375 views

         சந்துரு, “நீ வரமாட்டனு நினைச்சேன்” எனக் கூறியதும் “ஏன் அப்படி நினைச்சீங்க?” எனக் கேட்டாள் மகி. “இல்ல அவங்க அப்படி பேசி இருக்க கூடாது. நீ கோபமா இருப்பியோனு.” என சந்துரு இழுக்க, “யாரோ என்ன பத்தி ஏதாவது சொன்னா அது உண்மை ஆகிடுமா என்ன?” என்றாள் மகி.

திகைத்த சந்துரு, “அப்படி இல்ல மகி. உனக்கு கஷ்டமா இருந்ததுனு எனக்கு தெரியும். அதுனால கேட்டேன்.” என்றான். “உண்மையில கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது. ஆனா அம்மாகிட்ட பேசினப்பறம் மனசு லேசாகிடுச்சு.” என்றாள் மகி.

“அப்படி என்ன சொன்னாங்க ஆன்ட்டி?” என சந்துரு கேட்கவும், “நாம நமக்கு எவ்வளவு உண்மையா இருக்கோம் அப்படிங்கறது தான் முக்கியம் கண்ணு. யாரோ நம்பள பத்தி பேசறதால நாம அப்படி ஆகிட மாட்டோம். இப்ப நீ இயல்பா தான் உன் எம்.டிக்கிட்ட பழகுற.

அது மத்தவங்களுக்கு தப்பா தெரியுதுனு நீ பேசறத விட்டாலும் அதுக்கும் ஏதாவது காரணம் சொல்லி உன்னை பத்தி தப்பா பேசதான் போறாங்க. அதே அவங்கள கண்டுக்காம விட்டோம்னு அடுத்தநாள் வேற ஒருத்தரை பத்தி பேசிட்டு போய்ட்டே இருப்பாங்க. ஆனா எப்பவும் நமக்கு நம்பள பத்தி நல்லா தெரியும்.

ஏதோ ஒரு இடத்துல நாம தப்பு பண்றோம்னா கண்டிப்பா அதை நம்ப மனசே நம்மகிட்ட சொல்லும். அப்ப அதை கண்டுக்காம விட்டோம்னா தான் தப்பு. புரியுதா. என் மகிம்மா எப்பவும் சிரிச்சிட்டு அடுத்தவங்களை சந்தோஷமாதான் வச்சிருப்பானு நான் நம்பறேன். இருப்பல்ல.” என்று மீனாட்சி கூறியதை அப்படியே கூறினாள் மகி.

“வாவ். ரியலி ஆன்ட்டி சோ கிரேட் இல்ல. இதே மத்த வீடா இருந்திருந்தா அப்படி உனக்கு என்ன ஃப்ரண்ஷிப்னு கேட்டு இருப்பாங்க. உனக்கு நல்ல அம்மா மகி. அவங்கள கஷ்டப்படுத்தற மாதிரி எப்பவும் நடந்துக்காத சரியா.” என சந்துரு கூறவும் தலையாட்டினாள் மகி.

“அப்ப நேத்து நான் சாப்பாடு வேணாம்னு சொன்னப்ப நீ ஏன் சொல்லல. அம்மாக்கு தெரியும்னு.” எனக் கேட்டான் சந்துரு. “நான் சொன்னேனே ஃப்ரண்ட்டுக்குனா எங்க அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்கன்னு.. இப்பவும் நீங்க என் ஃப்ரண்ட் தான். இல்லனா இதை கூட சொல்லி இருக்க மாட்டேனே.” என்றாள் மகி.

“ஓகோ அப்படி. ஆனா உன் எம்.டி ரொம்ப ஸ்ட்ரிட்மா. ஃப்ரண்டா இருந்தாலும் இன்கிரிமென்ட்லாம் பெரிசா கிடைக்காது. பார்த்துக்கோ.” என்றான் சந்துரு. அதற்கு மகி, “அடப்போங்க எம்.டி சார். நம்ம ஆபிஸ் ரூல்ஸ் படி இரண்டு வருஷத்துக்கு எனக்கு ஊதிய உயர்வே இல்லை.

அதுக்குள்ள எங்க வீட்ல கல்யாணம் பண்ணி வைச்சிடுவாங்க. அப்பறம் நானே ரிசைன் பண்ணிட்டு வேற நல்ல கம்பெனியா பார்த்து வேலைக்கு சேர்ந்திடுவேனே.” என்றாள் நல்ல கம்பெனியில் அழுத்தம் கொடுத்து.

“பார்டா. என்கிட்டயே இது நல்ல கம்பெனி இல்லனு சொல்ற. ரொம்ப தைரியம் தான். பார்த்துக்கறேன். போய் வேலையை பாரு.” என அனுப்பியவனின் இதழ்கள் புன்னகையில் உறைந்திருந்திருந்தது.

        அதே நேரம் அங்கு அலுவலகத்தில் சித்து, அனைத்து டீம் லீடர்களையும் அழைத்து மீட்டிங் போட்டிருந்தான். “லாஸ்ட் பத்து நாளும் அந்த பிராஜக்ட்லயே கவனமா இருந்ததால மத்த வேலை நிறைய பெண்டிங் ஆகிடுச்சு. அதைப்பத்தி டிஸ்கஸ் பண்ணலாம்.” என சித்து பேசிக் கொண்டிருக்க கவினின் கவனமோ அங்கு இல்லை.

நேற்றிரவு நடந்ததை அசை போட்டு கொண்டிருந்தது அவனது மனம். சில நாட்களாக வேலையில் கவனமானதில் ஸ்ரேயாவிடம் பெரிதாக பேச முடியாமல் இருக்க அவளது அன்னைதான் ஃபோனில் அழைத்திருந்தார். “கவின் ஃப்ரீயாப்பா. உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.” எனவும், “சொல்லுங்க ஆன்ட்டி.” என்றான் கவின்.

“இல்லப்பா. ஸ்ரேயாவும், நீயும் லவ் பண்றீங்களா?” என நேரடியாகவே அவர் கேட்டு விட, “அப்படில்லாம் எதுவும் இல்ல ஆன்ட்டி. உங்ககிட்ட யார் அப்படின்னு சொன்னது.” எனக் கேட்டான் கவின். “என்னப்பா சொல்ற. ஸ்ரேயாதான் சொன்னா. இவ்வளவு நாள் அப்படி எதுவும் இல்லனு சொல்லிட்டு இருந்தா.

நேத்து அவளுக்கு ஒரு அலையன்ஸ் வந்தது. அதைப்பத்தி பேசினப்பதான் நான் லவ் பண்றேன். வேற இடத்துல வரன் பார்க்காதீங்கன்னு சொன்னா. யார்னு கேட்டதுக்கு உன் பேரை தான் சொன்னா. நீ இல்லனு சொல்ற. உங்களுக்குள்ள ஏதாவது சண்டையாப்பா?” எனக் கேட்டார் அவர்.

“அவளை.” என சத்தம் வராமல் சொன்னவன், “அவ ஏதாவது உங்ககிட்ட விளையாடி இருப்பா ஆன்ட்டி. நீங்க என்கிட்ட பேசினதை சொல்ல வேண்டாம். நான் நாளைக்கு வீட்டுக்கு வரேன். பேசிக்கலாம்” என்றவாறு ஃபோனை வைத்திருந்தான். இப்போதும் மனம் அதை பற்றிதான் யோசனையில் இருந்தது.

இதற்கிடையில் சித்து, கவினிடம் ஏதோ கேட்க, அவன் கவனியாமல் இருக்கவும் அருகில் இருந்தவர், “சார் உங்களைதான் கூப்பிடுறார்.” என கூறவும், “சொல்லு சித்து.” என்றவன் நாக்கை கடித்துக் கொண்டு “சொல்லுங்க சார்.” என்றான். சித்து, “இட்ஸ் ஓகே. எனிதிங் ப்ராப்ளம்.” எனக் கேட்கவும் அதற்கு மறுப்பாக தலையாட்டியவன் மீட்டிங்கை பொறுப்பாக கவனித்தான்.

ஆனால் மீட்டிங் முடிந்ததும், ஸ்ரேயாவின் இடத்திற்கு செல்ல அவளோ வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள். “அம்மாகிட்ட என்ன சொன்ன?” என கவின் கேட்க.. “உங்க அம்மாகிட்ட நான் பேசினதே இல்ல கவின். எப்ப கேட்டாலும் நீதான் பேசவே விடமாட்ற.” என்றாள் ஸ்ரேயா.

“என் அம்மாகிட்ட நானே நினைச்சாலும் பேச முடியாது. நான் கேட்டது உங்க அம்மாகிட்ட சொன்னதை பத்தி.” என்றான் கவின். அதற்கும் ஸ்ரேயா.. “ஓ. ஆன்ட்டி அவ்ளோ பிஸி பர்சன்னு சொல்ல வர. ஓகே. எங்க அம்மாகிட்ட ஆயிரம் பேசுவேன். அது எதுக்கு உனக்கு.” என்றாள் ஸ்ரேயா.

அப்போது அங்கு வந்த சித்து, “ஸ்டாப் இட் ஸ்ரேயா. என்ன உன் இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்க. அவன் சீரியசா பேசறது கூட உனக்கு தெரியல. இதுல அவன லவ் பண்றேனு சொல்லிட்டு இருக்க.” என அடிக்குரலில் அவளிடம் கத்தியவன், “நீ என்னடா அவகிட்ட எக்ஸ்பிளைன் பண்ணிட்டு இருக்க வா” என அவனை  தனது அறைக்கு அழைத்து வந்தான் சித்து.

ஸ்ரேயா, கவின் கூட கோபப்பட்டு பார்த்திருக்கிறாள். ஆனால் அவளிடம் சித்து கோபப்படுவது இதுவே முதல்முறை என்பதால் திகைத்து நின்றாள். அறைக்கு வந்ததும், கவின், “விடு மச்சி. அவளுக்கு என்ன தெரியும். ஏதாவது லூசு மாதிரி பண்றதே பழகி போச்சு.” என சித்துவை அமைதிப்படுத்தினான்.

அதன்பிறகு வேலை நேரம் முடியும் வரை இருவரும் ஸ்ரேயா இருக்கும் பக்கமே திரும்பவே இல்லை. ஆனால் அவளே எதிர்பாராத விதமாக கிளம்பும்போது கவின் வந்து அவளது வண்டியில் ஏறினான். சற்று நேரம் கழித்தே சித்து கிளம்பி வெளியில் வர மகிழ் கேட் அருகில் நின்றிருந்தாள்.

பொதுவாகவே மகிழ் ஜெனரல் ஷிப்ட் நேரத்திற்கே கிளம்பி விடுவாள். இன்றோ எட்டு மணி ஆகியிருக்க, “ஹாய்.. மகிழ் நீ இன்னும் கிளம்பல.” எனக் கேட்டான் சித்து. “இல்ல அபி. கொஞ்சம் வொர்க் இருந்தது. டைமே பார்க்கல. அதான் லேட் ஆகிடுச்சு.” எனவும், “சரி வா போகலாம். நான் டிராப் பண்றேன்.” என அழைத்தான் சித்து.

“இல்ல அபி. உங்களுக்கு எதுக்கு சிரமம். நான் கால்டாக்ஸி கூப்பிட்டுக்கறேன். நீங்க கிளம்புங்க.” என்றாள் மகிழ். “அதுக்கு குடுக்கற பணத்தை நான் வாங்கிக்கறேன். வந்து ஏறு.” என்றான் சித்து கோபமாக. அதன்பிறகு மறுக்க முடியாமல் ஏறியவள் வீட்டிற்கு சற்று தூரத்திலேயே. “இங்கையே நிறுத்துங்க. கொஞ்சம் திங்ஸ் வாங்கனும்.” என இறங்கினாள்.

அவனது பதிலை எதிர்பாராமல் இறங்கியவள் அலைபேசியை பார்த்துக் கொண்டே நடக்க ஆரம்பிக்க, சற்று நேரத்திலேயே அவளது கரம் பற்றி இழுத்தான் சித்து. “ஹேய். வண்டி வருது. என்ன நீ பாட்டுக்கு போற. கவனம் வேணாமா?.” என கடிந்து கொண்டே சாலையை கடந்தான் அவளது கரங்களை விடாமலே.

“என்னாச்சு மகிழ். நீ ஏன் இன்னைக்கு ஒரு மாதிரி இருக்க. ஏதாவது ப்ராப்ளமா?” எனக் கேட்க, அவளோ பதிலே பேசவில்லை. அவளை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த ஒரு காபி டேக்குள் புகுந்தவன் காபி ஆர்டர் செய்தான். அப்போது அவளது அலைபேசி ஒலிக்க பதட்டமாக எடுத்து காதில் வைக்க அடுத்த நொடியே அதை தனதாக்கி இருந்தான் சித்து.

மறுமுனையிலோ, “மகிழ். இன்னும் அவங்க இங்கதான் இருக்காங்க. நான் சொல்லும்போது கிளம்புனா போதும். ஆபிஸ் சேஃப்தானே.. இல்லன்னா உங்க ஆபிஸ் ஸ்டாப்ஸ் யார் வீட்டுக்காவது போய்டு.. நானே கூப்பிடறேன்.” என  அவளது பதிலை எதிர்பாராமல் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

“என்னாச்சு மகிழ். என்ன நடக்குது இங்க. சொல்லு.” என சித்து கேட்க.. “ஒன்னும் இல்ல அபி. இப்போதைக்கு எதுவும் கேட்காதீங்க. ப்ளீஸ்.” என்றாள் அவள். “சரி கேட்கல. வா போகலாம்.” என சித்து அழைக்க.. “எங்க?” எனக் கேட்டாள் மகிழ்.

“சொல்றேன் வா” என்றவன் நேராக தனது வீட்டிற்கு தான் அழைத்து வந்தான். மகிழ், “இது யார் வீடு அபி. இங்க எதுக்கு வந்துருக்கோம்.” எனக் கேட்க, “என் வீடுதான். வா.” என்றவாறே உள்ளே கூட்டி வந்தான். இன்னும் கவின் வராமல் இருக்க “நீ போய் அந்த ரூம்ல ஃப்ரஷ்அப் ஆகிக்கோ.” என்றவாறு தானும் சென்று உடைமாற்றி வந்தான்.

அவள் முகம் கழுவிவிட்டு வரவும், அவளது கைகளில் ஒரு கருப்பு காபியை திணித்தவன் “குடி.” என்றவாறே தானும் ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தான். அப்போது மகிழ், “அவ என்ன சொன்னா?” எனக் கேட்டாள்.

“யாரு?” என சித்து கேட்கவும், “அதான் ஃபோன்ல என் ஃப்ரண்ட் அகல்யா. என்ன சொன்னா?” என தெளிவாக கேட்டாள் மகிழ். “ஓ அவங்களா. என் ஃப்ரண்ட். ஒரு பச்சமண்ணு. அவளுக்கு இந்த பெங்களூர் நகரத்துல யாரையும் தெரியாது. நான் சொல்ற வரை அவளை கண்ணுக்குள்ள வைச்சு பார்த்துக்கோங்க. என் கண்ணையே உங்ககிட்ட ஒப்படைக்கறேன். அப்படின்னு சொன்னாங்க.” என்றான் சித்து.

“விளையாடாதீங்க அபி. உங்களுக்கு பிரச்சனையோட சீரியஸ்னஸே என்னனு தெரியல. எப்ப பாரு விளையாட்டுதான்.” என மகிழ் பட்டென கூறிவிட, “அதையே தான் நானும் சொல்றேன். எனக்கு என்ன பிரச்சனைன்னே தெரியல. அதான் உனக்கு தெரியும்ல. அப்ப சொல்லு.” என மடக்கினான் சித்து.

அதில் மகிழ் திகைத்து அவனை பார்க்க, “என்னனு சொன்னாதானே ஏதாவது பண்ண முடியுமான்னு பார்க்கலாம். ப்ளீஸ் மகிழ் சொல்லு.” என சித்து கேட்கவும் வேறுவழியின்றி கூற ஆரம்பித்தாள். ஆனால் அவள் கூறி முடிக்கும்போது சித்துவின் விழிகள் கோபத்தினால் சிவந்திருக்க ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்தான் அவன்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *