Loading

                 கோபத்தில் முகிலனின் சட்டையை பிடித்த சித்து, தலையை உலுக்கிக் கொண்டு சோர்வாக படுக்கையில் அமர்ந்தான். “என் அம்மா நியாபகமா அது மட்டும்தான் இருக்குனு நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்ல. அப்பறமும் ஏன் இப்படி கேட்கற? என்னன்னு தெளிவா சொல்லு.” என்றான் பொறுமையாக.

“நான் எனக்காக கேட்கல. அதை நீ அரசாங்கத்துக்கு தான் கொடுக்கனும். ஏன்னா, அது உன்கிட்ட இருந்தா உனக்கு மட்டும்தான் நியாபகமா இருக்கும். ஆனா நான் சொல்றமாதிரி பண்ணா அது நாட்டுக்கே முக்கிய நியாபகமா மாறிடும்” என்றான் முகிலன்.

“அப்படி என்ன இருக்கு அந்த இடத்துல”  என சித்து கேட்க, “அந்த இடமே ஒரு பொக்கிஷம்தான். கீழடி பத்தி கேள்விப்பட்டு இருப்பிங்களே. உங்க கெஸ்ட் ஹவுஸ் சரியா அங்க இருந்து அஞ்சு கிலோமீட்டர்ல தான் இருக்கு. அந்த இடம் மட்டும் அகழ்வாராய்ச்சிக்குள்ள வந்தா நிறைய பொருள் கிடைக்க வாய்ப்பிருக்கு” என்றான் முகிலன்.

“ஆனா அதுனால உனக்கு என்ன லாபம்” எனக் கேட்க, “ஏன்னா நான் ஆர்க்கியாலஜி டிப்பார்ட்மெண்ட்ல தானே வேலைல இருக்கேன். இப்ப போஸ்டிங் கூட மதுரைல தான். இந்த இடம் மட்டும் என்னால கிடைச்சா டிப்பார்ட்மெண்ட்ல இந்த புராஜக்ட்ல என்ன போட நிறைய சான்ஸ் இருக்கு. அது என்னோட கனவு” என்றான் முகிலன்.

“ஓ. ஆனா என்னால உனக்கு ஹெல்ப் பண்ண முடியாது முகிலா. ஐ ஆம் வெரி சாரி” என சித்து கூற, “நான் இவ்ளோ சொல்றேன். அதுக்கு கவர்ன்மெண்ட் உரிய இழப்பீடு குடுப்பாங்க” எனவும், “அது இல்ல. அந்த வீட்டை நான் ஆல்டர் பண்ணலாம். குடியிருக்கலாம். ஆனா அதை விற்கிற இல்ல இடிக்கற உரிமை எனக்கு இல்ல” என்றதில் அதிர்ந்து போனான் முகிலன்.

“உன் பேர்ல இருக்கிற வீடு, இடம்தானே அது. அப்பறம் எப்படி?” என சந்தேகமாக முகிலன் கேட்க, “இல்ல அது என் பேர்ல இல்ல. எனக்கு பிறக்கிற குழந்தைக்கு தான் அது சேரும் அப்படிதான் எங்க தாத்தா உயில் எழுதியிருக்காரு. உனக்கே தெரியும்ல. நான் சின்ன வயசா இருக்கும்போதே என் அம்மா இறந்துட்டாங்க.

அதுக்கு அப்பறம் உடனே எங்கப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டாங்க. அதனால என் தாத்தாவுக்கு அவர் மேல கோபம். என்னை எப்படியும் அவங்க நல்லா பார்த்துக்க மாட்டாங்க. சொத்து என் பேர்ல இருந்தா ஏமாத்தி எழுதி வாங்கிடலாம்னு யோசிச்சு என் குழந்தைக்குனு மாத்தி எழுதிட்டாரு.

அவர் பயந்த மாதிரி எதுவும் நடக்கலன்னாலும், அவர் யோசிச்சது சரிதானு இப்ப தோணுது” என்ற சித்து பெருமூச்சு விட்டான். இத்தனை நாட்கள் தான் நினைத்தது நடக்கவில்லையே என்ற ஆதங்கம் அப்படியே தெரிந்தது முகிலனின் முகத்தில்.

ஆனால் என்ன செய்ய முடியும். “சாரி. இதுக்காக உன்னை ஹர்ட் பண்ணீட்டேனு நினைக்கறேன்” என சித்து கூற, “நீ என்ன வேணும்னா பண்ற. விடு பார்த்துக்கலாம்” என முகிலன் கூற இருவரும் இயல்பாகினர்.

அதற்கு பின்பு சற்று நேரம் பழைய கதைகளை பேசிக் கொண்டிருந்துவிட்டு மதிய உணவையும் அவனோடே முடித்துவிட்டு சித்து வெளியே வர, ஆகாஷ் அவனுக்கு அழைத்தான். “சொல்லு ஆகாஷ்” எனக் கேட்க, “ஒன்னும் பிராப்ளம் இல்லையே சார்” எனக் கேட்டான் ஆகாஷ்.

சித்து, “ஒரே ஒரு பிராப்ளம்தான். நீ என்ன சார்னு கூப்பிடறது” எனவும், அவனோ முழுதாக காதில் வாங்காமல், பிராப்ளம் எனவும், “நான் வேணா கிளம்பி வரவா?” எனக் கேட்டான். “சரி வா. உன் வீட்டுக்கு” என்ற சித்து அழைப்பு துண்டித்து விட்டு ஆகாஷ் வீட்டிற்கு செல்ல, ஏற்கனவே அங்கு இருந்தான் ஆகாஷ் அவனோடு சந்துருவும்.

அவனைக் கண்டதும் சித்து, “ஆக மொத்தம் ஆபிஸ் என்ன கண்டிஷன்ல போகுதுனு தெரியல” என அலுத்துக் கொள்ள, “அதெல்லாம் நல்லாதான் போகுதுண்ணா. சந்தேகம் இருந்தா வந்து செக் பண்ணிக்கோ” என்றான் சந்துரு. “அவரு பொய் சொல்றாரு மாம்ஸ். நீங்க இருந்தமாதிரி ஆபிஸ் இல்லனு ராகினி கூட ஒருமுறை சொல்லி இருக்கா” என்றபடி உள்ளிருந்து வந்தாள் இசை.

“அட நீயும் இங்கதான் இருக்கியா?” என சித்து கேட்க, “இவங்க ரெண்டு பேரும் கிளம்புனாங்க. அதான் நானும் வந்தேன்”  என அவள் பதில் கொடுக்க, “ஆனா மேடம்க்கு நான் லீவ் கொடுக்கலன்னா. இன்னைக்கு லாஸ் ஆப் பேதான்” என்றான் சந்துரு.

இசை, “நீங்க தராட்டி போங்க. எனக்கு மாம்ஸ் தருவாரு” என அவனை துணைக்கு அழைக்க, சந்துரு, “இவங்களை நம்பாதீங்க அண்ணா. நம்பள மாதிரி பேமிலிக்கெல்லாம் இவங்க அப்பா பொண்ணு தரமாட்டாருன்னு காலைலதான் சொன்னாங்க” என கோர்த்துவிட்டான்.

“என் மச்சினிச்சி கரெக்டா தானே சொல்லியிருக்கு” என சித்து கூறவும், சந்துரு முழித்தான். அதில் சிரித்த இசை, “அப்படி சொல்லுங்க மாம்ஸ்” என அவனுக்கு ஹைபை கொடுக்க, ஆகாஷ், “அட இருங்கப்பா, அவர் ஏதோ பிரச்சனைன்னு கூப்பிட்டா, நீங்க விளையாடிட்டு இருக்கீங்க” என்றான்.

“முதல்ல காபியை குடிங்க, அப்பறம்தான் பேச்செல்லாம்” என இசை எடுத்துக் கொடுக்க, “நீயா போட்ட, அப்ப எனக்கு வேணாம்” என்றான் ஆகாஷ்.

“டேய். என் மச்சினி எவ்ளோ கஷ்டப்பட்டு போட்டுருக்கு பேசாம குடிக்கறீங்க, என சித்து அதட்டவும், “இவ கஷ்டப்பட்டு போட்டதுக்காக, என்னை இப்படி கஷ்டப்படுத்தறீங்களே. பேசாம ஆபிஸ்லயே இருந்திருக்கலாம்” என முணுமுணுத்துக் கொண்டே வாயில் வைக்க அதுவோ கசந்தது.

“நிஜமா காபி பொடிதான் போட்டியா. இல்ல கசாயப்பொடி எதுவும் போட்டீயா?” என ஆகாஷ் சந்தேகமாக கேட்க, அவர்கள் பேசிய கேப்பில் சின்ங்கில் பாதி காபியை ஊற்றி விட்டனர் மற்ற இருவரும்.

“சூப்பரா இருக்கே. பரவால்ல” என சித்து பாராட்ட, “சூப்பரா இல்லனாலும் சுமாரா இருக்கு. ஆனாலும் உன் ஃப்ரண்டை நீ இப்படி எல்லாம் இன்சல்ட் பண்ண கூடாது” என்றான் சந்துரு. “நிஜமா குடிச்சிட்டுதான் பேசறீங்களா” என ஆகாஷ் கேட்க, “இதோ பாரு” என தங்களது கோப்பையை நீட்டினர் இருவரும்.

இருந்தாலும் நம்பாத பார்வையை செலுத்தியவன் நொந்து கொண்டே அதை குடித்து முடித்தான். “சொல்லுங்க சார். என்ன சொல்றாரு முகிலன்” என்க, “முதல்ல இந்த சாரை விடு, ஒன்னு இவனை மாதிரி அண்ணான்னு சொல்லு, இல்ல இசை மாதிரி மாமான்னு சொல்லு” என்றான் சித்து.

ஆகாஷ் உடனே, “ஓகே மாம்ஸ். சொல்லுங்க” எனவும், “நம்ப கெஸ்ட் ஹவுஸ் இருக்குல மதுரைல. அதை கீழடி மாதிரி தொல்பொருள் ஆராய்ச்சிக்கு எழுதி கொடுக்கனுமாம். ஆனா அது என்னால முடியாது. சோ எக்ஸ்ப்ளைன் பண்ணிட்டு வந்துட்டேன் அவ்ளோதான்” என்றான் சித்து.

“இதுதான் விசயம்னு சொல்ல வேண்டியது தானே. ஏதோ திரில் பட ரேஞ்ச்சுக்கு சித்துவுக்கு ஏதோ பிரச்சனை நாமதான் பார்க்கனும்னு டயலாக்லாம் பேசினாரு” என்றான் ஆகாஷ்.

“ம்ம். சரி விடு. அந்த பிராப்ளம் சால்வ்டு. இப்ப அடுத்து என்ன பண்றதுனு யோசிக்கலாம்” என்றான் சித்து. “நீங்க எப்ப வீட்டுக்கு வரப்போறீங்க?” எனக் கேட்டான் சந்துரு. “சீக்கிரமா வரலாம்னு தான் நினைச்சேன். ஆனா இப்ப நாள் ஆகும் போல” என்றான் சித்து. “ஏன் இப்ப என்னாச்சு?” என சந்துரு கேட்டான்.

“பிரச்சனை எல்லாம் சரி பண்ணிட்டு மகிழை கல்யாணம் பண்றதை விட, கல்யாணம் பண்ணாவே பாதி பிரச்சனை சரி ஆகிடும்னு நினைச்சேன். ஆனா இப்ப அது முடியாதுல்ல.” என்றான் சித்து. “எனக்கு ஒரு டவுட். அப்படி என்னதான் பிரச்சனை. ஆளாளுக்கு ஒன்னு ஒன்னு சொல்றீங்க. ஆனா என்னதான் நடந்ததுன்னு தெரிஞ்சாதானே சால்வ் பண்ண முடியும்” என்றாள் இசை இடையில்.

“அது எப்படி சொல்றது” என சித்து யோசிக்க, “இப்ப எல்லாம் தெரிஞ்சுகிட்டு நீ என்ன பண்ண போற” என்றான் ஆகாஷ். “தெரியக் கூடாத பிரச்சனைன்னா வேண்டாம். எங்கப்பா தான் யோசிப்பாங்கன்னு சொன்னேன். ஆனா என்னோட அக்கா எதைப்பத்தியும் யோசிக்க போறதில்ல.

என்னைக்கா இருந்தாலும் அவ வாழ்க்கை உங்களோட சம்பந்தப்பட்டு இருக்கு. அதனால தெரிஞ்சாதான் ஏதாவது பண்ண முடியும். உங்க ரெண்டு பேருக்கும் உள்ள பிரச்சனைல தான் நீங்க கம்பெனியை விட்டுட்டு போயிருப்பீங்கன்னு நினைச்சேன்.

ஆனா நீங்க எல்லாரும் குளோஸா இருக்கீங்க. நிரஞ்சனியோட நிச்சயம் வரை போய் கல்யாணம் நடக்கல. அப்ப என்ன நடந்தது. ஏன் யார்க்கிட்டயும் சொல்லாம வெளில போகனும். ஒரே குழப்பமா இருக்கு” என்றாள் இசை.

“நீ கேட்கிற எல்லாமே கரெக்ட்தான். எல்லாத்துக்கும் பதில் சொல்றேன். ஆனா உங்க அக்காவும் இங்க வர முடியுமா? ஏன்னா இதெல்லாம் கண்டிப்பா அவளும் தெரிஞ்சிகிட்டு அப்பறமா ஒரே முடிவா எடுக்கட்டும்னு தோணுது” எனவும், நம்பகமான ஆட்டோக்காரர் மூலம் அவளை அனுப்பி வைக்க சொல்லி தனது அன்னைக்கு தகவல் கொடுத்தாள் இசை.

அடுத்த அரை மணி நேரத்தில் மகிழ் அங்கு வந்திருக்க, “நீங்க எல்லாம் ஆபிஸ் போகாம இங்க என்ன பண்றீங்க. அபி இன்னுமா ஊருக்கு கிளம்பல?” என கேள்வி எழுப்ப, “ஆமாக்கா. மாம்ஸ்தான் எல்லாரையும் கிளம்பி இங்க வர சொன்னாரு. நீ எதுன்னாலும் அவரை கேளு.” என்றாள் இசை.

“இல்ல மகிழ். நான் வர சொல்லல. நீ உடனே என்னை முறைக்காத” என்றான் சித்து. “என்ன இல்ல. நீங்கதானே ஆகாஷை வர சொன்னீங்க?” என இசை கேட்க, சித்து, “அவனை மட்டும்தான் வர சொன்னேன்” என்க. “நாங்க உயிர் நண்பர்கள் ஒருத்தரை விட்டு ஒருத்தர வர மாட்டோம். இல்ல” என சந்துருவை பார்த்து வினவ, “ஆமா. அப்படிதான்” என அவனும் ஒத்து ஊதினான்.

“ஜோக்ஸ் அப்பார்ட். மாம்ஸ் ஏதோ பிளாஷ்பேக் சொல்லனும்னு சொன்னாருக்கா. அதுக்குதான் உன்னையும் வர சொன்னாங்க. நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க” என்றாள் இசை.

“என்னோட சின்ன வயசிலயே என் அம்மா இறந்துட்டாங்க” என சித்து கூற, “ஆனா சந்துரு சார் அம்மா பத்தி என்கிட்ட சொல்லி இருக்காங்களே” என இசை யோசிக்கவும், “நீ சொன்ன மாதிரி எல்லாருக்கும் எல்லாமே தெரியாது. சோ நானே முழுசா சொல்றேன்” என்றான் சித்து.

சித்துவின் நினைவுகள் பின்னோக்கி செல்ல, நடந்ததை விவரித்தான். சித்துவின் தந்தை சென்னையில் பெரும் தனக்காரரின் மகன். வேலை விசியமாக மதுரை வந்தபோதுதான் சித்துவின் தாயார் சந்திராவை பார்த்ததில் அவருக்கு உடனே பிடித்தும் போனது.

தனது தந்தை மூலமாகவே வந்து பெண் கேட்க, விசாரித்ததில் நல்ல இடமாகவே தெரியவும் அவரும் ஒப்புக் கொண்டார். ஆனால் தூரம் மட்டும் அதிகமாக தெரியவும், கொஞ்சம் யோசிக்க அடிக்கடி வந்து போவதாக கூறி சம்மதிக்க வைத்து விமரிசையாக திருமணமும் நடந்தது.

ஆனால் சந்திராவின் வீட்டினரே எதிர்பாராத அளவில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அவரது குடும்ப வாழ்க்கை. அவர்களின் அன்புக்கு சாட்சியாக மூன்றாவது மாதமே சித்து உதித்து விட, வளைகாப்பு கூட ஒன்பதாவது மாதம் நடத்தி, குழந்தை பிறந்த ஒரு மாதத்திற்குள் அழைத்து சென்று விட்டனர்.

ஆனாலும் குழந்தைக்கு ஒரு வயது முடிந்ததில் இருந்து அடிக்கடி தாயார் வீட்டுக்கு வந்தார் சந்திரா. வீட்டிற்கு ஒரே பெண்ணாகி விட்டதால், பெற்றோருக்கு வயதாகும் போது தான் அடிக்கடி வந்து போவது அவர்களது தனிமையை போக்கும் என சந்திரா கூறியதற்கு அவரது கணவரும் மறுப்பு கூறவில்லை.

சித்துவிற்கு நான்கு வயதாகும் வரை வாழ்க்கை மகிழ்ச்சியாக தான் சென்று கொண்டிருந்தது. அதற்கு பிறகு ஒரு பிறந்தநாளில் தந்தை வீட்டிற்கு வந்த சந்திரா மீண்டும் கணவர் வீட்டிற்கு செல்லவே இல்லை. சரிவர தொடர்பும் இல்லாததால் வந்து பார்த்தபோதும் சரியாக பேசவில்லை அவர். அவருக்கு என்ன ஆயிற்று என யாரும் அறியாமல் இருக்க, மகள் மீது உள்ள பாசத்தில் மருமகனை தான் அவரது தந்தை தவறாக நினைத்தார்.

திடீரென ஒருநாள் உடனே கிளம்பி வருமாறு சந்திரா தகவல் கொடுத்ததும் ஆவலுடன் கிளம்பி வந்தவரை அவர் மரணப்படுக்கையில்தான் வரவேற்றார். அதைவிட அப்போது சந்திரா கூறிய வார்த்தைகள் அவரை இன்னும் அதிக வேதனையில் ஆழ்த்தியது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்