Loading

நிரஞ்சனி அவ்வாறு கூறியதும் அனைவரும் திகைத்து பார்க்க, அவளோ, “என்ன அப்படி பார்க்கறீங்க. சித்து என்னோட ஃப்ரண்ட் மட்டுமில்ல, அதுக்கும் மேல என்னோட பெஸ்டி அவன். நான் பண்ண வேலைக்கெல்லாம் வேற ஒருத்தனா இருந்திருந்தா விட்டது தொல்லைன்னு சந்தோஷமா இருந்திருப்பான்.

ஆனா சித்து என்னை தேடி கண்டுபிடிச்சு காப்பாத்தியிருக்கான். எப்பவும் அவன் என்ன ஒரு நல்ல ஃப்ரண்டாதான் பார்த்துருக்கான். நான்தான் எல்லாமாவும் நினைச்சுட்டேன். இங்க பாரு மகிழ். இனிமேலும் அப்படித்தான் நினைப்பேன். ஆனா அது காதலா இருக்காது அவ்வளவுதான்.

மத்தபடி சித்து என் லைஃப்ல கண்டிப்பா இருப்பான். அவன் லைஃப்லயும் நான் இருப்பேன். இதுக்கெல்லாம் ஓகேன்னா கல்யாணம் பண்ணிக்கோ. புரியுதா?” என நிரஞ்சனி கூறவும், இப்போது மகிழ் அவளைக் கட்டிக் கொண்டாள். இதைக்கண்டு மற்ற அனைவரும் திகைப்பாக பார்த்தனர்.

அனைவரையும் பார்த்தவள், “சாரி.ப்ரண்ட்ஸ்” எனக் கூறவும், அனைவரும் சற்றே இலகுவாகவும் சித்து, “நீ எப்படி அவங்ககிட்ட மாட்டின?” என சித்து கேட்க, “எல்லாம் இந்த வாயால வந்த வினைதான்” என்றவள் நடந்ததை விவரித்தாள்.

சித்து நினைத்தபடியே பெற்றவர்களை சற்றே பயமுறுத்தினால் திருமணத்திற்கு ஒப்புக் கொள்வர் என்றே நிரஞ்சனியும் நினைத்தாள். அதனாலேயே உள்ளேயே இருப்பதாக காட்டிக் கொண்டாலும் இரவு நேரங்களில் வந்து பழம் போன்ற உணவுகளை எடுத்து வந்துவிடுவாள்.

அதனால் மூன்று நாட்களை ஓட்டிவிட, ஐயம்மாளிடம் பேசிப் பார்க்கலாம் என அவருக்கு அழைத்தபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. அதனால் நேராக சென்று பார்க்கலாம் என பின்பக்க பால்கனியில் ஏணியை வைத்து இறங்கி சென்று விட்டாள்.

அங்கோ ஐயம்மாளும் இவளைக் கண்டதும், சித்து விசயத்தில் தான் தவறு செய்து உன் விசயத்திற்கும் உதவி செய்ததாக வருந்தியவர், சித்துவை மறந்து விடுமாறு பலவிதமான அறிவுரைகளை கூற நிரஞ்சனி கடுப்பாகி விட்டாள்.

அவரிடம் எதுவும் கூறாமல் எழுந்து வந்தபோதுதான் கேட்டுக்கு வெளியே ஒருவன் நின்றிருந்தான். இவளிடம், “ஹலோ மேடம், இது சித்தார்த் சார் வீடுதானே. அவரை பார்க்கனும்.” எனக் கேட்க, “ஆமா, என்ன விசயமா பார்க்கனும்” என இவளும் கேட்க, நீங்க அவருக்கு என்ன வேணும்?” என்றான் அவன்.

இவளோ, “நான் யாருன்னு சொன்னாதான் சொல்வியா? நான் அவரோட வைஃப். போதுமா” எனும்போதே  பின்னிருந்து ஒரு கரம் அவளது மூக்கில் மயக்கமருந்து வைத்தது. “அப்படியே நான் மயங்கிட்டேன். முழிச்சு பார்த்தப்ப சுத்தி யாருமே இல்ல. நான் பயந்துட்டேன். கட்டியெல்லாம் போடல.

சரி எப்படியாவது தப்பிக்கலாம்னு அங்க இருந்து வெளில வரலாம்னு நினைச்சா மறுபடி அதே மாதிரி மயக்க மருந்து குடுத்துட்டாங்க. அடுத்த முறை மயக்கம் தெளிஞ்சும் நான் கண்ணே முழிக்கல. அப்ப ரெண்டு பேர் வந்து இந்நேரம் முழிச்சிருக்கனுமே.

பாப்பா ரொம்ப வீக் போலடான்னு பேசிக்கிட்டாங்க. ஆனா எதுக்கும் குடுத்துடுவோம்னு மறுபடி அப்படியே பண்ணிட்டாங்க. ஆனா கடைசி வரை எதுக்கு என்ன கடத்துனாங்கன்னு தான் தெரியல சித்து.” என பாவமாக நிரஞ்சனி கூற,

“அதுக்கு காரணம் நான்தான்க்கா. எனக்காக தான் அபி அந்த சந்தேஷை போலீஸ்ல பிடிச்சு குடுத்தாரு. அதுக்கு அவங்க அபியை பழிவாங்க இப்படி பண்ணியிருக்காங்க” என்றாள் மகிழ்.

“அதெல்லாம் இல்லமா. அவங்க சித்துவை தேடித்தான் அந்த வீட்டுக்கு போயிருக்கனும். அப்ப பார்த்து இந்த மேடம் அவனோட வைஃப்னு சொல்லவும்தான் லேடிஸ் சென்டிமென்ட் சீக்கிரம் வொர்க் அவுட் ஆகும்னு கடத்தி இருக்காங்க. இதுக்கெல்லாம் காரணம் நிரஞ்சனியே தான்” என்றான் கவின்.

“இருக்கலாம். சரி விடு. எப்படியோ தப்பிச்சாச்சுல்ல” என சித்து கூறவும், “ஒருவகையில் கடத்துனதும் நல்லதுதான் விடுங்க மாம்ஸ்” என்றாள் இசை பட்டென. ஏனோ அவளுக்கு நிரஞ்சனி தனது தமக்கையின் வாழ்வில் இடையூறாக இருப்பது பிடிக்கவில்லை.

இப்போது மனது மாறியதாக அவள் கூறவும்தான் இப்படி கூறினாள். “சும்மா இருடா” என மகிழ் கூறவும், இசை வெளியில் செல்ல மற்றவர்கள் அவளை தொடர்ந்தனர். நிரஞ்சனி, “பரவால்ல விடு மகிழ். அவ சொல்றதும் சரிதான். சித்து வராமலே இருந்திருந்தா கூட எனக்கு எதுவும் தோணியிருக்காது.

ஆனா இவ்வளவு பிரச்சனையிலும் எனக்காக அவன் வந்தப்பதான் நான் பண்ற தப்பே எனக்கு புரிஞ்சது. என்கூட நிறைய பேர் இருப்பாங்க. ஆனா உண்மையா கிடைச்ச ஒரே ப்ரண்ட் சித்துதான். சரியா விவரம் தெரியறத்துக்கு முன்னாடியே நாங்க பழக ஆரம்பிச்சுட்டோம்.

அப்பல்லாம் சித்துவுக்கு ஃப்ரண்ட்ஸே இல்ல. நான் மட்டும்தான் ஃப்ரண்ட் தெரியுமா. என்னோட மத்த ஃப்ரண்ட்ஸ்க்கெல்லாம் வேற வேற ஃப்ரண்ட் இருக்கும்போது, எனக்கு மட்டும் ஃப்ரண்டா அவன் இருந்தது எனக்கு கர்வமா கூட இருக்கும்.

உனக்கு தெரியுமா, நான் ஸ்கூல் மாத்தின ஒரே காரணத்துக்காக அவனும் மாத்திகிட்டு அவனுக்கு பிடிக்காத சித்தி கூட இருந்தான். ஆனா அப்ப எனக்கு நாங்க யாருமே ஆன்ட்டியை பத்தி இப்படி யோசிச்சது இல்ல. அதனால இப்பாவாது பேமிலியோட இருக்கானேன்னு சந்தோஷம்தான் பட்டேன்.

நாங்க எல்லா முடிவும் சேர்ந்துதான் எடுப்போம். வெளிநாடு போய்தான் படிப்போம்னு கூட ரெண்டு பேரும் சேர்ந்துதான் டிசைட் பண்ணோம். ஆனா திடீர்னு சித்து இங்க காலேஜ் சேருவான்னு நான் யோசிக்கவே இல்ல. சரி அவன் இஷ்டப்படி பண்ணட்டும்னு விட்டுட்டேன்.

அங்க ரொம்ப மிஸ் பண்ணேன் அவனை தெரியுமா? திரும்ப பிஜிக்கு அவன் அங்க வரேன்னு சொன்னப்ப என் ஹேப்பினஸ்க்கு அளவே இல்ல. மறுபடி பார்த்தப்ப, அந்த பிரிவும் அந்த கல்ச்சரும் சித்துவை லவ்வரா பார்க்க வைச்சது.

ஆனா சித்து மாறவே இல்ல. ஆரம்பத்துல கொஞ்ச நாள் விலகி போற மாதிரி எனக்கு தோணினாலும் அவன் எப்பவும் போலதான் என்கிட்ட பழகியிருக்கான். எனக்குதான் அது புரியாம நான் அவனுக்கு புரப்போஸ் பண்ணீட்டேன். ஆனா அதை அவன் விளையாட்டா எடுத்துக்கிட்டதுதான் என்னால தாங்கவே முடியல.

அவன் மேல இருந்த பாசம் அப்படியே மாறி கோவமா ஆகிடுச்சு. எப்படியாவது அவனை கல்யாணம் பண்ணீக்கனும்னு நினைச்சேன். அதுக்காக சித்து ஊரை விட்டே போவான்னு நான் எதிர்பார்க்கல. நான் செய்யறது தப்போன்னு எனக்கு சில நேரம் தோணும்.

ஆனா அவனை பார்த்ததும் அது மாறிடும். நான் அவனை எவ்வளவோ கஷ்டப்படுத்தி இருக்கேன். ஆனா எனக்கு ஒரு பிரச்சனைன்னு தெரிஞ்சதும் எனக்காக வந்தான் பாரு. அவன் எப்பவுமே எங்க ஃப்ரண்ட்ஷிப்க்கு உண்மையா இருந்திருக்கான். நான் அப்படி இல்லல்ல.” என மனதில் இருப்பதை எல்லாம் கொட்ட, சித்துவும் அதையெல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருந்தான்.

அப்போதுதான் அவன் செய்த தவறு அவனுக்கு புரிந்தது. “அப்படியெல்லாம் இல்ல நிரு. நீயும் அப்படிதான். என்ன விட உனக்கு குளோஸ் ப்ரண்ட்ஸ் நிறைய பேரு இருக்காங்க. ஆனா நீ எனக்குதான் பர்ஸ்ட் இம்பாட்டன்ஸ் குடுப்ப. சின்ன வயசுல இருந்து ஒன்னாவே இருந்ததால உன்மேல எனக்கு வேற மாதிரி எண்ணமே வந்ததில்ல.

எங்கம்மா போன பிறகு, என்னை அக்கறையோட பார்த்துக்கிட்டவ நீதான். அதான் நீ காதலை சொல்லும்போதும் விளையாடறன்னு நினைச்சுட்டேன். ஒருவேளை அன்னைக்கே உன்னை பொறுமையா உட்கார வைச்சு கேட்டிருந்தா இவ்வளவு பிரச்சனையே இருந்திருக்காது. சாரி” என்றான் சித்து உண்மையான வருத்தத்தோடு.

‘தாய்க்கு நிகராக தன்னை வைத்து பார்த்தவனை எப்படியெல்லாம் படுத்தி விட்டோம்’ என நிருவுக்கே அவள் மீது கோபமாக வந்தது. அவள் ஏதோ கூறப்போக, சரியாக அவளின் பெற்றோர் வந்தனர். “நிரு, என்னடி இப்படி பண்ணீட்ட?

உனக்கு ஏதாவது ஒன்னுன்னா நாங்க என்ன பண்றது” என அவளது தாய் கண்ணீர் வடிக்க, “ஒன்னுமில்லமா, சித்து சரியான நேரத்துக்கு வந்துட்டான். சாரிம்மா, சாரிப்பா. இனிமே நீங்க சொல்றதை கேட்டு நடக்கறேன்” என்றாள் நிரஞ்சனி.

அவளது தலையை ஆதுரத்தோடு அவர் தடவிக் கொடுக்க, அவர்களுக்கு தனிமை அளித்து இருவரும் வெளியே வந்தனர். “நீ நல்லா இருக்கனும்னு தான் ஆசைப்பட்டதெல்லாம் பண்ணோம். கோபத்துல அடிச்சிருக்க கூடாதுதான். அதுக்காக நீ வீட்டை விட்டு வெளிய போலாமாடா? நான் சித்துகிட்ட பேசறேன்” என தந்தை கூறியதற்கு, “கண்டிப்பா பேசனும்ப்பா” என்றாள்.

அவளின் அன்னையும், “நானும் வரும்போது அதுதான் சொன்னேன். உன் சந்தோஷத்துக்கு நாங்க குறுக்க நிற்க மாட்டோம்டி” என்க, “ஆமாப்பா அவன்கிட்ட சீக்கிரமா மகிழை கல்யாணம் பண்ணீக்க சொல்லி சொல்லனும்.” எனக் கூறி சிரிக்க, அவரோ புரியாமல் பார்த்தார்.

“நீங்க சொன்ன மாதிரி நான் புரிஞ்சுக்கிட்டேன்ப்பா. உங்க எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டேன். இப்ப என் மனசுல சித்து ஒரு நல்ல ஃப்ரண்டாதான் இருக்கான்’ என்றதில் இருவரும் மகிழ்ச்சியடைந்தனர். அதன்பிறகு நடந்ததை கேட்டு அவர்களும் சித்துவுக்கு நன்றி கூறிவிட்டு நிரஞ்சனியை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

மற்றவர்கள் மீண்டும் மகிழின் வீட்டுக்கு வர, “என்ன சார். உங்க ஃப்ரண்ட் கிடைச்சாச்சு. இன்னைக்காவது ஊருக்கு போறோமா?” எனக் கேட்டாள் அகல். “கண்டிப்பா போயே ஆகனும். நான் டிக்கெட் புக் பண்ணீட்டேன்.” என்றான் சித்து.

இரவு உணவை அங்கேயே முடித்துக் கொண்டு அனைவரும் கிளம்பினர். அவர்கள் சென்றதும் அறைக்கு வந்த மகிழை பிடித்துக் கொண்ட இசை, “நீ ஏன்க்கா இப்படி இருக்க, எனக்கே அவங்களை பார்த்தா பிடிக்கல. நீ என்னவோ ரொம்ப குளோஸா பேசற?” என்றாள். “இதுல என்னம்மா இருக்கு. அபியோட ப்ரண்டுதானே விடு” என்றாள் மகிழ் அலட்சியமாக.

“ப்ரண்டு மட்டுமா?” என இசை ஆரம்பிக்க, “சரி விடும்மா, அவங்களே தப்பை உணர்ந்துட்டாங்க. இனிமே அதப்பத்தி பேச வேண்டாம். இது எல்லாத்துக்கும் மேல உங்க மாம்ஸ் மேல எனக்கு நிறையவே நம்பிக்கை இருக்கு. நீயும் நம்புவன்னு நினைக்கிறேன்” என்றதும் வாயை மூடிக்கொண்ட இசை, “விட்டுருக்கா. தெரியாம கேட்டுட்டேன்” என்றபடியே படுத்தாள்.

அந்த வாரம் முழுதும் இயல்பாக செல்ல, மீனாட்சி மட்டும் ஒருமுறை சென்று ஐயம்மாளை பார்த்து வந்தார். அந்த வாரம் பெங்களூரில் இருந்து யாரும் வராமலிருக்க, ஆகாஷ் வழக்கம் போல இசையின் வீட்டிற்கு வந்தான்.

தனியாக இல்லாமல் சந்துருவையும் அழைத்துக் கொண்டு. சந்துருவை திடீரென எதிர்பாராமல் இசை திகைக்க, ஆகாஷ், “இல்ல. எங்கையாவது வெளில போலாம்னு கேட்டாரு. நான்தான் இங்க கூட்டிட்டு வந்தேன்” என சமாளித்தான்.

உண்மையில் சந்துருதான் தன்னை அங்கு கூட்டிச் செல்ல வேண்டும் என அடம்பிடித்து வந்திருந்தான். மகிழும், அவள் தந்தையும் தோட்டத்தில் இருக்க, மீனாட்சியும், ஆகாஷூம் சமையல் வேலையில் இருக்க, படம் பார்த்துக் கொண்டிருந்த இசையுடன் ஹாலில் அமர்ந்தான் சந்துரு.

அவள் படத்தை பார்க்க இவனோ அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஒருமுறை அவள் பார்த்துவிட, என்னவென்று கேட்டதற்கு ஒன்றுமில்லை என்றான்.

அதன்பிறகு மதிய உணவை உண்பதற்காக எல்லோரும் தயாராகி அமர, அந்த நேரம் பார்த்து வேகமாக உள்ளே வந்தார் ஆகாஷின் அன்னை. அவரைக் கண்டதும் ஆகாஷ் அதிர்ந்து எழ, அவன் என்னவென்று கேட்பதற்குள் காச் மூச்சென்று கத்த ஆரம்பித்தார் அவர்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்