320 views

              கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பரவிக்கிடந்த பசுமையான தேயிலை தோட்டங்களின் மேல் அதிகாலை பனி படர்ந்து பச்சை மலை மீது வைரக்கற்களை கொண்டு அலங்கரித்தது போல அழகாக காட்சி அளித்தது. நடுநடுவே ஏலக்காய் தோட்டங்களும் காபி தோட்டங்களும் இருக்க அதற்கிடையில் எழுநூறு மக்களை கொண்ட சிறிய ஊர் இருந்தது. அதை போடிமெட்டு என அழைப்பர்.

அந்த கிராமத்தில் அதிகாலையிலே அனைவரும் சுறுசுறுப்பாக அவரவர் வேலையில் கவனமாயிருக்க, ஒரு அழகான காட்டன் புடவை அணிந்து, கையில் மருத்துவர் அணியும் வெள்ளை கோட்டுடன் தனது பணிக்கு சென்று கொண்டிருந்தாள் மகிழ்வதனி.

எதிர்ப்படும் அனைவரும் சிநேகத்துடனும், வாஞ்சையுடனும் சிரித்து, “டாக்டரம்மா. சரியான நேரத்துக்கு கிளம்பிடுறீகளே.” எனக் கேட்க, இவளும் புன்னகையை சிந்திவிட்டு அவர்களை கடந்து அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை அடைந்தாள்.

சில வருடங்களுக்கு முன்பு, மருத்துவ படிப்பை முடித்துவிட்டு பயிற்சிக்காக தனது தோழமைகளுடன் முதன்முதலில் இந்த ஊருக்கு வந்தாள் மகிழ். பயிற்சி முடிந்து மற்ற அனைவரும் பெரிய மருத்துவமனைகளிலும் சிலர் அரசாங்க மருத்துவமனைகளிலும் வேலைக்கு சேர மகிழ் மட்டும் அங்கேயே பணியை வாங்கி கொண்டாள்.

சிறிய ஊராக இருப்பதாலும் தேனியில் இருந்து இருபத்தைந்து கிலோமீட்டர்கள் மலை மேல் வருவதாலும் சுற்றுலாவிற்கு வரும் அளவிற்கு கூட பணிக்கு வருவதில்லை பலரும். ஆனால் மகிழ்வதனி இது போன்ற பணியையே விரும்பியதால் அவளுக்கு மிகவும் பிடித்தது அந்த ஊரும், மக்களும்.

அந்த ஊரின் வெள்ளந்தி மனிதர்களுக்கும் மகிழை பிடித்து போக இதோ வருடங்கள் கடந்தும் கைராசி மருத்துவராக இங்கு இருக்கிறாள் மகிழ். அன்று காலையிலேயே பாம்பு கடித்து விட்டதாக ஒரு சிறுவனை அழைத்து வர உடனடியாக முதலுதவி செய்து தேனிக்கு அனுப்பி வைத்தாள்.

அடுத்தநாள், “ஏங்கம்மா. பார்த்து வேலை செய்ய கூடாதா? பசங்களை ஏன் கூட்டிட்டு போறீங்க?” என அந்த சிறுவனின் தாயை  உரிமையாக கடிந்து கொள்ள, “எவ்வளவு பார்த்து பண்ணாலும் தேயிலை தோட்டத்துக்குள்ள பாம்பு இருக்கும்மா. நேத்து லீவ்தானேன்னு கூட்டிட்டு போனேன்.

அவனுக்கும் இன்னேரம் கணக்கு ஆரம்பிச்சிருக்கலாம். நீதான் படிக்கனும்னு சொல்லிட்டியே.” என அலுத்துக் கொண்டார் அந்த தாய். மலைகிராமம் என்பதால் பெரும்பாலும் தோட்ட வேலைகளுக்கு சிறுவர், சிறுமிகளும் சென்று கொண்டிருக்க மகிழ்தான் படிக்க வைக்க வேண்டும் என அறிவுறுத்தியதோடு அரசாங்கத்திற்கு மனு போட்டு படிக்க வைக்கவும் வழி செய்திருந்தாள்.

“உங்களை மாதிரியே பசங்களும் கஷ்டப்படுனுமா?” என மகிழ் கேட்க, “அதுவும் சரிதான்மா. உன்ன மாதிரி பெரிய படிப்பு படிச்சு, பெரிய வேலைக்கு போகட்டும்.” என்றவாறே கிளம்பினார் அவர். ஆனால் அன்றுதான் அவளுக்கே பிரச்சனை ஆரம்பமாக போகிறது என்பதை அவள் அறியவில்லை.

அந்த ஊரில் உள்ள தேயிலை, ஏலக்காய், காபி தோட்டங்களில் பணிபுரிபவர்கள் தான் அந்த ஊரே தவிர அதன் முதலாளி எல்லாரும் வெளி ஊரில் இருந்தனர். ஆண்டுக்கு சில முறை வந்து பார்த்து செல்வதோடு நம்பிக்கையான ஆட்களை மேனேஜர்களாக போட்டு பார்த்து கொண்டனர்.

அப்படி ஒரு தோட்டத்து முதலாளியின் மகன்தான் சந்தேஷ்.. தனது நண்பர்களுடன் ஊர் சுற்றுவதற்காக அங்கு வந்திருந்தான். இரண்டு நாட்களாக அங்கு சுற்றிக் கொண்டிருக்க சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்த அவனது நண்பன் ஒருவன் சரிவில் சறுக்கி விழுந்து விட, காயம் சிறிதுதான் என்றாலும் ஒரு டி.டி போட்டுக்கலாம் என நண்பர்கள் சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அப்போதுதான் மகிழ் சந்தேஷை முதன் முதலில் பார்த்தது. வேறு சிலரும் அங்கு இருக்க ஊசி போட்டுக் கொண்டதும் கிளம்பி விட்டவர்கள் வெளியில் வந்ததும் பேச்சு மகிழை பற்றியதாக மாறி இருந்தது.  “என்ன மச்சி. இந்த ஊர்ல எல்லாமே சுத்தி காட்றேனு சொல்லிட்டு இப்படி ஒரு பிகர் இருக்கறதை சொல்லவே இல்ல.” எனக் கேட்டான் நண்பன் ஒருவன்.

“நானும் அதைப்பத்தி தான்டா யோசிச்சுட்டு இருந்தேன். நான் லாஸ்ட் டைம் வந்தப்ப புதுசா ஒரு டாக்டர் வந்துருக்கறதா கேள்விப்பட்டேன். ஆனா அப்ப இவளை பார்க்கலயே. ஏதோ ஊருக்கு போய் இருக்கறதா சொன்னாங்க.” என்றான் சந்தேஷ்.

“ஆள் நல்லா இருக்கறதை பார்த்தா பெரிய இடமா இருக்குமோ. ஆனா இங்க என்ன பெனிஃபிட் இருக்கும்.” என்றான் மற்றொருவன். “இருக்கலாம்டா. இப்பெல்லாம் பெரிய இடத்து பிள்ளைங்க இது மாதிரி சேவை செய்யறதை பேஷனா வச்சுருக்காங்க. நாம கூட லாஸ்ட் மன்த் ஒரு பிளட் டொனேஷன் கேம்ப் நடத்தல.” என்றான் மற்றொருவன்.

அதன்பிறகு அவர்களது பேச்சு வேறுபுறம் திரும்பி விட அடுத்த நாளே அவனது நண்பர்களும் ஊருக்கு சென்று விட்டனர். ஆனால் சந்தேஷ் மட்டும் தனது வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணிடம் மகிழை பற்றி விசாரித்தான்.

“ரொம்ப நல்ல பொண்ணு தம்பி. எங்க பிள்ளைங்க எல்லாம் இப்ப படிக்க கூட அதுதான் சாருங்களை கூட்டிட்டு வந்துச்சு. ஆனா பாருங்க அம்மா, அப்பா இல்ல. கடவுள் இவ்ளோ நல்ல பொண்ணுக்கு அப்படி ஒரு குறையை குடுத்துட்டான். நீங்க ஏன் கேட்கறீங்க தம்பி?” என விசாரித்தாள் அந்த பெண்.

“ஒன்னுமில்ல. நம்ப ஊர்ல புதுசா இருக்கா. அதான் சும்மா கேட்டேன்.” என தனது அறைக்கு வந்தவனின் மனமோ குறுக்காக சிந்தித்தது. ஏதேதோ யோசனையில் படுத்தவன் அப்படியே உறங்கி விட்டான். ஆனால் அடுத்தநாள் முதல்வேளையாக மகிழை சந்திக்க கிளம்பினான்.

அவளிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள அவளோ, “இதெல்லாம் ஏன் என்கிட்ட சொல்றீங்க?” எனக் கேட்டு வைத்தாள். “இல்ல. சும்மாதான் இன்னும் பத்து நாள் இங்கதான் இருக்க போறேன். அதுவரை இங்க யாரும் எனக்கு ஃப்ரண்ட்ஸ் இல்ல. சோ நாம ஏன் ஃப்ரண்ட்ஸா இருக்க கூடாது” என்றான்.

“நீங்க ஜாலியா ஊர்சுத்தி பார்க்க இங்க வந்துருக்கீங்க. எனக்கு வேலையே இங்கதான். சோ நீங்க உங்க வேலையை பாருங்க. நான் என் வேலையை பார்க்கறேன்.” என அவனது பேச்சை அப்படியே கத்தரித்து விட்டாள் மகிழ். அடுத்தடுத்த வந்த ஐந்து நாட்களும் அவன் பேச முற்பட்டாலும் மகிழ் அதை கண்டு கொள்ளவில்லை.

அடுத்த இரு நாட்கள் அவன் கண்ணிலே படாமல் இருக்க மகிழ் சற்றே நிம்மதி அடைந்தாள். ஆனால் ஊருக்கு சென்றிருந்த சந்தேஷோ வேறு ஒரு திட்டத்தோடு இங்கு வந்திருந்தான். அவனது தந்தைதான் பெரும்பாலும் இங்கு வருவது. இந்த முறை அவர் வெளிநாடு செல்ல வேண்டிய காரணத்தால் மகனை சற்று பார்த்து வருமாறு அனுப்பியிருந்தார்.

அதை தனக்கு சாதகமாக ஆக்கி கொண்டவன், மறுநாள் அவளது வீட்டிற்கே சென்றான். மகிழ், “சொல்லுங்க சந்தேஷ். என்ன விசயம்?” எனக் கேட்க, “உன்கிட்ட எப்படி சொல்றதுனு தெரியல. உன்னை பார்த்த நிமிஷமே ரொம்ப பிடிச்சிருந்தது. அதான் கொஞ்ச நாள் பழகிட்டு அப்பறம் சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா நீதான் என்கிட்ட பேசவே மாட்ற.

சோ. உன்கிட்ட நேரடியாவே என்னை பத்தி சொல்லிடலாம்னு வந்தேன். ஐ லவ் யூ மகிழ்.” என்றான் சந்தேஷ். “இங்க பாருங்க சந்தேஷ் எனக்கு இந்த காதல், கல்யாணம் லாம் வேண்டாம். அதுல எனக்கு இண்டர்ஸ்ட்டும் இல்ல. நீங்க முதல் முறை பேச வந்தப்பவே இது ஒருநாள் இப்படி வந்து நிக்கும்னு நான் நினைச்சுதான் உங்களை அவாய்ட் பண்ணேன்.

அங்கிளை எனக்கு நல்லாவே தெரியும். நல்ல மனிதர். அவர் சொல்றதை கேட்டு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க. அதுதான் உங்களுக்கும் நல்லது. அவருக்கும் கௌரவம். இப்படி பட்டுன்னு பேசறேனு நினைக்காதீங்க. கிளம்புங்க.” என்றாள் மகிழ்.

சந்தேஷூம் வேறு வழியின்றி அங்கிருந்து வந்து விட்டான். ஆனாலும் தினமும் மகிழின் அழகு அவன் மனதில் தோன்றி இம்சிக்க, குரூரமாக அவன் மனம் சிந்திக்க ஆரம்பித்தது. அவன் கூறியபடி அவள் மேல் அவனுக்கு காதலெல்லாம் இல்லை. தந்தையின் பணத்தில் உல்லாசமாக வாழ்ந்தவனுக்கு அத்தனை கெட்ட பழக்கங்களும் அத்துபடி.

இருந்தும் தந்தை மீது இருந்த பயத்தினால் அவரிடம் மேற்படிப்பு படிக்கிறேன் அது இதுவென ஏதோ ஒரு காரணம் கூறி காசு வாங்கி அவருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டான். இதுவரை அவன் பார்த்த பெண்கள் எல்லாம் அவனது பணத்தில் மயங்கி தேவையை நிறைவேற்ற மகிழோ வித்தியாசமாக இருந்தாள்.

அவனை கண்டதும் சுற்றி வரும் பெண்களை போல அல்லாமல் மகிழ் அவனை எட்ட நிறுத்துவது அவனுக்குள் ஒருவித வெறியை தூண்டிவிட்டது. ஒரு வாரம் சென்றுவிட ஒருநாள் கடுமையான காய்ச்சலில் விழுந்தான். அதில் பயந்து போன சமையல்கார அம்மா மகிழை சென்று அழைக்க வேறு வழியில்லாமல் அவனது வீட்டிற்குள் சென்றாள் மகிழ்.

“நீங்க தம்பி ரூம்க்கு போங்கம்மா. நான் சுடுதண்ணி வச்சு எடுத்துட்டு வரேன்.” என சமையல்காரம்மா சமையலறைக்குள் செல்ல அவனது அறைக்குள் நுழைந்து பார்த்தால் அங்கு யாருமே இல்லை. வேறு அறையோ என நினைத்து வெளியே செல்ல எத்தனிக்க, அங்கு கதவை பூட்டிவிட்டு ஒருவித வக்கிர பாவனையோடு நின்றிருந்தான் சந்தேஷ்.

“உங்களுக்கு உடம்பு சரியில்லனு சொன்னாங்க. ஆனா நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என மகிழ் கேட்க, “ஆமா சரியில்லதான். நீ நினைச்சா சரி பண்ணிடலாம்.” எனக் கூற ஏதோ தவறாக பட்டது அவளுக்கு.

மகிழ், “வழியை விடுங்க நான் கிளம்பனும்.” என்க.. “நீதானே சொன்ன. எனக்கு காதல் கல்யாணத்துலலாம் நம்பிக்கை இல்லனு. சோ வீ கோ ஃபார் லிவ் டு கெதர். ஓகே. உனக்கு வேணுங்கற காசை நான் தரேன்.” என அருகில் வந்தான் சந்தேஷ்.

மகிழ், “இடியட். எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட இப்படி பேசுவ?” என்றவள், அவனை ஓங்கி ஒரு அறை விட்டவள், “அக்கா. எங்க இருக்கிங்க? இங்க வாங்க.” என சத்தமிட்டாள். அவர் வெளியே இருந்தால்தானே. சந்தேஷ் ஒருவனிடம் பணம் கொடுத்து அவரிடம் அவரது மகன் கீழே விழுந்து விட்டதாக கூற சொல்ல அதன்படியே கூறியதில் அவர் பதறி போய் வீட்டிற்கு கிளம்பி இருந்தார்.

“நீ என்ன சத்தம் போட்டாலும் இங்க யாரும் வர மாட்டாங்க. ஒரு டாக்டர் நீ. இதைப்பத்திலாம் தெரியாம இதெல்லாம் நடக்காமலா இவ்வளவு நாள் இருந்திருப்ப. ப்ளீஸ் கோ ஆப்ரேட் செல்லம்.” என அவளிடம் நெருங்கினான் சந்தேஷ்.

இதற்கு மேல் அவனிடம் பேசி பயனில்லை என்பதை அறிந்த மகிழ் தப்பிக்க வழி தேட கையில் கிடைத்த ப்ளவர் வாஷ்ஷை  எடுத்து அவன் தலையிலே ஓங்கி அடித்தவள், அறைக்கதவை திறந்து கொண்டு வெளியேறினாள். நேராக வீட்டிற்கு வந்தவளுக்கு அதுவரையிலும் படபடப்பு அடங்கவில்லை.

இதை கூறி நிறுத்திய மகிழ், சித்தை பார்க்க அவன் விழிகள் கோவைப்பழமென சிவந்திருக்க, “அபி” என்றவாறு அவன் கரங்களை பிடித்தாள். “அப்பறம் என்ன ஆச்சு.” என சித்து கேட்க, “அதோடு பிரச்சனை முடிஞ்சதுன்னு நினைச்சேன். ஆனா முடியல. விடாம துரத்துனதுல நான் ஊரை விட்டே வர வேண்டியதா போயிடுச்சு.” என்றாள் மகிழ்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *