Loading

             சித்து தனது அறையில் ஏதோ யோசனையில் இருக்க அங்கு இருந்த தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த எண்ணை தான் அனைவருக்கும் பகிர்ந்து இருந்தான். யாராக இருக்கும் என்ற யோசனையோடு எடுத்தால் மறுமுனையில் கவின் பேசினான் இல்லை அழுதான்.

“என்னாச்சுடா ஏதாவது பிரச்சனையா?” என சித்து கேட்க, “அப்பாம்மா. அம்மா.” என்று தயங்க, பிறகு அதட்டி கேட்டதில் விபத்தில் இருவரும் தவறி விட்டதாக கூறினான். ஒரு கணம் சித்துவுக்கே தலை சுற்றிவிட்டது. “என்னடா சொல்ற?” என்றவன், “சரி நான் உடனே வரேன். சரியா. பத்திரம்.” என்றவாறே ஃபோனை வைத்தான்.

உடனே தனது தந்தைக்கு அழைத்து செய்யவேண்டியதை கூற அடுத்த விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தான். அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் கோவைக்கு செல்ல அவனது தந்தை இருவரது உடல்களையும் வாங்க ஏற்பாடுகளை செய்திருந்தார்.

இவன் சென்ற போது இறுதி காரியங்கள் நடந்து கொண்டிருக்க ஓடிச்சென்று தனது நண்பனை கட்டிக் கொண்டான் சித்து. அதன்பிறகு ஒரு நொடியும் அவனை விட்டு விலகவில்லை. இறுதிச்சடங்குகள் முடிந்ததும் சித்துவின் தந்தை கிளம்பிவிட அதன் பிறகே என்ன நடந்தது என விசாரித்தான்.

கவின், “எப்பவும் போலதான் நேத்தும் அப்பா ஆபிஸ் கிளம்பினாரு. அம்மா நானும் கோவிலுக்கு போகனும் போற வழியில இறக்கி விடுங்கன்னு கூட போனாங்க. அப்பக்கூட நான் சொன்னேன். நானும் இப்ப கிளம்பிடுவேன்மா. நான் உங்களை டிராப் பண்றேனு.

அதுக்கு அவங்க ஏன்டா என் வீட்டுக்காரரையும் என்னையும் பிரிக்கற. நாங்க ஒன்னா ஜாலியா போவோம். நீயும் வேண்ணா சீக்கிரமா ஒரு பொண்ணை பார்த்து அவளை கூட்டிட்டு போன்னு விளையாட்டா சொல்லிட்டு போனாங்க. ஆனா இப்படி ஆகும்னு நினைக்கலயே. பேசாம நானும் அவங்களோடவே போயிருக்கலாம்.” என்றவனை இழுத்து அணைத்துக் கொண்டான் சித்து.

“அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுடா. அம்மாவும், அப்பாவும் எப்பவும் நம்பக்கூடதான் இருப்பாங்க. நீ இப்படி கஷ்டப்பட்டா அவங்களுக்கும் கஷ்டமாதானே இருக்கும்.” என ஏதேதோ பேசி அவனை அமைதிப்படுத்தினான் சித்து.

கவினின் தந்தை பணிபுரிந்த நிறுவனத்திடம் இருந்து கிடைத்த செட்டில்மெண்ட் பணத்தை அவனது வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்துவிட்டு, வீட்டையும் உறவினர் ஒருவரிடம் ஒத்திக்கு கொடுத்துவிட்டு கையோடு கவினை அழைத்துக் கொண்டே சென்னை வந்தான் சித்து.

அதற்குள் ஓரளவு நிதானத்திற்கு வந்திருந்த கவின் சித்துவின் படிப்பை பற்றி விசாரிக்க, “உன்னை தனியா விட்டுட்டு எப்படி போக முடியும். பேசாம டிஸ்கண்ட்னியூ பண்ணிடலாம்னு நினைக்கறேன்” என இலகுவாக கூற அதிர்ந்தான் கவின்.

அடுத்த நாளே ஒரு தொழில்நுட்ப கல்லூரியில் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்தவன், வேலை கிடைத்ததும் சித்துவிடம் வந்து, “கொஞ்ச நாளைக்கு ஆபிஸ் பிரஷர்லாம் தாங்க முடியும்னு தோணலடா. அதான் டிப்ளமோக்கு லெட்சரர் வேலைக்கு அப்ளை பண்ணேன். கிடைச்சிருச்சு. நான் பார்த்துக்கறேன். நீ உன் படிப்பை முடிச்சிட்டு வா.” என வற்புறுத்தி அனுப்பி வைத்தான்.

கவின் வேலைக்கு சேர்ந்த அதே கல்லூரி வளாகத்தில் இருந்த மற்றொரு கல்லூரியால் தனது இளங்கலை படிப்பை பயின்று கொண்டிருந்தாள் சிந்து. கவினை ஏற்கனவே தெரியும் என்பதாலும் தற்போதய அவனது சூழல் காரணமாகவும் அவனை பார்த்துக் கொள்ளும்படி தனது தங்கையிடமும் கூறியிருந்தான் சித்து.

அவளுக்கும் கவினுக்கு இப்படி நேர்ந்தது வருத்தமாக இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் தனது ஓய்வு நேரங்களில் எல்லாம் அவனோடே செலவு செய்தாள் சிந்து. இருவருக்குமிடையில் ஒரு ஆழமான நட்பும் உருவானது. அவ்வபோது கவினை வீட்டிற்கும் அழைத்து வருவாள். சித்துவின் தந்தையும் அவன்மீது பாசமாக இருக்க சிந்துவின் தாயும் எதுவும் கூறவில்லை.

மீண்டும் வெளிநாடு சென்று தனது படிப்பை தொடர்ந்த சித்துவுக்கு நிரஞ்சனி பெரும்பாலும் உதவியாகவே இருந்தாள். அது கடைசி வருடம் என்பதால் அவரவர்க்கு பிடித்த துறையை தேர்வு செய்யுமாறு கல்லூரி நிர்வாகம் கூறியிருக்க, சித்து நிரஞ்சனியிடம் “என்ன டிபார்ட்மெண்ட் எடுக்க போற?” எனக் கேட்டான்.

“நான் ஹேக்கிங். எனக்கு ரொம்ப பிடிச்ச பீல்ட் அது. இன்னைக்கு ரேஞ்ச்க்கு ஒரு ஹேக்கர்க்கு இருக்கற பவரே வேற.” என்றவள், “ஆமா நீ என்ன சூஸ் பண்ணியிருக்க?” எனக் கேட்டாள் நிரஞ்சனி. “நான் நெட்வொர்க்கிங், கிளவுட் கம்ப்யூட்டிங் ப்யூச்சர்ல நல்ல வேல்யூ இருக்கும்ல என்னோட பிஸினஸ்க்கும் யூஸ் ஆகும்” என்றான் சித்து.

நிரஞ்சனி நல்ல தோழி என்றாலும் இருவருக்குமிடையில் சில கருத்து வேறுபாடுகளும் இருந்தன. சித்து அனைவரின் கருத்துக்களையும் மதிப்பான். பொதுவாகவே நிறைய அன்பு காட்டுபவன், உதவிகளும் செய்வான். ஆனால் நிரஞ்சனி, தனக்கு மிஞ்சிதான் தானமும், தர்மமும் என்ற ரகம்.

ஆனால் இருவருமே படிப்பில் படுசுட்டி. சித்துவின் பல சந்தேகங்களை மிக எளிதாக தீர்த்து வைக்கும் அளவு அவளுக்கு படிப்பின் மீதான ஆர்வம் இருந்தது. அந்த ஒரு குணமே சித்துவை அவளோடு பழக வைத்தது. இப்படியாக இருவரும் படித்து முடித்து நல்ல மதிப்பெண்களோடு பட்டமும் பெற்றனர்.

அதற்காக பேர்வெல் பார்ட்டி ஒரு பெரிய ஹோட்டலில் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க அதற்கு இருவரும் சென்றிருந்தனர். அங்கு உணவும், மது வகைகள் என அனைத்துமே இடம் பெற்றிருக்க, சித்து வழக்கம்போல மதுவை தவிர்த்து உணவை உண்டு கொண்டிருந்தான்.

சித்து அன்று கூறியதில் இருந்து நிரஞ்சனியும் அதன்பிறகு மதுவை எடுத்துக் கொள்வதில்லை. ஓரளவு நண்பர்கள் அனைவரும் கிளம்பிவிட திடீரென அந்த ஹாலின் விளக்குகள் அனைத்தும் அணைந்தது. சித்து என்னவென்று பார்க்க, வாசல்புறம் விளக்கு ஒளிர்ந்தது.

மெதுவாக ஒவ்வொரு விளக்காக ஒளிபெற்று வர அதனூடே நடந்து வந்தாள் நிரஞ்சனி கையில் ஒரு பூங்கொத்துடன். சித்து அதிர்ச்சியாக அவளை பார்த்துக் கொண்டிருக்க அவளோ அழகாக நடந்துவந்து அந்த பூங்கொத்தை அவனிடம் நீட்டினாள்.

அப்போது அனைத்து விளக்குகளும் ஒளிர அவர்களை தவிர யாருமே அங்கு இல்லை. சித்து எதுவும் பேசாமல் அவளை பார்த்தானே தவிர பூங்கொத்தை கையில் வாங்கவில்லை. “என்ன சித்து அப்படி பார்க்கிற. ஆச்சர்யமா இருக்கா. எல்லாம் உனக்காக நான் செய்த ஏற்பாடுதான். ஐ லவ் யூ சோ மச். ஐ ரியலி லைக் யூ மேன்” என்றாள் நிரஞ்சனி.

அப்போதுதான் ஒரு தவறை செய்தான் சித்து. அவளிடம் இருந்து பூங்கொத்தை வாங்கியவன் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தான். “ஹேய். நீ இப்படியெல்லாம் பண்ணா நான் உடனே நீ சொன்னதையெல்லாம் உண்மைன்னு நம்பி கோபப்படுவேனு தானே நினைச்ச. ஆனா நான் கண்டுபிடிச்சுட்டேனே.

இது உனக்கு செட்டே ஆகல. நீ போய் என்ன லவ் பண்றீயா. காமெடி பண்ணாம கிளம்பி வா. காலைல நேரமா கிளம்பனும்ல. உன்ன டிராப் பண்ணிட்டு நான் ரும்க்கு போறேன்.” என்றவன் வேகமாக அங்கிருந்து வெளியில் செல்ல நிரஞ்சனியோ விக்கித்து நின்றாள்.

சித்து கூறிக் கொண்டிருக்க மகிழ், “ஸ்டாப் இட்” என்று கத்தவும் இன்றைய நினைவிற்கு வந்தான் சித்து. அவளை புரியாமல் பார்க்க, “எதுக்கு இப்படி பண்ணீங்க அபி. ஒரு பொண்ணு உங்கள லவ் பண்றதா சொன்னா இப்படிதான் இன்செல்ட் பண்ணுவீங்களா. எப்படி அவ விளையாடறான்னு முடிவு பண்ணீங்க?” எனக் கேட்டாள் மகிழ்.

“என்ன மகிழ் சொல்ற. அவ அப்ப என்னோட பெஸ்ட் ஃப்ரண்டா இருந்தா. ஒருநாள் கூட அந்த மாதிரி எண்ணம் எனக்கு வந்ததே இல்ல. அவளும் என்கிட்ட அதுபோல நடந்துகிட்டதும் இல்ல. அடுத்தநாள் நாங்க இந்தியா வரப்போறோம். அப்ப எப்படி நான் அதை உண்மைனு நம்ப முடியும்” என அவளுக்கு விளக்கம் கொடுத்தான் சித்து.

“ஓ. ஓகே. அப்ப அன்னைக்கு என்கிட்ட புரப்போஸ் பண்ணீங்களே அதையும் நான் விளையாட்டா பண்ணீங்கன்னு நினைச்சுக்கலாம்தானே. ஏன்னா உங்களுக்கும் எனக்கும் ரொம்ப நாள் பழக்கம்லாம் இல்ல. இங்க பார்த்ததுல இருந்து ஒரு ஃப்ரண்ட்லியா தான் நடந்துகிட்டீங்க. சோ அதுவும் பொய்யா இருக்கலாம்ல.” என்றாள் மகிழ்.

“ஹேய். எதோட எதை கம்பேர் பண்ற. நான் ஃப்ரண்ட்லியா பழகினேன்னு நீ நினைச்சுகிட்டா நான் என்ன பண்றது. நான் இப்ப இல்ல இரண்டு வருஷமா உன்ன லவ் பண்ணிகிட்டு இருக்கேன்.” என்று சித்து கூறவும் இருவரும் அதில் அதிர்ந்து போய் அவனை பார்த்தனர்.

            சென்னையில் மகி சென்ற பேருந்தை விபத்தில் காட்டியதும் கலங்கி போன மகியின் பெற்றோர் அவளை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயல அதுவோ தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது. “எதுக்கும் நாம நேர்ல போய் பார்க்கலாங்க.” என மீனாட்சி கூறவும் குணசேகரனுக்கும் அதுவே சரியெனப்பட்டது.

வேகமாக கிளம்பினாலும் ஓசூர் வரவே நள்ளிரவு ஆகிவிட, காலையில் தான் விசாரிக்க முடியும் என இருவரும் காத்துக்கிடந்தனர். அப்போது அங்கு ஒரு காவல் அதிகாரி வந்து இவர்களை விசாரிக்க, இவர்களும் விவரம் கூறியதோடு விபத்தை பற்றி விசாரித்தனர்.

அவரோ, “ஓ அந்த கேஸா. அதுல யாருக்கும் எதுவும் ஆகலயே. பஸ் டிரைவர் மட்டும் ஆக்ஸிடண்ட் ஆகப்போகுதுனு தெரிஞ்சு கீழ குதிச்சதுல கொஞ்சம் அடி அவ்ளோதான்.” என்றதும்.. “கடவுளே. நன்றி. அப்ப பஸ்ல இருந்த மத்தவங்களுக்கு எதுவும் ஆகல இல்ல.” எனக் கேட்டார் குணசேகரன்.

“பஸ்ல வேற யாருமே இல்லையே சார். எதிர்ல வந்த லாரிலயும் டிரைவர் மட்டும்தான். அதுகூட ஓசூர்ல இருந்து ரிடர்ன் சென்னை போகும்போது சர்வீஸ் ரோட்ல இறங்கவும்தான் ஆக்ஸிடென்டே.” என அவர் விபத்தை பற்றி பேச இவர்களுக்கோ ஒன்றும் புரியவில்லை.

“இல்ல சார். அது சென்னைல இருந்து பெங்களூர் போன பஸ்தானே.” என யோசிக்க அதற்குள் வேறு ஒரு அதிகாரி அழைக்கவும் அவர் சென்றுவிட்டார். “என்னங்க. நாம தப்பா புரிஞ்சுகிட்டமா. அப்ப மகிக்கு எதுவும் இல்லதான் போல. ஆனா அவ ஃபோன் ஏன் எடுக்கல?” எனக் கேட்டார் மீனாட்சி.

“எனக்கும் புரியல மீனா. அந்த கல்யாண பத்திரிக்கை எதுவும் இருக்கா. ஸ்டேட் மாறினதுல டவர் ஏதாவது பிரச்சனை ஆகியிருக்கும். நாம மண்டபத்துக்கே போய் பார்த்துடலாமா?” என அவர் கேட்க, “ஆமாங்க. எதுக்கும் மகியை பார்த்துட்டா மனசுக்கு கொஞ்சம் நல்லா இருக்கும். கிளம்பற வேகத்துல அவ விட்டுட்டு போன பத்திரிக்கையை எதுக்கும் இருக்கட்டும்னு எடுத்துட்டு வந்தேன்.” எனக் கொடுத்தார் மீனாட்சி.

அதே நேரம் ஹோட்டலில் இருந்த மகி நூறாவது தடவையாக ஃபோனை ஆப் செய்து ஆன் செய்து கொண்டிருந்தாள். அவளுடன் அறையை பகிர்ந்து கொண்டிருந்த மற்றொருவள் தூக்கத்தில் இருந்து விழித்து, “ஹேய். நீ இன்னும் தூங்கலயா?” எனக் கேட்க, “என் ஃபோன்ல ஏதோ பிராப்ளம் டவரே கிடைக்க மாட்டேங்குது” என்றாள் மகி.

“ஏதாவது சிக்னல் பிராப்ளமா இருக்கும். சரி இன்னேரத்துக்கு யாருக்கு கால் பண்ண போற. மணி ஒன்னாகுது. காலைல பேசிக்கலாம் படு. காலைல சீக்கிரம் எழனும்ல.” எனவும்தான் மணியை பார்த்துவிட்டு உறங்க சென்றாள் மகி.

மறுநாள் காலையில் நேரமாக எழுந்து கிளம்பும்போதும் டவர் இல்லாமல் இருக்க அவளது அறைத்தோழியின் மொபைலை வாங்கி தனது தந்தைக்கு அழைப்பு விடுக்க அதுவோ அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அப்போது மகியின் ஃபோனை பார்த்த அவளது தோழி, “இப்ப டவர் வரும் பாரு. ஃபோன்க்கு ரோமிங் ஆப்ஷன் குடுக்கலயா?” என்றாள்.

மகியோ, “ஆமாப்பா நான் இதுவரை அதர் ஸ்டேட்லாம் வந்தது இல்லயா? அதான் சுத்தமா மறந்தே போயிட்டேன். அப்பாகிட்ட பேச முடியலனு டென்ஷன்ல எதையும் கவனிக்கல. ஆனா இப்ப அவங்க ஃபோன் சுவிட்ச் ஆப்ல இருக்கு. நேரமே சரியில்ல.” என்றபடியே கிளம்பி வெளியில் வந்தாள்.

நேற்று வரும்வழியில் ஓசூர் அருகே நடந்த ஒரு பிரச்சனையில் வரும்போதே இரவாகிவிட, காலையில் திருமணத்திற்கு சென்றுவிடலாம் என நினைத்து நேராக ஹோட்டலுக்கே வந்துவிட்டனர். அதனால் அதிகாலையிலே எழுந்து தயாராகி ஐந்து மணிக்கு தனது அறையை திறந்து கொண்டு வெளியில் வர எதிர் அறையில் இருந்து சந்துருவும் வந்தான்.

முதன்முறையாக அவளை புடவையில் பார்த்தவனின் மனம் ஏனோ அலைபாய, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு “ஹாய் மகி. கிளம்பியாச்சா?” எனக் கேட்க, “ஆச்சு சார்.” எனும்போதே ஆகாஷூம் வெளியே வர, “இங்க இருந்து நடந்து போற தூரம்தான். ஒன்னும் பிரச்சனை இல்லையே.” என்றான் சந்துரு.

“எனக்கு பிரச்சனை இல்ல. ஆனா இந்த புடவை தான் அதுவரைக்கும் பிரச்சனை பண்ணாம இருக்குமான்னு தெரியல.” என முணுமுணுத்தவள், “நோ பிராப்ளம் சார்.” என சிரித்தாள். பிறகு மற்றவர்களும் கிளம்பி வர இவர்கள் மூவரும் முன்னே நடந்தனர். ஆகாஷ் ரிசப்ஷனில் ஏதோ கேட்க போக இப்போது சந்துருவும், மகியும் இணையாக நடந்தனர்.

ஒரு சிறிய சாலையில் புகுந்து நடக்க வழியில் ஒரு பாட்டி பூ விற்றுக் கொண்டு வந்தார். அவர் வாங்கிக் கொள்ளுமாறு கூற, அவனோ மகியிடம் கேட்டான். “நானே கேட்கனும்னு நினைச்சேன். நீங்களே வாங்கி குடுத்துட்டீங்க.” என மகி கூறவும், “எவ்ளோ வேணும்னாலும் வாங்கிக்கோ” என்றவனின் மனம் சிறகில்லாமல் பறந்தது.

அதற்குள் பின்னால் வந்த ஆகாஷ் எதையோ கேட்க அவனிடம் சென்றவன் மீண்டும் அவளருகில் வந்தபோது அந்த பாட்டியின் கூடை காலியாக இருக்க, பாட்டி அறுநூறு ரூபாய் கேட்கவும் அதைக்  கொடுத்தவன், மகியை பார்க்க, அவளோ அதனை துண்டுகளாக்கி இருந்த பெண்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்துக் கொண்டிருக்க, “அடிப்பாவி அசால்டா அறுநூறு ரூபாய் செலவு வச்சிட்டியே” என சந்துருதான் புலம்ப வேண்டியதாயிற்று.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்