாரோட அண்ணன். கடந்த ஆறு மாசமா இவரோட கண்ட்ரோல்ல தான் கம்பெனி இருக்கு. ஒரு மூனு மாசம் முன்னாடி ஒரு பிஸினஸ் மீட்டிங்க்கு வந்திருந்தப்ப தான் எனக்கே தெரியும். சோ அவர் வேற பிராஞ்ச்க்கு போயிருப்பாருன்னு நினைச்சேன்.” என அவளுக்கு தெரிந்த தகவல்களை கூறினாள்.

அதைக்கேட்டு ஆகாஷ் ஏதோ யோசனையில் ஆழ, அவனை இருமுறை அழைத்தவள், அவன் பேசாமல் இருக்கவும், “ஹேய் ஆகாஷ் என்னாச்சு?” என்றாள் கைகளை அவன் முன் தட்டி. “ஒன்னுமில்ல.. ஏதோ நியாபகம். சரி கிளம்பலாமா? உங்களை எந்த பிரிவுல போட்டு இருக்காங்க?” எனக் கேட்டான் ஆகாஷ்.

அவனோடு நடந்தபடியே, “உங்களோட சேம் டிப்பார்ட்மெண்ட் தான். நான் செக் பண்ணிட்டுதான் வந்தேன்.” என மகி கூறவும் “ஓகே. பை. பை. மன்டே பார்க்கலாம்.” என்றவன் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தான்.

மகியும் கிளம்பி வீட்டிற்கு வரும்போது சாயங்காலம் ஆகிவிட உள்ளே வரும்போதே வாசனை அவளை சமையலறைக்கு இழுத்தது. “அம்மா… நான் வந்துட்டேன். என்ன ஸ்பெஷல் இன்னிக்கு.” என்றபடியே வந்தவள், “வாவ். ம்மா. வாழைப்பூ வடையா. சூப்பர்மா.” என கன்னம் கிள்ளி கொஞ்சினாள்.

அவளது அன்னை மீனாட்சி, “யேய். வீட்டுக்குள்ள வந்ததும் கை, கால் கழுவிட்டு தான் அடுத்த வேலை பார்க்கனும்னு சொல்லி இருக்கேன்ல. கிளம்பு.” என்றார். சிணுங்கியபடியே தனது அறைக்கு சென்றவள் பத்தே நிமிடத்தில் வெளியே வந்தாள். அதற்குள் மீனாட்சி வடையோடு, தேநீரும் போட்டு எடுத்து கொண்டு வரவேற்பறைக்கு வந்திருந்தார்.

வடையை எடுத்து உண்ண ஆரம்பிக்க மீனாட்சி, “என்ன சொன்னாங்க?” எனக் கேட்கவும், “ம்ம் வேலை கிடைச்சிருச்சு மா. அதுவும் இங்கையே. எனக்கு இன்னைக்கே ஒரு ஃப்ரண்ட் கிடைச்சாச்சு தெரியுமா? சில பேரை பார்த்ததுமே அவங்ககிட்ட குளோஸ் ஆகிடுவோம்ல அது மாதிரி.” என வேலையை பற்றியும், ஆகாஷை பற்றியும் தனது அன்னையிடம் பகிர்ந்து கொண்டாள்.

சிறு வயதில் இருந்தே மகிக்கு அனைத்து நிகழ்வுகளையும் தனது அன்னையிடம் பகிர்ந்து கொள்வது வழக்கம். மீனாட்சியும் அவளுக்கு அதைத்தான் சொல்லி குடுத்திருந்தார். அந்த நேரங்களில் அவரும் ஒரு தோழியாக மாறி அவளுடன் இணைந்து விடுவார்.

அப்போது அவளின் தந்தை குணசேகரன் உள்ளே வந்தார். அவர் அஞ்சல் நிலையத்தில் மேலாளராக பணியாற்றுகிறார். “அப்பா வேலை கிடைச்சிருச்சே.” என மகிழ்வுடன் கூற, அவரும், “எனக்கு தெரியுமேடா. என் பொண்ணு புத்திசாலியாச்சே. அதான் இனிப்பு வாங்கிட்டு வந்தேன்.” எனக் கொடுத்தார்.

அதை ஆவலாக வாங்கி கொண்டவள், தனது தந்தை உடை மாற்றி வந்ததும் அவருக்கு வடையை எடுத்து கொடுத்தாள். பின்பு குணசேகரன், “சாரிடாம்மா. அப்பா வேலை மாத்த முடியல. அதனால நீ நல்ல வேலையை விடற மாதிரி ஆகிடுச்சு. இந்த ஆபிஸ்ல பெனிஃபிட் கம்மியா இருக்கும்ல.” என்றார்.

“அப்படில்லாம் இல்லப்பா. இதுவும் லீடிங் கம்பெனிதான். அதோட ரொம்ப பெரிய கம்பெனில்ல நல்ல சம்பளம் கிடைக்கும். இது மாதிரி ஆபிஸ்லதான் நமக்கு திறமையை வெளிப்படுத்த நிறைய வாய்ப்பு கிடைக்கும்.” என்றாள் மகி.

      வெளியே வந்த ஆகாஷ் தனது அலைபேசியை எடுத்து அழைப்பு விடுத்தான். “ப்ரோ நான் ஆகாஷ் பேசறேன்.” என்க, மறுமுனையில், “சொல்லு ஆகாஷ். சித்தார்த்தை பார்த்தியா? நம்பள எல்லாம் அவனுக்கு நியாபகம் இருக்கா?” எனக் கேட்டான் கார்முகிலன் என்பவன்.

“நாம நினைச்ச மாதிரி இல்ல. இங்க அவர் இல்லவே இல்ல. இப்ப அவரோட தம்பி தான் இங்க எம்.டியா இருக்காரு. எப்படியாவது அவரை பார்த்து பேசிடலாம்னு தானே இங்க வேலைக்கே அப்ளை பண்ணேன். இப்ப என்ன பண்றது?” எனக் கேட்டான் ஆகாஷ்.

“நீ உன் வேலையை பாரு. ஏதாவது தகவல் கிடைக்கலாம்ல. உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லல்ல. அங்க வேலை பார்க்கறது.” எனக் கேட்டான் கார்முகிலன்.

“அதெல்லாம் பிரச்சனை இல்ல ப்ரோ. ‘கரும்பு தின்ன கசக்குமா என்ன’ இருந்தாலும் அவரை பார்க்க முடியலன்னு கொஞ்சம் அப்செட் ஆகிட்டேன் அவ்ளோதான். சரி நான் ஏதாவது பண்ணி டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்றேன். ஆமா உங்க வொர்க் எப்படி போகுது?” எனக் கேட்டான்.

“இப்பதானே ஜாயின் பண்ணியிருக்கேன். இப்போதைக்கு ஆபிஸ் வொர்க் தான். இன்னும் ஃபீல்ட்க்கு போக ஆரம்பிக்கல. சரி ஆகாஷ் நீ பாரு. நான் அப்பறமா பேசறேன்” என்ற கார்முகிலன் அழைப்பை துண்டித்தான்.

        இவர்களின் பேச்சு வார்த்தைக்கு காரணமாக இருந்த சித்தார்த் என்பவனோ பெங்களூரின் ‘எலக்ரானிக் சிட்டி’ என பெருமையாக அழைக்கப்படும் நகரத்தின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அந்த மதிய வேளையில் நன்றாக உறங்கி கொண்டிருந்தான்.

அவனது உயிர் நண்பன் கவினேஷ் தன்னிடமிருந்த சாவியை கொண்டு வீட்டை திறந்தவன் உறங்கி கொண்டிருக்கும் தனது நண்பனை பார்த்து பெருமூச்சு விட்டபடி சாப்பிட தேவையான பொருட்களை எடுத்து டைனிங் டேபிளில் வைத்து விட்டு அவனை எழுப்பினான்.

கவின், “சித்து. சித்து. எழுந்து சாப்பிட்டு படுடா.” என்க, “நான் அப்பறமா சாப்பிட்டுக்கறேன். நீ சாப்பிட்டு வைச்சிட்டு போ.” என்றான் சித்தார்த். கவின், “அந்த கதையே வேணாம். நீ முதல்ல எழுந்திரு.” என அவனை கட்டாயப்படுத்தி எழுப்பி இருவரும் உணவருந்த வந்தனர்.

கிட்டத்தட்ட உண்டு முடிக்கும் தருவாயில், “உங்க சித்தி ஃபோன் பண்ணாங்கடா. வழக்கம் போல நீ இங்க வந்து இருக்கியானு கேட்டாங்க. நான் இல்லனு சொல்லிட்டேன். நீ ஊருக்கு போறத கொஞ்சம் கன்சிடர் பண்ண கூடாதா?” என்றான் கவின்.

அவனை முறைத்து விட்டு இருவாய் சாப்பாடு தட்டில் இருக்கும்போதே கையை கழுவியவன், “உனக்கு நான் இங்க இருக்கறது கஷ்டமா இருந்தா சொல்லிடு. நான் வேற பக்கம் கிளம்பிடறேன். மறுபடி என்னை அங்க போக சொல்லாத. புரியதா.” என்றவன் கோபமாக அறைக்குள் செல்ல, வழக்கமாக நடக்கும் நிகழ்வென்பதால் மெல்லிய சிரிப்போடு புன்னகை முகமாக நின்றிருந்தான் கவின்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *