395 views

                  அன்றைய தினத்தில் உணவிற்கு பிறகு சந்துரு ஏதோ மீட்டிங்குற்கு சென்று விட மகிதான் அவனது வார்த்தைகளை எண்ணி குழம்பிக் கொண்டிருந்தாள். அவன் இல்லை என்று கூறியதன் அர்த்தம் புரியாமல்.

அடுத்தநாள் எதார்த்தமாக ராகினி அவளிடத்திற்கு வரவும் அவளிடம், “சந்துரு சாரோட பேமிலிலாம் எங்க இருக்காங்க?” எனக் கேட்க, அவளோ இவளை ஒரு மாதிரி பார்த்துவிட்டு, “நீ எதுக்கு அதெல்லாம் விசாரிக்கற?” எனக் கேட்டாள்.

“அட சும்மாதான்பா. பொதுவா இந்த மாதிரி பெரிய கம்பெனில்லாம் குடும்பமா சேர்ந்துதானே நடத்துவாங்க. ஆனா இங்க இவர் மட்டும் தானே வரார். அந்த மேடம் வராங்க. ஆனா அண்ணன் வரதில்ல. ஒரே குழப்பமாக இருந்தது. அதான் கேட்டேன்.” என்றாள் மகி.

அவள் அருகிலே அமர்ந்த ராகினி, “நீ சொல்றது பாதி உண்மைதான் மகி. நான் இந்த கம்பெனிக்கு வந்து மூனு வருஷம் ஆகுது. நான் வந்தப்ப இங்க சந்துரு சாரோட அண்ணன் சித்தார்த் சார்தான் முதலாளியா இருந்தார். கண்டிப்பா நடந்துக்கிட்டாலும் அவர்கிட்ட ஒரு தன்மையான குணமும் இருக்கும்.

அவருக்கு கீழ வேலை பார்க்கறது எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது. ஏன் சில பேர் மறைமுகமா அவரை சைட் கூட அடிப்பாங்க. அவ்ளோ ஹேண்ட்ஸமா இருப்பாரு. ஆனா வேலையை தவிர வேற எந்த பர்சனல் விசயத்தை பத்தியும் யாரும் தெரிஞ்சுக்க முடியாது.

நான் வந்து இரண்டு வருஷம் நல்லாதான் போயிட்டு இருந்தது. ஒரு வருஷத்துக்கு முன்னாடி திடீர்னு அவங்க அப்பா இறந்துட்டதா தகவல் வந்தது. அதுகூட அவர்கிட்ட மேனேஜரா இருந்த அவரோட ஃப்ரண்ட் கவின் சார் சொல்லிதான் தெரிய வந்தது.

அவங்க அப்பாவும் பெரிய பிஸினஸ்மேன் தான். ஆனா அவர்கிட்ட இதை பத்தி யாரும் கேட்க கூட முடியல. அப்படி ஒரு இறுக்கமா கொஞ்ச நாள் ஆபிஸ் வந்துட்டு இருந்தாரு. ஒருநாள் வரும்போது சந்துரு சாரையும் கூட்டிட்டு வந்தாரு. அவருக்கும் சித்தார்த் சார்க்கு குடுக்கற எல்லா மரியாதையும் குடுக்கனும்னு சொன்னாங்க.

அப்பறம் ஒரு ஆறு மாசம் இரண்டு பேரும் சேர்ந்து கம்பெனியை பார்த்துகிட்டாங்க. நடுநடுவுல இந்த நிரஞ்சனி மேடமும் வருவாங்க. அப்பதான் அவங்க சித்தார்த் சார் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுன்னு எங்களுக்கு தெரியும்.

ஆனா அவர் அப்படில்லாம் காட்டிக்கவே மாட்டாரு. சொல்லப்போனா அவங்க வரதே சித்தார்த் சார்க்கு பிடிக்கலன்னு தோணும். ஆனா அப்பெல்லாம் சந்துரு சார் அவங்க கிட்ட நல்லா தான் பேசுவாங்க. இவங்க ரெண்டு பேரும் வந்ததுல சித்தார்த் சார்க்கிட்ட வொர்க் விசியமா கூட போக முடியல.

திடீர்னு ஆறு மாசத்துக்கு முன்னாடி இங்க வரதே இல்ல. கேட்டா வெளியூர் போயிருக்கறதா சொன்னாங்க. அப்பறம் அவர் வரவே இல்ல. இனிமேல் இவர்தான் எம்.டினு நினைச்சு எல்லாரும் பழகிட்டாங்க.” என்றாள் ராகினி சோகமாக.

மகி, “சரி ஓகே. அப்பவும் அவங்க பேமிலி பத்தி சொல்லலயே?” எனக் கேட்க, “அவங்க அம்மா, அப்பறம் ஒரு சிஸ்டர் இருக்காங்கன்னு தெரியும். வேற எதுவும் தெரியாது. கவின் சார்க்கு தான் எல்லாமே தெரியும். ஆனா இவங்க வந்து நாலு மாசத்துலயே அவர் வேலையை விட்டே போயிட்டாரு.”

யாரும் கவனிக்கவில்லை என நினைத்து ராகினி இதையெல்லாம் கூற, மற்றொரு புறம் இருந்து சந்துரு இதையெல்லாம் கேட்டு கொண்டிருப்பதை அவள் அறியவில்லை. எழுந்து போக நினைத்தால் மகியின் குரல் கேட்டது.. “ஓ. ஓகே. ராகினி. நான் எதிர்பார்த்ததை விட அதிகமாவே சொல்லிட்ட. நான் அப்படியே சந்துரு சார்க்கிட்ட சொல்லிடறேன்.” என்றாள் மகி.

“ஏய். என்ன சொல்ல போற. நான் நடந்ததை தானே சொன்னேன்.” என ராகினி அலற, “அதான்பா. நேத்து சந்துரு சார் என்கிட்ட இங்க எல்லாரும் என்ன பத்தி என்ன நினைக்கறாங்கன்னு கண்டுபிடிச்சு சொல்லுனு சொன்னாங்க.

இப்ப சித்தார்த் சார் சைட்டடிக்கற அளவு நல்லா இருந்தாரு. சந்துரு சார் அவ்ளோ ஹேண்ட்ஸமா இல்ல. அப்பறம் சித்தார்த் சார்கிட்ட இருந்து உங்க எல்லாரையும் பிரிச்சு அவரையும் வேலையை விட்டே அனுப்பிட்டாரு. சரியான சிடுமூஞ்சி. அப்பறம்.” என கூறிக் கொண்டே போக எழுந்து அவள் வாயை பொத்தினாள் ராகினி.

“ஹேய். நான் எப்ப இதெல்லாம் சொன்னேன். ஆத்தா. நான் எதுவுமே சொல்லல. நீயும் எதுவுமே கேட்கல புரியுதா. உன்கிட்ட போய் பேச வந்தேன் பாரு. வேலைக்கே உலை வைச்சிடுவ போல இருக்கே.” என்றாள் ராகினி.

அவளிடம் இருந்து விலகிய மகி, “ஹேய். ஹேய். ரிலாக்ஸ்டி. நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். நான் எதுக்கு அந்த ரூம் பக்கம் போக போறேன். தெரிஞ்சுக்க தான் கேட்டேன். நீ சித்தார்த் சாரை நினைச்சு ஃபீலானியா. அதான் கொஞ்சம் காமெடி பண்ணா கூலாயிடுவன்னு.” என்றவளை முறைத்துவிட்டு ராகினி சென்றாள்.

ஆனால் சற்று நேரத்திலேயே சந்துருவிடம் இருந்து மகிக்கு அழைப்பு வந்தது. அவள் சந்துருவின் அறைக்கு செல்வதை கண்ட ராகினி ஒற்றை வரலை நீட்டி எச்சரிக்க நான் பார்த்துக்கறேன் என சைகை செய்து விட்டு உள்ளே சென்றாள்.

உள்ளே சென்றவளை அமர சொன்ன சந்துரு, “அப்பறம் மேடம். வேலை பார்க்க சம்பளம் குடுக்கறமா, இல்ல எங்களை பத்தி கிசுகிசு பேச சம்பளம் வாங்கறீங்களா?” என நேரடியாகவே கேட்டுவிட, இவள் இதை பற்றி கேட்க போகிறான் என தெரியாததால் ஒரு நிமிடம் திணறி விட்டாள்.

உடனேயே சரி செய்து கொண்டு, “ஏன் சார். முதலாளி நீங்களே பொண்ணுங்க காசிப் பேசறதை ஒட்டுக் கேட்கற வேலையை தான் செய்யறீங்க. அப்பறம் நாங்க என்ன வேலை பார்க்கறது.” என்றாள் மகி.

“ஹலோ என்ன நக்கலா? நீங்க வேலை பார்க்கறீங்களான்னு பார்க்கறதும் என்னோட வேலைதான் நியாபகம் இருக்கட்டும். ஆமா ராகினி கிட்ட என்ன சொல்லிட்டு இருந்த.” என சந்துரு கேட்க, “சார். ராகினி என்கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க. அதுதான் சரி.” என்றாள் மகியும் விடாமல்.

சந்துரு, “நீங்க ரெண்டு பேர் பேசுனதையும் நான் கேட்டேன். அவங்க எதுவும் தப்பா பேசலயே. நீதான்.” எனவும், மகி, “என்ன சார் தப்பா சொல்லல. உங்க அண்ணனை அழகா வர்ணிச்சா. அப்ப நீங்க கம்மினு தானே அர்த்தம். உங்களை போய் அப்படி சொல்ல முடியுமா சார்.” என இழுக்க, “அப்ப நான் அழகா இருக்கனா மகி?” என்றவனின் குரல் மாறியிருந்ததை அவள் அறியவில்லை.

“கண்டிப்பா சார். அதுல என்ன டவுட். நீங்க பார்க்க அரவிந்த் சாமி மாதிரியே இருக்கீங்க.” என மகி விளையாட்டாக  கூறிவிட்டு, “சார். நான் அங்க சும்மாதான் சொன்னேன். உங்ககிட்ட சொல்ல போறதா சொன்ன விசயம்லாம். நீங்க எதுவும் தப்பா நினைச்சு ராகினியை திட்டிடாதீங்க. அவ பாவம்.” என்றாள் உண்மையாக..

“நீ சொன்னது எல்லாமே நூத்துக்கு நூறு சரிதான் மகி. அதுனால நான் ராகினியை திட்டலாம் மாட்டேன். நீ போய் வேலையை பாரு.” என அனுப்பவும், அதற்கு பிறகு அங்கே நிற்க முடியாமல் வெளியே வந்தவள் மூளை மீண்டும் குழம்பி நின்றது. ‘அப்ப நிஜமாவே இவங்க அண்ணனை இவர்தான் அனுப்பிட்டாரா’ என.

‘சரி ஏதோ இருந்துட்டு போகட்டும். நாம பேசாம இருப்போம். அச்சோ, எப்படி பேசாம இருக்கறது. சரி கண்டுக்காம இருப்போம்’ என நினைத்து தலையை உலுக்கிக் கொண்டு ராகினியிடம் கட்டை விரலை உயர்த்தி சைகை காட்டிவிட்டு தன்னிடத்திற்கு வந்தாள் மகி.

சந்துருவின் மனமோ, ஒருவிதமான மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது. இதுவரை யாரும் அவன் அண்ணனை விட இவன் அழகு என்றோ சிறப்பானவன் என்றோ கூறியதில்லை. இன்று முதல்முறை இப்படி ஒரு வார்த்தையை கேட்கிறான். அவனுக்கும் மகி பாதி விளையாட்டாக பேசியது புரிந்தாலும் ஏனோ அது பிடித்திருந்தது.

           பெங்களூருவில் அன்று சீதோஷ்ண நிலை அசாதாரணமாக இருந்தது. காலை ஒன்பது மணி வரை பனி கொட்டிக் கொண்டிருக்க, இடையிடையே தூறலும் இருந்தது. கவின், “சித்து. வண்டில போறது கஷ்டம். நான் கார் புக் பண்ணவா?” எனக் கேட்க, சரியென்ற சித்து தனது அலைபேசியில் யாருக்கோ அழைப்பு விடுத்து பேசிக் கொண்டிருந்தான்.

கார் வந்ததும் டிரைவரிடம் வேறு பாதையில் போக சொல்ல கவின் வேலையில் மூழ்கியிருந்தான். சற்று நேரத்தில் கார் ஒரு இடத்தில் நிற்க, கவின் நிமிர்ந்து பார்க்க மகிழ் காரில் ஏறிக் கொண்டிருந்தாள்.

“இது எப்படா நடந்தது?” என கவின் முணுமுணுக்க சித்து, “நீ. உன் சிஸ்டத்துல மூழ்கியிருந்தப்ப தான்.  இப்பயும் அதையே பாரு.” என்க, மகிழ், “ரொம்ப தேங்க்ஸ் அபி. பனியா இருந்தா சமாளிச்சிருப்பேன். மழை பெய்யவும் என்ன பண்றதுனு யோசிச்சிட்டு இருந்தேன். கரெக்டா கால் பண்ணீட்டிங்க.”  என கூற மெலிதாக புன்னகைத்தான் சித்து.

அலுவலகம் வந்ததும், அனைவரும் முந்தைய நாள் பிரச்சனையின் பரபரப்பில் இருக்க, நிதானத்தில் இருந்தது என்னவோ சித்து மட்டும்தான். பதினொரு மணியளவில் அவர்களின் பாஸ் வர முதலில் போர்டு மீட்டிங் நடந்து முடிந்தது.

அதற்கு பிறகு அனைத்து டீம் லீடர்களையும் அழைத்து நடந்த மீட்டிங்கில் பாஸ் பேச ஆரம்பித்தார். முதலில் சுகிதாவிடமே ஆரம்பித்தவர், “உங்களுக்கு ஏதாவது க்ளூ கிடைச்சதா, இது எப்படி லீக் ஆகியிருக்குனு?” எனக் கேட்டார் அவர்.

“இல்ல சார். நம்ப ஆபிஸ்ல தான் யாரோ இதை பண்ணியிருக்கனும்.” என சுகிதா கூற, “கரெக்ட் சார். ஐ அக்ரி வித் ஹெர்.” என்றான் சித்தார்த். “எப்படி சொல்றீங்க சித்து.” என அவர் கேட்க, “இது சர்வர்ல இருக்கற கோடீங். ஆபிஸ் ஸ்டாப் சப்போர்ட் இல்லாம இதை எடுத்துருக்க முடியாது. எல்லாரோட லேப்டாப்பையும் செக் பண்ணா கண்டுபிடிக்கலாம்” என்றான் சித்து.

“ஆமா சார். இப்பவே எல்லாரோடதையும் செக் பண்ணுங்க.”  என்ற சுகிதா அவளது லேப்டாப்பை எடுத்து வைக்க மற்றவர்களும் அதையே செய்தனர். சித்து அவர்களிடம், “தேவையில்ல. நான் நேத்தே செக் பண்ணீட்டேன். இதுல யார் மூலம் இது நடந்துருக்குனு டீடெய்ல் இருக்கு சார்.” என ஒரு ஃபைலை குடுத்தான் சித்து.

“வெரிகுட் சித். வெல்டன் ஜாப்.” என அவனை அவர் பாராட்ட சுகிதாவோ, “திஸ் இஸ் நாட் ஃபேர் சார். எப்படி லேப்டாப்பை பார்க்காமலே ரிப்போர்ட் குடுக்க முடியும்..” என்க.. “முடியும். எல்லாரோட லேப்பையும் நான் ஹேக் பண்ணி டீடெய்ல் எடுத்துட்டேன் சிம்பில்.” என்றான் சித்து இலகுவாக.

“சித்து. நீங்களும் இங்க ஒரு எம்ப்ளாயி. உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு. எங்க லேப்டாப்பை ஹேக் பண்ண கேட்டு இருந்தா நாங்க குடுக்க போறோம். ஒருவேளை நீங்க கூட இதை பண்ணிட்டு எங்க யார் லேப்டாப்ல கூட காப்பி பண்ணியிருக்கலாம்ல.

வி ஹேவ் பிரைவசி. எதை வைச்சு நீங்க இந்த ரிப்போர்ட் பிரிப்பேர் பண்ணீங்க. பாஸ் உங்ககிட்ட இந்த வேலையை குடுத்தாரா.” என சுகிதா கோபமாக பேச ஒரு சிலர் அதை ஆமோதிக்கவும் செய்தனர்.

அதற்கு சித்தார்த், “யா அஃப்கோர்ஸ். வீ ஆல் ஹேவ் பிரைவசி. ஆனா நான் உங்களோட பர்சனல் லேப்டாப்பை சர்ச் பண்ணல. இது ஆபிஸ் லேப்டாப். ஓகே. அப்பறம் இது உங்களோட பிராஜக்ட். சொல்லப்போனா எனக்கு முன்னாடி நீங்க கண்டுபிடிச்சிருக்கனும்.

இதுனால நஷ்டப்பட போறது இந்த கம்பெனி தானே தவிர, நீங்க மட்டும் கிடையாது. உங்களுக்கு புரியும்னு நினைக்கறேன்.” என்றான். அதற்கு பாஸ், “எஸ் ஐ அக்ரி வித் ஹிம். ஓகே இந்த முறை வரும்போது இன்னொரு முக்கியமான விசயம் சொல்லனும்னு நினைச்சேன்.
அதை இப்பவே சொல்லிடலாம்னு நினைக்கறேன்.

இனிமே உங்களுக்கு நான் பாஸ் இல்ல. சாரி லாஸ்ட் சிக்ஸ் மன்த்தாவே நான் உங்க பாஸ் இல்ல.” என்றவர் சித்தை காட்டி, “உங்க புது எம்.டி. மிஸ்டர். சித்தார்த் அபிமன்யூ. இப்ப அவருக்கு எல்லா ரைட்ஸ்ம் இருக்குனு நினைக்கறேன்” என சுகிதாவை பார்த்துக் கொண்டே அவர் கூற அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *