Loading

              “என்ன சித்து யோசிச்சிட்டு இருக்க?” என கவின் கேட்கவும், தனது யோசனையை கைவிட்டவன், “ம்ம். நீ போய் உன்னோட லேப்டாப் எடுத்துட்டு வா.” என உத்தரவிட்டான் சித்து. கவின் எடுத்துக் கொண்டு வந்ததும் அமர்ந்து மற்ற கம்பெனிகளுக்கு மெயில் அனுப்பியதோடு கவினின் எண்ணில் இருந்து சில அழைப்புகளையும் விடுத்தான்.

அப்போது, “என்ன சார். ஏதாவது ஹெல்ப் வேணுமா?” என சித்துவை கேட்டபடி உள்ளே வந்த நிரஞ்சனியை அங்கு எதிர்பார்க்கவில்லை மற்ற இருவரும். “நீ படிச்ச அதே காலேஜ்ல தான் நானும் படிச்சேனு நீ மறந்திருக்க மாட்டனு நினைக்கறேன்.” என்றான் சித்து. அவளோ, “ஆனா நீ எல்லாத்தையும் மறந்துட்டியே?” என்றாள்.

“சீ வெளில போ. எதுக்காக இதெல்லாம் பண்ற? இப்படில்லாம் பண்ணா என் கம்பெனியை மூடிடலாம்னு நினைச்சியோ?” என சித்து கேட்க, கவின் இடைமறித்து, “இங்க என்னடா நடக்குது. கொஞ்சம் புரியற மாதிரி பேசுங்க.” என்றான். “இவதாண்டா என்னோட மெயிலையும், லேப்பையும் ஹேக் பண்ணி இந்த வேலையெல்லாம் பண்ணியிருக்கா.” என்றான் சித்து எரிச்சலாக.

கவின், “நீ அடங்கவே மாட்டியா. இப்படியெல்லாம் தொல்லை குடுத்தா அவனுக்கு இன்னும் உன்மேல கோபம் தானே வரும்.” என்க, “ஹேய். நீ என்ன அவகிட்ட பேசிட்டு இருக்க. போய் அந்த டாக்குமெண்ட் ஃபைலை எடுத்துட்டு வா.” என்றான் சித்து. அப்போதுதான் அங்கு நின்றிருந்த மகிழை கவனித்தாள் நிரஞ்சனி.

“நீ இங்க என்ன பண்ற? உனக்கும் இங்கையே வேலை போட்டு குடுத்துட்டானா. அன்னைக்கு அவ்ளோ சொல்லியும் இன்னும் நீ அவனை விட்டுட்டு போகலயா. காசு இருந்தா போதும்னு கூடவே ஒட்டிட்டு இருக்க அப்படிதானே.” என்றாள் கோபமாக. அதைக் கண்டு சித்துவுக்கு கோபம் வந்தது.

அவனை கண்களாலே தடுத்த மகிழ், “அதான் நீயே சொல்லிட்டியே.. அப்படிதான். இப்ப என்ன பண்ணுவ.” என்றாள். “என்ன. அவனுக்கும் எனக்கும் நிச்சயம் ஆகியிருக்கு.” என நிரஞ்சனி ஆரம்பிக்க, “அம்மி மிதிச்சு, அருந்ததி பார்த்து, எல்லாரையும் சாட்சியா வைச்சு, சட்டப்படி ரிஜிஸ்டர் பண்ணி பண்ற கல்யாணத்தையே ஒரு வருஷத்துல கோர்ட்ல செல்லாதுனு சொல்லிடுறாங்க.

நீ பண்ண நிச்சயத்தை கேன்சல் பண்ண அபியோட ஒரு வார்த்தேயே போதும். இதுக்கு மேலயும் இங்க ஏதாவது நின்னு பேசிட்டு இருந்த அப்பறம் நடக்கறதே வேற.” என அவளை மிரட்டிய மகிழ், “கிளம்பு முதல்ல இங்கிருந்து.” என விரட்டவும் வேறு வழியின்றி அங்கிருந்து கிளம்பினாள்.

அவள் சென்றதும் மகிழ் பேசியதில் அந்த பரபரப்பிலும் மனம் மகிழ்ந்தவன் எழுந்து அவளது அருகில் வர, “உங்களுக்கு வேற தனியா சொல்லனுமா? வேலையை முடிச்சிட்டு கால் பண்ணுங்க. வரேன்.” என்றவாறே சென்றுவிட சிரிப்போடு அவளை பார்த்திருந்தான் சித்து. பிறகு கவின் வந்து ஃபைலை குடுக்க வேலையில் ஆழ்ந்தான்.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அனைத்து கம்பெனிகளிலும் பேசி பிரச்சனையை சரி செய்து முடிக்க மதியம் ஆகிவிட்டது. பிறகு மதிய உணவை எடுத்துக் கொண்டபின் தனது மடிக்கணிணியை இயக்கினான். அப்போது கவின், “அவதான் பண்ணியிருப்பானு எப்படி கண்டுபிடிச்சடா?” எனக் கேட்டான்.

“டேய். அவ யார்னு தெரியும்ல. நாங்க படிக்கும்போது யுனிவர்சிட்டில அவளும் டாப்பர். ஹேக்கிங் அவளுக்கு கைவந்த கலை. இன்னிக்கு ஒரு பிராஜக்ட் எடுத்தாலும் கண்டிப்பா அதுல சக்ஸஸ் பண்ண முடியும். இன்னும் எதையும் மறக்கலன்னு காட்டதான் இப்படி பண்ணியிருக்கா.” என்றான் சித்து.

“இருந்துட்டு போகட்டும். அதுக்கு ஏன் உன் கம்பெனில கை வைக்கிறா?” என புரியாமல் கேட்டான். வேலை முடிந்ததும் மகிழ்க்கும் கூறியிருக்க.. அவளும் அங்கு வந்தாள். இருவருக்கும் சேர்த்து அவனுக்கும், நிரஞ்சனிக்குமான உறவை பற்றி கூற ஆரம்பித்தான் சித்து.

சிறுவயதிலேயே தாயை இழந்து நின்ற சித்துவுக்கு அதன்பிறகு தனிமையே துணை ஆகிப்போனது. அவன் தாயின் நினைவுகளில் இருந்து தப்பவோ, இல்லை சித்துவை தனியாக விடமுடியாது என நினைத்தோ அவன் தந்தை இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ள இன்னும் தனக்குள் முடங்கினான்.

அவனது சித்தியும் இவன் மீது அதிக அன்பு காட்ட ஏனோ சித்துவால் அவர்களிடம் ஒன்ற முடியாமல் போனது. அப்போது அவனது பள்ளியில் அறிமுகம் ஆனவள்தான் நிரஞ்சனி. யாரிடமும் ஒட்டாத சித்து நிரஞ்சனியிடம் மட்டும் பிரியமாக இருப்பான். இருவருக்கும் இடையே ஒரு அழகான நட்பும் மலர்ந்திருந்தது.

நிரஞ்சனி அவனது தந்தையின் நண்பரின் மகள் என்பதால் அது குடும்ப நட்பாகவும் மாறியது. இருவரும் பெரும்பாலும் ஏதோ ஒரு வீட்டில் ஒன்றாகவே இருப்பர். அவன் சாதாரணமாக இருப்பதால் அவனது தந்தையும் நிம்மதியாக தொழிலையும், குடும்பத்தையும் கவனிக்க ஆரம்பித்தார்.

ஆனால் சித்து அவர்களிடம் இருந்து விலகியே தான் இருந்தான். இருவரும் ஒரே வகுப்பாக இருந்தாலும் நிரஞ்சனியிடம் பழகும்போது கூட ஒரு அழுத்தமாகவே பழகுவான். பள்ளிப்பருவம் முடியும் வரை இந்த அழகான நட்பு தொடர்ந்தது. அதன்பிறகு சித்து பொறியியல் படிப்பை படிக்க சென்னையின் ஒரு பிரபல கல்லூரியை தேர்ந்தெடுத்தான்.

ஆனால் நிரஞ்சனியோ தனது படிப்பை வெளிநாட்டில் படிக்க ஆசைப்பட.. அவளது தந்தையும் அனுப்பி வைத்தார். சொல்லப்போனால் அவளுக்கு சித்துவையும் உடன் அழைத்து செல்லவே விருப்பம். ஆனால் சித்துவோ ஓரளவு நன்கு விவரம் தெரிந்தவுடனே தந்தையை புரிந்து கொண்டதோடு அவரோடு நேரம் செலவிடவும் விரும்பியதால் இங்கேயே படிப்பதாக கூறி விட்டான்.

சித்தியும் நல்லவராக தெரிய ஓரளவு எல்லோருடனும் இணக்கமாகவே பழக ஆரம்பித்தான். அவரது குழந்தைகள் தான் சந்துருவும், சிந்துவும். இருவருக்கும் சித்துவின் மீது கொள்ளைப்பிரியம். சித்துவுக்கும் அவர்களை பிடித்திருந்தது. அதை அவன் சித்தியும் தடுக்காததால் அவர்களுக்கிடையே ஒரு நல்ல உறவு இருந்தது.

கல்லூரியில் அவனுக்கு கிடைத்த தோழன்தான் கவின். கவின் கோவையை சேர்ந்தவன். வீட்டிற்கு ஒரே மகனான அவனை படிக்க அனுப்பிவிட்டு அவனது பெற்றோர் கோவையில் இருந்தனர். சித்து அளவு இல்லாவிடிலும் அவனும் வசதியான வீட்டு பையன்தான். இருவரும் ஒரே வகுப்பாக இருக்க, முதல்நாள் ஆரம்பித்த நட்பு நாளடைவில் வளர்ந்து இன்றுவரை தொடர்கிறது.

கல்லூரி படிக்கும்போது தான் சித்துவுக்கு சொந்தமாக ஒரு மென்பொருள் நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் வேரூன்றியது. அப்போதுதான் இளநிலை பட்டம் பெற்றதும் மேற்படிப்புக்கு வெளிநாடு செல்லலாமா என்ற யோசனையும் வந்தது.

அவ்வபோது தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த நிரஞ்சனியிடமும் இதைப்பற்றி கேட்க, அவளோ சிவப்பு கம்பளம் விரித்து அவனை வரவேற்றாள். தானும் இங்கேயே மேற்படிப்பு படிக்க போவதாக கூறியவள் அவனையும் வரச் சொல்லவும் அவனது எண்ணத்தை படிப்பில் நிலைநிறுத்தி அதற்கென தேர்வுகள் எழுதி நல்ல உதவித் தொகையோடு படிக்க சென்றான்.

கவினோ இளநிலை படிப்பை முடித்துவிட்டு கோவையிலே நல்ல ஒரு கம்பெனியாக பார்த்து வேலைக்கு சேர்ந்து விட்டான். இப்போது போல அப்போது அலைபேசிகள் பரவலாக பழக்கத்தில் இல்லாமல் இருந்தாலும் மெயில் மூலம் கவினுக்கும் சித்துவுக்கும சிநேகம் தொடர்ந்தது. ஆனால் வெளிநாடு சென்ற சித்துவுக்கு நிறைய அதிர்ச்சிகள் காத்திருந்தன.

முதன்முதலாக இவனை அழைத்துப்போக விமானநிலையம் வந்திருந்த நிரஞ்சனியை அவனுக்கு அடையாளமே தெரியவில்லை. இறுக்கிப்பிடித்த ஜீன்ஸூம், இடைவரை உள்ள ஒரு டாப்ஸூம் அணிந்து கூந்தலை குட்டையாக வெட்டிக் கொண்டு, அடர்ந்த நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு நடந்து வந்தாள் அவள்.

“ஹேய் நிரு நீயா இது. என்ன அடையாளமே தெரியாம இப்படி மாறீட்ட.” என சித்து அதிர்ச்சியாக கேட்க, “என்ன சித்து. இது ஃபாரீன். நாம எங்க இருக்கமோ அதுக்கு ஏத்த மாதிரிதானே நம்பள மாத்திக்கனும். ஊரோடு ஒத்து வாழனும்ல.” எனக் கூறி சிரித்தபடி அவள் லக்கேஜை எடுத்து வைக்க சுற்றிலும் பார்த்தான் சித்து.

நிறைய பேரின் உடை அதுபோலவே இருக்க, ‘அதுவும் சரிதான்.’ என நினைத்துக் கொண்டே அவளை பின்தொடர்ந்தான் சித்து. ஆனால் அவள் தங்கியிருக்கும் அறைக்கு சென்றதும், “நீயும் என்கூட இங்கையே தங்கிக்கலாம் சித்து. மேனேஜ்மெண்ட்ல பேசிக்கலாம்” என்றதில் அதிர்ந்து விட்டான் அவன்.

ஒரே வீட்டில் என்றால் கூட யோசித்திருப்பானோ என்னவோ, ஒரே அறையில் என்றதும் “அதெல்லாம் வேண்டாம். முடிஞ்சவரை எனக்கு தனி ரூம் தான் கேட்கலாம்னு நினைச்சேன்.” என வேகமாக மறுத்தான். “நீ இன்னும் மாறவே இல்ல சித்து. ஓகே நீ ஃப்ரஷ் அப் ஆகிக்கோ. நான் சாப்பாடு வரவைக்கிறேன். இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. நாளைக்கு ஜாயின் பண்ணதும் பேசிக்கலாம்” என்றாள் அவள்.

ஏற்கனவே அவள் சேர்ந்திருந்ததால் அதிக அலைச்சல் இல்லாமல் சித்துவுக்கு எளிதாகவே இருந்தது. ஆனால் கல்லூரி சார்பாக இருந்த அறைகள் நிரம்பியிருக்க, தங்குமிடம் தான் கிடைக்கவில்லை. “சொன்னா கேளு சித்து. நாம ஒன்னா ஸ்டே பண்ணிக்கலாம்” என நிரஞ்சனி கூற அவனோ மறுத்தான்.

அதோடு இல்லாமல் அவனது கல்லூரி நண்பர்கள் சிலர் தனியாக வீடு எடுத்து தங்கியிருப்பதை அறிந்தவன், அவர்களோடு தங்குவதாக கூறி அங்கேயே சென்றுவிட்டான். அதில் நிரஞ்சனிக்கு வருத்தம் இருந்தபோதும் அவள் அவனை வற்புறுத்தவில்லை. கல்லூரி தொடங்கி ஒரு வாரம் வரை எந்த பிரச்சனையும் இல்லை.

அந்த வார இறுதியில் எங்காவது வெளியில் செல்லலாம் என நிரஞ்சனி அழைக்க அவனுக்கும் சில பொருட்கள் வாங்க வேண்டியிருந்ததால் அவளோடு சென்றான். அப்போது அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அவனுக்கு தேவையான பொருட்களையெல்லாம் வாங்கி கொடுத்தவள், ஒரு பப்புக்கு அழைத்து சென்றாள்.

“இங்க எதுக்கு வந்திருக்கோம். உன் ஃப்ரண்ட்ஸ் யாராவது இருக்காங்களா?” என சுற்றிலும் பார்க்க, “வேற எதுக்கு இதுக்குதான்.” என்றவள் ஒரே மூச்சில் ஒரு மதுக்கோப்பையை காலி செய்ய சித்துதான் திகைத்து நின்றான். “எப்ப இருந்து இந்த பழக்கம் நிரு?” என சற்று கோபமாகவே கேட்க, அவளோ, “இதுல என்ன இருக்கு?” என்றதில் அவளை அறைந்து விட்டு வெளியே சென்று விட்டான்.

அடுத்தநாள் கல்லூரியில் பார்த்தபோதும் அவளிடம் பேசாமல் இருக்க, அவளாகவே வந்து பேசினாள். “ஹேய் சித்து. நீ ஏன் இப்படி இருக்க? இங்க எல்லாரும் அப்படிதானே இருக்காங்க.” என தனது செயலை நியாயப்படுத்த “இதே ஊர்க்காரங்க நம்ப ஊருக்கு வரும்போது நமக்கு பிடிச்சமாதிரி தான் இருக்காங்களா?” என்றான் சித்து.

“அதெப்படி முடியும். நமக்காக அவங்களை மாற சொல்ல முடியுமா?” என எதிர்க் கேள்வி கேட்டாள் நிரஞ்சனி. “அதேத்தான் நானும் சொல்றேன். அவங்கள நம்ப விருப்பத்துக்கு மாத்த முடியாது. ஏன்னா இதெல்லாம் அவங்க பழக்கம். ஆனா உனக்கு இதெல்லாம் பழக்கமா?

எனக்கு பிடிச்சிருக்குனு சொல்லி பண்ணாக்கூட வேற. ஆனா நீ எல்லாரும் இப்படி இருக்காங்க. எல்லாரும் பண்றாங்கன்னு சொல்லி எல்லா கெட்டப்பழக்கமும் கத்து வைச்சிருக்க. உன்னோட மார்க்ஸ் எல்லாம் பார்த்து இவ்ளோ நல்லா படிக்கறாளேன்னு நான் ரொம்ப பெருமையா நினைச்சேன்.

ஆனா இப்ப உன்னை என் ஃப்ரண்ட்னு சொல்லிக்கவே கேவலமா இருக்கு. நிரஞ்சனிக்கிட்ட எப்பவும் ஒரு நிமிர்வு இருக்கும். ஆனா இப்ப அது இல்ல. படிச்சா மட்டும் பத்தாது. நல்ல பண்பா இருக்கனும்.” என சித்து அறிவுரை கூற அவளோ அவனை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டு நின்றாள்.

“நீ இப்படியெல்லாம் கூட பேசுவியா நீ சொல்றது கரெக்ட் தான். இந்த கல்ச்சர், டிரஸிங் ஸ்டைல் எல்லாம் எனக்கு பிடிக்கும் சித்து. நீ சொல்ற மாதிரி இந்த குடிப்பழக்கம் என் ஃப்ரண்ட்க்காக தான் பழகினேன். அதுவும் கொஞ்ச நாளா தான். கண்டிப்பா இனிமேல் பண்ணல. ஓகே. ஃப்ரண்ட்ஸ். கொஞ்சம் சிரிக்கலாமே.” என கைக்கொடுக்க சித்துவும் சற்று இரங்கினான்.

ஆனால் அந்த நொடியே சித்துவின் மீதான நட்பு நிரஞ்சனிக்கு காதல் எனும் கட்டத்திற்கு நகர்ந்து விட்டதை அப்போது இருவருமே அறியவில்லை. சில மாதங்களில் அறிந்து கொண்ட நிரஞ்சனியும் அதை அவனிடம் வெளிப்படுத்தவில்லை.

இப்படியே ஒரு வருட படிப்பு முடிந்து விட கிடைக்கும் விடுமுறையில் இந்தியா செல்லலாமா என யோசித்துக் கொண்டிருந்த சித்துவிற்கு வந்த அழைப்பு ஒன்று அவனை அவசரமாக இந்தியா வரவைத்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்