247 views

          மகியின் பெற்றோர்களை தனது பெற்றோர்கள் என மகிழ் கூறியது அறை வாசலில் நின்றிருந்த மற்றவர்களுக்கும் கேட்டது. சற்று முன்பு மகியை அழைத்துக்கொண்டு அடுத்த அறைக்கு செல்ல, “என்னப்பா. ஏதாவது பிரச்சனையா, இங்க என்ன நடக்குது?” எனக் கேட்டார் குணசேகரன்.

“அது வந்து அங்கிள். அவருதான் என்னோட அண்ணன். இங்க சொந்தமா ஒரு கம்பெனி நடத்துறாரு. திடீர்னு இங்க பார்ப்போம்னு நினைக்கல. அதோட ஆகாஷை அவருக்கு முன்னாடியே தெரியும் போல. பார்த்து ரொம்ப நாள் ஆச்சுனு பேசிட்டு இருக்காங்க.” என்றான் சந்துரு.

“ஆமா. சித்து சார் கூட இருக்க அந்த அக்கா யாரு?” எனக் கேட்டாள் மகி. “மகி உனக்கு விசயமே தெரியாதா? அபியும், மகிழும் லவ் பண்றாங்க.” என்றாள் அகல் இடையில். “அபியும், மகிழும் லவ் பண்ணா எனக்கு என்ன வந்தது. அந்த அக்கா யாருன்னு தானேங்க கேட்டேன்.” என்றாள் மகி.

“அடக்கடவுளே நீ சித்து சார்னு சொல்றீயே அவர்தான் அபி. முழுப்பேரு சித்தார்த் அபிமன்யூ. கூட இருக்கறது என் ஃப்ரண்டு மகிழ்.” என அகல் விளக்கம் கொடுக்கவும், “ஏன் சார். உங்க வீட்ல எல்லாரும் இப்படி பேர பெரிசா வைச்சு இருக்கீங்க? உங்க அண்ணா மட்டும் இல்ல. உங்க பேர் கூட சந்திரபிரகாஷ். எனக்கெல்லாம் எப்படி ஷார்ட்டா இருக்கு மகின்னு.” என்றாள் மகி.

“அது கூப்பிடறது. உன் முழுப்பேரு மகிழிசைதானே. அதோட அங்கிள், ஆன்ட்டி தானே பேர் வைச்சாங்க. என்னவோ நீயே வைச்சுகிட்ட மாதிரி பெருமையா பேசு.” என அவளை வாரினான் சந்துரு. “ஏய். சும்மாயிருடி. அவங்க உனக்கு முதலாளி தானே. கொஞ்சமாது வாய் அடங்குதா பாரு. பேர் சொல்லி கேட்டாங்களா?” என அவளை அடக்கினார் மீனாட்சி.

குணசேகரன், “சரி விடு மீனா. தம்பி ஆகாஷை நீங்க வரப்ப கூட்டிட்டு வாங்க. இப்ப மத்தவங்கலாம் கிளம்பற வண்டில எங்களையும் அனுப்பி விடறீங்களா? பதட்டத்துல போட்டது போட்டபடி கிளம்பி வந்துட்டோம்.” எனவும் யோசித்த சந்துரு, “சரி அங்கிள் எதுக்கும் அண்ணாகிட்டயும் ஆகாஷ்கிட்டயும் சொல்லிட்டு போலாம்.” என்றபடியே சந்துரு வெளியில் வந்தான்.

அப்போதுதான் அங்கு வந்த கவின், “சித்து எங்க சந்துரு” என்க, “அந்த ரூம்லண்ணா. நாங்களும் அங்கதான் போறோம். வாங்க” என அழைத்து வந்து அறைக்கதவை திறக்கவும், மகிழ் அவர்களை பற்றி கூறவும் சரியாக இருந்தது. அதைக் கேட்டுதான் அனைவரும் அதிர்ந்தது.

முதலில் சுதாரித்த மீனாட்சி, “மகிம்மா.” என கத்தியபடி மகிழின் அருகில் வர, அதைக் கண்ட மகி அதிர்ச்சியானாள். “மகி. நீ நல்லா இருக்கியாடா? உன்னை பார்க்கத்தான் இவ்வளவும் நடந்ததா? இத்தனை வருஷமா இங்கதான் இருந்தீயா?” என்றவர் குணசேகரனை அழைத்து, “என்னங்க. பார்த்தீங்களா. நாம தொலைச்ச தங்கம் கிடைச்சிருச்சு.” என உருகினார்.

குணசேகரனும் ஒருவித உணர்ச்சியின் பிடியில் தான் இருந்தார். ஆனால் நடப்பதை நம்பவும் முடியவில்லை. ஐந்து வயதிலே இறந்தே விட்டதாக நினைத்த தனது மகள் இத்தனை வருடங்கள் கழித்து உயிரோடு கண் முன்னால் வந்தால் என்ன செய்வதென்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

“நீ. உன் முழுப்பேரு என்னம்மா?” என தயங்கியபடியே கேட்க, “நான் மகிழ்வதனிதான்ப்பா. உங்க மகியே தான். நீங்க அந்த ஆக்ஸிடண்ட்ல, நான் மட்டும்தான் பொழைச்சதா சொன்னாங்களேப்பா. அப்ப இத்தனை வருஷமா நீங்க என்னை தேடவே இல்லையாப்பா?” என்ற மகிழ் அழ ஆரம்பிக்க மீனாட்சியும் அழுதார்.

“மகிழ். கண்ட்ரோல் யுவர்செல்ப்.” என சித்து அவளிடம் கூற, எல்லோருடைய கவனமும் மகிழின் மீது இருக்க மகியோ அங்கிருந்து வெளியே நடக்கத் தொடங்கி இருந்தாள். அவளை கவனித்த சந்துரு மட்டும் அவள் பின்னே வந்தான். ஹோட்டலின் முன்புறம் இருந்த புல்தரையில் அமர்ந்தவளுக்கு ஏனோ கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை.

உள்ளே, “இல்லடா..  நீ சொன்ன மாதிரிதான் எங்களுக்கும் தகவல் வந்தது. உங்கம்மா வேற அப்ப பாப்பாவோட இருந்ததால உடம்பு சரி இல்லாம போய்டுச்சுடா. சரியானதும் மறுபடி உன்ன தேடி வந்தேனே. ஆனா நீ கிடைக்கலயே.” என்ற குணசேகரனின் நினைவுகள் பின்னோக்கி சென்றது.

குணசேகரனுக்கு பெற்றோர் இல்லை. அவருக்கு விவரம் தெரியும் முன்பே அவர்கள் இறந்துவிட ஓரளவு சொத்து இருந்ததால் உறவினர்களின் உதவியோடு விடுதியில் தங்கி படித்தார். படித்து முடிக்கவே சேமிப்பு பணம் பெருமளவில் குறைந்துவிட, வீடு மட்டுமே மிஞ்சியது.

அதன்பிறகு அரசாங்க வேலையில் சேர ஆர்வம் காட்டவே தபால்துறை அலுவலகத்தில் வேலையும் கிட்டியது. அவரது ஊரைச்சுற்றி இருந்த, ஐந்து ஊர்களுக்கும் பொதுவாக அவரது அஞ்சலகம் அமைந்திருக்க எழுத்துப் பணியில் இருந்தாலும் அவ்வபோது தபால்காரர் வேலையும் செய்ய வேண்டியிருக்கும்.

அப்படி ஒருநாள் வேறு ஊருக்கு செல்லும்போதுதான் மீனாட்சியை பார்த்தார் குணசேகரன். மீனாட்சி அப்போது பத்தாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தார். அவரும் தாய், தந்தையை சில வருடங்கள் முன்பு பறிகொடுத்துவிட்டு அத்தை ஒருவரின் வீட்டில் வளர்ந்து கொண்டிருந்தார்.

எழுத தெரியாத பாமர மக்களுக்கு கடிதம் எழுதி தந்து உதவி செய்வது மீனாட்சியின் பொழுதுபோக்கு. அப்படி ஏதோ சந்தேகம் கேட்பதில் இருவருக்கும் பழக்கமாகி நாளடைவில் அது விருப்பமாக வந்து நின்றது. மீனாட்சி பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்தவுடன் அவரை திருமணம் செய்ய பெண் கேட்டு வந்தார் குணாசேகரன்.

நல்லவராகவும், தெரிந்த பையனாகவும், வரதட்சணை போன்று எதுவும் கேட்காமல் இருக்க அவரது அத்தையும் சம்மதம் கூறி திருமணம் எளிமையாக நடந்தது. திருமணம் நடந்து ஒரு வருடத்திற்குள்ளே மகள் பிறந்துவிட, மகிழ்வதனி என பெயரிட்டு சீரோடு வளர்த்து வந்தனர்.

மீனாட்சியின் அத்தைக்கும் வேண்டிய பண உதவிகள் செய்து அவரையும் கவனித்துக் கொண்டார் குணசேகரன். இதற்கிடையில் பணி உயர்வுக்காக சில தேர்வுகளையும் எழுத, அதுவும் அவரைத் தேடி வந்தது. அவர்கள் ஊர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம்.

ஆனால் இப்போது மேல்மருவத்தூரில் பணி உயர்வு வழங்கப்பட்டிருக்க, சொந்த ஊரை விட்டு தனது மனைவி,  குழந்தையோடு வாடகை வீட்டிற்கு மாறினார். அடுத்த மூன்று வருடம் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்க்கை நந்தவனமாக செல்ல, மீனாட்சி மறுபடியும் கருவுற்றார்.

அதே நேரம் அவரது அத்தைக்கு உடல்நிலை குன்ற, கூடவே இருந்து பார்த்துக் கொள்ள ஒருவரை ஏற்பாடு செய்துவிட்டு மீண்டும் இங்கு வந்தார் குணசேகரன். அதே நேரம் அவருக்கு பணி மாறுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. இப்போது போஸ்டிங் சென்னையில்.

முதலில் தான் சென்று வீடு பார்த்து எல்லாம் சரி செய்துவிட்டு பின்னர் அவர்களை அழைத்துச் செல்வதாக கூறி, ஊருக்கு அழைத்துச் சென்றார். மீனாட்சியின் அத்தையையும் தனது வீட்டிலேயே வைத்து பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்தவர் சென்னைக்கு கிளம்பி விட்டார். சில மாதங்களிலே மனைவியையும் அழைத்தார்.

ஆனால் மீனாட்சியோ, “அத்தைக்கு ரொம்ப முடியலங்க. இப்பவோ அப்பவோன்னு இருக்கு. இந்த நேரத்தில யாருமே கூட இல்லனு நல்லாவா இருக்கும். நாங்க இங்கையே இருக்கோம். குழந்தை பொறந்ததுக்கு அப்பறமா அங்க போய்டலாம்” என கூறவும், குணசேகரனும் சரியென்று விட்டு விட்டார்.

ஆனால் மீனாட்சிக்கு ஏழு மாதங்கள் நடக்கும்போதே அவரது அத்தை தவறிவிட காரியங்களை முடித்துவிட்டு வேறு வழியின்றி காரில் இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்தார். மகிழது வாழ்வினை மொத்தமாக புரட்டிப் போட்ட பயணம் அதுதான்.

நீண்ட நாட்களுக்கு பிறகு தந்தையோடு இருப்பதால் மகிழ்வதனி அவரது மடியை விட்டு இறங்கவில்லை. கார் சென்னையை நெருங்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக எதிரில் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. விபத்து ஏற்படப்போவது தெரிந்ததும் குணசேகரன் மகிழை தூக்கி வெளியில் தள்ளிவிட்டார்.

அவர் தள்ளி விட்ட வேகத்தில் கீழே இருந்த கல்லில் மோதி அவள் மயக்கமடைய அதற்கு முன்பு கார் வெடிக்கும் சத்தம் தான் கேட்டது. அவளை தள்ளிவிட்ட மறுநொடியே மனைவியையும் காப்பாற்ற பார்க்க அதற்குள் லாரி நெருங்கியிருக்க, டிரைவர் காரை திருப்பி ஒரு மரத்தில் இடித்து விட்டார்.

இருவரும் வேகமாக இறங்க மோதிய வேகத்தில் செயலிழந்த கார் வெடித்து விட்டது. அந்த சத்தத்தில் மீனாட்சி மயங்கி விட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், அவர்களை ஒரு மருத்துவமனையில் சேர்க்க, மீனாட்சி ஏழு மாத கருவை தாங்கி இருந்ததில் அவரது உடல்நலம் வெகுவாக பாதிக்கப்பட்டு இருந்தது.

இருந்தாலும் மனது கேட்காமல் அவரை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு விபத்து நடந்த இடத்தில் வந்து தனது குழந்தையை தேடினார் குணசேகரன். இவர்களுக்கு விபத்து நடந்த இடத்திற்கும் மகிழ் தள்ளப்பட்ட இடத்திற்கும் அரை கிலோமீட்டர் அளவில் தொலைவு இருக்க, யாருக்கும் பெரிதாக தெரியவில்லை.

தேடிப்பார்த்ததில் எந்த விவரமும் கிடைக்காமல் போக, அளவில்லாத வேதனையோடு மருத்துவமனைக்கு வந்தார். அங்கோ மீனாட்சி கண் முழித்து இருந்தாலும் மகளை காணவில்லை என்ற சோகத்தில் அவரது உடல்நலம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே சென்றது.

 

வேறு வழியின்றி தன்னை தேற்றிக் கொண்ட குணசேகரன், மீனாட்சியையும் சரி செய்ய போராடியதில் மகிழை பற்றி யோசிக்க முடியவில்லை. உண்மையில் மகிழ் கீழே விழுந்தபோது அதே சாலையில் வந்து கொண்டிருந்த மற்றொரு காரில் இருந்தவர்கள் தான் மகிழை கவனித்தனர்.

தலையில் அடிபட்டதில் இரத்தம் வெளியேறிக் கொண்டிருக்க, முதலில் மருத்துவமனைக்கு செல்லலாம் பிறகு விசாரித்துக் கொள்ளலாம் என அவளை அள்ளிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.

அங்கு மாலைக்குள் அவளது உயிருக்கு ஆபத்து எதுவுமில்லை என தெரியவர, முக்கிய வேலையாக சென்றுக் கொண்டிருந்த அவர்கள் குழந்தை கண் முழித்ததும் உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு கூறிவிட்டு கிளம்பி விட்டனர். ஆனால் கண்முழித்த மகிழுக்கு நினைவு தப்பிவிட்டது.

யாரென்று தெரியாமல் மற்றவர்கள் கேட்க, மகிழுக்கும் அதே நிலைதான். ஒரு வாரம் சென்றும் உடல்நிலை முழுதாக குணமாகியும் நினைவு வராமல் இருக்க, அந்த மருத்துவமனைக்கு தொடர்ந்து வரும் ஒரு சமூக செயற்பாட்டாளர் அவளை தன்னோடு அழைத்துச் சென்று ஒரு ஆசிரமத்தில் சேர்த்து விட்டார்.

நடுநடுவே கனவில் அவள் விபத்தை பற்றி உளர ஆரம்பிக்க, அந்த ஆசிரம நிர்வாகி இவளது பெற்றோர் கண் முன்னே இறந்திருக்க வேண்டும் அதனால்தான் நினைவு தப்பியிருக்கும் என முடிவு செய்து அவளுக்கு ஒரு மாதம் கடந்து நினைவு வந்தபோது அவளிடம் அதைப்பற்றி கேட்டார்.

அவளுக்கும் தனது பெயர், தாய், தந்தை, விபத்து என ஒரு சில நினைவுகளே இருக்க, “அப்ப அப்பாம்மா. அந்த விபத்துல இறந்துட்டாங்களா, யார் என்ன இங்க சேர்த்தாங்க?” என மகிழ் கேட்க, “உன்னோட சொந்தக்காரங்கதான். அப்பப்ப பார்க்க வருவாங்க.” என அந்த நிர்வாகி கூறவும் அப்படிதான் என மகிழும் நினைத்துக் கொண்டாள்.

குணசேகரனும் அதன்பிறகும் சில வருடங்கள் தேடினாலும் எந்த விவரமும் கிடைக்கவில்லை. மனதின் சோகங்களை இரண்டாவது மகளிடம் மறைத்த இருவரும் அவள் மீதான பாசத்திலும், அவளது சேட்டைகளிலும் தங்களை மீட்டெடுத்தனர். முதல் மகளின் நினைவாக மகிழிசை என பெயரும் வைத்தனர் மகிக்கு.

நடந்த அனைத்தையும் கேட்ட அனைவருக்கும் கண்ணீர் ஊற்றெடுத்தது. ‘இப்படியும் நடக்குமா? இத்தனை வருடங்களாக எவ்வளவு பிரச்சனைகளை தாண்டி இருப்பாள் தனது மகள்’ என்று மீனாட்சிக்கு கண்ணீரே நிற்கவில்லை. மகிழுக்கும் அப்படியே. “அப்படின்னா. மகி உன்னோட ஓன் சிஸ்டரா?” என்றாள் அகல்யா.

“மகியா.” என மகிழ் அவளை பார்க்க, மற்றவர்களும் அப்போதுதான் மகி அங்கு இல்லாததை கவனித்தனர். கவின் வெளியே பார்க்க, சுவற்றில் சாய்ந்து நின்று அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த மகி, கவினைக் கண்டதும், “சாரிப்பா. சாரிம்மா.” என ஓடிவந்து கட்டிக் கொண்டாள்.

அதைக்கண்ட சந்துருவின் இதழ்களில் புன்னகை பூத்தது. சற்று முன்னர், மகி புல்வெளியில் அமரவும், தானும் சென்று அருகில் அமர்ந்த சந்துரு, “இப்ப நீ ஏன் இங்க உட்கார்ந்து அழுதுட்டு இருக்க..?” எனக் கேட்க.. அவள் கூறிய பதிலில் திகைத்தான்.

“உள்ள பார்த்தீங்கள்ள சார். மகிழ் அக்காவோட பெத்தவங்கதான் அப்பாம்மா. அப்ப எனக்கு அவங்க பேரண்ட்ஸ இல்லதானே.” என்றாள் அவள். சந்துரு, “நீ என்ன சொல்லவர புரியல.” என்க, மகி, “நீங்க கதையில்லாம் படிச்சதுல்ல. அக்கா இறந்துட்டான்னு நினைச்சு என்ன எடுத்து வளர்த்திருக்காங்க. அதான் அவங்க நியாபகமா ஒரே மாதிரி பேர் வைச்சி இருக்காங்க.” என்றதில் சந்துருவிற்கு சிரிப்பே வந்துவிட்டது.

“அப்படின்னு அவங்க சொன்னாங்களா? சரி வா கேட்கலாம்” என அழைத்தான் சந்துரு. மகி, “நான் வரல.” என்றதும், “எப்படியும் உள்ள ஒரு பிளாஷ்பேக் சீன் தான் ஓடிட்டு இருக்கும். கேட்டுட்டு முடிவு பண்ணிக்கலாம்.” என சந்துரு அழைத்து வர, அவளோ வெளியிலே நின்று விட்டாள்.

தான் அவர்களது பெண்தான் என தெரிந்ததில் இப்போது கட்டிக்கொள்வதை பாரு என நினைத்து சந்துரு புன்னகைத்தான். மகி, “ஏன் இவ்ளோ நாள் எனக்கு ஒரு அக்கா இருக்காங்கன்னு மறைச்சிட்டீங்க.” என உரிமையாக கோபப்பட்டவள், “அக்கா.” என அழைத்து மகிழை கட்டிக் கொள்ள மகிழும் அவளை அணைத்துக் கொண்டாள்.

மகி, “அப்பா அதான் உங்க ஆசைப் பொண்ணு மகி வந்தாச்சுல்ல. இனிமேல் என்ன இசைன்னே கூப்பிடுங்க.” எனவும், “சரிமா இசை போதுமா.” என்றார் குணசேகரன். மகி, “எவ்ளோ வேகமாக ஓகே சொல்றீங்க?” என்க, அங்கே ஒரு சிரிப்பலை எழுந்தது.

“சரி மகி கிளம்பலாமா? இசை அக்கா வீட்டுக்கு போய் திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு சென்னை கிளம்பலாம்” என குணசேகரன் கூற, “அப்படியெல்லாம் உடனே கிளம்ப முடியாது. மகிழ் என் ஆபிஸ்ல வொர்க் பண்ணிட்டு இருக்கா” என சித்து கூறியதில் அனைவரும் அதிர்ந்து அவனை பார்த்தனர்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *