இதயம் 30 : (ஆழ புதையும் காதல்)
“ஹலோ ஆதிப்பா…”
“சொல்லுடா” என்ற ஆதி விஷாலின் கத்தலில் தன் காதில் சுண்டு விரலைவிட்டு ஆட்டினார்.
“ஆதிப்பா… யாது…”
“அங்க அவன் கேம்ப் போடணும் வந்திருக்கான் டா.”
“அவன் இருக்க கண்டிஷனுக்கு இப்போ இது தேவையா ஆதிப்பா?” விஷாலிடம் யாதவின் மீதான அக்கறை வெளிப்பட்டது. யாதவிடம் கேட்டால் காதில் கூட வாங்க மாட்டான். அதனால் தான் அவனை அனுப்பி வைத்ததற்கு ஆதியிடம் கேள்வி கேட்டான்.
“இடமாற்றம் கொஞ்சம் அவனின் மனதிற்கு மாற்றத்தை அளிக்கலாம் விஷ்.”
“எனக்கும் புரியுது ஆதிப்பா… இருந்தாலும் இப்போ அவன் ஓவர் ஸ்ட்ரெயின் பண்ணக்கூடாது” என்றான் நல்ல நண்பனாக.
“நீயிருக்கியே பார்த்துக்கோ” என்ற ஆதி, “சரி நீ கால் பண்ண விஷயத்துக்கு வா” என்றார்.
“ஆதிப்பா…”
“ஆதிப்பா தான்டா! அதுக்கென்ன இப்போ” என்றவர் அவன் எப்படி கண்டுபிடித்தீங்க என்று கேட்பதற்கு முன்பே “யாதவ் அங்கு வந்தவுடனே கால் செய்து இதை கேட்காமல் இப்போ கேட்கிறியே அதை வைத்துதான் நீ பேச வந்த காரணம் வேறென்னு தெரியுதே” என்றார்.
“யாதுக்கு பழைய நினைவு ஞாபகம் வந்திருச்சு நினைக்குறேன்.”
“நீ நினைக்குற நான் கன்ஃபார்மே பண்ணிட்டேன் டா.” ஆதியிடத்தில் அப்படியொரு சிரிப்பு.
“ஆதிப்பா…”
“என்னடா சும்மா என்னை ஏலம் விட்டுட்டு இருக்க?”
“அப்போ அவன் நடிக்கிறானா?” விஷால் ஒரு அனுமானத்தில் தான் வினவினான். உண்மையாக இருக்குமென்று நினைக்கவில்லை.
“அப்படியும் இருக்கலாம்.”
“அப்போ உறுதியா சொல்லுறன்னு சொன்னீங்க…?”
“நீயொன்னு பண்ணு… நேராக யாதுவிடமே கேட்டுடு… தட்ஸ் வெரி சிம்பிள்” என்ற ஆதி இணைப்பினைத் துண்டித்தார்.
“அவனிடம் கேட்டால் பதில் சொல்லிட்டுதான் அடுத்த வேலை பார்ப்பான். போங்க ஆதிப்பா” என்று தன்னிடமே புலம்பிய விஷால் கேம்ப் நடக்கும் இடத்திற்கு சென்றான்.
விஷாலிடம் சிம்பிள் என்று சொல்லிவிட்டாலும் ஆதியின் மனம் யாதுவை பற்றித்தான் சிந்தித்தது.
‘நினைவு வந்திருந்தால் எதற்கு யாதவ் கேம்பினை காரணமாக வைத்து அங்கு செல்ல வேண்டும். என் வருவை பார்க்கப் போகிறேன்’ என்று சென்றிருக்கலாமே. யாதவின் செயலும் அப்படித்தான் இருந்திருக்கும். இந்த ஒன்றுதான் யாதவிற்கு நினைவு வந்ததா இல்லையா என்று ஆதியை வெகுவாக குழப்புகிறது.
“டாட்…” என்ற அழைப்போடு உள் நுழைந்த ஆதினி, “என்னப்பா பயங்கர தின்கிங்?” என்றாள்.
“நத்திங் டா” என்ற ஆதி, “சமாதானம் ஆகியாச்சா” எனக் கேட்க அதற்கு பதிலாக ஆதினியிடம் சிறு வெட்கம்.
அந்நேரம் அங்கு வந்த நிரலிக்கும் ஆதிக்கு மகளின் நாணம் நிறைவை கொடுத்தது.
“டாட் நம்ம கிராமத்துக்கு போகலாமா? எப்படியும் ஒன் வீக் தான்… அப்புறம் கன்னடா போயிட்டால் எப்போ வருவோம் தெரியல… அதனால் ஜஸ்ட் டூ டேஸ் அங்கு நல்லா என்ஜாய் பண்ணிட்டு வரலாம். ருக்கு பாட்டியும் வரேன்னு சொன்னாங்க.” முகம் முழுக்க அதீத சந்தோஷத்துடன் கூறிய மகளின் விருப்பத்திற்கு மாறாக அவர்களால் மறுக்க முடியுமா என்ன? உடனடியாக ஒப்புக்கொண்டனர்.
ஆதி சம்மதம் கூறியதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அது யாதவ். என்ன தான் மகன் கேட்டதும் சரியென அனுப்பி வைத்தாலும், அவனின் உடல்நிலையை எண்ணி தந்தையாய் மகனின் அருகில் இருக்க வேண்டுமென்று எண்ணினார்.
“எத்தனை டேஸ் கேம்ப் டாட்?”
“த்ரீ டேஸ்…”
“அப்போ நாம் பிரைடே ஈவ்னிங் போல கிளம்பினால் சரியாக இருக்கும்ல டாட். அன்று தானே கேம்ப் முடியுது.”
ஆதி ஆமெனும் விதமாக தலையசைத்தார்.
“என்ன மாம் ஊருக்கு போறோம் சொன்னதும் முகத்தில் தனி சந்தோஷம் தெரியுது?”
“பேபியோட ஆள் அங்குதானே இருகாங்க… அந்த சந்தோஷம் தான்.” ஆதி சிரிப்போடு சொல்ல நிரலி அவரின் விலாவிலே ஒரு இடி இடித்தார்.
“பொண்ணை வச்சிக்கிட்டு என்ன பேச்சு இது” என்று எழுந்தவர், “ராகவ் அண்ணாவிடம் கேட்டுக்கோங்க, அப்புறம் என்னை விட்டு போயிட்டீங்கன்னு சின்னப்பிள்ளை மாதிரி அழுவார்” என்றபடி உள்ளே சென்றிட… ஆதி ராகவிற்கு அழைத்து கேட்டார்.
மருத்துவமனையில் ஜான் மட்டும் தான் இருப்பதால் ஸ்வேதா செல்ல முடியாது. அவரும் மருத்துவமனையில் இருப்பது அவசியம். ஆதால் ராகவும் மனைவியை விட்டு செல்ல விருப்பமின்றி வரவில்லையென்றார்.
****
“எல்லாம் ஓகேவா?”
மருத்துவ முகாம் நடைபெறும் இடத்திற்கு யாதவ் வந்திருந்தான். என்ன தான் உடல் தேரிவிட்டதென்றாலும் இன்னமும் முழுமையாக குணமடையாததால் மேற்பார்வை மட்டும் பார்க்கும்படி விஷால் சற்று கட்டளையாகவே கூறிவிட்டான்.
நண்பனின் பேச்சினை மீறிட முடியாது அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது அவனருகில் வந்த விஷாலிடம் தான் அவ்வாறு கேட்டான்.
“கோயிங் குட் யாது. நல்ல ரெஸ்பான்ஸ். இவ்வளவு பேர் வருவாங்க எதிர் பார்க்கலை. நோய் இல்லையென்றாலும், முழு பரிசோதனை செய்துகொள்ள ஆர்வமாகவே இருக்கின்றனர். பக்கத்து ஊரிலிருந்தும் வறாங்க.”
“அப்போ இன்னும் டூ டேஸ் எக்ஸ்ட்டேன்ட் பண்ணலாமா?”
“எப்பவும் த்ரீ டேஸ் தானடா!”
“ம்.” என்று மௌனமாக தலையசைத்த யாதவ் உண்மை காரணத்தை சொல்ல முடியாது வேறு பக்கம் பார்வை பதித்தான்.
“இது நாம் மட்டும் டிசைட் பண்ற விடயமில்லை யாது. வந்திருக்கும் டாக்டர்ஸ், நர்ஸ் எல்லாரும் சம்மதிக்கணும். முன்பே சொல்லியிருந்தால் ஓகே, பட் இப்போ? மூன்று நாட்களுக்கு ஏற்ற மாதிரி தான் எல்லோரும் பிரிப்பேராகி வந்திருக்கின்றனர்” என்றான் விஷால்.
“புரியுது டா” என்ற யாதவின் குரலில் சுரத்தே இல்லை.
“உனக்கு வருவோடு இருக்க வேண்டுமென்றால் இங்கேயே இரு.” நண்பனின் மனம் புரிந்தவனாக விஷால் கூறினான்.
தன்னை கண்டு கொண்டானே எனும் விதமாக விஷாலை எறிட்ட யாது உடனடியாக பார்வையை விலக்கிக் கொண்டான்.
“தேஜூ ஃபிரியாகிட்டால் சொல்லுடா.” யாதவின் கண்கள் தூரத்தில் அவ்விடம் நோக்கி வந்து கொண்டிருந்த தன் மனைவியின் மீது பதிந்திருந்தது.
“இந்த வெயிலில் யாரு இவளை இங்கு வர சொன்னது.” பற்களில் வார்த்தைகளை கடித்து துப்பினான்.
“அதே அக்கறை. பட் காட்டும் முறை தான் வேறு மாதிரி இருக்கு.” வருவின் மீதான அக்கறை அப்போதும் இப்போதும் ஒரே மாதிரிதான் உள்ளது என்பதையே விஷால் யாதவின் வார்த்தைகளுக்கு பதிலாகக் கூறினான்.
“எதாவது மறைக்கிறாயா யாது?” என்று நேரடியாகக் கேட்ட விஷால், அவனை அர்த்தமாக நோக்கினான்.
“அதை உன் தங்கச்சிகிட்ட கேளு” என்று கோபமாக சொல்லிய யாது வருவை நோக்கிச் சென்றான்.
“உன்னை யாரு இவ்வளவு தூரம் நடந்து வர சொன்னது?” வருவின் அருகில் சென்றவன் காட்டமாகவே கேட்டிருந்தான்.
“நான் வண்டியில் தான் தம்பி கூட்டியாந்தேன்” என்று வருவுடன் வந்த மாரி கூற, வரு அமைதியாகவே இருந்தாள்.
“எல்லோருக்கும் இளநீர் வெட்டி கொடுங்கண்ணா” என்று மாரியிடம் சொல்லியவள் யாதவை கண்டு கொள்ளாது பண்ணை வீட்டு திண்ணையில் சென்று அமர்ந்தாள்.
“சரியான திமிருடி உனக்கு” என்ற யாதவும் அவள் பின்னே சென்று அமர, மாரி முதலில் வெட்டிய இளநீரை யாதவிடம் கொடுத்தார்.
“டாக்டர்ஸ், நர்ஸ் எல்லாருக்கும் கொடுங்க. யாரையும் விட்டுடாதீங்க.”
மாரி அவர்களிடமிருந்து நகர்ந்ததும், தன் கையிலிருந்த இளநீரை வருவிடம் நீட்டினான்.
வரு வேண்டுமென்றே வாங்காது இருக்க… அவளை முறைத்தவன்,
“குடிடி” என்றான் மிரட்டும் தொணியில்.
“எனக்கு வேண்டாம்” என்றவள், வீட்டிற்குள்ளே எழுந்து செல்ல…
“என்னடி உன் பிரச்சினை. இப்போ எதுக்கு உர்ருன்னு இருக்க?” என்று கேட்டவாறு அவளின் பின்னே சென்றான்.
“யாரு… நானா?” என்று முன் சென்றவள் அவன் புறம் திரும்பி இடுப்பில் கை வைத்து கேட்க, அவளின் தோரணையில் நிமிர்ந்த திமிரில் அணைக்கத் துடித்தான்.
“எனக்கு இப்படித்தான் பேச வருது” என்றவன் கையிலிருந்த இளநீரை அவளின் கையில் திணித்துவிட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
குவளை ஒன்றை கையிலெடுத்தவள், இளநீரை அதில் ஊற்றி அவனிடம் நீட்டினாள்.
‘அவள் எதற்கோ தன்மீது கோபமாக இருக்கின்றாள்’ என நினைத்தவன், அவளை சமாதானம் செய்யும் பொருட்டு இளநீரை வாங்கி பருகினான்.
“நாம் செய்யும் தப்பு பிறர் கண்டுபிடித்துவிடக் கூடாதுன்னு தான், எப்பவும் கோப முகத்தோடு இருப்பாங்க. நீங்க என்ன தப்பு செய்றீங்க?” நெஞ்சு பகுதியில் கைகளைக் கட்டிக்கொண்டு அவள் கேட்ட விதமே ஏதோ கண்டுபிடித்துவிட்டாள் என்று யாதவிற்கு புரிந்தது.
குடித்துக் கொண்டிருந்த நீர் புரையேறியது.
யாதவின் அருகில் வந்தவள், அவனின் தலையில் தட்டி ஆசுவாசப்படுத்தினாள்.
“நீங்க குடிச்சது போதும்” என்றவள், அவனிடமிருந்து குவளையே வாங்கி தன் வாயில் சரித்துக் கொண்டாள்.
“மெதுவா குடிடி…”
“எங்களுக்குத் தெரியும்.”
‘பேச்சு பார்வையெல்லாம் ஒரு தினுசா இருக்கே’ என நினைத்தவன் ‘இவள் முன்னிருந்தால் நான் நானா இருக்க மாட்டேன்’ என்றவாறு வேகமாக வெளியே செல்ல முயன்றவனை தடுத்தது வருவின் குரலில் வெளிவந்த அழுத்தமான வார்த்தைகள்.
“உங்களுக்கு ஞாபகம் வந்திருச்சுல மாமா?”
ஒரு நொடி உடல் அதிர நின்றவன் தன்னை சரிசெய்து அவள் பக்கம் திரும்பி பேச முயல்கையில் விஷால் குறுக்கிட்டான்.
“தேஜூ ஃப்ரிடா யாது.”
“ம்” என்று விஷாலிற்கு பதில் வழங்கியவன்,
“வா” என்று வருவின் கை பிடித்து கூட்டிச்சென்றான்.
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே? உங்களுக்கு ஞாபகம் வந்திருச்சுல?”
“அதை பேசுவதற்கான இடம் இதில்லை.”
அவன் சொல்லியதில் கோபம் கொண்டவள் அவனின் கையை உதறிச் செல்ல,
“உனக்கு என்ன தோணுதோ அப்படியே வச்சிக்கோ” என்றவனை உறுத்து விழித்தாள்.
அதற்குள் தேஜூவே அவர்களின் அருகில் வந்திட,
“ஹாய் தேஜ்… ஹவ் இஸ் கோயிங் ஆன்?” என்ற யாதவ் அவளின் முன் கரம் நீட்டிட,
யாதவின் வரவேற்பை ஏற்கும் விதமாக தேஜ் அவனின் கரம் பற்றி ஷேக் செய்ததோடு யாதவை அணைத்து விடுவிக்க… வரு கண்கள் அப்பட்டமாக பொறாமையை வெளிப்படுத்தியது.
“கை குலுக்குக்கினால் மட்டும் போதாதா?” என முணுமுணுத்தவள், சேலை தலைப்பை வேகமாக உதறி நகர, அவளின் மனம் புரிந்து தனக்குள் சிரித்துக்கொண்ட யாதவ் வருவின் கரம் பற்றி நிறுத்தினான்.
தேஜூவிடம் வருவை அறிமுகம் செய்து வைத்தவன்… “ஷீ இஸ் பிரேக்னேன்ட். செக் பண்ண முடியுமா?” என்று வினவினான்.
“நான் லாஸ்ட் வீக் தான் ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்தேன்” என்று யாதவின் காதில் மெல்ல கிசுகிசுத்தாள். இருப்பினும் அவர்களுக்கு மிக நெருக்கத்தில் இருந்த தேஜிற்கு வருவின் பேச்சு தெளிவாக கேட்டது.
“இட்ஸ் ஓகே. அந்த ரிப்போர்ட்ஸ் கொடுங்க, உங்க ஹெல்த் கண்டிஷன்ஸ் செக் பண்ணிடலாம்” என்று தேஜ் தன்மையாகக் கேட்டாள்.
“ரிப்போர்ட்ஸ் வீட்டில் இருக்கு.” தயங்கியவாறு கூறினாள்.
“வாட்ஸ் யூர் ப்ரோப்ளம் வரு.” யாதவின் குரல் சூடாக இருந்தது.
“ஹேய் யாது கூல்” என்ற தேஜ், தான் பார்த்துக்கொள்வதாக வருவை அழைத்துச் சென்றாள்.
தேவையான மருத்துவ உபகரணங்களை, முன் ஏற்பாடாகவே அவர்களது குழு கொண்டு வந்திருந்தனர். அதனால் எவ்வித தடையுமின்றி அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளித்தனர். நோயாளி முகாமிற்கு வந்து மருத்துவ வசதியின்றி திரும்பி செல்லக்கூடாதென்பதில் யாதவும், விஷாலும் கவனமாக இருந்தனர். அந்த வகையில் வருவை பரிசோதிப்பதும் ஒன்றும் அங்கு சிரமமாக இல்லை.
“ரிப்போர்ட்ஸ் காப்பி என் மொபைலில் இருக்கு.”
“இருக்கட்டும் மிஸஸ்.யாதவ். திரும்ப செக் செய்வதில் தவறில்லையே” என்ற தேஜ்… நண்பனின் குறிப்பறிந்து வருவை மிகவும் கவனமாகவே கையாண்டாள்.
வருவை பரிசோதித்த தேஜ்… வரு மொபைலில் இருப்பதாக சொல்லிய முந்தைய ரிப்போர்ட்ஸையும் ஒருமுறை சரி பார்த்துக்கொண்டாள்.
“பேபியோட குரோத் ஃபிஃப்டி எய்ட் டேஸ் ஆகுது. ரொம்பவே நல்லா இருக்கு” என்ற தேஜ், “உங்களுக்கு வாமிட் அதிகமாக இருக்குன்னு யாது சொன்னான்… முடிஞ்சளவு சிட்ரிக் ப்ரூட்ஸ் ஆரஞ்ச், லெமன், ஆல்பக்கோட எடுத்துக்கோங்க… முடியாத பட்சத்தில் நான் எழுதி கொடுக்கும் டேப்லெட் எடுத்துக்கோங்க” என்று தேஜ் சொல்லவும் சரியென தலையசைத்து அங்கிருந்து வந்தாள் வரு.
வரு தேஜின் பிரிவிலிருந்து வெளிவந்ததும் யாதவ் உள் சென்றான்.
“கங்கிராட்ஸ்டா… பர்ஸ்ட் அட்டெம்ட்டிலே கோல் போட்டுட்ட போல” என்று கேலி செய்த தேஜூவிற்கு விரிந்த புன்னகையையே பதிலாகக் கொடுத்தான் யாதவ்.
“வரு அண்ட் பேபி ரெண்டு பேரும் ரொம்பவே நல்லா இருக்காங்க. பேபி டூ மந்த்ஸ் ஆகப்போகுது. இப்போ வருவிற்கு மருந்து மாத்திரைகள் விட” என்று சொல்லிய தேஜ் சிறு இடைவெளிவிட்டு நிறுத்த,
“எதுவா இருந்தாலும் சொல்லு தேஜ்” என்றான் யாது. உள்ளுக்குள் சிறு பயம்.
“நீதான் அவளுக்கு அவசியம். வரு மனதால் சந்தோஷமா இல்லைடா. நிச்சயம் உன்னோட தற்போதைய நிலைதான் அவளை கவலைக்குள்ளாக்குது. வருவோட அழுத்தம் குழந்தையையும் பாதிக்கும். உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. அவங்களோட ஆரோக்கியம் உன் கையில் இருக்கு” என்ற தேஜ் வந்திருந்தவர்களை கவனிக்க சென்றிட, யாது யோசனையாக அங்கிருந்து நகர்ந்தான்.
மனைவியை பார்த்தவாறு அவளுக்கு நேரெதிர் அமர்ந்திட்ட யாதவின் மனம் முழுக்க யோசனையே படர்ந்திருந்தது. அதில் ஓடும் எண்ணங்கள் அவன் மட்டுமே அறிந்தது. அவனொன்று நினைக்க அவனின் எண்ணத்திற்கு மாறாக நடக்கிறது. அவனின் பேச்சினை அவனே கேட்க முடியாது தவித்தான்.
வருவின் மீது கோபம் உண்டானது உண்மை தான்… ஆனால் அவளின் செயலுக்கு பின்னான காரணங்கள் அவள் சொல்லும்போது சரியெனப்படவில்லை என்றாலும்… நிதானமான முறையில் சிந்திக்கும் போது யாவும் தனது நலன் கருதியே என்பது புரிய கோபம் மறந்து அவ்விடத்தில் வருத்தம் குடிகொண்டது.
ஆம் வருத்தம் தான். அவனின் செல்லம்மாவின் மீது அவனிற்கு வருத்தம் தான். என்ன காரணங்கள் இருந்தாலும், தன்னைப்பற்றி முழுதாக தெரிந்தும் குழந்தை விடயத்தில் அமைதியாக இருந்ததை யாதவால் இப்போதும் ஏற்க முடியவில்லை.
பலவாறு சிந்தித்து தனக்குள் உழன்றான். அந்நிலையிலும் வருவின் மீதான யாதவின் பார்வை மற்ற பக்கம் நகரவில்லை.
மனைவி மீது வருத்தம் இருந்தாலும் அதனை காட்டும் சரியான நேரம் இதுவல்ல என்று பல யோசனைகளுக்கு பின்னர் நிலையான முடிவு ஒன்றை எடுத்திருந்தான்.
“டைம் ஆச்சு நீ வீட்டுக்கு போ.”
யாதவ் சொல்லியதும் மறுபேச்சின்றி எழுந்து கொண்டாள் வரு.
“உங்களுக்குள்ள என்னவோ இருக்கு. என்கிட்ட ஓபனா உங்க மனம் திறந்து பேசுங்க மாமா.
இதுக்கு மேலும் உங்க விலகலை என்னால் தாங்கிக்க முடியாது. நீங்க எப்படியிருந்தாலும் என் மாமா தான். அது உங்களுக்கும் தெரியும்.
ரொம்ப வலிக்குது” எனக்கூறி அவனை திரும்பியும் பாராது சென்றாள்.
அவனின் செல்லம்மா வலிக்குது என்று சொல்லிய பிறகும் அவனின் மனம் தாங்குமா என்ன. மூன்று நாள் கேம்ப் முடிய காத்திருந்தான். அவனிற்குள் இருக்கும் ஒன்று அவன் மட்டுமே அறிந்தது. அவனாக சொல்ல நாமும் காத்திருப்போம்.
பரிசோதனைக்கு வந்திருப்பவர்களின் எண்ணிக்கை சன்னமாகக் குறைந்ததும், யாதவிடம் வந்தான் விஷால்.
“வருவுக்கு என்னடா? எதும் ஹெல்த் இஸுஸ் இல்லையே?” என்றபடி யாதவின் அருகில் அமர்ந்தான்.
யாதவிடம் மௌனம் மட்டுமே! அதனையும் அவனே உடைத்தான்.
“விஷ்…”
“சொல்லுடா… எனித்திங் சீரியஸ்?” யாதவின் பொறுமையே விஷாலின் பீபீ’யை எகுற வைத்தது.
யாதவிற்கு தான் தந்தையாகும் விடயத்தை மற்றவர்களிடம் எப்படி சொல்வதென்றே தெரியவில்லை.
‘முன்ன பின்ன அப்பா ஆகிருந்தால் தெரிந்திருக்கும்’ என்று அவனின் மனம் கூறியதற்கு வெளியில் சத்தமாக சிரித்ததோடு “இதற்காக முன்பே அப்பாவா ஆக முடியும்” என்று வெளியில் கேட்டு வைக்க அவனை வினோதமாக பார்த்து வைத்தான் விஷால்.
“டேய் எனக்கு பயந்து வருதுடா. சீக்கிரம் சொல்லுடா” எனக் கேட்ட விஷாலிடம், “கேம்ப் முடியட்டும் சொல்லுறேன்” என்றான் யாதவ்.
“சரிவிடு நான் தேஜூவிடமே கேட்டுக்கொள்கிறேன்” என்று நகர்ந்த விஷால் அடுத்து யாது கூறியதில் ஆணி அடித்ததை போல் அரண்டு நின்றுவிட்டான்.
*நம் காதலின் ஆழம்
என் கருவில் உதிக்கும்
உன் உயிரின் புது வரவில்
நம் உறவுகள் அறிந்திடும்.*
இதயம் 31 : (தேடலில் நிஜம்)
மேலும் இரண்டு நாட்கள் கடந்து மருத்துவ முகாம் முடிவடையும் நிலையில் இருந்தது.
யாதவை கண்டாலே விஷாலிற்கு முறைப்பதே வேலை. அதுமட்டுமில்லாது வாய்க்குள்ளே நன்றாக யாதுவை அர்ச்சிப்பான்.
விஷாலை பார்க்கும் போதெல்லாம், அன்றைய நிகழ்வை எண்ணி ஆதிக்கு சிரிப்பு தான் வரும்.
“நீ சொல்லவில்லை என்றால் என்ன, தேஜூவிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று நகர்ந்த விஷாலிடம்,
“போ போ… அவள் உன்னைத்தான் ரொம்ப நேரமா தேடிட்டு இருக்காள்” என்று சொல்லியதோடு, “நீ அவளை லவ் பண்ணுறேன்னு சொன்னேன், அதிலிருந்து உன்னை அடிக்க தேடிட்டு இருக்காள்” என்று கூலாகக் கூறினான் யாதவ்.
விஷாலின் மனக்கண்ணில் படிக்கும் காலத்தில் தேஜூவிடம் ஒருவன் காதல் சொல்லி, அவனை கல்லூரி முழுக்க அவள் ஓடவிட்டு அடித்தது நினைவு வந்தது. அதிர்ந்து அரண்டு போனான்.
ரூபியின் நெருங்கிய தோழி தான் தேஜூ. காதலை சொல்லக்கூட முடியாது தவிக்கும் ரூபியின் நிலையை அருகிலிருந்து பார்த்ததாலே, தேஜூவிற்கு காதலென்றால் அலர்ஜி ஆகிப்போனது. காதல் மீது அவளுக்கு வெறுப்பெல்லாம் இல்லை. ஏனோ ஈடுபாடில்லாது போயிற்று. அதனாலே தன்னிடம் காதலென்று வரும் ஆண்களுக்கு அவர்களுக்கேற்ற வகையில் பதில் சொல்லி அனுப்பிடுவாள்.
‘தனக்கு எந்த முறையில் நோ சொல்லப்போகிறாளோ’ என்று நினைத்த மாத்திரம் ‘தான் ஏன் அவள் பதில் சொல்லும் விதத்தை பற்றி எண்ணுகிறேன். யாதவ் தானே சொல்லியிருக்கிறான் அப்படி… நான் அவளை காதலிக்கவில்லையே’ என்று நினைத்தாலும் தேஜூவிடம் சற்று ஒதுங்கியே போனான் விஷால். அவனின் ஒதுக்கத்திற்கான காரணம் அவனின் மனமும் தேஜூவை விரும்பியதே! அதனை உணர்ந்தும் காட்டிக்கொள்ளாது இருக்கின்றான். காதல் வேண்டாமென்று இருப்பவளிடம் சென்று காதலுக்காக யாசிக்க அவனின் மனம் இடம் கொடுக்கவில்லை.
அதனாலேயே யாதவ் வருவின் காதல் வாழ்வை அருகிலிருந்து பார்த்தவனுக்கு, அவனையும் மீறி… “உங்களைப்போல் காதலித்து வாழ வேண்டும்” என்று ஒருமுறை யாதவிடம் கூறியிருந்தான் விஷால்.
அப்போது அவனது மனதில் உதித்த முகம் அவனின் தேஜ்.
காதலிக்க விருப்பமில்லை என்றால்கூட பரவாயில்லை, காதலின் மீதே விருப்பம் இல்லாமல் இருப்பவளிடம் காதலை சொல்லுவது விஷாலிற்கு சரியாகப் படவில்லை. அதனாலே தன் காதலை மனதோடு மட்டுமே வைத்திருக்கிறான்.
இதெப்படி யாதவிற்கு தெரியுமென்றதோடு, அதனை தேஜூவிடம் அவன் சொல்லியும் விட்டான் என்பதில் அதிர்ந்தும் போனான்.
அன்று மட்டுமில்லை அடுத்தடுத்த நாட்களும், தேஜூவை கண்டாலே விலகி ஓட ஆரம்பித்தான் விஷால். அவள் வந்தாலே ஏதேனும் காரணம் சொல்லி ஓடிடுவான். அதுவே அவனை பார்க்கும் போதெல்லாம் யாதவிற்கு சிரிப்பினை வரவழைத்தது.
“என்ன யாது கேம்பெல்லாம் எப்படி போகுது?”
யாதவ் வந்தன்று சூர்யாவை பார்த்தது. அதன் பின்னர் இன்றுதான் பார்க்கின்றான்.
“இன்னையோடு முடிஞ்சிடும் மாமா.”
“நெல் ஏற்றுமதி விடயமாக போன இடத்தில் வேலை முடிய தாமதமாகிடுச்சு யாது. இப்போதான் வந்தேன்” என்று தான் உடனில்லாததற்கான காரணத்தை அவன் கேட்காமலே கூறினார்.
“ஆது போன் பண்ணாள் யாது. மாலை கிளம்புறாங்களாம். நள்ளிரவுக்கு முன்னால் வந்துவிடுவதாக சொன்னாள்” என்றார்.
“நான் இன்னைக்கு வருவுடன் ஊருக்கு கிளம்பலாம் இருந்தேன் மாமா.”
“யாது?”
“என் மனைவி என்னோடு இருப்பது தானே மாமா சரியாகும்” என்றவன், “இருந்து அவர்களுடனே செல்கிறோம்” என்று கூறினான்.
ஒரு தந்தையாக இதைவிட வேறென்ன வேண்டும் அவருக்கு. மகளின் வாழ்வை நினைத்து அத்தனை நாட்கள் இருந்த கவலை யாதவ் வருவை தன்னுடன் அழைத்து செல்கிறேன் என்று சொல்லிய நொடி எங்கோ பறந்து போனது.
“ரொம்ப சந்தோஷம் யாது” என்றவர் அவனின் கரங்களை பற்றிக்கொண்டார்.
முகாம் நல்லபடியாக முடிய, வந்திருந்தவர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அனைத்தையும் பத்திரமாக வண்டியில் ஏற்றி அவர்களை அனுப்பி வைத்து எல்லாம் சரிபார்த்து பண்ணையிலிருந்து யாதவ் மற்றும் விஷால் கிளம்ப இரவு எட்டு மணியாகியிருந்தது.
இருசக்கர வாகனத்தில் செல்லலாம் என்ற விஷாலை தடுத்து அந்நேர குளுமையை ரசித்தவனாக நடக்கத் தொடங்கினான் யாதவ். அவனுடன் விஷால்.
“எதுக்கு பொய் சொன்ன…?”
கேட்ட விஷாலை என்னயென்பது போல் புருவம் உயர்த்தினான் யாதவ்.
“தேஜ்…!”
“எஸ் நான் சொல்லவில்லை தான். அப்படி சொன்னாலாவது நீ உன் காதலை அவளிடம் சொல்லுவ எதிர்பார்த்தேன்” என்று தன் செயலுக்கு காரணம் கூறினான் யாதவ்.
“சொல்லிட்டேன்டா!”
“ஹேய் மச்சான்” என்று இருக்கும் இடத்தினை கூட பொருட்படுத்தாது விஷாலைத் தூக்கிச் சுற்றினான் யாதவ்.
“டேய்… டேய்… இறக்கி விடுடா. நீ வெயிட் லிஃப்ட் பண்ணக்கூடாது யாது” என்ற விஷால் அவனின் பிடியிலிருந்து தானே தன்னை விடுவித்து இறங்கினான்.
“சரி சொல்லு… தேஜ் என்ன சொன்னாள்?” யாதவிடம் அத்தனை மகிழ்வு. தன்னுடைய நண்பனின் காதல் கைகூடிடும் எதிர்பார்ப்பு மகிழ்வாக வெளிப்பட்டது.
விஷால் மனதில் காதல் இருந்தாலும் எப்போதும் அதனை தேஜூவிடம் காட்டியதில்லை. தன்னுடைய பார்வையில் கூட அவளிடம் வெளிப்படுத்திவிடக் கூடாதென்பதில் அவ்வளவு கவனமாக இருந்து வந்தான். ஆனால் ஒருநாளும் அவளிடம் பேசாது இருந்ததில்லை. அது அவனால் முடியாத ஒன்றும் கூட.
ஆனால் இந்த இரண்டு நாட்களாக அருகிலிருந்தும் அவளிடம் பேசாது விலகி மறைந்து இருப்பது என்னவோ போல் அவனின் காதல் மனதை அழுத்த… மறுத்தாலும் பரவாயில்லை தன்னுடைய காதலை சொல்லிவிட்டால் அவ்வழுத்தத்திலிருந்து விடுப்பட்டுவிடலாம் என்று தோன்ற, முகாம் முடிந்து தன்னுடைய உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த தேஜூவைத் தேடிச் சென்றான்.
“வாங்க சார்… என்ன ரெண்டு நாளா ஆள் ரொம்ப பிஸி போல… ஒரே ஓட்டம் தான்.” அவளைக் கண்டாலே ஓடியதை தான் அவள் குறிப்பிட்டு கேலி செய்கிறாள் என்பது புரிந்த போதும்,
“யாது உன்கிட்ட சொன்னது உண்மை தான்” என்றான்.
“யாது…” என்று புரியாது யோசித்தவள், “உன்னைப்பற்றி அவன் உண்மையிலேயே என்னிடம் எதுவும் சொல்லிய ஞாபகம் எனக்கில்லை” என்க, யாதுவை நினைத்து விஷால் தன் பற்களை கடித்தான்.
‘இப்படி நானே போய் மாட்டிக்கிற மாதிரி பண்ணிட்டியேடா யாது…’
இருப்பினும் எதற்காக வந்தானோ அதில் மாற்றமில்லை என்பதைப்போல் தன் காதலை கூறினான்.
“எனக்கு எதையும் சுற்றி வளைத்து பேசி பழக்கமில்லை” எனத் துவங்கியவன்,
“நான் எங்க அம்மாவுக்கு ஒரே பையன், அவங்களுக்கு பொண்ணு இல்லையேன்னு ரொம்ப நாள் ஃபீல் செய்து நான் பார்த்திருக்கிறேன். சோ, என்னை கட்டிக்கிட்டு எங்க அம்மாவுக்கு மருமகளாக இல்லாமல் மகளா என் வீட்டுக்கு வரீயா?” என ஒளிவு மறைவின்றி காதலை சொல்லாது நேரடியாக திருமணத்தைப்பற்றி பேசியிருந்தான்.
விஷால் சொல்லியதை நம்ப முடியாது வாய் பிளந்து நின்றிருந்தாள் தேஜூ.
“தேஜூ…”
உடன் வந்த மருத்துவர் விளிப்பில் அதிர்வோடு விழித்தவள், கையில் தான் எடுத்து வைத்த பெட்டியை எடுத்துக்கொண்டு…
“ஆண்ட்டியை அம்மாகிட்ட பேச சொல்லுங்க” என்று விஷாலின் முகத்திற்கு நேராகக் கூறி சென்று விட்டாள்.
செல்வதற்கு முன்பு…
“அப்படியே உங்க தைரியத்தை உங்க ஃப்ரண்ட் ஜானிற்கும் கொஞ்சம் சொல்லி கொடுங்க. ரூபி பாவம்” என்றி சொல்லியிருந்தாள்.
தேஜூவிற்கு விஷால் மீது காதலெல்லாம் இல்லை. மருத்துவத்தில் அவனின் டெடிகேஷனை வைத்து நல்ல மரியாதை உண்டு அவனிடத்தில். விஷாலைப்பற்றி நல்ல எண்ணம். அவை தான் இப்போது விஷாலின் காதலுக்கு மறுப்பு சொல்லாது பொறுப்பாக பதில் சொல்ல வைத்தது.
“அப்போ அத்தையை தேஜ் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டியது தான்.”
விஷால் நடந்ததை சொல்லியதும் யாதவின் பேச்சு அதுவாக இருக்க…
“இந்த ஜான் பயலிடம் முதலில் பேச வேண்டும். இன்னும் எத்தனை வருடத்திற்கு தான் ரூபியை காக்க வைக்க போறான்னு தெரியல” என்றான் விஷால்.
அந்நேரம் சரியாக அவர்களின் பேச்சுக்கு காரணமான ரூபியே யாதவிற்கு அழைத்திருந்தாள்.
“யாருடா?”
“ரூபி தான்.”
“ஹலோ…”
“யாதுண்ணா…” ரூபியின் குரலில் மெல்லிய விசும்பல்.
“ஹேய் என்னடா… என்னாச்சு.” யாதுவிற்கு சிறு படபடப்பு. கடல் கடந்து இருப்பவளின் நலன் வேண்டி. நினைத்ததும் அருகில் சென்று ஆறுதல் அளித்திட முடியாதே!
யாது அக்கறையாகக் கேட்டதும் அதுவரை அடக்கி வைத்திருந்த ரூபியின் அழுகை அதிகரித்தது.
“அழறாடா!” யாது விஷாலிடம் கூறினான்.
“ஸ்பீக்கர் ஆன் பண்ணுடா.” விஷாலிற்கும் யாதுவின் பதற்றம் ஒட்டிக்கொண்டது.
“ரூபி… எதுக்கு அழற?” விஷால் கேட்டிருந்தான்.
“விஷ்… ஜான்…” நா தடுமாறினாள். வார்த்தைகள் வராது திணறினாள்.
“அவனுக்கென்ன?” ஆண்கள் இருவரும் ஒருசேர வினவினர்.
“எனக்கு வீட்டில் பையன் பார்த்திருக்காங்க. இந்த முறை உண்மையில் சாக முடிவெடித்தால் உடன் உன் அம்மாவும் வருவாள். அந்த மாதிரி எதுவும் யோசிக்காதே! நீ என்ன பிளான் பண்ணாலும் இந்த கல்யாணம் நடக்கும். வராமல் இருந்திடாமல் நினைக்காதே உன் அம்மாவை கொன்னாவது உன்னை வரவைப்பேன்” என்று ரூபி தன் தந்தை சொல்லியதை அவர்களிடம் சொல்லி, “அப்பா உடனே கிளம்பி வர சொன்னார்” என்று அழுதாள்.
ரூபி, ஜான் இருவரும் நட்பில் தான் இணைந்தார்கள். ஆனால் யாதவ், விஷால் அளவிற்கு ஜான் ரூபியிடம் நெருக்கமாக பேசியதோ பழகியதோ இல்லை.
ரூபிக்கு ஏனென்று தெரியாமல் ஜானின் விலகல் அவன்மீது காதலை உண்டாக்கியது. ஜான் மீதான காதல் உணர்ந்தது முதல் அவளின் பார்வை மாறியது. அவனிடம் மட்டுமான செயல்கள் மாறின. யாது, விஷாலிடம் பேசினாலும் அவள் மனமும் கண்களும் ஜான் வசமே.
ரூபி தன்னை காதலிக்கிறாள் என்று தெரிந்தது முதல் தன்னுடைய விலகலை அதிகரித்துக் கொண்டான். ரூபி தன் காதலை அவன் கண்டு கொண்டான் என்று அறிந்தது முதல் அவனை பார்வையால் கூட தொல்லை செய்யாது ஒதுங்கிக் கொண்டாள். ஆனால் மலையளவு காதல் அவனிடம். அவளின் அமைதி அவனையும் அசைத்து பார்க்க, அவனின் மனதிலும் ரூபியின் மீது காதல் மெல்ல துளிர்விட்டது.
மருத்துவம் முடித்ததும் ரூபியின் தந்தை அவளுக்கு திருமண ஏற்பாடு செய்ய… அவள் ஜானை காதலிப்பதாக தைரியமாக வீட்டில் சொல்ல அன்று ஆரம்பித்தது பிரச்சனை.
ரூபியின் தந்தை பெரும் தொழிலதிபர். கணக்கிலடங்கா சொத்துக்கள் அவர் வசம். பணம் நிறையவே திமிரையும் செருக்கையும் அவருக்கு கற்று கொடுத்திருந்தது. பாசம், மனிதாபிமானம் என்றால் என்னவிலையெனக் கேட்கும் ரகம் அவர்.
ரூபியின் காதல் தெரிந்து… ஜானின் பெற்றோரை சந்திக்கச் சென்றவர், ஜானின் தந்தை யாரென்று அறிந்து மேலும் கொதித்தார். “உன் பையனை வீணாக என் பெண் பின்னால் சுற்ற வேண்டாமென்று சொல்லி வை” என மிரட்ட வந்தவர், தன்னுடைய தொழில் எதிரியின் வாரிசென ஜானை முற்றிலும் வெறுத்தார்.
“என் பொண்ணு மூலமாக என்னை தொழிலில் வீழ்த்தி விடலாம் கனவு காணாதே அது ஒருநாளும் நடக்காது” என்று முழங்கிச் சென்றார்.
ஜானின் முகத்தை வைத்தே மகனின் மனதை தெரிந்துகொண்ட அந்த பாசமிகு தந்தைக்கு ஒரே பிள்ளையின் ஆசையை நிறைவேற்ற முடியாத நிலையை எண்ணி வருத்தம் கொண்டாலும்,
“இது நமக்கு ஒத்து வராதுப்பா. அப்படி இத்திருமணம் நடந்தால், அந்த பிள்ளையை கொலை செய்யக்கூட அவன் தயங்கமாட்டான். அத்தோடு அவனோடு நான் தொழிலில் நேர்மையாகத்தான் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறேன். அவன் சொல்லிச் சென்றது உண்மையாகிவிடாமல் இருப்பது உன் கையில்” என்று கனத்த மனதோடு சொல்லியிருந்தார்.
“உங்களை மதிக்காதவர் பொண்ணு எனக்கும் வேண்டாம்ப்பா.” ஜானின் குரல் தழுதழுத்தது. அடுத்து பேசியதில் தன்னை முற்றிலும் மீட்டிருந்தான்.
“எனக்காக வாழுற உங்க நிம்மதி தான் எனக்கு முக்கியம் ப்பா.” அடுத்து ரூபி மீது காதல் இருந்த போதிலும் அதனை தன்னுடைய முரட்டு குணத்தால் பிறர் அறியாது பார்த்துக் கொண்டான்.
ஜானின் தந்தை தனக்கு நிகரான சொத்துக்கள் வைத்திருப்பவர். தன்னைவிட பெரிய ஆட்களிடம் நற்பெயர் கொண்டவர். அவர் மகனுக்கு ரூபி தானென்று முடிவெடுத்துவிட்டால் நிச்சயம் செய்து முடித்திடுவார் என்று எண்ணிய ரூபியின் தந்தை அவசர அவசரமாக திருமணம் ஏற்பாடு செய்தார்.
ரூபி ஜானை சந்தித்து பேச சென்றாள்.
அதனை அறிந்த ரூபியின் தந்தை, ஜானின் தந்தைக்கு திட்டமிட்டு விபத்து ஏற்பட வைத்ததோடு, ஜானிற்கு அழைத்து… தன்னால் தான் உன் தந்தைக்கு விபத்து நேர்ந்ததென்று உண்மையை கொக்கரித்து… “இதற்கு மேலும் எனக்கு போகத்தெரியும்” என்று மிரட்டினார்.
அவரின் மிரட்டலையெல்லாம் ஜான் கிஞ்சித்துக்கும் பொருட்படுத்தவில்லை. ஆனால் தந்தைக்கு ஒன்றென்றதும் அந்த ஆறடி மனிதனும் துவண்டுதான் போனான்.
ரூபி அவனிடம் மன்றாட… நிர்தாட்சண்யமாக மறுத்து விட்டான்.
உரிமை உள்ளவனே கைவிட்ட பின்னர் என்ன இருக்கிறதென்று ரூபி தற்கொலை முயற்சி செய்து நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தினாள்.
அதனை கேள்விப்பட்ட ஜானின் தந்தை ஆடிபோய்விட்டார். அவரே ரூபியை ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறியும் தந்தையின் பாதுகாப்பை முன்னிறுத்தி ஜான் மறுத்துவிட்டான். தந்தை முதன் முதலாக ஒன்று கேட்டு அதனை அவரே வேண்டாமென்று சொன்ன பின்னரும் ஜானிற்கு மீறும் துணிவில்லை.
அவனின் வாழ்வு அவரின் தந்தை சாமுவேல் மட்டுமே!
அதன் பின்னர் ரூபி போராடி மேல் படிப்பிற்காக லண்டன் சென்றுவிட்டாள். தந்தையிடமிருந்து தப்பிப்பதற்கு அவளுக்கு தெரிந்த ஒரே வழி இதுதான்.
இடைப்பட்ட காலத்தில் ஜானிற்கும் ரூபியின் மீது நேசமிருக்கிறது என்பதை நண்பர்கள் அறிந்து கொண்டனர். அதனை ஜானும் மறுக்க நினைக்காது ஒப்புக்கொள்ளவே செய்தான். ஆனால் திருமணம் என்று வரும்போது ரூபியின் தந்தை சம்மதம் மிக முக்கியம் என்றிடுவான். முடியாதென்றால் என்னை தொல்லை செய்யாதீர்கள் என்று தீர்க்கமாக சொல்லிவிட்டான்.
மேற்கொண்டு அவனிடம் பேச முடியாத நிலையில் அனைவரும் அவர்களின் காதலுக்கு நடுவில் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே ஆகிப்போனர்.
நடந்ததை நினைத்து பார்த்த விஷாலும், யாதவும் ரூபியைத் தேற்றும் வழி தெரியாது மௌனமாக இருக்க…
“நான் ஜானுக்கு கால் செய்து விஷயத்தை சொன்னேன்” என்றாள் ரூபி.
“அவன் என்ன சொன்னான்?”
“என்னை இந்த கல்யாணத்தை செய்துகொள்ள சொல்றார் யாதுண்ணா” என்றுகூறி அவள் கதற ஆண்கள் இருவருக்கும் இருப்புக்கொள்ளவில்லை.
யாதவ் தான் உடனடியாக செயல்பட்டான்.
“உன்னால் முடிந்தளவிற்கு சீக்கிரம் இந்தியா வாடா, உன்னை அவன் முன் வைத்துதான் பேச வேண்டும். உன் முகத்தை நேருக்கு நேர் பார்த்து எப்படி வேணாம் சொல்றான் பார்க்கிறோம்” என்று யாது சொல்ல, ரூபியும் இன்னும் நான்கு தினங்களில் வந்துவிடுவதாகக் கூறி அழைப்பை வைத்துவிட்டாள்.
“ஏன்டா இந்த ஜான் இப்படியிருக்கான்.” யாதவிற்கு ஜானை நினைக்கும்போது ஆயாசமாக வந்தது.
“ரூபியிடம் நான் காதல் சொல்லவில்லை என்றாலும், பல ஆயிரம் மைல்கள் தாண்டி இருக்கும் அவளை என்னால் உணர முடியும். நானெப்போ அவளிடம் காதலை சொல்லுவேன்னு எதிர்பாக்குற அவளோட தவிப்பு புரியும் அப்படின்னு பெரிய இவனாட்டம் அன்னைக்கு சொன்னான். இப்போ ஏன்டா மறுக்கிறான்.
சாம் அங்கிள் சொன்னது ரீசன் இல்லை. பட் அவர்தான் ரீசன். அவரிடமே பேசுவோம்” என்று ஒரு வழி கண்டுபிடித்தான் யாதவ்.
தான் சொல்லியதற்கு எவ்வித பதிலுமின்றி போக தன்னுடன் நடந்து வந்து கொண்டிருந்த விஷாலை பார்க்க, அவனோ யாதவிற்கு ஐந்தடி பின்னால் யாதுவையே ஆராய்ந்தபடி நின்றுவிட்டான்.
“டேய் விஷ் என்னடா?”
இரண்டு முறை அழைத்தும் விஷாலிடமிருந்து எதிர்வினை இல்லாமல் போக யாது அவனது அருகில் சென்று தோள் தொட்டு உலுக்கினான்.
“ஆங்…”
“என்னடா அப்படியே நின்னுட்ட?”
“யாது உண்மையை சொல்லு. உனக்கு பழைய நினைவுகள் வந்துவிட்டது தானே!”
மார்பிற்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு, “எதை வைத்து சொல்லுற?” என்றான் யாதவ்.
“ஜான் சொல்லிய வார்த்தைகளை அப்படியே வார்த்தை மாறாமல் சொன்னியே அதெப்படி. அந்நிகழ்வு நீ மறந்து போன பக்கங்களில் ஒன்று.” இம்முறை என்னை ஏமாற்ற முடியாதென்று விஷால் தெளிவாகவே தன் சந்தேகத்தை கேட்டிருந்தான்.
“நினைவு வந்திருந்தால் வருவிடமிருந்து நான் இப்படி தள்ளியா இருந்திருப்பேன்?” யாதவின் இக்கேள்வியே விஷாலை மேலும் சந்தேகிக்கத் தூண்டியது.
“அப்போ மறப்பதற்கு முன்பு நீயெப்படி வருவுடன் வாழ்ந்தாய் என்பது உனக்கு நினைவிற்கு வந்துவிட்டது அப்படித்தானே!” விஷால் மீண்டும் கொக்கி போட்டான்.
“இதை நான் சொன்னது நினைவு வந்ததால் அல்ல… பார்த்ததால்.”
யாதவ் கூறிய பதிலில் விஷால் அதீத குழப்பத்தில் பித்து பிடித்து நின்றான்.
*எல்லாம் நீயென்றாகிட
நானென்பது நாமாகி
உயிர் உருகி கரைந்திடும்
உள்ளத்து நேசத்தையெல்லாம்
காதலென்ற ஒற்றை சொல்லில்
அடக்கிட இயலுமோ?
உன்னில் உறைந்த தருணங்கள்
நெஞ்சோடு மடிந்திடுமோ?*
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
40
+1
1
+1
1