Loading

                மகிழின் வீட்டிலேயே நிச்சயம் வைத்துக் கொள்வதாக முடிவு செய்திருக்க, முக்கிய சொந்தங்கள், அக்கம் பக்கத்தினர் சிலரை மட்டுமே அழைத்திருந்தனர். சித்து திரும்பி வரும்போது ஆளுக்கு ஒரு வேலையை பார்த்துக்கொண்டிருக்க, அவனோ உடன் நிரஞ்சனியையும். அழைத்து வந்தான்.

அவளைக் கண்டதும் அனைவரும் ஒரு நிமிடம் திகைக்க, மகிழோ அவளை வாசலிலே சென்று வரவேற்றாள். “வாங்க. வாங்க. நானே கூப்பிடனும்னு நினைச்சேன். எப்படி இருக்கீங்க?” என பேசியபடி அவளை உள்ளே அழைத்து செல்ல, மற்றவர்கள் எதுவும் பேசவில்லை.

ஆனால் நிரஞ்சனி அவர்கள் பயந்தது போல எந்த பிரச்சனையும் செய்யவில்லை. மகிழோடு பேசி சிரித்து சந்தோஷமாகவே இருந்தாள். அதன் பிறகு வேலைகள் மளமளவென நடந்தது. மொத்தமே ஒரு ஐம்பது நபர்களுக்குள்ளாகவே இருக்க, மகிழை அலங்காரம் செய்து அழைத்து வந்து அமரவைத்து நலுங்கு வைத்தனர்.

அதன்பிறகு நிச்சயப்புடவை மாற்றி வர, அப்போது நிரஞ்சனி அதற்கு பொருத்தமான ஒரு நகை செட்டை கொடுத்தாள். “இதெல்லாம் எதுக்கு” என மகிழ் மறுத்தாலும், “இல்ல இந்த சேரிக்கு ரொம்ப மேட்சா இருக்கும். என்னால நீங்க ரெண்டு பேரும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்க. மன்னிப்பு கேட்டா சரியாகிடுமான்னு தெரியல. இதை நீ போட்டுக்கிட்டா சந்தோஷப்படுவேன்” எனவும் மகிழ்வோடு அணிந்து கொண்டாள் மகிழ்.

பிறகு இருவரையும் அமரவைத்து நலுங்கு வைத்து, முறைப்படி நிச்சயப் பத்திரிக்கை வாசித்து, தாம்பூலத் தட்டை ஐயம்மாளும், மகிழின் பெற்றோரும் மாற்றிக் கொண்டனர். அதன்பிறகு மீனாட்சி மகிழிடம் ஒரு மோதிரத்தை கொடுக்க, ஐயம்மாள் எடுப்பதற்கு முன்பாகவே தனது சட்டைப்பையில் இருந்து ஒரு மோதிரத்தை எடுத்து முதலில் சித்துவே அணிவித்தான்.

‘இதை வாங்குவதற்கு தான் வெளியே சென்றானா’ என மகிழ் நினைத்தாலும் சிரிப்போடு அதை ஏற்றுக் கொண்டு, தானும் ஒரு மோதிரத்தை அணிவிக்க இருவருக்கும் நிச்சயம் இனிதே நடைபெற்றது. இருவரது கண்களும் காதலோடு ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்க, “ம்ம். போதும் போதும். நாங்களும் இங்கதான் இருக்கோம்” என்றாள் இசை.

“நீங்க இங்கையே இருங்க. நாங்க சாப்பிட போறோம். நீ வா வதனி” என சித்து அவள் கரம் பற்ற, “இருங்க மாம்ஸ். இன்னிக்கு புல்லா நீங்க விரதம் இருக்கனும்.” என்க, “எதுக்கு விரதம்.” என சித்து யோசித்தான். “வேற எதுக்கு. எங்கக்காவோட நிச்சயம் நல்லபடியா நடந்தா மாமாவை ஒரு நாள் பூரா விரதம் இருக்க வைக்கிறதா வேண்டி இருக்கேன்” என்றாள் இசை.

“வேண்டிக்கிட்டா நீயே விரதம் இரு. என்னால முடியாது” என்றபடியே சித்து செல்ல, அருகில் வந்த சந்துரு, “நான் வேணும்னா விரதம் இருக்கவா?” எனக் கேட்டான் அவளிடம். ‘நீ எதுக்கு இருக்க’ என்ற ரீதியில் இசை பார்க்க, “வேற எதுக்கு நம்ப நிச்சயம் நல்லபடியா நடக்க வேண்டாமா. அதுக்குதான்” என்றான்.

அவள் அவனை முறைக்க, “தோ வந்துட்டேண்ணா.” என அங்கிருந்து எஸ்கேப் ஆனான். பிறகு அனைவரும் பந்தியில் அமர, முதலில் வந்திருந்த விருந்தினர்கள் உணவருந்திய பிறகு அவர்கள் கிளம்பிவிட, பிறகு வீட்டு ஆட்கள் உணவருந்த அமர்ந்தனர்.

சித்துவும், மகிழும் அருகருகே அமர, கவினும், சிந்துவும் சேர்ந்து அமர்ந்தனர். அகல் அமர்ந்ததும் வேகமாக சென்று அவளருகில் ஆதி அமர்ந்துவிட, அருகில் சென்று ஆகாஷ் அமர்ந்தான். அதைக் கண்டதும் அவனருகில் சென்று இசை அமரவும் சந்துரு சென்று அமர்ந்ததோடு அருகில் குணசேகரனை அமர வைத்து விட்டான்.

அவனை கண்டதும் முறைத்து விட்டு இசை எழ முயல, “ஆன்ட்டி. சீக்கிரம் போடுங்க. மகிக்கு பசிக்குது போல. நெளியறா பாருங்க” என மீனாட்சியை அழைத்துவிட, அவரும் பரிமாற ஆரம்பித்தார். ஆனால் இதில் இசைக்கு புரியாதது என்னவென்றால், இதையெல்லாம் பார்த்தும் தனது பெற்றோர்கள் கண்டும் காணாமலும் இருப்பது ஏன் என்பதுதான்.

அதன்பிறகு அனைவரும் சிறு சிறு கிண்டல்களோடு உணவருந்தி முடிக்க, திருமணம் பற்றிய பேச்சுவார்த்தை எழுந்தது. அப்போது சித்து, “சிந்து கல்யாணத்தை முடிச்சுட்டு அப்பறமா எங்க கல்யாணத்தை வைச்சுக்கலாம் அத்தை. நீ என்ன சொல்ற வதனி?” எனக் கேட்டான்.

மகிழும் அதற்கு சம்மதம் கூற, “இல்லண்ணா. உங்க கல்யாணம் முதல்ல முடியட்டும். அண்ணி கூட கொஞ்ச நாள் சண்டையெல்லாம் போட வேண்டாமா?” என விளையாட்டாக கூறினாலும், தனது காதலை பற்றி தெரியும்போது அன்னையின் எதிர்வினை பற்றிய பயமே அவளது கண்களில் தெரிந்தது.

“அதெல்லாம் பொறுமையா சண்டை போடலாம். முதல்ல கல்யாணம் முடிஞ்சு மச்சானோட சண்டை போடு” என்ற சித்து, “நீ என்ன சொல்ற மச்சி” என அங்கே நடப்பதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல பாயாசத்தை ருசித்து கொண்டிருந்த கவினிடம் கேட்க, அவனோ, “பேசாம ரெண்டு மேரேஜூம் ஒன்னா வைச்சுக்கலாம் மச்சி” என்றான் அவன்.

சித்து, “இல்ல மச்சி அது சரியா வராது. ரெண்டு பேரும் ஒரே நேரத்துல மாப்பிள்ளையா உட்கார்ந்துட்டா வேலையெல்லாம் யாரு பார்க்கிறது” எனக் கேட்கவும், அதுவரையில் நண்பனிடம் பொதுவாக யோசனை கேட்பதாக நினைத்துக் கொண்டிருந்த ஐயம்மாளுக்கு துணுக்குற்றது.

“உன் தங்கச்சி கல்யாணத்தை நடத்தறதுக்கு ஏன்ப்பா அவன்கிட்ட கேட்டுக்கிட்டு இருக்க” என ஐயம்மாள் நேரடியாகவே கேட்டுவிட, “கல்யாணம் பண்ணிக்க போறவன்கிட்ட கேட்காம வேற யார்க்கிட்ட கேட்கிறது” என்றான் சித்துவும் நேரடியாகவே.

“என்ன சொல்ற. என் பொண்ணுக்கு இவன் மாப்பிள்ளையா?” என்றபடி இருக்கையில் இருந்து எழுந்தே விட்டார் ஐயம்மாள். “ஏன் இருக்கக் கூடாதா?” எனக் கேட்டது சித்து அல்ல கவினே தான். “என் பொண்ணு பக்கத்துல கூட நீ நிக்க முடியாது.

ஏதோ அவன்கிட்ட குளோஸா இருந்தா நீ எங்களுக்கு ஈக்குவல் ஆகிடுவியா? இதுக்காகத்தான் இத்தனை நாள் எங்க வீட்டோட பழகுனியா? நான் சொன்னப்பல்லாம் நீ நம்பல இல்ல சந்துரு. இப்ப தெரியுதா?” எனக் கேட்டார் ஐயம்மாள்.

“நல்லா தெரியுதும்மா. ‘சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றாது’ ஒரு பழமொழி இருக்கு. அது மாதிரி நீங்களும் எப்பவும் மாறப்போறதே இல்லன்னு நல்லாவே தெரியுது” என்றான் சந்துரு வெறுப்பாக.

“நான் என்ன சொல்றேனு உனக்காவது புரியுதா சிந்து. உனக்கு எப்படியெல்லாம் கல்யாணம் பண்ணனும்னு நான் நினைச்சுட்டு இருக்கேன். இவன் என்னடான்னா இவனை போய் மாப்பிள்ளைன்னு சொல்றான்” என்றார் ஐயம்மாள் தனது மகளிடம்.

அதற்கு சிந்து, “அம்மா. அண்ணன் ஒன்னும் கவினை கல்யாணம் பண்ணிக்க சொல்லி என்கிட்ட சொல்லல. நான்தான் கவினை லவ் பண்றதா அண்ணன்கிட்ட சொன்னேன். ஏன் கவின்கிட்ட கூட நான்தான் முதல்ல சொன்னேன்.” எனவும், “ஏண்டி. உனக்கு லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலயா?” என அங்கலாய்த்தார் ஐயம்மாள்.

“நிறுத்தும்மா. இப்பக் கூட நீ லவ் பண்றதுக்கு திட்டுவியோன்னு ஒரு பயம் இருந்தது. ஆனா இதே நீ நினைக்கற ஸ்டேட்டஸ்ல ஒரு பையனை நான் லவ் பண்ணியிருந்தா ஒன்னும் சொல்லி இருக்க மாட்டல்ல. இப்ப சொல்றேன். நான் கவினைத்தான் கல்யாணம் பண்ணீப்பேன்” என்றாள் சிந்து உறுதியாக.

“உன் தலையெழுத்து அப்படிதான்னா அதை நான் மாத்த முடியாது. ஆனா” என்றவரை தடுத்த சித்து, “சாபமெல்லாம் கொடுக்காதீங்க. நான்தான் உங்களுக்கு மூத்தார் பிள்ளை. ஆனா இவ உங்க வயத்துல பொறந்த உங்க சொந்த பொண்ணு” என்றான்.

“அதை பத்தியெல்லாம் எங்க அம்மாவுக்கு கவலை இருக்காதுண்ணா. நீ வேற” என அலுத்துக் கொண்டாள் சிந்து. அவர்கள் இருவரையும் முறைத்தவர் சந்துருவிடம் மீண்டும் சென்று ஏதோ கூற வர,

“அப்ப அண்ணன் காதலிச்சதுக்கு நீங்க எதுவுமே சொல்லல. இதான் காரணமா. ஏன்மா ஒருவேளை நானும் மிடில் கிளாஸ் பொண்ணை லவ் பண்ணா நீ என்ன பண்ணுவ” எனக் கேட்டு அவருக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்தான்.

“என்னடா நினைச்சிட்டு இருக்கீங்க?. என்னை பார்த்தா எப்படி தெரியுது எல்லாருக்கும்” என ஐயம்மாள் பொங்க, “உன்கிட்ட எவ்வளவு பேசினாலும் வேஸ்ட்ன்னு தெரியுது. அப்பறம் இவ்வளவு நாள் அண்ணா முடிவு எடுக்கட்டும்னு நினைச்சு நாங்க ஒதுங்கி இருந்ததே தப்பு. நீங்க வாழ்ந்து முடிச்சவங்க.

கூட இருந்து எங்களுக்கு நல்லது கெட்டது சொல்லி வழிநடத்தி நாங்க நல்லா வாழனும்னு நினைக்கனும். ஆனா உனக்கு சந்தோஷத்தை விட பணமும், கௌரவமும் தான் முக்கியமா தெரியுது. உன்னை விட அண்ணா எங்களை நல்லாவே பார்த்துக்குவாரு. நீ முதல்ல அந்த வீட்டை காலி பண்ணீட்டு அப்பா உனக்குன்னு எழுதி வைச்சிருக்க வீட்டுக்கு போ.

மாசா மாசம் உன் செலவுக்கு பணம் வரும். இதை அண்ணா சொல்ல முடியாம இருக்க ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனா நீ சொன்ன மாதிரி எனக்கு சொல்ல எல்லா உரிமையும் இருக்கு” என்றதில் அதிர்ந்து நின்றார் ஐயம்மாள்.

“நீ சொல்றது தான்ணா கரெக்ட். அம்மா என் கல்யாணம் நீ நினைச்சதை விட கிராண்டா நடக்கும். அண்ணன் நடத்தி வைக்கும்” என்றாள் சிந்துவும்.

“என் ரெண்டு பசங்களையும் என்கிட்ட இருந்து பிரிச்சிட்டல்ல” என ஐயம்மாள் கோபமாக சித்துவிடம் கேட்க, நிரஞ்சனி முன் வந்து, “ஏன் ஆன்ட்டி இன்னமும் உங்களுக்கு புரிய மாட்டேங்குது. உங்க பசங்களை உங்ககிட்ட இருந்து பிரிச்சது நீங்க மட்டும்தான். அது மட்டுமில்ல சித்துவை அவனோட வாழ்க்கையை விட்டே அனுப்பியிருக்கீங்க. புரிஞ்சுக்கோங்க” என்றாள்.

“இவ்வளவு நாள் அவனோட கஷ்டத்துக்கு நீயும் கூட காரணமா தான் இருந்தன்னு மறந்திடாத” என ஐயம்மாள் கூறவும், “ஆமா நானும்தான் காரணம். ஆனா உங்களை மாதிரி வாழ்க்கை முழுக்க அவன் கஷ்டப்படனும்னு நான் நினைக்கல.

அவனை கல்யாணம் பண்ணீட்டு நல்லா பார்த்துக்கனும்னு தான் நினைச்சேன். அதனால தான் நீங்க பத்தரத்துல கையெழுத்து வாங்கி கொடுத்தா நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேனு சொன்னப்ப அதுக்கு ஒத்துக்கிட்டேன்.

அதுக்கு பேரு பாசம்தானே தவிர பணத்தாசை இல்ல. இது எல்லாத்துக்கும் மேல இப்ப அவனை புரிஞ்சுகிட்டு திருந்தவும் செஞ்சுட்டேன். ஆனா நீங்க” என நிரஞ்சனி கூறியதில் அனைவருமே அதிர்ந்து தான் போயினர். ஏனென்றால் நிரஞ்சனியின் செயல்களுக்கு பின்னால் ஐயம்மாள் இருந்திருக்கிறார் என்பது அனைவருக்குமே புதிய செய்தி.

“உங்களை நம்ப முடியலன்னு அண்ணா சொன்னது நூறு சதவீதம் சரிதான்மா. இப்ப கூட பாசமா பேசினா கடைசியில சொத்தை எழுதி கொடுத்திடும்னு தானே கோபம் இல்லாதது மாதிரி நடீச்சீங்க” என்றாள் சிந்து கோபமாக.

“தயவு பண்ணி இங்கிருந்து கிளம்புங்க” என சந்துரு கூறவும், ஐயம்மாள் கிளம்ப எத்தனிக்க, “ஒரு நிமிஷம். இதையும் கேட்டுட்டு போங்க” என நிறுத்திய சித்து. “வதனி” என குரல் கொடுத்தான். இவர்கள் பேச தொடங்கிய போதே அவர்கள் குடும்பத்தினரை தவிர மற்றவர்களை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்றிருந்தார் மீனாட்சி.

அவன் குரல் கொடுத்ததும் அவர்கள் திரும்ப வர, வதனியோ கையில் ஒரு ப்ரீப்கேஸை கொண்டு வந்து கொடுத்தாள். அதை திறந்த சித்து, சில பத்திரங்களை எடுத்து ஐயம்மாளிடம் கொடுத்தவன், “இது பெரிய வீட்டுல நீங்க இன்னும் அஞ்சு வருஷம் தங்கிக்க பவர் ஆப் அட்டானி பத்திரம். இப்ப இதை உங்க பேருக்கு மாத்தி தர முடியாது. இந்த டேட் முடிஞ்சதும் இதை உங்க பேருக்கே மாத்தி தரேன்” எனக் கொடுத்தான்.

“சந்துரு இங்க வா.” என அவனை அழைத்தவன், அவனிடம் சில பத்திரங்களை கொடுக்க, “என்ன அண்ணா இது” என்றவன் வாங்காமலே இருக்க, “சென்னை ஆபிஸ் என்னோட சொந்த பணத்துல நான் உருவாக்கினது. இதுக்கு தேவையான மூலப்பணம் கொடுத்தது அப்பாதான்.

ஆனா அதை அவருக்கு நான் திருப்பி கொடுத்துட்டேன். என்கிட்ட இருந்து பணம் வாங்கினதை அப்பாவும் அவரோட டைரில நோட் பண்ணியிருக்காரு. இதுல அதோட காப்பியும் இருக்கு. சோ இதை மாத்தி தர யாருகிட்டயும் நான் கேட்க வேண்டியது இல்ல.

இப்ப இந்த கம்பெனி உன்னுடையது. இப்ப மாதிரியே இதை சக்ஸஸா கொண்டு போக வேண்டியது உன்னோட பொறுப்பு” என அவன் மறுத்தாலும் அவனது கைகளில் கொடுத்தான் சித்து.

அடுத்ததாக சிந்துவை அழைக்க, “அண்ணா நீ எதுவும் எங்களுக்கு கொடுக்க வேண்டாம். இப்பதான் கஷ்டமா இருக்கு” என்க, “அண்ணன் தானேடா கொடுக்கறேன்” என்றவன் கவினையும் அருகில் அழைத்து, “இது பெங்களூர் ஆபிஸோட டாக்குமெண்ட்ஸ்.

உங்க ரெண்டு பேரையும் டைரக்டர்ஸா போட்டு இருக்கேன். இப்போதைக்கு நான்தான் ஓனர். நாம இந்த கம்பெனியை வாங்கியே கொஞ்ச நாள்தான் ஆகுது. அடிக்கடி சேன்ஜ் பண்ணா வீணா குழப்பம் வரும்.

சோ சிந்து படிப்பை முடிச்சிட்டு பொறுப்பு ஏத்துக்கிற வரை நான் பார்த்துக்கறேன். அதுக்குள்ள நீயும் கத்துக்கனும்டா சரியா” என அவர்களிடம் அதை கொடுக்க, இருவரும் அதை வாங்கவே இல்லை.

“டேய். இப்ப எதுக்கு நீ இதெல்லாம் பண்ணீட்டு இருக்க. உன்னை யாரு கேட்டா.” என கவின் சித்துவை சத்தம் போட்டாலும் அனைவரது கண்களும் ஐயம்மாளை குற்றம் சாட்டியது.

“என்ன அண்ணி நீங்க எதுவும் பேசாம இருக்கீங்க. இதெல்லாம் வேண்டாம்னு சொல்லுங்க” என சிந்து மகிழிடம் கூற, அவளோ, “அவரு சரியாத்தான் பண்றாரு சிந்து” என்றதில் அனைவரும் புரியாமல் பார்த்தனர்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்