402 views

நேற்று வரை தனிமையிலே…
இன்று முதல் இனிமையிலே…
இனிமை தரும் இனியவளே வா…

இலை அசைய கிளை அசைய
கிளையில் இரு கிளி அசைய
கலை அசையும் காதல் சுகம் தா…

அந்த காட்டு மூங்கிலின் அவதாரம்
இந்த புல்லாங்குழலிசை அலங்காரம்
என் பாட்டுக்கு நீதான் ஆதாரம்! ஆதாரம்!!

என் வீணை விரல்களும் உனக்காக
உன் ராகக்குரல்களும் எனக்காக
இசை யாகம் நடத்துவோம் இதமாக இதமாக!!

                   என சித்து ஒரு படத்தின் பாடலை பாட, மகிழோ அதை ரசித்து கேட்டுக் கொண்டிருந்தாள். அதைக் கண்ட இசை அவளையும் மேடைக்கு அழைத்து வந்து பாட சொல்ல, அவளோ மறுத்தாள் நாணத்தில். பிறகு, மற்றவர்கள் பாடலை பாட அதற்கு ஏற்ப மகிழோடு இணைந்து நடனமாடினான் சித்து.

அவன் மட்டுமல்லாது மற்றவர்களும் ஆட்டத்தில் கலந்து கொள்ள, இனிமையாக நடந்தது வரவேற்பு விழா. இதற்கிடையில், “நீங்களும் சீக்கிரமா கல்யாணம் பண்ணீக்கோங்க அக்கா” என மகிழ் நிரஞ்சனியிடம் கூற,

ஏதோ கூற வந்தவள் சித்துவின் சைகையை கண்டு, “படிச்ச படிப்புக்கு கொஞ்ச நாள் வேலை பார்த்துட்டு அப்பறமா, சித்து மாதிரி ஒருத்தரை கல்யாணம் பண்ணீக்க வேண்டியதுதான்” என்றாள் சிரிப்போடு.

அதைக் கேட்டு இசை அவளை முறைக்க, “மகிழ் உன்னை விட உன் தங்கச்சிக்கு தான் என் மேல ரொம்ப கோபம்.” என்றவள் அவளை அருகில் இழுத்து, தோளோடு அணைத்து, “உன் மாமா மாதிரினு தான்டா சொன்னேன். அவனை இல்ல. சரியா” என சமாதானம் செய்தாள்.

மறுநாள் காலையில் நேரமாகவே எழுந்து அனைவரும் தயாராக, மகிழை தவிர மற்ற பெண்கள் அனைவரும் ஒரே விதமாக பல வண்ணத்தில் பட்டுப்புடவை அணிந்திருந்தனர். தங்களது இணையை ஏக்கத்துடன் கண்ட ஆண்களும் ஒரே மாதிரியான வேட்டி சட்டை அணிந்து கம்பீரமாகவே இருந்தனர்.

இசையிடம் வந்த சந்துரு, “நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?” எனக் கேட்க, “நீங்க என்ன ஹெல்ப் பண்ண போறீங்க. எதுவும் தேவையில்ல” என இசை சிடுசிடுக்க, “இருக்கே” என்றவன் அவளது கைகளை எடுத்து தன்னோடு பிணைத்துக் கொண்டான்.

“இல்ல மகி. உனக்குதான் புடவை கட்டினா தடுக்கும். விழுந்திடுவன்னு பயப்படுவ. அதான் நான் உன்ன சேஃபா கூட்டிட்டு போறேன். சப்போஸ் ஏதாவது ப்ராப்ளம்னு வைச்சுக்கோ, நான் உன்னை சட்டுனு பிடிச்சிடுவேன்ல” என்றான் சந்துரு.

“ஹலோ, அதெல்லாம் நாங்களே பார்த்துப்போம். இப்பல்லாம் நல்லாவே கட்டி பழகிட்டேன். கையை விடுங்க” என கையை எடுத்து விட்டு சென்றாள். சற்று நேரத்தில் மீண்டும் வந்த சந்துரு கை நிறைய மல்லிகை பூ இருக்க, கேள்வியாக பார்த்த இசையிடம், “தலைல பூ வைக்கல. அதான் வாங்கிட்டு வந்தேன்” என கொடுக்க,

அவளோ மறுக்காமல் வாங்கி கொண்டு, மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க யோசிக்க, “எல்லாருக்கும் அத்தை கொடுத்துட்டாங்க. இது உனக்கு மட்டும்தான். ஒழுங்கா வைக்கிற. இல்லனா வைச்சு விட்டுடுவேன்” என மிரட்ட, அவளும் தலையில் வைத்தாள்.

உடனே அங்கிருந்து வந்தவனை பிடித்துக் கொண்ட சிந்து, “என்னண்ணா. நல்லாவே டெவலப் ஆகிட்ட போல. அண்ணியை மிரட்டின மாதிரி இருந்தது” என வம்பிழுக்க, “அட நீ வேற சும்மா இரு. நானே அவ பதிலுக்கு ஏதாவது சொல்லிடுவான்னுதான் இங்க வந்தேன்” எனவும் சிரித்தாள் அவள்.

சிந்து முதல் முறை புடவை கட்டுவதால் அவளுக்கு அசௌகரியமாக இருக்க நெளிந்து கொண்டிருந்தாள். அவளருகில் வந்த கவின், “என்னாச்சு சிட்டு” எனக் கேட்க, “புடவை கட்டிட்டு நிக்கறது கஷ்டமா இருக்கு” என்றாள். “சரி வா” என அவளை அழைத்துக் கொண்டு ஒரு அறைக்கு சென்றவன் இடையினில் கைவைத்தான்.

“ஹேய். என்ன பண்ற?” என சிந்து கேட்க, “கம்பர்ட்டபுலா நான் கட்டிவிடறேன் சிட்டு” என்க, “அதெல்லாம் வேணாம்” என பதறி நகர்ந்தவளை கைவளைவிற்கு கொண்டு வந்தவன், “செம அழகா இருக்கடி. பேசாம இன்னைக்கே கல்யாணம் பண்ணீக்கலாமா?” என தாபத்துடன் கேட்க, வெட்கத்தில் சிவந்த முகத்தை கோபமென காட்டி அவனிடம் இருந்து விலகி வந்தாள் சிந்து.

இவர்கள் இருவரும் செய்யும் சேட்டைகளை கண்டு ஏக்கத்தோடு ஆதி அகல்யாவை பார்க்க, அவளோ அவனை கண்டுகொள்ளாமல் இருந்தாள். ஆனால் அவள் ஏதோ பொருள் எடுக்க அறைக்கு போன சாக்கில் அவளோடே உள்ளே நுழைந்தவன், அவளது பின்னே சத்தம் போட, பயந்தவள் கீழே விழப் போனாள்.

விடாமல் அவளை பிடித்தவன், அப்படியே குனிந்து அவளது சங்கு கழுத்தில் தனது முதல் முத்தத்தை பதிக்க, அவளது விழிகள் விரிந்ததை கண்டு, அதில் மூழ்கியே போனான். சில நிமிடங்களில் தன்னை மீட்டவள், அவனிடமிருந்து விலக,

“லவ் யூ பேபி. செம கியூட்டா இருக்க. என்ன விட சின்ன பசங்கலாம் ரொமான்ஸ் பண்றாங்க. அப்பறம் வரலாறு மாமாவை தப்பா பேசாது அதான்.” என்றவன் அவளது கன்னத்தை கிள்ளிவிட்டு வெளியேற, வெட்கத்தில் அது சிவந்தே போனது.

இந்த சேட்டைகளுக்கிடையே, ஐயர் கூற்றுக்கிணங்கி மகிழும், சித்துவும் சம்பிரதாயங்களை கடைபிடித்து திருமண சடங்குகளை செவ்வனே செய்து கொண்டிருந்தனர்.

மச்சினியாக இசையும், மச்சினனாக ஆகாஷூம், நாத்தனாராக சிந்துவும் தங்களது கடமைகளை பொறுப்பாக செய்ய, மகிழ், அவளது பெற்றோருக்கு பாதபூஜை செய்யும்போது கண்களில் நீரே வந்துவிட்டது. சில மாதங்களுக்கு முன்பு, இப்படியெல்லாம் தனது திருமணம் நடக்கும் என யாராவது கூறியிருந்தால் சிரித்திருப்பாள்.

ஆனால் இன்று அது நடக்கும்போது ஏனோ அழுகை வந்தது. அவளை தோளோடு அணைத்து சித்து தேற்ற, பிறகு தன்னை மீட்டுக் கொண்டு மகிழ்வாகவே சடங்கை செய்தாள். அடுத்து சித்து அந்த சடங்கை செய்ய வேண்டும் எனும்போது ஐயம்மாளை தேட, அவரோ அந்த வட்டத்திலேயே இல்லை.

தனியாக இருப்பதாலா அல்லது விருப்பம் இல்லாமலா என புரியாமல் சில நிமிடங்கள் திகைக்க, யாரும் எதிர்பாரா விதமாக நிரஞ்சனி தனது தாய், தந்தையரை அதற்காக நிற்க வைத்தாள். சிறு வயதில் நிரஞ்சனியின் வீட்டில் இருந்தபோது அவனை பாசமாக பார்த்துக் கொண்டது அவர்கள்தானே.

தோழியின் பெற்றோர் தனக்கும் பெற்றோர்தானே என அவளை நன்றியோடு பார்த்தான் சித்து. நிரஞ்சனி மீதான சிறு சஞ்சலங்களும் கூட அந்த நொடியில் தீர்ந்து, அவளை இயல்பாக ஏற்றுக் கொண்டனர் அனைவரும்.

அதற்கு பிறகு சடங்குகள் மளமளவென நடக்க, அக்னி சாட்சியாக, அனைவரின் ஆசிர்வாதங்களோடு, அழகான காதலோடு தன்னவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு, நெற்றியில் திலகம் சூட்டி, மாலை மாற்றி மணாளன் ஆகினான் சித்தார்த் அபிமன்யு.

அடுத்த நொடி அவளது காதருகே குனிந்து, “ஐ லவ் யூ வதனி” என முணுமுணுக்க, செவ்வானமாக சிவந்த வதனத்தோடு அவளை காதலாக பார்த்தாள் மகிழ்வதனி. அதற்கு பிறகான சடங்குகள் எல்லாம் முடிந்தபிறகு, மாப்பிள்ளை வீட்டுக்கு செல்வதற்காக கிளம்பியவர்கள் சென்றது சந்துருவின் இல்லத்திற்கே.

ஐயம்மாள் தான் திருமணம் முடிந்ததுமே, வேலை முடிந்தது என்பது போல அங்கிருந்து கிளம்பியிருந்தாரே. அதோடு, திருமணம் முடிந்து தனது குலம் தழைக்க வேண்டி ஏற்றும் விளக்கு தான் வாழப் போகும் வீட்டில் தான் ஏற்ற வேண்டும் என முடிவு செய்திருந்தாள் மகிழ்.

இவ்வளவு நாட்கள் சந்துருவும், சிந்துவும் காட்டிய பாசத்திற்கு ஈடாக இனிமேல் அவர்களோடு ஒன்றாகவே தங்கலாம் என சித்துவிடம் பேசி அவனையும் சம்மதிக்க வைத்திருந்தாள். அதன்படியே அங்கு சென்று விளக்கேற்றி, பால், பழம் உண்டு அங்கிருந்து கிளம்பி மகிழ் வீட்டுக்கு வந்தனர்.

அங்கே மதிய விருந்து தயாராக, அனைவரும் இணைந்து உணவருந்திய பிறகு, தனது கணவன் வீட்டுக்கு கிளம்ப, மனது கனத்து போனது மகிழுக்கு. சில காலமே ஆனாலும், இத்தனை வருடங்கள் கிடைக்காத பாசத்தை கொட்டி பார்த்துக் கொண்ட பெற்றவர்களை பிரியும் நொடியில் ஒரு வலி எழுந்தது மகிழுக்கு.

அவளது கண்களில் நீர் துளிக்க, “எப்ப வேணா வரலாம். பீல் பண்ணாதடா” என சித்து ஆறுதல் கூற, மீனாட்சியும் தன்னை தேற்றிக் கொண்டு நல்லபடியாக மகளை அனுப்பி வைத்தாள். அவர்களோடு உடன் செல்வதற்கான பொறுப்பை அகலும், ஆதியும் எடுத்துக் கொள்ள, உடன் ஆகாஷூம் இணைந்து ஐவராக மீண்டும் சந்துருவின் வீட்டிற்கு வந்தனர்.

அதற்குள்ளே கவின், சந்துரு, சிந்து மூவரும் அன்றைய இரவு சடங்குக்காக அறையினை தயார் செய்திருந்தனர். பிறகு சற்று நேரம் அமர்ந்து அனைவரும் பேசிக் கொண்டிருக்க, கவின் சென்று அனைவருக்கும் சிற்றுண்டி எடுத்து வந்தான்.

“நானே ஏதாவது பண்ணியிருப்பேன்ணா” என மகிழ் கூற, “பரவால்லமா. சாப்பிடு” என தேநீரும், பக்கோடாவும், அவல் பாயாசமும் கொடுத்தான். இரவு உணவை மீனாட்சியே கொடுத்துனுப்பியிருக்க, அனைவரும் உணவருந்திய பிறகு, மற்றவர்கள் ஹாலிலே படுக்க, மகிழிடம் பால் கொடுத்து மாடிக்கு அனுப்பி வைத்தாள் அகல்.

கீழே இவர்கள் ஒரே சிரிப்பும், பேச்சுமாக விளையாடி விட்டு உறங்க ஆரம்பித்தனர். மேலே மகிழ், அறை வாசல் வரைக்கும் சென்றவள் கால்கள் பின்னிக் கொள்ள ஒருவித தயக்கத்தோடு அங்கேயே நிற்க, மற்றோரு அறையில் இருந்து அவளது தயக்கத்தை ரசித்துக் கொண்டிருந்தான் அவளது கண்ணாளன்.

திடீரென அவள் பின் வந்தவன் அப்படியே அவளை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றவன் கதவை தாளிட்டான். “அபி விடுங்க. என்ன பண்றீங்க?” என்றவள் கீழே இறங்க முயல, அவனோ விடாமல் அவளை அங்கிருந்த பால்கனி ஊஞ்சலில் அமர வைத்தான்.

“அப்படி என்னடி யோசனை உனக்கு. வாசல்ல நின்னு” என சித்து கேட்க, அவளோ தலையை கூட நிமிர்த்தவில்லை. ஒற்றை விரலால் அவளது முகத்தை நிமிர்த்தி அவளது கண்களோடு தனது கண்களை கலக்க விட்டான்.

அது உணர்த்திய செய்தியில் அவளது தயக்கம் மெல்ல விலக, “அது தெரியல அபி. ஒரு மாதிரி இருந்தது” எனவும், “இப்ப மட்டும் இல்ல. எப்பவுமே எந்த விசயத்தை என்கிட்ட பேசவும் நீ தயங்கவே கூடாது. பிகாஸ் ஐ லவ் யூ டியர்” என்றவன் அவளது இமைகளில் முத்தம் பதித்தான்.

“ஹேய். உனக்கு ஒரு கிஃப்ட் வைச்சிருக்கேன்” என்றவன் சென்று அதை எடுத்து வந்தான். அதை பிரித்து பார்க்க, உள்ளே ஒரு அழகான வெள்ளிக் கொலுசு இருந்தது. பெரிதாக சத்தம் வராத வகையில் அழகான டிசைனில் இருந்தது. அதோடு உள்ளே ஒரு பேப்பரும் இருக்க, அதை எடுத்து படிக்க ஆரம்பித்தாள் மகிழ்.

இரும்பென இறுகியிருந்த
என் இதயத்தை இளக்கி
இனிக்க செய்த இனியவளே…
என் துணையவளே..!!

இந்த கொலுசொலியின் கீதமென
நம் வாழ்வு இருக்க.. இந்த இனிய
நன்னாளில் இதயத்தை மாற்றிக்
கொண்டு இருமணம் சேர்வோம் வா..!!

என எழுதியிருக்க, அவனை கட்டிக் கொண்டவள் நெற்றியில் முத்தம் பதித்தாள். பிறகு இருவரும் எழுந்து படுக்கைக்கு வர, அவளது மடியில் படுத்துக் கொண்டு, “நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன் வதனி. உனக்கும் சந்தோஷம்தானே” எனக் கேட்டான் சித்து.

“ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் லைஃப்ல இன்னைக்கு எனக்கு இருக்கிற எல்லா உறவுகளும் உங்களால தான் கிடைச்சது. சின்ன வயசுல இருந்து என்னதான் தனியா வாழ பழகிட்டாலும் மனசுக்குள்ள ஒருவித ஏக்கம் இருந்துட்டே இருக்கும். இப்ப அது எதுவும் இல்ல. எப்பவும் இதே சந்தோஷத்தோட நாம வாழனும். அவ்ளோதான்” என்றாள் மகிழ்.

“நீ யாரும் இல்லாம கஷ்டப்பட்டுருக்க. நான் எல்லாரும் இருந்தும் யார்க்கூடவும் ஒட்ட முடியாம ரொம்பவே சிரமப்பட்டேன். எங்கம்மா இருந்தவரைக்கும் நான் அவங்களோடதான் ரொம்பவே அட்டாச்சுடு. எங்கப்பாக்கு அப்ப பிஸினஸ் பார்க்கவே சரியா இருக்கும்.

அதுக்காக அவருக்கு பாசம் இல்லனு சொல்லிட முடியாது. ஆனா அதைக் காட்ட அவ்வளவா நேரம் இல்ல. எப்பவும் நான் எங்கம்மா முந்தானையை பிடிச்சிட்டுதான் சுத்துவேன். அம்மாவுக்கு உடம்பு சரியில்லனு தெரிஞ்சதும் அப்பாவை விட்டு விலகின மாதிரி என்னை விட முடியல அவங்களால.

அதானால அப்பவும் கூட கூட்டிட்டு போயிட்டாங்க. ஆனா மொத்தமா இல்லாம போகும்போது எப்படி தாங்குவேனு யோசிக்கவே இல்ல போல” என்றான் வருத்தத்துடன்.

“அப்படி இல்லங்க. அத்தை மாமாவை மறுபடி கல்யாணம் பண்ணிக்க சொன்னதே உங்களுக்காக தான் இருக்கும். மாமாவுக்கு பிஸினஸ் அது இதுன்னு நிறைய வேலை. இதுல உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணலனா நீங்க வருத்தப்படுவீங்கன்னு யோசிச்சிருக்கலாம்” என்றாள் மகிழ்.

“ம்ம் இருக்கலாம். ஆனா அவங்க நினைச்ச எதுவுமே நடக்கல. எல்லாருக்கும் ரெண்டாவது கல்யாணம் சரியா நடக்கும்னு சொல்ல முடியாது. அப்பாவால அம்மாவை மறக்க முடியல. சுட்சுவேஷன்க்கு கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், வேலைல தான் அவரோட எண்ணம் இருந்தது.

ஒருவேளை வீட்ல கவனம் செலுத்தியிருந்தா முன்னாடியே இவங்க குணம் தெரிஞ்சிருக்கும். ஆனா அது கூட நல்லதுக்குதான். இல்லனா சந்துருவும், சிந்துவும் என் மேல இவ்ளோ பாசம் காட்டியிருக்க மாட்டாங்க. அம்மா செல்லமா போனதால எனக்கு உலகமே இல்லாதது போல ஆகிடுச்சு.

அம்மா இல்லாத வீட்ல இருக்க பிடிக்காமதான் ஹாஸ்டல் போனேன். ஆனா அங்கையும் நார்மலா இருக்க முடியல. நீங்க எல்லாரும் நினைக்கலாம். இவ்ளோ பண்ணியும் ஏன் நிரஞ்சனி மேல அவ்ளோவா எனக்கு கோபம் வரலன்னு.

அந்த புரியாத வயசுலயே என் மேல அவளுக்கு ரொம்ப பாசம். என்னை அவ்ளோ நல்லா பார்த்துப்பா. எத்தனையோ நாள் சாப்பாடு கொண்டு வந்திருக்கா. அவளுக்கு படிக்கறது ரொம்ப பிடிக்கும். ரொம்ப புத்திசாலி. அதையே எனக்கும் சொல்லி குடுத்தா.

என்னோட கவனமும் அப்படியே படிப்பு, விளையாட்டுனு திரும்பிடுச்சு. ஒருவேளை அவளோட நட்பும் கிடைக்கலனா நான் என்ன ஆகிருப்பேனு எனக்கே தெரியல. இந்தியாவுல இருந்த வரை அவளுக்கு என்மேல அது மாதிரி எண்ணம்லாம் இருந்ததே இல்ல. எப்பவும் என்னோட பெஸ்ட் ஃப்ரண்டாதான் இருந்திருக்கா” என்றான் சித்து.

“புரியதுங்க. அவங்களுக்கும் உங்க மேல காதல் எல்லாம் இல்ல. காதல்ல மட்டும் இல்ல ஃப்ரண்ட்ஷிப்லயும் பொஸஸ்ஸிவ் வரும். அவங்களை விட நிறைய ஃப்ரண்ட்ஸ் உங்களுக்கு இருக்காங்கன்னு ஏத்துக்க முடியல. சோ லவ் பண்ணா கூடவே இருப்போம்னு நினைச்சிருப்பாங்க.

அதெல்லாம் நான் தப்பாவே நினைக்கல. முடிஞ்சதெல்லாம் விடுங்க. இனிமேல் நடக்கறது நல்லதாவே நடக்கும். எல்லாரையும் நல்லா பார்த்துக்கலாம். எல்லாருமே சந்தோஷமா இருக்கலாம். சரியா” என சித்துவை தேற்றினாள் மகிழ்.

“ஆமாமா. பொண்டாட்டி சொன்னா கேட்டுக்க வேண்டியது தான். இப்ப சந்தோஷமா இருப்போமா” என அவளது இடையினில் முத்தமிட விலகியவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

சற்று நேரம் அவளோடு கொஞ்சி விளையாடி, சரசமாக தனது காதல் விளையாட்டை தொடங்க, அவளும் அவனோடு இழைந்து கொடுக்க, அழகான இல்லறம் அங்கே ஆரம்பமானது.

மறுநாள் காலையில் முதலில் கண்விழித்த மகிழ், நீண்ட நாட்களுக்கு பிறகு அவனது முகத்தில் தெரிந்த அமைதியில் மனம் மகிழ்ந்து நெற்றியில் இதழ்பதித்து, “லவ் யூ அபி” என்றபடி எழ முயல, அவளை இழுத்துக் கொண்டவன், தூக்கத்திலேயே, “லவ் யூ டூ” என்றபடி அவளது நெஞ்சத்தை மஞ்சமாக்கி விட்ட தூக்கத்தை தொடர்ந்தான்.

சற்று நேரம் விட்டவள் அவனை வலுக்கட்டாயமாக விலக்கிவிட்டு குளியறைக்குள் புகுந்தவள், குளித்து முடித்து சமையலறைக்கு வந்தாள். அதற்குள் அகல் எழுந்து அங்கே காபி போடலாமா என யோசித்துக் கொண்டிருக்க, ஆதி, “என்ன பண்ற?” எனக் கேட்டுக் கொண்டே அங்கு வந்தான்.

அவளது யோசனையை கண்டு “நோ வயலன்ஸ்மா. இதோ என் தங்கச்சி வந்தாச்சு. அது பார்த்துக்கும். நீ வா” எனவும் மகிழ் சிரிக்க, அகல் அவனை முறைத்தாள். பிறகு சற்று நேரத்தில் காலை உணவையே சமைத்து முடிக்க அதற்குள் அனைவரும் குளித்து உணவு மேஜைக்கு வந்தனர்.

சித்துவும் சிரித்துக் கொண்டே வந்த அமர, முதலில் அவனது தட்டில் மகிழ் தான் செய்த உப்புமாவை வைக்க, அவன் முகம் போனதை கண்டு சிரித்த கவினுக்கு கண்ணீரே வந்து விட்டது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்