இதயம் 11 : (இல்லை எனும் நினைவு)
இரவு முழுக்க ஆதினியின் நினைவில் மருகிய ஹரி விடிந்ததும் அவளை காண மருத்துவமனைக்கு புறப்பட்டான்.
‘அங்கு என்ன நடந்தாலும் ஆதிக்கு தன்னால் துரோகம் நேர்ந்திடக் கூடாது. தன்னால் ஆதி வருந்தினார் என்றிருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்’ என்று நினைத்தான்.
ஆளாளுக்கு ஒவ்வொரு மூளையில் அமர்ந்திருந்தனர். விஷாலும் வீட்டிற்கு செல்லவில்லை. ஸ்வேதா, ராகவும் கூட வந்துவிட்டிருந்தனர்.
மாமியும், ஹரிணியும் குற்றவுணர்வில் தவித்தபடி அமர்ந்திருக்க… அவர்களின் முகமே வருவிற்கு ஏதோ நடந்திருக்கிறது. ஆதினியின் இச்செயலுக்கு பின்னால் இருப்பது அவளின் காதல் தான் என்பதை புரிய வைத்திருந்தது.
அவர்களின் அருகில் சென்றவள்,
“எதுவா இருந்தாலும் சமாளிச்சிடலாம் பாட்டி. ஆதுக்குத்தான் ஒன்றும் ஆகவில்லையே, எதுக்கு கலக்கம்” என்று மெல்லக்கூறி அவரின் கையில் தன் கை வைத்து அழுத்திக்கொடுத்து ஆறுதல் படுத்தினாள்.
“எனக்கு மனசு ஒரே தவிப்பா இருக்கட்டி குழந்தை” என்றவர், “இந்த ஹரி பயல் கொஞ்சம் மனசு இறங்கி வரப்பிடாதான்னு இருக்கு” என்று நேற்று நடந்தவற்றை அனைத்தையும் வருவிடம் கூறினார்.
அப்போது ரவுண்ட்ஸ் முடித்துக்கொண்டு யாதவ் அங்கு வர அனைவரின் கவனமும் அவனிடம் திரும்பியது.
“எப்போ தான்டா கண் திறப்பாள்? முழுசா ஒருநாள் முடிஞ்சிருச்சு.” நிரலி யாதவின் கையினை பிடித்துக்கொண்டு வினவினார்.
என்னதான் இனி மகளின் உயிருக்கு எவ்வித ஆபத்துமில்லையென தெரிந்தாலும் அவள் இன்னும் கண் திறக்காமல் இருப்பது நிரலிக்கு கவலையாக இருந்தது.
“இன்னும் ஒன் ஆர் டூ ஹவர்ஸில் கான்ஷியஸ் வந்திடுவாள் மாம்” என்றவன், “டாட் டேக் கேர் ஆஃப் ஹர்” என்று ஆதியிடம் கூறிவிட்டு ஆதினியின் அறைக்குள் நுழைந்தான்.
காயத்தினை பரிசோதித்து தானே ட்ரெஸ்ஸிங் செய்தவன்…
“சீக்கிரம் கண் திற ஆது எனக்கே பயமா இருக்கு” என்று அவளின் நெற்றி கேசம் கோதி கூறியவன் ஆதினியின் அருகிலேயே இருக்கையை இழுத்துப்போட்டு அமர்ந்துவிட்டான்.
காற்றை கிழித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் விரைந்து வந்த ஹரியின் கேசம் முற்றிலும் கலைந்து முன்னெற்றியில் தவழ்ந்திருந்தது. இனியும் தாமதிக்க முடியாது ஆதுவை பார்த்தே ஆகவேண்டுமென்ற எண்ணத்தில் வந்திருந்தவன் தன் தோற்றத்தை கருத்தில் கொள்ளாது, வீட்டில் இருப்பதற்கு ஏற்றதாக அணிந்திருந்த பருத்தி பைஜாம்மா குர்தாவோடே வந்திருந்தான்.
ஹரியின் அந்நிலையே அவன் சுயத்தில் இல்லையென்பதை பறைசாற்றியது.
வரவேற்பில் விசாரித்து ஆதினி இருக்கும் அறையை நோக்கி வந்த ஹரி மொத்த பேரும் கவலை படிந்த முகத்துடன் அமர்ந்திருப்பதைக் கண்டு தன்னவளுக்கு என்னவானதோ என துடிதுடித்தான்.
ஹரியை முதலில் கண்ட மாமி,
“கடன்காரன் இங்கையும் வந்துட்டான். அவளின் நிம்மதியை கெடுக்க” என்று முணுமுணுக்க அவருக்கு இருபுறமும் அமர்ந்திருந்த ஹரிணியும் வருவும் யாரென்று பார்க்க, ஹரியென்றதும் ஹரிணி முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“அச்சோ பாட்டி சும்மா இருங்க. நீங்க ஆது பக்கம் மட்டும் தான் பார்க்கிறீங்க” என்று மாமியை கடிந்து கொண்டவள் ஹரியிடம் சென்றாள்.
ஆதி நிரலியை தேற்றியபடி இருக்க ஹரியின் வருகையை அறியவில்லை. ஆதியின் கவனம் மொத்தமும் அவனின் பேபியின் மீதே.
ஸ்வேதா பிரசவ கேஸ் ஒன்று இருப்பதாகவும், விஷால் தனக்கு அறுவை சிகிச்சை ஒன்று இருப்பதாகவும் சொல்லி அந்த மருத்துவமனையிலேயே தத்தம் பிரிவிற்கு இருவரும் சற்று நேரத்திற்கு முன்பு தான் அங்கிருந்து சென்றிருந்தனர்.
இதுவரை ஆதி தான் அனைவரையும் எந்தவொரு சூழலிலும் தேற்றியிருக்கிறார். அவருக்கு தாங்கள் எவ்விதத்தில் ஆறுதல் சொல்லிவிட முடியுமென்று ராகவ் ஆதியை பார்த்தவாறே அமர்ந்திருந்தார்.
இத்தனை வருடத்தில் ராகவ் ஒருமுறை கூட ஆதியை இப்படியான ஒரு நிலையில் பார்த்ததில்லை. இப்படியான தருணத்தில் எப்படி ஆதியிடம் பேசுவதென்று தெரியாது அவரையே பார்த்தபடி இருந்தார்.
அங்கு அமர்ந்திருந்த யாரையும் நிமிர்ந்து கூட பார்க்காது நேரே வந்த ஹரி…
அறைக்கு வெளியில் நின்றபடி கதவிலிருந்த கண்ணாடி வழியே உள்ளே பார்த்தான்.
வாடிய கொடியென படுக்கையில் கிடைந்தவளை கண்டவன் முற்றிலும் உடைந்தவனாகினான்.
‘ஆதும்மா… ஏன்டி இப்படி?’ உள்ளுக்குள் கதறினான்.
ஆதினியின் அருகில் அமர்ந்திருந்த யாதுவை பார்த்த ஹரிக்கு சிறுவயதில் ஆதினிக்காக அவனிடம் சண்டையிட்ட யாதவ் நினைவிற்கு வந்தான்.
‘இப்போ உன் அக்காவின் இந்நிலைக்கு நான் தான் காரணமெனத் தெரிந்தால் அன்றுபோல் இன்றும் என்னிடம் சண்டை போடுவியா யாது?’ ஹரியின் மனம் வெகுவாய் பாரமேறியது.
ஓய்ந்து போயிருந்த ஆதினியின் நிலையை கண்ட பிறகு ஹரியின் உறுதி மெல்ல ஆட்டம் காணத் துவங்கியது.
அவனின் தவறு பூதாகரமாக கண் முன்னே!
ஆதியை மட்டுமே சிந்தித்தவன் முதல் முறையாக ஆதினியின் பக்கம் சிந்திக்கத் துவங்கினான்.
அந்நொடி ஆதி மற்ற யாரும் அவன் கண்ணுக்குத் தெரியவில்லை. ஏற்கனவே எடுத்திருந்த முடிவு, எங்கோ பின் சென்றது அவனிடம். இப்போது அவனின் எண்ணம் முழுக்க ஆதினி ஆதினி மட்டுமே! அந்நொடி ஆதி கூட அவனின் நினைவில் இல்லை.
ஆதிக்காக என்று பார்த்திருந்தவனின் எண்ணவோட்டம் ஆதினிக்காக என்று மாறியிருந்தது.
‘தனக்காக உயிர்விட துணிந்தவளுக்கு ஆதியின் முன் குறுகி நின்றாலும் பரவாயில்லை’ எனும் நிலையை அடைந்திருந்தான்.
“எப்போ வந்தீங்கண்ணா?” ஹரியின் அருகில் வந்த வரு வினவினாள்.
“எஸ்டெர்டே மார்னிங்” என்றவன், “ஆது…?” என்று கேள்வியாய் இழுத்தவனின் கண்கள் ஆதினியின் மீதே நிலைத்திருந்தது.
“உயிருக்கு எந்த ஆபத்துமில்லை.”
வரு அவ்வாறு சொல்லியதும் தான்
நேற்று முதல் தடைபட்டிருந்த ஹரியின் சுவாசம் சீரானது.
அதுவரை இடியென மத்தளம் கொட்டிக்கொண்டிருந்த அவனின் இதயம் அமைதி கொள்ள, ஒரு காலை பின்னோக்கி மடக்கி சுவற்றில் முதுகு பதிய நின்றவன் தலையை சாய்த்தி மேல் நோக்கி உயர்த்தி கண்களை மூடி ஆசுவாசம் அடைந்தான்.
ஹரியின் அந்நிலையே ஆதினியின் மீது அவன் வைத்திருக்கும் காதலை வரு உணர்வதாய்.
“இவ்வளவு காதல் இருக்கும் போது… இதெல்லாம் எதற்குண்ணா?”
“ஹாய் மை பாய்… எப்போ ரிட்டன் ஆன?” கேட்டபடி ஆதி அவர்களின் அருகில் வந்தார்.
ஆதியின் குரலில் இருவருமே அதிர்ந்து திரும்பினர். வருவின் கேள்வி ஆதியின் செவியை அடைந்திருக்குமோ என்கிற அச்சம் அவர்களுள்.
நிரலி மருத்துவமனை வளாகத்திலேயே இருக்கும் கோவிலுக்கு சென்று வருவதாக சொல்லி நகர்ந்திட ஆதியின் கவனம் மற்றவர்களின் மீது படிய, ஹரியை கண்டவர்… நீண்ட நாட்களுக்குப் பிறகான அவனின் வரவில் மகிழ்ந்து தான் போனார்.
ஆதிக்கு ஹரியென்றால் அத்தனை பிடித்தமாயிற்றே! அதனால் தன்னுடைய தற்போதைய சூழல் மறந்து அவனுக்காக மகிழ்வு கொண்டு ஹரியின் அருகில் வந்தார்.
“எதுக்கு இந்த ஷாக். அப்படியென்ன ரகசியம் பேசிட்டு இருந்தீங்க?”
ஆதியின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று வரு தயங்கி நிற்க,
“எனக்கு ஆதுவை கல்யாணம் பண்ணித் தறீங்களா ஆதிப்பா?” என சற்றும் யோசிக்காது வார்த்தைகளில் தடுமாற்றமின்றி ஆதியின் கண்களை தீர்க்கமாக சந்தித்து கேட்டுவிட்டான்.
அங்கிருந்த அனைவரும் ஹரியின் பேச்சில் அதிர்ச்சி கொள்ள…
ஆதினி கண் விழித்து விட்டாள் என்பதை சொல்ல வெளியில் வந்த யாதவும் ஹரியின் வார்த்தைகளை கேட்டு… ‘டேய் உன்னை அம்பின்னு நினைச்சிருந்தேனடா’ என்று அதிர்ந்தான்.
ஆனால் எல்லோருக்கும் ஏற்பட்ட அதிர்வில் பாதிகூட ஆதிக்கு இல்லை.
ஆதி ஏதோ சொல்ல வாய் திறக்க,
“டாட்… ஷீ இஸ் கான்ஷியஸ்” என்ற யாதவின் வார்த்தையில் அனைவரும் அறைக்குள் சென்றனர்.
தந்தையை கண்டதும் எழுந்து அமர முயற்சித்தவளை யாதவ் கைத்தாங்களாக பிடித்து எழுப்பி, படுக்கையின் உயரத்தை தலை பகுதியில் சரிசெய்து தலையணையை நிமிர்த்தி வைத்து அவளை சாய்வாக அமர வைத்தான்.
“ஆதும்மா… அப்பாவிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே!” வருத்தத்தோடு ஒலித்த ஆதியின் குரலில் ஆதினிக்கு குற்றவுணர்வாகிப் போனது.
“சாரிப்பா” என்றவள் ஆதியை இடையோடு கட்டிக்கொண்டாள்.
“ஆதும்மா.” நிரலியின் விளிப்பில் ஆதியிடமிருந்து பிரிந்த ஆதினி…
“அம்மா” என்று கை விரிக்க, ஓடிச்சென்று அவளை அணைத்தவர், ஆதினியிடம் எதுவும் கேட்கவில்லை.
“நவ் ஷீ இஸ் ஆல்ரைட் மாம். பட் கொஞ்சம் ரெஸ்ட் தேவை” என்று யாதவ் சொல்ல அதற்கு மேலும் அவளை சூழ்ந்திருக்க மனமின்றி ஹரிணி உட்பட ஒவ்வொருவராக அவளின் நலன் விசாரித்து வெளியேறிட… ஹரி நின்ற இடத்திலிருந்து அசையவில்லை. அவள் மீதிருந்த பார்வையை மாற்றவுமில்லை.
அனைவரும் இருக்கும் வரை ஆதினியிடம் வரு ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அவளின் அருகில் வரவுமில்லை.
இறுதியாக ஆதி வெளியேற, யாதவ் செவிலியை தடுத்துவிட்டு தானே ஐவி’யை மாற்றிக்கொண்டிருக்க, வருவும் ஹரியும் தேங்கினர்.
ஹரியை ஆதினி நிமிர்ந்தும் பார்க்கவில்லை. ‘பார்த்தால் தன்னை மீறி தன் கண்கள் அவனிடம் மீண்டும் காதலை யாசித்துவிடும்’ என்று அவன் புறம் பாயத் துடித்த கரு விழிகளை முயன்று கட்டுப்படுத்தினாள்.
“வரு.”
எப்போதும் தன்னை டார்லிங் என்று அழைத்து சுற்றி வரும் வருவின் அமைதி ஆதினியை வருத்தியது. அதனால் தானே வருவிடம் பேச விழைந்தாள்.
மார்பிற்கு குறுக்கே கைகளை கட்டியபடி நின்றிருந்த வரு, ஆதினியின் அழைப்பில் அவளை மெல்ல நெருங்கினாள்.
‘எதுக்கு இப்படி பண்ண?’
வருவின் பார்வைக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
“சா… சாரி…” ஆதினி சொல்லி முடிக்கவில்லை, வருவின் மென் கரம் இடியென ஆதினியின் கன்னத்தில் இறங்கியது. சத்தம் அறையை நிறைக்க, யாதவே வருவின் கண்களில் தெரிந்த கோபத்தில் ஒரு கணம் ஸ்தம்பித்து விட்டான்.
ஹரியிடம் எவ்வித மாற்றமும் இல்லை.
இதுநாள் வரை காதலுக்காக தன்னிடம் மல்லுகட்டி நின்ற அந்த ஆதினியை அவனின் மனம் தேடியது.
“யாருக்கு வேணும் உன் சாரி. மாமா வேண்டுமானால் உன்னை கஷ்டப்படுத்திடக் கூடாதுன்னு ஒன்னுத்துக்கும் அர்த்தமில்லாத உன் சாரியை ஏற்றிருக்கலாம்” என்று வெடித்த வரு, “உன் உயிர் உனக்கு சாதாரணமா இருந்திருக்கலாம். ஆனால் நம் குடும்பத்தில்?” எனக் கேட்டு கேள்வியாய் நிறுத்தினாள்.
ஆதினி குற்றவுணர்வில் தலை கவிழ்ந்தாள்.
“கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டியா? உனக்கு காதலிக்க ஒரு காரணம் இருக்குன்னா… உன் காதலை மறுக்க ஹரி அண்ணாவுக்கு ஒரு காரணம் இருக்கும் தானே!
அது என்னன்னு கண்டுபிடிச்சு அவரை காதலை ஏத்துக்க வைப்பதை விட்டு… இப்படி சாக முடிவெடுத்தால் யாருக்கு என்ன நஷ்டம்.
கஷ்டம் தான்… ஆனால் அது எத்தனை நாளுக்கு?
நீ இல்லை என்பது நினைவு மட்டுமே!
அதே நீ உன் காதலில் போராடி ஜெயித்து வாழ முடிவெடுத்திருந்தால் உன் வாழ்நாள் முழுக்க அது சந்தோஷம். உனக்கும் உன்னை சார்ந்தவங்களுக்கும் அது தான் நீ கொடுக்கும் உண்மையான சந்தோஷம்.
அதை விடுத்து உன்னைப் பற்றி மட்டும் சுயநலமா யோசித்து நீ எடுத்த இந்த முடிவால் தோற்றுப்போனது உன்னுடைய காதல் தான்.
வலி கொடுக்கிறதென்று தெரிந்தும் காத்திருந்த பார்… அது காதல்.
ஆனால் எப்போ காதலுக்காக போராடுவதைவிட சாகறது மேலென்று நினைத்து இந்த முடிவை எடுத்தாயோ அப்பவே உன் காதல் தோத்துப்போச்சு.”
நீளமாக பேசிய வரு அவ்வளவுதான் என்பது போல் வெளியேறிவிட்டாள்.
வெளியே செல்வதற்கு முன் ஹரியை ஏறிட்டவள்,
“காதலில் தப்பு சரின்னு எதுவுமில்லை. காதலிக்க ஆரம்பிச்சிட்டால் காதலுக்கு அப்புறம் தான் மற்றதெல்லாம்” என சொல்லிச் செல்ல ஹரிக்கு தலையில் கொட்டு வாங்கிய உணர்வு.
“ஷ்ஷ்ஷ்…” என்று இடவலமாக தலையாட்டிய யாதவிற்கு பெருமழை ஒன்று சடசடத்து விட்டுச் சென்றதை போலிருந்தது.
‘செல்லம்மா உனக்கு இவ்வளவு பேசத் தெரியுமா?’
எப்பவும் அமைதியான வருவையே பார்த்திருந்த யாதவிற்கு வருவின் இந்த அவதாரம் சற்று மலைப்பாகத்தான் இருந்தது.
வரு பேசிச் சென்றதில், தான் எவ்வளவு பெரிய தவறு இழைத்திருக்கிறோம் என்பது புரிய ஆதினி முகம் மூடி அழுதாள்.
குலுங்கி அழும் சகோதரியை தோளோடு அணைத்து தட்டிக்கொடுத்த யாதவ் ஹரியிடம் கண் காட்டிவிட்டுச் சென்றான். அவனவளைத் தேடி.
வரு பேசிய ஒவ்வொன்றும் அவளின் காதல் ஆழத்தை அவன் தெரிந்து கொள்வதாய். அவன் மீது எவ்வளவு காதல் இருப்பின்… இவ்வளவு உணர்வு மிக்க வார்த்தைகளை வரு பேசியிருப்பாள். அவன் மீது அவள் கொண்டுள்ள காதலை நினைக்கவே யாதவிற்கு கர்வமாக இருந்தது.
கொடுக்கப்படும் காதலைவிட பெறப்படும் காதல் சுகமானது.
அத்தகைய சுகத்தை யாதவ் இந்த கணம் உணர்கிறான். வானத்தில் சிறகு முளைத்த சிட்டாய் அவனின் இதயம் பறந்தது.
‘லவ் யூ செல்லம்மா.’ சொல்லும் போதே நிகிலாவிடம் இருந்த அர்த்தமற்ற காதலென்ற பெயருக்கும், இப்போது உள்ளத்து புறமாய் அவனின் வருவிடம் இருக்கும் காதலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் விளங்கின.
காதல் மிதக்க வைக்கும். மிதப்பவனை சுகத்தில் மூழ்க வைக்கும். அத்தகைய நிலையில் யாதவ்.
வருவைத்தேடி வந்த யாதவின் முன் ஆதி தென்பட,
“வீட்டிற்கு அழைத்துச் செல்லலாமா யாது?” என்று ஆதினியை டிஸ்சார்ஜ் செய்வதைப்பற்றி வினவினார்.
“ட்ரிப்ஸ் முடிந்ததும் போலாம் டாட்” என்றவன், “நீங்க வேண்டுமென்றால் மாம் கூட்டிட்டு கிளம்புங்க, ஆதுவை நான் அழைத்து வருகிறேன். அதான் உங்க மருமகள் உடன் இருக்கிறாளே!” என்றான்.
மருமகள் என்ற வார்த்தைக்கு யாதவ் கொடுத்த அழுத்தமே ஆதிக்கு புன்னகையைத் தோற்றுவித்தது. அதனை மறைத்தவராக அடுத்து பேசினார்.
“அடி ரொம்ப பலமோ?”
ஆதி கேட்டதில் யாதவ் சிரித்து விட்டான்.
“ஆதுகிட்ட தான் கேட்கணும். கொஞ்சம் பலம் தான் போல” என்றவனின் சிரிப்பு மட்டும் நிற்கவில்லை.
“போதும்டா… பியூச்சரில் நீ கொஞ்சம் பார்த்து நடந்துக்கோ” என்றார்.
அங்கு யாதவும் தன் காதலை சொல்லவில்லை, ஆதியும் உன் காதல் தெரியுமென்று வாய்விட்டு சொல்லவில்லை.
ஆனால் இருவரும் பகிர்ந்து கொண்டதைப் போன்று பேசியது தந்தை மகனுக்கு இடையேயான புரிதலை காட்டியது.
ஆதியின் பதிலுக்கு யாதவின் சிரிப்பு அதிகமாகியது.
“உங்க சந்தோஷம் தான்டா எங்களுக்கு முக்கியம்” என்று யாதவின் சிரித்த முகத்தை பார்த்து சொல்லிய ஆதி,
“ஆர் யூ ஷ்யூர் நாங்க கிளம்பவா?” எனக் கேட்க,
“யா வெல் டாட்” என்றான் யாதவ்.
“ஃபைன்” என்ற ஆதி திரும்பி நடக்க,
“டாட் ஹரி உங்களுக்கு ஓகே தானே!” என்றான் யாதவ்.
தன் நடையை நிறுத்தி திரும்பிய ஆதி மென் புன்னகை ஒன்றை இதழில் படரவிட்டு,
“அவன் இதை கேட்கணும் தான் இவ்வளவு நாள் வெயிட் பண்ணேன்” எனக் கூறிச் சென்றார்.
வரு எங்கு என்று மருத்துவமனை வளாகத்தையே ரவுண்ட்ஸ் என்கிற பெயரில் யாதவ் ஒரு சுற்று வந்துவிட்டான். ஆனால் அவள் எங்கு என்று தெரியவில்லை.
அறுவை சிகிச்சை முடிந்து எதிரில் வந்த விஷால் யாதவின் அலைப்புறும் கண்களைக் கண்டு,
“யாரையாவது தேடுறியா?” எனக் கேட்டான்.
“ம்… வரு.”
“நீ வருவையா தேடுற?” விஷாலிடம் ஆச்சரியம்.
“போடா” என்றவன் கட்டிடத்திற்கு முன் வெளியில் அவ்வளாகத்திலேயே இருக்கும் பெரிய அளவிலான தோட்டத்தில் பார்க்கலாம் என நகர,
அவர்கள் பேசியதை கேட்டபடி வந்த ஜான்,
“வரு சில்ரன்ஸ் அவுட் டோர் பிளே ஏரியாவில் இருக்கா(ள்) யாது” என்று அவனுக்கு வேண்டிய தகவலை அளித்தான்.
அது மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்… குழந்தை நோயாளிகளின் மாற்றத்திற்காக சிறு பூங்கா அமைக்கப்பட்டிருந்தது. அதையே ஜான் தெரிவித்தான்.
சிறுவர்கள் ஆங்காங்கே இருக்கும் ஊஞ்சல், சறுக்கல், ராட்டினம் என்று விளையாடிக் கொண்டிருக்க அவர்களை பார்த்தபடி அங்கிருந்த கல் மேடையில் வரு அமர்ந்திருந்தாள்.
அருகில் நிழல் விழ யாரென்று நிமிர்ந்தவள் யாதவ் என அறிந்து, பட்டென இறங்கி நின்று கொண்டாள். எங்கு நேற்று மாதிரி ஏதேனும் நடந்து கொள்வானோ என்கிற சிறு அச்சம்.
“என்கிட்ட என்ன பயம்?” என்று கேட்டவாறு அவள் அமர்ந்திருந்த இடத்தில் உட்கார்ந்தவன் அவளின் கை பிடித்து இழுத்து தனக்கு அருகில் அமர வைத்தான்.
அவள் அமர்ந்த பிறகும் அவளின் கை அவனுக்குள். பிடியை விடவில்லை.
வருவின் உடலில் மெல்லிய நடுக்கம். அதனை யாதவால் அவளின் கையின் பிடியில் உணர முடிந்தது.
“உனக்கு ஆது லவ் முன்பே தெரியுமா?”
ஆமெனும் விதமாக வருவின் தலை ஆடியது.
“வாய் திறந்து பேசமாட்டியா?”
“கை.” வருவின் பார்வை இணைந்திருந்த இருவரின் கைகளின் மீதே இருந்தது.
“கை தான். நான் மட்டுமென்ன காலென்றா சொன்னேன்.”
“அதில்லை… கை…”
“சரி விட்டுட்டேன்.” யாதவ் பிடியை விட எங்கே மீண்டும் பிடித்து விடுவானோ என தன்னிரு கைகளின் விரல்களையும் கோர்த்து, சற்று தள்ளி இடைவெளி விட்டு நகர்ந்து அமர்ந்தாள்.
“இது ரொம்பபஅஅ… பெரிய தூரம் தான்” என்று சிரியாது கேலி செய்தவன்,
“என்னோட லவ் தெரியுமா?” என்று கேட்க, கணப்பொழுதில் அவனின் முகத்தை நிமிர்ந்து நேருக்கு நேர் பார்த்த வருவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
*என்ன விந்தை இது
சுகமென நினைக்கையில்
வலியென மாறுகிறது
இந்த பேரன்பு காதல்.*
Epi 12
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
24
+1
+1