Loading

                 “மகிழ். ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளு” என்றபடி சித்து அவள் பின்னே செல்ல, அவளோ வேகமாக அறைக்குள் சென்றாள். அவள் கதவை சாத்தும் முன்பு அவனும் உள்ளே நுழைந்து கதவை தாளிட்டான். வெளியே நிரஞ்சனி புன்முறுவலோடு அமர்ந்திருக்க, “நீ திருந்தவே மாட்டியா?” எனக் கேட்டான் கவின் நிரஞ்சனியிடம்.

“திருந்தற அளவு நான் என்ன தப்பு பண்ணேன்.” என்ற நிரஞ்சனி டீபாயில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்துவிட்டு, “வந்த வேலை முடிஞ்சது. அப்ப கிளம்பட்டுமா?” என்றாள். “உனக்கு புரியுதா இல்லையா? அவனுக்கு உன்ன பிடிக்கல. ஆனாலும் நீ ஏன் அவனை தேடி வந்து தொல்லை பண்ற.” என்றான் கவின்.

“அவனுக்கு என்ன பிடிக்குதா, இல்லயா, வேற யாரையாவது லவ் பண்றானா, எதுவும் எனக்கு தேவையில்ல. ஆனா அவன் என்ன தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண கூடாது. அதுக்கு நான் விடவும் மாட்டேன். புரியுதா? உன் ப்ரண்ட்க்கு சொல்லி புரியவை.” என்றாள் நிரஞ்சனி கோபமாக.

“என்ன. எல்லாம் அவன் வைச்சிருக்க பணத்துக்காக தானே. அதை எழுதி கொடுத்தா விட்டுருவ.” என்றான் கவின் ஏளனமாக, “பணமா? பணத்துக்காக அவனை தேடறது அவனோட சித்தி. நான் இல்ல சரியா. இது லவ் கவின். உனக்கு புரியாது. சித்து எனக்கு மட்டும்தான் சொந்தம். இன்னைக்கு இந்த ஷாக் போதும்.” என்றவாறே நிரஞ்சனி கிளம்பினாள்.

கவின், “இதுக்கு பேர் லவ் இல்ல வெறி. இதுக்கு நீயே வைத்தியம் பார்த்து சரியாயிடு. ஒருவேளை அவன் டிரீட்மெண்ட் குடுத்தான்னா நீ தாங்க மாட்ட.” என்க, அவளோ அவனை பார்த்து லேசாக சிரித்துவிட்டு கிளம்பினாள். “அச்சோ உள்ள என்ன ஆச்சோ தெரியலயே.” என்றபடி கவின் கதவை தட்டினான்.

சித்து வந்து கதவை திறக்க, உள்ளே வந்த கவினோ இருவரையும் பார்த்து திகைத்தான். மகிழ் நன்கு சிரித்துக் கொண்டிருக்க, சித்துவும் புன்னகை முகத்தோடு அவளை ரசித்திருந்தான். ‘வெளிய அவ சொன்னது என்ன? இதுங்க எதுக்கு இப்படி சிரிக்குதுங்க. ஒன்னும் புரியலயே.’ என கவின் தலையில் கைவைத்து கொண்டு படுக்கையில் அமர்ந்தான்.

சிரிப்பை நிறுத்திய சித்து, “என்னடா ஆச்சு?” எனக் கேட்க, “இல்ல ஒன்னா இரண்டான்னு யோசிச்சிட்டு இருக்கேன்.” என்றான் கவின். “என்ன அண்ணா. ஒன்னு, ரெண்டு?” எனக் கேட்டாள் மகிழ்.

“இல்ல இங்க நடந்ததுக்கு நீங்க சரியா ரியாக்ட் பண்றீங்கன்னா எனக்கு ஒன்னு. இல்ல உங்க மூளை எதுவும் குழம்பியிருந்தா இரண்டு பெட் கீழ்ப்பாக்கம்ல புக் பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன்.” என்றான் கவின் சீரியசாக..

“இல்ல மச்சி. இவ வேற நான் புரப்போஸ் பண்ண கோபத்துல இருந்தாளா? நான் சமாதானம் பண்ணிட்டு இருந்தேன். அந்த நேரம் பார்த்து அவ வந்துட்டா அப்பறம்.” எனும்போதே கவின் அவனை நிறுத்தி, “என்ன நீ மகிழுக்கு புரப்போஸ் பண்ணியா? ஆமா நீ எப்ப லவ் பண்ண ஆரம்பிச்ச? அன்னைக்கு கேட்டப்ப இல்லனு தானே சொன்ன.” என்றான்.

மகிழ், “நல்லா கேளுங்கண்ணா. நானும் இதைத்தான் கேட்டேன். எப்ப இருந்து லவ் பண்றீங்கன்னு. அதுக்கு பதில் சொல்லாம ஏதேதோ பேசிட்டு இருந்தாரு. அப்ப பார்த்து அவ வேற வந்துட்டா.” என்றாள் யோசனையாக. “அப்ப நீ கோபமா ரூம்க்குள்ள வரல. அப்படிதானே?” என்றான் கவின்.

“எனக்கு என்னண்ணா கோபம். அதுவும் உங்க மேல.” என மகிழ் கூற, கவின், “என் மேல இல்ல. சரி தெளிவாவே கேட்கறேன். அவ நிச்சயம் பத்தி சொன்னதும் இவன் மேல கோபப்பட்டு நீ உள்ள வரல?” எனக் கேட்க, “கோபம்லாம் இல்லண்ணா. நான் இந்த ரூம்க்கு ஏன் வந்தேனா.” என்றபடி ஓரமாக கிடந்த ஒரு கட்டையை எடுத்தாள்.

“எம்மா தாயி. உன்ன கேள்வியே கேட்கல. என்னை விடு. அதுக்காக இப்படி கட்டையெல்லாம் எடுக்காத.” என்ற கவின், “டேய் எருமை வாடா என்கூட.” என சித்துவை அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு வந்தான். “என்னடா நடக்குது இங்க?” என கவின் அலுத்துக் கொள்ள, “கூல் மச்சி” என அமைதிப்படுத்தினான் சித்து.

“ஆமா மச்சி. நான் வதனியை விரும்பறேன். அவ இருந்தா என் லைஃப் நல்லா இருக்கும்னு தோணுச்சு. ஆனா என் பிரச்சனை எல்லாத்தையும் முடிச்சிட்டு தான் அவள்கிட்ட சொல்லனும்னு நினைச்சேன். அதனாலதான் நீ கேட்டப்ப கூட நான் எதுவும் சொல்லல.

ஆனா நானே எதிர்பாராத விதமா இன்னைக்கு சொல்லிட்டேன். அவ என்ன சொல்ல போறாளோன்னு பயந்துட்டு தான் இருந்தேன். ஆனா எதுவுமே பேசாம கோபமா இருந்தா. அதுனால அவள சமாதானம் பண்ணிட்டு இருக்கும்போது நிரஞ்சனி வந்துட்டா. நான் பேசிட்டு இருந்ததை பார்த்து தான் மகிழை தூண்டி விட அப்படி சொல்லியிருக்கா.

நான் புரப்போஸ் பண்ணாம இருந்திருந்தா மகிழ்கிட்ட பேசாம அந்த நிரஞ்சனியை ஒருவழி பண்ணியிருப்பேன். ஆனா இப்ப மகிழ் எப்படி ரியாட்க் பண்ண போறான்னு தான் ரூம்க்கு போனேன். ஆனா அங்க நடந்ததே வேற.” என்றவன் அறையில் நடந்ததை நினைவு கூர்ந்தான்.

மகிழ் வேகமாக சென்று அறையின் மூலையில் இருந்த ஒரு கட்டையை எடுக்க போக, அதைக் கண்ட சித்து, “வேணாம்மா. நோ வயலன்ஸ்.” என்றான். “அவ யாரு. ஏதேதோ சொல்லிட்டு இருக்கா. அவ சொல்றதெல்லாம் பொய்தானே. அவளை போய் ரெண்டு சாத்து சாத்தறேன்.” எனவும் சித்துதான் திகைத்து போனான்.

“இல்ல வதனி. அவ சொன்னதெல்லாம் உண்மைதான். அடிக்கறதுனா என்னைதான் அடிக்கனும்.” என்றான் சித்து. அதுவரையிலும் கூட தைரியமாக உணர்ந்தவள் தளர்ந்து போய் அங்கிருந்த நாற்காலியில் அமர, அவளுக்கு கீழே முட்டி போட்டு அமர்ந்த சித்து “சாரிப்பா.” என்றான்.

“அப்ப அவ சொன்ன மாதிரி அவளை நிச்சயம் பண்ணிட்டு என்கிட்ட ஏன் அப்படி பேசுனீங்க?” என்றாள் மகிழ். “அவ சொன்னதும் உண்மைதான். அதே நேரம் உன்ன லவ் பண்றதும் உண்மைதான்.” என்ற சித்துவை ‘லூசாடா நீ’ என்ற ரீதியில் பார்த்திருந்தாள் மகிழ்.

“ஆமா நான் லூசுதான். ஆனா அப்ப எல்லாம் என் கைமீறி போய்டுச்சு. நான் அவளோட பர்த்டே பார்ட்டிக்கு போயிருந்தேன். அப்ப என்ன ஏமாத்தி நிச்சயம் பண்ணிட்டாங்க.” என்றான் சித்து. “ஆனா அந்த ஃபோட்டோல ரிங் போடும்போது நீங்க நல்லா சிரிச்சிட்டு தானே இருந்தீங்க.” என்றாள் மகிழ் யோசனையாக.

“ஆமா. பர்த்டேக்கு அந்த ரிங்கை போட முடியல. கொஞ்சம் போட்டு விடுன்னு கேட்டா நானும் சந்தோஷமா போட்டேன். போட்டு முடிச்சதும், நிச்சயம் ஆகிடுச்சுன்னு அனவுன்ஸ் பண்ணீட்டாங்க.” என பாவமாக சித்து கூறவும் மகிழால் சிரிப்பை அடக்க முடியவில்லை. “ஏமாத்தி நிச்சயம் பண்ணாங்களா?” எனக் கேட்டுக் கொண்டே சிரிக்க, அவள் சிரிப்பில் அவனும் சற்று இலகுவானான்.

“அப்பதான் நீ உள்ள வந்த.” என்றான் சித்து. அதை நினைத்து கவினுக்கும் சிரிப்பு வந்தாலும் அதை விடுத்து, “ஆனா எல்லாத்தையும் இப்படி ஈசியா எடுத்துக்க முடியாதுல்லடா. மகிழ் விசயம் எல்லாருக்கும் தெரிஞ்சா என்ன ஆகும்னு யோசிச்சியா. நமக்கு பிரச்சனை இல்ல. ஆனா மகிழுக்கு கஷ்டமா இருக்காதா?” என்றான் கவின்.

“பிரச்சனை வரும்தான். ஆனா எல்லாமே சரி பண்ண முடியும்னு இப்ப நம்பிக்கை வந்துருச்சு. என்னோட பிரச்சனை எல்லாத்தையும் சரி பண்ணாம நான் வதனிய என் லைஃப்ல இழுத்து விட மாட்டேன். சீக்கிரமா எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டனும். ஆனா அதுக்கு முன்னாடி இங்க செய்ய வேண்டிய வேலை எல்லாம் கொஞ்சம் இருக்கு” எனவும் கவினும் ஆறுதலாக அவன் தோள் பற்றினான்.

         அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆகாஷ் மகியின் வீட்டிற்கு வந்திருந்தான். பதினொரு மணியளவில் வந்தவன் மீனாட்சியுடன் பேசிக்கொண்டு அவருக்கு உதவிகள் செய்து கொண்டிருக்க, மகியோ தனது தந்தையுடன் இணைந்து தோட்ட வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

சற்று நேரத்தில் பின்பக்கம் வந்தவன், “சாப்பாடு ரெடி.” என்றபடி வந்து பார்க்க தந்தையும் மகளும் இணைந்து பேசி சிரித்துக் கொண்டே செடிகளுக்கு உரம் வைத்துக் கொண்டிருக்க, அந்த காட்சி அழகாக ஆகாஷின் மனதில் பதிந்தது. சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்த மகி, “இதோ அவ்ளோதான் முடிஞ்சது.” என்றபடியே வெளியே வந்தனர்.

ஆகாஷ், “நீங்க ஏன்ப்பா கஷ்டப்படுறீங்க. யாராவது கூப்பிட்டா வந்து பண்ண போறாங்க.” என்க, “இதுல என்னப்பா கஷ்டம் இருக்கு. சொல்லப்போனா எனக்கு இதுல கிடைக்கிற சந்தோஷம் வேறெதுலயும் கிடைக்காது தெரியுமா.” என்றார் அவர்.

மகி அவர் கூறியதை கேட்டு புன்னகைத்தவாறே உடை மாற்ற தனது அறைக்கு செல்ல, குணசேகரன் அங்கிருந்த அடுக்கு பானைகளை மாற்றி வைத்தார். “என்னப்பா இது. பொங்கல் பானை மாதிரி இருக்கு.” எனக் கேட்டான் ஆகாஷ். “இல்லப்பா இது உரம் செய்யறது.” என்றவர் அதைப்பற்றி விளக்கினார்.

“இதுல மூன்று பானைகள் இருக்கா. நம்ப வீட்ல இருந்து கிடைக்கற மட்கும் குப்பைகள் அதாவது காய்கறி கழிவு, காகிதம் இதெல்லாம் சின்ன சின்ன துண்டாக்கி இதோட கொஞ்சம் இயற்கை உரம் சேர்த்து முதல் பானைல போடனும். அது ஓரளவு நிரம்பியதும் அதை அடியில வைச்சுட்டு இப்ப மேல இருக்கற பானைல போடனும்.

இது மாதிரி மூன்று பானையும், மாத்தி மாத்தி வைச்சு கழிவை சேர்த்தா ஒரு மூனு மாச இடைவெளில கடைசி பானை நமக்கு உரமாக மாறிடும். அதை இது மாதிரி தோட்டத்துக்கு உபயோகப்படுத்தலாம். இதனால குப்பை சேர்றதும் குறையும். நமக்கும் யூஸ் ஆகும்ல.” என்றார் அவர்.

ஆகாஷ், “சூப்பர்ப்பா. நல்ல ஐடியா. ஓய்வு நாளை கூட ரொம்ப உபயோகமா செலவு பண்றீங்க. எங்களுக்கு ஃபோன் பார்க்கவே பத்தாது.” என அலுத்துக் கொள்ள, அவரோ,  “சின்ன வயசுல இருந்து எங்களுக்கு இப்படியே பழகிடுச்சு. உங்களுக்கு ஃபோன் பார்த்தே பழகிடுச்சு. கொஞ்ச நேரம் இது மாதிரி பொழுதுபோக்கா பண்ணா மனசும் நல்லா இருக்கும். உடம்பும் நல்லா இருக்கும்.” என்க, ஆகாஷூம் அதை ஆமோதித்தான்.

அதன்பிறகு அனைவரும் இணைந்து உணவருந்த, “என்னம்மா. ஆகாஷ் வந்துருக்கானு நிறைய வெரைட்டி பண்ணியிருக்க போல. பிரியாணி, வறுவல், ஓ மீனும் இருக்கா. சூப்பர். ஆகாஷ் நீ வாரவாரம் வந்துரு. அப்பதான் எங்கம்மா இது மாதிரி நெறைய வெரைட்டி செய்வாங்க.” என்றாள் மகி.

“ஆமாப்பா. இல்லனா இவளுக்கு பழைய சோறும், பச்சை மிளகாய்யும் தான் குடுப்பேன்” என்றார் மீனாட்சி சிரிக்காமல். ஆகாஷூக்கோ அதில் சிரிப்பு வந்துவிட சட்டென புரையேறி விட்டது. “பார்த்து மெதுவாப்பா. யாரோ நினைக்கறாங்க.” என தலையில் தட்டி விட்டு மீனாட்சி தண்ணீர் கொடுத்தார்.

ஆகாஷ், “என்னையெல்லாம் யார் நினைக்க போறாம்மா?” என்க, “வேற யாரு. நான்தான் திட்டினேன். எனக்கு கொடுக்காம சாப்பிடறன்னு” எனக் கூறி மகி சூழ்நிலையை இலகுவாக்க ஆகாஷூம் இயல்பாகி, அவளுடன் வம்பிழுத்துக் கொண்டே சாப்பிட்டான். முதலில் ஆன்ட்டி, அங்கிள் என்று அழைத்தவன் இயல்பாக அப்பாம்மாவிற்கு மாறியிருந்தான்.

பிறகு சற்று நேரம் கழித்து ராகினி திருமணத்தை பற்றி பேச்சு வர, சந்துரு கூறியதை ஆகாஷிடம் பகிர்ந்தாள் மகி. “அப்ப நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே கிஃப்ட் ஆ வாங்கி கொடுத்தர்லாம். ஓகேவா. சரி இன்னைக்கே கூட வாங்கிட்டா நல்லது. நெக்ஸ்ட் சண்டே மேரேஜ்ல” என்றான் ஆகாஷ்.

அவளுக்கும் அது சரியெனப்பட ஆகாஷூடன் கடைக்கு கிளம்பினாள். “நான் அப்படியே வீட்டுக்கு கிளம்பறேன்மா.” என ஆகாஷ் விடைபெற்று வர மகி தனது வண்டியில் கூட வந்தாள். தேடிப்பிடித்து ஒரு அழகான கண்ணன்-ராதா சிலையை வாங்கினார்கள் இருவரும்.

ஃபோட்டோ எடுத்துக் கொண்டு பேக் செய்தபின் அதை ஆகாஷிடம் கொடுத்தாள் மகி. “உன்கிட்டயே இருக்கட்டும் மகி. ஏன் என்கிட்ட கொடுக்கற?” என ஆகாஷ் கேட்க, “நீ மேரேஜ்க்கு போறதானே? அதான் உன்கிட்ட கொடுத்தேன்.” என்றாள் மகி.

“நான் போறேன்னா. அப்ப நீ வரலயா?” என ஆகாஷ் கேட்க, “நான் எப்போ வரேன்னு சொன்னேன். நான் வரல ஆகாஷ்” என மகி கூறியதில் ஆகாஷ் திகைத்து அவளை பார்த்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்