Loading

            எல்லாரும் நிரஞ்சனி பற்றியே யோசித்துக் கொண்டிருக்க, அகல்யா, “அச்சோ, டைம் ஆச்சு. பஸ்ஸை மிஸ் பண்ணிட்டோமே. இப்ப எப்படி போறது” எனவும்தான் மற்றவர்கள் நேரத்தை கவனித்தனர்.

“ஆமாடா, இந்நேரம் பஸ் பூந்தமல்லியே தாண்டி இருக்கும். இனிமே போனாலும் கிடைக்காது. ஃபோன் பண்ணதும்தான் பண்ணாரு. இன்னும் ஒரு பத்து நிமிஷம் கழிச்சு பண்ணியிருக்க கூடாது” என்றான் கவின்.

“சரி விடுடா, ஒன்னும் பிராப்ளம் இல்ல, சிந்து நீயும் அகலும் நாளைக்கு லீவ் சொல்லிடுங்க. ஈவ்னிங்தான் ராகினி கிளம்பறதா சொன்னாங்க. அவங்களோட ஜாயின் பண்ணீக்கலாம். அதுக்குள்ள இந்த பிராப்ளமை சால்வ் பண்ணனும். நிஜமாலும் அவளுக்கு எதுவும் பிரச்சனையா இல்ல எங்கையாவது ஒளிஞ்சுகிட்டு விளையாடறாளான்னு தான் புரியல” என்றான் சித்து.

“இதுல எனக்கெல்லாம் சந்தேகமே இல்ல. நீதான் இவ்வளவு யோசிக்கற. எதுக்கும் அவளுக்கு கால் பண்ணி பாரு. நீ பண்ணா எடுக்கவும் சான்ஸ் இருக்கு” என கவின் கூறவும், அவன் நிரஞ்சனி எண்ணுக்கு அழைப்பு விடுக்க அதுவோ அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

சித்து, “ஸ்விட்ச் ஆப்னு வருதுடா.” எனவும், “எனக்கென்னவோ ஏதோ பிரச்சனைன்னு தோணுது” என்றாள் மகிழ். “எதுக்கும் அஜய்க்கு கால் பண்ணி ஹெல்ப் கேட்கலாமாடா?” என கவின் யோசனை கூற, “அன்னைக்கு சந்தேஷை பிடிச்சுக் கொடுத்தீங்களே அந்த போலீஸா” எனக் கேட்டாள் அகல்.

அவன் பெயரை கேட்டதும் மகிழின் முகம் ஒரு மாதிரி ஆக, “அந்த பொறுக்கிய ஏன்மா இப்ப ஞாபகம் பண்ற” என்ற சித்து ஆமாமென்று விட்டு, “இல்ல கவின், எதுக்கும் காலைல நிரஞ்சனி வீட்டுக்கு போய் பார்த்துட்டு கன்பார்ம் பண்ணலாம்.” என்றான்.

“ஏன் மாம்ஸ், அவங்கப்பா பொய் சொல்றாருன்னு நினைக்கறீங்களா? அதுக்குள்ள எதுவும் ஆபத்து வந்துட்டா?” என இசை யோசனையாக கேட்க, “அப்படி இல்ல, அவ எப்படி வெளில போனான்னு தெரியனும். அப்படியெல்லாம் எதுவும் ஆகாது. பணத்துக்காகவோ இல்ல வேற ஏதாவது தப்புக்காக கடத்தியிருந்தா இன்னேரம் நியூஸ் வந்திருக்கும். ஒன்னு ஒளிஞ்சிருக்கனும். இல்ல இதுல வேற ஏதோ இருக்கனும்” என்றான் சித்து.

“சரி மகிழ், அதான் காலைல பார்த்துக்கலாம்னு செல்லீட்டாங்களே, எல்லாரும் தூங்கறதுக்கு ஏற்பாடு பண்ணலாம் வா” என மீனாட்சி அழைக்க, “ஒன்னும் பிராப்ளம் இல்ல ஆன்ட்டி, நாங்க பக்கத்துல ஏதாவது ஹோட்டல்ல ஸ்டே பண்ணீக்கறோம்” என்றான் சந்துரு.

“இப்பவே மிட்நைட் ஆகப்போகுது சார். இந்நேரத்துக்கு ரூம் கேட்டா ஏதோ கொள்ளைக்கார கும்பல்னு நினைப்பாங்க. எப்படியும் விடியறத்துக்கு முன்னாடி போகப்போறீங்க. இங்கையே இருங்க.” என இசை கூறவும், சந்துரு, “ஆமாமா, நீ சொல்றதும் சரிதான். இங்கேயே ஸ்டே பண்ணிக்கலாம்ணா” என வேகமாக கூற, கவினும், சிந்துவும் அவனை கிண்டலடித்து தங்களுக்குள் சிரித்தனர்.

பிறகு பெண்கள் அனைவரும் அறைகளிலும், ஆண்கள் வரவேற்பறையிலுமாக படுத்துறங்க, விடியும் முன்பே எழுந்து விட்டான் சித்து. சத்தம் கேட்டு மற்றவர்களும் எழ, அனைவரையும் இருக்க சொல்லிவிட்டு கவினை மட்டும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான் சித்து.

விடியும் நேரத்தில் நிரஞ்சனியின் வீட்டிற்கு செல்ல, அவளது தந்தை வந்து கதவை திறக்க, அன்னையோ சோபாவிலே அமர்ந்த நிலையிலே உறங்கிக் கொண்டிருந்தார். “நைட்டெல்லாம் தூங்கல சித்து. அதான்” என்றவாறே அவரை எழுப்ப, “பரவால்ல அங்கிள், நிரு ரூமை கொஞ்சம் பார்க்கனும்” எனக் கேட்கவும் அவரும் அழைத்து சென்றார்.

அங்கு சென்று அறையை பார்த்த இருவரும் அதிர்ந்து போய் நின்றனர். அறை முழுதும் அவளும் சித்துவும் இருந்த படங்களை ஒட்டி அலங்கரித்து வைத்திருந்தாள் நிரஞ்சனி.

சிறு வயதில் இருந்தே இந்த அறைக்கு பலமுறை வந்திருக்கிறான் சித்து. ஆனால் அவள் காதலை சொன்ன தருணத்தில் இருந்து வீட்டுப்பக்கம் வருவதையே நிறுத்தியிருக்க, இப்போது அவளை நினைத்து ஏனோ மனதுக்கு கடினமாக இருந்தது. அதை ஒதுக்கியவன் அறையினுள் ஏதேனும் தடயம் கிடைக்குமா எனத் தேடினான்.

அங்கிருந்த புகைப்படம் ஒன்றை அவரிடம் காட்டிவன், “அங்கிள், நிரு இந்த வாட்சை இன்னும் வைச்சிருக்காளா?” எனக் கேட்க, “ஆமா சித்து, இதைத்தான் போட்டு இருக்கா, லாஸ்ட் பர்த்டேக்கு கூட நான் காஸ்ட்லியா ஒரு வாட்ச் பிரசன்ட் பண்ணேன். ஆனா அதை பத்திரமா வைச்சிட்டு இதைத்தான் எப்பவும் கட்டுவேன்னு சொல்லிட்டா” என்றார் அவர்.

“ஓ தேங்க் காட். அங்கிள் நீங்க கவலையேப்படாதீங்க, ஆன்ட்டிக்கிட்டயும் தைரியமா இருக்க சொல்லுங்க, ஈவ்னிங்குள்ள நிரு இங்க இருப்பா” என்றவன் வேகமாக கவினைக் கூட்டிக் கொண்டு வெளியே வந்தான்.

“என்னாச்சு மச்சி, நிரஞ்சனிதான் விளையாடறாளா?” என கவின் கேட்க, “அவ விளையாடறாளா, இல்ல ஏதோ பிரச்சனைல இருக்காளான்னு தெரியல மச்சி. ஆனா எங்க இருக்கானு இப்ப தெரிஞ்சுடும்” என்றான் சித்து.

“எப்படிடா சொல்ற. அப்படி என்ன பார்த்த” என கவின் கேட்க, “அவ கையில இருக்கறது ஜி.பி.எஸ் வாட்ச்டா, நான்தான் பிரசன்ட் பண்ணேன். இதை வைச்சு அவ எங்க இருக்கானு கண்டுபிடிச்சிடலாம்” என்றான் சித்து.

“இதுக்கு ஃபோன் வைச்சே பார்த்துருக்கலாம்லடா” என கவின் கேட்க, “அது ஆப்ல இருக்குடா, கடைசியா எங்க வீட்டுகிட்ட தான் ஆன்ல இருந்திருக்கு. மிஸ் ஆகியிருக்கவும் சான்ஸ் இருக்கு” என்றவன் சிக்னலை தேடினான்.

அதுவோ அங்கிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக காட்ட, “அங்க போய் பார்க்கலாம்டா” என்றான் சித்து. “இருடா, நீ சொல்றதை பார்த்தா கண்டிப்பா ஏதோ பிரச்சனை இருக்கு. எதுக்கும் நீ அஜய்க்கு கால் பண்ணு” என கவின் கூற, “அவன் அங்க இருந்து எப்படிடா வர முடியும்” என்றான் சித்து.

“அவன் வரமுடியாதுடா, ஏதாவது ஐடியா குடுப்பான்” என்ற கவின் அவனே அழைக்க, “ஏண்டா காலைல ஃபோன் பண்ணி டிஸ்டர்ப் பண்றீங்க” என்றபடியே அழைப்பை ஏற்றான் அவன். “ஒரு பிரச்சனைடா, இப்ப என்ன பண்றது” என நடந்ததை கூற, “நீங்க ரெண்டு பேரும் அந்த லொக்கேஷனை அனுப்பிட்டு அங்க போங்க. நான் ஏதாவது பண்றேன்” என்றான் அஜய்.

“நம்பளை அங்க போக சொல்றான்டா” என கவின் கூற, சித்து, “அதான் நானும் சொன்னேன்” என்றபடி இருவரும் கிளம்ப, சந்துரு அழைத்து, “அண்ணா எங்க இருக்கீங்க, நானும் ஆகாஷூம் கிளம்பி வரோம்” என்க, “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நாங்களே பார்த்துக்கறோம். சிந்துவையும், அகலையும் அங்கையே விட்டுட்டு நீங்க கிளம்பி ஆபிஸ் போய் வேலையை பாருங்க” என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டான்.

“என்ன சொன்னாரு. ஏதாவது பிரச்சனையா, எங்க வரனுமாம்” என ஆகாஷ் சந்துருவிடம் கேட்க, “ம்ம் கிளம்பி ஆபிஸ் போகனுமாம் கிளம்பு” என்றான் கடுப்பாக. “என்னை போக வேண்டாம்னு சொல்லியிருப்பாரே மாம்ஸ்” என இசை ஆவலாக கேட்க, “உன்னைதான் முதல்ல கிளம்ப சொன்னாரு. இங்க இருந்தா அண்ணியை சீண்டிகிட்டே இருக்கனு சொன்னாங்க” என்றான் சந்துரு.

“மகிழ் பேசாம இன்னைக்கு நாமளும் இவங்க ஆபிஸ் போகலாமா? மதியம் வரைக்கும் இருந்துட்டு வந்திடலாம்” என அகல் கேட்க, “அதெல்லாம் வேண்டாம். அதென்ன ஆபிஸா இல்ல பிக்னிக் ஸ்பாட்டா, ஆளாளுக்கு வரதுக்கு” என்றான் சந்துரு.

“ஓ எங்க அக்கா வரக்கூடாது, உங்க நிரஞ்சனி மேடம் மட்டும் வரலாமா?” என இசை கிளப்பிவிட, “ஏன் இப்படி, எல்லாருமே போகலாம், போய் கிளம்புங்க” என்றான் சந்துரு. அவர்கள் அனைவரும் அலுவலகம் செல்ல, சித்துவும், கவினும் அந்த இடத்திற்கு சென்றனர்.

கவின், “என்னடா, இது பஜார் மாதிரி இருக்கு. நான் ஏதோ படத்துல வர மாதிரி தனியா வந்து மாட்டிக்க போறோம்னு நினைச்சேன். இவ்வளவு பேர் சுத்தி இருக்கும்போது, நிரஞ்சனிதான் ஏதோ ஐடியா பண்றானு நினைக்கறேன்” என ஆசுவாசமடைந்தான்.

“தெரியல, இங்க இருந்து பத்தாவது பில்டிங் தான் அந்த லொக்கேஷன் காட்டுது வா போகலாம்” என்றான் சித்து. “டேய் இருடா, மணியை பார்த்தியான்னு வயிறு சத்தம் போடுது. ஏதாவது சாப்பிட்டு போகலாம்டா” என கவின் கூறவும், அவனை முறைத்தவன், “இப்ப அங்க போறது முக்கியமா இல்ல சாப்பிடறதா?” என சித்து கேட்க, “கண்டிப்பா சாப்பிடறதுதான் முக்கியம் புரோ” என அருகில் வந்து நின்றான் அசோக்.

“நீங்க யாரு?” என கவின் கேட்க, “வாங்க சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்” என்ற அசோக் அருகில் இருந்த உணவகத்தில் நுழைந்தான். சித்து பின்னால் செல்ல, “டேய் இருடா, இவர் யாருன்னே தெரியல. ஒருவேளை இவரை அனுப்பி நம்பளை வேவு பார்க்கிறாங்களோ?” என்றான் கவின்.

“எதுனாலும் பார்த்துக்கலாம் வாடா” என சித்து நுழைய, “கரெக்ட் புரோ” என்றபடி உதயும் அவர்களோடு வந்தான். “கன்பார்ம்மா மாட்டிக்கிட்டோம்டா” என புலம்பியபடி கவின் வந்து அமர, “பயப்படாதீங்க. ஐ ஆம் அசோகமித்திரன், கமிஷ்னர் சென்னை சிட்டி. அஜய்தான் உங்களுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி கேட்டான்” என அவர்களின் பயத்தை பார்த்து விளக்கம் கொடுத்தான் அசோக்.

“பயமெல்லாம் இல்ல. சும்மா” என கவின் கூறவும், உதய், “நீங்க நினைச்ச மாதிரி அந்த பொண்ணை கடத்திதான் வைச்சிருக்காங்க. நாங்க போலீஸ்ல இருந்தாலும் அந்த கேங்கோட ஆளுங்கதான். நீங்க வரீங்கன்னு இன்பர்மேஷன் கிடைச்சதுல அவங்க இடத்துக்கு தூக்கிட்டு வர சொன்னாங்க” என அவனை பயப்படுத்தினான்.

உடனே கவின், “எது, இங்க பாருங்க, நான் ஏதோ இவன் கூப்பிட்டானு கூட வந்தேன். மத்தபடி அந்த பொண்ணை நீங்க என்ன வேணா பண்ணீக்கோங்க. நான் கிளம்பறேன் சித்து” என வேகமாக எழுந்தான்.

“என்ன சித்தார்த், நீங்க அமைதியா இருக்கீங்க, உங்க ஃப்ரண்ட் உடனே டென்ஷன் ஆகிடறாரு” என்ற அசோக், அவனை அமர சொல்லி விட்டு தனது திட்டத்தை விவரித்தான்.

அதன்படி கவினும், சித்துவும் மட்டும் உணவருந்தி விட்டு கிளம்பி நிரஞ்சனி இருக்கும் கட்டிடத்திற்குள் செல்ல அதுவோ நிறைய கடைகள் வரிசையாக கட்டப்பட்டு ஒரு மால் போல இருந்தது. “இங்க எல்லாமே எலக்ட்ரானிக்ஸ் கடை மாதிரி இருக்கேடா, இங்க எப்படி வைச்சிருக்க முடியும்” என கவின் கேட்க, “தேடிதான் பார்க்கனும்டா” என நடந்து கொண்டே கூறினான் சித்து.

திடீரென ஒரு கடை முன் நின்றவன், “இந்த ஃபோனுக்கு நியூ மாடல் பேக் கேஸ் கிடைக்குமா?” என்றான் தனது ஃபோனை காட்டி. அந்த கடைப்பையன் சில கவர்களை எடுத்துக் கொடுக்க, இன்னும் கொஞ்சம் டிப்பரண்டா வேணும். கொஞ்சம் ஸ்டாக்ல தேடி பாரேன்” என சித்து கேட்கவும், “இங்க இவ்ளோதான் சார் இருக்கு. வெயிட் பண்றீங்களா குடோன்ல செக் பண்றேன்” என நடக்க கவினை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு அவனை பின்தொடர்ந்தான்.

அவர்கள் இருந்ததற்கும் கீழே அடித்தளத்தில் குடோன் இருக்க, வழியை பார்த்துவிட்டு மீண்டும் அந்த கடைக்கே வந்து பெயருக்கு ஒரு கவரை வாங்கிக் கொண்டு வேறு பக்கம் வந்தான்.

பிறகு கவினை அழைத்துக் கொண்டு அந்த குடோனுக்கு வந்தவன் ஃபோன் ஒளியை கொண்டே யாராவது இருக்கிறார்களா என பதுங்கியபடி தேட அதன் ஓரத்தில் சில அட்டைப்பெட்டிகளுக்கு நடுவே விழுந்து கிடந்தாள் நிரஞ்சனி.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்