Loading

இதயம் 9 : (உணர்வுகளின் விசும்பல்)

பற்றியிருந்த கையின் சூட்டினை உடல் முழுக்க உணர்ந்தவள் இதயம் முழுக்க அதிர்வு உண்டானது.

அந்நொடி நிகிலாவின் நினைவு எழ,

‘யாதவ் வேறொரு பெண்ணுக்கு சொந்தமானவன்’ என்கிற எண்ணமும் முகிழ்த்தது.

எண்ணத்தின் கனம் மலையென மனதில் பாரத்தை ஏற்ற… பட்டென்று யாதவின் கரத்தினை விட்டவளாக அவனுக்கு முதுகு காண்பித்து நின்றாள்.

அச்சமயம் அங்கு வந்த தோட்டக்காரரை கண்டதும், ‘இவர் இவ்வளவு நேரமும் இங்கு தான் இருந்தாரா?’ என்ற அதிர்வோடு பின்னால் திரும்பி யாதுவை பார்க்க அவனோ அங்கிருந்த நடை பாதையில் ஓடிக் கொண்டிருந்தான்.

வரு அவனையே பார்த்திருக்க அவனின் சிறு பார்வையும் இவள் புறம் திரும்பவில்லை.

புதர் போல் அடர்ந்திருந்த முல்லைச் செடியை பின்பக்கமிருந்து வெட்டிவிட்டுக் கொண்டிருந்த தோட்டக்காரர் வரு யாதவிற்கு முதுகு காண்பித்து திரும்பி நிற்க, இவர்களுக்கு முன்பக்கம் வருவதை அறிந்த யாதவ் உடனடியாக ஜாகிங் செல்வதைப்போல் ஓடத் துவங்கியிருந்தான்.

யாதவின் மெல்லிய ஓட்டம்… அவனின் தோற்றம் சற்று நேரத்திற்கு முன்பு நடந்த நிகழ்வு மொத்தமும் கனவோ என வருவை எண்ண வைத்ததோடு குழப்பவும் செய்தது.

‘இப்போ இங்கு நடந்தது நிஜமா? கனவா?’

அவள் மூளை கேள்விக் கேட்க, ஓடிக்கொண்டிருந்த யாதவ் இவளை பார்த்து ஒற்றை கண்ணடித்து இதழ் விரித்தான்.

அதில் தொலைந்தவள் மீண்டு, வேகமாக வீட்டிற்குள் ஓடிவிட்டாள். யாதவின் சிரிப்பு சத்தம் அவளைத் தொடர்ந்தது.

‘இந்த மாமாவுக்கு என்னவோ ஆச்சு’ என்று புலம்பியபடி படியேறி மாடிக்கு தன் அறை பக்கம் சென்றவள் தற்செயலாக ஆதினியின் அறையை நோக்கி கருவிழி நகர கவனித்தவள் அதிர்ந்து போனாள்.

அறையின் கதவு மூடியும் மூடாமலும் இருக்க, கீற்று போலிருந்த இடைவெளியில் தெரிந்த ஆதினியின் நிலை பதற வைக்க அறைக்குள் விரைந்தவளின் கண்கள் மயங்கி கிடந்த ஆதினியின் மீது நிலைக்குத்தி நின்றது.

ஆதினியின் முகம் ரத்தமின்றி வெளுத்து இருந்து. பயத்தில் ஆதினியை நோக்கி வரு அடி வைக்க அவளின் பாதத்தில் சூடான திரவத்தின் பிசுபிசுப்பு.

என்னவென்று பார்க்க மெத்தைக்கு வெளியில் நீட்டிக்கொண்டிருந்த ஆதினியின் கையிலிருந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது.

உடலின் மொத்த ரத்தமும் வெளியேறியது போல் தரை முழுக்க சிவப்பு நிறம்.

“மாமா” என்று வீடே அதிர வரு கத்திய கத்தலில் தோட்டத்திலிருந்த யாதவ் கூட ஆதினியின் அறை நோக்கி ஓடிவந்தான்.

மகளின் நிலை கண்டு நிரலி மயங்கி சரிய, ஆதி பிரம்மை பிடித்து நின்றார். யாருக்கும் என்ன செய்ய வேண்டுமென்ற சுயமில்லை.

வெறித்து நின்றிருந்த யாதவினை உலுக்கிய வரு… “தூக்குங்க மாமா” என்க, என்னவென்று விழித்தவன் “சீக்கிரம் ஹாஸ்பிட்டல் போகணும்” என்று வரு கத்தியதில் நடப்பு புரிந்து மருத்துவனாக செயல்படத் துவங்கினான்.

கையில் நரம்பு அறுபட்ட இடத்தை மேலும் ரத்தம் வெளியேறிடாது துணியால் அழுத்தி கட்டியவன் முதலுதவி செய்து ஆதினியை தூக்கிக்கொண்டு சென்றான்.

யாதவின் பின்னோடு வந்த வரு,

காரின் பின்னிருக்கையில் யாதவ் படுக்க வைத்திருந்த ஆதினியின் அருகில் வள்ளியக்காவை அமர வைத்து,

“நீங்க போங்க மாமா. நான் அத்தை மாமாவை கூட்டி வருகிறேன்” என்றாள்.

அப்போதுதான் மயங்கி சரிந்த அன்னையின் நினைவு வர, “அய்யோ மாம்” என்று பதறி யாதவ் காரிலிருந்து இறங்க முற்பட,

“அதிர்ச்சியில் ஏற்பட்ட மயக்கம் தான் மாமா. முகத்தில் தண்ணீர் பட்டால் எழுந்துடுவாங்க. நீங்க ஆதுவை பாருங்கள்” என சமாதானம் செய்து அனுப்பி வைத்தாள்.

யாதவின் கையில் கார் வேகமெடுக்க, வீட்டிற்குள் வந்த வரு… யாதவிடம் சொல்லியதைப் போன்று நிரலியின் முகத்தில் நீர் தெளிக்க விழித்தவர், ஆதினியை கேட்டு கண்ணீர் சிந்த… மனைவியின் அழுகையில் அதிர்வு நீங்கி சுயம்பெற்ற ஆதி மனைவியின் கண்ணீரைத் துடைத்து…

“ஆதுக்கு எதுவும் ஆகாது. நீ அழுதால் நான் பலவீனமாகிடுவேன்” என்று அந்நிலையிலும் மனைவி அழுவதை தாங்காது சொல்ல நிரலியின் கண்ணீர் கண்களுக்குள் அமிழ்ந்து போனது.

அடுத்த நொடி மூவரும் மருத்துவமனை நோக்கி விரைந்தனர். அவர்கள் சென்ற போது ஆதினிக்கு சிகிச்சை நடைபெற்று கொண்டிருந்தது.

யாதவ் தான் தனது வருத்தத்தை புறம் தள்ளி வைத்து உடன் பிறந்தவளுக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தான்.

கையின் நரம்பு கத்தியால் கிழிக்கப்பட்டிருந்தது. ரத்தம் அதிகம் வெளியேறியதால் சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்கவில்லை.

சிகிச்சை அறையிலிருந்து வெளியில் வந்த யாதவ், வருவின் கை பிடித்து வேகமாக இழுத்துச் சென்றான்.

ஆதினிக்கு அருகிலிருந்த மற்றொரு படுக்கையில் வருவை படுக்க வைத்தவன், ரத்தம் எடுப்பதற்காக வெயினில் சொருகும் ஊசியை அவளின் கைக்கு அருகில் கொண்டு செல்ல, வருவின் கண்கள் தானாக இறுக மூடிக்கொண்டன.

“செல்லம்மா.” யாதவின் காதல் சிந்தும் குரலில் அவளை அவளே மறந்த நிலையில் வருவின் கண்கள் திறந்து கொண்டன.

சிறு வயதிலிருந்தே வருவிற்கு ஊசி என்றால் பயம். அலறி துடித்திடுவாள். மருத்துவமனைக்கு காய்ச்சலென்று அவளை அழைத்து செல்லுபவர்களை மட்டுமல்லாது மருத்துவரையும் ஒரு வழி செய்திடுவாள்.

அதனாலே அவளின் பயமறிந்து செயல்பட்டான்.

“என்னையேப் பாரு. என் கண்ணை மட்டும் பார்க்கணும்.”

யாதவின் வார்த்தைக்கு ஏற்ப வருவின் கண்கள் செயல்பட்டன.

“உனக்கும் ஆதுக்கும் சேம் பிளட் க்ரூப். சோ, இப்போ நீ ஆதுக்கு பிளட் கொடுக்கப் போற” என்று பேசியவாறே அவளறியாது ஊசியை சொருகியவன்,  எவ்வித சிக்கலுமின்றி வருவின் உடலிலிருந்து பாட்டலில் ரத்தம் ஏறுவதை உறுதி செய்து… வருவின் கையில் ஸ்பான்ச் பந்து ஒன்றை கொடுத்தவன், “இதை பிரஸ் பண்ணிட்டே இரு” என்று சொல்லி ஆதினியின் அருகில் சென்றான்.

பாட்டலில் ஒரு புறம் வருவிடமிருந்து ரத்தம் ஏற, மறுபுறமிருந்து ஆதினியின் உடலுக்குள் ரத்தம் சென்று கொண்டிருந்தது.

ஆதினியின் கையில் ஸ்டிச்சஸ் போடவே யாதவிற்கு கைகள் நடுங்கின. இதுவரை தனது சொந்தங்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை அவனுக்கு ஏற்பட்டதில்லை. இதுவே முதல்முறை. தனது சகோதரியின் ரத்த்ததை பார்த்தவனால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை.

ஒரு நொடி தன்னிலை இழந்தவன், ஆழ்ந்த மூச்சினை வெளியிட்டு தன்னை நிலைப்படுத்தி அடுத்த நொடி மருத்துவனாக மாறி நின்றான்.

முகம் இறுக ஊசியை கையில் எடுத்தவன் எவ்வித உணர்வுகளுமின்றி மறத்த நிலையில் தையிலிட்டு முடித்து வெளியில் வந்தான்.

அங்கு நின்றிருந்த ஆதி மற்றும் நிரலியின் முகத்தில் பயம் பதட்டம் கவலை சோகமென கலவையான உணர்வு.

அவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியாது கைகளை பிசைந்த நிலையில் விஷால்.

“யாதவ்.”

யாது வெளியில் வந்ததும் விஷால் அவனை விளிக்க, ஆதி மகனின் அருகில் வேகமாக வந்தார்.

“நவ் ஷீ இஸ் ஓகே டாட். பட் கான்ஷியஸ் இல்லை. வெயின் நல்ல ஆழமா கட் ஆகியிருக்கு. சோ, டேஞ்சர் சோன் போயிட்டு வந்திருக்கா(ள்). பயப்பட ஒன்னுமில்லை. பட் கான்ஷியஸ் வர டைம் எடுக்கும்” என்று பொருமையாகவே சகோதரியின் நிலையை தந்தைக்கு விளக்கினான்.

“சரிப்பா” என்ற ஆதி மகளுக்கு இனி ஆபத்தில்லை என்றதுமே தனது பழைய மிடுக்கை மீட்டிருந்தார். இடிந்து போய் அமர்ந்திருந்த மனைவியை தேற்ற முயன்றார்.

“என்னாச்சுடா? ஏன் இப்படி?”

“அவள் கண் விழித்தால் தான் தெரியும்.”

விஷாலின் கேள்விக்கு பதிலளித்த யாதவ் மீண்டும் அறைக்குள் சென்று, ஒருவரின் உடலிலிருந்து எடுக்கப்பட வேண்டிய அளவு வந்துவிட்டதா என்று செக் செய்து வருவின் கையிலிருந்து ஊசியை அகற்றினான்.

இம்முறை வரு உணரும் முன்பே எடுத்திருந்தான்.

ரத்தம் வெளிவராமலிருக்க பிளாஸ்டர் ஒட்டியவன், “பெயின் இருக்கா?” எனக் கேட்க,

“எனக்கு ஊசின்னா பயம்ங்கிறது உங்களுக்கு ஞாபகம் இருக்கா மாமா” என்று அவனின் கேள்விக்கு பதிலளிக்காது எதிர் கேள்வி கேட்டிருந்தாள்.

“உன்னைப்பற்றிய ஒவ்வொன்றையும் நான் நினைவு வைத்துக்கொள்ள வேண்டுமென்று இல்லை. அது தானாகவே இங்க பதிஞ்சிருக்கு” என்று தன் இதைப்பகுதியில் கை வைத்த யாதவ், செவிலி கொண்டுவந்த பழச்சாற்றை வாங்கி வருவின் கையில் கொடுத்தான்.

அவன் அளித்த கண்ணாடி குவளையையே வரு பார்த்திருக்க,

“வாட்டர்மெலன் ஜூஸ் தான் குடி” என்றான்.

உன்னுடைய பிடித்தமும் எனக்கு நினைவிருக்கிறதென்று சொல்லாமல் சொல்லிச் சென்றான்.

அதன் பின்னர் ஒரு மணி நேரம் கடந்த நிலையில் மாமியும் ஹரிணியும் மருத்துவமனைக்கு ஓட்டமும் நடையுமாக வந்தனர்.

எதிர்ப்பட்ட விஷாலிடம் ஆதினியின் நலம் விசாரித்தவர்களுக்கு அவளுக்கு ஒன்றுமில்லை என்றதும் தான் உயிரே வந்தது.

அமைதியாக ஆதியின் அருகில் வந்தமர்ந்த மாமி, ஆதியின் தோள் தட்டி ஆறுதல் அளித்தார்.

அவரால் ஆதியின் முகம் பார்த்து பேச முடியவில்லை. உண்மை தெரிந்தால் ஆதியின் முகத்தில் எப்படி விழிப்பதென்று சுணங்கினார்.

இப்போது ஆதியின் நிலைக்கு காரணம் அவர் பேரனல்லவா. ஆசை மகளை எண்ணி வருந்திக் கொண்டிருக்கும் ஆதிக்கு நடந்தது தெரிந்தால் அவர் எப்படி எடுத்துக் கொள்வாரோ என்று மாமிக்கு அச்சமாக இருந்தது.

மாமியின் மொத்த கோபமும் ஹரியின் மேலிருந்தது.

ஆதினிக்கு ஆபத்தில்லை என்றதுமே விஷால் வள்ளியக்காவை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டான்.

வள்ளியின் மூலம் ஆதினியின் செயலறிந்த மாமியும் ஹரிணியும் அரண்டு போயினர்.

கேட்டிருந்த ஹரிக்கு உலகமே தட்டாமாலை சுற்றியது.

‘ஆதும்மா.’ அவன் மனம் அடித்துக் கொண்டது.

“வாங்க பாட்டி போகலாம்.”

மருத்துவமனைக்கு சென்று தன்னவளை கண்டிட துடித்தவன் மாமியை உடனழைக்க பொங்கிவிட்டார்.

“நீயெதுக்கு வர?”

“பாட்டி… நான்…”

“உன்னால் தான் ஆதும்மாவுக்கு இந்த நிலை. அவள் என்னடா தப்பு செய்தாள். உன்னை காதலித்தது பெருங்குற்றமா? அவளை வேணான்னு சொல்ல உனக்கென்ன தகுதி இருக்கு” என்று வெடித்த மாமி ஆதியின் நிலை எப்படி இருக்கிறதோ என்று கவலைக் கொண்டவராக இருக்கையில் அமர,

“பிடிக்கலன்னா வேணான்னு தான் பாட்டி சொல்ல முடியும்” என்று எங்கோ வெறித்து நின்று கூறினான்.

“போதும் ஹரி… எங்களுக்கு ஒன்றும் தெரியாது நினைக்கிறாயா?” அவனின் வார்த்தையில் இப்போது வெடிப்பது ஹரிணியின் முறையானது.

“நீயும் அவளை விரும்புறன்னு தெரியும். அப்படியிருந்தும் ஏன்டா வேண்டாம் வேண்டாம் சொல்லி அவளை ஏன் சித்திரவதை செய்ற? ஒரு பொண்ணே காதலுன்னு உங்க பின்னாடி சுத்தினால் உங்களுக்கு அவளோட மதிப்பு தெரியாதுல… ச்ச அவளோட காதலை புரிஞ்சிக்க முடியாத உனக்காக போயும் போயும் சாகத் துணிந்தாளே, அவள் மேல் தான் கோபம் கோபமா வருது” என்ற ஹரிணி மாமியை அழைக்க,

“நானும் வருகிறேன்” என்று முன் வந்தான் ஹரி.

“எதுக்கு அவள் போய் சேர்ந்துட்டாளா பார்க்க வரீயா?”

மாமியின் வார்த்தைகள் குத்தீட்டியாய் அவனை குத்தியது.

“ஆமாம் நீ வர வேண்டாம் ஹரி.”

“நீயாவது புரிஞ்சிக்கோ ஹரிணி.” அவனின் வரவை மறுத்த சகோதரியிடம் இரைஞ்சினான்.

“எந்த உரிமையில் வரேன் சொல்ற?” எனக்கேட்ட ஹரிணி மாமியை கூட்டிக்கொண்டு கிளம்பி விட்டாள்.

கன்னம் தாண்டி வழியும் கண்ணீரை பொருட்படுத்தாது இருக்கையில் பொத்தென்று அமர்ந்த ஹரியின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.

*அறிகிறேன்…
உயிர் துடித்திடும் நிலையினை,
உணர்கிறேன்…
கன்னம் தாண்டிடும் கண்ணீரினை,
மொத்தத்தில்…
மருகி நிற்கின்றேன்,
செய்திட்ட பிழையினை
சரிசெய்திடும் மார்க்கமின்றி.
மீண்டுவிடு காதலே…
தாங்காது யுத்தத்தினை!*

   

இதயம் 10 : (காதலே காதலே)

பட்டமளிப்பு விழா…

யூனிவர்சிட்டியிலேயே முதுகலை படிப்பில் முதல் மாணவனாக வந்ததற்கு அடையாளமாக ஹரியின் கழுத்து தங்க பதக்கங்களால் நிறைந்திருந்தது.

மேடையிலிருந்து கீழிறங்கிய ஹரியை கட்டிக்கொண்டு தன் மகிழ்வை வெளிப்படுத்தினாள் ஆதினி.

அதுவரை சிறு பெண் என்று நினைத்திருந்தவனின் மனதில் அவளின் அணைப்பு புது மாற்றத்தை உருவாக்கியது.

அடுத்து ஹரியின் நண்பர்கள் அவனை சூழ்ந்துகொள்ள… ஆதினி தன் தோழிகளிடம் சென்றாள்.

முதுகலை மாணவர்களின் பட்டமளிப்பு விழாவினை ஆர்கனைஸ் செய்வது இளங்கலை நடப்பு மாணவர்கள். அதன்படி இளங்கலையைச் சேர்ந்த மாணவர்களும் ஆங்காங்கே ஆர்பரித்துக் கொண்டிருந்தனர்.

“என்ன ஆதி, ஹரி அண்ணா மேல லவ் போல…”

“லவ் இல்லாமலா சுற்றி இத்தனை பேர் இருக்கும்போதும் தைரியமா கட்டிபிடிக்கிறாள்?”

“கேர்ள்ஸ் கிட்ட பேசவே யோசிக்கிற ஹரி அண்ணாவும் உன்னோட தான் சுத்துறாரு.”

“அவரோட கேங்க் அப்போஸ் கேங்க் உடன் சண்டை போட்டப்போ கூட பிராப்ளம் வேண்டான்னு சமாதானம் செய்யத்தான் பார்த்தார்.”

“ஆனால் உன்னை ஒருத்தன் கிண்டல் பண்ணான்னு அவனை ஓடவிட்டு புரட்டி எடுத்துட்டாரே!”

“இவளுக்கு ஒன்றென்றால் மட்டும் முன்ன வந்து நிக்குறார்.”

“உங்க ரெண்டு பேருக்குள் என்ன இருக்கு?”

“அது லவ் தானே?”

ஆதினியின் தோழிகள் சரமாரியாக கிண்டலென கேள்வியைத் தொடர… பதில் தெரியாத கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்வாள்.

பள்ளியாகட்டும் கல்லூரியாகட்டும் ஆதினி செல்லும் போது… அவளுக்கு மூத்தவனான ஹரியிடம் ஆதினியை பார்த்துக்கொள்ளுமாறு ஆதி ஹரியிடம் சொல்ல… ஒன்றாகவே சென்று வந்ததோடு, இருவருக்கிடையேயும் நல்ல புரிதல் இருந்தது.

ஆதி தன் பொறுப்பில் ஆதினியை விட்டிருக்கிறார் என்பதே ஹரியை பெரிய மனிதனாக உணர வைக்க, அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டான்.

ஒரு நாளில் அதிகபட்ச நேரம் இருவரும் ஒன்றாகவே இருந்தனர்.

ஆதினிக்கு அவன் மீது அன்பு இருக்கிறது. அவனில்லாமல் அவளின் நாளில் ஒரு நொடியும் கடந்திடாது.

அவளின் அனைத்தும் அவனுக்குத் தெரியும். அவள் நினைப்பதை சொல்வதற்கு முன் இவன் அறிந்திடுவான்.

இதுநாள் வரை இவை யாவும் நட்பு, அன்பு என்று நினைத்தாளே தவிர காதல் என்ற கோணத்தில் நினைத்தது இல்லை.

இன்று தோழிகள் கேள்விகளை அடுக்கவும் குழம்பி நின்றாள். குழம்பியதோடு ஹரியிடமும் கேட்டு விட்டாள்.

எதற்கும் அவனை நாடுபவள் இதற்கும் அவனிடமே பதில் கிடைக்குமென எண்ணினாள்.

விழா முடிந்ததும் நண்பர்களிடம் சொல்லிவிட்டு வந்த ஹரி… தனது இருசக்கர வாகனத்தின் மீது யோசனை படிந்த முகத்துடன், கழுத்திலிருந்த மென் சங்கிலியில் கோர்க்கப்பட்டிருந்த டாலரை வாயில் வைத்து பற்களால் கடித்தபடி நின்றிருந்தாள்.

“இப்போ மேடமுக்கு என்ன யோசனை?” என்று கேட்டபடி ஆதினியின் அருகில் வந்த ஹரி அவளின் வாயில் கடிப்பட்டுக் கொண்டிருந்த டாலரை எடுத்து விட்டான்.

“அவ்வளவுதான்’ல…?”

“என்னது?”

“இனி நீயில்லாமல் இந்த காலேஜில் நான் மட்டும் தனியா சுத்தனும்.” அலுப்பாகக் கூறினாள்.

“அதான் பிரண்ட்ஸ் அப்படின்னு ஒரு படையே உன் பின்னால் இருக்கே!” சாதரணமாகக் கூறியவன் தனது வண்டியில் சாவியினை நுழைத்தான்.

“எத்தனை பேர் இருந்தாலும் உன்கூட இருக்க மாதிரி வராது.” ஹரியிடம் சிறு அதிர்வு.

“நமக்குள்ள என்ன இருக்கு?” அனைத்தையும் அவனிடன் கேட்பது போல் இதையும் கேட்டுவிட்டாள்.

ஆனால் அவன் தான் திணறிப்போனான்.

ஆதி ஒருவருக்காக அவள் மீது என்றோ எழுந்த காதலை மனதில் அடக்கி வைத்திருக்கின்றானே! அவனிடம் தடுமாற்றம் இருக்கத்தானே செய்யும்.

காதலை புதைத்து விட்டான் என்பதே சரியாக இருக்கும்.

இளங்கலை முடிந்ததும் ருக்கு மாமி ஹரிணிக்கு மணம் முடிக்க ஏற்பாடு செய்ய அனைத்தும் முன் நின்று செய்தது ஆதி தான்.

மாமிக்கு யாருமில்லை என்ற குறை தெரியாது எல்லாம் செய்தார்.

மாமி வீட்டு வழக்கப்படி தந்தையின் மடியில் பெண்ணை அமர வைத்துதான் தாலி கட்டுவர். அந்நேரம் ஆளாளுக்கு ஒவ்வொன்று பேச, எதையும் யோசிக்காது நிரலியை ஒரு பார்வை பார்த்தார் ஆதி.

தனக்கு புரிந்தது எனும் விதமாக நிரலி புன்னகைக்க, அடுத்த கனம் ஹரிணியை தந்தையாக தன் மடியில் தாங்கியிருந்தார்.

அதனை எப்படி ஏற்றுக்கொள்வது என மிகவும் திண்டாடி போனது ஹரி தான். அவரின் மகளை காதலியாக மனைவியாக தன் மனதில் உருவகப்படுத்தியிருக்க அவரோ தங்களை அவரின் பிள்ளைகளாக வைத்துள்ளாரே என்று எண்ணியவன் ஆதினியின் மீது தோன்றிய காதலை குறித்து தன்னையே நிந்தித்துக் கொண்டான்.

அன்று ஹரியின் இதயம் கதறிய கதறல் மண்டபத்தில் ஒலித்த கேட்டிமேள சத்தத்தில் யாரின் செவிகளையும் தீண்டாது தொலைந்து போனது. அவனின் காதலை போலவே!

ஆதி மட்டும் அன்று ஒரு தந்தையாக நடந்துகொள்ளாமல் விட்டிருந்தால் ஹரிணியின் திருமணம் நின்றிருக்கக்கூட வாய்ப்பிருக்கிறது.

அதனை நினைத்து பார்த்தவன் கைகளை இறுக்கி… கண்களின் இமைகளை அழுந்த மூடி… உடல் விறைத்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.

அதோடு தான் விரும்பும் விடயம் ஆதிக்கு என்றுமே தெரியக்கூடாது என நினைத்தான்.

“உன்னை பிள்ளையாக நினைத்து அன்பு காட்டினால், என் மகளை உன்னை நம்பி ஒப்படைத்தாள் இப்படி காதலென்று வந்து நிற்கிறாயே? இதுதான் நீ எனக்கு காட்டும் நன்றியா?” என்று ஆதி ஒரு பார்வை பார்த்து விட்டால் போதும், ‘அந்நொடியே மனதால் தான் மரணித்தி விடுவோம்’ என நினைத்தவன் தனக்குள் காதலை மரணித்திருக்கச் செய்துவிட்டான்.

காதலை ஒன்றுமில்லாமல் செய்தவனுக்கு ஆதினியை விட்டு இருக்க முடியாது போனது. ஆதலால் இருக்கும் வரை அவளுடனான தருணங்களை நினைவுகளாக இதயப்பெட்டியில் சேமிக்கத் தொடங்கினான். நினைவுகள் என்றுமே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது.

என்னதான் ஆதினியின் மீது கொண்ட காதலை ஹரி மறந்துவிட்டதாக சொல்லிக்கொண்டாலும்… உயிர் ஆழத்தில் வேர் விட்ட காதல் துளிர்த்துக் கொண்டுதானே இருக்கும்.

எல்லாம் முடிந்துவிட்டது என்று அவன் நினைத்திருக்க மீண்டும் துவங்குவது போலிருந்த ஆதினியின் கேள்வியில் பெரும் புயலுக்குள் சிக்குண்ட நிலை அவனிடம்.

“ஹரி…”

அசைவின்றி நின்றிருந்தவனை தோள் தொட்டு மீட்டாள்.

“ஆங்க்… என்னயிருக்கு? ஒன்னுமில்லையே!” என்றவன் வண்டியில் அமர்ந்து அதனை உயிர்ப்பிக்க,

“காதல் இல்லையா ஹரி” என பட்டென வினவினாள்.

ஒரு நொடி ஆதினி கேட்டதில் அவனின் தலை சுற்றியது. மொத்த உலகமும் இருண்டது.

தான் உணர்ந்திட்ட காதலை தன்னவளும் உணர்ந்துகொண்டாள் என்பதில் மகிழ்வு கொள்வதா அல்லது துக்கம் கொள்வதா என்று தெரியாது இருதலைக்கொல்லி ஏறும்பாக தவித்தான். உள்ளுக்குள் ஊமையாய் கதறினான்.

ஆனால் ஆதியின் முகம் கண்ணில் தோன்றிய கணம் காதலை ஒதுக்கினான்.

“வாட்… காதலா?” என்றவன் “குட் ஜோக்” எனக்கூறி வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தான்.

அதையெல்லாம் அவள் பொருட்படுத்தவில்லை. தோன்றிய நொடி காதலை அவனிடம் சொல்லி விட்டாள்.

“இதுவரை நமக்குள் காதல் இல்லைன்னா என்ன? இனி இருக்கு” என்றவள், “அம் லவ் வித் யூ… ஹரி, நீ பக்கத்துல என்னோடவே இருந்த போதெல்லாம் உணர முடியாத ஒன்றை இனி நீ என்னோடு இருக்க மாட்டாய் என்று நினைக்கும்போது என்னால் உணர முடியுது. சொல்ல முடியாத சோகம் ஒன்று மனதில் உருவாவதை தடுக்க முடியல.

அந்த ஒன்று காதல் தான்னு நான் புரிந்து உணர்ந்து ஒரு மணி நேரமாகுது.

நீயும் உணர உனக்கு சில காலம் ஆகலாம். அதுவரை நான் காத்திருக்கிறேன் ஹரி.

அதற்குள் நெகட்டிவ்வா ஏதும் நீ சொல்லி, உன்மீது காதல் உண்டான மகிழ்வை அனுபவிக்க விடாது செய்துவிடாதே” என்றவள் வண்டியில் அவன்பின் ஏறி அமர்ந்தாள்.

இடையில் ஆதி மட்டும் இல்லையென்றால் இந்நேரம்… இந்நொடி அவன் மனதின் அடி ஆழம் வரை வியாபித்திருப்பவள் காதல் சொல்லிய கணத்தை கொண்டாடித் தீர்த்திருப்பான். சொல்லியவளைத் தூக்கி உலகம் சுழல சுற்றிருப்பான்.

ஆனால் இப்போது…? பெரும் கேள்வி அவனிடத்தில்.

அந்த கேள்வியாய் ஆதி அவனிடத்தில் கொண்ட அன்பு, நம்பிக்கை. இவை ஆதினியின் காதலைக்காட்டிலும் பெரிது. அதனை ஒருபோதும் இழந்திட அவனால் முடியாது.

இப்போது அவனுக்கு வேண்டியது தனிமை. அதைக்காட்டிலும் அமைதி.

ஒன்றும் பேசாது வண்டியை வீடு நோக்கி செலுத்தத் தொடங்கினான்.

கல்லூரி வளாகத்தை தாண்டியதும் ஹரியை இடையோடு கரம் கோர்த்து கட்டிக் கொண்டவள், அவனின் விரிந்த முதுகில் தலை சாய்த்து கன்னம் பதித்தாள்.

சட்டென நடு சாலையில் வண்டியை நிறுத்தியிருந்தான்.

நல்லவேளை இரவு வெகுநேரம் ஆகியிருந்ததால் சாலை வெறிச்சோடி கிடந்தது. இல்லையென்றால் நிச்சயம் விபத்து நேர்ந்திருக்கும்.

‘தன் செய்கையே வண்டி நிற்க காரணம்’ என அறிந்தவள்,

“ப்ளீஸ் ஹரி… நவ் ஐ நீட் திஸ்” என்றவள் இன்னும் அழுத்தமாக அவனைக் கட்டிக்கொண்டாள்.

“உன் அமைதியே உன் பதில் என்னவாக இருக்கும் என்பதை எனக்கு சொல்லுது. நிச்சயம் இதுதான் நீ என்னுடன் நெருக்கமா இருக்கும் கடைசித் தருணமாகக் கூட இருக்கலாம். அதனால் இப்போ, என்னுடன் நீயிருக்கும் இந்த கணத்தை நான் இழக்க விரும்பல” என்றவள் தன்னிலையை மாற்றிக்கொள்ளவில்லை.

‘உன்னைப்பற்றி நன்கு நானறிவேன்’ என்று அவள் சொல்லாமல் சொல்லியது அவனுக்கும் விளங்கிற்று.

அதன்பிறகு வீடு வந்து சேரும்வரை கனத்த மௌனம் மட்டுமே!

ஹரியின் காலை வணக்கத்தில் தொடங்கி… அவனுடன் கழியும் நாள் அவனின் இரவு வணக்கத்தில் தான் அவளுக்கு முடிவடையும்.

ஆனால் இன்று…

நேற்றிரவு காதலை சொல்லியிருக்க… அதற்கு விடையாக ஹரியின் விலகல்.

அலைபேசியை எடுத்து பார்த்தவள் ஒரு பெரும் மூச்சோடு கல்லூரிக்குச் செல்லக் கிளம்பினாள்.

ஹரி அலுவலகம் செல்லும் நேரம் சரியாக கல்லூரி செல்ல ஆதினி வெளியில் வருவாள். இருவருக்கும் புன்னகையுடன் அன்றைய நாள் துவங்கும்.

இன்று, ஹரியின் தரிசனம் அவளுக்கு கிட்டாது போனது.

ஹரிக்கு அழைப்பு விடுக்க… அவனிடம் பதிலில்லை.

இப்போதெல்லாம் ஹரியை பார்ப்பதே அரிதாகிப்போனது. அவன் எப்போது செல்கிறான், எப்போது வருகிறான், என்ன செய்கிறான் ஒன்றும் அவளுக்குத் தெரியவில்லை.

இரண்டு மாதங்கள் கடந்திருந்த நிலையில்,

‘இவனை இப்படியே விட்டால் சரிவராது’ என்று நினைத்தவள் ஒருநாள் நள்ளிரவில் அதிரடியாக யாருக்கும் தெரியாது ஹரியின் அறைக்குள் புகுந்தாள்.

மாமி வயதின் காரணமாக விரைவிலேயே உறங்கும் பழக்கம் கொண்டவர். அது அவளுக்கு வசதியாகிப்போனது.

கதவை திறந்துகொண்டு அறைக்குள் சென்றவள் ஹரி நின்றிருந்த தோற்றம் கண்டு அவஸ்தை கொண்டாள்.

அப்போதுதான் வேலை முடித்து வந்தவன் குளித்துவிட்டு இடையோடு துண்டினை மட்டும் கட்டிக்கொண்டு கண்ணாடி முன்னின்று ஹேர்ஜெல் தடவிக் கொண்டிருந்தான்.

அவனின் பரந்த முதுகில் அன்று போல் இன்றும் ஒட்டிக்கொள்ள அவளுள் ஏக்கம் முகிழ்த்தது.

கதவு திறந்த வேகத்தில் திரும்பி பார்த்தவன் நிச்சயம் ஆதினியை அந்நேரம் எதிர்பார்க்கவில்லை என்பதை அவனின் அதிர்ந்த முகமே காட்டிக்கொடுத்தது.

எப்போது அவளின் பார்வை அவனின் மீது ரசனையாக மாறியதோ… பார்வையில் மொத்த காதலையும் வழியவிட்டு ஹரியின் பார்வையோடு கலந்திட போராடிக் கொண்டிருந்தாள்.

அவளின் போராட்டம் அவனும் உணர்ந்தானோ… அசையாது தன்னிலை மறந்து நின்றிருந்தான்.

நொடிகள் நிமிடங்களாகின…

கடிகாரக் குயிலின் ஓசையில் கலைந்த இருவரில் முதலில் சுயம் மீண்டது ஹரி தான். அப்போதுதான் தானிருக்கும் நிலை உணர்ந்தவன், அவசரமாக கையில் கிடைத்த டிசர்ட் ஒன்றை எடுத்து மாட்டிக்கொண்டான்.

“உன்னை யாரு இந்நேரத்தில் வர சொன்னா? யாராவது பார்த்தால் தவறாகிப்போகும். நீ முதலில் கிளம்பு.” எவ்வளவு தான் கோபமாகக் காட்டிக்கொள்ள முயன்றாலும் அவனால் முடியவில்லை.

“நீ என்கிட்ட பேசி எவ்வளவு நாளாச்சு தெரியுமா?” எனக் கேட்டவள், “உன்னால என்னோட பேசாமல் கூட இருக்க முடியுதுல” என்று விசும்பினாள்.

கண்களில் துளிர்த்து கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.

“எதுக்கு இப்படியிருக்க ஹரி?”

“எப்படி?”

“உனக்குத் தெரியாதுல?” என்றவள், “சரி எனக்கு எப்போ பதில் சொல்லப்போற?” என்றாள்.

அவளிடம் முடியாதென்று சொல்வது அவனுக்கும் வேதனையாகத்தான் இருந்தது.

‘ஆனால் இதற்கு மேலும் ஆதினியின் மனதில் வீணான கற்பனையை வளர விடக்கூடாது’ என நினைத்தவன், ஏதோ சொல்ல வாய் திறக்க, அவனின் அழுத்தமான அதரங்கள் ஆதினியின் பூவிதழுக்குள் புதைந்திருந்தன.

எப்படி எப்போது நெருங்கினாளோ, ஹரியின் பதிலை எதிர்பார்த்தவள் அது என்னவாக இருக்குமென யூகித்து அவனை சொல்லவிடாது தடுக்க நினைத்து கொடுத்த இதழ் முத்தம் காதல் கொண்ட நெஞ்சங்களால் யுத்தமாகின.

முதலில் அதிர்ந்து திமிறியவன், அவளின் இதழ் மென்மையில் கொஞ்சம் கொஞ்சமாக தொலைந்து செல்ல… நொடியில் சுதாரித்து அவளை பிரித்து தள்ளிய கணம் அவளின் மிருதுவான கன்னத்தை தன் கரம் கொண்டு பதம் பார்த்திருந்தான்.

ஹரி அடித்துவிட்டான் என்பதை நம்ப முடியாது பார்த்திருந்தவளின் கண்கள் அவனை யாசித்து நின்றன.

காதலை யாசிக்கும் அவளின் விழிகளை சந்திக்க இயலாது திரும்பி நின்றவன்,

“ப்ளீஸ் லீவ் மீ அலோன்” எனக் கத்தினான்.

“நீ இப்போ என்னை அடித்ததைவிட, இப்படி பாரமுகம் காட்டி தள்ளி நிக்குறியே அது இங்க ரொம்ப வலிக்குதுடா” என்று இதயத்தை சுட்டிக்காட்டியவள்,

“நீயில்லாம என்னால் இருக்க முடியும் தோணலடா… மனசுல உட்கார்ந்துட்டு ரொம்ப படுத்தற” என்றவள்,

அவனைத் தன்புறம் திருப்பி, “என் கண்ணை பார்த்து, பிடிக்கல சொல்லு… நான் போயிடுறேன்” என்றாள்.

ரணமாகிய மனதை கல்லாக்கி அவன் வாய் திறக்க… இம்முறை மிக அழுத்தமாக அவனின் அதரங்களை கவ்வியிருந்தாள். அவள் காதலின் இதழணைப்பில் அவனால் அடங்கிப் போகத்தான் முடிந்தது.

மூச்சுவிட சிரமம் கொள்ளும் வரை தன் இதழ்களுக்குள் அவனை சுருட்டிக்கொள்ள முயற்சித்தவள்… நுரையீரலில் சுவாசம் தடைபட அவனின் உதடுகளுக்கு விடுதலை அளித்தாள்.

“இப்போ சொல்லு நோ” என்று திமிராக பார்த்தவள்,

“இந்த ஹரிக்கு இந்த ஆதினி தான்” என்று அவனின் நெஞ்சில் குத்திவிட்டுச் சென்றாள்.

ஹரி தான் அவளின் தாக்குதலில் அதிர்ந்து நின்றான்.

“ராட்சசி படுத்துறா?” என்று வாய்விட்டே புலம்பியவன் கண்ணாடியில் தன் முகம் பார்க்க… தடித்து சிவந்திருந்த அவனின் அதரங்கள் முகத்திற்கு தனி கவர்ச்சி அளித்தன.

நீண்ட நாட்களுக்குப் பிறகு புன்னகை சிந்தினான்.

‘பேசாமல் காதலை சொல்லிடலாமா?’ 

சிந்தித்த நொடி மேசையில் வீற்றிருந்த ஆதியுடன் அவனிருக்கும் புகைப்படம் கண்ணில் பட, இளகி நின்றவன் இறுகினான்.

‘கண் முன்னே இருந்து கொண்டே விலகுவது கடினம்’ என கருதியவன் தூரம் செல்ல நினைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்யத் துவங்கினான்.

அதன் பலனாக அடுத்த மூன்று மாதத்தில் இந்தியாவை விட்டு அவனவளை விட்டு கடல் கடந்து பறந்திருந்தான்.

அவளின்றி கடந்து சென்ற நாட்கள் அவனுக்கு அவ்வளவு எளிதாக அமைந்திடவில்லை.

நெஞ்சோடு நீக்கமர நிறைந்திருப்பவளை தூக்கி எறிந்திடத் தான் முடியுமா?

எங்கும் அவளின் பிம்பமே காட்சியளித்து இம்சிக்க… உயிரற்ற உடலாக உலாவினான். அவன் வாழ்ந்திட காரணமாக அமைந்தது ஆதினியின் குறுந்தகவல்கள் தான்.

ஹரி பதில் அனுப்புகிறானோ இல்லையோ தினமும் அவனின் நலன் வேண்டி புலனம் வழியாக பல குறுந்தகவல்கள் அனுப்பிடுவாள். அத்தோடு தினமும் ஒருமுறை அவன் ஏற்கவில்லை என்றாலும் அலைபேசியில் அழைப்பு விடுவாள்.

அவனின் காதல் கொண்ட இதயத்திற்கு இதுவே போதுமான ஆறுதலாக இருந்தது.

நாளுக்கு நாள் இருவருக்குள்ளுமே காதல் அதிகரித்ததே தவிர குறையவில்லை.

எங்கே ஆதினியை பார்த்தால் காதலை சொல்லிவிடுவோமோ என்று பயந்தே…

இந்தியா வருவதையே தவிர்த்திருந்தவன் வர வேண்டிய சூழல் ஏற்பட்டிட மனதை கட்டுப்படுத்தி ஆதினியை எதிர் நோக்கும் திடத்துடன் வந்திருந்தவன் அவளின் பார்வையில் சறுக்கிப்போனான்.

‘தான் நினைத்து வந்தது ஒன்று நடப்பது வேறு… காதலை தன் கண்களே காட்டிக்கொடுத்திடும்’ என்று எண்ணியவன் கோபம் எனும் திரைக்கொண்டு மறைக்க வார்த்தைகளை ஆயுதமாக்கிக் கொண்டான்.

அதன் விளைவு ஆதினி மருத்துவமனையில்.

‘காதலிக்க துணிவில்லாத இந்த ஹரி உனக்கு வேண்டாம் ஆதும்மா… என் மேல் உனக்கென்ன அவ்வளவு காதல்… உயிர்விடும் அளவிற்கு… நான் உன் காதலுக்கு வொர்த் இல்லை ஆதும்மா’ என்று மருகியவன் வெடித்து கதறினான்.

*அணுக்கள் தோறும் ஏக்கம்
எனை நீ பார்வையால் புதைக்கையில்.
உயிர் பிரிந்திடும் வேதனை
எனை நீ நீங்குகையில்.
இதயம் மரித்திடும் வலி
எனை நீ தள்ளிப்போகையில்.*

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
24
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்