Loading

இதயம் 3 : (நெஞ்சினிலே நேசம்)

“யாது…”

நண்பனாகிய சகோதரனின் கண்ணீருக்கான காரணம் தெரியாது குழம்பினான் விஷால்.

விஷால்… ராகவ் மற்றும் ஸ்வேதாவின் மகன். ஆதியின் வலது கை. நிரலியின் உடன்பிறவா சகோதரன்.

விஷால் யாதவின் கண்ணீரைத் துடைக்க… அச்சமயம் உள் நுழைந்திருந்தான் ஜான். அவனிடம் அதீத கோபம்.

யாதவை வார்த்தையால் கிழிக்க வேண்டுமென்கிற ஆத்திரத்தில் வந்தவன்… அவனின் கண்ணீரைக் கண்டு மொத்தமாக அடங்கிப் போனான். இருப்பினும் அவனின் கோபம் மட்டுப்படாது உள்ளுக்குள் கனன்றது.

அமைதியாக அவர்களுக்கு முன்பிருந்த இருக்கையில் முகம் இறுக அமர்ந்து கொண்டான்.

அப்படியே விஷாலின் வயிற்றில் முகம் புதைத்த யாதவ்…

“சத்தம் போட்டு கத்தனும் போலிருக்குடா!” என்றான்.

“கத்தேன்… எங்கு நின்னு கத்தனும் நினைக்குற? நம்ம ஹாஸ்பிட்டல் ரிசப்ஷன், ச்ச… ச்ச… அது வேண்டாம். மேல டெரெசில் நின்னு கத்து. அப்போதான் ஊருக்கே கேட்கும்.”

ஜான் வேண்டுமென்றே நக்கல் செய்தான். அது அவனின் அடக்கப்பட்ட கோபத்தின் வெளிப்பாடு.

“என்ன ஜான் நீ…”

விஷால் ஏதோ சொல்லவர தடுத்து விட்டான் யாதவ்.

“அவன் பேசட்டும் விஷ். என்னோட தவறு தான்” என்றவன் முகத்தை விஷாலின் வயிற்றிலிருந்து எடுக்காது, “ரொம்ப வலிக்குதுடா” என்றான். அவனின் கை மேசையில் குத்தியது.

அப்போதுதான் அவனின் கையில் ரத்தம் வழிந்து காய்ந்த தடத்தை பார்த்த விஷால் பதற, நண்பனின் ரத்தம் மனதிற்கு வருத்தத்தைக் கொடுத்தாலும் இப்போது அவனை தெளிவுபடுத்துவது முக்கியமென்று கருதிய ஜான் யாதுவை நோக்கி வார்த்தை அம்புகளை வீசினான்.

“வலி கொடுக்க உன் மனம் அவளை காதலிக்கவேயில்லையே!”

தாடையை ஒரு கையால் தடவியவாறே ஜான் அர்த்தமாகக் கூறினான்.

அதில் கேள்வியாய் யாதவ் ஜானை நிமிர்ந்து பார்த்தான்.

“என்ன பாக்குற. நான் சொல்வது உண்மை தான்” என்று ஜான் சற்று சத்தமாகக் கூற, யாதவ் விஷாலிடம் பார்வையை பதித்து மீண்டும் ஜானிடம் திருப்பினான்.

ஜான் சொல்ல வருவது யாதவிற்குத்தான் விளங்கவில்லை. விஷாலுக்கும் யாதவின் நிலை புரிந்துதான் இருந்தது.

“உனக்கு ஏற்பட்டிருக்கும் வலி காதல் கொடுத்ததில்லை. ஏமாற்றம் கொடுத்தது. ஒரு பெண் ஏமாற்றிவிட்டால் என்பதால் வந்த வலி இது.”

ஜான் சொல்லியதை உணர்ந்து கொண்ட பாவனை யாதவிடம்.

“அப்போ நான் அவளை காதலிக்கல சொல்லுகிறாயா?”

“வெறும் வாய் வார்த்தைகளாக சொல்வதெல்லாம் காதலாகிடாது.” ஜானின் ஒற்றை வரி ஆயிரம் விளக்கங்கள் கொடுத்தது.

“நீ காதல் சொல்லிய தருணத்தை நினைத்துப் பார்.”

ஜான் சொல்லியதும் அன்றைய தினத்திற்கு தாவிய மனதை பிடித்து இழுத்து வந்த யாதவ்…

“எதையும் நினைத்து பார்க்கும் நிலையில் நானில்லை” என்றான் எங்கோ வெறித்தபடி.

இவர்களின் பேச்சிற்கு நடுவே விஷால் யாதவின் கைக்கு மருந்திட்டு கட்டு போட்டிருந்தான்.

“அப்போ அவன் சொல்றதை தெளிவா புரிந்துகொள்.” இப்போது விஷாலின் வார்த்தைகளும் சுள்ளென்று வந்தன.

அப்போதும் சரி இப்போதும் சரி தாங்கள் சொல்வதைக் கேட்கக்கூட மறுக்கின்றானே என்கிற ஆதங்கம் இருவரிடமும்.

எப்போதும் தன்னிடம் கடிந்து பேசிடாத விஷால், இன்று பேசவுமே ஜான் சொல்லவருவதை கேட்பதைப்போல் மௌனமாக இருந்தான்.

“இப்போ உன்னிடம் நான் எதுவும் சொல்லப் போவதில்லை யாதவ். இது நீயாக புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

ஆனால் ஒன்று மட்டும் சொல்லுகிறேன்,

ஐ லவ் யூ அப்டிங்கிற வார்த்தையை சொல்லிவிட்டாலே அது காதலாகிடாது. உண்மையான காதலை நீ உணரும் போது உனக்கே புரியும்” என்றவன்,

“உனக்கு எப்போவாவது… அவளை பார்க்கும்போது அப்படியே மிதக்குற மாதிரி ஃபீல் பண்ணியிருக்கியா?” எனக் கேட்டான்.

“எங்கே அவளை பார்த்தால் இந்த ஹவர் கிளாஸ் கட் பண்ண நேர்ந்திடுமோன்னு மறைஞ்சு ஓடித்தானே இருக்கான்.”

யாதவிற்கு முன் பதிலளித்த விஷால் சன்னமாக சிரித்து வைத்தான். அவனை யாதவால் முறைக்க மட்டுமே முடிந்தது.

விஷால் சொல்லுவதும் உண்மை தானே! நிகிலாவிடம் காதலை சொல்லியது முதல் அவளை கண்டாலே பதுங்கத்தான் தோன்றும் அவனுக்கு.

“அவனை எதுக்கு முறைக்குற?” என்ற ஜானின் கேள்விகள் நீண்டு கொண்டே சென்றன.

“ஒரு செக், அவளை கிஸ் அடிக்கணும் எப்போவாது தோனிருக்கா?”

யாதவ் ஜானை அதிர்ந்து பார்த்தான்.

“என்னடா பாக்குற? அவளிடம் பேசணும்… மணிக்கணக்கில் பேசிட்டே இருக்கணும் நினைச்சிருக்கியா?”

“அந்த நினைப்பு உன்னை தவிக்க வச்சிருக்கா?”

“அவளோட வருத்தம் வலி இப்படி எதாவது உன்னை பாதிச்சிருக்கா?”

“அவளோட கண்ணை பார்க்க முடியாது திணறி நின்னிருக்கியா?”

“இன்னைக்கு அவளை பார்க்கலையே, பேசலையேன்னு அவளோட நினைப்பாவே சுத்தியிருக்கியா?”

“இதெல்லாம் விடுடா… அவளோட கையை என்னைக்காவது பிடிச்சிருக்கியா?”

“பிடிக்கிறதென்னா, அப்படி பிடிக்கனும் என்றாவது தோனிருக்கா?”

ஜான் கேட்க கேட்க காதலின் வெளிப்பாடு என்ன என்பது யாதவிற்கு நன்கு புரிந்தது.

யோசித்துப் பார்த்தால் யாதவ் இதில் ஒன்றை கூட செய்ததுமில்லை உணர்ந்ததும் இல்லை.

“வார்த்தையால் சொல்லிட்டோமே என்பதற்காக பழகுவதெல்லாம் காதலில்லை யாது.”

“ரூபியிடம் நான் காதல் சொல்லவில்லை என்றாலும், பல ஆயிரம் மைல்கள் தாண்டி இருக்கும் அவளை என்னால் உணர முடியும். நானெப்போ அவளிடம் காதலை சொல்லுவேன்னு எதிர்பாக்குற அவளோட தவிப்பு புரியும்.”

“இனியாவது நல்லா யோசிடா! உண்மை உன்னுடைய இதயத்திற்கு நன்றாகத் தெரியும்” என்று ஜான் தன் பேச்சினை முடிக்க,

“உன்னை இப்படி பார்க்க எங்களுக்கு வேதனையா இருக்குடா” என்றான் விஷால்.

“இவன் பண்ணது காதலேயில்லை. இதுக்காக இவ்வளவு வருத்தப்படுவதெல்லாம் வொர்த் இல்லை மச்சான்.” விஷாலை பார்த்து சொல்லிய ஜான் எழுந்து சென்றுவிட்டான்.

“கார்டியாலிஜிஸ்டாக பார்த்தால் காதலுக்கும் இதயத்திற்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை. ஹார்மோன் செய்யும் வேலை இது. ஆனால் அந்த உணர்வுகள் முழுக்க இதயத்தோடு இணைந்திருக்கு யாதவ்.”

“இப்போ நீ வருத்தப்படுவது எனக்கென்னவோ அவள் உன்னை விட்டுட்டு போயிட்டாளேன்னு இல்லை. காதல்ன்னா என்னன்னு முழுசா தெரியாமல் ஒருத்திக்கு சம்மதம் சொல்லிட்டியேன்னு தான்.

“ஆதிப்பாக்கு மகனா பிறந்திட்டு இப்படி காதலிக்கத் தெரியாமல் இருக்கியே மச்சான்” என்ற விஷால் தன்னுடைய அலைபேசி ஒலிக்க, அதனை ஏற்றவனாக அவ்வறையிலிருந்து வெளியேறினான்.

ஆழ்ந்து மூச்சினை வெளியேற்றிய யாதவ் கண்களை மூடி இருக்கையில் நன்கு சாய்ந்து அமர்ந்தான்.

யாதவிற்கு தன்னை குறித்தே அவ்வளவு வருத்தமாக இருந்தது.

இப்போது ஜான் சொல்லிய அனைத்தும் கடந்து சென்ற நிமிடங்களில் யாதவ் சிந்தித்தது தான்… ஆனால் அப்போது புரியாத ஒன்று இப்போது தெள்ளென விளங்கியது.

படிப்பு படிப்பு என்ற ஒன்றில் மட்டுமே குறியாக இருந்தவனுக்கு அப்போது நிகிலாவிடம் கவனமின்றி போக எதையும் ஆராய்ந்து அலசும் எண்ணம் அவனுக்கு இல்லை.

மேற்படிப்பைத் தொடர வெளிநாட்டிற்குச் சென்றவனுக்கு முழு மூச்சும் படிப்பென்றானது.

தினமும் வீட்டிற்கு அழைத்து பேசுபவன்… ஏன் கிராமத்திற்கு அழைத்து சூர்யா குடும்பம் மற்றும் ராகவ், ஸ்வேதாவிற்கு கூட அவ்வவ்போது அழைத்து பேசுபவன் ஒருமுறை கூட நிகிலாவிற்கு தானாக அழைத்தது கிடையாது. அழைக்க வேண்டுமென்றும் அவனுக்குத் தோன்றியதில்லை.

நிகிலா மட்டுமே அழைப்பாள். அவளின் பல அழைப்புகளை ஏற்கக்கூட அவனின் மனம் விழையாது. அப்படியே எடுத்தாலும், அவள் மட்டுமே பேசுவாள்.

‘படிப்பில் கவனமாக இருப்பதால் காதலில் மனம் லயிக்கவில்லை’ என்று அப்போது எண்ணினானேத் தவிர நிகிலா மீது கொண்டது காதலேயில்லை என்பதைப்பற்றி சற்றும் சிந்திக்கவில்லை.

“காதல் சொல்லியதோடு சரி. அதன் பிறகு நீயாக எனக்கு ஒரு தகவல் கூட அனுப்பியதில்லை” என்று பல குற்றச்சாட்டுகள் நிகிலா யாதுவிடம் வைத்து வாதம் செய்தாலும் அவனின் பதில் அமைதி அமைதி அமைதி மட்டுமே. பல சமயம் அவள் பேசும் போது அலைபேசியை ஓரமாக வைத்துவிட்டு இவன் புத்தகத்தில் ஆழ்ந்து போவதும் உண்டு.

நிகிலா மட்டுமே அவனிடம் இழைந்தாள்.

மேற்படிப்பை முடித்துவிட்டு இந்தியாவிற்கு வந்தவனிடம் ஆதி அவனின் திருமணத்தைப் பற்றி பேச அவனுக்கு கண் முன் வந்தது என்னவோ பாவாடைச் சட்டையில் தன்முன் நின்று “என்னை உங்களுக்கு பிடிக்குமா?” என்று கேட்ட வருவின் முகம் தான்.

மென்மையான புன்னகை கூட அவனின் உதட்டில் உதயமானது.

தலையை குலுக்கி சமன் செய்தவன், முயன்றுதான் நிகிலாவின் நினைவு கொண்டு வந்து , “அம் இன் லவ் டாட். பட் என்னை நான் கொஞ்சம் ஸ்டேபில் பண்ணிக்கிறேன்” என்றுகூறி மருத்துவத்தில் கவனம் பதித்தான்.

‘எவ்வித அனுபவமின்றி இருக்கும் தனக்காக தந்தை அளித்த மருத்துவமனையை திறம்பட கொண்டுசெல்ல வேண்டும். அத்தோடு வரியோருக்கு முடிந்தவரை இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். தன் துறையில் சிறந்து விளங்க வேண்டும்’ அவனின் கனவுகள் நீண்டு விரிந்தன.

அதில் நிகிலா இடம் பெறவே இல்லை.

இப்போது நினைக்கும் போது தான் யாதவிற்கு தெரிகிறது.

அதன் பிறகும் மருத்துவமனையில் நோயாளிகளுடனே தன்னுடைய நேரத்தை போக்கியவனுக்கு நிகிலாவிடம் காதல் சொல்லியது கூட மறந்து போயிருந்தது. அவள் அழைக்கும் போது மட்டுமே அவளின் நினைவு வரும்.

விந்தையான காதலென்று சிரித்துக்கொள்வான். ஆனால் அவளிடம் ஒதுங்கியே இருந்ததற்கான காரணம் இப்போதல்லாவா விளங்குகிறது.

‘கண்ணியமான ஆண்மகன் ஒருவனால் காதலில்லாமல் ஒரு பெண்ணிடம் நெருங்க முடியாது.’

தெளிவாகிய பின்னர் ஆர்பரித்துக் கொண்டிருந்த அவனின் மனமும் அமைதியாகியது.

இப்போது அவள் விட்டுச் சென்றது நிம்மதியென்றே தோன்றியது.

“அப்போது இந்த வலி எதற்கு?”

‘அது ஏமாற்றம் தந்த வலி. போலியாகக் காதல் கொண்டதற்காக தவித்த தவிப்பின் வெளிப்பாடு.’

அவனின் கேள்விக்கு அவனின் மனம் வேகமாக பதில் அளித்தது.

மனம் தெளிவு பெற முகத்தில் வருத்தத்தின் சாயல் நீங்கியது.

நிம்மதி உணர்வு மனம் முழுக்க பரவ… மூச்சு விடவே மறந்த நிலையில், இதயத்தின் துடிப்பு சீரானது.

பொருந்தா ஒன்று எப்போதும் அமைதியை கொடுக்காது என்பதை காதலே இல்லாது அவன் கொண்ட காதல் உணர்த்திச் சென்றது.

அப்படியே மேசையில் தலை கவிழ்ந்து படுத்துக்கொண்டான்.

“சொல்லுங்கப்பா…”

என்னதான் உறவு முறையில் விஷாலுக்கு ஆதி மாமாவாக இருந்தாலும் ஆதிப்பா என்றழைப்பதிலேயே விருப்பம் கொண்டான்.

“விஷ் கண்ணா யாதவ்?”

“இப்போ அவன் ஓகே தான் ஆதிப்பா. ஜான் விட்ட டோஸில் ஐயா கொஞ்சம் தெளிஞ்சிருக்கிறார்.”

“ஜான் யாதுவை திட்டினானா?”

எப்போதும் யாதவ் எது செய்தாலும் அது சரியோ தவறோ ஜான் தான் முதலில் அவன் பக்கம் நிற்பான். இன்று அவன் யாதவை கடிந்தான் என்பதை ஆதியால் நம்ப முடியவில்லை.

“யாதுவோட கண்ணீரை பார்த்ததும் ஜான் கொஞ்சம் டென்ஸ் ஆகிட்டான் ப்பா.” விஷால் ஆதிக்கு விளக்கம் அளித்தான்.

“விஷ், யாது லவ் பண்ண பொண்ணோட டீடெயில் கொஞ்சம் வேண்டுமே! உன் அத்தை ஒருமுறை பேசி பார்க்கலாம் சொல்லுகிறாள்.” ஆதிக்கு முடிந்து போனதை மீட்க விருப்பம் இல்லை. ஆனால் அவனின் பேபி கேட்கும்போது ஆதியால் மறுக்க முடியாது போகவே விஷாலிடம் தயக்கத்துடன் கேட்டான்.

“அதுக்கு அவசியமே இல்லப்பா!”

“நீ சொல்லுறது புரியலையே?” கேள்வியாக இழுத்தான். ஏற்கனவே ஆதி யூகித்தது தான். இருப்பினும் யாதவின் காதலில் ஆதி முதல் அந்தம் வரை அறியவே அவ்வாறு வினவினான்.

நடந்ததை எப்படி சொல்வதென்று விஷால் தடுமாற, அதுவரை அவன் பேசுவதை அவனுக்கு எதிராக அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த ஜான்… விஷாலின் கையிலிருந்து கைப்பேசியை வாங்கி அவன் பேசினான்.

“ஆதிப்பா.”

“ஹாய் ஜான். என்ன மேன் வீட்டுப்பக்கம் வரதே இல்லை.”

“நீங்க வீட்டில் ஆளிருப்பதில்லைன்னு சொல்லுங்க. அதான் சரியாக இருக்கும்.”

ஜானின் மடக்கான பேச்சில் ஆதி சத்தமாக சிரித்தார்.

அதன் பிறகு வழக்கமான நல விசாரிப்புகள் முடிந்து, விஷாலிடம் கேட்டதையே ஜானிடமும் கேட்டார்.

“இன்னமும் ஆண்ட்டி மேல் லவ்வா இருக்க உங்களுக்கு போய் எப்படிப்பா இவன் மகனா இருக்கான்” என்று அலுப்பாகக் கூறிய ஜான், நிகிலாவிடம் யாதவ் எந்நிலையில் காதல் சொன்னான் என்பது முதல், அவர்களுக்கு இடையே இருந்த வேற்றுமைகள் வரை எல்லாவற்றையும் ஒன்று விடாதுக் கூறினான்.

“இதை போய் அவன் லவ்வுன்னு நினைச்சிட்டு… அவனும் வருந்தி நம்மளையும் கஷ்டப்படுத்திட்டான் ப்பா.”

ஜான் சொல்லியதுமே இப்போது யாதவின் மனநிலை என்னவாக இருக்கும் என்றே ஆதி சிந்தித்தார்.

“ஜான் யாது மனதால்…?”

கேட்க வந்ததை அவரால் முழுதாகக் கேட்க முடியவில்லை.

“அஸ் அ சைக்கார்ட்ரிஸ்ட்… ஹீ இஸ் பெர்பெக்ட்லி ஆல் ரைட் நவ். அவனுக்குள்ளவே அவன் போராடும் நிலை வந்திருந்தால் நிச்சயம் ஸ்ட்ரெஸ் ஆகியிருப்பான்.”

“நான் பேசுவதற்கு முன்பே யாதவ் ஒரு முடிவுக்கு வந்துட்டான் ப்பா. சோ, இப்போ ப்ராப்ளம் இல்லை” என்றவன், “யாதவும் டாக்டர் தான் ப்பா. அதை மறந்துடாதீங்க” என்று சற்று அழுத்தமாகவேக் கூறினான்.

“என்ன தான் நீங்க வளர்ந்து பெரிய இடத்திற்கு சென்றிருந்தாலும் பெற்றோருக்கு குழந்தைகள் தான்.”

“அது பெத்தவங்களோட சைக்காலஜி. புரியுது ப்பா” என்ற ஜான் அலைபேசியை விஷாலிடம் கொடுத்தான்.

“ஓகே விஷ். அவனை கொஞ்சம் பார்த்துக்கோங்க” என்றவராக இணைப்பைத் துண்டித்த ஆதி தனக்குள்ளே மூழ்கிப்போனார்.

நீண்ட நேர யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்திருந்தார். அவரின் முடிவு நிச்சயம் நல்லதாகவே இருக்குமென்று நம்பிக்கை கொள்வோம்.

“என்னை உனக்கு பிடிச்சிருக்கா மாமா?” குழந்தை தனத்தோடு முகம்கொள்ளா புன்னகையோடு யாதுவை நேருக்கு நேர் பார்த்து வரு கேட்டாள்.

“ம்ம்ம்… ரொம்ப பிடிக்குமே! சூர்யா மாமா பொண்ணை பிடிக்காமல் போகுமா!” பதிலளித்த யாதவ் அவ்விடம்விட்டு நகர்ந்தும் விட்டான்.

எப்போதோ பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு காட்சி சிதறல்களாக நினைவில் எழுந்தது.

கூடவே, “என்னை பார்த்தால் உங்களுக்கு லவ் வரலையா மாமா?” கண்கள் சிவந்து அழுததால் முகம் வீங்கியிருக்க… தழுதழுப்பான வருவின் குரல் செவிக்குள் எதிரொலித்தது.

வரு தன்னுடைய கையினை யாதவின் முன் நீட்டி, “இந்த கையை பிடிச்சிக்கணும் தோணலையா?” என்று கேட்க, அவள் கைகளை யாதவ் பற்ற முயற்சித்த நொடி வருவின் பிம்பம் பின்னோக்கி தொலை தூரம் சென்று அவனின் கண்களிலிருந்து மறைந்தும் போனது.

அவளின் பிம்பம் மறைய… இதயத் துடிப்பு நின்று மூச்சு முட்டும் நிலையை மனதின் அடி ஆழத்தில் உணர்ந்தான்.

கண்மூடி மேசையில் தலை கவிழ்ந்திருந்த யாதவ் உடல் அதிர திடுக்கிட்டு விழித்து எழுந்தான்.

உடலெல்லாம் வியர்வையில் குளித்திருந்தது.

“என்னதிது இப்படியொரு கனவு. கனவு வரும் அளவுக்கா உறங்கிவிட்டோம்” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டவனின் கண்கள் கனவில் வந்த காட்சியினை மீண்டும் ஒருமுறை விழித்திரையில் ஓட்டி பார்த்தது.

சிறுமியாக கலங்கித் தெரிந்த வருவின் முகம் பருவ அழகோடு தெளிவாக மின்னியது. கண்களில் நீரும், உதட்டில் புன்னகையும் உறைந்திருந்தது.

ஏதோ அவளே நேராக காதலை சொல்லிய உணர்வு அவனுள்.

நொடிக்கு நூறு முறை வருவின் பெயர் எதிரொலித்தது. கண்மூடினால் மெல்லிய இதம் மனதை ஊடுருவியது. உடல் காற்றில் மிதப்பதை போலிருந்தது.

‘இப்போ தேவையில்லாது இந்த குட்டி பிசாசோட நினைவு ஏன் என்னை ஆட்டுவிக்குது?’

எவ்வளவோ மனதை சமன்படுத்த முயன்றும் வருவின் முகமே கண் முன் தோன்ற இதயம் மத்தளம் கொட்டியது.

ஒருவிதமான புதுவித உணர்வில் சிக்கி சுழன்றான். மனதின் ஆர்பரிப்பு படப்படப்பிற்கு பதிலாக சில்லென்று குளிர்வித்தது.

‘இந்த குட்டி பிசாசோட பேசியே மூன்று வருடத்திற்கு மேலிருக்கும். இப்போ வந்து என்னதிது?’

வருவிடமிருந்து விலகிய நிகழ்வை நினைத்து பார்த்தான்.

“சூர்யா மாமாவின் பொண்ணா உன்னை ரொம்ப பிடிக்கும்” என்று சொன்னவனுக்கு வருவின் அதிகப்படியான ஒளிக்கான காரணம் புரிந்தது.

‘சிறு பெண். பள்ளியின் இறுதி ஆண்டு தேர்வு முடிந்திருந்தது. இப்போது அவளின் கவனம் படிப்பில் தான் இருக்க வேண்டும். தான் ஏதோ ஒரு விதத்தில் வருவின் மனதில் சலனத்தை ஏற்றப்படுத்தி விட்டோம்’ என்று அவளின் திடீர் கேள்வியில் புரிந்து கொண்டவன் அவளிடமிருந்து தானாக விலகிக் கொண்டான். பேசுவதை குறைத்துக் கொண்டவன், வெளிநாடு சென்ற பிறகு முற்றிலும் பேசுவதையே தவிர்த்திருந்தான்.

அதன் பின் தன்னுடைய வீட்டில் இருப்பவளை அவ்வவ்போது பார்த்தாலும் சிறு பார்வையோடு நகர்ந்திடுவான். மனம் அவளை நிமிர்ந்து பார்க்க இழுத்துச் செல்லும், ஆனால் வேறொரு பெண்ணை காதலிக்கிறோம் என்ற எண்ணமே அவனை வருவிடமிருந்து இன்னும் தூரப்படுத்தியது.

மனம் இப்போது தெளிந்த நீரோடையாக இருக்க… மனதில் அமிழ்த்தப்பட்ட, அவனே உணர்ந்திடாத வருவின் மீதான நேசம் நீரில் மூழ்கிய பந்தென வெளியில் வந்தது.

சற்று நேரத்திற்கு முன் காதலின் வெளிப்பாடென ஜான் சொல்லிய எல்லாம் வருவிடம் தோன்றுவதை போல் அறிந்தான்.

உள்ளுக்குள் ஏதோ துளிரிட்டது. அவனுள் ஒன்று மலர்ந்தது. நெஞ்சினில் நேசம் எழுந்தது.

‘இதுக்கு பெயர் காதலா? இல்லை வருவின் மனம் தெரிந்ததால் என் மனம் எனக்கு சாதகமாக நினைக்கிறதா?’ முற்றிலும் குழம்பி நின்றான்.

அத்தோடு அவனுள் இன்னுமொரு கேள்வியும் எழுந்தது…

‘வருவிற்கு சிறு வயதில் ஏதோ ஈர்ப்பில் தோன்றியது இன்னும் அவளிடம் அந்த எண்ணம் இருக்குமா?’

முதல் முறையாக தனக்குள் தவிப்பு எழுவதை உணர முடிந்தது அவனால்.

ஆனால் முதல்முறை போல் அல்லது இம்முறை நிதானாமாக மனதை கண்டு கொள்ள முடிவு செய்தவன் பொறுமை காக்க எண்ணினான்.

*விலகி நின்றவன்
நெருங்கும் தருணம்
அங்கே நிரப்படுவது
கோடைக்கானலா?
மழைச் சாரலா?*

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
36
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்