Loading

இதயம் 4 : (பேதையின் அதீத காதல்)

சில்லென்று வீசும் இரவு நேர வாடை காற்று முகத்தில் மோத… காற்றின் திசைக்கேற்ப அவளின் கார்குழல்கள் பறந்தன. அதனை ஒதுக்கும் எண்ணமின்றி இருள் வானினை அன்னாந்து பார்த்திருந்தாள் வருணவி.

கண்களின் இருபக்கமும் வழிந்த விழிநீர் காதினை தீண்டியது. அழுகிறோம் என்பதே அவளின் கருத்தில் பதியவில்லை. பல கோடி மைல்களுக்கு அப்பால் சிறு புள்ளியாக ஜொலிக்கும் ஒற்றை விண்மீனில் அவளின் பார்வை நிலைக்குத்தி இருந்தது.

காதல் தந்த உண்மையான வலியால் மனம் ரணமாகிக் கொண்டிருந்தது. அந்த ரணம் கண்ணீராய் வெளியேற மேற்கொண்டு எதுவும் சிந்திக்கும் நிலையில் அவளின் மனமும் இல்லை. மூளையும் இல்லை.

காதல்… யாதவின் மீது அவள் கொண்டது நான்கு வருடங்கள் ஆழமாக நெஞ்சில் வேரூன்றி பூத்து குலுங்கும் வண்ண மலர்கள் சூழ் வனம்.

சிறு வயது முதலே மாமன் மகன் என்கிற உரிமை உணர்வு யாதவின் மீது அவளுள்.

யாதவ் விடுமுறைக்கு வரும் போதெல்லாம் அவனுடனே சுற்றுவாள். சிறு பெண் என்று அவனுள்ளும் அவள் மீது அதீத பாசம்.

வருவை கண்டிப்பது, அக்கறை காட்டுவது, பிறரிடம் அவளுக்கு துணை நிற்பது எல்லாவற்றிலும் அவளின் வெல்விஷராக இருந்தவன் அவளின் சேட்டைகளை மௌனமாக ரசிப்பான். பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும், “நான் சொல்லித் தருகிறேன்” என்று முன் வரும் சூர்யாவை ஒதுக்கி விட்டு யாதவிற்கு அழைப்பு விடுவாள். அவனும் அலைபேசி வாயிலாக புரிய வைப்பான்.

அருகில் இருவரும் இல்லையேத் தவிர,  அவர்களின் அன்பான நெருக்கம் இருவருக்குமே அருகில் ஒன்றாக வளரும் உணர்வைத்தான் கொடுத்தது. அதனாலேயே என்னவோ பாசத்தைத் தாண்டிய எண்ணம் யாதவிற்கு அவனின் மாமன் மகளின் மீது தோன்றாது போனது.

வருவிற்கு அப்படியில்லை இருவரின் அன்பின் நெருக்கம் அவளுக்குள் பல மாற்றங்களை கொண்டு வந்திருந்தது. அதனை அறிந்தவளுக்கு அதற்கான காரணம் தான் புரியவில்லை. அந்த காரணம் காதல் என்று அவள் உணர்ந்து கொண்ட நாளும் வந்தது.

பள்ளி படிப்பை முடித்துவிட்டு தேர்வு முடிவுகளுக்காக வரு காத்திருந்த நேரம். அந்த வருட விடுமுறைக்கு யாதவ் கிராமத்திற்கு வந்திருந்தான்.

வழக்கம்போல் தோட்டம், வயல், ஆலை என்று வரு யாதவுடனே சுற்றிக் கொண்டிருந்தாள்.

யாதவிற்கு வருவை வளர்ந்த பெண்ணாக எண்ணத் தோன்றவில்லை. சிறுவயது முதல் அவனுடனே சுற்றுவதால் அவனுக்கு மாற்றங்கள் புரியவில்லை போலும்.

அன்றும் அப்படித்தான் வயலில் களை எடுப்பதை கல்பனா மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்க, புகைப்படம் எடுப்பதற்காக அங்கு வந்திருந்தான் யாதவ்.

என்னதான் தோப்பு துரவு என்று வருடம் ஒருமுறை சுற்றித் திரிந்தாலும் யாதவிற்கு வரப்பு மேல் நடப்பதென்றால் ததிங்கினத்தோம் தான். நான்கு அடி வைப்பதற்குள் வழுக்கிவிடுவான்.

அதனை அறிந்திருந்த வரு, யாதவ் வரப்பின் மீது கால் வைக்கும் முன் அவனுக்கு முன்பாக வந்து நின்று…

“வழுக்கிடும் மாமா. வரப்பு பூசியிருக்காங்க” என்றவள் தானே அவனின் கையினை பிடித்து மெல்ல அழைத்துச் சென்றான்.

எதிலும் அவளுக்கு வழிகாட்டியாக அவனிருக்க… இன்று அவள் அவனுக்கு வழி காட்டினாள். அதனை நினைத்த யாதவின் உதட்டில் மென் புன்னகை.

“மெதுவா போ குட்டி. நீ இழுப்பதிலே சேற்றில் விழுந்திடுவேன் போலிருக்கு.”

“மாமா குட்டி சொல்லாதீங்க. நான் இப்போ வளர்ந்துட்டேன்.” முகம் சுருக்கினாள்.

“ஆமாம் ரொம்ப வளர்ந்துட்ட” என்றவன் “குட்டியா என் கால் உயரம் கூட இல்லை, இதுல அம்மணி வளர்ந்துட்டாங்களாம்.” மேலும் அவன் கிண்டல் செய்தான்.

அதில் அவனின் கையை விட்டவள், இடுப்பில் கை ஊன்றி புசுபுசுவென மூச்சினை விட்டவளாக அவனை முறைத்து பார்த்தாள்.

“அய்யோ அம்மா பிசாசு” என்றவன் பயந்ததைப் போல் முகத்தை மூடிக்கொள்ள.

“மாமா” என்று மேலும் முறைத்தாள்.

“நிஜமாவே நீ குட்டிப்பிசாசு தான்” என்று கலகலத்து சிரித்தான் யாதவ்.

அவனின் சிரிப்பு காற்றில் மிதந்து தூரத்து குன்றுகளில் பட்டு எதிரொலித்தது.

யாதவின் சிரிப்பில்… குனிந்து களை எடுத்துக் கொண்டிருந்த இளம் பெண்கள் இருவர் நிமிர்ந்து அவனை லயித்து பார்க்க… வருவின் உள்ளே உரிமைத் தீ கொழுந்து விட்டது.

அவர்களை பார்த்து ஒரு விரல் நீட்டி பத்திரம் காட்டியவள்,

“உங்க ரசிகைகள் குனிஞ்சாச்சு… நீங்க சிரிப்பை நிறுத்துங்க” என்றவள், மீண்டும் அவனின் கையை பிடித்து அழைத்துச் சென்றாள்.

யாதுவும் வருவும் அவ்விடம் விட்டு தள்ளிச் சென்றதும்… வேலை பார்த்துக் கொண்டிருந்த நடுத்தர வயது பெண்மணி கல்பனாவின் அருகில் வந்து,

“நம்ம வருவுக்கு ஆதி மகனையே முடிக்கலாம் எண்ணமிருக்கா?” என்று ரகசியக் குரலில் கேட்டவர், “என்ன இருந்தாலும் அது பட்டணத்துல பொறந்து வளர்ந்த புள்ளை. நீ நம்ம வருவை கொஞ்சம் அதட்டி வைய்யீ கல்பனா, இப்படி ஆம்பிள பையனோட திரியுறது நல்லாவா இருக்கு” என்று சொல்லிச் சென்றார்.

அப்பெண்மணியின் மீது கட்டுகடங்கா கோபம் வந்த போதும், இதுவரை ஒருவரை புண்படும்படி பேசிடாத கல்பனா வெகுண்ட மனதோடு வீடு வந்து சேர்ந்தார்.

“யாரு பிள்ளைங்களை யாரு குறை சொல்லுவது. தனியா சொல்லியிருந்தாள் ஆஞ்சியிருப்பேன். பலபேர் இருக்க இடத்தில் சத்தம் வேண்டான்னு வந்துபுட்டேன்” என்று புலம்பியபடி அமர்ந்தார்.

அப்போதுதான் ஆலையிலிருந்து வந்து வீடு நுழைந்த சூர்யா மனைவியின் பேச்சைக் கேட்டு என்னவென்று விசாரிக்க, கல்பனா அப்பெண் பேசியதை அப்படியேக் கூறிவிட்டார்.

“கிராமத்து மக்கள் கண்ணோட்டம் இப்படித்தான் இருக்கும் கல்பனா. நமக்கு நம்ம பிள்ளைங்களைப் பற்றி தெரிந்தால் போதும். நீ போய் வேலையப்பாரு” என்று மனைவியை சமாதானம் செய்தார் சூர்யா.

“இந்த வார்த்தை யாது காதில் விழுந்திருந்தா புள்ளை மனசு ஒடிஞ்சிப் போயிருக்கும்” என்ற கல்பனா,

“நம்ம வருவுக்கு யாதுவையே கேட்டு பார்ப்போம் மாமா. நீங்க கேட்டு அண்ணியும், ஆதி அண்ணனும் முடியாதுன்னா சொல்லிடுவாங்க” என்றார்.

கல்பனாவின் கண்களில் ஆசையும் எதிர்பார்ப்பும் போட்டி போட்டது.

“இதில் நாம் பேசுவதற்கு இடமே இல்லை கல்பனா.

அவுங்க ரெண்டு பேர் மனசுலையும் விருப்பம் இருக்கனும். நாம செய்யப்போயீ, நாங்க அப்படி பழகலன்னு சொல்லிட்டாங்கன்னு வைய்யீ… நாளை பின்ன நம்ம பிள்ளைங்களை ஏறிட்டு பார்க்கவே நமக்கு கஷ்டமாப் போயிடும்” என்று மனைவிக்கு புரிய வைக்கும் வகையில் பேசினார்.

“அப்போ வருவுக்கு யாதுவை கேட்க வேண்டாம் சொல்றீங்களா?”

“ரெண்டு பேருக்கும் விருப்பம் இல்லாமலிருக்கும் பட்சத்தில், அங்கு நம்ம ஆசைக்கு இடமில்லை கல்பனா. இன்னும் அவங்க படிப்பே முடியல. அதுக்குள்ள யாரோ ஒருத்தங்க சொன்னாங்கன்னு நீ வெசனப்படுறது சரியில்லை” என்ற சூர்யா,

“நம்ம வருவுக்கு யாதவ் தான்னா அதை யாராலும் மாற்ற முடியாது” என்று சொல்லிச் செல்ல… அவர்களின் பேச்சினை தற்செயலாகக் கேட்ட வருவின் உள்ளே ஏதோ மேலெழும்பும் உணர்வு.

அவர்களின் பேச்சு அவளின் மனதில் பதிய காதல் விதையை விதைத்தது.
இதுதான் காதலென்று மனம் அடித்து சொல்ல… பேதையவள் மொத்தமாக தனக்குள் தன் மனதிடமே சிக்கித் தவித்தாள்.

அந்நொடி முதல் நேருக்கு நேராக பார்த்து பேசி பழகிய யாதவை திருட்டுத்தனமாக பார்க்கத் தோன்றியது. அவனின் அருகில் செல்லும் போதெல்லாம் படபடத்தது. அவனின் வரவை அவளின் இதயத்துடிப்பு எடுத்துரைத்தது.

சிறுப்பெண்ணால் காதலினால் ஏற்படும் அவஸ்தையை தாங்கிக்கொள்ள இயலாது போனது. தனக்கிருக்கும் காதல் அவரிடமும் இருக்குமா என்று எண்ணியவள் அவனிடமே கேட்டுவிடத் துடித்தாள்.

அடுத்த கணமே யாதுவை தேடி அவனது அறைக்குச் சென்றவள், அந்த வயதில் காதலை சொல்லத் தெரியாது… தன் காதலை முதலில் சொல்ல வேண்டுமென்பது தோன்றாது,

“என்னை உனக்கு பிடிக்குமா மாமா?” என்று கேட்டிருந்தாள்.

அவனுக்குத் தெரிந்து இதுவே முதல்முறை, அவளின் குரல் குழைவு, நாணம்.

வருவிடம் ஏதோ மாற்றம் என்பதை இந்த சில தினங்களில் கவனித்திருந்தவனுக்கு நொடியில் அவளின் கேள்விக்கான அர்த்தம் விளங்கிற்று.

‘இத்தகைய எண்ணம் இப்போது இந்த வயதில் ஏற்புடையதல்ல’ என்று நினைத்தவன் அவளின் மனம் புண்படாத வகையில் அவளுக்கேற்றவாறு பதிலளித்து மெல்ல அவளிடமிருந்து விலகிக் கொண்டான்.

எப்போதும் அவனிடம் உரிமையாக சலசலத்துக் கொண்டிருக்கும் அவளிடம் பேசாமல் இருப்பது யாதவிற்கே எண்ணவோ போலிருந்தது.

அவன் தான் விலகிச் சென்றான் ஆனால் அவனுள்ளே ஏதோ ஒரு புரியா நெருடல். இருந்தும் அதனை அவன் ஆராயாமல் போனதற்கு காரணம் நிகிலா. அவளிடம் காதலுக்கு சம்மதம் அளித்த பின்னர் வேறொரு பெண்ணை மனதில் நிறுத்தி சிந்திப்பது தவறாகப்பட… வருவின் மீதெழுந்த உண்மை காதலை உணராது போனான்.

வெளிநாட்டிற்கு யாதவ் படிக்க செல்வதால், அவனை வழியனுப்பி வைக்க சூர்யா தன் குடும்பத்தோடு வந்திருந்தார்.

‘போகிறவன் மீண்டும் எப்போது வருவானோ’ என்று தவித்த வரு தன் காதலை சொல்லிவிட முடிவு செய்து, யாதவ் விமான நிலையம் செல்லத் தயாராகிக் கொண்டிருக்க அவனைத் தேடிச் சென்றாள்.

எடுத்து செல்லத் தயார் செய்திருந்த உடைமைகளை சரி பார்த்துக் கொண்டிருந்தவன் அறை வாயிலில் அரவம் உணர்ந்து திரும்பி பார்க்க வரு நின்றிருந்தாள்.

அவளின் தோற்றமே காரணத்தை அவனுக்கு சொல்லாமல் சொல்லியது.

“ஹேய் குட்… சொல்ல வந்ததை தவிர்த்து, வா வரு. ரிசல்ட் வந்தாச்சு மேற்கொண்டு என்ன படிக்கப் போற?” அவளின் ஆசை என்னவென்று தெரிந்து கொண்டே வினவினான்.

“எனக்கு டான்ஸ் கத்துக்கணும்.”

“ஹ்ம்ம் கத்துக்கோ… பட் ஸ்டடிஸ் ரொம்ப இம்பார்டன்ட். சோ, பர்ஸ்ட் டிகிரி அப்புறம் டான்ஸ்” என்றான்.

சரியென தலையசைத்தவள் அவனையே விழியால் நெஞ்சத்தில் சேமித்துக் கொண்டிருந்தாள்.

வருவின் பார்வை யாதுவை உள்ளுக்குள் பலமாகத் தாக்கியது. காரணம் விளங்காது குழம்பியவன், லக்கேஜை கையில் பிடித்தவாறு…

“போகலாமா?” என அறையின் வாயிலை நோக்கி கை காண்பித்தான்.

“மாமா…” தயங்கியவாறு விளித்தவள், ஒருவாறு தைரியத்தை திரட்டி,

“நான் ஒன்னு சொல்லணும்” என்றாள்.

வருவின் முகத்தை நேராய் பார்த்தவன், லக்கேஜை விடுத்து தன் மார்பிற்கு குறுக்காக கைகளைக் கட்டிக்கொண்டு தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்றான்.

யாதவின் கூர்மையான ஆராயும் பார்வையில் அவன் முகம் காணுவதை தவிர்த்தவளாக இமை குடை தாழ்த்தினாள். அதில் அவனின் பார்வை ரசனையை தத்தெடுத்து.

நீண்ட இமை அவளின் கன்னம் தொட்டது. அதனை வெகுவாக ரசித்தவன் தன்னை மறந்து தன்னைப்போல் வஞ்சனையின்றி அவளின் முகமெங்கும் பார்வையால் ஊர்வலம் போனான்.

பதட்டத்தில் இருந்தவளின் நெற்றி, மேல் உதட்டிற்கு மேலே என புள்ளியாக வியர்வை துளிகள் அரும்பியிருந்தது. பூவின் மீது பனித்துளியை யாதவிற்கு நினைவூட்டியது. அவளின் குண்டு கன்னம் அவனை ஈர்த்தது. அதில் அழுந்த முத்தம் வைக்க வேண்டுமென அவனின் மனம் உந்தியது.

அதில் அதிர்ந்து திடுக்கிட்டவன் தன்னையே நிந்தித்தவனாக நெற்றியில் தட்டிக் கொண்டான்.

‘ஒரு பெண்ணிடம் காதலிப்பதாக சொல்லிவிட்டு, இதென்ன இச்சிறு பெண்ணின் மீதான எண்ணம்.’ அந்நேரம் அது நிகிலாவிற்கு செய்யும் துரோகமாக மட்டுமே நினைத்தானே தவிர, வருவின் மீதான எண்ணத்தை பற்றி சற்றும் சிந்திக்க முயலவில்லை.

‘இனியும் இந்த குட்டிப்பிசாசு முன்னால் நின்றிருந்தாள் அவ்வளவு தான்’ என்று நினைத்தவன், தன் மனம் உணர்த்தும் செயல் புரியாது… தன் குணம் பாதை மாறுவதாக கருதி தன்மீதே கோபம் கொண்டான். அந்த கோபத்தினை அவளிடமே கொட்டினான்.

“நீ எதுவும் சொல்ல வேண்டாம். ஒரே குடும்பமென்கிற உரிமையில் நம் மீதிருக்கும் நம்பிக்கையில் தான் ஒன்றாக பழக அனுமதித்திருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை கெடுக்கும் செயல் எதுவும் செய்ய மாட்டாய் என நினைக்கிறேன்” என்று அழுத்தமாகக் கூறியவன், “படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்து” என்று அர்த்தத்தோடு கூறிச் சென்றுவிட்டான்.

அதுதான் யாதவ் வருவிடம் பேசிய கடைசி வார்த்தைகள். அதன் பின்னர் அவன் அவளிடம் பேசவே இல்லை. முற்றிலும் வருவை தவிர்த்து விட்டான்.

‘நான் சொல்லும் முன்பே என் மனதை அறிந்த உங்களால் என் காதலையும் உணர முடியும் மாமா’ என காற்றோடு அவனிடம் சொல்லியவள் இந்நொடி வரை யாதவிற்கும் தன்மீது விருப்பம் வருமென்று காத்திருந்த தன்னுடைய எண்ணம், நம்பிக்கை எல்லாம் கானலாகி விட்டதாக கண்ணீரில் கரைந்தாள்.

தன்னுடைய வலது கை மோதிர விரலில் மோதிரம் அணிந்தவாறு பூக்கள் தோற்றத்தில் டாட்டூவால் வரைந்திருந்த யாதவின் பெயரையே வலியோடு பார்த்திருந்தவளின் கண்ணீர் துளி யாதவின் பெயரில் பட்டுத் தெறித்தது.

சிறு வயது முதல் முகத்தில் அவள் அணிந்திருந்த விலை மதிப்புமிக்க புன்னகை அவளை விட்டு மொத்தமாக நீங்கியிருந்தது.

எவ்வளவு நேரம் நின்றிருந்தாளோ கால்கள் மரத்து விர்ரென்று தாக்கும் வரை அசையாது விரலையே பார்த்துக் கொண்டிருந்தவள் கண்களை அழுந்த துடைத்து, கடினப்பட்டு கால்களை நகர்த்தி தன்னுடைய அறைக்குள் வந்தாள்.

வரு வருந்துவது அழுவது பிடிக்காத அவளின் மனம் அடித்துக் கூறியது.

‘யாதவ் உனக்குத்தான்.’

அதனை அவளால் ஏற்கத்தான் முடியவில்லை. யாதவ் காதல் தோல்வியில் வருந்துவதை கண்முன்னே காணும் போது எப்படி அவளால் மனம் சொல்வதை ஏற்க முடியும்.

மெத்தையில் விழுந்து தலையணையை நனைத்தாள்.

எந்நிலையிலும் யாதுவை அவளால் விட்டுவிட முடியாது. எப்படி இருந்தாலும் அவன் அவளின் யாதவ். வருவின் மொத்த காதல். நினைத்த மாத்திரம் எழுந்து அமர்ந்தவள். மனதை ஒருநிலைப் படுத்தி மெல்ல யோசிக்கத் துவங்கினாள்.

ஆதினி காதலுக்கு இன்னும் பதிலில்லை என்றாலும் அவளின் முகத்தில் காதலுக்கான பல உணர்வுகளை வரு பார்த்திருக்கின்றாள். சில நேரங்களில் சிறு சிறு செயல்களின் மூலம் கூட தன்னிலை மறந்து ஏதேனும் சொதப்பலாக செய்து வைப்பாள் ஆதினி. வரு காதல் கொண்ட போதும் ஆதினியின் செயல்களிலிருந்து தானும் அப்படி இருக்கக் கூடாது, யாதவ் சரி சொல்வதற்கு முன் தானே காட்டிக்கொடுத்திடக் கூடாதென்று அனைத்திலும் கவனமாக இருப்பதால் இதுபோன்ற காதல் சொதப்பல்களில் மாட்டாமல் தப்பித்துக்கொண்டாள்.

ஆனால் யாதவிடம் இதுபோன்று எதையும் வரு கண்டதில்லை. ஏன் நீண்ட அலைபேசி பேச்சினைக் கூட அவனிடம் அவள் பார்த்ததில்லை.

காதலில் மூழ்கிப் போனவர்களின் உலகம் வண்ணங்கள் நிறைந்தது. தன்னைச்சுற்றியே ஒரு மாய உலகத்தை உருவாக்கி வைத்திருப்பார்கள். அதிலிருந்து அவர்களால் எளிதில் மீள முடியாது. எவ்வளவு அழுத்தமானவர்களாக இருந்தாலும், அவர்களே அறியாது காதலில் புன்னகைத்து இருப்பார்கள்.

யாதவ் இதற்கெல்லாம் விதிவிலக்கு என்றே வருவிற்குத் தோன்றியது.

‘காதலை கூட இவ்வளவு அழுத்தமாக வைத்திருக்க முடியுமா’ என்று எண்ணியவள் தனக்கு இருப்பதைப்போல் தானே அவனுக்கும் வலிக்கும் என்று தன்னவனின் வலியை தன்னைப்போல் அறிந்தவள் யாதவின் காதலாவது நிறைவேற வேண்டுமென்று நினைத்தாள்.

“நீ எனக்கு இல்லைங்கிறது எவ்வளவு வலியோ… அதே வலிதான் உன் வருத்தமும் மாமா” என்றவள், யாதவின் பிரேக்கப்பை தன் காதலுக்கு சாதகமாக்கிக்கொள்ள முயலாது முடிந்துபோன காதலே இல்லாத அவனின் காதலை சேர்த்து வைக்க முடிவு செய்தாள்.

‘முதலில் நிகிலா யார்? இருவருக்குள்ளும் என்ன பிரச்சனை?’ என்று தெரிந்துகொள்ள எண்ணியவள் அப்போதே ஜானிற்கு அழைத்தாள்.

வரு விஷாலிடமே கேட்டிருக்கலாம். ஆனால் அவன் நொடியில் அவளை கண்டுகொள்வான். அத்தோடு சும்மா இருக்காது உறவுகளிடம் சொல்லிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். அதனாலேயே ஜானிற்கு அழைத்தாள்.

ஜான், யாதவ் மற்றும் விஷாலின் நண்பர்கள் என்ற முறையில் நன்கு அறிவாள். இருவருக்குமிடையே நெருங்கிய பழக்கம் இல்லையென்றாலும் தயக்கமில்லாது, ஜான் ஆதி வீட்டிற்கு வரும்போதெல்லாம் ஒன்றாக அமர்ந்து கதை பேச்சுக்கள் பேசுமளவிற்கு உறவு இருந்தது.

யாதவ் விலக்கும் நிலையில் நீண்ட நேரம் அவர்களுடன் சேர்ந்திருக்க முடியாத நிலையில் ஏதேனும் காரணம் சொல்லி சென்றிடுவாள். இருப்பினும் ஆதினி, விஷால் மற்றும் ஜான் உட்பட வருவை தங்களுக்குள் இணைத்துக் கொள்ளவே விரும்புவர்.

யாதவின் உறவுகள் அனைத்தும் ஜானுக்கும் உறவுகள். ஆதியின் வீட்டில் ஜானும் ஒருவன். அதனாலேயே யாதவைப் பற்றித் தெரிந்துகொள்ள எவ்வித யோசனையுமின்றி ஜானிற்கு அழைத்தாள்.

ரிங் போய்க்கொண்டே இருந்தது. ஜான் அழைப்பை ஏற்காது போக சோர்ந்து போனாள்.

‘ஒருவேளை ஹாஸ்பிட்டலில் இருப்பாங்களோ?’ எண்ணியவள் மீண்டும் ஒருமுறை முயற்சிக்க… இம்முறை வருவின் அழைப்பை தாங்கி வந்த ஜானின் அலைபேசியை ஏற்றது யாதவ்.

*உயிர் தீண்டிய காதலில்
இன்பமும் அவனே(ளே)
வேதனையும் அவனே(ளே)!
அதீத காதல்
பறித்தும் கொள்ளும்
விட்டும் கொடுக்கும்.
இங்கு,
பேதையின் காதல்
அவனவளுக்காக…
அவன் மீதான காதலுக்காக,
அவனையே விட்டுக்கொடுக்கிறாள்.*

 

 

இதயம் 5 : (யாதவின் செல்லம்மா)

வருவின் நினைவில் மூழ்கியிருந்தான் யாதவ்.

அன்று வரு காதல் சொல்ல வந்த கணத்தை நினைத்து பார்த்தான்.

காதலை சொல்ல விடாது தான் பேசிய வார்த்தைகளை எண்ணி பார்த்தவன் தன் தலையில் தானே கொட்டிக்கொண்டான்.

‘ஒருவேளை அன்று வருவை பேச விட்டிருந்தால், அன்றே என் மனம் எனக்கு புரிந்திருக்குமோ?’ கேள்விக் கேட்டவனுக்கு, அன்று மனம் கிளர்ந்தது நினைவுக்கு வந்தது.

‘அவள் மீது காதல் இல்லாமலா கன்னத்தில் முத்தம் வைக்கும் வேட்கை தோன்றியது? இவ்வெண்ணம் காதலுக்கு சம்மதம் சொல்லிய நிகிலாவிடம் கூட உண்டாகவில்லையே?’

அன்று புரிந்துகொள்ள முடியாத உணர்வு இன்று தெள்ளத் தெளிவாக அவன் முன்.

‘அப்போதே என் மனம் வரு பக்கம் சாய்ந்திருந்ததா? நான் தான் நிகிலாவிடம் சம்மதம் சொல்லிவிட்டேன் என்பதை மட்டுமே மனதில் வைத்து என் காதல் எதுவென்று அறிந்துகொள்ளாது போனேனோ!’

‘ஆம் சம்மதம் மட்டுமே சொல்லியிருக்கின்றேன். ஒருமுறை கூட காதல் வார்த்தைகளை நிகிலாவிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்தது இல்லையே! ஆனால் வருவிடம் இந்த நிமிடமே சொல்ல வேண்டுமென தவிக்கிறதே மனம். காதலை பற்றி அறிந்திருந்த எனக்கு காதல் தடம் அறியாது இருந்திருக்கின்றேனே!’

தன்னையே நிந்தித்தவனாக தன் மனம் செல்லும் சரியான பாதையில் பயணிக்கத் தொடங்கினான்.

தன மனமும் வருவை விரும்புகிறது என்ற உண்மை உணர்ந்ததும் யாதவின் இதழில் மந்தகாசப் புன்னகை ஒன்று தவழ்ந்தது.

‘நீ எப்போ எப்படி எனக்குள் வந்தாய்! நானெப்படி உணராது போனேன். கூடவே இருந்ததால் புரிந்துக்கொள்ளாது இருந்தேனோ!’

“என்னை உனக்கு பிடிக்குமா மாமா?”

மீண்டும் மீண்டும் வருவின் குரல் அவனின் செவிகளைத் தீண்டி மோதியது.

அந்நொடி நிகிலாவின் நினைப்பெல்லாம் எங்கோ மறைந்து போனது. இதயத்தில் புதைக்கும் எண்ணம் இன்றி, மொத்தமாக எரித்திருந்தான்.

உண்மை காதல் இதயத்தில் வேரூன்ற… இவ்வளவு நேரம் அவனை ஆட்க்கொண்டிருந்த வருத்தம் பனியாய் கரைந்தது.

யாதவின் உள்ளத்து உணர்வுகளெல்லாம் வரு என்ற மங்கையவளின் பார்வைக்காக ஏங்கியது. அப்போதே அவளது குரலையாவது கேட்டிட மாட்டோமா என்ற எண்ணம் எழுந்தது.

கூடவே, ‘என்மீது அன்று அவள் கொண்ட நேசம் இன்றும் இருக்குமா? இத்தனை வருடங்கள் காதல் இருந்திருந்தால் என்னிடம் பேச முயற்சியாவது செய்திருப்பாளே! அப்போ என்மீதான அவள் கொண்ட காதல் அவ்வளவு தானா?’ என்று வருந்தினான்.

மனதோடு புதைந்திருந்த காதலை அலச அலச வருவின் வார்த்தைகளை தவிரத்ததை எண்ணி கலங்கினான்.

இதயத்தோடு இணைந்திருந்த பெண்ணவளையே உணராது இருந்தவனுக்கு எங்கனம் காதலின் செயற்பாடுகள் தெரிந்திருக்கப் போகிறது.

நேசம் கொண்டவனி(ளி)ன் நினைவுகளோடு மட்டுமே பேச்சின்றி பார்த்துக்கொண்டே இருந்திட முடியும். கொண்ட காதலையே மூச்சாய் கொண்டு உயிர் வாழ்ந்திட முடியும். இதனை யாதவுக்கு அவனின் காதலே உணர்த்தும்.

“செல்லம்மா… நீதான் என் காதலா?”

யாதவின் இதயம் துடித்து தேகம் சிலிர்த்து அடங்கியது. மருத்துவனாக காதலுக்கும் இதயத்திற்கும் யாதொரு சம்மந்தமும் இல்லையென்று படித்திருந்தவனுக்கு, காதலினால் இதயத்தில் ஏற்படும் அதிர்வு விந்தையாக இருந்தது.

அப்போது ஆதியிடம் பேசிவிட்டு யாதவின் அறைக்குள் நுழைந்தான் ஜான்.

“என்னடா இன்னும் வெளியில் வரவில்லையா?” என்று கேட்டவாறு யாதவின் முன்னிருந்த இருக்கையில் அமர்ந்த ஜானுக்கு அவனின் முகத்தில் பூத்திருந்த புன்னகை ஆச்சர்யத்திற்கு பதில் அதிர்ச்சியை கொடுத்தது.

“காதல் தோல்வியில் பைத்தியமாகிட்டியா யாது?”

மேசையின் மீதிருந்த ஸ்டெத்தஸ்கோப்பினை எடுத்து ஜானின் மீது அடிக்க வீசினான் யாதவ்.

அதனை லாவகமாக பிடித்த ஜான் மீண்டும் இருந்த இடத்தினிலேயே வைத்துவிட்டு,

“உன் முகத்தில் திடீரென ஒரு ஒளி தெரியுதே மச்சான்” என்றவன் நீர் அருந்த தண்ணீர் பாட்டிலினை திறந்தான்.

“அம் இன் லவ் டா!”

யாதவ் சொல்லியதில் ஜானுக்கு குடித்துக் கொண்டிருந்த நீர் புரையேறியது.

“யாதவ்… ஆர் யூ சீரியஸ்.”

யாதவ் கொண்டது காதலில்லை என்று தெரிந்திருந்த போதிலும், சற்று நேரத்திற்கு முன்பு வரை காதல் தோல்வியென்று வருந்தியவனா இவனென்று தோன்றியது ஜானுக்கு.

“ஏன்டா நான் காதிலிக்கக்கூடாதா?”

“அதில்லை மச்சி…”

“நீ நினைப்பது எனக்கு புரியுது ஜான். நீ சொன்னதையே தான் நானும் சொல்லுறேன். வார்த்தையால் ஏற்றுக் கொண்டதெல்லாம் காதலாகிடாது.”

“யாதவ்…”

“நீ என்னடா என்ன சொன்னாலும் ஒரே ரியாக்ஷன் கொடுத்துட்டு இருக்க.

இப்போ தான் காதல்னா என்னான்னு அழுத்தமா உணர்கிறேன் மச்சி.

நவ் அம் வெரி கிளியர்” என்ற யாதவ் இவ்வளவு நேரமும் தான் ஆராய்ந்தவற்றை ஜானிடம் கூற, உண்மையிலேயே நண்பனுக்காக அதீத சந்தோஷம் கொண்டான் ஜான்.

“அப்போ நடுவில் நிகிலா வராமல் இருந்திருந்தால் காதலில் நீ இவ்வளவு மக்காக இருந்திருக்க மாட்டாய் அல்லவா?”

ஜானின் வார்த்தைகள் உண்மையென்று யாதவும் ஒப்புக் கொண்டான்.

“நிகிலா சொல்லிய காதலுக்கு சரி சொல்லி விட்டோமே என்கிற எண்ணமே என்னை வருவை பற்றி சிந்திக்க விடாமல் செய்து விட்டது.” மிகுந்த வருத்தமாகக் கூறினான்.

“விடு மச்சி இப்போவாது புரிஞ்சிக்கிட்டியே! அது போதும். வரு தான் தேவையில்லாமல் அதிக வருத்தப்பட்டிருப்பாள்” என்ற ஜான், “இப்போ தான் புரியுது. வரு உன்னை பார்க்கும் பார்வைக்கான அர்த்தம்” என்றான்.

“ஏன்டா நீ வேறு… நான் ஒன்றை நினைத்து விலகினால், மேடம் மொத்தமா என்னை விட்டு விலகிட்டாங்க! அப்புறம் எங்கிருந்து அவள் மீதான காதலை நான் உணர்வது” என்று ஆற்றாமையோடு மொழிந்த யாதவ் “ஆனால் நீ சொல்லுற பார்வையை நான் வருவிடம் கண்டதில்லையே!” என்றான்.

“நீ அவளை நிமிர்ந்து பார்த்திருந்தால் தானே தெரிந்திருக்கும்” என்று அலுத்துக்கொண்ட ஜான்… நாமெல்லாம் ஒன்றாக அமர்ந்து அரட்டை அடிக்கும் போது வரு கண்ணு உன்னை மட்டும் தான் பார்க்கும். சில நேரம் உன்னை பார்க்கும்போது ஏதோ சொல்ல முடியாத பாவனை அவள் முகத்தில் வந்து போகும். அது உனக்கான ஏக்கமென்று இப்போது தான் தெரியுது.

ஒருமுறை அவள் உன்னை பார்ப்பதை நான் கவனிச்சிட்டேன்னு, அப்படியே எழுந்து போயிட்டாள். அதன் பிறகு யாரும் கவனிக்கும்படி அவள் நடந்து கொண்டதில்லை.

நானெங்கு எதாவது கேட்டிடுவேன்னு என்னிடம் கூட பேசுவதை கம்மி பண்ணிட்டாள். காரணமெல்லாம் இப்போ தான் தெளிவாகுது” என நீளமாக பேசினான்.

“அருகிலே இருந்ததால் எனக்கு அவள் காதலோட மதிப்பு தெரியாமல் போயிடுச்சுடா. ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.”

“நீதான் நிகிலா…”

நிகிலாவைப்பற்றி சொல்ல வந்த ஜானின் பேச்சினை கை நீட்டி தடுத்த யாதவ்… “என் காதல் எப்பவும் வரு மீதுதான். அதை உணர்ந்து கொள்ளாமல் இருந்து விட்டேன். நடுவில் நடந்த தேவையில்லாதவற்றை இனி நினைத்துப் பார்க்கக்கூட எனக்கு விருப்பமில்லை” என்று மிகுந்த அழுத்ததோடுக் கூறினான்.

ஜானிடம் அவ்வாறு கூறிய நொடி… தன்னையறியாது பட்டென்று வெளிவந்த அவனின் வார்த்தைகள், வருவின் மீது அவன் கொண்ட அன்பின் ஆழத்தை அவனுக்கே உணர்த்துவதாக இருந்தது.

அக்கணம் தன்னை குறித்து அறிந்திடவே… வருவின் மீது முளைத்திருக்கும் நேசம் காதலென்று உறுதி செய்திட பொறுமை காக்க வேண்டுமென அவன் நினைத்திருந்ததெல்லாம் அவசியமற்றதாகியது.

‘வரு தனக்குள் ஆழமாக ஊடுருவி இருப்பதற்கு இதைவிட தன் மனதின் வார்த்தைகளைத் தவிர வேறென்ன காரணம் வேண்டும்’ என எண்ணியவன்,

“கஷ்டப்படுத்தியதற்கெல்லாம் சேர்த்து காதலை திகட்ட திகட்ட அவளுக்கு அள்ளிக் கொடுக்கணும் டா” என்றான் யாதவ்.

“அப்போ இப்போவே வருவிடம் சொல்லிவிடு. உன்னை நினைத்து ஆதிப்பா ரொம்ப கவலையில் இருக்கிறார் டா யாது” யாது எனக் கூறினான் ஜான்.

“வருவிடம் என்ன சொல்ல வேண்டும்?”

அவர்களின் பேச்சினை இறுதியில் கேட்டவாறு வந்தான் விஷால்.

ஜான் சொல்ல வர, விஷாலின் காதுபடவே…

“இப்போ அவனிடம் சொல்ல வேண்டாம் மச்சி… ஓட்டை வாய் உலறிடுவான்” என்று சொல்லிய யாதவை முறைத்தான் விஷால்.

“உன்கிட்ட சொல்ல கூடாதென்று இல்லைடா… உனக்கு தெரிய வேண்டிய தருணம் இன்னும் வரவில்லை” என்று சமாதானம் செய்த யாதவிடம், “என்கிட்ட சொல்லாமல் எங்கடா போயிடப்போறீங்க” எனக்கூறி அவர்களை ஆசுவாசம் செய்தான் விஷால்.

மூவருக்குள்ளும் நட்பையும் தாண்டி ஆழமான புரிதல் இருந்தது. ஆதலால் அவர்கள் சொல்லாததை விஷால் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.

‘எப்படியும் தன்னிடம் சொல்லாது இருக்க மாட்டார்கள்’ என்ற உண்மை விஷாலை மேற்கொண்டு துருவாமல் இருக்கச் செய்தது.

“எனக்கு ட்யூட்டி முடிஞ்சிருச்சுடா. நான் கிளம்புறேன். அல்ரெடி மாம் டூ டைம்ஸ் கால் பண்ணிட்டாங்க” என்ற விஷால் இருவருக்கும் பை சொல்லி கிளம்பிவிட்டான்.

“அவனிடம் சொன்னால் என்னடா?”

இப்படி விஷால் முன்பே அவனிடம் சொல்ல வேண்டாம் என்பதை ஜானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“எனக்கு வரு மனதில் இன்னும் நானிருக்கிறேனா தெரியணும் ஜான். விஷாலுக்கு தெரிந்தால் முதலில் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லிட்டுதான் மூச்சே விடுவான்.”

யாதவ் சொல்லியது ஜானுக்கும் சரியென்றே பட்டது.

“நிகிலா…”

“ம்ப்ச் அவளைப்பற்றி பேசாதே மச்சி.”

“நான் சொல்ல வருவதை கேளுடா!”

“சரி சொல்லு.”

“நிகிலா விடயம் வருவுக்குத் தெரிந்தால்?” யாதவ் கேள்வியாக இழுத்தான். எந்தவொரு பெண் தான் இதனை தாங்கிக்கொள்வாள்.

தன்னவனுக்கு தனக்கு முன்பு வேறொரு பெண்ணின் மீது அன்பிருந்தது என்பதை. யாதுவை பொறுத்தவரை அது காதலில்லை என்றாலும் அவனுக்கு இணையாகும் பெண்ணிற்கு நெருடல் இருக்கத்தானேச் செய்யும். இதுவும் ஒரு உரிமை உணர்வு தானே!

அந்நேரம் ஜானிற்கு ரூபியின் நினைவு அழையாமல் வந்தது.

ஜான் ஒரு பெண்ணிடம் பேசிவிட்டாலே பார்வையால் அவனை எரித்துவிடுவாள். நினைத்த மாத்திரம் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

“இந்நேரம் தெரிந்திருக்கும்டா… டாட், மாம் முகத்தை வைத்தே ஏதோ சரியில்லைன்னு யூகித்திருப்பாள். அதோடு அவளுக்குத் தெரியாமல் ரகசியமென்று வீட்டில் எதுவுமில்லை. ஆதினி சொல்லியிருப்பாள். இல்லையா டாட் சொல்லிடுவார். அவருக்கு அவள் ரொம்ப ஸ்பெஷல் டா. ஷீ அஃபக்ஷனெட் மோர் டூ ஹிம்” என்று தந்தை மீது சிறு பொறாமையோடு சொல்லியவன், “இனி என் செல்லம்மா எனக்கு மட்டுமே ஸ்பெஷலா இருக்கணும்” என்றான்.

“ஆதிப்பாவிடமே உரிமை போராட்டமா” என்ற ஜானிற்க்கு சிரிப்பையே பதிலாகக் கொடுத்தான் யாதவ்.

நிரலியை வெறுப்பேற்றுவதற்கு என்றாலும் கூட வரு ஆதியை தேவா என்று விளிக்கும் அழைப்பில் அவ்வளவு பாசம் வெளிப்படும். இப்போது அதனை நினைத்தால் யாதவிற்கு காதில் புகைச்சல் மூண்டது.

‘இனி உன்னோட எல்லாம் எனக்கு மட்டும் தான் செல்லம்மா.’ அவள் மீதான நேசத்தில் காதல் தீவிரவாதியாகினான்.

யாதவின் எண்ணம் முழுக்க அவனவளின் மீதே மூழ்கியிருக்க, காதலை கண்டு கொண்ட பிறகு அவனின் முகத்தில் வந்து போகும் மாய்ஜாலங்களை கவனித்தபடி நண்பனின் சந்தோஷத்தில் தானும் மகிழ்வு கொண்டவாறு அமைதியாக இருந்தான் ஜான்.

இருவரும் தங்களது நிலையில் இருக்க…

“எக்ஸ்க்யூஸ்மீ டாக்டர்…”

செவிலி பெண் அரக்கப்பறக்க வேகமாக ஓடிவந்து, கதவினை இருமுறை தட்டிவிட்டு உள் நுழைந்தார்.

“டாக்டர்.ஜான்… டிப்ரெஷன் வார்டில் இருக்கும் பேஷண்ட் ரொம்ப வயலண்ட்டா பிஹேவ் பண்றாங்க… செலைன் ட்யூப் கழுத்தில் சுத்திக்கிட்டு சாகப்போறேன்னு கத்துறாங்க” என்று அதீத பதட்டத்தில் சொல்ல,

“ஓகே யாது… ஐ வில் கம் பேக்” என்ற ஜான் தன்னுடைய பேஷண்ட்டை கவனிக்க விரைந்து ஓடினான்.

யாதவின் கவனம் அங்கில்லை. அது முற்றும் முழுதாய் வருவிடம் சென்றிருந்தது. அதனால் செவிலி வந்ததையோ சொல்லியதையோ, ஜான் சென்றதையே அவன் கருத்தில் பதியவில்லை.

நேரம் நீள,

அலைபேசி ஒலிக்கும் சத்தத்தில் தன்னுணர்வு பெற்ற யாதவ் தன்னுடையதை எடுத்து பார்க்க அது அமைதியாக வீற்றிருந்தது.

‘பிறகு இந்த சத்தம்’ என்று ஆராய்ந்தவனுக்கு மேசையில் ஒலித்துக் கொண்டிருந்த மற்றொரு கைப்பேசி கையில் கிட்டியது.

‘ஜான் மொபைல் இங்கே விட்டு போயிட்டானா?’ என்ற யாது அழைப்பது யாரென திரையை பார்க்க… அது தாங்கி வந்த பெயரை கண்டு புன்னகைத்தவன், பெயருக்கும் வலிக்குமோ என்னும் விதமாக தொடுதிரையை மெல்ல வருடினான்.

“வரு.” வாய் முணுமுணுக்க அழைப்பு நின்றிருந்தது.

“இந்நேரத்தில் ஜானிற்கு எதுக்கு அழைக்கிறாள்? ஒருவேளை என்னைப்பற்றி இன்று நடந்தைப்பற்றி கேட்க இருக்குமோ?” (அது இன்று இல்லை யாதவ் நேற்று, இப்போ நேரம் நள்ளிரவு 12’யை தாண்டியாயிற்று.)

சிந்தித்தவனுக்கு அப்போதுதான் தெரிந்தது தன்னிடம் வருவின் எண் இல்லை என்பது.

வரு கல்லூரி இரண்டாம் ஆண்டில் தான் அலைபேசி வாங்கினாள். அதுவும் கல்பனா மறுக்க, “என் மருமகளிடம் நான் நினைத்த போதெல்லாம் பேச வேண்டும்” என்று சாக்கு சொல்லி ஆதிதான் வாங்கிக் கொடுத்திருந்தார்.

அப்போது யாதவ் வெளிநாட்டில் இருந்தான். அவனே வருவிடம் பேசுவதை தவிர்த்திருக்க அவனுக்கு வருவின் எண் தேவையில்லாத ஒன்றாகியது. இங்கு வந்தும் வருவிடம் பேசவில்லை. விலகி இருக்கவே வைத்தது. இதுநாள்வரை வருவிடம் பேசும் எண்ணம் இல்லாது இருந்தவனுக்கு அவளின் அலைபேசி எண் அவசியமின்றி போனது. இப்போது தேவையான ஒன்றாக ஆனதும் தன்னைப்போல் அவளின் எண்ணை ஜானின் அலைபேசியில் பார்த்து “செல்லம்மா” என்று தன்னதில் பதிந்து கொண்டான். மனதோடும் பதிந்தது.

சில நிமிடங்கள் கடந்து மீண்டும் ஜானின் அலைபேசிக்கு வருவிடமிருந்து அழைப்பு வர… இம்முறை எடுப்பதா வேண்டாமா என்ற யோசனைக்குச் சென்றவன் ‘காதலை உணர்ந்த பிறகு அவளின் குரலையாவது கேட்போம்’ என அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

“ஹலோ.”

முதல் முறையாக அவளின் குரல் உயிரைத் துளைத்து ஊடுருவதை இதயத்தில் உணர்ந்தான். மென் சாரலாய் செவி நுழைந்த வருவின் குரல் அடிவயிற்றில் சில்லென்று இதம் பரப்பியது.

யாதவ் அமைதியாக இருக்க,

இருமுறை ஹலோ என்றவள், “அண்ணா ஆர் யூ ஹியர்?” எனக் கேட்க… யாதவிடம் “ம்” என்ற மெல்லிய சத்தம்.

“மாமா.”

யாதவின் குரலை அடையாளம் காண வருவிற்கு அவனின் ம் என்ற ஒற்றை எழுத்து போதுமானதாக இருந்தது.

அழைப்பை ஏற்றது யாதவென்றதும் அவள் வாய் மாமா என்று காற்றாகிப்போன குரலில் முணுமுணுக்க, அவளின் அந்த சொல் யாதவை உள்ளுக்குள் என்னவோ செய்தது.

வருடங்கள் பல கடந்தும் தன்னுடைய சிறு சத்தத்தில் தன்னை இனம் கண்டவளின் அன்பில் கரைந்து போனான். ‘அவளின் நினைப்பில் நேசத்தில் இன்னும் தானிருக்கின்றேன் என்பதற்கு இது ஒன்றே போதும்’ எனத் தோன்றியது அவனுக்கு.

நெஞ்சத்தின் அதீத உற்சாகத்தில் ஆனந்தமாய் அவனின் கண்கள் பனித்தன. இதயம் உறை நிலைக்குச் சென்று துடிப்பை நிறுத்தியது போன்ற மாயம் அவனுள்.

‘செல்லம்மா.’ மனம் விடாமல் ஜெபித்தது.

சில மணித்துளிகள் பேச்சின்றி மௌனத்தில் கழிய, வருவை பேசினாள்.

“ஜான் அண்ணா இல்லை?”

வருவின் மெல்லிய தயக்கமான குரல் கூட அவனை கட்டி இழுப்பது போல் உணர்ந்தான்.

அவனிடம் பேசிட அவள் காட்டும் தயக்கம் அவனை அவளை சீண்டி பார்க்கத் தூண்டியது.

“ஏன் ஜான் அண்ணாவிடம் மட்டும் தான் பேசுவிங்களா?”

“அப்படிலாம் இல்லை.” வேகமாக மறுத்தவள், “நீங்க… நான்… ச்ச… நீங்க என்னிடம் பேச மாட்டீங்களே!” என ஒருவாறு கோர்வையாக சொல்லிருந்தாள்.

“நான் பேசாமல் விலகிப்போனால் நீயும் அப்படியே இருந்துவிடுவாயா?” யாதவின் ஆழ்ந்த குரல். அவனின் கேள்வி அவளின் இதயத்தை பலமாகத் தாக்கியது.

‘யாதவ் கேட்பது சரிதானே! அவர் பேசவில்லை என்றாலும் நானாவது பேச முயற்சித்திருக்கு வேண்டுமே!’ தன் தவறும் புரிந்தது.

இப்போது பேசாமல் அமைதியாக இருப்பது அவள் முறையாயிற்று.

இதற்கு மேல் அவள் பேசமாட்டாள் என்று கருதியவன்,

“ஜான் பேஷண்ட் அட்டெண்ட் பண்ணிட்டு இருக்கான். எதாவது சொல்லணுமா?” எனக் கேட்டான். இனி அவனின் வருவிடம் பேச அவனுக்கு எவ்வித தடையுமில்லை. காதல் அவனின் விலகலை தகர்த்திருந்தது. இருவருக்குமான இடைவெளியை அவனிடம் உடைத்திருந்தது.

“ம்.”

“என்கிட்ட சொல்ல முடியுமென்றால் சொல்லலாம்.”

“அது… உங்ககிட்ட?”

“ஏன் சொல்லக்கூடாதா?”

“அச்சோ… அப்படியில்லை.”

“வேறெப்படி?”

முன்பைப்போல் அவளை சீண்டுவது அவனுக்கு அத்தனை பிடித்தது.

‘என்னாச்சு இந்த மாமாக்கு? என்னிடம் பேசமாட்டாரே?’ என உள்ளுக்குள் நினைத்தவள், திரும்ப ஒருமுறை யாதவ் கேட்டால் என்ன சொல்வதென்று தெரியாது…

“ஜான் அண்ணா வந்ததும் நான் கால் பண்ணேன் சொல்லுங்க” என்றவள் அவன் பதில் கூறும் முன்பே வேகமாக அலைபேசியை வைத்திருந்தாள்.

வருவின் இந்த பதட்டம் கூட யாதுவை வெகுவாக கவர்ந்தது.

*காதல் நிலை…
நாசி நுழையும் சுவாசம் தென்றலாய்,
இதயத் துடிப்பு மத்தள இடியாக,
உடல் உஷ்ணம் மென் சாரலாய் மாறிப்போக,
நெஞ்சத்தை அடை மழையாய்…
குளிர்வித்தது காதல்.*

 

Epi 6 https://thoorigaitamilnovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af-5/

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
29
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்