Loading

சித்து தனது கதையை கூறி முடிக்க, எதார்த்தமாக வாசலை பார்த்த ஆகாஷ் அங்கு மீனாட்சி நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்தான். “ஆன்ட்டி நீங்க எப்ப வந்தீங்க?” என அவன் கேட்கவும்தான் மகிழுக்கு தனது அன்னையும் உடன் வந்தது நினைவுக்கே வந்தது.

இசை மகிழை அனுப்பி வைக்குமாறு கூற, மீனாட்சியோ தனியே அனுப்ப மனமில்லாமல் தானும் வந்தார். உடனே வந்து விடுவதாக கூறி அவரை ஆட்டோவிலே இருக்க சொல்லி விட்டு மகிழ் உள்ளே வர சில நிமிடங்களிலே ஏதாவது பிரச்சனையோ என நினைத்து இறங்கி வந்தவர், சித்து தன்னை பற்றி கூறுவதை கண்டதும் அப்படியே நின்று விட்டார்.

ஆகாஷ் கேட்டதும் அவரை கண்ட சித்து உள்ளே வருமாறு அழைத்தான். “சாரி ஆன்ட்டி. நீங்க ஏன் வெளில நின்னீங்க. உள்ள வந்துருக்கலாம்ல” என சித்து கேட்க, “பரவால்லப்பா. நீங்க ஏதோ பேசிட்டு இருந்தீங்க. அதான்” என்றபடியே அமர்ந்தார்.

“ஆக மொத்தம் இன்னைக்கு யாரும் ஆபிஸ் போகல. அப்படிதானே” என அவர் கூற, “இல்லம்மா. ஆபிஸ்ல இருந்துதான் வந்தோம்” என்றாள் இசை. “எப்ப நீங்க ஊருக்கு போறீங்க தம்பி.” என சித்துவை பார்த்து கேட்க, “இன்னைக்கு நைட் கிளம்பலாம்னு இருக்கேன் ஆன்ட்டி” என்றான் அவன்.

“சரி தம்பி பத்தரமா போய்ட்டு வாங்க. அப்பறம் வர ஞாயிற்றுக்கிழமை திரும்ப வந்திருங்க” எனவும் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

“எதுக்கும்மா. மறுபடி உடனே வர சொல்ற.” என இசை கேட்க, மீனாட்சி, “நீதானே உன் ஃப்ரண்ட் ராகினிக்கு விருந்து வைக்கனும்னு சொல்லிட்டு இருந்த. அதுக்குதான். இவர் போயிட்டு அங்க இருக்கறவங்களையும் கூட்டிட்டு வந்திடட்டும்” எனவும், “ஓ. ஆமாமில்ல. ஓகே அப்ப மறுபடி எல்லாரும் மீட் பண்ண போறமா. சூப்பர்” என்றாள் இசை.

“ஆமா. சரி நாங்க அப்ப கிளம்பறோம்” என மகள்களை அழைத்துக் கொண்டு அவர் கிளம்பிவிட, “எல்லாத்தையும் கேட்டாங்களா. இல்ல இப்பதான் வந்தாங்களா. எதுவுமே சொல்லாம போறாங்க” என சந்துரு கூற, “எனக்கும் அதுதான் புரியல. ஏன் அண்ணா விசியத்துல மட்டும் எதுவுமே கண்டுக்க மாட்றாங்க” என்றான் ஆகாஷ்.

“அவங்க ஏதோ யோசனைல்ல இருக்காங்க போல. அதுவும் நல்லதுதான்.  அதுக்குள்ள நாம கொஞ்சம் பிராப்ளம்லாம் சால்வ் பண்ணிக்கனும்.” என சித்து கூற, “நீங்க பிரச்சனையை சால்வ் பண்ணனும்னா இங்க இருக்கனும். அதை விட்டுட்டு அதை விட்டு விலகிட்டே இருந்தா எப்படி சரி பண்ண முடியும்” எனக் கேட்டான் சந்துரு.

“நீ சொல்றது சரிதான். ஆனா நான் விலகி போகல. அப்ப அந்த கம்பெனியை வாங்கனும்னு முடிவு பண்ணியாச்சு. திடீர்னு இவ்ளோ பிராப்ளம்க்கு நடுவுல ரெண்டு கம்பெனி பார்க்கறதுல்லாம் முடியற காரியமா. அதான் இதை உன் கையில கொடுத்துட்டு நான் அதை பார்க்க போனேன். இப்ப ஓரளவு பரவால்ல. அடுத்து என்ன பண்றதுனு யோசிக்கலாம்” எனும்போதே அவன் ஃபோன் இசைத்தது.

கவின்தான் அழைத்திருந்தான். “சொல்லுடா என்னாச்சு” எனக் கேட்க, “மச்சி இங்க அந்த நிரஞ்சனி வந்திருக்கா. உன் ரூம்ல உட்கார்ந்துகிட்டு எல்லாரையும் அதிகாரம் பண்றா. எனக்கு என்ன பண்றதுனே தெரியல.” என்றான் பதட்டமாக.

“அவளை முதல்ல ஒரு வழி பண்ணாதான் மத்ததெல்லாம் சரி ஆகும். நீ எதுவும் சொல்லாத. நீ பேசாம வேலையை பாரு. நான் நைட் கிளம்பி வரேன்” என்ற சித்து அழைப்பை துண்டித்தான்.

“என்னாச்சுண்ணா” என சந்துரு கேட்க, “எல்லாம் இந்த நிரஞ்சனி பண்ற வேலைடா. எனக்கு குடைச்சல் குடுக்கவே பொறந்திருக்கா. சரி எனக்கு கொஞ்சம் வெளில வேலை இருக்கு. நான் பார்த்துட்டு அப்படியே கிளம்பறேன். சன்டே பார்க்கலாம்” என்ற சித்து கிளம்பிவிட, சந்துரு, “ஓகே. நானும் கிளம்பறேன்” என்றான்.

“இப்பவும் உங்கம்மா அண்ணன் மேல கோபமாதான் இருக்காங்களா?” என ஆகாஷ் கேட்க, “யாருக்கு தெரியும். நான் அவங்களை பார்த்தே மாசக்கணக்குல ஆகுது.” என்றான் சந்துரு. “நீங்க என்ன சொல்றீங்க. அப்ப நீங்க எங்க இருக்கீங்க?” எனக் கேட்டான் ஆகாஷ்.

“எங்க பழைய வீட்ல இப்ப எங்கம்மா மட்டும் தனியாத்தான் இருக்காங்க. எங்கப்பா என் பேர்ல எழுதி வைச்ச வீட்டுல நான் இருக்கேன். சிந்துவும் இவ்ளோ நான் என்கூடத்தான் இருந்தா. இப்பதான் எம்.பி.ஏ படிக்க பெங்களூர் போயிருக்கா. அண்ணன் காணாம போனதுல இருந்து எங்கம்மாவுக்கும், எங்களுக்கும் ஒரே சண்டை. அதான் தனியா வந்துட்டோம்” என்றான் சந்துரு.

“எப்படி நீயும், சிந்துவும் இப்படி இருக்கீங்க. எனக்கு அதான் ஒரே ஆச்சர்யமா இருக்கு. சொல்லப்போனா உங்களுக்கு எல்லாம் கிடைக்கனும்னு தான் உங்கம்மாவே இதெல்லாம் பண்றாங்க. ஆனா உங்களுக்கு அப்படி தோணவே இல்லையா?” எனக் கேட்டான் ஆகாஷ்.

“ஒருவேளை சின்ன வயசுல இருந்து ஒன்னா இருந்து, அப்பவே இது மாதிரில்லாம் அம்மா நடந்திருந்தா கூட தோணியிருக்கலாம். ஆனா அம்மா இப்ப காட்டற இந்த முகத்தை இதுக்கு முன்னாடி நாங்க பார்த்ததே இல்ல. அதே மாதிரி அண்ணாவும் அப்ப இருந்தே ஹாஸ்டல்தான். எப்பையாவது வீட்டுக்கு வருவாங்க.

அண்ணா சின்ன வயசிலயே ரொம்ப பிர்லியண்ட். அதனால அண்ணா கூட பேசறது, பழகறது எல்லாமே ரொம்ப பிடிக்கும். அம்மாகிட்ட கொஞ்சம் விலகி இருந்தாலும் எங்க மேல எப்பவும் பாசமா தான் இருப்பாங்க. நல்லா விவரம் தெரிஞ்ச அப்பறம் தனியா அண்ணன் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கும்னு தான் எங்களுக்கு தோணிச்சு.

அதனால எங்களுக்குள்ள நல்லாவே செட் ஆகிடுச்சு. அப்பா இறந்ததுக்கு அப்பறம் அம்மாவுக்கு அவர் சொத்து இருக்கிற அண்ணனா தெரிஞ்சாரு. ஆனா எங்க ரெண்டு பேருக்கும் சொந்த அண்ணனா இருந்தாரு. சோ இப்ப மட்டுமில்ல எப்பவும் அண்ணா சைட்தான் நாங்க. அம்மா செய்யறது தான் தப்பு” என்ற சந்துருவை அணைத்துக் கொண்டான் ஆகாஷ்.

ஆகாஷ், “எல்லாமே சீக்கிரம் சரியாகிடும். மறுபடி நீங்க எல்லாரும் சந்தோஷமா இருப்பீங்க பாருங்க.” என ஆறுதல் கூறவும், அதன்பிறகு அங்கிருந்து கிளம்பி சென்றான் சந்துரு. சித்து அங்கிருந்து கிளம்பி சென்றது நிரஞ்சனியின் வீட்டிற்குதான். இவனை கண்டதும் ஆச்சர்யப்பட்ட அவளின் தந்தை பின்னால் தனது மகளை தேடினார்.

“வாங்க மாப்பிள்ளை. எங்க என் பொண்ணை காணோம்” என உரிமையாக அவர் அழைக்க, சத்தம் கேட்டு அவரது மனைவியும் அங்கு வந்தார். “நான் உங்க மாப்பிள்ளைன்னு என்னைக்காவது உங்ககிட்டயோ இல்ல உங்க பொண்ணுகிட்டயோ சொல்லியிருக்கனா?” என்றான் சித்து.

அவர் இல்லையென தலையாட்ட, “அப்பறம் ஏன் இப்படி பண்றீங்க அங்கிள். இன்னமும் உங்க மேல எனக்கு மரியாதை இருக்கு. ஏன் உங்க பொண்ணு மேல கூட பாசம் இருக்கு. ஆனா இப்ப அவ பண்ற வேலைல கோபத்தை விட பரிதாபம் தான் அதிகமா இருக்கு.

சின்ன வயசுல இருந்து அவ கேட்கறதுக்கு முன்னாடியை எல்லாம் வாங்கி கொடுத்து பழக்கிட்டீங்க. செல்லம் குடுக்கறது தப்புல்ல. ஆனா எது கேட்டாலும் அது சரியா இல்லையானு புரிய வைச்சு வாங்கி தரனும். அந்த பொருள் மாதிரி தான் என்னையும் அவ நினைக்கறா.

நான் எத்தனையோ முறை நேரடியாவே சொல்லிட்டேன். ஆனா அவ பரவால்ல. கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்லியே நிற்கறா. இப்பவாது அவளுக்கு நீங்க புரிய வைப்பீங்கன்னு பார்த்தா அவ நாடகத்துக்கு நீங்களும் துணை போறீங்க. இல்ல நான் தெரியாமத்தான் கேட்கறேன்.

நீங்க ரெண்டு பேரும் காதலிச்சுதானே கல்யாணம் பண்ணீங்க. அந்த காதலே இல்லாம உங்க பொண்ணு ஒரு வாழ்க்கை வேணும்னு சொன்னா அதுல இருக்கிற பின்விளைவை நீங்கதானே சொல்லி புரியவைக்கனும். நான் தெளிவா சொல்றேன். உங்க பொண்ணு எனக்கு ஒரு நல்ல ப்ரண்டா இருந்திருக்கா.

அவ மாறிட்டா இன் பியூச்சர் கூட அதே போல ஒரு நல்ல ப்ரண்டா நான் இருப்பேன். ஆனா இல்ல கல்யாணம் ஆனா சரியா போய்டும்னு வேற ஏதாவது டிராமா பண்ணா இனிமேலும் சும்மா இருப்பேனு நினைக்காதீங்க.  ஏன்னா இப்ப என்ன நம்பியும் ஒரு பொண்ணு இருக்கா.

இப்ப கூட பெங்களூர்ல என் ஆபிஸ் போய் ஏதோ பிரச்சனை பண்ணிட்டு இருக்கா. கூப்பிட்டு அவளை திருத்தறதும் இல்ல அப்படியே விடறதும் உங்க இஷ்டம்” என்றவன் அவர்களது பதிலை கூட எதிர்பாராமல் சென்று விட்டான்.

முதல்முறையாக மகள் விசயத்தில் தவறு செய்துவிட்டோமோ என அவர்களுக்கு தோன்ற ஆரம்பித்தது. அங்கிருந்து கிளம்பி சித்து பெங்களூர் வரவே நள்ளிரவு ஆகிவிட வழக்கம்போல கவின் தூக்கத்தை கெடுக்க கதவை தட்டினான்.

“கொஞ்ச நாள் இந்த பிரச்சனை இல்லாம இருந்தது மறுபடி ஆரம்பிச்சுட்டான்.” என புலம்பியபடியே வந்து கதவை திறந்தான் கவின். “என்ன மச்சி நல்ல தூக்கமா. எனக்கு செம பசிடா. சாப்பிட ஏதாவது கொடுடா” என்றவனை முறைத்தாலும் சமையலறைக்கு சென்றான் கவின்.

சென்றவன் ஒரு தட்டில் ஏதோ வைத்து நீட்ட, வாங்கி பார்த்தவன், “நான் இல்லாதப்ப பிரியாணில்லாம் செய்யறடா” என்றபடியே வாயில் எடுத்து வைக்க, அது ரவை போல இருந்தது. “என்னடா இது” எனக் கேட்க, “பெங்களூர் ஸ்பெஷல் காராபாத்டா. நேத்துதான் டிரை பண்ணேன். நல்லாதான் வந்திருக்குல்லடா” என்றான் கவின்.

“டேய். இது அந்த ரவைல்ல தக்காளி, வெங்காயம், காய்யெல்லாம் போட்டு பண்றதுதானே. காய்கறி உப்புமான்னு சொல்லுடா. நீ விட்டாலும் இந்த உப்புமா உன்னை விடாது போலவே” என அலுத்துக் கொண்டே உண்டு முடித்தான் சித்து.

“உன்னையெல்லாம் பட்டினி போடனும்டா. இதே என் தங்கச்சி ரவை உப்புமா கிண்டி போட்டாலும் சிரிச்சுகிட்டே சாப்பிடுவ. எல்லாம் என் நேரம்” என்றபடியே அவன் எடுத்து வைத்து விட்டு வர சித்துவோ நல்ல உறக்கத்தில் இருந்தான். சிரித்தபடியே அவனுக்கு போர்வையை போர்த்திவிட்டவன் தானும் உறங்கினான்.

அடுத்த நாள் காலையில் இருவரும் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்க அங்கு வந்தாள் சிந்து. சித்துவை கண்டதும், “அண்ணன் நீங்க எப்ப வந்தீங்க. நான் கவின் மட்டும் இருப்பானு” என இழுக்க, “அவன் மட்டும் இருப்பான் டூயட் பாடலாம்னு வந்தீயா” என்றான் சித்து.

“இல்லனா. ஹாஸ்டல் சாப்பாடு போர் அடிக்குது. அதான் கவின் ஏதாவது ஸ்பெஷலா பண்ணியிருந்தா சாப்பிட்டு போலாம்னு வந்தேன்” என்றதும் அங்கு வந்த கவின், “ஏண்டா பேசாம என்னை மேனேஜர் போஸ்டிங்ல இருந்து தூக்கிட்டு உங்க வீட்டு சமையல்காரனா மாத்திடேன்” என்றான்.

“என்ன மச்சி இப்படி சொல்லிட்ட, நீ மட்டும் என் தங்கச்சிக்கு ஓகே சொல்லு. அதுக்கு அப்பறம் எல்லாம் மாறிடும். இல்ல சிந்து” எனவும், “கண்டிப்பாண்ணா” என்றாள் அவள். “ஓ கல்யாணம் பண்ணிட்டா இவ சமைக்க போறா. இதை என்னை நம்ப சொல்ற” எனக் கேட்க, சித்து, “இல்ல மச்சி. அதுக்கு அப்பறம் சமையல் மட்டுமில்ல வீட்டு நிர்வாகம் பூரா நீயே பார்த்துக்கோ” என்க, சிந்து அவனுக்கு ஹைபை கொடுத்தாள்.

“அடப்பாவிங்களா. உங்க குடும்பத்துக்கு என்ன அடிமையா ஆக்காம விட மாட்டீங்க போல. சரி சாப்பிட வாங்க” என சலித்தபடியே உணவு எடுத்துவைக்க மூவரும் மகிழ்வுடன் உண்டனர். அதன் பிறகு அலுவலகம் சென்றவர்கள் அந்த வாரம் முழுக்க இருந்த விடுபட்ட வேலைகளை முடித்தனர்.

சனிக்கிழமை அன்று மதியம் போலவே ராகினி அவளது கணவன், சித்து, கவின், சிந்துவோடு அகல்யா மகிழை பார்க்க வருவதாக கூறவும் அவளையும் அழைத்துக் கொண்டு அனைவரும் சென்னைக்கு கிளம்பினர். மறுநாள் நடக்க போகும் அதிர்ச்சி சம்பவங்களை பற்றி தெரியாமல், அனைவரும் ஆனந்தமாக பேசி விளையாடிக் கொண்டு  சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்