Loading

              இராஜசேகர் இறந்து காரியங்கள் முடிந்ததும் சொத்தை பற்றியெல்லாம் யாரும் யோசித்திருக்கவில்லை ஐயம்மாள் உட்பட. ஆனால் காரியம் முடிந்த மறுநாளே உயில் படிக்கப்பட வேண்டும் என அவர் வக்கீலிடம் கூறி இருந்ததால் அவரே வீடு தேடி வந்தார்.

“இப்ப இதுக்கு என்ன அங்கிள் அவசரம்” என சித்து கேட்க, அவர், “இதுவும் உங்கப்பாவோட ஆசைதான்” என்றார். அதன்பிறகு அவர் படிக்க அதைக் கேட்ட அனைவருமே ஒருவித அதிர்ச்சியில் தான் இருந்தனர்.

பூர்வீக சொத்துக்கள் உட்பட அனைத்து சொத்துகளுமே இராஜசேகர் பேரிலே இருந்ததால், எல்லாமே அவரது சொத்துக்களாக எடுத்துக் கொள்ளப்பட்டு சிந்துவுக்கு கொஞ்சம் பணமும், நகைகளும் ஒதுக்கப்பட்டிருக்க, சந்துருவுக்கு ஒரு வீடும், ஐயம்மாளுக்கு ஒரு வீடும் எழுதப்பட்டு இருந்தது.

அதை தவிர, மீதம் இருந்த சொத்துகள் அனைத்துமே சித்துவுக்கும் அவனது வாரிசுகளையுமே சேரும் எனவும், ஐந்து வருடங்களுக்கு யார் பெயரிலும் இதை மாற்றக் கூடாது எனவும், இறுதிவரை ஐயம்மாளையும், சந்துரு, சிந்துவை தனது பாதுகாப்பில் வைத்து பார்த்துக் கொள்வது அவனது கடமை.

இதை தவிர அவனாக விருப்பப்பட்டு எந்த உதவியையும் செய்யலாம் என்பது போல சென்றது அவரது உயில். ஐயம்மாளின் மற்றொரு முகத்தை அப்போதுதான் அனைவருமே முழுதாக பார்த்தனர். வக்கீலும் அவர்களது குடும்ப நண்பரே என்பதால் அவரிடமே தொடங்கியவர் புலம்பி திட்டி தீர்த்தார்.

“என்ன உங்க ஃப்ரண்ட்க்கு புத்தி கெட்டு போச்சுன்னா, நீங்களும் சொன்னதை எல்லாம் அப்படியே எழுதிருவீங்களா. என்னைக்கோ செத்து போன பொண்டாட்டியோட புள்ளை பேருல எல்லா சொத்தையும் எழுதிட்டு, கடைசி வரை பார்த்துக்கிட்ட எனக்கும் என் பிள்ளைங்களுக்கும் பிச்சை போட்டுருக்காரா?” என்றதில் அவர் அதிர்ந்து விட்டார்.

“என்னம்மா. இப்படி பேசறீங்க. சொத்து விசயம்லாம் அவங்க ஆசைப்படிதான் பண்ண முடியும். கடைசி வரை சித்து உங்களை பார்த்துக்கனும்னு அவர்தான் தெளிவா சொல்லியிருக்காரே” என ஆதரவாக பேசிவிட, “இவனே நான் பார்த்து விட்டதால தான் இத்தனை நாள் இந்த வீட்ல இருந்தான். இனி இவன் என்ன பார்த்துக்கனுமா?” என கத்தினார் அவர்.

“அம்மா. எதுக்கு இப்ப அங்கிள்கிட்ட சத்தம் போடறீங்க. அவர் வேலையை அவர் பார்த்திருக்காரு அவ்ளோதான்.” என்ற சந்துரு, “நாங்க அப்பறமா ஆபிஸ் வரோம் சார். நீங்க கிளம்புங்க” என அவரை அனுப்பி வைத்தான். “நான் சொன்னப்பல்லாம் நீ நம்புனியாடா. இப்ப பார்த்தியா. என்ன இருந்தாலும் அந்தாளுக்கு இவன் மேலதான் பாசம் அதிகம்” என்றார் ஐயம்மாள்.

“எல்லா அப்பாவுக்கும் மூத்த புள்ள மேல பாசம் கொஞ்சம் அதிகமாக தான் இருக்கும். அப்பாவும் அப்படிதான். இப்ப நீங்க ஏன் இவ்ளோ கோபப்படறீங்க. முதல்ல அமைதியா இருங்க” என்றான் சந்துரு.

சிந்துவும், “ஆமாம்மா. ஏதோ நமக்கெல்லாம் எதுவுமே இல்லாத மாதிரி பேசற. அண்ணனை கொஞ்சம் பாரு” என்க, அவனோ, ‘இதுவரையில் இந்த சொத்து, பணம் பற்றியெல்லாம் தான் யோசித்ததே இல்லையே. எதற்காக அப்பா இப்படி செய்தார். இவருக்காகவா’ என யோசித்தவன் பேச்செழாமல் நின்று கொண்டிருந்தான்.

“அதான் எல்லாம் உனக்கு சாதகமா நடக்குதே. மிச்சம் மீதி இருக்கிற சொத்தையும் எப்படி மாத்திக்கலாம்னு யோசிக்கிறியா. நீ பணம் வாங்கி கம்பெனி ஆரம்பிச்சப்ப, உங்கப்பா கம்பெனில போய் உரிமையா உட்கார்ந்தப்பவே நான் இதெல்லாம் நிப்பாட்டி இருக்கனும். ஆனா பண்ணாம உங்கப்பனை நம்பி இப்படி கோட்டை விட்டுட்டேனே” என சித்துவிடம் நேரடியாகவே புலம்பினார் ஐயம்மாள்.

அப்போதுதான் வாயை திறந்த சித்து, “அப்பாவால முடியலன்னு தான் கம்பெனிக்கு போனேன். வாங்கின பணத்தை நான் கொடுத்துட்டேன். அப்பா இப்படியெல்லாம் செய்வாருன்னு நானும் யோசிக்கல. இப்ப என்னதான் பண்ணனும் சொல்லுங்க. வேண்ணா உங்க பேர்ல எழுதி வைச்சிடவா?” என்றான் ஆற்றாமையாக.

“யாருக்கு தெரியும், கொடுத்த மனுஷன் போய் சேர்ந்தாச்சு. எப்படியும் எழுதி தர முடியாதுனு என்னா அழகா நடிக்கறான் பாருடி உன் அண்ணன்” என அதற்கும் ஐயம்மாள் கூற, தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான் சித்து.

அதைக் கண்ட சிந்து, “நீ பேசாம உள்ள போம்மா. பெரிய சொத்து. நீ இப்படி அண்ணனை நோகடிப்பன்னு நினைக்கவே இல்ல. இவ்ளோ நாள் சொத்துக்காகதான் பாசமா இருக்கிற மாதிரி நடிச்சியா?” என திட்டினாள் தனது அன்னையை.

“என்னது நடிச்சனா. அந்த வகையில நான் தப்பிச்சேன். சின்ன வயசில இருந்தே எதுக்கும் இவன் என்ன எதிர்பார்க்கல. பார்க்கிறது என்ன என்னையே இவனுக்கு பிடிக்காது. அதனால எனக்கு நடிக்க வேண்டிய அவசியம் வரல. வளர்ந்த பிறகும் யாரோ மாதிரி நினைச்சு பேசினேனே தவிர ஒரு நாள் கூட இவனை என் புள்ளையா நினைச்சதில்ல” என்றார் அவர்.

சந்துரு, “ஆனா நாங்க அவரை எங்க அண்ணனா தான் நினைக்கிறோம். யார் பேர்ல சொத்து இருந்தா என்ன. இதுதான் நம்ப குடும்பம். அவ்ளோதான்” என்றிட, “நீ அப்படியே நினைச்சிட்டு இரு. உங்கண்ணன் கம்பெனின்னா உனக்கு அவ்ளோ பிடிக்குமே. அங்க ஒரு வேலை முதல்ல போட்டுத் தருவானான்னு பாரு. பணம்னு கேட்டா பாசமெல்லாம் பத்து நாள்ல ஒன்னுக்குமில்லாம போய்டும்” என்றார் ஐயம்மாள்.

அவரை அப்போதைக்கு அடக்க நினைத்த சித்து வேறு எதையும் யோசியாமல், “நாளைல இருந்து நீயும் கம்பெனிக்கு வா சந்துரு. இப்போதைக்கு அவ்ளோதான் பண்ண முடியும்” என்றவன் கோபமாக உள்ளே சென்று விட்டான்.

அதைக் கேட்ட ஐயம்மாளின் மனம் லேசாக சமாதானமாக, ‘இது போதுமே எனக்கு’ என நினைத்தவர், “போனா எம்.டி சீட்டு வேணும்னு கேளு” என்றவரை முறைத்துவிட்டு உள்ளே சென்றான் சந்துரு. ஆனால் சித்து அலுவலகத்தில், இனி இருவருமாக கம்பெனியை பார்த்துக் கொள்ள போவதாகவே அறிவித்தது சந்துருவே எதிர்பாராத ஒன்று.

உள்ளே சென்றதும், “நீ கஷ்டப்பட்டு உருவாக்கின கம்பெனி அண்ணா இது. நீதான் எப்பவும் இங்க எம்.டியா இருக்கனும்” எனக் கூற, “சரி இந்த வாய்ப்பை பயன்படுத்தி நல்லா வேலை கத்துக்கோ.” என்றவன் கவினிடம் நடந்ததை கூறி சந்துருவை பார்த்துக் கொள்ள கூறினான்.

“ஆனாலும் உன் சித்தி இப்படி மாறுவாங்கன்னு நான் நினைச்சுக் கூட பார்க்கலடா” என்றான் கவின். “எனக்கு தெரிஞ்சு அவங்க குணமே அதுதான்டா. இவ்வளவு நாள் அதை வெளிப்படுத்த நேரம் வரல. எங்கம்மா இறந்து துக்கத்துல வேற வழியில்லாம கல்யாணம் பண்ணின எங்கப்பாகிட்டயே எனக்கு என் சந்தோஷம்தான் முக்கியம்னு கண்டிஷன் போட்டுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாமா.

இதை ஒருநாள் விளையாட்டா என்கிட்ட அப்பா சொன்னாரு. ஆரம்பத்துல இருந்தே அவங்க மேல எனக்கும் சரி, இல்ல என் மேல அவங்களுக்கும் சரி பெரிசா ஈடுபாடே இல்ல. நான் விலகியே இருக்கவும் ஒரு கட்டத்துக்கு மேல இவனால பிரச்சனை இல்ல போலன்னு நினைச்சு கூட சாதாரணமா பேசியிருக்கலாம். இப்ப திடீர்னு சொத்தெல்லாம் என் பேர்ல இருக்கவும், அடக்கப்பட்ட வெறுப்பு வெளில வருது. பார்க்கலாம் என்ன நடக்குதுனு” என்றான் சித்து.

அதன்பிறகு ஒருநாள் கவின் வீட்டிற்கு வந்திருக்க, “சாரிண்ணா, ஒரு டூ மினிட்ஸ். இதோ வந்தடறேன்.” என்றவன் கிளம்பி வருவதற்குள், “நீ அந்த கம்பெனில வேலை செய்யறவன் தானே. என் பையன் நாளைக்கு முதலாளி ஆகப் போறான். அப்பறம் என்ன பேர் சொல்லி கூப்பிடற. ஒழுங்கா சார்னு கூப்பிடு” என்று கூறிச் சென்றார் ஐயம்மாள்.

அங்கு வந்த சந்துரு காதிலும் அது விழுக, முகம் வெளிறி நின்றிருந்த கவினின் தோளை தொட்டவன், “போலாம்ண்ணா” என்க, நனவுக்கு வந்தவன், “போலாம் சார்'” எனவும், “அம்மாவுக்கு இப்பெல்லாம் பைத்தியம் பிடிச்சிருச்சுண்ணா. அதை எல்லாம் மனசுல வைச்சுக்காதீங்க” என்றான் தன்மையாக.

ஆனால் கவினோ அன்றிலிருந்து எதுவானலும் சித்துவிடமே பேசிக் கொள்பவன், சந்துருவிடம் எப்போதாவது பேசும் போதும் சாரை விடவில்லை. சித்து சொல்லியும் கூட அதை மாற்றவில்லை. இதற்கிடையில் நிரஞ்சனியும் வேலையை விட்டுவிட்டதோடு அடிக்கடி சித்துவின் அலுவலகத்திற்கு வந்து போனாள்.

அப்போது தான் சித்துவை திருமணம் செய்துக் கொள்ள போவதாக அங்கிருந்தவர்களிடம் கூறியதைக் கண்டு முறைத்தாலும் அவனால் எதுவும்  செய்யமுடியவில்லை. வீட்டிலும் எப்போது பார்த்தாலும் ஐயம்மாள் முறைத்துக் கொண்டே இருக்க, அலுவலகத்திலும் நிம்மதி போனது.

இது எல்லாம் நடப்பதற்கு முன்பாகவே இன்னொரு பிரான்ச் போடலாமா என்ற யோசனை இருந்தது சித்துவுக்கு. இந்த நிலையில்தான் பெங்களூரில் இருக்கும் கம்பெனியை விற்கப் போகும் தகவல் கிடைத்தது அவனுக்கு. அந்த நேரம் சித்து ஒரு முடிவும் எடுத்தான். ஒருநாள் நிரஞ்சனி அலுவலகத்திற்கு வந்து உட்கார்ந்து கொண்டு கவினை அழைத்து காபி வாங்கிக் கொண்டு வர சொல்ல, சித்து கோபமாகி விட்டான்.

அவன் அவளை திட்ட, அவள் கவினை திட்ட, கடைசியில் கவின் கடுப்பாகி பணியை விட்டு சென்றுவிட்டான். ஆனால் அவனை சமாதானம் செய்த சித்து தனது புதிய திட்டத்தை கூறி, பெங்களூரில் பணிக்கு சேருமாறு கூறவே அவனும் கிளம்பி அங்கு சென்று விட்டான்.

மீண்டும் வீட்டில் நிரஞ்சனியை திருமணம் செய்துக் கொள்ளுமாறு ஐயம்மாள் கூற அதுவரை பேசாமல் இருந்தவன் அப்போதுதான் முதல்முறையா எதிர்த்து பேசினான்.

“இல்ல எனக்கு புரியல. நிரஞ்சனியை கல்யாணம் பண்ணா அதுமூலமா சொத்தெல்லாம் வந்திரும்னு யோசிக்கிறீங்களா? உங்க பிளான் என்னனு சொன்னீங்கன்னா நானும் தெளிவா என் முடிவை சொல்லுவேன்.” என நேராக கேட்க, அவரால் எதுவும் பேச முடியவில்லை.

அடுத்தநாள் நிரஞ்சனி வந்து, “எப்ப நம்ப கல்யாணம்னு எல்லாரும் கேட்கறாங்க. எனக்கு ஒரு பதிலை சொல்ல போறீயா இல்லையா?” எனக் கேட்க, சித்து, “உனக்கு பதில் சொல்றதா நான் சொல்லவே இல்லயே. உனக்கு எப்ப கல்யாணம்னு கேட்டா நீ போய் யாரையாவது பண்ணிக்க. ஆனா நான் பண்ணிப்பேனு எதிர்பார்க்காத” என முகத்தில் அடித்தவாறு கூறிவிட அடுத்த நாளே நிரஞ்சனி தற்கொலைக்கு முயன்றதாக சேதி வந்தது.

அதே நேரம் கவினும் அந்த கம்பெனியை தாராளமாக வாங்கலாம் என கூறிவிட, நிரஞ்சனியின் பெற்றோர் சித்துவை பார்க்க வருவதாக தகவல் வந்ததும் அவர்கள் வருவதற்குள் சித்து அங்கிருந்து கிளம்பி இருந்தான். நேராக பெங்களூர் சென்றவன், அந்த கம்பெனியை வாங்குவதற்கான அத்தனை வேலைகளையும் செய்துவிட்டு, அதே கம்பெனியில் அலுவலராக சேர்ந்து விட்டான்.

சித்து நினைத்தது போல நிரஞ்சனியின் தற்கொலை முயற்சி ஒரு நாடகமே. அது மூலம் ஏதாவது செய்து திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என அவள் நினைக்க, திருமணத்தை நடத்தி விட்டால் நிரஞ்சனியிடம் ஏற்கனவே கூறியதை போல சொத்தை வாங்கி விடலாம் என ஐயம்மாள் நினைக்க இருவரும் சித்துவை காணாததில் திகைத்து போயினர்.

உண்மையிலே அவனை காணாமல் தவித்து போனதென்னவோ சிந்துவும், சந்துருவும் தான். ஆனால் அவன் செல்லும் முன்பு சந்துருவை அந்த வேலைக்கு முழுமையாக பழக்கியிருந்தான் சித்து. மேலும் செல்லும் முன்பு, ஒரு முக்கியமான வேலையாக செல்வதாகவும், பொறுப்பை நல்லபடியாக பார்த்துக் கொண்டால் விரைவில் திரும்புவதாகவும் சிறு குறிப்பை மட்டும் விட்டு சென்றிருந்தான் சித்து.

சித்து அனைத்தையும் கூறி முடிக்க, மற்ற நால்வரும் அதிர்ச்சியில் பேச்சு வராமல் நின்றிருந்தனர். அவர்களோடு சேர்ந்து ஐந்தாவதாக ஒருவரும் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்ததை அவர்கள் யாருமே கவனிக்கவில்லை.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்