Loading

             சித்து கிளம்பி ஒரு மணி நேரம் ஆகியிருக்கும் என வாட்ச்மேன் சொன்னதும்தான் கவினுக்கு அவனிடம் வண்டி இல்லையே என்ற நினைவே வந்தது. ‘அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வர இருபது நிமிடங்களே போதுமே. இவ்வளவு நேரம் வராமல் இருக்கிறானே.’ என்பதில் தான் கவின் அதிர்ச்சி ஆனது.

மறுபடியும் சித்துவிற்கு அழைப்பு விடுக்க, இப்போதும் அழைப்பு செல்லவில்லை. பயந்து போன கவின் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பியே விட்டான். பாதி வழியிலே ஒரு கார் நின்று கொண்டிருக்க, ஒருவேளை சித்துவாக இருக்குமோ என நினைத்து நின்று பார்த்தால் காரில் யாருமில்லை.

குழம்பியவன் சுற்றுமுற்றும் பார்க்க சற்று தொலைவில் யாரோ இருவர் சண்டையிட்டு கொண்டிருந்தது போல தெரிந்தது. சற்று அருகில் சென்று பார்க்க சித்துவும், நிரஞ்சனியும் தான் அங்கு நின்று கொண்டிருந்தனர். “டேய் சித்து. இங்க என்ன பண்ற?” என கவின் குரல் கொடுத்தான்.

“மச்சி. நல்லவேளை வந்தடா. வா போகலாம்.” என சித்து அவனிடம் வர, “என்னடா ஏதாவது பிரச்சனையா?” என நிரஞ்சனியை பார்த்துக் கொண்டே கேட்டான் கவின். “அதெப்படி கழுகுக்கு மூக்குல வேர்த்தாற் போல நாங்க சேர்ந்து இருக்கும்போதெல்லாம் வந்துடுற. என்ன? அவ போய் கூட்டிட்டு வான்னு உன்னை அனுப்பினாளா?” என்றாள் நிரஞ்சனி.

“ஹேய் சீ வாயை மூடு. யாரு நீயும் நானும் என்ன கொஞ்சியா பேசிட்டு இருந்தோம். அவளை பத்தி ஏதாவது பேசினா வாயை உடைச்சிடுவேன்.” என்றான் சித்து கோபமாக. “நீ வாடா. தேவையில்லாம ஏன் பேசிட்டு இருக்க. வேலை முடிஞ்சா எனக்கு ஃபோன் பண்ண வேண்டியதுதானே.” என்றவாறு கவின் அவனை அழைத்து சென்றான்.

“நீ எங்க போனாலும் என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது சித்து.” என்றவாறே கருவினாள் நிரஞ்சனி. அவளை கண்டு கொள்ளாமல் சித்துவை வண்டியில் ஏறச் சொல்லி வீட்டிற்கு அழைத்து வந்தான். வந்ததும் உணவை ஆர்டர் செய்தவன், “என்னாச்சுடா?” எனக் கேட்டான்.

“வேலை முடிஞ்சதும் கேப் புக் பண்ணிட்டு வெளில வந்தேன். அப்ப பார்த்து அவ வந்துட்டா. இந்த நேரத்துல இங்க என்ன பண்றனு நான் கேட்க, ப்ரண்ட் வீட்டுக்கு வந்தேன். திடீர்னு அவ இங்கையே விட்டுட்டு போய்ட்டா. அப்பதான் உன்னை பார்த்தேன். நீ போற வழியில கொஞ்சம் டிராப் பண்றீயான்னு கேட்கும்போதே எனக்கு டவுட்டுடா.

உடனே நானும், நான் கேட்டது சென்னைல இல்லாம இங்க என்ன பண்றனு கேட்டனா. அதுக்கு ஏதேதோ சொல்லி மழுப்பிட்டா. கரெக்டா கேப் வந்துருச்சு. கெஞ்சி கேட்கவும் சரி வந்து தொலையட்டும்னு கூட கூட்டிட்டு வந்தேன். பாதி வழியிலயே திடீர்னு வண்டில ஏதோ பிராப்ளம் ஆகி அவன் மெக்கானிக்கை கூட்டிட்டு வரேனு போய்ட்டான்.

உடனே இவ என்கிட்ட ஒரு மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சுட்டா. எனக்கு கடுப்பாகி வண்டில இருந்து இறங்கி நடக்க ஆரம்பிச்சுட்டேன். அவளும் இறங்கி வந்து ஏன் என்னை அவாய்ட் பண்றனு மறுபடி ஆரம்பிச்சுட்டா. எனக்கு கடுப்பாகி சண்டை போட்டேன். நல்லவேளை நீ வந்துட்ட.” என்றான் சித்து.

கவின், “அவ குணம் தெரிஞ்சும் நீ அவ சொன்னதை நம்பியிருக்க பாரு. யாருக்கு தெரியும். அந்த வண்டியே அவ செட்டப்பா இருக்கும்.” என அங்கலாயத்துக் கொள்ள அதற்குள் உணவு வந்துவிட்டது. பிறகு இருவரும் உணவருந்தி விட்டு படுத்தனர்.

மறுநாள் அலுவலகத்தில் அவர்கள் அனுப்பியிருந்த கொட்டேஷன் அந்த கம்பெனிக்கு பிடித்துவிட அடுத்த நாள் அது தொடர்பான மீட்டிங்க்கு அழைப்பு வந்தது. இருவரும் முதல்நாள் நடந்ததை மறந்து வேலைகளில் கவனம் செலுத்தியதில் நிரஞ்சனியை மறந்தே விட்டிருந்தனர். ஆனால் அவள் சித்துவை மறக்கவில்லை.

அந்த வாரம் முழுவதும் அந்த நிறுவனம் தொடர்பான வேலைகளை பார்ப்பதிலே சென்றுவிட இடையிடையே கம்பெனியிலும் சில மாற்றங்களை கொண்டு வந்தான் சித்து. அவ்வபோது கவின் கண்களில் படுவதை சிந்துவும் விடவில்லை.

ஆனாலும் அவள் ஏன் இங்கு இருக்கிறாள் என கவினும் கண்டுபிடிக்கவில்லை. அந்த வார இறுதியில் கம்பெனியில் நடக்கும் ஒரு நிகழ்வால் சித்துவின் அலுவலுக்கே பெரிய பிரச்சனை வரப்போவதை தெரியாமல் இருவரும் வேலையில் ஆழ்ந்திருந்திருந்தனர்.

          சென்னையில், ஆகாஷ் அன்று வேலை முடிந்ததும் மகியோடு அவளது வீட்டிற்கு வந்தான். “அடடே ஆகாஷ். வாப்பா. எப்படி இருக்க?” என ஆவலாக வரவேற்றார் மீனாட்சி. “நீங்க குடுக்கற சாப்பாட்டுல இப்ப இரண்டு கிலோ வெயிட் போட்டு நல்லாவே இருக்கேன்” என்றான் ஆகாஷ் சிரித்தபடி.

பிறகு மகி உடைமாற்றிவர சென்றுவிட, “அம்மா. இந்த மகி ஓவரா பண்ணுது.” என்றான் ஆகாஷ். “அவ அப்படிதான். இப்ப என்ன பண்ணுனா?” எனக் கேட்டுக் கொண்டே அவர் தேநீர் தயாரிக்க, ஆகாஷ் சமையல் மேடையில் வாகாக அமர்ந்து கொண்டு, “அவளோட ஃப்ரண்ட் மேரேஜ்னு சொன்னோம்ல. அன்னைக்கு கூட கிப்ட் வாங்கினோமே?” என்றான்.

“ஆமா என்னாச்சு. அன்னைக்கு வாங்கலயா?” எனக் கேட்டார் மீனாட்சி. “அதெல்லாம் வாங்கியாச்சு. ஆனா இப்ப மேரேஜ்க்கு வரலன்னு சொல்லுது. அதான்.” என்றான் ஆகாஷ். “கல்யாணம் எங்கப்பா?” என அவர் கேட்கவும், “இங்கதான் ஆன்ட்டி. பெங்களூர்ல.” என்றான் ஆகாஷ்.

“பெங்களூர் இங்கதான் இருக்கா, எப்ப மாத்தினாங்க?” என்றபடியே அங்கு வந்தாள் மகி. “நான் உன்கிட்ட ஒன்னும் பேசல. அம்மாகிட்ட பேசிட்டு இருக்கேன்.” என்றான் ஆகாஷ். மகி, “நீ என்னைப் பத்திதானே பேசற. அப்ப நான் கேட்பேன்.” என்க, அங்கு ஒரு சண்டை ஆரம்பமானது.

இருவரையும் மீனாட்சி சமாதானம் செய்ய அப்போதே குணசேகரனும் வந்து விட்டார். “ஆகாஷ். மகிதான் வரலன்னு சொல்லுதுல்ல. அப்பறம் ஏன் நீ கம்பெல் பண்ற.” என்றார் அவர். “இல்லப்பா மகிக்கு பிடிக்கலன்னா நான் கம்பெல் பண்ணல. இதே சென்னைல மேரேஜ்னா கண்டிப்பா வந்துருப்பேனு என்கிட்டயே சொல்லுச்சு.

சனிக்கிழமை கிளம்புனா, ஞாயிறு நைட் இங்க வரப்போறோம். இரண்டு நாள் தானேப்பா. அதுவும் கார்ல போய்டலாம். ப்ளீஸ்.” என்றான் ஆகாஷ். ஏதோ யோசித்த அவர், மகியை பார்த்து “இரண்டு நாள்தானே பரவால்ல போய்ட்டு வா.” என்றதும் அவரை ஆச்சர்யமாக பார்த்தாள் மகி.

“இல்லப்பா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. எனக்கு அவ ரொம்ப நாளாலாம் பழக்கம் இல்ல.” என்றாள் மகி. “அப்பாவே ஓகே சொல்லிட்டாரு. நீ பேசாம இரு” என்ற ஆகாஷ், “தேங்க்ஸ்பா” என்றபடியே கிளம்பினான். ஆனால் மகியோ அதற்கு முன்பே அவனை முறைத்துவிட்டு அறைக்குள் சென்று விட்டாள்.

மீனாட்சியும் எதுவும் பேசவில்லை. அவன் சென்றதும் தந்தையிடம் வந்த மகி, “அவன் சொல்றதுக்கெல்லாம் நீங்க ஏன்ப்பா தலையாட்டுறீங்க.. இப்பவும் நான் போகப்போறதில்ல.” என்றாள். “ஆகாஷ்க்காக நான் ஒத்துக்கலம்மா. உனக்காக தான். எல்லாரையும் மாதிரி உனக்கும் நிறைய ஆசைகள் இருக்கும்ல.

எங்க பயத்துக்காக உன்னோட சந்தோஷத்தை கெடுக்கக் கூடாதுல. இப்பவும் நீ தனியாவா போற. அதான் கூட ஆகாஷூம் வரான்ல.” என்றபடி அவளது தலையை தடவிக் கொடுத்தார் அவர். “இப்ப நான் சந்தோஷமா இல்லனு சொன்னேனா உங்ககிட்ட?” என சலித்துக் கொண்டவள், “இனிமே இதுமாதிரி பண்ணாதீங்கப்பா.” என்றாள்.

“சரிமா. இப்ப ஆனா போய்ட்டு வா சரியா.” என்றபடி அவர் உள்ளே செல்ல மகிதான் ஏதோ யோசனையில் இருந்தாள். அடுத்த வந்த நாட்களில் அவள் ஆகாஷிடம் சரியாக பேசவே இல்லை. ஏற்பாடுகள் பற்றி கூறியபோதும் காதில் வாங்கவில்லை. வருவதாக ஒப்புக் கொண்டதே போதும் என அவனுக்கு தோன்றவும் அவனும் எதுவும் கூறவில்லை.

சந்துருவோ மகியும் வருவதாக கூறிவிட்டதில் மகிழ்ந்து பெங்களூர் செல்ல மகிழ்ச்சியோடு தயாராகி கொண்டிருந்தான். எல்லாரும் எதிர்பார்ப்புடன் இருந்த அந்த சனிக்கிழமையும் வர திருமணத்திற்கு செல்லும் அனைவருக்கும் அன்று விடுப்பு கொடுத்திருந்தான் சந்துரு.

காலையிலே அனைவரும் வீட்டில் தயாராகி வந்து ஒரு பத்து மணிக்கு கிளம்பினால் வழியில் ஒன்றிரண்டு இடங்களை பார்த்து சாயங்காலம் பெங்களூர் சென்றுவிடலாம். அதன்பிறகு அங்கு இரவு ரிசப்ஷனில் கலந்து கொண்டு, மறுநாள் திருமணத்தையும் பார்த்து வரலாம் என முடிவு செய்து இருந்தனர் ஆகாஷூம், சந்துருவும்.

மற்ற எல்லோரையும் ஏற்றிக்கொண்டு கடைசியாக மகியின் வீட்டிற்கு வந்தது பேருந்து. ஆகாஷ்தான் கூட்டி செல்ல வருவதாக கூறியிருக்கவும் கிளம்பி இருந்த மகி பேருந்தை கண்டதும் ஆச்சர்யப்பட்டாள். அதே நேரம் தனியாக செல்லாமல் குழுவினரோடு செல்வதால் அவளது பெற்றோரும் நிம்மதி அடைந்தனர்.

அவன் கூற வரும்போது மகியும் எதுவும் கண்டுகொள்ளாமல் இருக்க ஆகாஷூம் சந்துரு கூறிய எதையும் கூறவில்லை. அதைவிட பெரிய அதிர்ச்சி ஆகாஷூக்கு அடுத்து பேருந்தில் இருந்து சந்துரு இறங்கியதுதான். சந்துருவும் தங்களோடு பேருந்தில் வரப்போகிறான் என்பதே சற்று முன்தான் ஆகாஷூக்கே தெரிந்திருந்திருந்தது.

“நான் சந்துரு அங்கிள், இவங்க ஆபிஸ் எம்.டி. கவலைப்படாதீங்க ஆன்ட்டி. நாங்க பத்திரமா போய்ட்டு நாளைக்கு நைட்டுக்குள்ள வீட்டுக்கு வந்திருவோம்.” என சந்துரு கூற மகியின் பெற்றோருக்கு மகிழ்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது.

“ஆன்ட்டி உங்க சமையல் சூப்பர். ஊருக்கு போய்ட்டு வந்ததும் உங்களை வந்து பார்க்கனும்னு நினைச்சேன். என்ன விசயம்னு வந்து சொல்றேன்.” என மகிழ்வோடு சந்துரு கூற, அதே மகிழ்வோடு நடக்க போகும் விபரீதம் தெரியாமல் மகியை அவர்களோடு அனுப்பி வைத்தனர் அவளது பெற்றோர்.

நிறைய நண்பர்களை பார்த்ததும் மகியும் மகிழ்ச்சியோடே கிளம்பினாள். இனிதாக அவர்களின் பயணம் தொடங்கிய அதே நேரம் சித்துவின் அலுவலகத்தில், திடீரென நிகழ்ந்த மாற்றத்தால் அடுத்து என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நின்றனர் சித்துவும், கவினும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்