இதயம் 7 : (நிஜம் நிழல் உயிர்)
நிரலிக்கு மனம் முழுக்க அவ்வளவு மகிழ்வு. முகம் கொள்ளா புன்னகை.
“இதை மாமாகிட்ட சொல்லணுமே!” என்று வாய்விட்டு தனக்குத்தானே பேசிக்கொண்டவர், அறையை குறுக்கும் நெடுக்குமாக அளந்தபடி இருந்தார்.
“என்னம்மா ஆபீஸ் போகலையா?” என்றபடி அறைக்குள் வந்த ஆதி மனைவியின் ஒளிர்ந்த முகத்தை கண்டு என்ன என்பதைப்போல் புருவம் உயர்த்தினார்.
“மாமா வாங்க” என்றவர் ஆதியின் கையை பிடித்து அழைத்துச் சென்று மெத்தையில் அமர வைத்து தானும் அவனுடன் உட்கார்ந்தார்.
புன்னகை முகமாக ஆதியின் முகத்தையே நிரலி பார்த்திருக்க,
“பிள்ளைங்க மூன்று பேரும் வீட்டில் தான் இருக்காங்க பேபி” என்று நிரலியின் காதுமடல் உரச கிசுகிசுப்பான குரலில் ஆதி கூற, மிக அருகில் தன்னை நெருங்கி கன்னம் தீண்டிய கணவனின் நெஞ்சில் கை வைத்து தள்ளிய நிரலி எழுந்து நின்று ஆதியை முறைத்தார்.
“என்னாச்சு பேபி?” மிட்டாய் பறிக்கப்பட்ட குழந்தையாக ஆதியின் முகம் சுருங்கியிருந்தது.
“அய்யோ மாமா… கல்யாண வயதில் பிள்ளைகளை வைத்துக்கொண்டு என்னதிது?” என்றார்.
“கல்யாண வயதில் பிள்ளைகள் இருந்தால் மனைவியை கொஞ்ச கூடாதா?” எனக் கேட்டவர், “அம் சுவீட் ட்வென்டி ஃபார் எவர் டி” என்று மனைவியை அணைத்தார்.
“அச்சோ மாமா என்னதிது பட்ட பகலில்” என்றவர் “உங்களுக்கு என்றும் இளமை தான்” எனக்கூறி அவனிடமிருந்து விலகினார்.
“அப்போ நட்ட நடு ராத்திரியில் ஓகேவா பேபி” என்று ஆதி கண்ணடிக்க, நிரலி தலையில் தட்டிக் கொண்டார்.
“மாமா நான் சொல்லுறதை கொஞ்சம் கேளுங்களேன்.”
வந்ததிலிருந்து தன்னை பேசவிடாது சில்மிஷம் செய்யும் கணவனிடம் கெஞ்சலில் இறங்கியிருந்தார்.
“ஓகே அம் கொயட்” என்று இரு கைகளையும் மேலேத் தூக்கி பாவனை செய்தவர் மீண்டும் மெத்தையில் சென்று அமர்ந்தார்.
“மாமா” என்று உற்சாகமான துள்ளளோடு ஆதியின் இரு கைகளையும் பற்றிய நிரலி,
“நாம ஆசைப்படுவது நடந்திடும் போலிருக்கு மாமா!” என்றார்.
அவரின் உடல் மொழியில் தான் எத்தனை எத்தனை மகிழ்ச்சி. மகனின் நிலை கண்டு வருந்தியிருந்தவருக்கு கண்ட காட்சி பாலைவனத்தில் அருவியை கண்ட நிலை. மனம் முழுக்க உற்சாகம் ததும்பியது. வயதையும் மீறி துள்ளிக்கொண்டிருந்தார்.
“யாதவ் வரு கல்யாணமா?”
ஆதி ஆர்ப்பாட்டம் மகிழ்வு உற்சாகம் எதுவும் இல்லாது வெற்று உணர்வுடன் கேட்டிருந்தார்.
“உங்களுக்குத் தெரியுமா?”
“எனக்குத் தெரியுமா தெரியாதா அப்புறம். உனக்கு என்ன தெரியும் பேபி?”
யாதவ் மருத்துவமனைக்கு நேற்றிரவு சென்றது. அவன் சென்ற நிலை, இப்போது வீட்டிற்கு விடிந்ததும் தாமதமாக வந்தவனின் அமைதி நிரலியின் நெஞ்சை பிசைந்தது. அன்னையாய் தன் மகனின் நலன் அறிய எண்ணியவர், அவனை உணவு உண்ண அழைக்கும் சாக்கில் அவனின் அறைக்கு சென்றவர், கதவினை தட்டி நிற்க… உள்ளிருந்து எவ்வித பிரதிபலிப்பும் இல்லை. கதவில் கை வைக்க, வருவின் கண்ணீர் தந்த கோபத்தில் அறைக்குள் நுழைந்தவன் அறைந்து சாற்றியதில் கதவு மூடிய வேகத்திற்கு திறந்து பின் மூடியது. அதில் கதவு லாக் செய்யப்படவில்லை. அதனால் நிரலி கை வைத்ததும் தாழிடப்படாத கதவு திறந்து கொண்டது.
அறைக்குள் யாதவைத் தேடியவாறு நுழைந்த நிரலி பால்கனியில் நின்றிருந்தவனின் அருகில் சென்றார். அவர் அழைத்தும் யாதவ் திரும்பாததும் அவனின் கவனம் இங்கில்லை என்று அறிந்தவர், யாதவின் பார்வை பாதையில் தன் விழியை கொண்டு சென்றவருக்கு அங்கு கண்ட காட்சியை அவரால் நம்ப முடியவில்லை.
ஆனால் மனம் முழுக்க ஒரு நிம்மதி பரவுவதை அவரால் உணர முடிந்தது.
கொண்ட ஆசை நிறைவேறிவிடும் நிறைவு.
யாதவ் மற்றும் வருவின் பார்வை ஒன்றையொன்று கவ்விக் கொண்டிருந்தது. ‘அன்னலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்’ என்ற ராம காவியத்தின் வரி அவரின் நினைவில் தோன்றி புன்னகை உதிர்க்கச் செய்தது.
காணும் காட்சி தந்த சந்தோஷத்தில் தன்னையும் மீறி “யாதவ்” என்று துள்ளினார்.
அருகில் கேட்ட சத்தமான விளிப்பில் யாதவ் கலைந்ததும், உண்மையில் எரிச்சல் கொண்டான்.
“வாட் மாம்?”
யாதவின் நிலை அறியாதவரா நிரலி. காதலில் அவரும் இந்நிலைகளை கடந்து வந்தவர் தானே!
மனதோடு புன்னகைத்துக் கொண்டார்.
“சாப்பிடக் கூப்பிட வந்தேன்!”
“போங்க மாம். வருகிறேன்!”
சென்றவர் நின்று அனைத்தும் அறிந்திருந்த போதும் யாதுவை தயக்கத்தோடு ஏறிட்டவர், அவனின் வாய்மொழியாக நலன் அறிய வினவினார்.
“நீ இப்போ நார்மல் தானே யாது?”
“இன்னைக்கு பெண்களுக்கு எதிரான கேஸ் எதுவும் விசாரணைக்கு வரவில்லையா மாம். என்ன குறுக்கு விசாரணை செய்றீங்க?” என்று சிறு சிரிப்போடு கூறினான்.
நிரலி இப்போது பிரபலமான வழக்கறிஞர். ஆணுக்கு பெண் நிகர் என்பதை தனது தொழிலில் கணவனுக்கு இணையாக வாதாடி வெற்றி கண்டு நிரூபித்திருந்தார்.
பெண்களுக்கு எதிராக நடைபெறும் அனைத்து வழக்குகளும் நிரலி கையிலெடுத்தால் வெற்றி தான் என்ற நிலையை உருவாக்கியிருந்தார்.
“அனைத்து வழக்குகளையும் கையிலெடுத்து உன் திறமையை வளர்த்துக்கொள்” என்று ஆதி பலமுறை சொல்லியும், “பெண்ணிற்காக வாதாடி நியாயம் வாங்கித் தருவதுதான் எனக்கு மன நிறைவு” என இந்த ஒரு விடயத்தில் மட்டும் ஆதியின் பேச்சினை மறுத்துவிட்டார்.
வழக்குகள் வரும் நாட்கள் மட்டுமே நீதிமன்றம் செல்வார். அதையே யாதவ் குறிப்பிட்டு வினவினான்.
நிரலியின் அருகில் வந்து அவரை தோளோடு சேர்த்து கட்டிக்கொண்டு, அவரின் தலையில் தன் தலையை சாய்த்து…
“லவ்… உண்மையா இப்போ தான் மாம் ஃபீல் செய்றேன்” என்றான்.
“யாது!”
“எஸ் மாம். இவ்வளவு நாள் பண்ணது, அது லவ்வே இல்லை.” உதட்டினை பிதுக்கி தலையை இடவலமாக ஆட்டினான். யாதவின் முகத்தில் பரவிய நிம்மதியை அக்கணம் நிரலியால் உணர முடிந்தது.
மகனின் சிகை கோதியவர், “எல்லாம் நல்லதாவே நடக்கும்” எனக் கூறிச் சென்றார்.
ஆதியிடம் நிகழ்வினை பகிர்ந்துக் கொண்ட நிரலி, அவர் ஏதேனும் பேசுவாரென்று ஆதியின் முகத்தையே பார்த்திருக்க… ஆதியின் முகம் வெகுவான யோசனையில் நெற்றி சுருங்கி இருந்தது.
“என்ன யோசனை மாமா?”
“நத்திங் பேபி. யாதுவிடம் நான் கொஞ்சம் பேசணும்” என்றவர் அலுவலகம் செல்ல நேரமாகிவிட்டதாக சொல்லிச் சென்று விட்டார்.
இன்னும் வரு, யாதவ் பார்க்கும்போது அமர்ந்திருந்த ஊஞ்சலிலேயே அமர்ந்திருந்தாள். அவளின் மனம் முரண்பாடான சிந்தனையில் உழன்று கொண்டிருந்தது.
‘மாமா எனக்கு சொந்தமில்லை. இதை நல்லா பதிய வச்சுக்கோ வரு.’
மனதிடம் அழுத்தமாக சொல்லிக்கொண்டிருந்த வேளையில்,
‘மாமாவிடம் ஏதோ சேஞ்சஸ் தெரியுதே! என்னிடம் முன்பெல்லாம் இப்படி இல்லை. இப்போ என்னை நேருக்கு நேர் பார்க்கிறார்.’
ஊஞ்சலின் ஆட்டத்திற்கு ஏற்ப பெண்டூலமாக வருவின் மனமும் ஆடியது.
‘எதுவாக இருந்தாலும் என் மாமா சந்தோஷமா நல்லா இருக்கணும்.’
முடிவெடுத்தவள் தன் வலியை புதைக்கத் தொடங்கியிருந்தாள்.
நான்கு வருட காத்திருப்பு… பலனின்றி போவதன் வலி, ஏமாற்றம் அது. ஆசை ஆசையாய் கட்டிய காதல் மாளிகை சீட்டுக்கட்டு கட்டிடமாக சரிந்தது. இதயத்தை கைக்கொண்டு பிடுங்கி எறிந்திடும் உயிர் வேதனை.
அந்நொடி சற்று நேரத்திற்கு முன் அவனின் பார்வையோடு உறவாடிய காட்சி தோன்றி மென்சாரலாக வலிக்கும் இடத்திற்கு மருந்தாகும் விந்தையை உணர்ந்தவள் தன்னைக் குறித்தே பயம் கொண்டாள்.
‘என்ன செய்து வைத்திருக்கிறாய் வரு? மாமா உன்னை தற்செயலாகக் கூட பார்த்திருக்கலாம். ஆனால், நீ?’
தன் தலையிலேயே தட்டிக்கொண்டாள்.
அவரோடு அவர் விரும்பும் பெண்ணை சேர்த்து வைப்பதாக நினைத்த தான் அவனின் பார்வையோடு உறவாடி பெருந்தவறு ஒன்றை இழைத்து விட்டதாக நினைத்து வருந்தினாள்.
‘இனியும் மாமாவை பார்த்துக்கொண்டு ஒரே வீட்டில் இருந்தால், எனக்கு எதிராக செயல்பட்டு என் மனமே என் காதலை காட்டிக்கொடுத்திடும். இனி தான் இங்கிருக்கக் கூடாது.’
“யாதவ் ஒரு பெண்ணை விரும்புகிறான்.” இதிலே வருவின் மொத்தமும் நின்றுவிட்டது. அதனாலே அவளுக்கு சாதகமான விடயத்தைக் கூட அவளால் பாதகமாகவே எண்ணத் தோன்றியது.
இதற்குமேல் யாதவின் கண் முன் சென்று காதலை காட்டும் தைரியம் அவளுக்கில்லை. அப்போதே மறுத்தவன் இப்போதும் அதையேதான் செய்வான் என்கிற எண்ணம் வலுப்பெற்றிருந்தது அவளிடம்.
அதனாலேயே இனி யாதவின் முகம் பார்த்து நாட்களை கடத்துவது முடியாத செயலென்று நினைத்தவள் ஊருக்கு சென்றிடும் முடிவினை எடுத்தாள்.
‘யாதவ் மற்றும் நிகிலாவின் காதல் முறிவுக்கான காரணம் எதுவாக இருந்தாலும், அது தனக்கு தேவையில்லாதது… அக்காரணம் அவர்கள் இருவரின் தனிப்பட்ட விடயமாகக்கூட இருக்கலாம். அதனை தான் அறிந்துகொள்வது தவறும் கூட’ என்று சிந்தித்தவள், ‘ஊருக்கு கிளம்புவதற்கு முன்பு நிகிலாவை ஒருமுறை பார்த்து பேசிட வேண்டும்’ எனத் தீர்மானித்தாள்.
நிகிலாவிடம் பேச நினைத்தவள், முன்பு எண்ணியது போல் முதலில் ஜானிடம் நடந்ததை தெரிந்து கொண்டிருக்கலாம். அப்படி தெரிந்திருந்தால் நிகிலா பற்றியும் யாதவின் காதலின் உண்மை நிலையும் அவளுக்குத் தெரிந்திருக்கும்.
நினைப்பதெல்லாம் அவ்வளவு எளிதில் நடந்துவிடுவதில்லையே.
வரு ஒன்றை நினைத்து செய்ய… நடந்ததே வேறு.
நிகிலாவின் உண்மை முகம் தெரிந்த பின்னர் வருவின் முடிவு என்னவாக இருக்கும்?
*****
ஆதினி நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னுடைய தோழி மற்றும் சகோதரி உறவில் வைத்திருக்கும் ஹரிணியை பார்க்கும் மகிழ்வில் துள்ளலோடு எதிர் வீட்டிற்குள் நுழைந்தாள்.
எதிர் வீட்டில் ருக்கு மாமி, அவரின் பேரன் ஹரி மற்றும் பேத்தி ஹரிணி மட்டும் வசிக்கின்றனர். ஆதி வீட்டிற்கும் ருக்கு மாமி வீட்டிற்கும் கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து வருடத்திற்கு மேற்பட்ட பழக்கம். இரு குடும்பமும் உறவினர்களைப் போல்.
“ஹரிணி அக்கா” என்று அழைத்துக் கொண்டு போனவள், நேராக சென்றது கிச்சனிற்குள்.
“என்ன பாட்டி சமையல் வாசம் தெருவே மணக்குது.” சொல்லியவாறே சமையல் மேடையில் குதித்து ஏறி அமர்ந்தாள்.
“வாடிம்மா… இப்போதான் வீட்டுக்கு வழி தெரிந்ததா? எதிர்த்த வீடு, செத்த வந்திட்டு போக ஒரு நாழி ஆகுமா? வரவேண்டியவங்க வந்த பின்னால் உன் காலுக்கு எங்க வீட்டுக்கு வழி தெரியுதாக்கும்!” என்று பேசிக்கொண்டே சென்றவரின் கைகள் தன்னைப்போல் சமையலில் கவனமாக இருந்தது.
“ஹரிணி எங்க பாட்டி?”
“அவள் ஆம்படையான் கால் பண்ணாருன்னு பேசறதுக்கு அறைக்கு போயிருக்காள்” என்றவர் பால் கொழுக்கட்டை அடங்கிய சிறு கிண்ணத்தை ஆதினியின் கையில் திணித்தார்.
“வாவ் பாட்டி… என்ன இன்னைக்கு நிறைய ஐட்டம் செய்து அசத்துறேல் போங்கோ!” என்றவள் காலினை ஆட்டிக்கொண்டே ஸ்பூனால் சாப்பிடத் துவங்கினாள்.
அப்போது அங்கே வந்த ஹரிணி,
“ஹேய் ஆது குட்டி… எப்படிடா இருக்க?” என்று ஆதினியின் நலம் விசாரித்தாள்.
“என்னக்கா உங்களை அனுப்பி வச்சி ஒருநாள் கூட ஆகலை அதுக்குள்ள மாம்ஸ் கால் பண்ணி வர சொல்றாரா?” என்றவள் தான் உண்டு கொண்டிருந்த கிண்ணத்திலிருந்து சிறிது எடுத்து ஹரிணியின் வாயில் வைத்தாள்.
ஆதினியின் தோளில் அடித்த ஹரிணி “உனக்கு கல்யாணம் ஆனதும் எல்லாம் தெரியும்” என்றாள்.
ஹரிணி என்னவோ சாதரணமாகத்தான் கூறினாள் ஆனால் ஆதினியின் கண்கள் சட்டென்று கலங்கிவிட்டன.
திருமணம் என்றாலே அவளுக்குள் தோன்றும் முகம் ஹரி. அவன்தான் அவளின் காதலை ஏற்கவே தயாராக இல்லையே. அவன் வெளிநாடு சென்றது கூட தான் அவனிடம் காதல் சொல்லியது தான் காரணமென்று ஆதினிக்கு ஒரு எண்ணம். அது ஓரளவு உண்மையும் கூட.
கலங்கிய கண்களை இருவருக்கும் தெரியாது இமை தட்டி சரி செய்தவள்,
“நான் அப்புறம் வறேன்க்கா” என்றவளாக உண்டு கொண்டிருந்த கிண்ணத்தை அங்கேயே வைத்துவிட்டு கிச்சனிலிருந்து வெளியேறினாள்.
வீட்டிற்குள் வரும்போதிருந்த உற்சாகம் இப்போது அவளிடம் இல்லை. மனம் கனத்துப் போயிருந்தது. விரட்ட நினைத்தாலும் துரத்தும் ஹரியின் நினைவுகள் ஆதினியை மொத்தமாக ஆட்டி படைத்தது.
‘ஹரி.’ சுயமிழந்து சிந்தனைகள் முழுவதும் அவளின் ஹரியே இடம்பிடிக்க அடிமேல் அடி வைத்து வீட்டிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தவளின் உதடுகள் அவளவனின் பெயரை முணுமுணுக்க, அவளின் காதல் நாயகனே அவள் கண் முன் வந்து நின்றான்.
கண்களில் காட்சிகள் மறைக்க நடந்தவள் ஹரியின் மீது மோதி நிற்க, நிமிர்ந்து பார்க்க மறந்தவளாக மோதியதற்கு தானாக சாரி எனக் கூறி முன்னேறி அடி வைத்தாள்.
அவளின் நிலை ஹரியை கொல்லுவதாய்.
“ஆதும்மா.” அவனின் விளிப்பு அவனின் செவியையேத் தீண்டியிருக்காது. ஆனால் அவனைக் கடந்து நான்கடி சென்றிருந்த ஆதினியை அடைந்திருந்தது.
படக்கெனத் திரும்பியவள் தன் முன் முழு ஆண்மையின் உருவமாக நின்றிருந்த ஹரியை கண்டு சிலையாகினாள்.
ஆதினியால் ஹரியின் வரவை நம்ப முடியவில்லை என்பதைவிட ஏற்க முடியவில்லை. அதுவும் அவனின் விளிப்பை அவளால் நிச்சயம் உண்மையென்று உணர முடியவில்லை.
அவனின் நினைவிலேயே இருப்பவளுக்கு எப்போதும் எங்கும் ஹரியின் பிம்பமே! இதுவும் அதுவே! நினைத்தவள் தனக்குமுன் தெரியும் ஹரியை மாயத்தோற்றமென நினைத்து தன் பார்வையால் வருடினாள்.
ஆதினியின் பார்வை என்னவோ சாதாரணப் பார்வையாகத்தான் இருந்தது. ஆனால் ஹரி தான் அவளின் விழி வீச்சை எதிர்கொள்ள முடியாது திணறினான்.
அவளின் நடப்பை மீட்க மீண்டும் ஒருமுறை பெயரைக் கூறி அழைத்தான்.
“ஆதும்மா…” பெயருக்கும் நோகுமோ?
“போடா… எப்போ பாரு கனவில் வந்து ஆதும்மான்னு கொஞ்ச வேண்டியது” என்று சலிப்பாகக் கூறியவள் மீண்டும் வாசலை நோக்கித் திரும்பி நடக்க அவளின் கரம் பற்றி தடுத்து நிறுத்தியவனின் முகம் வார்த்தைகளால் சொல்ல முடியா வேதனையை பிரதிபலித்தது.
நேரில் வந்தும் கனவென நினைத்திருப்பவளின் நிலை ஹரியை உலுக்கியது.
‘எத்தனை நாள் தன்னை கற்பனையில் கண்டு ஏமாந்து போயிருந்தால், இப்போது நிஜத்திற்கும் நிழலுக்கும் வித்தியாசம் தெரியாதளவிற்கு குழம்பி நிற்பாள்?’ வருந்தியவன் கண்களை அழுந்த மூடினான்.
ஹரியின் தொடு உணர்வில் சுயம் மீண்ட ஆதினி ‘தன் கண்முன்னே கண்கள் மூடி சிலையென மிடுக்குடன் நின்றிருக்கும் உருவம் கற்பனையல்ல நிஜம்’ என உணர்ந்து மயங்கி சரிய, ஹரி அவளை பூவெனத் தாங்கினான் தன்னிரு கைகளில்.
*நிஜத்தின் தேடல்
நிழலில் முற்றுப்பெற
காதலுக்கான காத்திருப்பு
பாதையின்றி முடிவடைந்தது.*
இதயம் 8 : (உயிரோடு கலந்தது)
“ஹரி.”
மான் விழி இமைகள் படபடக்க… இதயம் அதிர அவளவனின் பெயரை உச்சரித்தாள்.
ஆதினியின் குரலில் அனைத்தையும் கட்டுபடுத்தி மீண்டிருந்தான் ஹரி.
வெளிநாட்டிலிருந்து அன்று காலை தான் ஹரி இந்தியா திரும்பியிருந்தான்.
இங்கு வருவதற்கு பலமுறை யோசித்தான். ஆதினி வேறொரு வாழ்க்கையில் நுழைந்த பின்னரே தாயகம் திரும்பும் நோக்கில் சென்றிருந்தவன், ருக்கு மாமியின் உடல்நிலை சரியில்லை என்ற போலியான காரணத்தை நம்பி வந்திருக்கிறான்.
தன்னுடைய வீட்டிற்குள் நுழைவதற்கு முன் ஹரியின் கண்கள் ஆதியின் வீட்டு மேல் தளத்தில் இருக்கும் ஆதினியின் அறையைத்தான் தொட்டு மீண்டன.
ஹரியிடத்தில் ஆழ்ந்த பெருமூச்சு.
அது ஏக்கமா, வலியா அல்லது சொல்லப்படாதா சொல்ல விழையாத ஏதோ ஓர் உணர்வு குவியல். அவன் மட்டுமே அறிந்த ஒன்று.
“ஹாய்… ஹவ் ஆர் யூ?” மூன்றாம் மனிதரிடம் கேட்கும் சாதாரண நல விசாரிப்பை போன்ற ஒட்டாத் தன்மை அவனது குரலில்.
மெல்லிய தலையசைப்பு அவளிடம். பார்வை அவனின் முகத்தை பார்த்தபடி.
“நீங்க?”
“யா… அம் டூ குட்.” முயன்று தருவிக்கப்பட்ட புன்னகை அவனிடம். மனதின் பொங்கி எழும் காதலை ஆதியின் முகம் கொண்டு அடக்கி வைத்தான்.
ஹரியை கேசாதி பாதம் வரை பார்வையால் வருடியவள், இறுதியில் அவனின் முகத்தில் லயித்து விட்டாள்.
அவன் மீது அவள் கொண்டுள்ள காதலை அப்பட்டமாக தெரிந்திருக்கும் நிலையிலும் அவளை விலக்கி வைக்கிறான்.
“இப்போவாவது அக்செப்ட் பண்ணுவீங்களா?” குரலில் வரையறுக்க முடியாத சோகம். அதனை அவனால் உணர முடிந்ததும் ஏற்க முடியாத தன்னிலையை அறவே வெறுத்தான்.
ஆதினி கேட்டுவிடக் கூடாதென்று ஹரி எதிர்பார்த்த கேள்வி. கேட்டும் விட்டாள். தானாக சம்மதம் வழங்கத் தயாரான தலையை அசையாது தடுத்தவன் அவளின் முகம் பார்த்து நிச்சயம் மறுக்க முடியாதென அவளுக்கு முதுகு காண்பித்து நின்றான்.
அமைதி அமைதி மட்டுமே!
மனம் முழுக்க காதல். இதயம் முழுக்க ஆதினி. இந்நிலையில் எப்படி ஹரியால் வாய் திறந்து மறுக்க முடியும். தொண்டை வரை வரும் வார்த்தைகளை உதிர்க்க வாய் மறுத்து சண்டித்தனம் செய்தது. அவனுக்கு எதிராக அவனின் வாய் சதி செய்தது.
ஹரியின் அமைதியும்… தொண்டை கணைப்பும் ஆதினிக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை அறிவுறுத்தியது.
“நோ சொல்லப் போறீங்களா!” ‘நிச்சயம் நோ மட்டும் சொல்லிவிடாதீங்க’ என்ற மறைபொருள் நிறைந்த வரி.
அவளின் யாசகம் ஹரியின் காதல் நெஞ்சத்தை அறுத்தது. கூர் முனை வாளால் கூரிட்டது.
‘ப்ளீஸ் டி இப்படியெல்லாம் கேட்டு என் திடம் தொலைக்க வைக்காதே!’ மனதோடு மனதில் இருப்பவளிடம் மன்றாடினான்.
“ஒரு போதும் ஆதிப்பாவுக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது. அவரின் அன்பை இழக்க நான் தயாராக இல்லை.” ஒரு வழியாக சொல்லி விட்டான். ஆதினி முதல் முறையாக ஹரியிடம் காதல் சொல்லிய போது அவன் சொல்லிய பதில். அதில் சற்றும் மாற்றமில்லை.
“டாட்… ஓ காட்… டாட்காகத்தான் வேண்டாம் சொல்றீங்களா? டாட் லவ் மேரேஜ் தான் தெரியும்ல” என்றாள்.
“ஹேய் ஒரு முறை சொன்னால் உனக்கு புரியாதா?” ஹரிக்கு மீண்டும் மீண்டும் அவளிடம் மறுப்பது வலி நிறைந்ததாக இருந்தது. உயிருக்கு உயிராக நேசம் கொண்ட பெண்ணிடமே மறுப்பது, அவன் மீதே அவனுக்கு கோபத்தை உண்டாக்கியது. அந்த கோபம் அவனை ஆயாசமாக உணர வைத்தது.
“உங்களுக்கு என்னை பிடிக்காமல் இல்லை தானே?” அதற்கான விடை அவள் அறிந்ததே. ஹரிக்கு ஆதினி என்றால் அத்தனை பிடித்தம். ஆனால் எப்போது அவள் அவனிடம் காதலென்று சொன்னாளோ அன்றே அந்த பிடித்ததை மனதின் அடி ஆழத்தில் போட்டு மூடிவிட்டான்.
“பிடிக்குமென்றும் நான் இதுவரை சொன்னது இல்லையே!” இன்று எப்படியும் இருவருக்கும் ஒத்து வராது என்பதை அவளுக்கு புரிய வைத்திட வேண்டுமென நினைத்தான்.
அதனால் பேச்சினை முடிக்காது அவளின் கேள்விகளுக்கு சளைக்காது பதில் வழங்கினான்.
“ஏன் ஹரி? உங்களுக்கு புரியுதா இல்லையா?” கன்னம் தாண்டி கண்ணீர் வழிந்தது.
“உனக்குத்தான் புரிய மாட்டேங்குது.” சற்று குரல் உயர்த்தியவன் அவள் புறம் திரும்பியிருந்தான்.
“எனக்கு சரியான காரணம் சொல்லுங்க…”
“காரணம்…” ஹரி பொய்யான காரணத்தை யோசித்தான்.
“நாம் வேறு வேறு இனம்… அதுவா?”
“ச்ச… நிச்சயம் அதில்லை. நான் தான் சொன்னனே ஆதிப்பாக்கு என் மீதிருக்கும் அன்பை இழக்க என்னால் முடியாது. அவர் வருந்தும்படியான செயல் எதையும் நான் செய்ய மாட்டேன்.” உண்மையையே கூறினான்.
ஆதியில்லை என்றால் அவர்களின் நிலை? கணவரும் இறந்த நிலையில் ருக்கு மாமிக்கும் அவனுக்கும் ஹரிணிக்கும் உறுதுணையாக இன்று வரை அரணாக இருப்பது ஆதியே! அத்தோடு ஹரிணிக்கு திருமணத்தின் போது தந்தையாக நின்று அவளை தாரை வார்த்துக் கொடுத்ததும் ஆதி தான். அது ஹரியே எதிர்பார்க்காதது.
தந்தை முறையில் இருப்பவரிடம் உங்கள் மகளை நான் விரும்புகிறேன் என்று சொல்ல அவனால் எப்போதும் முடியாது. அது அந்த உறவுக்கு தான் செய்யும் துரோகம் என்றே கருதுகிறான். அதற்காகவே தன் காதலை தனக்குள் மறைக்கின்றான்.
“உங்களுக்கு என் மேல் லவ் வரவே வரதா?” ஏக்கமும் எதிர்பார்ப்பும் சரிசமமாக போட்டி போட்டன.
“ஷிட்… சும்மா லவ் லவ்வுன்னு, இதுக்காகத்தான் உன் டார்ச்சருக்காகத்தான் இந்தியா பக்கமே வராமல் இருந்தேன்” வேண்டுமென்றே அவள் நோக பேசியவன் காலை தரையில் உதைத்துக் கொண்டான்.
“என் லவ் டார்ச்சரா?” அவளின் காதல் மனம் துடித்துடித்தது. இரு கண்களும் கண்ணீரை மழையென பொழிந்தன. மனம் விண்டு போனது.
“இதுவரை என் காதல் தான் உங்களுக்கு புரியல நினைத்தேன். ஆனால் டார்ச்சராக பார்ப்பவருக்கு இனி புரிந்தும் பலனில்லை. இதற்கு மேல் என் காதல் உங்களுக்கு டார்ச்சராக ஐ மீன் தொல்லையாக இருக்காது” என்றவள் வெளியேற வாயிலை நோக்கித் திரும்பி நடக்க…
“ஒன் செக்…” சொடக்கிட்டு நிறுத்தினான்.
“ஹரிணியை அக்கான்னு தானே கூப்பிடுற… அப்போ, அவளோடு இணைந்து பிறந்த என்னை எப்படி அழைக்க வேண்டுமோ அப்படி அழை” என்றவன் அவள் அவன் சொல்லியதை கிரஹிப்பதற்குள் அங்கிருந்து சென்றுவிட்டான். (ஹரி, ஹரிணி இரட்டையர்கள்)
அவன் சொல்லிச்சென்றது புரிந்ததும் ஆதினியின் உலகம் அப்படியே நின்றுவிட்டது.
“என்ன சொல்லிவிட்டுப் போகிறான். இவன் எனக்கு… எனக்குள் மொத்தமாக கலந்திருப்பவனை நான் அண்…” அவளால் அந்த வார்த்தையை ஹரியை எண்ணி உச்சரிக்க கூட முடியவில்லை. அவளுக்கு தொண்டை அடைத்தது.
தரையில் மண்டியிட்டு அமர்ந்தவள் முகத்தை கைகளால் மூடி விசும்பினாள்.
அங்கு அவர்களுக்குள் நடந்த பேச்சு வார்த்தையை மாமியும், ஹரிணியும் கிச்சனில் இருந்தபடியே பார்த்தும் பார்க்காது, கேட்டும் கேட்காதாதைப் போன்று கவனித்துக் கொண்டிருந்தனர்.
ஹரிணிக்கு ஆதினியின் காதல் தெரியும். அவளுக்கும் ஆதினி ஹரி வாழ்வில் ஒன்றிணைந்தால் மகிழ்வே.
ஆனால் பிடி கொடுக்காமல் இருக்கும் ஹரியை நினைத்தால் ஹரிணிக்கும் வருத்தமே!
ஆதினியால் தான் ஹரி வெளிநாட்டிற்கு சென்றான் என்று நினைத்திருந்த ஹரிணியின் எண்ணம் இன்று ஹரியின் பேச்சால் தெளிவானது.
ஆதி ஆதினியின் திருமணத்தைப் பற்றி பேசியதும்… அதற்காக எவ்வித அடியும் இதுவரை ஆதி எடுக்கவில்லை என்றாலும் ஆதினியுள் ஏற்பட்ட பயம் அவளை வருவிடம் அழுது புலம்ப வைத்தது.
ஆதினியின் பல வருடக் காதல் தெரிந்த வரு… நிறைவேறாத காத்திருப்பு எத்தகைய வலியை கொடுக்கும் என்பதை நடைமுறையில் அனுபவிப்பதால் அத்தகைய வலி ஆதினி பெறக் கூடாது என்பதற்காக ஹரிணியிடம் பேசி ருக்கு மாமியின் உதவியோடு, அவரின் உடல்நிலையை காரணம் காட்டி வரவே முடியாதென்று பிடியாக நின்ற ஹரியை இங்கு வரவழைத்திருந்தனர்.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஹரி விடுமுறை என்ற ஒன்று எடுக்காததால் அவன் எமர்ஜென்சி என்றதும் அவனின் கம்பெனி நிர்வாகம் எவ்வித கேள்விகளும் இன்றி அவனுக்கு விடுப்பு வழங்கியது.
“இவன் என்ன ஹரிணி இப்படி பிடிகொடுக்காமல் இருக்கான். இப்படி தத்தியா இருக்கவன் நம்ம ஆதினிக்கு வேணுமா?” மாமி அலுத்துக்கொண்டார்.
“உங்க பேரனை நீங்களே டேமேஜ் பண்றீங்களே!.”
“அதுக்கு… ஆது குட்டியை விட்டுத்தர முடியுமா?”
“இவன் லவ் ஏத்துகிட்ட அப்புறம் தான் கல்யாணம் அப்படின்னா நம்ம ஆதினிக்கு அறுபது வயதானாலும் கல்யாணம் ஆகாது.”
“இப்போ என்ன பண்றது ஹரிணி.”
“ஹரி ஆதிப்பாவை தானே காரணம் காட்டுகிறான். நாம் அவர்கிட்ட இருந்தே ஆரம்பிப்போம்.”
ஹரிணியின் யோசனை மாமிக்கும் சரியெனவே பட்டது.
“ஆனால், நாம் எல்லாம் செய்த பிறகு இந்த ஹரி விருப்பமில்லை அப்படின்னு சொல்லிட்டான்னா?” மாமிக்கு எந்தளவிற்கு ஹரியை நம்புவதென்று தெரியவில்லை.
“இதுநாள் வரை எனக்கிருந்த சந்தேகம் இப்போ கிளியர் ஆகிடுச்சு பாட்டி. நாம் தாராளமா ஆதிப்பாகிட்ட பேசலாம்.” ஹரிணி அர்த்தமாக புன்னகைக்க மாமிக்கு விளங்கவில்லை.
“நீ என்ன சொல்லுற?”
“ஹ்ம்… உன் பேரனும் ஆதினியை விரும்புறான் சொல்லுறேன்” என்றவள் அங்கு அழுது கொண்டிருக்கும் ஆதினியை நோக்கி நகர்ந்தாள்.
அறைக்குள் சென்றுவிட்டாலும் ஹரியின் பார்வை அவனின் ஆதும்மா மீதே. அவளின் அழுகையை, அவனுக்கான அவளின் கண்ணீரை அவனால் கண் கொண்டு பார்த்திட முடியாது கை முஷ்டியை சுவற்றில் ஓங்கி குத்தினான்.
‘எனக்காக ஏன்டி உன்னை கஷ்டப்படித்திக்கிற?’ அவனால் மனதில் மட்டுமே அவளிடம் கேட்க முடிந்தது.
“ஆதினி…”
ஹரிணியை நிமிர்ந்து பார்த்த ஆதினி… அவள் எதுவும் கேட்பதற்கு முன், அங்கிருந்து எழுந்து வேகமாகச் சென்று விட்டாள்.
அடுத்த அரை மணி நேரத்தில் உயிருக்கு போராடும் நிலையில் ஆதினி. அவள் நலன் வேண்டி மொத்த குடும்பமும் மருத்துவமனையில் அவளுக்கு சிகிச்சை நடைபெறும் அறை வாயிலில் கண்ணீர் நிரம்பிய துக்கத்தோடு அமர்ந்திருந்தனர்.
அவன் காதலே இல்லையென்று சொல்லியதை ஏற்க முடிந்தவளாள், அவன் சொல்லிய உறவு மாற்றம், விவரிக்க முடியா அழுத்தம் கொடுத்து, அவளை இந்நிலைக்கு உட்படுத்தியிருந்தது.
****
யாதவை பற்றிய சிந்தனையிலேயே வருவின் நொடிகள் நகர்ந்துக் கொண்டிருந்தன.
காற்றின் அசைவிற்கேற்ப ஊஞ்சல் ஆட… அவளும் சேர்ந்து ஆடிக்கொண்டிருந்தாள்.
நொடிகள் மணிகளாகியும் வருவிடம் அசைவில்லை. அவ்விடம் விட்டு அகலாது ஏதேதோ எண்ணங்களில் வலம் சென்றிருந்தாள்.
பலமுறை அவளின் அருகில் இருந்த அலைபேசி சத்தம் எழுப்பியும், ஒலி அவளின் செவிகளை அடையவில்லை.
“போன் ரிங்காவது கேட்கலையா?” என அருகில் கேட்ட யாதவின் குரலில் உணர்வு பெற்றவள் என்னவென்று பார்க்க வருவின் அலைபேசியை ஏற்று காதில் வைத்திருந்தான் யாதவ்.
ஜான் தான் அழைத்திருந்தான்.
“ஹலோ வரு.”
“நான் யாதவ் டா.”
“வரு கால் பண்ணியிருக்கா(ள்)டா.”
“ம்.”
“என்ன ரீசன் டா?”
“அவளிடம் தான் நீ கேட்க வேண்டும்” என்ற யாதவ், வருவிடம் கைப்பேசியை அளித்துவிட்டு அவளுக்கு அருகில் ஊஞ்சலில் குதித்து அமர்ந்தான்.
யாதவையும், அவனுக்கும் அவளுக்குமான இடையில் இருந்த நூலிழை இடைவெளியையும் மாற்றி மாற்றி ஆச்சரியமாக வரு பார்க்க,
“பேசு” என்று அலைபேசியை கண் காண்பித்தான்.
“ஹாங்க்… அண்ணா!”
“சொல்லும்மா… கால் பண்ணியிருக்க? நைட் ஒரு பேஷண்ட் சீரியஸ் கண்டிஷன்ஸ், முடிச்சிட்டு இப்போதான் வந்து மொபைல் பார்த்தேன்.” ஜான் வருவின் அழைப்பை ஏற்காததற்கு தன்னிலை விளக்கம் அளிக்க வரு ‘ம்’ மட்டும் கொட்டினாள்.
“அது… சும்மா தான் ண்ணா பண்ணேன்.”
“நைட் இரண்டு மணிக்குமேல் சும்மாவா?” ஜானால் வருவின் பொய்யை ஏற்க முடியவில்லை.
வருவிற்கு அருகில் அமர்ந்துகொண்டு தன்னையே குறுகுறுவென பார்க்கும் யாதவின் முன் அவனைப்பற்றியே விசாரிக்க வார்த்தைகள் வரவில்லை.
அதற்கு மேல் யாதுவை வைத்துக்கொண்டு எதுவும் பேச முடியாதென நினைத்தவள்,
“நான் அப்புறம் பேசுறேன் ண்ணா” என்று வைத்துவிட்டாள்.
“ம்ம்… சொல்லு?”
யாதவ் என்ன கேட்கிறான் என்று வருவிற்கு புரியவில்லை.
“என்ன சொல்லணும்?” என்றவள் ஊஞ்சலில் இருந்து இறங்க முயற்சிக்க முடியவில்லை. யாதவ் அவளின் தோளில் கை போட்டு அழுத்தியிருந்தான். யாதவின் திடீர் அருகாமை வருவை ஏதோ செய்தது.
“எதுக்கு அழுத?”
“நான்… நா…ஆ…ன்… அழல.”
“பொய் சொல்லாத!”
“நிஜமா இல்லை.” வேகமாகக் தலையசைத்துக் கூறினாள்.
“நான் யாரு?”
‘என்னதிது சம்மந்தமில்லாது கேள்வி கேட்கிறான்.’ வரு திருதிருத்தாள்.
அவனின் சபரிசம்… அருகில் நாசி தீண்டும் அவனின் வாசம் கட்டுப்படுத்தி வைத்த அவளின் மனதை கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டவிழ்த்துக் கொண்டிருந்தது.
“சொல்லு வரு.”
“என்ன சொல்லணும்?”
“நான் உனக்கு யாரு?”
அவனின் கேள்வியில் அவளின் கண்கள் அகல விரிந்தன.
‘அப்படி பார்க்காதடி. அந்த கண்ணுக்குள்ள தொலைந்து போகணும் போலிருக்கு!’ இமை நீண்ட விழிகளில் இதழ் ஒற்றிட பேராவல் எழுந்தது அவனிடம்.
“மாமா.”
அவன் கேட்டதற்கு அவள் பதிலளித்தாள். ஆனால் வருவின் அந்த உச்சரிப்பு அவனின் தேகமெங்கும் சில்லென்று குளிர்வித்தது. இதயம் மொத்தமாக சாரலில் நனைந்தது. வருவின் குரலில் வெளிவந்த விளிப்பை ஆழ்ந்து மெல்ல உள்வாங்கினான்.
“அப்புறம் ஏன் அதை சொல்லி கூப்பிடல?”
“எப்போ?” பேசவே தடுமாறினாள்.
“இப்போ. இவ்வளவு நேரம் பேசினோம் தானே! பட் ஒருமுறை கூட மாமான்னு உன் வாயில் வரவில்லையே!”
அவளை சீண்டுவது அவனுக்கு அத்தனை பிடித்தது.
“அது… அது…” என்ன சொல்வதென்று வருவிற்கு தெரியவில்லை.
“சரி விடு. இனி ஒழுங்கா மாமான்னு சொல்லு” என்றவன் அவளின் தோளில் போட்டிருந்த கையை எடுத்து அவளின் கன்னம் தட்ட,
படக்கென்று கீழே குதித்து விட்டாள்.
வரு ஊஞ்சலில் இருந்து இறங்கிய வேகம் கண்டு யாதவிற்கு அத்தனை சிரிப்பு.
அவனின் சிரிப்பையே வரு ரசித்து பார்த்திருக்க… அவளை நோக்கி ஒற்றை கண்ணடித்து இதழ் குவித்து காற்றில் முத்தத்தை அனுப்பினான்.
அதில் பதறி உடல் அதிர நிமிர்ந்தவள்,
‘இன்னைக்கு இந்த மாமாக்கு என்னாச்சு?’ என மனதோடு கேட்டவள்,
“நான் போறேன் மாமா ” என்று சொல்லி நகர,
அவளின் கையை பிடித்து வேகமாக தன்னை நோக்கி இழுத்தான்.
யாதவ் ஊஞ்சலில் கால் அகட்டி அமர்ந்திருக்க, வரு அவனின் இரு கால்களுக்கு இடையில் அவனின் இழுப்பிற்கு அழகாய் பொருந்தி, அவனின் நெஞ்சில் முகம் மோத நின்றாள்.
வருவின் தாடையில் ஒரு விரல் பதித்து அவளின் முகத்தினை நிமிர்த்தி தன்னை பார்க்கச் செய்தவன்,
அவளின் முன்னெற்றியில் வழிந்த கற்றை முடியை மெல்ல அவளின் காதோரம் ஒதுக்கி…
“என்ன காரணமிருந்தாலும் இனி நீ அழக்கூடாது” என்றான். அவனின் குரல் மிக அழுத்தமாக வெளிவந்தது.
அந்நொடி ‘நான் அழுதால் இவனுக்கென்ன’ என்று அவளால் சிந்திக்க முடியவில்லை. அவனின் நெருங்கிய அருகாமை அவளை மொத்தமாக சுயமிழக்கச் செய்திருந்தது. சிந்தித்திருந்தால் அவனின் காதல் மனம் அவளுக்கு புரிந்திருக்குமோ!
உயிரோடு கலந்திட்ட காதலை வார்த்தையால் சொல்வதைவிட தன் செயல்களால் காட்டிட நினைத்தான் யாதவ். நினைத்த மாத்திரம் காட்டிடத் தொடங்கியும் விட்டான். ஆனால் அது அவளுக்குத்தான் விளங்கவில்லை. யாதவின் வருடக் கணக்கான விலகல் அவனின் திடீர் நெருக்கத்தை ஏற்க விடவில்லை.
யாதவின் குரலிலிருந்த அழுத்தமே அவளை தலையசைக்க வைத்தது.
யாதவின் இழுப்பிலேயே உறை நிலையை அடைந்திருந்த வரு அவனுள் சிலையென நின்றிருக்க, யாதவ் தான் வருவின் நெருக்கத்தில் திணறிப்போனான்.
‘கொல்றடி செல்லம்மா.’
‘பித்து பிடிக்க வைக்குறடி.’
‘பல வருடத்தை வீணாக்கிட்டேனே!’
கடந்ததை நினைத்து வருந்தி பலனில்லை. புரிந்தவன் நிகழ்வை தன் காதலால் வாழ்ந்திட ஆசைகொண்டான்.
முதல் முறையாக வருவை ரகசியப் பார்வை பார்த்தான். அவளின் முகம் மட்டுமில்லாது அவனின் காதல் பார்வை அவளின் உடல் முழுக்க தீண்டியது. யாதவ் முற்றிலும் தன் சுயம் தொலைத்திருந்தான்.
இறுதியாக யாதவின் பார்வை வருவின் கழுத்து குழிக்கு கீழ் சற்று இறங்கி ஆடை உரசும் இடத்தில் இருக்கும் சிறு மச்சத்தில் நிலைத்தது.
சிறு புள்ளியாக அடர் கருப்பிலிருந்த அந்த மச்சம் யாதுவை என்னவோ செய்தது. அவனுள் பல மாயத்தை தோற்றுவித்தது.
‘இட்ஸ் கில்லிங் மீ’ என்று மனதில் சொல்லியவன் தன் பின்னந்தலையை அழுந்த தேய்த்து பொங்கிய தன் உணர்வுகளை அடக்கினான்.
“நீ போ!”
யாதவ் அவளை போகச் சொல்லவும் தான் வரு மீண்டும் நடப்பிற்கு வந்தாள்.
‘இவர் முன் மட்டும் நான் அனைத்தும் மறந்தவளாகிறேன்.’ யாதவின் பேச்சுக்கள் செயல்கள் விளங்காது நின்றாள். அவளுக்கும் அந்நொடி அவனை நீங்க மனம் வரவில்லை.
“ப்ளீஸ் யூ மே கோ நவ்… லீவ் மீ.” இங்கேயே அவள் தன் முன்னே நின்றிருந்தாள் கட்டுபாட்டினை இழந்து எங்கே அந்த மச்சத்தில் முத்தம் வைத்திடுவோமோ என்ற பயத்தில் அவளிடம் கோபமாகக் கத்தினான்.
இவ்வளவு நேரம் நன்றாக பேசியவன், திடீரென இப்படி கத்தவும் புரியாது… மலங்க மலங்க விழித்தபடி நின்றவளின் உடலில் ஏற்பட்ட அதிர்வை உணர்ந்தவன் தன்னையே கடிந்தவனாக நெற்றியை தட்டிக்கொண்டு,
“இது என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது. எனக்கு கிஸ் பண்ணணும் தோணுது” என்று ஆள்காட்டி விரல் நீட்டி அவளின் நெஞ்சத்திற்கு மேல் காண்பித்து சொல்ல… வருவிற்கு மயக்கம் வரும் நிலை. கால்கள் நடுங்கின. நிற்கவே திறனின்றி அவனின் கைகளையே பற்றி நின்றாள்.
*வார்த்தைகளற்று
காட்டிடத் துடிக்கும் காதல்,
வரம்பற்று
எல்லையின்றி
வானம் கடந்து நீள…
உணர்த்தும் காதலை
உணர வேண்டிய மனம்
உணர்ந்திடாது
தத்தியாகிப் போனது.*
Epi 9 and 10 https://thoorigaitamilnovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af-7/
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
23
+1
2
+1