Loading

                மகிழின் தொடர்ந்த அமைதி சித்துவிற்கு ஏதோ பிரச்சனை என தெரிவித்தாலும் அது என்ன என்பதுதான் புரியவில்லை. தெரிந்து கொள்வதற்காக சந்தேஷை சந்திக்க சென்றான். அவனை இன்னமும் தங்களது கஸ்டடியில் தான் சித்துவின் தோழர்கள் வைத்திருந்தனர்.

இவனைக் கண்டதும், “டேய். என்னை பத்தி இன்னும் உனக்கு முழுசா தெரியல. எங்கப்பாக்கு மட்டும் தெரியட்டும். அப்பறம் இருக்கு உனக்கு” என்றான் சந்தேஷ்.

“உங்கப்பனுக்கெல்லாம் எப்பவோ தெரியும். உனக்கு ஒன்னு தெரியுமா? அவனையும் தூக்கியாச்சு. உன் மேலயாவது இன்னும் கேஸ் ஃபைல் பண்ணல. ஆனா உங்கப்பனுக்கு ஜெயிலே கன்பார்ம் ஆகப்போகுது” என்றான் சித்து நக்கலாக.

“டேய் என்கிட்ட விளையாடாதடா. எங்கப்பாவெல்லாம் அரெஸ்ட் பண்ண முடியாது” என்றான் சந்தேஷ் கர்வமாக. “ஆமாடா நீ என் மச்சான் பாரு. அதான் விளையாடறேன்” என்ற சித்து நடந்ததை கூற, உடனே, “உனக்கு என்கூடதானே பிரச்சனை. எதுக்கு எங்கப்பாவை இப்படி மாட்டிவிட்ட?” என அவன் கேட்க,

“இப்படி உங்கப்பா நினைச்சிருந்தா நல்லா இருக்கும். ஆனா இதுல அவன் இப்படி மாட்டிப்பானு நாங்களே எதிர்பார்க்கல. சரி அதை விடு. அன்னைக்கு ஏதோ ஃபோட்டாலாம் காட்டினியே. அதை எப்படி ரெடி பண்ண சொல்லு” என்றான் சித்து.

“அது அவளைத்தான் கேட்கனும். அவதானே எனக்கு அனுப்பி இருந்தா.” எனவும் அவனை அடித்து துவைத்து விட்டான் சித்து. அதன்பிறகே நடந்த உண்மைகளை கூற அப்போதுதான் அவளை சஸ்பென்ட் செய்யவில்லை என்ற உண்மையும், அப்படி நினைத்துதான் அவள் மருகிக் கொண்டிருக்கிறாள் என்பதும் தெரிந்தது சித்துவுக்கு.

“எவ்வளவு தைரியம் இருந்தா என் மகிழோட ஃபோட்டோவை வைச்சு இது மாதிரி பண்ணீயிருப்ப. போன வாரம் இப்படி ஒருத்தன் மாட்டினானே அவனை என்னடா பண்ணீங்க?” எனக் கேட்க, “அதே மாதிரி அவனையும் நிறைய பொண்ணுங்களோட இருக்கிற மாதிரி மார்பிங் பண்ணி அவனோட பொண்டாட்டிக்கு அனுப்பி வைச்சோம்” என்றதில் அவன் சற்றே பயந்துதான் போனான்.

சமீபத்தில் தான் ஒரு பெரிய மனிதரின் பெண்ணோடு அவனுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தது. அவருக்கு சமூகத்தில் நல்ல பெயர் இருந்தது. இவனை பற்றிய உண்மையெல்லாம் தெரிந்தாலே நிச்சயம் திருமணம் நின்று விடும்.

இவர்கள் சொல்வது போல நடந்தால் அவ்வளவுதான். தந்தை வேறு அருகில் இல்லையே. என்ன செய்வது என திகைத்துதான் போனான் சந்தேஷ். “அது என்னடா. பொண்ணுங்க கொஞ்சம் சுய மரியாதையோட இருந்துட்டா உங்களுக்கெல்லாம் எரியுது.

உன்கூட சுத்தறதை பாக்கியமா நினைச்சு வாழற பொண்ணுங்க பத்தாதா உனக்கு. அது எப்படி வேண்டாம், இது எனக்கு ஒத்து வராதுன்னு சொல்ற பொண்ணுங்களை டார்ச்சர் பண்றதுல அப்படி ஒரு குரூர சந்தோஷம் உன்னை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம்.” என்றான் சித்து.

“இவன்கிட்டலாம் பேசறதே வேஸ்ட்டுடா, பெரிய கேஸ் எதுவாவது போட்டு உள்ள தள்ளீட வேண்டியதுதான். இவன் வீட்டு பொண்ணுங்களை யாராவது பார்த்தாலே போய் போட்டு தள்ளுவானுங்க. அதே அடுத்த வீட்டு பொண்ணுன்னா அதுவும் தனியா இருக்கிற, வேலைக்கு போற பொண்ணுங்கன்னா அவ்வளவு இளக்காரம்.

அந்த பொண்ணுங்களை டார்ச்சர் பண்ணி நினைச்சதை சாதிப்பானுங்க. ஒரு அளவுக்கு மேல போச்சுனு கொலை கூட பண்ணீட்டு, பெரிய இடத்துல காசு குடுத்து பொண்ணு காதல் தோல்வியில தற்கொலைன்னு கேஸை முடிச்சிடுவாங்க. இவனை எப்படி டீல் பண்ணலாம்னு அப்பறம் யோசிக்கலாம். நீ போய் சிஸ்டரை பாரு” என்றான் அருண்.

“உண்மைதான்டா, சரி நான் கிளம்பறேன்” என வெளியில் வந்தவன் அடுத்ததாக போடிமெட்டுவில் தற்போதைய நிலையையும், இப்போதைய மருத்துவர் யாரென்பதை விசாரிக்க, மகிழ் இங்கு வந்த ஒரு வாரத்திலேயே வேறு ஒரு மருத்துவரை போஸ்டிங் போட்டதாகவும், ஏற்கனவே இருந்தவர் டிரான்ஸ்பரில் சென்றதாகவும் தகவல் கிடைத்தது.

அதில் குழம்பியவன், அவனது தோழி ஒருத்தி மெடிக்கல் கவுன்சில் அலுவலகத்தில் பணிபுரிவதை அறிந்து தொடர்பு கொண்டான். அவள் மூலமாக மகிழின் பணி விவரங்களை பார்க்க, அதில் மகிழ் சென்னைக்கு பணி மாறுதல் கேட்டு விண்ணப்பித்திருந்ததும், அதுபோலவே சென்னையில் நியமனம் வழங்கப்பட்டதாகவும் தகவல் கிடைத்தது.

அதோடு நியமனம் செய்து மூன்று மாதங்களுக்குள் பணியில் சேரவேண்டும் இல்லையேல் நடவடிக்கை எடுப்பர். இப்போதே இத்தனை நாட்கள் பணியில் சேராமல் இருப்பதற்கு தக்க சான்று அளிக்க வேண்டும் எனவும் அவள் கூறினாள். எப்போது பணியில் சேர கடைசி நாள் எனக் கேட்க, நாளை மறுநாள் என்ற தகவலும் கிடைத்தது.

உடனே மூன்று மாதங்களுக்கு முன்பு அவளுக்கு விபத்து ஏற்பட்டது போலவும், இடைப்பட்ட நாட்கள் மருத்துவ உதவியோடும் இருந்ததாக நண்பன் மூலம் சான்றிதழ் தயாரிக்க அதற்கே ஒரு நாள் ஆகிவிட்டது. அதனால்தான் இன்று அவளை வேகமாக அழைத்து செல்ல வேண்டியதாயிற்று.

“நீ கரெக்டா அங்கிருந்து கிளம்பி இரண்டு நாள் கழிச்சு டிரான்ஸ்பர் லெட்டர் போயிருக்கு. அதான் உனக்கும் தெரியல. ஆமா நீ எப்ப டிரான்ஸ்பர் அப்ளை பண்ண” என சித்து நடந்ததை கூறிவிட்டு கேட்க,

“ஆமா அபி. நடந்த பிரச்சனைல்ல நான் டிரான்ஸ்பர் அப்ளை பண்ணதே எனக்கு மறந்திருச்சு. சந்தேஷ் பிரச்சனை பண்ண ஆரம்பிச்சதுமே எனக்கு அங்க இனிமேல் இருக்க முடியாதுனு தோணுச்சு. அதான் அப்ளை பண்ணேன்” என்றாள் மகிழ்.

“அப்பவே நான் சென்னைல இருப்பேனு நினைச்சுதான் பண்ணீயா?” என சித்து கேட்க, அவள் தலை நேராக ஆடியது. பிறகு அவளே, “நான் எவ்ளோ ஆசைப்பட்டு, கஷ்டப்பட்டு இந்த படிப்பை முடிச்சேன் தெரியுமா அபி. திடீர்னு ஒருநாள் இது எதுவுமே உனக்கு இல்லனு வரும்போது எனக்கு என்ன பண்றதுனே தெரியல.

என்னை தப்பானவளா காட்டியிருந்தா கூட நான் அங்கையே இருந்திருப்பேன். ஆனா என் தொழிலை வைச்சு நான் தப்பான டாக்டர்னு சொல்லிட்டா என்னால அதை தாங்க முடியும்னு தோணல. இது எதையும் நேர்ல பார்க்க கூடாதுன்னு தான் அங்கிருந்து கிளம்பினேன்.

உண்மையிலேயே என் மூளை வேலை செய்யவே இல்ல. இப்படி பண்ண முடியுமான்னு கொஞ்சம் கூட யோசிக்கிற நிலைமைல நான் இல்ல.  அதான் என்ன பண்றதுனு தெரியாம ஓடி வந்துட்டேன். அப்பறம் நம்ப ஆபிஸ் வந்தப்பறம் அவ்ளோ பயம் இல்லனாலும், சஸ்பென்ட் பண்ணியிருக்கப்ப சர்வீஸ் பண்றது தப்பாச்சே.

யாராவது பார்த்து சொல்லிடுவாங்களோன்னு தோணிட்டே இருக்கும் தெரியுமா? மறுபடி சென்னை வரனும்னு சிச்சுவேஷன் வந்தப்ப இதை நினைச்சுதான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனேன். இனிமேல் யாருக்கும் பயப்பட வேண்டாம் வீட்லயே இருந்துக்கலாம்னு நினைச்சு சந்தோஷமா கூட இருந்தது.

ஆனா அதுவும் கொஞ்ச நாள்தான். ரொம்ப இஷ்டப்பட்டு செஞ்ச வேலையை விட்டுட்டு இப்படி சும்மா இருக்கோமேன்னு என் மேலயே எனக்கு கோபம், வெறுப்பு. அதான் உங்ககிட்ட கூட சரியா பேச முடியல. ஆனா நான் சொல்லாமலே என் பிரச்சனையை இவ்ளோ சீக்கிரமா சரி பண்ணி குடுத்திட்டீங்க அபி.

ரொம்ப தேங்க்ஸ். மறுபடி என் வேலையை எனக்கு வாங்கி கொடுத்ததுக்கு.” என்றவள், “ஆமா அபி. நீங்க ஏன் என்ன இவ்ளோ லவ் பண்றீங்க. எனக்கு கொஞ்சம் கில்ட்டியா கூட இருக்கு” என அவனது தோளில் சாய்ந்து கொண்டே கூறினாள்.

அதற்கு சித்து, “ஏன் வதனி. வேலை கிடைச்ச சந்தோஷத்துல ஏதாவது பேசிட்டு இருக்காத. உனக்காக இதுவரை நான் டைம் கூட ஸ்பென்ட் பண்ணது இல்ல. என் பிரச்சனையை தான் பார்த்துட்டு இருக்கேன். உன்கிட்ட லவ்வை சொல்லீட்டனே தவிர இதுவரைக்கும் அதை உன்கிட்ட காட்டியிருக்கனான்னு கூட தெரியல.

நீ இன்னும் பதில் கூட சொல்லல. ஆனா நான் உன்னையவா பார்த்துட்டு இருக்கேன். இப்ப கூட நீ ஏற்கனவே உனக்கு கிடைச்ச போஸ்டிங்க நான் கண்டுபிடிச்சு சொல்லியிருக்கேன் அவ்ளோதான். சரியா” என கூறவும், “யார் சொன்னா அப்படீன்னு. இருபத்தி நாலு மணி நேரமும் கூடவே இருந்து, பேசி பழகினாதான் காதல் இருக்குமா என்ன?

நான் சொல்லாமலே என் பிரச்சனையை சரி பண்றது என் மேல இருக்கிற காதலாலதான்னு எனக்கு தெரியும். நான் உங்ககிட்ட இன்னும் காதலை சொல்லல. ஆனா உங்களை பிடிக்காதுன்னு சொல்லி இருக்கனா?” என மகிழ் கேட்க, “அது எப்படி சொல்லுவ. எனக்கே தெரியுமே மேடம்க்கு என் மேல எவ்ளோ லவ்வுன்னு” எனக் கூறி கண்ணடித்தான்.

அவள் அவனை முறைக்கவும், “என்ன பார்க்கற, எனக்குதான் பார்த்ததுமே காதல்னு நினைச்சேன். ஆனா உனக்குதான்னு இப்பதான் புரிஞ்சது. எனக்கு கூட லேட்டாதான் தெரிஞ்சது. ஆனா நீ மனசுக்குள்ளயே வைச்சிட்டு இருந்திருக்க.

உனக்கு ஒரு பிரச்சனைன்னு வந்தப்ப என்னைத்தான் தேடியிருக்கனு நீ சென்னைக்கு டிரான்ஸ்பர் கேட்டதிலேயே தெரிஞ்சிருச்சு. அதோட எனக்குதான் முதல்ல காலும் பண்ணியிருக்க. ஆனா நான்தான் நீ தேடினப்பல்லாம் உன் கூட இருக்க முடியல. சொல்லப்போனா நான்தான் கில்ட்டியா பீல் பண்ணனும்” என்றான் சித்து.

“அதெல்லாம் ஒன்னுமில்ல. விடுங்க. இன்னைக்கு நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன். உங்களுக்கு ஏதாவது செய்யனும் போல இருக்கு. என்ன வேணும்னு சொல்லுங்க” என்றாள் மகிழ்.

“அதெல்லாம் எதுவும் வேணாம் விடு” என்க, “இல்ல அட்லீஸ்ட் ஏதாவது ஸ்வீட் செஞ்சு தரேன். ப்ளீஸ்” என்றவள் எழுந்து கிச்சனுக்குள் சென்றாள். உள்ளே சென்றதும், “என்னங்க. ஒரு பாக்கெட் பால் மட்டும் வாங்கிட்டு வாங்க” என குரல் கொடுக்க, சென்று வாங்கி வந்து கொடுக்கும் போது அவனுக்கு ஒரு அழைப்பு வர பேசிக் கொண்டே சென்று விட்டான்.

சற்று நேரம் கழித்து அவன் வந்தபோது ஒரு பவுலில் போட்டு தான் செய்ததை கொண்டு வந்து கொடுக்க, வாயிலிட்டு பார்த்தவன், “நல்லாதான் இருக்கு. ஆமா வெறும் பால் வைச்சு எப்படி பண்ண அல்வா” என சித்து கேட்க,

“இது அல்வா இல்லங்க. பேர்லாம் தெரியாது. பட் செய்யறது சிம்பிள்தான். ஒரு பங்கு ரவைக்கு மூனு பங்கு பால் ஊத்தி, சர்க்கரை சேர்த்து கேசரி மாதிரி பண்ணனும்” என அவள் விளக்கம் கொடுக்க அவனுக்கோ புரையேறியது.

“என்னாச்சுங்க. இருங்க தண்ணீ எடுத்துட்டு வரேன்” என கொடுக்க, அதை குடித்தவன், “ஏண்டி இந்த ரவையை விட்டா வேற எதுவுமே தெரியாதா. உனக்கும், அவனுக்கும். டிபன்ல இருந்து ஸ்வீட் வரைக்கும் எப்ப பாரு ரவைதானா?” என ஒரு வேகத்தில் கேட்டுவிட்டான் சித்து.

“அச்சோ, என்னாச்சு அபி. நல்லா இல்லையா? ரவை ஒத்துக்காதா? அன்னைக்கு உப்புமா நல்லா இருக்குனு தானே சாப்பிட்டீங்க. சாரி” என அவள் பதறினாள்.

“இல்லல்ல இதுவும் நல்லாதான் இருக்கு. நான் சாப்பிடறேன். இந்தா நீயும் சாப்பிடு” என்க, “ஏன் டென்ஷன் ஆனீங்க. சொல்லுங்க?” என அவள் விடாமல் கேட்கவும், இனிப்பை அவள் வாயில் வைத்து பேச விடாமல் செய்தவன், “அது வேற டென்ஷன். வந்து ரொம்ப நேரம் ஆச்சு. வீட்டுக்கு போகலாமா?” எனக் கேட்கவும் அவளும் யோசனையோடு தலையாட்ட இருவரும் கிளம்பினர்.

வீட்டிற்கு சென்றதும் வேகமாக சென்று, கண்களில் நீரோடு மீனாட்சியை கட்டிக் கொள்ள, அவரோ பதறி போய், சித்துவை பார்த்தார். “ஹேய் வதனி. என்னனு சொல்லு. அத்தை பாரு என்னை முறைக்கிறாங்க.” என சித்து புகாராக கூற, அவனை பார்த்து சிரித்தவள், நடந்ததை அன்னையிடம் கூறினாள்.

அதைக் கேட்டு மீனாட்சிக்கு அழுகை வந்தது. தான் பெற்ற மகளை இப்படி தவிக்க விட்டு விட்டோமே என. “அம்மா, விடும்மா. இப்பதான் எல்லாம் சரி ஆகிடுச்சுல்ல. அப்பறம் என்ன?” என அவரை சமாதானம் செய்தாள் மகிழ்.

பிறகு சித்துவை இருக்க சொல்ல, அவனோ வேலை இருப்பதாகவும், ஞாயிற்றுக்கிழமை வருவதாகவும் கூறி சென்று விட்டான். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த இசைக்கும், குணசேகரனுக்கும் விவரம் தெரிய அவர்களும் மகிழ்ந்தனர்.

அன்றிரவு அறைக்கு வந்த இசை, “அக்கா நான் இன்னைக்கு வெளில படுத்துக்கலாம்னு இருக்கேன்” என்க, “ஏண்டி. என்னாச்சு” என மகிழ் கேட்டாள். “இல்ல இன்னைக்கு அக்கா ஒரே ஹேப்பியா இருக்கீங்க. மாமா வேற செம சர்ப்ரைஸ் குடுத்திருக்காரு.

நைட்டு ஃபோன்ல ஒரே ரொமான்ஸ் அள்ளும். சின்ன பொண்ணு நான் அதெல்லாம் கேட்டா, கெட்டு போய்ட மாட்டேன்” எனவும், அவளை ரெண்டு அடி போட்டவள், “பேசாம படுடி” எனும்போதே சித்து அழைக்கவும், அழைப்பை ஏற்று, “ரீச் ஆகிட்டிங்களா?” என மகிழ் கேட்டாள்.

“ம்ம். வந்துட்டேன் டா. ஓகே காலைல பேசவா. இன்னைக்காவது நல்லா தூங்கு” என்றவன் குட்நைட் கூறி ஃபோனை வைத்து விட்டான். “என்னக்கா. மாம்ஸ் அதுக்குள்ள வைச்சுட்டாரா?” என இசை கேட்க, “ஆமாடி பாவம் அவ்ளோ தூரம் டிராவல் பண்ணி வந்தாருல்ல. அதான் டையர்டா இருக்கும்” என்றவள் படுத்து தூங்க, சித்துவோ தூங்காமல் தனது அலுவலகத்தில் அமர்ந்து வேலையை பார்த்துக் கொண்டிருந்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்