Loading

இதயம் 6 : (பார்வை காதல் பேசுதே)

இரவு முழுக்க ஹரியின் நினைவிலேயே தன்னை தொலைத்திட்ட ஆதினி அதிகாலையிலும் உறக்கம் பிடிக்காது கண்களை மூடியபடி ஹரியின் உருவத்தை விழி வட்டத்தில் வைத்தவளாக கவிழ்ந்து படுத்திருந்தாள்.

அறையின் சுவர் முழுக்க அவளின் கற்பனையில் அவனின் பிம்பமே!

“ஹரி… ஹரி…” வாய் தானாக முணுமுணுத்தது.

எப்படியும் அவன் எடுக்க மாட்டான் என்று தெரிந்தே அன்றைய இரவில் பதினேழாவது முறையாக அவனின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள்.

புலனம் வழியே குறுந்தகவல்,

“பிக் மை கால், ப்ளீஸ்.”

அடுத்த நொடியே பார்க்கப்பட்டதற்கான  ப்ளூ டிக் காட்டியது. பதிலேதுமில்லை.

இம்முறை அழைக்க அழைப்புத் துண்டிக்கப்பட்டது.

ஆதினியின் மனம் துவண்டு போனது.

“வீட்டில் என் திருமணத்தைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள்.” தகவல் அனுப்பியவள் கைப்பேசியை படுக்கையில் தூக்கி எறிந்து கண்களை மூடிக் கொண்டாள்.

சுள்ளென்று சூரியனின் கதிர்கள் சன்னல் திரைச்சீலை தாண்டி முகத்தில் மோத எழுந்தவள் நேரத்தை பார்க்க, கடிகார முள் காலை ஒன்பதை தொட்டிருந்தது.

‘இவ்வளவு நேரம் அறையை விட்டு வெளியில் செல்லாது இருந்ததற்கு என்னவோ ஏதோவென்று மாம் யோசிக்க ஆரம்பித்திருப்பார்கள்’ என்று நினைத்தாலும், குளியலறைக்குள் புகுந்து மெதுவாகவே தயாராகி வெளியில் வந்தாள்.

ஆதினி வரும் போது நிரலி அவள் நினைத்த மாதிரி புலம்பிக் கொண்டிருந்தார்.

“இந்த பிள்ளைகளுக்கு இந்த வயதிலேயே அப்படி என்னதான் கவலையோ… நேரத்திற்கு சாப்பிடக்கூடத் தோன்றாது.”

“என்னம்மா இன்னைக்கு நீங்க புலம்புவதற்கு நான் மட்டும் காரணம் இல்லை போலிருக்கே?” ஆதினி நிரலியை வம்புக்கு இழுத்தாள்.

“வந்ததும் என்னடி பேச்சு உனக்கு… நேரத்தைப் பாரு, முதலில் சாப்பிடு” என்று மகளை பிடித்து இழுத்து உணவு மேசை இருக்கையில் அமர வைத்தவர் அவளின் தட்டினை நிரப்பிவிட்ட பின்னரே அங்கிருந்து நகர்ந்தார்.

“வரு இவ்வளவு நேரம் தூங்க மாட்டாளே! இன்னும் ஏன் கீழே இறங்கி வரல…” என்று மாடிப்படி அருகே சென்று நின்றவாறு தனக்குள் பேசிய நிரலி,

“இன்னைக்கு வருக்கு கிளாஸ் இல்லையா?” என ஆதினியிடம் கேள்வியை முடித்தார்.

“டாட் எங்க மாம்?”

“நான் கேட்டதுக்கு பதிலை காணோம். இதுல எதிர் கேள்வி” என்று சொன்னாலும் மகளின் கேள்விக்கு பதிலளித்தார் நிரலி.

“அவர் மருமகளை பார்த்துட்டு வரேன்னு மேல போயிருக்கிறார்.”

“என்னாச்சு மாம். எனித்திங் சீரியஸ்?”

“நத்திங் டா.”

“காலையிலேயே தலை வலிக்குதுன்னு இண்டர்காமில் அழைத்து பிளாக் டீ கேட்டிருக்காள். அத்தோடு இவ்வளவு நேரமாகியும் இன்னும் வரலையேன்னு பார்த்துட்டு வரேன் சொல்லிப் போனாங்க.”

“ஹோ…”

அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள்.

“என்ன மாம் சர்க்கரை பொங்கல். ருக்கு பாட்டி செய்ததா?”

“ஹ்ம்ம்… ஹரிணி வந்திருக்காள். அவளுக்கு பிடிக்குமேன்னு செய்தாங்களாம்.” அர்த்தமாக மகளை பார்த்துக் கொண்டேக் கூறினார். ஆதினி ஹரிணியின் வருகைக்கான காரணம் கேட்பாளென்று எதிர்பார்த்தாரோ?

ஹரிணி ஆதியின் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிக்கும் ருக்கு மாமியின் பேத்தி. வேறு இனமாக பழக்க வழக்கங்களில் பல வேறுபாடுகள் இருந்த போதிலும் ஒரே குடும்பம் என்று சொல்லுமளவிற்கு இரு குடும்பத்திற்கும் நடுவில் நெருக்கமான உறவுமுறை உள்ளது.

சாப்பிட்டு முடித்த ஆதினி, தனக்கு ஏற்பட இருக்கும் அதிர்ச்சி தெரியாது,

“ஹரிணி அக்காவை பார்த்துட்டு வரேன் மாம்” என்று சொல்லியவளாக எதிர் வீட்டை நோக்கிச் சென்றாள்.

மகளின் விருப்பம் ஈடேற வேண்டுமென இறைவனுக்கு பிரார்த்தனை வைத்தார். மகளின் ஆசையை நிரலி அறிந்திருப்பாரோ?

****

இரவு முழுக்க யாதவ் தன்னிடம் பேசியதை நம்ப முடியாது, படுக்கையில் இரு கால்களையும் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த வருவின் எண்ணங்கள்  யாவும் யாதவ் அவளின் மனதில் தடம் பதித்ததும்… அவனிடம் விருப்பத்தை சொல்ல விழைந்தததையும், தன் மனம் புரிந்தும் தன்னை பேசவிடாது செய்து மறுத்துச் சென்ற நிகழ்வுகளையெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக யோசித்தவள்… பலமுறை அவனுக்கே தெரியாது அவளது அன்னை கல்பனாவின் குரலில் அவனிடம் பேசி நலன் அறிந்த பல தருணங்களை நினைத்து பார்த்தவளுக்கு… அவளின் காத்திருப்பு நீண்டதாகவேத் தோன்றியது.

‘இனி என் காத்திருப்பு அவசியமற்றதல்லவா?’

மனதோடு கேட்டுக்கொண்டவள் கொண்டவனின் மீது கொண்ட நேசத்தால் வெடித்து கிளம்பிய அழுகையின் ஆர்பரிப்பை மனதோடு கரை சேர்த்தாள்.

அழுகை கூட தன் காதலின் வெளிப்பாடாக இனி வெளியேறி விடக் கூடாதென்று கருதினாள்.

மனம் வெகுவாக கனத்திருந்தது.

‘ஜான் இல்லாததால் அழைப்பு மீண்டும் வரவே எடுத்து பேசியிருக்காங்க. பேசும் எண்ணம் இருந்திருந்தால் முதல் முறையே அழைப்பை ஏற்றிருப்பாரே?’

யாதவின் மனம் வேறொரு பெண்ணை விரும்புகிறது என்ற பிறகு எதையும் அவளுக்கு சாதகமாக நினைக்க முடியவில்லை அவளால்.

‘இங்கு இனி மாமாவின் முகம் பார்த்து என்னால் இருக்க முடியுமா?’ கண்களில் கண்ணீர் பொங்கி வந்தது.

‘இருப்பினும் தான் எதற்காக வந்தோமோ அது முடியாது எப்படி செல்வது? ஆதி மாமாவிற்கு என்ன காரணம் சொல்ல?’ அங்கிருக்கவும் முடியாது அங்கிருந்து செல்லவும் முடியாது தவித்தாள்.

‘எப்படியும் மாமா விரும்பும் பெண்ணை ஒருமுறை பார்த்து பேசி, இருவரையும் சேர்த்து வைத்த பின்னரே இங்கிருந்து சென்றிட வேண்டும்’ என தீர்மானமாக முடிவெடுத்தவள் தன்னை சமன் செய்ய முயன்ற வேளையில் அறையின் கதவு தட்டப்பட்டது.

உள்ளிருந்து எவ்வித சத்தமுமின்றி போக… இம்முறை கதவினை தட்டிய ஆதி, “குட்டிம்மா” என்றழைத்தான்.

ஆதியின் குரலில் தன்னிலை மறந்து வேகமாக கதவினை திறந்தாள். ஆதி அவளின் நலுங்கியத் தோற்றம் மற்றும் அழுததால் சிவந்திருந்த முகத்தையும் ஆராயும் பார்வை பார்த்த பின்னரே முகத்தை கூட துடைக்காது அப்படியே எழுந்து வந்தது நினைவுவர தன்னையே தட்டிக் கொண்டவள்,

“சாரி மாமா. ஒன் செக்” என்றவள் குளியலறை பக்கம் போனவள் திரும்பி,  “நீங்க உள்ள வாங்க மாமா” என்றாள்.

“பரவாயில்லைடா! நீ ரெஃப்ரஷ் செய்து வா. நான் லானில் அமர்ந்திருக்கிறேன்” என்ற ஆதி மாடியிலிருக்கும் கூடம் போன்ற இடத்தில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தார்.

அவர் மனம் வருவை நினைத்து சிந்தனைக்குள் ஆழ்ந்தது.

‘குட்டிம்மாக்கு ஏதும் பிரச்சனை இருக்குமா?’

அப்போதுதான் அவருக்கு நினைவே வந்தது.

யாதவ் வெளிநாடு சென்ற அன்று, வரு அழுது கொண்டே இருந்தது. ஏனென்று காரணம் தெரியாத போதும், யாதவ் மீது அவள் கொண்ட பாசம் அனைவரும் அறிந்தது. அதனால் அவனின் பிரிவு அவளை கவலைக்குள்ளாக்குகிறது என்று எண்ணிக்கொண்டார்.

அன்று அவர் அவள் அழுது பார்த்தது. முதலும் இறுதியாக. அதன் பிறகு நான்கு வருடங்கள் கழித்து இன்று தான் காண்கிறார்.

ஏதோ அவருக்கு புரிந்தும் புரியாத நிலை.

‘அன்று யாதவ் வெளிநாடு போனான் அழுதாள். இன்று?’

டக்கென்று மூலையில் ஒரு பளிச்.

‘குட்டிம்மா… யாதுவை…’ அதற்கு மேல் அவரால் அதனை சொல்லிக்கொள்ள முடியவில்லை. மனம் முழுக்க ஆனந்தம் விரவ, அதீத உணர்ச்சியில் சிக்கிக் கொண்டார்.

‘தான் எண்ணுவது சரியாக இருக்க வேண்டும்’ என்று மனதிற்குள் பேராசை கொண்டார்.

“மாமா.” வரு வேகமாக குளித்து முடித்து தயாராகியே வந்திருந்தாள்.

“உட்காரு குட்டிம்மா.” தன்னருகில் கை காண்பித்தார் ஆதி.

“சாரி மாமா. வெயிட் பண்ண வச்சிட்டேனா?” என்றவள் ஆதியின் அருகில் அமர்ந்தாள்.

வருவின் தலையை வருடியவர், “டான்ஸ் கிளாசில் ஏதாவது ப்ராப்ளமாடா?” எனக் கேட்டிருந்தார்.

“இல்லை மாமா.” வேகமாக பதில் சொன்னாள்.

“அப்புறம் எதுக்கு குட்டிம்மா அழுதிருக்காங்க?” என்று நேரடியாக விடயத்திற்கு வந்தார்.

“அது வந்து மாமா…”

“மாமாகிட்ட சொல்ல என்னடா தயக்கம்.”

“அம் இன் லவ் மாமா.” பட்டென்று சொல்லியிருந்தாள். சூர்யாவிடம் கூட பொய் சொல்லிவிடுவாள். ஆனால் ஆதியிடம் அவளால் பொய் சொல்லிட முடியாது.

இன்று வரு சொல்லியது அன்று யாதவ் சொல்லியதை ஆதிக்கு நினைவு படுத்தியது.

வரு சொல்லிய லவ் யாராக இருக்குமென்று தெரிந்து கொண்டே அவள் வாய்வழியாகக் கேட்டிட நினைத்தார்.

“யாது கூட உன்னை மாதிரி தான், அம் இன் லவ் டாட் என்றான்” என்றார்.

அதில் மலுக்கென ஒற்றை கண்ணிலிருந்து வழிந்த நீரை வேகமாக துடைத்துக் கொண்டாள்.

இப்போது அவள் கண்ணில் துளிர்த்த நீர் ஆதிக்கு உண்மையை உணர்த்தியது.

“லவ் ஓகே. எதுக்கு அழுத?” அவள் சொல்லாது அவர் விடுவதாக இல்லை.

“இனி அந்த லவ் எனக்கில்லை மாமா” என்றவள் மேற்கொண்டு எதுவும் ஆதி கேட்டிடுவானோ என்று பயந்து அங்கிருந்து எழுந்து வேகமாக கீழிறங்கிச் சென்றாள்.

மீண்டும் யாதவின் நினைவால் கண்ணீரை வெளியேற்றும் கண்களை புறங்கையால் துடைத்தவாறு படிகளில் கீழிறங்கிக் கொண்டிருந்தவள் நினைவுக்கு உரியவன் எதிரே மேலேறி வருவது தெரியாது அவன் மீதே மோதி தடுமாறினாள்.

அப்போதுதான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியிருந்த யாதவ், ‘வரு இந்நேரம் டான்ஸ் ஸ்கூல் சென்றிருப்பாள்’ என்ற எண்ணத்தோடு மாடியேறிட, எதிர்பாராது தன் மீது வந்து விழுந்த தன்னவளை கீழே விழாது தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

யாரென்று முகம் உயர்த்தி பார்த்தவளினுள் அப்பட்டமான அதிர்வு. அவளவனின் முதல் ஸ்பரிசம் அவளை நடுங்கச் செய்தது. ஆனால் அவனுக்கோ உள்ளம் கிளர்ந்தது. உள்ளுக்குள் மென்சரால் தூவியது.

விழுந்து விடுவோமென்கிற பயத்தில் மருண்டு விழித்தவளின் கண்களில் விரும்பியே தொலைந்து கொண்டிருந்தவனுக்கு அக்கண்களில் தெரிந்த சிவப்பு, அவள் அழுதிருக்கிறாள் என்பதை பறைசாற்றி யாதவை இறுகச் செய்தது.

அவளின் அழுகைக்கு காரணம் அவனன்றி யாராக இருக்க முடியும். அவனறிந்ததே!

“அழுதியா?”

தன்னிலிருந்து அவளை விலக்கி நிறுத்தி அழுத்தமாக அவளின் விழிகள் சந்தித்து வினவினான்.

வரு தலை கவிழ்ந்து மௌனமானாள்.

“செல்…(லம்மா)” தொண்டையை செருமி சரி செய்வதைப்போல் சொல்ல வந்த வார்த்தையை மறைத்தவன்…

“நான் உயிரோடு தானே இருக்கின்றேன்?” என்று கூர்மையாகக் கேட்டு அவளை கடந்து மேலேறினான்.

அவன் கூறிச் சென்ற வார்த்தையில் அவள் தான் விக்கித்து நின்றாள்.

‘என்ன சொல்லிப்போகிறான்?’

யாதவின் முதுகை துளைத்தது வருவின் பார்வை.

‘இரவு முழுக்க அழுதிருக்கிறாள். யார் இப்படி அழ சொன்னது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பேசியிருக்கிறேன். அதை நினைத்து மகிழாது அழுது தொலைத்திருக்கிறாள்.’ வருவின் மீது கோபம் கோபமாக வந்தது அவனுக்கு.

இத்தனை வருடங்கள் அவளின் முகம் கூட காணாது இருந்தவனுக்கு காதல் வந்ததும் அவனுக்கான அவளின் கண்ணீர் கூட யாதவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அவளின் அழுத விழிகள் அவன் இதயத்தை அறுத்தன.

‘நான் வேறு பெண்ணை விரும்புகிறேன் என்பதை நினைத்து அழுதிருக்கிறாள் என்றால், நான் அவளுக்கில்லை என்று முடிவு செய்து விட்டாளா?

அவள் என்மீது கொண்ட காதல் அவ்வளவு தானா?

நான் மறுத்துச் சென்றால், என்னை அப்படியே விட்டுவிடுவாளா?’

நினைக்க நினைக்க அவனுள் வலி, வேதனை, எதற்கென்றே தெரியாது கோபம்.

அந்த கோபத்தோடே மேலே வந்தவன் எதிர்ப்பட்ட ஆதியை கூட கவனியாது தன்னறைக்குள் புகுந்து கதவினை அறைந்து சாற்றினான்.

‘இப்போது என்னவோ?’

ஜான்… யாதவ் சரியாகிவிட்டான் என்று சொல்லிய பிறகு சற்று ஆசுவாசம் அடைந்திருந்த ஆதிக்கு மகனின் செயலில் பயந்து வந்தது.

எத்தகைய வல்லமை வாய்ந்தவனாக இருப்பினும், தாங்கள் பெற்ற மக்கள் விடயத்தில் பயம் கொள்வது இயற்கை. அதற்கு ஆதியும் விதிவிலக்கல்ல.

ஆதியின் அரவத்தில் சுயம் மீண்ட வரு அவனுடனே இணைந்து கீழே சென்று, நிரலிக்காக பெயருக்கு உண்டு விட்டு தோட்டத்திற்கு சென்று காப்பர் பாட் என்று சொல்லப்படும் பெருங்கொன்றை மரத்திற்கு கீழ் அதன் பருத்த கிளையில் தொங்கிக் கொண்டிருந்த ஊஞ்சலில் சென்று அமர்ந்தாள்.

யாதவின் வார்த்தைகளை மெல்ல அசைபோட்டாள்.

“அழுதியா?

நான் உயிரோடு தானே இருக்கிறேன்?”

‘இதற்கு என்ன அர்த்தம். எவ்விதத்தில் சொல்லியிருக்கக் கூடும்.’

வருவிற்கு தலை வெடித்துவிடும் போலிருந்தது.

மீண்டும் மீண்டும் யாதவின் குரல் எதிரொலிக்க… வருவின் மனம் அவன் சொல்லிய அர்த்தத்தை சரியாக புரிந்து கொண்டது.

‘நான் உயிரோடு இருக்கும் வரை அழக்கூடாது என்கிறாரா?’

‘அப்படியென்றால் என்ன உணர்த்துகிறார்?’

மீண்டும் குழம்பியவள் யாதவின் மனமும் தன் பக்கம் சாய்கிறது என்ற வகையில் சிந்திக்க மறுத்தாள். அவனும் தன்மீது காதல் கொண்டிருப்பான் என்பதை அவளால் நினைக்கக்கூட முடியவில்லை.

ஒரு காதல் மரித்த மறுநொடி மற்றொரு காதல் துளிர்த்திருக்கும் என்பதை வருவால் ஏற்க இயலவில்லை.

அவள், யாதவ் நிகிலாவை ஆத்மார்த்தமாகவே விரும்புகிறான் என்று நினைத்திருக்கிறாள். அவளுக்கெங்கே யாதவின் காதலைப் பற்றி தெரிந்திருக்கப்போகிறது.

வேறு பெண்ணை நேசிப்பவன் என்ற கண்ணோட்டத்திலேயே யாதவை வைத்து நினைப்பவளுக்கு, அவன் சொல்லிச்சென்ற மறை வார்த்தைக்கு பொருள் விளங்கவில்லை. விளங்கியதையும் அவளுக்கு சாதகமாக ஏற்கத் தோன்றவில்லை.

அறைக்குள் நுழைந்த யாதவ் கைகளால் முகம் மூடி அமர்ந்துவிட்டான்.

வருவின் அழுத விழிகளே அவன்முன் வந்து போயின.

அதற்கு தான் தான் காரணமென்று நினைக்க நினைக்க யாதவிற்கு அவன்மீதே கட்டுகடங்கா கோபம் எழுந்தது.

‘நான் சரியாக இருந்திருந்தால் இன்று என் செல்லம்மாவின் கண்கள் கண்ணீரை கண்டிருக்காதே!’ உள்ளுக்குள் உடைந்தான்.

அந்த நொடி நிகிலாவிடம் கொண்டது காதலென்று நினைத்த அவனின் மடத்தனம் புரிவதாய்.

‘வருமீது கொண்டிருப்பதே உயிர் துளைக்கும் காதல்’ என்று உணர்ந்து கொண்டிருக்கிறான்.

ஆம் யாதவ் வருவை தான் காதலிக்கின்றேன் என்று அறிந்துகொண்ட நொடியிலிருந்து ஒவ்வொரு மணித்துளியும் காதலின் வெளிப்பாடு என்ன என்பதை கற்றுக் கொண்டிருக்கிறான். அது உணர்த்துகிறது அவனுள் உண்மை காதல் எது என்பதை.

அவளின்றி காதலை அவனால் ஒரு நாழிகையும் கடக்க இயலவில்லை. சுற்றி அவனவளின் வாசமே! அவள் பிம்பமே! அவள் மனதோடு ஒன்றிடத் துடித்தான். ஏதோ ஒன்று தடையாய் அவனுள்.

‘அது அவனின் முந்தைய அர்த்தமற்ற காதல்.’

‘அந்த காதல் வருவிற்கு தெரிந்த நிலையில், இப்போது நான் சொல்லும் காதல் எந்தளவிற்கு உண்மையென்று என் செல்லம்மாள் ஏற்பாள்.’ தவியாய் தவித்தான்.

அவனின் காதலை சொல்லி அவளின் கண்ணீரை நிறுத்த யாதவிற்கு ஒரு கணம் போதும்.

‘முந்தையது காதலே இல்லையெனினும், ஏற்கனவே ஒருத்தி மீது காதல் கொண்டவன் என்கிற நினைப்பை வருவினுள் எப்படி அழிப்பது?’ மரித்து மீண்டான்.

அத்தருணம் கொண்ட காதல் எத்தகைய வலியை கொடுக்குமென்று ஆத்மார்த்தமாக அறிந்து கொண்டான்.

மூச்சு முட்டுவதை போலிருக்க… பால்கனி கதவை திறந்து வந்தவனின் பார்வை தோட்டத்தை சுற்றி வந்து, பெருங்கோன்றை மரத்திற்கு கீழ் தஞ்சம் அடைந்தது.

பகவான் கண்ணனை நினைத்து வாழ்ந்த மீராவைப்போல் யாதவின் கண்களுக்கு காட்சியளித்தாள், ஊஞ்சலில் அமர்ந்திருந்த வருணவி.

வருவும் மீராவைபோல் தான். மீரா அந்த  கண்ணனை நினைத்து வாழ்ந்தாள் என்றால், வரு யாதவை மட்டுமே நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

வருவின் முகத்தில் கொட்டிக்கிடக்கும் சோகம், அவனுக்கான ஏக்கம் யாவும் யாதவின் கண்ணில் தவறாமல் பட்டது.

இத்தனை நாள் அவன் உணராதது யாவும் இப்போது அவன் உணர்வதாய்.

“செல்லம்மா…” காற்றிற்கு கூட கேட்டிடாது வெளிவந்த யாதவின் விளிப்பு அவனவளை தீண்டியது.

தன்னைப்போல் வருவின் பார்வை யாதவின் அறைபக்கம் திரும்பியது.

இருவரின் விழிகளும் ஒருவரின் ஒருவர் பார்வையை கவ்விக்கொள்ள சுற்றம் மறந்து சூழல் மறந்து உலகம் மறக்க அசையாது பார்வையால் தழுவி இருந்தனர்.

ஒருவர் மீது ஒருவர் கொண்ட நேசத்தை பார்வையால் விழி வீச்சினிலேயே கடத்திட முயன்றனரோ!

காதலெனும் மாய வலைக்குள் சிக்கி சுழன்று கொண்டிருந்தனர்.

எவ்வளவு நேரம் அவர்களின் பார்வை மொழி பேசியதோ?

நிரலியின் “யாது” என்கிற அழைப்பு அவனை மீட்க… அவனின் அசைவில் வருவும் நினைவு திரும்பினாள்.

“மாம்.” அந்நொடி அவனின் அன்பான அன்னையின் மீது கோபம் துளிர்ப்பதை அவனால் தடுக்க முடியவில்லை.

அங்கு வருவோ தன்னைக் குறித்தே வெட்கினாள்.

‘ஏற்கனவே தன் காதலை மறுத்தவன். இப்போது வேறொரு பெண்ணை அவர் விரும்புவது தெரிந்தும் அவரை பார்வையால் பருகியதை எண்ணி என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்.’ மருகினாள்.

காதல் கொண்ட நெஞ்சம் இரண்டும் மற்றவரின் நெஞ்சிலிருக்கும் நினைப்பை எண்ணி தங்களின் நினைப்பை வெளிப்படுத்த மறந்தனர்.

‘காதலினால் காயம் கொண்டவனுக்கு தன் காதலினால் மருந்தளிக்கலாம்’ என்று அவளும்… ‘தன் காதலை யாசித்து நிற்பவளுக்கு தன் மனதை கொடுத்து காதலை காட்டிடலாம்’ என்று அவனும் நினையாது போயினர்.

*சொல்லிக் கொள்ளும்
வார்த்தைகளை விட,
சொல்லப்படாதா மனங்களின்
உணர்வுகளால் வடிக்கப்படுகிறது
இருவரின்,
உயிர் துளைத்திடும்…
காதல்!*

Epi 7 and 8 https://thoorigaitamilnovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af-6/

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
25
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment