Loading

                சித்துவும், கவினும் குடோனுக்குள் வந்து பார்த்தபோது நிரஞ்சனி ஒரு இடத்தில் மயக்கமாகி கிடக்க, இருவருமே அதை எதிர்பாரவில்லை. “என்ன மச்சி இது யார் வேலையா இருக்கும்” என கவின் கேட்க, சித்து ஓடிச் சென்று அவளை எழுப்ப, அவளோ அசையவே இல்லை.

“பேசாம ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போய்டலாமா?” என கவின் கேட்க, சித்து “ம்ம் அப்படிதான் பண்ணனும்” என அவளை கைத்தாங்கலாக நிற்க வைக்க, அப்போது திடீரென அணைத்து விளக்குகளும் எரிய பத்துக்கு மேற்பட்டவர்கள் அவர்களை சுற்றி நின்றனர்.

ஒருவர் மட்டும் முன்னே வந்து, “பரவால்லயே, இவ்வளவு சீக்கிரமா சரியா இடத்தை கண்டுபிடிப்பன்னு நானே நினைச்சு பார்க்கல. இன்ஜினியர் மூளைல்ல” என்க, “ஹலோ, யாரு நீங்க எல்லாரும். நீங்கதான் இவளை கடத்துனீங்களா, இவ மேல அப்படி என்ன கோபம் உங்களுக்கு” என வேகமாக கேட்டான் சித்து.

“நானேதான் கடத்துனேன். ஆனா கோபம் இவ மேல இல்ல. உன்னை வரவைக்கதான் இவளை கடத்த வேண்டியதா ஆகிடுச்சு.” என சாவகாசமாக பதில் கூறினார் அவர். “என்ன சொல்றீங்க. இதுக்கு முன்னாடி உங்களை பார்த்ததே இல்ல. அதோட என்னை பார்க்க நேராவே வந்துருக்கலாமே. அதுக்கு ஏன் இப்படி பண்ணனும்” என புரியாமல் கேட்டான் சித்து.

“எல்லாம் காரணமாத்தான் தம்பி. என் பையனை எங்க வைச்சிருக்க. அவனை என்கிட்ட ஒப்படைச்சுட்டு நீ இவளை கூட்டிட்டு போயிட்டே இரு” என அவர் கூற, “உங்களையே யாருன்னு தெரியாதுன்னு சொல்றேன். இதுல உங்க பையனை நான் ஒளிச்சு வைச்சிருக்கேனா” என்றான் சித்து.

“ஆமாடா, சந்தேஷை எங்க வைச்சிருக்க?” என்றதில் சித்துவுமே சற்று அதிர்ச்சியானான். ஆனால் அதைக்காட்டிக் கொள்ளாமல், “ஓ அந்த பொறுக்கியோட அப்பனா நீ, அவன் இன்னேரம் எந்த பொண்ணோட ஊர் சுத்தறானோ, யாருக்கு தெரியும்” என்றான் அலட்சியமாக.

“டேய், கடைசியா நீதான் அவனை பார்த்திருக்க. அவனை என்ன பண்ணனு சொல்லு.” என அவரும் கோபமாக கேட்க, “கடைசியா பார்த்தா, கடத்தி வைச்சுக்க நான் உன்ன மாதிரி அயோக்கியனா” என்றான் கோபமாக.

“நீ கடத்தி வைச்சிருக்கன்னு சொல்லல. ஆனா அவன் காணாம போனதுக்கு நீதான் காரணம்னு எனக்கு தெரியும்” என கிரி கூற, “அவன் காணாம போறது இதான் முதல்தடவையா என்ன?” என சித்து கேட்க,

“அவன் சொல்லாம போனா நான் கண்டுக்காம விட்டுடுவனு நினைச்சியா, அவன் மெஸேஜ் பண்ண ஒரு மணி நேரத்துல அவனை ஃபாலோ பண்ணி எனக்கு அப்டேட் பண்ண ஆள் இருக்கு தெரியுமா?” என்றார் எகத்தாளமாக.

“ஓ. அதானே பார்த்தேன். அப்ப உன் பையன் பண்ண அத்தன தெள்ளவாரித்தனமும் உனக்கும் தெரியும். தெரிஞ்சும் நீ அவனுக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ணீயிருக்க. நீயெல்லாம் ஒரு அப்பன்” என சித்து எகிற, “நீ சொன்னாலும் சொல்லாட்டாலும் நான் அவனுக்கு நல்ல அப்பன்தான்.” என கிரி கூற, “எப்பவும் போல இப்பவும் முடிஞ்சா கண்டுபிடிச்சுக்க. வழியை விடு. நாங்க கிளம்பனும்” என்றான் சித்து.

“டேய். நான் ரொம்ப நேரம் பொறுமையா பேசிட்டே இருக்க மாட்டேன். என் பையன் இங்க வராம நீங்க யாரும் இங்கிருந்து போக முடியாது” என சந்தேஷின் தந்தை கிரிசங்கர் மிரட்ட, “யார்டா நீங்கள்ளாம், முதல்ல இங்கிருந்து வீட்டுக்கு போறீங்களான்னு பாரு” என ஒரு குரல் கேட்க, அசோக்கும், உதய்யும் வந்து கொண்டிருந்தனர்.

அவர்களை கண்டதும், “ஐயா, போலீஸ்ங்க” என்றான் ஒருவன். “நீங்க இண்டர்ஸ்டியலிஸ்ட் கிரிதரன் தானே. இங்க என்ன பண்றீங்க சார். ஏதாவது பிரச்சனையா?” என தெரியாதது போல அசோக் கேட்க, “வாங்க சார். சரியான நேரத்துல வந்திருக்கீங்க” என்றார் அவர் அசோக்கிடம்.

“சொல்லுங்க சார். என்ன ஆச்சு” என அசோக் கேட்க, “இது எனக்கு சொந்தமான காம்ப்ளக்ஸ்தான் சார். இவனுங்க ரெண்டு பேரும் இன்னைக்கு இந்த பொண்ணை இங்க கூட்டிட்டு வந்திருக்காங்க. விசயம் கேள்விப்பட்டதும் ஏதோ தப்பா இருக்கேனு நானும் கிளம்பி வந்தேன்.

இங்க பார்த்தா இந்த பொண்ணு மயக்கத்துல இருக்கு. அதான் என்னனு கேட்டுகிட்டு இருந்தேன். சரியா நீங்களும் வந்துட்டீங்க” என அவர் கூறவும், கவின்,  “அடப்பாவி சரளமா கதை விடறதை பாருடா. ஆனா அவர் நம்ப ஆளுன்னு தெரியாம சொல்லிட்டு இருக்காரு பாரு” என்றான் சித்துவிடம்.

“ஓ அப்படியா, அப்ப விசயம் கொஞ்சம் சீரியஸ்தான். நீங்க ரெண்டு பேரும் என்னோட ஸ்டேஷன் வாங்க. உதய் ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணி இந்த பொண்ணை ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணு. இந்த பொண்ணு கண் முழிச்சாதான் என்ன நடந்ததுனு விசாரிக்கனும்” என்றான் அசோக். “இதோ உடனே பண்றேன்” என உதய் ஃபோனை எடுக்க அவனை தடுத்தார் கிரி.

“இல்ல சார். இது என் இடத்துல வைச்சு நடந்திருக்கு, நானே பாத்துக்கறேன். உங்க உதவிக்கு ரொம்ப நன்றி.” என கிரிசங்கர் கூறவும், “அப்படி சொல்றீங்களா. சரி” என அசோக் கிளம்ப எத்தனிக்க, “இல்ல சார். இவரு பொய் சொல்லாரு. எதுனாலும் நீங்க ஸ்டேஷனே கூட்டிட்டு போய் விசாரிங்க சார்” என கவின் அவசரமாக கூறவும், நின்றவன் சுற்றி பார்த்தான்.

அவனது பார்வையை கண்ட கிரிதரனுக்கு பயம் வர, “நீங்க கிளம்புங்க சார்” என வேகமாக கூற, “அப்படியெல்லாம் நீங்க சொன்னதும் கிளம்ப முடியாது மிஸ்டர். சர்ச்” என வேகமாக சத்தமிட, திடீரென ஐந்து காவலர்கள் உள்ளே வந்து அந்த இடத்தை சோதனையிட ஆரம்பித்தனர்.

கிரி, “எதுக்காக இப்ப இங்க சர்ச் பண்றீங்க. வாரண்ட் இருக்கா?” எனக் கேட்டபோதுதான் சம்பந்தமில்லாமல் ‘இப்போது இவன் எதற்கு இங்கு வந்தான்’ என யோசித்தார்.

அவர்கள் சோதனையிட ஆரம்பித்ததும், சரியாக ஆம்புலன்ஸ் வரும் சத்தம் கேட்க, “நான் இதை பார்த்துக்கறேன். ஆம்புலன்ஸ் வந்திருச்சு. நீங்க கிளம்புங்க சித்தார்த். நான் ஹாஸ்பிட்டல் வந்து பார்க்கறேன்” என அவர்களை கிளப்ப, நிரஞ்சனியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சித்துவும், கவினும் கிளம்ப செய்வதறியாது நின்றிருந்தார் கிரி.

அவர்கள் சென்றபிறகு, அந்த இடத்தை சோதனையிட, காடுகளின் பொக்கிஷமான விலையுயர்ந்த மரங்களும், அரிய விலங்குகள் கலைப்பொருட்களும் இருக்க, கிரியை நேரடியாகவே முறைத்தான் அசோக்.

உடனே கிரி கண்ணைக்காட்ட, ஒருவன் ஓடிவந்து, “சார், இதெல்லாம் நான்தான் பண்ணேன். ஐயாவுக்கு இதைப்பத்தி எதுவுமே தெரியாது. காசுக்கு ஆசைப்பட்டு ஐயாவுக்கு துரோகம் பண்ணீட்டேன்” என்றான்.

“ஓ அப்படியா, சரி இது என்ன மரம் சொல்லு. யார்க்கு இதை விக்க போற. அவங்களோட டீடையில் குடு. நான் அங்க போய் விசாரிக்கறேன். உன்னை கூட விட்டறேன்” என உதய் கேட்க, “இது தேக்கு மரம். கதவு செய்ய எங்க தெரு ஆசாரிதான் கேட்டு இருந்தார்” எனவும் விட்டான் ஒரு அறை.

அதிலேயே அவன் சுருண்டு விழ, “அவன் தப்பு பண்ணுவான். அவனுக்கு பதிலா நீ சரண்டர் ஆகி ஜெயிலுக்கு போவ. அவன் இப்படியே வளர்ந்துகிட்டே போவான். உன் குடும்பம் நடுத்தெருவுல நிற்கும்” என்றான் அவனிடம் உதய்.

“முதல்லயே இதுக்கெல்லாம் நல்லா சொல்லி கொடுத்து ஆள் செட் பண்ணி வைக்க மாட்டியா? சந்தன மரத்தை தேக்கு மரம்னு சொல்றான்” என உதய் நக்கலாக கேட்க, “இரு உதய். திடீர்னு இப்படி நாம வருவோம்னு அவனுக்கு தெரியுமா? பாவம்” என்ற அசோக், “உன்னை பத்தின எல்லா ஆதாரமும் திரட்டிட்டோம். கையும், களவுமா பிடிக்கதான் வெயிட் பண்ணோம். ஒழுங்கா வாடா, அரெஸ்ட் ஹிம்” எனும்போதே, காவலர் ஒருவர் விலங்கு மாட்டினார்.

சரியாக குடோனை விட்டு வெளியில் வர மொத்த ஊடகமும் அங்கு இருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களோடு கிரியையும் புகைப்படம் எடுத்தவர்கள், “எப்படி சார். இந்த எலக்ரானிக்ஸ் காம்ளக்ஸ்ல இந்த வேலை நடக்குதுனு கண்டுபிடிச்சீங்க” என ஒருவர் கேட்க, “இதுக்கும், இங்க இருக்கிற கடைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல” என்ற வார்த்தையில் கடைக்காரர்கள் நிம்மதியடைந்தனர்.

தொடர்ந்த அசோக், “இந்த பில்டிங் ஓனர் இவன்தான். ரொம்ப நாளாவே இங்க ஏதோ இல்லீகல் ஆக்டிவிட்டி நடக்கறதா தகவல் வந்தது. ஆனா நம்பகமா இல்லனு விட்டுட்டோம். லாஸ்ட் சண்டே செக்போஸ்ட்ல ஒரு லாரில இது மாதிரி பொருட்கள் கடத்தறதை பார்த்தோம்.

யார்னு கண்டுபிடிக்க அதை அப்படியே விட்டுட்டோம். அந்த லோடு இங்கதான் இறங்குச்சு. யார் சம்பந்தப்பட்டிருக்கானு விசாரிச்சு, கையும், களவுமா பிடிச்சிட்டோம். ஆதாரத்தை கோர்ட்ல குடுப்போம். தேங்க்யூ” என்ற இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

வண்டியில் செல்லும்போது, “என் பவர் என்னனு தெரியாம என் மேல கை வைச்சுட்ட, கோர்ட்க்கு இல்ல ஸ்டேஷனுக்கு கூட கூட்டிட்டு போக முடியாது. தெரியுமா?” என தெனாவெட்டாக பேச, “இந்த விசயத்துல நீ சி.எம்மை கூப்பிட்டா கூட ஹெல்ப் பண்ண மாட்டாங்க. வனத்துறை சட்டம் அப்படி. பேசாம வா” என்றான் உதய்.

அவனை ரிமாண்டில் வைத்துவிட்டு இருவரும் மருத்துவமனைக்கு செல்ல, அதற்குள் நிரஞ்சனி கண்முழித்திருந்தாள். மயக்கமருந்தின் விளைவாகவே மயங்கியிருக்க, மூன்று நாட்கள் உணவில்லாததால் பலவீனமாக இருப்பதாக மருத்துவர் கூறிச் சென்றார். பிறகு முதலில் அவளுக்கு பழச்சாறு வாங்கி கொடுத்த சித்து அவள் குடித்ததும் கேள்வி கேட்டான்.

அதற்குள் இவர்களும் வந்துவிட, “நீ எப்படி அவனுங்ககிட்ட மாட்டின நிரு. அடிச்சிட்டாங்களா, ஏதாவது தப்பா பிகேவ் பண்ணாங்களா?” எனக் கேட்க, “அதெல்லாம் இல்ல சித்து. மயக்கத்திலே இருந்தேன். முழிக்க முழிக்க மருந்து கொடுத்துட்டே இருந்தாங்க. பயந்துட்டேன். உங்களை எல்லாம் பார்க்கமாலே சாகப்போறேனு நினைச்சேன்” என அவனை கட்டிக் கொண்டு அழ, அவனும் சமாதானமாக தலையை தடவிக் கொடுத்தான்.

அந்த நேரம் பார்த்து கதவை திறந்து கொண்டு மகிழ், இசை என நண்பர் பட்டாளமே வர, அங்கு நடப்பதை கண்டு திகைத்து போய் மகிழ் வெளியே வர, அவர்களை தவிர, மற்ற அனைவரும் வெளியில் வந்தனர். கவின், அசோக்கையும், உதய்யையும் அவர்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்த, “ஏங்க கவின். அந்த பொண்ணு யாரு?” எனக் கேட்டான் அசோக்.

“நேத்துவரை தெரியும். இப்ப என்னன்னு அண்ணா வெளியில வந்தாதான் தெரியும்” என அகல் முணுமுணுக்க, அதைக் கேட்ட மகிழ், “அவ சித்துவோட ப்ரண்டுங்க. அவளை ரொம்ப பிடிக்கும். அதான் திடீர்னு காணோம்னு பதறிட்டாரு. ரொம்ப தேங்க்ஸ். நான் அவரோட பியான்ஸி” என்றாள். “ஓ. பரவால்லமா, நாங்கதான் இவங்களுக்கு தேங்கஸ் சொல்லனும். சரியான நேரத்துல ஒரு குற்றவாளியை பிடிக்க உதவி பண்ணதுக்கு” என்றான் அசோக்.

இதற்குள் சித்து அவர்களது வரவை உணர்ந்து வெளியில் வர கதவை திறக்க, மகிழ் கூறியது அவர்கள் இருவருக்கும் கேட்டது. பிறகு அனைவருமாக உள்ளே சென்று நிரஞ்சனியை விசாரிக்க, அதற்குள் நன்றாகவே தெளிவாகியிருந்தாள்.

அசோக்கும், உதய்யும் விடைபெற்று விட, நிரஞ்சனி, மகிழை பார்த்து, “யாரைக் கேட்டு சித்துவை என் ஃப்ரண்டுனு சொன்ன?” எனக் கேட்க, ‘இவ திருந்த மாட்டா போலயே’ என நினைத்தான் கவின்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்