Loading

இதயம் 12 : (புரிந்தும் புரியாமல்)

“என்னுடைய காதல் தெரியுமா?”

யாதவ் கேட்ட அர்த்தமே வேறு. அதனை வரு புரிந்து கொண்டது வேறு.

வருவின் மீது கொண்டுள்ளது மட்டுமே காதலென்று நினைத்திருக்கும் யாதவிற்கு நிகிலா எல்லாம் எங்கோ தூரம் சென்றுவிட்டாள்.

முன்பே நிகிலாவின் நினைவு அவ்வளவு எளிதில் அவனுக்கு வந்துவிடாது. இப்போது அவனின் காதல் வரு தானென்று அறிந்த பின்னரா நிகிலாவின் நினைவு வரப்போகிறது.

யாதவ் கேட்டதின் முழு அர்த்தம்… வரு மீது கொட்டிக்கிடக்கும் காதலை. யாதவின் கேள்வியில் வருவிற்கு தோன்றியது நிகிலாவின் மீது வைத்துள்ள காதல்.

‘கொள்ளை கொள்ளையாய் தான் காதல் வைத்திருக்கும் தன்னுடைய மாமா, தன்னிடமே வேறொரு பெண் மீது அவர் வைத்திருக்கும் காதலை தெரியுமா என்கிறான்!’ அவ்விடம் அவள் மனதால் மரித்துப்போனாள்.

கண்கள் நீரில் மூழ்க… தெரியுமென தலையசைத்தாள்.

நேற்று முதல் அவன் தன்னிடம் நடந்து கொண்டதற்கும், இப்போது கேட்ட கேள்விக்கும் யாதொரு சம்மந்தமும் இன்றி இருக்க… பெரிதாய் குழம்பிப்போனாள்.

பேசாதவன் பேசியதிலேயே ஆச்சரியம் கொண்டவள், அவனின் செய்கையிலும் வார்த்தையிலும் நேற்று முதல் சிந்திக்கும் திறனின்றி திணறுகிறாள்.

கேள்வி கேட்டவன் அவளின் கண்ணீரை கண்டு பதறுவதற்கு பதிலாக உள்ளுக்குள் மகிழ்ந்தான். தனக்காக ஒருவர் அழுவது காதலில் மட்டும் சுகம். அத்தகைய சுகத்தை உணர்ந்தான்.

வருவின் கண்ணீரை வைத்தே அவள் நிகிலாவை மனதில் வைத்து தலையசைக்கிறாள் என்பதை யாதவ் புரிந்து கொண்டான்.

இருப்பினும் தன் காதலை சொல்ல அவன் நினைக்கவில்லை.

காத்திருப்பவளுக்கு காதலை மொத்தமாகக் கொட்டிட ஆசை கொண்டான். வரு வார்த்தையாக சொல்வதற்கு முன்பே அவளின் காதலை அவன் உணர்ந்தது போல், அவனின் காதலையும் அவள் உணர வேண்டுமென நினைத்தான்.

அதனால் அவள் அழுவதை மௌனமாக பார்க்க மட்டும் செய்தான்.

அத்தோடு ஆதினியிடம் காதலுக்காக போராடென்று பக்கம் பக்கமாக பேசியவள், அவளின் காதலுக்காக சிறு துரும்பை கூட அசைக்காது இருப்பது யாதவிற்கு அவள் மேல் சிறு கோபத்தை உண்டாக்கியது.

ஒரே ஒருமுறை சொல்ல முயன்றாள். அதன் பின்னர் யாதவ் விலகியதும் வருவும் விலகிக் கொண்டாள்.

“நான் தூரம் சென்றால் என்னைத்தேடி வர மாட்டியா நீ?” என்கிற கோபம் அவனுள்.

மீண்டும் அவளாக அவனின் காதல் புரிந்து காதலாக வர வேண்டுமென பேராசைக் கொண்டான்.

வருவின் இந்த மௌனக்காதல் ஏனோ யாதவிற்கு பிடிக்கவில்லை. அப்போது சொல்ல வேண்டாமென மறுத்தாலும், பதினேழு வயதிலேயே அவனிடம் காதலை சொல்ல தைரியமாக வந்த வருவை அவனின் மனம் வெகுவாய் எதிர்பார்த்தது.

அவனை அவள் துரத்தி துரத்தி காதலிக்க வேண்டுமென காதல் வெறி கொண்டான்.

யாதவ் சிங்கிள் என்று இருக்கும் போதே அவனின் விலகலை மதித்து தள்ளி நின்றவள், இப்போது அவன் மற்றொரு பெண்ணை விரும்புகிறான் என்று தெரிந்தா தன் காதலை சொல்லப்போகிறாள். இது தெரியாது அதிகமாக எதிர்பார்க்கின்றான்.

‘இந்த இரண்டு நாளில் என் செயல்களுக்கான அர்த்தம் புரியவில்லையா செல்லம்மா?’

அவனின் மனகுரல் அவளின் செவி நுழைந்ததோ! விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள்.

“எதாவது கேட்டிங்களா?”

இல்லையென மறுப்பாய் தலையசைத்தவனின் கண்கள் என்னவோ அவளின் கரும் புள்ளியையே தொட்டு தொட்டு மீண்டன.

அவனால் கண்களை நகர்த்த முடியவில்லை. உணர்வு குவியலில் சிக்கித் தவித்தான்.

“ஓ காட் இட்ஸ் டிரைவிங் மீ” என்றவன் இதயத்தில் குத்திக் கொண்டான்.

அவனின் பார்வை போகும் திசை அறிந்து பதட்டமானவள் முகமெங்கும் வியர்வைத் துளிகள்.

பதட்டமும், வியர்வையும் அவளுக்கு தனி அழகை கூட்டின. அவனின் பார்வையில் ரசனைக் கூடிக்கொண்டே போனது.

“நான் போகட்டுமா?”

அவனிடம் பதிலில்லை. அவள் மீது ஆழ்ந்த பார்வை.

“இருக்கட்டுமா?”

அதற்கும் பதிலின்றி போனது.

“நான் போறேன்.”

“என்னை விட்டா?”

எழுந்து அடி வைத்தவள் அவனின் கேள்வியில் தடையென நின்று யாதவின் முகம் ஏறிட…

“இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆதுக்கு ட்ரிப்ஸ் முடிஞ்சிடும். சேர்ந்தே போகலாம் சொன்னேன்” என்று கூறினான். சமாளித்தான்.

“புரியர மாதிரி பேச மாட்டிங்களா?” கேட்டவள் அவனின் பதிலின்றி நகர்ந்தாள்.

“சீக்கிரம் புரியும் செல்லம்மா. புரிய வைக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டவனின் முகத்தில் மந்தகாசப் புன்னகை.

ஆனால் அவனின் இந்த புன்னகை இன்னும் இரு தினங்களில் தொலைந்து, காதல் வழிய உயிராய் நேசிப்பவளிடம் கோப முகம் காட்டப்போகிறோம் என்பதை அறியாது போனான்.

காதலை மட்டுமே காட்டிட முடிவு செய்திருந்தவன், கோபத்தைக் காட்டி வதைக்க இருக்கின்றான்.

யாதவ் வாய் திறந்து காதலை சொல்லியிருந்தால் அவளின் குழப்பங்கள் யாவும் கதிர் பட்ட பனியாய் காணாமல் போயிருக்கும். நடக்கவிருக்கும் நிகழ்வுகளை நடக்காது விலக்கியிருக்கும். ஆனால் இங்கு நடக்க வேண்டுமென இருப்பது நடந்துதானே ஆகும். காலத்தின் கணக்கினை வென்றவர் உண்டோ!

வரு நேராகச் சென்றது விஷாலின் கேபினிற்கு. அவனின் பணி நேரத்தை தொந்தரவு செய்ய விரும்பாதவள், வெளியில் அவனுக்காக காத்திருக்கும் நோயாளிகளை கண்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவளின் கவனம் சற்றும் நடப்பில் இல்லை. எங்கெங்கோ தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்தது.

நோயாளிகள் முடித்து ரவுண்ட்ஸ் செல்வதற்காக வெளியில் வந்த விஷால், அங்கு வரு அமர்ந்திருப்பதை கண்டு அவளின் அருகில் சென்றமர்ந்தான்.

கன்சல்டிங் நேரம் முடிவடைந்ததால் அத்தளம் ஆளின்றி அமைதியாக இருந்தது. ஆங்காங்கே செவிலிகளின் நடமாட்டம்.

விஷாலின் அரவத்தை அவள் உணரவே இல்லை.

“என்னடா இங்கு உட்கார்ந்திருக்க?” தோள் தொட்டு விஷால் வினவ, அவனின் தோளிலேயே சாய்ந்து கொண்டாள்.

“மென்ட்டலி அம் நாட் ஸ்டேபில் டா.”

“யாதவ் எதாவது ஹர்ட் பண்ணிட்டானா?”

அவள் கேள்வியாய் அவனை பார்த்தாள்.

“யாது உன்னைத் தேடினான். அதனால் கேட்டேன்” என்றான்.

“ஹோ” என்றவள் அமைதியாகிட,

“யாது உன்னிடம் பேச ஆரம்பித்ததை என்னிடம் கூட நீ சொல்லவில்லையே?”

யாது மேல் வைத்திருக்கும் காதலைத் தவிர இதுவரை வேறு எதையும் வரு விஷாலிடம் மறைத்தது இல்லை. அந்த உரிமையில் தான் அவன் வினவியது.

யாதுவிடம் காதலை சொல்லியிருந்தால், அவன் அதனை ஏற்றிருந்தால் விஷாலிடம் மறைத்திருக்க மாட்டாளோ!

“மாமா பேசியதை இன்னும் என்னாலே நம்ப முடியவில்லை.”

“ஹ்ம்ம்…”

“எனக்கு நிகிலா மொபைல் நெம்பர் வேணும்.”

“எதுக்கு?”

“எதுக்கோ?”

“யாதவே அதிலிருந்து வெளியில் வந்துட்டான். நீ பேசி பார்க்கிறேன் என்பதெல்லாம் தேவையில்லாதது.” இதோடு சேர்த்து அக்காதலின் உண்மை நிகழ்வுகளையும் சேர்த்து சொல்லியிருக்கலாமோ?

“நாம் நேசித்த ஒருத்தர் நமக்கு கிடைக்கலன்னா… அந்த வலியை விவரிக்க வார்த்தைகளே இல்லை.” சொல்லியவள் சென்றுவிட்டாள்.

ஆனால் அவள் சொல்லிச் சென்றதில் விஷால் தான் அதிர்ச்சிக்குள்ளானான்.

வரு சென்ற பின்னும் அத்திசையையே வெறித்திருந்தான்.

“என்னடா ட்யூட்டி ஓவரா? அப்படியே நின்னுட்ட?”

அங்கு வந்த யாது சிலையென நின்றிருக்கும் விஷாலின் முதுகில் ஒரு அடி வைத்து வினவினான்.

“இரண்டு நாளா என்ன நடக்குதுன்னே எனக்கு ஒன்றும் புரியலடா” என்று யாதவும் ஜானும் தன்னிடம் மறைக்க என்ன காரணமென்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியதோடு,

“வரு யாரையோ லவ் பண்ணுறாள் போல டா” என்ற விஷால், வரு சொல்லிச்சென்ற வார்த்தைகளையும் சேர்த்தே சொன்னான்.

“யாரை?”

“அது தெரிந்தால் சொல்ல மாட்டேனா?” என்ற விஷால், “நான் ஆதுவை பார்க்கப்போறேன்” என்று சென்றுவிட்டான்.

இப்போதாவது யாதவ் தான் வருவை காதலிக்கிறேன் என்பதை விஷாலிடம் கூறியிருந்தால், வரு நிகிலாவின் எண்ணை கேட்டதை விஷால் யாதுவிடம் சொல்லியிருப்பான். அல்லது வருவிடம் யாதவ் உன்னைத்தான் விரும்புகிறானென்று உண்மையை சொல்லி வருவின் செயலை தடுத்தாவது இருந்திருப்பான். இங்கு யாரை குற்றம் சொல்ல. காதல் தன்னையே நொந்து கொண்டது.

காதலால் காதலர்கள் படும் பாட்டை விட, காதலர்களால் இந்த காதல் படும் பாடு தான் அதிகம்.

காதல் வலி. வருவின் வார்த்தையில் அப்பட்டமான காதல் வலி.

‘காதலை காட்ட வேண்டுமென நினைக்கும் நானே உன்னை வலிக்கச் செய்கின்றேனே! மன்னித்துவிடு செல்லம்மா. ஒரே ஒருமுறை நீயாக வந்து காதலை சொல்லேன். நான் என்னுடைய மொத்த காதலையும் உன் பாதத்தில் சமர்பிக்கின்றேன்.’ மனதோடு பேசியவனின் மௌன பாஷை அவளை சேரவே இல்லை.

****

“உன் காதலை நான் ஏற்கல என்றதும் எனக்கு தண்டனை கொடுக்க முடிவு பண்ணிட்ட… ரைட்?”

ஹரியின் கேள்வியில் அதிர்ந்து அவனை ஏறிட்டாள் ஆதினி.

“என்னால் தான் நீ இறந்துவிட்டாய் என்கிற குற்றவுணர்வு என் வாழ்நாள் முழுக்க என்னை தொடர்ந்திருக்குமே!”

ஹரியின் வார்த்தைகள் புரிய தன்னையே கடிந்துகொண்டாள்.

“நான் இந்த கோணத்தில் யோசிக்கவே இல்லை.”

“எதைத்தான் யோசித்தாய்! யோசித்திருந்தால் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்க மாட்டாய்.”

அதற்கு மேல் ஹரி ஒன்றும் பேசவில்லை. தன்னிலையில் அப்படியே இருந்தான்.

‘இப்போ எதுக்கு இங்கேயே நிக்குது.’ அவனின் பார்வை அவளை இயல்பாக இருக்கவிடாது உள்ளுக்குள் தவிப்பை உண்டாக்கியது.

ஹரியின் முகத்தை பார்த்திடாது கவனமாக தவிர்த்தாள். மீண்டுமொரு முறை அவனிடம் காதலென்று நின்றுவிடக் கூடாதென்பதில் தெளிவாக இருந்தாள்.

சில நிமிடங்கள் மௌனங்களில் கழிந்தது.

“டூ யூ ஸ்டில் லவ் மீ?” ஹரியின் அக்கேள்வி நிசப்தமான அறை முழுக்க எதிரொலித்தது.

நிமிர்ந்து அவனை நேருக்கு நேர் சந்தித்தவள் என்ன பதில் சொல்வதென்று தடுமாறினாள். கருவிழிகள் நிலையில்லாது அலை பாய்ந்தன.

ஆதினி வாய் திறந்துதான் சொல்ல வேண்டுமென்றில்லை அவளின் தோற்றமே ஹரிக்கு காதலை தெள்ளென விளக்கியது.

“தெரிஞ்சு என்ன செய்யப்போற? எப்படியும் நோ தானே சொல்லப்போற” இனி அவனிடம் காதலை காட்டுவதில்லை என்பதில் கவனமாக இருந்தாள்.

“அப்போ உன் லவ்?”

ஹரியின் அக்கேள்வியில் மலுக்கென ஆதினியின் கண்கள் குளமாகின. முகத்தை அவனுக்கு காட்டாது திருப்பிக் கொண்டாள்.

“ஒன் சைட் லவ்வுக்கு வேல்யூ கிடையாது.” தொண்டை அடைக்க வலி நிறைந்த குரலில் கூறியவள், “பிளீஸ் கொஞ்சம் போறீயா?” என்று இறைஞ்சினாள்.

“மொத்தமாவா?”

ஹரியின் கேள்வியில் அதிர்ந்து பார்த்தவளின் கண்களிலிருந்து துளி நீர் கன்னம் தாண்டி உருண்டது.

அந்த கணம் காதலை அவள் முன் கொட்டி கவிழ்த்திட துடித்தவன் தன்னை அடக்கினான்.

தான் கேட்ட கேள்விக்கு ஆதியிடமிருந்து எவ்வித எதிர்வினையும் வராதிருக்க, அவரை மீறி எதையும் செய்துவிடக் கூடாது. அவளின் வருத்தம் போக்க இப்போது காதலை சொல்லி ஆதி தன்னை ஏற்காமல் போகும் நிலையில் மீண்டும் ஆதினியை துறந்து விலகி செல்வது கடினம். அதிலும் கொடியது ஆதினியை யோசித்து ஆதியின் பேச்சை மீறுவது. அதற்கு இப்போது மௌனமாக சென்றிடுவதே மேலெனக் கருதினான்.

அமைதியாக அவளின் விழி வட்டத்திலிருந்து மறைந்திருந்தான்.

‘இப்போ கூட என் காதல் உனக்கு தொல்லைதான் இல்லையா? உன் குற்றவுணர்வை பற்றி யோசித்த நீ என் மனதை யோசிக்கவில்லையே!’ கைகளில் முகம் புதைத்தவளின் உடல் அழுகையில் குலுங்கியது.

சில நிமிடங்களில் தன்னைத்தானே தேற்றிக்கொண்டவள், வருவின் வார்த்தைகளை எண்ணி தன்னை திடப்படுத்திக் கொண்டாள்.

‘நடப்பது நடக்கட்டும்.’ பற்றற்ற நிலையில் அவள். காதலில் கரைந்த மனதினை கல்லாக்கினாள். இனி தன்னுடைய காதல் எவ்விதத்திலும் ஹரிக்கு தொல்லையாகிவிடக் கூடாது என்று நினைத்தாளே தவிர, காதலை துறக்க நினைக்கவில்லை.

இப்பொழுதும் ஹரியென்றே ஆதினியின் இதயம் துடித்தது.

ஹரியின்றி ஆதினியில்லை என்பதே உண்மை. புரிந்த நிலையிலும் தவிப்பு ஏனோ? விடை ஆதியின் கைகளில்.

“ஜான் அண்ணா இல்லையா?”

ஜானைத்தேடி வந்த வரு, அங்கு அவனில்லை என்றதும், செவிலியிடம் வினவினாள்.

வரு யாரென்று அறிந்திருந்த செவிலிப்பெண்ணும் தன்மையாக பதிலளித்தாள்.

“டாக்டர் சார் கவுன்சலிங்கில் இருக்கிறார் மேம்.” சொல்லிய செவிலி சென்றிட, ‘ஜானிடம் பேச நினைக்கும் போதெல்லாம் ஏதேனும் தடை ஏற்பட்டு தள்ளிப்போகிறதே’ என்று சிந்தனையில் உழன்றவளாக ஆதினியின் அறை நோக்கி நடந்தவளுக்கு இன்ஸ்டாவில் நிகிலா யாதவின் பிரண்ட்ஸ் லிஸ்டில் இருப்பது நினைவுக்கு வந்தது.

உடனடியாக தன்னுடைய அலைபேசியை எடுத்தவள் இன்ஸ்டா செயலியில் உள் நுழைந்து தன்னுடைய கணக்கை திறந்து யாதவின் பக்கத்திற்கு சென்று ஆராய, நிகிலா அவனின் கணக்கிலிருந்து விலகியிருந்தாள்.

“என்ன பழக்கம் இதுன்னு தெரியல, ஒன்று சரியில்லை என்றால் முகப்பு படத்தை நீக்குவது அல்லது கணக்கிலிருந்து வெளியேறுவது” என்று தேடியது கிடைக்கவில்லையென்ற கடுப்பில் முணுமுணுத்தபடி அலைபேசியை குடைந்தவள், விஷால் மற்றும் ஜானின் கணக்கையும் ஆராய்ந்தாள்.

கடைசியில் ரூபியின் வாயிலாக நிகிலாவை எட்டிய வரு, அவளுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினாள்.

*****

யாதவ், வரு, ஆதினி வீட்டிற்கு வந்தபோது அங்கே சூர்யாவும், கல்பனாவும் வீற்றிருந்தனர்.

“அம்மா… அப்பா” என்று கூவியபடி ஓடியவள் இருவரையும் ஒன்றாக அணைத்துக் கொண்டாள்.

“வாங்க மாமா, வாங்க அத்தை” என்று இருவரையும் வரவேற்ற யாதவ் தன்னை சுத்தம் செய்துகொள்ள அறைக்குச் சென்றிட, இவர்கள் தங்கள் பேச்சினைத் தொடர்ந்தனர்.

ஆதினியின் நலனை விசாரித்த கல்பனா,

“இந்த காலத்து பசங்க பெத்தவங்களிடம் எதையும் சொல்றதில்லை” அங்கலாய்த்தார்.

“எதுவா இருந்தாலும் இந்த மாமன்கிட்ட சொல்லியிருக்கலாமே டா” என்று ஆதினியின் தலை வருடிய சூர்யா, “நீ இந்த வீட்டோட முதல் வாரிசுடா… எல்லாமே நீதான்” என்று தழுதழுத்தார்.

சூர்யாவை கட்டிக்கொண்ட ஆதினி எதுவும் பேசாது தன் அணைப்பின் மூலம் செய்த தவற்றிற்கு மன்னிப்பு வேண்டினாள்.

பாச பிணைப்பிற்கு பிறகு அங்கு சூழல் சரியாக, அனைவரும் சகஜமாகினர்.

ஆதி கிளையன்ட் வந்திருப்பதாக வீட்டின் போர்டிகோவிற்கு எதிர் பக்கம் இருக்கும் அலுவலக அறைக்கு சென்றிட, நிரலியும், கல்பனாவும் இரவு உணவைப் பற்றி பேசியபடி கிச்சனிற்குள் நுழைந்து கொண்டனர்.

“உங்க பொண்ணை பார்க்க வந்தீங்களா மாமா?” ஆதினி வருவை பார்த்துக்கொண்டே கேட்க, வரு ஆது பக்கம் திரும்பகூட இல்லை.

“இல்லையே, என் மருமகளை பார்க்க வந்தேன்.” சூர்யா தன்னருகில் அமர்ந்திருந்த ஆதினியின் நெற்றியில் ஆதுரமாக முத்தம் வைத்தார்.

“நம்பிட்டேன்.”

“நம்புடா” என்ற சூர்யா “நாளைக்கு மாமாக்கும், அம்முக்கும் திருமணநாள். உங்களையெல்லாம் பார்த்து ரொம்ப நாளாச்சு, வயலில் வேலை எதுவுமில்லை அதனால் கிளம்பி வந்தால் நீ இப்படி பண்ணிவச்சிருக்க” என்றார் முகச் சுணக்கமாக.

“இப்பவும் ஒன்னுமில்லை ப்பா… இன்றிரவு மாமாவுக்கும் அத்தைக்கும் சர்ப்ரைஸா செலபிரேட் செய்யலாம்.

இந்த மேடம் செய்த வேலையால், வெளியில் காட்டிக்கொள்ளா விட்டாலும் உள்ளுக்குள் இருக்கும் வருத்தம் நீங்க இதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று யோசனை வழங்கினாள்.

சூர்யா சரியென சம்மதம் வழங்க, ஆதினி வருவை முறைத்து பார்த்தாள்.

“என்ன லுக்கு?” வரு மிரட்டினாள்.

“அதான் சாரி சொன்னனே!”

வரு முகம் திருப்பினாள்.

“உங்களுக்குள்ள என்ன லடாய்?” சூர்யா பஞ்சாயத்து செய்ய அவர்களுக்கு நடுவில் புகுந்தார்.

“உங்க பொண்ணு என்னை அடிச்சிட்டா மாமா?” ஆதினி தன் மாமனிடம் புகார் வாசித்தாள்.

“இவள் செய்ததற்கு நாலு அறை கொடுக்காது எல்லாரும் கொஞ்சிட்டு இருக்காங்க. நானாவது அடித்தனே” என்ற வரு “விடுங்கப்பா” என்றாள்.

“மாமா.” ஆதினி சிணுங்க,

“சரி சரி உங்க பஞ்சாயத்து அப்புறம் வச்சுக்கலாம். இப்போ நைட் என்ன செய்யலாம் யோசிக்கலாம்” என்று சூர்யா இருவரையும் திசை திருப்பினார்.

“நான் ரெடி மாமா. என்ன செய்யலாம் சொல்லுங்க?” ஆதினி தன் காதல் வலியை ஒதுக்கி வைத்து உற்சாகமானாள்.

“ப்பா அவங்க ஒன்னும் செய்ய வேண்டாம். போய் ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க, நமக்கு யாதவ் மாமா ஹெல்ப் செய்வாங்க” என்றாள் வரு.

“இப்போ எனக்கு பெயின் இல்லை மாமா” என்று சொல்லிய ஆதுவை மறுத்து ஓய்வெடுக்க அறைக்கு அனுப்பி வைத்தார் சூர்யா.

“சாப்பிட்டு முடித்து எல்லோரும் தூங்கச் சென்றதும் வேலையை ஆரம்பிக்கலாம் ப்பா” என்ற வருவும் ரெபிரஷ் செய்து வருவதாக சொல்லிச் சென்றாள்.

வெளிநாட்டில் தன்னுடன் பயின்ற நண்பன் ஒருவன் ஒரு நோயாளி விடயமாக யாதவுடன் கலந்தாய்வு செய்ய வீடியோ கால் செய்திருக்க அதில் மூழ்கிவிட்டான் யாதவ்.

இருவரின் விவாதமும் நள்ளிரவை நெருங்கியும் தொடர்ந்தது.

திடீரென பால்கனியில் வித்தியாசமான சத்தம் கேட்டு எழுந்து சென்ற யாதவ் யாரென்று பார்க்க இருளில் விளக்கு வெளிச்சத்தில் சுவற்றில் பெரியதாய் ஒரு நிழலுருவம்.

அது யாரென்று அறியும் முன்னர் பால்கனி அருகிலிருக்கும் சன்னல் வழியே அவ்வுருவம் உள்ளே குதித்திருந்தது.

*ஒரு மனம் நெருங்க
மறு மனம் விலக
அங்கே துவங்குகிறது
காதல் சடுகுடு.*

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
22
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்