Loading

           மகியும், அவளது பெற்றோர்களும் வெளியில் வந்து பார்க்கும்போது ஆகாஷ் இல்லாமலிருக்க, “எங்கம்மா போயிட்டான்.” என்றாள் மகி. அதற்குள் ஏற்கனவே வந்து பார்த்த எதிர்வீட்டு அம்மா, “மீனாட்சி. மீனாட்சி.” என குரல் கொடுத்துக் கொண்டே வர, மீனாட்சி, “வாங்கக்கா.” என வரவேற்க மகி உள்ளே சென்றாள்.

“யார் அந்த பையன் மீனா. மகி எதுவும் லவ் பண்றாளா என்ன?” என அவர் கேட்க, மீனாட்சி மட்டுமல்ல மகியும் அதிர்ந்தாள். “என்னக்கா இப்படி கேட்கறீங்க. அவன் மகியோட ஃப்ரண்ட். நீங்களா ஏதாவது கற்பனை பண்ணிக்காதீங்க.” என்றார் மீனாட்சி அவசரமாக.

அவரோ, “அப்படி இல்ல மீனா. இப்பெல்லாம் காலம் கெட்டு கிடக்கு. இப்படிதான் ஃப்ரண்ட் ஃப்ரண்டுன்னு சொல்லி போன வாரம் நம்ம அடுத்த தெருவுல ஒருத்தி போய் அவனை கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டா. நாமளும் கொஞ்சம் கவனமா இருக்கனும்ல.” எனவும் குணசேகரனுக்கு கோபம் வந்து விட்டது.

“அதெல்லாம் எங்க பொண்ணை பத்தி எனக்கு நல்லா தெரியும். நீங்க கவலைப்படற மாதிரி ஒருநாளும் எனக்கு நடக்காது. அப்படியே என் பொண்ணு யாரையாவது லவ் பண்ணாலும் அதை முதல்ல என்கிட்டதான் சொல்லுவா. அப்ப நான் பார்த்துக்கறேன்.” என்றார் வேகமாக.

“நான் சொல்றதெல்லாம் உங்களுக்கு அப்படிதான் தெரியும். என்னைக்காவது அந்த பையனைதான் கட்டிப்பேனு வந்து நிப்பா. அப்பதான் தெரியும்.” என்ற அவர் வேகமாக வெளியேறி விட மகிக்கு தனது பெற்றோர் கூறியதன் அர்த்தம் இப்போதுதான் புரிந்தது. நல்லவேளை இதை ஆகாஷ் கேட்கவில்லை.

கேட்டு இருந்தால் அவன் மனமும் அல்லவா காயப்பட்டிருக்குமே என நினைத்தாள் மகி. வெளியே வந்தவள், “அப்பா சாரிப்பா. நான் இதையெல்லாம் யோசிக்கவே இல்ல ஆகாஷை போய் எப்படிப்பா அப்படி நினைக்க முடியும்.” என்க, “எனக்கு தெரியும்டா. உன் நல்ல மனசு எல்லாருக்கும் புரியனும்னு அவசியம் இல்ல.” என்றார் அவர்.

“அவங்க சொல்றதுல்லாம் நடக்காதுப்பா. நான் நீங்க சொல்ற மாப்பிள்ளைதான் கல்யாணம் பண்ணிப்பேன்.” என்றாள் வேகமாக. “சரிடி வாயாடி. உனக்கு நாங்கதான் பார்க்கனும். வா சாப்பிடலாம்.” என மீனாட்சி அழைக்க அனைவரும் இணைந்து ஆனந்தமாக உணவருந்தினர்.

அடுத்தநாள் மகி அலுவலகத்தில் இருக்கும்போது ஆகாஷ் சீக்கிரமாகவே அனுமதி வாங்கி விட்டு மகியின் வீட்டிற்கு வந்தான். மகியின் தந்தையும் அலுவலகம் சென்றிருக்க, மீனாட்சி மலர்களை தொடுத்துக் கொண்டிருந்தார். இவனை கண்டதும் “வாப்பா ஆகாஷ். நேத்து ஏன் நேரமாவே கிளம்பிட்ட? இன்னைக்கு ஆபிஸ் போகல?” எனக் கேட்டார்.

“இல்ல ஆன்ட்டி ஆபிஸ்ல இருந்துதான் வரேன். மகி காலைல இருந்து என்கிட்ட பேசவே இல்ல. அதான் உங்களை பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.” என்றான் ஆகாஷ். “நாங்க எதுவும் சொல்லலயேப்பா.  அவ ஏன் பேசாம இருக்கா.” என யோசித்தார் மீனாட்சி.

“அச்சோ ஆன்ட்டி நீங்க எதுவும் சொல்லியிருக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். நேத்து சொல்லாம போயிட்டேனு கோபம்னு நினைக்கறேன்.” என்றான் ஆகாஷ். “ம்ம் இருக்கும் ஆமா. நீ ஏன் சொல்லாம போன?” என்றார் அவரும்.

“என்ன ஆன்ட்டி நீங்க. அவதான் புரியாம பேசறான்னு நீங்களுமா. வயசுப்பொண்ணு வீட்ல இருக்கும்போது நான் இங்க தங்குனா மத்தவங்க என்ன நினைப்பாங்க. அதான் நான் கிளம்பிட்டேன். ஆனா மகிக்கு நல்ல மனசு ஆன்ட்டி. எனக்கு உங்க வீட்டுக்கு வந்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது.” என்றான் ஆகாஷ்.

ஆகாஷ் மீது மீனாட்சிக்கு ஒரு ஒட்டுதல் உண்டாக அப்படியே இருவரும் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க, நேரம் போனதே தெரியவில்லை. பிறகு சமைக்க வேண்டும் என மீனாட்சி அடுக்களைக்குள் செல்ல தானும் அங்கு சென்று சிறு சிறு வேலைகளை செய்து கொடுத்தான் ஆகாஷ்.

மகி வீட்டிற்கு வந்தபோது, சமையல் அறையின் திட்டில் அமர்ந்து கொண்டு ஒரு கேரட்டை கடித்தபடி, “ஆன்ட்டி மகிக்கு நீங்க அலையன்ஸ் பார்க்கறீங்கல்ல. சீக்கிரமா அவளை மாமியார் வீட்டுக்கு அனுப்பிடலாம். அப்பறம் நான் ஃபுல் டைம் இங்கையே இருப்பேன்ல.” என்றான் ஆகாஷ் சிரித்தபடி.

“ம்ம். இருப்படா. இருப்ப. நான் வீட்டோட மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணிப்பேன். நேத்து ஏதோ இவன் மாதிரி போன இப்ப எதுக்கு வந்த? இவன்கிட்ட என்னம்மா பேசிட்டு இருக்கீங்க.” என்றபடியே.. அவனை இரண்டு அடி போட்டாள் மகி.

ஆகாஷ், “ஆன்ட்டி பாருங்க. உங்க முன்னாடியே அடிக்கறா.” என போட்டுக்கொடுக்க, மீனாட்சி, “ஹேய். வந்தும் வராம எதுக்கு இங்க வந்த. போய் முகம் கழுவிட்டு வா.” என விரட்ட அவளும் சுணங்கியபடி போய் ஃப்ரஷ் ஆகி வந்தாள். அதற்குள் அவளது தந்தையும் வந்துவிட்டார்.

பிறகு அனைவரும் இருந்து சிற்றுண்டி எடுத்துக் கொண்ட பின் ஆகாஷ் கிளம்புவதாக கூற, சாப்பிட்டு போகலாம் என இருக்க வைத்தனர். அன்றைய மாலை பொழுது அனைவருக்கும் மகிழ்ச்சியாக கழிந்தது. மேலும் சற்று நேரம் இருந்து உணவருந்திய பின் கண்டிப்பாக விடுமுறை நாட்களில் வருவதாக கூறி கிளம்பினான் ஆகாஷ்.

அவன் சென்றதும், “ரொம்ப நல்ல பையன்ங்க. சாயங்காலமே வந்துட்டான்” என மீனாட்சி அவனை பற்றி கூற மகிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இதனால் வரப்போகும் பின் விளைவுகளை அறியாமல் ஆகாஷூம், மகியின் குடும்பமும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

           பெங்களூரில், “என்னாச்சு அபி, ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்கீங்க. என்ன பிரச்சனை?” எனக் கேட்டுக் கொண்டே அவனுக்கு தலைவலி மாத்திரை கொடுத்தாள் மகிழ். “என்னன்னு சொல்றதுனு தெரியல மகிழ். ஆனா இந்த பிரச்சனைல்லாம் முடிஞ்சா நல்லா இருக்கும்னு தோணுது.” என்றான் சித்து.

“அப்படி என்ன பிரச்சனை உங்களுக்கு. சென்னைல இருந்து எப்ப இங்க வந்தீங்க. சொல்லனும்னு தோணுன்னா சொல்லுங்க.” என்றாள் மகிழ். “நாம லாஸ்ட் டைம் மீட் பண்ணதுக்கு அப்பறம் நிறைய மாறிடுச்சு மகிழ். நாம ஒன்னு நினைச்சா நடக்கறது வேறையா இருக்கு. என்ன பண்றது. ஈவ்னிங் சொல்றேன். இப்ப கொஞ்சம் வேலை இருக்கு.” என்றான் சித்து.

“ஓகே. ஓகே பாருங்க. ஆனா சரி ஆகாத பிரச்சனைன்னு எதுவுமே இல்ல. ஒரு மாசம் முன்னாடி நானும் இப்படிதான் இருந்தேன். ஆனா உங்களை பார்த்த அப்பறம் இப்ப கொஞ்சம் நிம்மதியா ஃபீல் பண்றேன். எதுனாலும் பார்த்துக்கலாம்” என ஆறுதலாக கூற சித்துவுக்கோ, ‘உன்னை பார்த்தபிறகு நிம்மதி’ என்ற வார்த்தைகளே பெரிய மகிழ்வை தந்தது.

அதையே நினைத்து உற்சாகமாக கேபினுக்கு வந்தவன் வேகமாக வேலைகளை கவனித்தான். இதை கவனித்த கவின்தான், ‘இவன் நர்ஸ் ரூம்க்கு போய்ட்டு வந்தாளே பிரைட் ஆகிடுறான். இதை முதல்ல என்னன்னு கவனிக்கனும்.’ என மனதில் நினைத்தவன் தனது வேலைகளை செய்தான்.

அன்று மாலை சித்துவின் அறைக்கு வந்த கவின், “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு மச்சி. நீ மகிழை கூப்பிட்டு கிளம்பு சரியா?” என்க, “எப்படி மச்சி நானும் அதேதான் நினைச்சேன்.” என்றான் சித்து மகிழ்வோடு. “நீ அதைத்தான் பிளான் பண்ணுவன்னு எனக்கு நல்லா தெரியும். அதான் நானே சொல்லிட்டேன். கிளம்பு.” என்றான் கவின் கடுப்பாக..

சித்து கிளம்பி வெளியில் வரவும், மகிழ் வேலையை முடித்து வரவும் சரியாக இருக்க, “ஏன் அபி. நானே கேப் புக் பண்ணி போயிருப்பேன். அதுக்குள்ள வேலை முடிஞ்சதா?” எனக் கேட்டாள் மகிழ். “எனக்கும் முடிஞ்சது. வா போகலாம்.” என்ற சித்து அவளை அழைத்துக் கொண்டு வர பாதி வழியிலே மழை வந்துவிட்டது.

“போச்சுடா.” என வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்க, அவர்கள் இறங்கிய இடத்திற்கு அருகில் ஒரு நர்சரி மலர் தோட்டம் இருந்தது. அதை கண்டு மகிழின் கண்கள் விரிய, “சரி வா மழை விடறவர நாம உள்ள பார்க்கலாம்.” என்று அவளை அழைத்து வந்தான் சித்து.

பலவித வண்ண மலர்ச்செடிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்க, மேலே ஒரு கண்ணாடி கூரை இருந்தது. அதன்வழியே பெய்யும் மழைத்துளிகள் இறங்குவது தெரிய பூக்களின் வாசனையும், மண்வாசனையும் நிறைந்து அந்த இடமே ரம்மியமாக இருந்தது.

“ரொம்ப அழகா இருக்குல்ல. இங்க.” என மகிழ் குதூகலித்துக் கொண்டு பூக்களை ரசித்திருக்க சித்துவோ அவளை ரசித்துக் கொண்டிருந்தான். “எனக்கு தேனி ரொம்ப பிடிக்க காரணமே அங்க இருக்க இயற்கை அழகுதான். இந்த மாதிரி ஒரு சிட்டிக்கு வந்ததுல அதைதான் ரொம்ப மிஸ் பண்றேன்.” என்றாள் மகிழ்.

“உண்மைதான்” என்றபடி அவளோடு இணைந்து அந்த பகுதியை சுற்றிவர, மழையோ இன்னும் விட்டபாடில்லை. அப்படியே ஏதேதோ பேசிக் கொண்டு நடந்தவர்களுக்கு மழை நிற்க வேண்டும் என்ற எண்ணமும் வரவில்லை. அந்த நர்சரியின் கடைசியில் தடுப்புகள் இல்லாத பகுதியில் மழைநீர் சாரலாக உள்ளே இறங்கி கொண்டிருந்தது.

அதைக்கண்டதும் சிறு குழந்தை போல அந்த மழையை ரசித்து, மழைத்துளிகளை கைநீட்டி வாங்கி அனுபவித்தாள் மகிழ். சாரல் அவள் மீதும் பட அவள் முகத்தில் இருந்த மழைத்துளிகள் காலை நேர ரோஜாவின் மீது இருக்கும் பனித்துளிகள் போல தோன்றியது சித்துவுக்கு.

அந்த பனித்துளிகளை தொட்டு விளையாட சித்துவின் கைகள் ஏங்கி நீள, அதை உணராமல் சிரித்தபடியே இருந்தாள் மகிழ். எத்தனையோ அழகான பெண்களை சித்து பார்த்திருக்கிறான். ஆனால் மகிழ் மீது இப்போது தோன்றும் உணர்வு புதியது. முதன்முறை அவளை கண்டபோது தோன்றிய ஒரு மரியாதையை விட அதிகமான காதல் அவள் மீது படர்ந்தது சித்துவுக்கு.

திடீரென அவளது கன்னங்களை தாங்கி, “ஐ லவ் யூ வதனி. நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என சித்து கேட்டபோது நிச்சயம் அவன் இதயம் அவன் வசமில்லை. ஆனால் அதை சற்றும் அவள் எதிர்பார்க்கவில்லை என்பதை அவளது விரிந்த விழிகளில் இருந்த அதிர்ச்சியே காட்டியது.

சில நிமிடங்களில் கடந்தே தன்னை மீட்டவள், “மழை விட்டுடுச்சு.” என்றாள். “ஆங்.” என சித்து கைகளை எடுத்தபின் தான் என்ன செய்தோம் என்பதே நினைவுக்கு வந்தது சித்துவுக்கு. “மகிழ். அதுவந்து.” என சித்து ஏதோ கூறவர மகிழோ எதையும் கண்டுகொள்ளாமல் முன்னால் நடந்தாள்.

‘என்ன இவ புரப்போஸ் பண்ணா ஒன்னு ஒத்துக்கனும் இல்ல திட்டனும். அட்லீஸ்ட் சண்டையாவது போடனும். எந்த ரியாக்ஷனும் காட்டாம போறா. ஒருவேளை கோபத்துல ஆட்டோ பிடிச்சு போய்டுவாளோ.’ என மனதுக்குள் புலம்பிக் கொண்டே வெளியில் செல்ல அவள் அதுவும் செய்யாமல் இவன் வண்டி எடுத்ததும் ஏறி அமர்ந்தாள்.

வீடு வரும்வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. எப்படி சமாளிப்பது என வழி நெடுக யோசித்துக் கொண்டே சித்து வர, மகிழோ அசாத்திய அமைதியில் இருந்தாள். வீட்டிற்கு வந்தும் உடைமாற்றி விட்டு சமையலறைக்கு செல்ல சித்துதான் புரியாமல் பார்த்தான்.

அவள் கோபமாக இருப்பது மட்டும் தெரிய அவளை எப்படி சமாதானம் செய்யலாம் என யோசித்துக் கொண்டு இருந்தவனுக்கு பாவம் அவளை சமாதானம் செய்யும் முன்பே அதைவிட பெரிய பிரச்சனை ஒன்று வரப்போவது தெரியவில்லை.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்