Loading

           ஒரு மாதத்திற்கு பிறகு, சென்னையின் அந்த முக்கிய திருமண மண்டபம் வண்ண விளக்குகளாலும், வண்ண தோரணங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டிருக்க, அந்த மாலை வேலை அந்திவான சிவப்பை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்க, அதற்கு சற்றும் குறைவில்லாமல் நாணத்தினால் சிவந்திருந்தது வதனியின் வதனம்.

அனைவரும் ஆவலாக எதிர்பார்த்த சித்தார்த்-மகிழ்வதனியின் திருமண வரவேற்புதான் இன்னும் சற்று நேரத்தில் அங்கு நடக்கவிருக்கிறது. தோழமைகள் குடும்ப உறவுகளாக மாறி இருக்க, அனைவரது முகங்களும் ஆனந்தத்தை தத்தெடுத்திருக்க, ஆளுக்கு ஒரு வேலையாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

மகிழ் தனது அறையில் தயாராகி கொண்டிருக்க, அங்கு வந்த சித்துவை உள்ளே விட முடியாதென வம்பிழுத்துக் கொண்டிருந்தனர் இசையும், அகலும். “அவகிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும். உள்ள விடும்மா. நீ என் தங்கச்சிதானே” என்றான் சித்து அகலிடம்.

“என்னனு என்கிட்ட சொல்லுங்கண்ணா. நான் உங்க தங்கைதானே” என்றாள் அவளும் விடாமல். “அடப்போங்கப்பா” என்றபடி தனது அறைக்கு வந்தவன் அலைபேசியில் அவளுக்கு செய்தி அனுப்ப, “மாம்ஸ். அக்கா ஃபோன் என்கிட்ட இருக்கு” என பதில் அனுப்பினாள் இசை.

ஃபோனையும் தூக்கி போட்டவன் படுக்கையில் சாயப் போக, “மச்சி. என்னடா இன்னும் கிளம்பாம இருக்க” என்றபடி வந்தான் கவின். “டிரஸ் மாத்தினா முடிஞ்சதுடா. நீ உன் தங்கச்சிக்கு மேக்கப் முடிஞ்சதும் வந்து எழுப்பு. நான் அஞ்சே நிமிஷத்துல வந்துடுவேன். அதுவரை தூங்க போறேன்” என்றான் சித்து.

“ஏதே, தூங்க போறீயா. டேய் இன்னும் பத்து நிமிஷத்துல எல்லாரும் வர ஆரம்பிச்சுடுவாங்க. ஒழுங்கா கிளம்பு. தங்கச்சிலாம் ரெடி ஆகி அரைமணி நேரம் ஆகுது” என்றான் கவின்.

“என்னடா சொல்ற. நான் இப்பதான் அங்க போய்ட்டு வந்தேன். இன்னும் ரெடி ஆகல. பார்க்க முடியாதுனு இசை சொல்லுச்சே” என சித்து கூற, “நீ கிளம்பி வா. அப்பதான் பார்க்க முடியும்” என்றவன் அவன் தயாராக உதவி செய்ய, அவனும் உடனே கிளம்பி வந்தான்.

சாம்பல் வண்ண கோட் சூட்டில் அட்டகாசமாக, மந்தகாச புன்னகையோடு சித்து அறையை விட்டு வெளியே வர, அவனோடு இணைந்து கொண்டாள் மகிழ்.

அவனுக்கு இணையாக, வெள்ளிச்சரிகையில் வேலைப்பாடுகள் செய்து சில்வர் நிறத்தில் அழகான ஒரு லெஹங்கா அணிந்து அதற்கு ஒப்ப ஆபரணங்கள் அணிந்து, அளவான ஒப்பனையிலே அப்சரஸ் போல இருந்த மகிழை பார்க்க பார்க்க திகட்டவில்லை சித்துவுக்கு.

அவள் மீது பார்வையை வைத்துக் கொண்டே நடந்தவனை கிண்டல் செய்து கொண்டே உடன் வந்தாள் இசை. அவளுக்கு மறுபுறம், அண்ணனோடு இணைந்து நடந்து கொண்டே அவனது அழகியான அவளை ரசித்தபடியே வந்து கொண்டிருந்தான் சந்துரு.

அவனது பார்வையை கண்டு கொண்டாலும் விலக்கவும் முடியாமல், முறைக்கவும் முடியாமல் ஒரு வித அவஸ்தையில் வந்து கொண்டிருந்தாள் இசை. பின்பு, இன்னும் சில மாதங்களில் கணவனாக போகிறவனாயிற்றே. அதனால்தான் எதுவும் பேசவில்லை அவள்.

சில நாட்களுக்கு முன்பு, சித்து வந்து மகிழின் பெற்றோரிடம் ஏதோ கூறிவிட்டு போக, மறுநாளே இசையிடம் அவளை பெண் பார்க்க வருவதாக கூறினர் அவர்கள். “அம்மா. அக்காவுக்கு இப்பதான் கல்யாணம் வைச்சிருக்கோம். அதுக்குள்ள ஏன்மா எனக்கு மாப்பிள்ளை பார்க்கறீங்க” என்றாள் இசை.

“அக்காவுக்குதான் முடிவாகிடுச்சுல்லமா. அதோட இது நல்ல சம்பந்தம். பார்த்து பேசி வைச்சுட்டா கல்யாணம் லேட்டா பண்ணா போகுது. உனக்கு பிடிச்சாதான் மேற்கொண்டு பேசுவோம்” என்றார் குணசேகரன். “அதுக்காக சொல்லலப்பா. இப்பவும் சொல்றேன். உங்களுக்கு பிடிச்சிருந்தா போதும்.

நான் கண்ணை மூடிக்கிட்டு கல்யாணம் பண்ணிப்பேன். அக்காவும், நானும் அடுத்தடுத்து கல்யாணம் பண்ணீட்டு போய்ட்டா நீங்க தனியா இருப்பீங்களேன்னு பார்த்தேன். அவ்ளோதான்” என்றாள் இசை.

“சரிடி வாயாடி. வரட்டும் பார்த்துக்கலாம்” என்ற மகிழ் தனியாக அவளை அழைத்து சென்று, “ஏன் இந்த விசயத்தில நீ இவ்ளோ பிடிவாதமா இருக்க” எனக் கேட்டாள்.

“உனக்கு தெரியாதுக்கா. மத்தவங்களை மாதிரி நம்ம அப்பாம்மா கிடையாது. ரொம்பவே ஃப்ரண்ட்லி டைப். ஸ்கூல் படிக்கும்போதுல இருந்து இப்ப ஆகாஷ் வரை நிறைய பசங்க எனக்கு ஃப்ரண்ட்ஸா இருந்திருக்காங்க. ஒரு தடவை கூட நீ இப்படி எல்லாம் பசங்ககிட்ட பழக கூடாது.

வீட்டுக்கு கூட்டிட்டு வரக் கூடாதுனு சொன்னதே இல்ல தெரியுமா. நமக்குதான் இது ஒரு விசயமான்னு தோணும். ஆனா சுத்தி இருக்கறவங்க எப்பவுமே நான் யாரையாவது லவ் பண்ணி கூட்டிட்டு வரப் போறேன். இருந்தாலும் பொண்ணுக்கு இவ்வளவு சுதந்திரம் கொடுக்க கூடாதுன்னு என் காதுபடவே பேசியிருக்காங்க.

ஆனா நம்ப வீட்ல அதையெல்லாம் காதுலயே வாங்கிக்கிட்டது இல்லை. என் பொண்ணு அப்படி இல்ல. அப்படி யாரையாவது லவ் பண்ணாலும் முதல்ல சொல்றது என்கிட்டயாதான் இருக்கும்னு அப்பா சொல்லிடுவாரு. அப்ப இருந்தே மனசுல கண்டிப்பா அரென்ஜ் மேரேஜ்தான் பண்ணிக்கனும்னு பிக்ஸ் பண்ணீட்டேன்.

யார் மேலயும் இண்டர்ஸ்ட் காட்டல. அதனால யார்க்கிட்டயும் அந்த பீல் வரவும் இல்ல. என்னை ப்ரீயா விட்டதால நான் என் இஷ்டப்படி முடிவு எடுத்துட்டேனு அவங்க நினைச்சிட கூடாதுக்கா. அவங்க மட்டும் எனக்கு கெடுதலா பண்ணிடுவாங்க.

சோ ஆப்டர் மேரேஜ் லவ் பண்ணிக்கிட்டா போச்சு. நான் சொல்றது சரிதானேக்கா” என்ற இசையை கட்டிக் கொண்டாள் மகிழ். “உன்னை போய் எல்லாரும் சின்ன பொண்ணு. விளையாட்டுத்தனமா இருக்கான்னு சொல்றாங்க.

இவ்வளவெல்லாம் யோசிச்சியா நீ. அதுக்காக மனசுல ஏதாவது ஆசை இருந்தா மறைச்சிடாதடி. அக்காகிட்ட சொல்லு. அதையே அரென்ஜ் மேரேஜா பண்ணிக்கலாம்” என அப்போதும் தங்கையின் நலனை யோசித்தாள் மகிழ்.

“அச்சோ அக்கா நீ வேற. இதுவரைக்கும் யார் மேலயும் அந்த மாதிரி பீல் வந்ததே இல்ல. சந்துருக்கு முன்னாடி யாரும் என்கிட்டயும் இதை பத்தியெல்லாம் பேசினதும் இல்ல” என்றாள் இசை. “சரி விடு சந்துருவை பத்தி என்ன நினைக்கிற.” எனக் கேட்டாள் மகிழ்.

“அவரை பத்தி நினைக்க எனக்கு என்ன இருக்கு” என விட்டேத்தியாக பதில் வர, “இதை பத்தியில்ல. பொதுவா. உன் ஃப்ரண்ட்தானே. நல்ல டைப்பா. அது மாதிரி சொல்லு” என மகிழ் கேட்கவும், “நீ எதுக்கு கேட்கறன்னு தெரியல. ஆனா ரொம்பவே நல்ல டைப்தான்.

வேலையில ரொம்பவே சின்சியர். நல்ல கேரக்டர். இல்லனா என் ஃப்ரண்டா இருக்க முடியுமா?” என இசை கூறியது ஓரளவு நல்லவிதமாகவே இருக்க, கண்டிப்பாக இருவருக்கும் ஒத்துப் போகும் என நினைத்த மகிழ், இசை கூறியதை பெற்றவர்களிடமும் கூற, அவர்களோ பெருமையாக உணர்ந்தனர்.

அடுத்தநாளே சந்துரு தனது வீட்டினரோடு பெண் பார்க்க வந்துவிட்டான். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஐயம்மாளும் உடன் வந்திருந்ததுதான். அவரிடம் சென்று சந்துருவும், சிந்துவும்தான் பேசினர்.

“இதுதான் நடக்கப் போகிறது. பெற்றவராக இருந்துகொண்டு பிள்ளைகளின் திருமணத்தில் பங்கேற்காமல் போனால் நமது குடும்ப கௌரவம் தான் போகும். நீங்கள் வந்தாலும் வராவிட்டாலும் எங்களின் மூவரது திருமணமும் அடுத்தடுத்த நடக்க போகிறது. அதற்கு மேல் உங்களது விருப்பம்” என அவர்கள் கறாராக கூறிவிட, வேறுவழியின்றி உடன் வந்துவிட்டார்.

பொதுவான நல விசாரிப்புகளுக்கு பிறகு பெண்ணை அழைத்து வர சொல்ல, சந்துருவை அங்கு கண்டதில் அதிர்ச்சிதான் இசைக்கு. ஆனால் மற்ற அனைவருமே மகிழ்வாக இருக்க, எல்லோரும் ஒன்றுபட்டுதான் இந்த முடிவை எடுத்துள்ளனர் என உணர்ந்தவள் எதுவும் பேசவில்லை.

மீனாட்சி தனியே அழைத்து சென்று கேட்டபோதும் உங்களின் விருப்பம் என கூறிவிட்டாலும் ஏனோ மனம் சோர்வாக இருந்தது. பிறகு சந்துரு தான் பேச விரும்புவதாக கூறி தோட்டத்திற்கு அழைத்து வந்தான். “என் மேல கோபமா மகி?” என சந்துரு கேட்க, அவளோ இல்லையென தலையாட்டினாள்.

“சாரி மகி. எனக்கு வேற வழியில்ல. நீ வேற யாரையாவது பிடிச்சிருக்குனு சொல்லியிருந்தா கண்டிப்பா நான் விலகியிருப்பேன். ஆனா நீதான் கழுதையோ, குதிரையோ எங்கப்பாம்மா காட்டினா போதும்னு சொல்லிட்டியா. அதைவிட நான் கொஞ்சம் பெட்டர்னு தோணுச்சு.

அதுமட்டுமில்லாம என்னை பத்தி உனக்கு நல்லா தெரியும். சோ நீ பொறுமையா என்ன லவ் பண்ணலாம். வேணுங்கற டைம் எடுத்துக்கோ. அதுக்காக வருஷக் கணக்காக்கிடாதம்மா.” என சிரிப்பும், சீரியஸூம் கலந்து பேசியவன் அவள் முகம் பார்க்க, “உங்களை விட கழுதையே பெட்டர்தான்.

இருந்தாலும் எங்க வீட்ல சொல்லிட்டாங்கன்னு ஓகே சொல்றேன். இதையே சாக்கா வைச்சிட்டு அடிக்கடி பேசற வேலையெல்லாம் வைச்சுக்க கூடாது. நீங்க குடுத்த டைமே மேரேஜ்க்கு அப்பறம்தான் ஸ்டார்ட் ஆகுது.” என கறாராக கூறினாலும் கண்களில் தொலைந்து போன ஜீவன் மீண்டிருந்தது.

இப்போதைக்கு அது போதும் என அவனும் தலையாட்டினான். முதலில் சித்து திருமணமும், மூன்று மாதங்களுக்கு பிறகு கவினுக்கும் செய்த பிறகு மேலும் மூன்று மாதங்கள் கழித்து சந்துருவுக்கும் இசைக்கும் திருமணம் வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்துவிட்டனர்.

அதற்கு பிறகு இசை அலுவலகம் வந்தாலும் வேலையை தவிர எதுவும் பேசமாட்டாள். சந்துருவும் நேரடியாக பேசவிட்டாலும், அவ்வபோது வீட்டிற்கு வருவது, ஏதாவது பரிசுப்பொருள் தருவது என காதலனாக தனது கடமையை செவ்வனே செய்து கொண்டிருந்தான்.

அதனால் தான் இன்று சற்று உரிமையாகவே தன்னவளை ரசித்துக் கொண்டிருந்தான் சந்துரு. இவர்கள் ஒருபுறமென்றால் கவினோ இவ்வளவு நாட்கள் மறைத்து வைத்த காதலை எல்லாம் மொத்தமாக காட்டி சிந்துவை திணறடித்துக் கொண்டிருந்தான்.

சித்து பாதி நாட்கள் சென்னையிலேயே இருக்க, அலுவலக மொத்த பொறுப்பும் கவின் மீது இருப்பதாக கூறி உதவிக்கு சிந்துவை அழைக்க அவளும் கல்லூரி நேரம் போக மீதி நேரம் அலுவலகம் வந்தாள். அவள் வரும்வரை பொறுப்பாக வேலை செய்பவன் அவள் வந்ததும் அவளிடம் சீண்டுவதையே வேலையாக்கி கொண்டான்.

“அப்ப இங்க வேலையே இல்லையா உனக்கு” என சிந்து எப்போதாவது கேட்கும் போதெல்லாம், ஒரு டிரே நிறைய ஃபைல்களை காட்டுபவன், “இவ்ளோ வேலை இருக்கு சிட்டு. ஆனா மாமாக்கு ஒரு ரிலாக்ஸ் வேண்டாமா. அதுக்குதான் உன்கிட்ட கொஞ்சறேன்” என அவளிடம் வழிவது வேலையாகி போனது அவனுக்கு.

இதைத்தவிர வார இறுதி நாட்களில் திருமணத்திற்கு பர்சேஸ் செய்யலாம் என கூட்டி செல்பவன் நாள் முழுதும் எங்காவது சுற்றி அவளோடு நேரத்தை செலவிட்டு கொண்டிருந்தான். இப்போது சித்துவும், மகிழும் மேடைக்கு வந்ததை கூட அறியாமல் வெளிப்படையாக சிந்துவை சைட் அடித்துக் கொண்டிருந்தான்.

இந்த ஒரு மாதத்தில் அகல்யாவை எப்படியோ கெஞ்சி, கொஞ்சி ஒரு வழிக்கு கொண்டு வந்திருந்தான் ஆதித்யா. அவளுக்கும் அவன் மீது இருந்த கோபம் ஓரளவு குறைந்திருக்க, மகிழின் திருமணம் முடிந்ததும் ஊருக்கு சென்று வரலாம். அதற்கு பிறகே சேர்ந்து வாழ்வதை பற்றி யோசிப்பேன் என அவனிடம் கூறிவிட்டாள்.

அவள் எதற்காக கூறுகிறாள் என்பதை அறிந்திருந்த ஆதியும் அவளது விருப்பத்திற்கே விட்டுவிட, இப்போது கண்ணையும், கருத்தையும் அவள் மீதே வைத்து மெய்மறந்து நின்றிருந்தான். ஐயம்மாள் இது எதிலும் கலந்து கொள்ளவும் இல்லை.

விலகி நிற்கவும் இல்லாமல் அவரது கௌரவத்தை செவ்வனே காப்பாற்றிக் கொண்டு இருந்தார். நிரஞ்சனி அழகிய லேவண்டர் நிற டிசைனர் புடவையில் அழகாக தயாராகி, தனது பெற்றோருடன் முதல் ஆளாக ஆஜராகி இருந்தாள்.

இவர்கள் வந்ததும் மேடைக்கு சென்று மகிழின் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தாள். ஆகாஷ் தனது தோழமைகளின் வாழ்வு செம்மையான மகிழ்வில் சித்துவின் அருகே நின்று கொண்டிருந்தான்.

விருந்தினர்கள் ஓரிருவரே வந்திருக்க, சித்து மற்று மூன்று ஜோடிகளையும் பார்த்து ஆகாஷிடம், “என்னடா நடக்குது இங்க. வேலையை பார்க்காம என்ன பண்ணீட்டு இருக்காங்க இவங்க” எனக் கேட்க, அவனோ, “நான் கேட்டதுக்கு காதலிக்கறதுதான் முதல் வேலைன்னு சொல்றாங்க மாம்ஸ்” என்றான்.

“நான் நல்லா பண்றனோ இல்லையோ, இவங்க நல்லாவே பண்றாங்க. ஆமா நீ இன்னும் யாரையும் செட் பண்ணலயா?” என சித்து கேட்க, “உங்க மேரேஜ்ல தான் அவனுக்கு ஜோடி தேடிடனும்னு ஆவலா வந்து ஸ்டேஜ்ல நிக்கறான் மாம்ஸ்” என உடனே அருகே வந்து சொன்னாள் இசை.

“உன்ன கேட்டாங்களா? உன் வேலையை போய் பாரு. வரவேற்க ஆளே இல்ல பாரு” என அவளை துரத்தினான் ஆகாஷ். ஸ்ரேயாவிற்கு போனவாரம்தான் திருமணம் முடிந்திருந்தது. கவின், சித்து இருவருமே குடும்பமாக சென்று அதை நடத்தி கொடுத்திருக்க, காதல் கணவனோடு வரவேற்பிற்கே வந்து விட்டாள் அவள்.

ராகினியும் அவளது கணவன் தீபக்கோடு வந்திருக்க, பிறகு வரவேற்பு ஆரம்பமானது. விருந்தினர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க, எதிரில் இருந்த மேடையில் இன்னிசை கச்சேரி நடந்து கொண்டிருந்தது.

மற்றொரு புறம் பஃபே முறையும், பந்தியுமாக விருந்து உபச்சாரம் நடந்து கொண்டிருந்தது. உறவினர்கள், நண்பர்கள் என களைகட்டிய வரவேற்பில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மைக்கை எடுத்து பாட ஆரம்பித்தான் சித்தார்த்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்