இதயம் 29 : (கொள்ளை இன்பம் காதலடா(டி))
என்னவோ தனது உயிரே தன்னை விட்டு தொலைந்து போனதாய் நெஞ்சம் பதறியவள், பார்வையால் அங்கு அலசிக்கொண்டிருந்த யாதுவை காற்றுக்கூட புக முடியாத அளவிற்கு இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள்.
“உங்களை விடமாட்டேன் மாமா. எனக்கு நீங்க வேணும். எப்பவும் வேணும். உங்களை என் கைக்குள்ளே வச்சிக்கனும்.” விடாது அரற்றினாள்.
மார்பு பகுதியில் போட்டிருக்கும் ஆடை தாண்டி ஈரம் உணர்ந்தவன், காரணம் அறிந்தும் அறியாது… அவளை அணைக்காது நின்றிருந்தான்.
அவளின் கண்ணீர் அவனை காயப்படுத்தியது. நெஞ்சத்தை உலுக்கியது. இதற்கு பெயர் காதலென்று தெரிந்தும் இருந்தான். இருப்பினும் அவனின் மனம் அடங்க மறுத்தது.
அன்று வருவின் அறையில் ப்ரெக்னென்சி உறுதி செய்யும் கிட்டினை பார்த்த நொடி எப்படி உணர்ந்தான் என்று அவனாலும் சொல்ல முடியாது. மொத்த உணர்வுக்குவியலின் வெளிப்பாட்டையும் அன்று தான் முதன் முதலாக அறிந்தான்.
ஆனால் ஒரு ஆண் மகனாக, கணவனாக, தந்தையாக அத்தருணத்தை எப்படி தெரிந்து கொண்டிருக்க வேண்டும்? எப்படி அனுபவித்திருக்க வேண்டும்? அந்த வேதனை அவனை மொத்தமாக ஆட்டுவிக்க, வருவின் எவ்வித சமாதான பேச்சுக்களும் அவனின் மனதை சமன் படுத்தவில்லை.
அனைத்தும் மறந்த நிலையில் திருமணம் ஒன்று நடந்த தடமே நெஞ்சத்தில் மிச்சமின்றி இருக்க… தான் தந்தையாகப் போகிறேன் என்ற செய்தி ஒருவனை எந்தளவிற்கு மூச்சு முட்ட செய்யும் என்பதை யாதவ் உணர்ந்த தருணம்.
நினைக்க நினைக்க வருவின் மீது உண்டாகும், அவளால் பொங்கும் வேதனையை அவனால் சற்றும் குறைக்க முடியாது போக… மேலும் அவளின் கண்ணீர் அவனை பித்துப்பிடிக்க வைத்தது.
“இப்போ எதுக்கு அழற?”
இந்த யாதவிற்கு அவளிடம் அதட்டலாகத்தான் பேச வந்தது.
தன்னிலிருந்து பிரித்தவன்,
“நீ வரும்போதே உன் காலில் கொலுசில்லை நினைக்கிறேன். அப்பவும் ஒரு காலடி ஓசை தான் கேட்டது” என்றான்.
“அப்போ வீட்டுக்குள் தான் விழுந்திருக்கும். நான் போய் தேடுறேன்” என்றவள் அங்கிருந்து நகர,
வருவை பிடித்து நிறுத்தி அவளின் கண்ணீர் வழிந்த கன்னத்தை தன் கைக்கொண்டு துடைத்து “போ” என்றான்.
அவனின் செய்கையில் குளிரையும் வெயிலையும் ஒருங்கே பெற்றவள் நிலை அவளுக்குள்.
சற்று முன் கோபம் கொண்டு வெடித்தவன், இப்போது காட்டும் பரிவு… எது உண்மையென்று தெரியாது குழம்பினாள்.
பழைய யாதவிற்கு அவளிடம் குரலுயர்த்திக் கூட பேச வராது. ஆனால் இவனுக்கு மென்மை என்பதே இல்லை.
யாதவையே பார்த்திருக்க, அவனின் புருவ தூக்கலில் திரும்பி வேகமாகச் சென்றாள்.
“மெதுவா போடி…”
அவன் சொல்லியது காற்றோடு கலந்திருந்தது.
தன்னுடைய அறை முழுக்கத் தேடியவள், மேலே இருந்த அவளின் அறையிலும் தேடினாள். கொலுசுதான் கிடைக்கவில்லை. மனம் அதிகமாக சோர்ந்து போனது.
வருவின் பின்னோடு கீழிறங்கி வந்தவன் அவள் தேடத் துவங்கவும் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
‘இப்படி நிக்குறதுக்கு கூட சேர்ந்து தேடலாமில்ல.’
அவளின் மனதின் அலுப்பு அவனுக்கும் கேட்டதோ!
“கொலுசு உன்னோடது. நீ தான் தேடணும்.” தோளை குலுக்கிக் கூறினான்.
அந்நொடி அவளால் பழைய யாதுவை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
‘அவளை அமரச் செய்து அவன் தேடியிருப்பானே!’ அவளிடம் பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது.
“நான் இப்படித்தான். இப்போ எப்படி இருக்கனோ அப்படியே என்னை பிடித்தால் போதும். தொலைந்து போனவைகளை நிஜத்திடம் தேடாதே!” வார்த்தைகள் அவ்வளவு சூடாக வந்தன அவனிடமிருந்து.
உன் மனதின் எண்ணத்தை கூட நானறிவேன் என்று சொல்லாமல் சொன்னான்.
தேடியது கிடைக்கவில்லை என்றதும் கண்களை மூடி யோசித்தாள்.
“எங்கு விழுந்திருக்கும்?”
“பின்னால் தோட்டத்தில்? இன்று அங்கு போகவே இல்லையே.
“முற்றத்தில்… ஆங்க், தேடி பார்ப்போம்” என்றவள் நகர,
“இந்நேரத்தில் லைட் போட்டு தேடப்போறியா?” அவனின் குரலில் அதிருப்தி.
“தேடக்கூடாதா?”
“டைம் என்ன? நீ கீழே லைட் போட்ட அடுத்த செகண்ட் அத்தை என்னவோ ஏதோன்னு வெளியில் வருவாங்க” என்றான்.
“ஹோ…”
“போ தூங்கு. காலையில் தேடிக்கலாம். இல்லைன்னா வேறு வாங்கிக்கலாம்.” அவன் என்னவோ சாதாரணமாக சொன்னான்.
ஆனால் அவளுக்கு அப்படியில்லை,
“எனக்கு புதுசெல்லாம் வேண்டாம். அதேதான் வேணும்” என்று வேகமாகக் கூறினாள். அதில் ஒரு பிடிவாதம். அதனை யாதவ் கண்டுகொண்டான்.
“எனக்கு நம்பிக்கை இல்லை” என்றவன் தனது அறைக்குள் நுழைய திரும்ப…
“எதுக்கு?” எனக் கேட்டிருந்தாள்.
“சின்ன கொலுசு விடயத்திலேயே புதுசை ஏற்காத நீதான் என்னில் காணாமல் போனவற்றை தேடாமல் நிஜத்தை ஏற்று வாழப்போகிறாயா?” வெடுக்கென கேட்ட அவனின் கேள்வியில் அவள் உள்ளுக்குள்ளே துடிதுடித்தாள்.
அனைத்திலும் தன்னை சோதித்தால் அவளும் என்ன செய்வாள். விக்கித்து நின்றாள். இப்பவா அப்பாவா என்று கண்ணீர் எட்டி பார்த்தது.
அவன் சென்றிட கீழிறங்கி தனது தற்போதைய அறைக்குள் வந்தவள் மெத்தையில் சுருண்டு படுத்து விட்டாள்.
‘எதையும் சிந்திக்காத மனமே’ என்று சொல்லிக்கொண்டே எல்லாவற்றையும் சிந்தித்தாள்.
மனதோடு போராடி களைத்துப்போனாள். எப்போது உறங்கினாளோ… அதிகாலையில் முதல் ஆளாக விழித்தவள் வீட்டையே சல்லடையாக சளித்தாள் கொலுசினைத் தேடி.
வாசலில் கோலமிட்டு வீட்டிற்குள் வந்த கல்பனா வீடிருந்த அழகைக் கண்டு நெஞ்சில் கை வைத்து நின்றார்.
மூளைக்கு ஒன்றாக சிதறிக் கிடந்தன பொருட்கள்.
கொலுசினை தேடுகிறேன் என்று வரு தனக்கு பின்னால் ஒவ்வொரு பொருட்களாக வீசி வீடே அலங்கோலமாகக் காட்சியளித்தது.
‘இங்குமில்லையே’ என்றவள் முற்றம் தூணில் சாய்ந்து அமர்ந்ததோடு, தேடும்போது இறுதியாக கையலெடுத்த புத்தகம் ஒன்றை பின்னால் பார்க்காது ‘இது வேற’ என்று தூக்கி வீச சரியாக அது கல்பனாவின் தோளில் பட்டு விழுந்தது.
“ஆத்தே” என்ற அவரின் அலறலில் மேலேயிருந்து யாதவும், கீழே இருந்து விஷாலும் தத்தம் அறைகளிலிருந்து எட்டிப் பார்த்தனர்.
மேலிருந்து பார்த்தால் முற்றத்தின் வழியாக கீழே அனைத்தும் தெரியும்.
கைப்பிடி சுவரில் சாய்ந்து கீழே பார்த்த யாதவிற்கு வருவின் கவலையான முகமும் கல்பனாவின் கோபமான முகமும் தெளிவாக தெரிய காரணம் என்னவென்று அவனுக்கு விளங்கிற்று.
‘காலையிலேயே ஆரம்பிச்சிட்டாள் போலிருக்கே!’ என்றவன் கீழே நடப்பதை கவனிக்கலானான்.
விஷாலும் வீடிருந்த நிலையை கண்டு பதறியவனாக,
“அய்யோ சித்தி என்னாச்சு… வீடு சுத்தம் பண்றீங்களா?” எனக் கேட்க, அவனை தீயாக முறைத்தார் கல்பனா.
‘ஆத்தி… எதுக்கு முறைக்குறாங்க தெரியலையே!’ என்று விழித்தவனிடம்
“உன் தொங்கச்சிக்கிட்ட கேளுடா” என்று எரிந்து விழுந்தார்.
“தங்கச்சிம்மா… அம்மாடி வரு, எதுக்குடா வீட்டிலிருக்கும் பொருட்களோடு கும்மியடிச்சியிருக்க?” என்று அவளிடம் சென்று கேட்டவனின் முதுகினிலேயே ஒன்று வைத்தார் கல்பனா.
“எதுக்கு சித்தி இப்போ அடிச்சீங்க?” முதுகை எட்டாத கைக்கொண்டு தேய்த்தவாறே அவன் வினவிய தோற்றம் மேலிருந்து பார்த்திருந்த யாதவிற்கு சிரிப்பினை வரவழைத்தது.
“அவகிட்ட கேளுடான்னா செல்லம் கொஞ்சிட்டு இருக்க” என்றவர், “எதுக்குடி இப்படி எல்லாத்தையும் கலைச்சு போட்டு வச்சிருக்க?” என்று மகளிடம் கேட்டார்.
“கொலுசை காணும்மா!” கலங்கிய குரலில் முகம் சுருக்கி அவள் சொல்லிய விதத்தில் யாதவிற்கு சுருங்கிய கண்களில் முத்தமிடத் தோன்றியது.
‘டேய் யாது ஸ்டெடி… ஸ்டெடி… ஸ்டெடிடா. அவளை பார்த்தாலே இப்படித்தான் தோன்றும். பீ ஸ்டெடி’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
“வெள்ளி கொலுசுக்காடி பொருட்களையெல்லாம் உருட்டி என் வீட்டை இப்படி பழைய பேய் வீடு மாதிரி மாத்தி வச்சிருக்க” என்று அவர் வருவின் தலையினிலே கொட்டு ஒன்று வைத்தார்.
“கொலுசுக்கா இந்த அக்கப்போரு” என்ற விஷால் வருவின் பார்வையில் கப்சிப்.
வலித்த இடத்தை தேய்த்துக்கொண்டே, “ம்மா வெள்ளி இல்லைம்மா, தங்க கொலுசும்மா” என்று சொன்னவளின் கண்களில் கண்ணீர் இறங்கியது.
அதுவரை கோபமாக இருந்த கல்பனா மகளின் கண்ணீரில் துடித்தவராக,
“அது எதுவாயிருந்தாலும் பரவாயில்லை. வேறு வாங்கிக்கலாம்” என்க,
“ஆமாம்டா… வேறு வாங்கிக்கலாம். அதுக்கு ஏன் அழற” என்று விஷால் அவளின் கன்னம் துடைத்தான்.
“அது மாமா வாங்கிக்கொடுத்த கொலுசு விஷ்.” மெல்ல விசும்பினாள்.
“இருக்கட்டுமே! இன்னொன்னு வாங்கிக்கொடுன்னு சொன்னா, எங்கண்ணா உனக்கு வாங்கிக்கொடுக்க முடியாதுன்னா சொல்லப்போறார்” என்ற கல்பானவை முறைத்த வரு, வேகமாக எழுந்து அவரின் முகத்திற்கு நேரே கை நீட்டி…
“உனக்கு நான் மாமா சொன்னால் உங்க நொண்ணா நினைப்புத்தான் வருமா ம்மா.
நான் மாமா சொன்னது என் மாமாவை. என் யாது மாமாவை. புரியுதா? என்று கையை ஆட்டி ஆட்டி அவள் கேட்ட விதத்தில் கல்பனாவின் தலை தானாக சரியெனும் விதத்தில் ஆடியது என்றால், யாதவிற்கோ இனம் புரியா இன்பம் இதயத்தில் பரவியது. உச்சி முதல் பாதம் வரை சுர்ரென்று ஏறியது.
அந்நொடியே தன்னவளிடம் சரணாகதி அடையச்சொல்லி அவனின் மனம் தவித்தது. முயன்று கட்டுப்படுத்தி நின்றான்.
“வேற வாங்கிக்கலாம். அவ்வளவுதான்” என்று கல்பனா அத்தோடு அப்பேச்சினை முடிக்க… அவரால் புரிந்துகொள்ள முடியாத ஒன்றை விஷால் புரிந்து கொண்டான்.
“உனக்கு அந்த கொலுசு நிச்சயம் கிடைக்கும் வரும்மா. டோன்ட் ஃபீல். இல்லைன்னா யாதுவிடமே வேறு வாங்கித்தர சொல். உனக்கு அந்த உரிமை இருக்குடா!” என்று அவளைத் தேற்றினான்.
விஷால் சொல்லியதைத்தான் அவளும் எண்ணியிருந்தாள். ‘தேடுவோம் கிடைக்கவில்லை என்றால் அவரையே(யாது) இன்னொன்று கேட்போம்.’
ஆனால் இப்போது அவளின் மனம் கிடைக்காத கொலுசிற்காக ஏங்கியது.
“எனக்கு அதுதான் வேணுன்னு தோணுது விஷ்” என்றவளின் கண்கள் மொத்தமாக நீர் நிறைந்திட,
“அது உனக்கு எவ்வளவு ஸ்பெஷல் புரியுதுடா” என்ற விஷால் வருவை தன்னுள் சேர்த்து அவளை அமைதிப்படுத்த முயன்றான்.
“என்னை மாமா அவ்வளவு லவ் பண்ணுவாருன்னு நான் நினைச்சது இல்லை விஷ். ஆனால் இப்போ எனக்கு ஆறுதல் அவங்க காட்டிய அந்த காதல் தான். அதோட நினைவா இருப்பது இந்த மாதிரி சின்ன சின்ன திங்க்ஸ் தான். அவர் இருந்தும் எனக்கில்லை. இப்போ இதுவும்” என்றவள் அவன் தோளிலே முகம் புதைத்து கண்ணீரை அடங்கினாள்.
கல்பனாவிற்கே மகளின் தவிப்பு கண்ணீரை வரவைக்கும் போலிருக்க வேகமாக அங்கிருந்து நகர்ந்தார். எந்த தாய்க்குத்தான் மகளின் தவிப்பு பிடிக்கும்.
பார்த்துக்கொண்டிருந்த யாதவிற்கு விஷாலின் மீது பொறாமை எழுந்தது. தன்னால் அவனைப்போல் இயல்பாக தன்னவளை அணைத்து தேற்ற முடியவில்லையே. எது தடுக்கிறதென்று அவனுக்கே புரியவில்லை. அவளிடம் ஓடும் மனதை மூளை பிடித்து வைத்துக் கொள்கிறது அவனும் என்ன தான் செய்வான்.
சிறு திரை. இருவருள் யார் அதனை நீக்குவது?
நேராக யாதவைத் தேடி வந்த கல்பனா… கீழே நடந்ததை யாதவ் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றான் என்பதை கண்டதம் சற்று திடம் பெற்று அவனது அருகில் சென்றார்.
“மாப்பிள்ளை.”
அவரின் அழைப்பில் யாதவின் உள்ளே சிறு அதிர்வை. அதனை அவன் வெளிக் காட்டிக்கொள்ளவில்லை.
“என்ன மாப்பிள்ளை… மாப்பிள்ளைன்னு கூப்பிடறேன்னு பார்க்குறீங்களா?” என்று கேட்ட கல்பனாவிற்கு யாதவ் இல்லையென தலையாட்டும் போதே, “மகளோட கணவனை மாப்பிள்ளைன்னு கூப்பிடறது தானே நம்ம வழக்கம்” என்றார்.
யாதவ் அமைதியாக இருக்க அவரேத் தொடர்ந்தார்.
“உங்களுக்கு மறந்தது ஞாபகம் வந்துச்சா தெரியல. ஆனால் நீங்க இங்க வந்தது உங்களுக்கு நடந்த திருமணம் தெரிந்து வருவுக்காகத்தான்னு தெரியும். வந்ததும் வருவை நீங்க பார்த்த பார்வையை வைத்தே நான் கண்டுகொண்டேன்.
உங்களுக்குள்ள பேசி சமாதானம் ஆகிக்கணும் என்றுதான் நான் அமைதியாக இருந்தேன்.
ஆனால் இப்போ என்னால் அமைதியா இருக்க முடியல யாது. என் மகள் தினம் சிந்தும் கண்ணீரை என்னால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.” என்று சொன்னவரின் கண்களில் கண்ணீர்.
“அத்தை என்னதிது” என்றவன், அவனே கண்ணீரைத் துடைத்தும் விட்டான்.
“இதுக்கும் மேல என்னால முடியலப்பா, திருமணம் ஆனது தெரிந்தும் எதுக்கு இந்த விலகல். உன்னால் வருவை ஏற்றுக்கொள்ள முடியலையா?” எனக் கேட்டிருந்தார்.
இதற்கு அவன் என்ன பதில் சொல்வது. அவரிடம் அவனின் காதலை பகிர்ந்துகொள்ள முடியுமா என்ன?
“பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணத்தில், தாலி கட்டிய பிறகு தான் யாது காதலே வரும். அந்த மாதிரி நினைத்துக்கொள்ளேன். புதிதாக வாழ்க்கையைத் துவுங்குங்களேன்” என்று தனக்குத் தோன்றிய தீர்வை சொன்னவர்…
“என் மகளை ஏத்துக்கோப்பா” என்று இருகரம் ஏந்தி நின்றார் அவன் முன்.
அவரின் செயலில் பதறி பதட்டம் கொண்டவன்,
“அத்தை என்ன செய்யுறீங்க. நீங்க வளர்த்த பையன்… என்னிடம் போய்” என்று அவரின் கையை இறக்கினான்.
“இப்பவும் என் வருவை நான் காதலிக்குறேன் அத்தை. உயிருக்கும் மேலா நேசிக்கிறேன். ஆனால் அவள்…” என்று சொல்ல வந்தவன் சொல்லாது நிறுத்தி…
“அவள் என்னுடைய வரு அத்தை. நான் விடமாட்டேன்.
என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்திற்க்கும் சொந்தக்காரி என் வரு. எல்லா மணித்துளியிலும் எனக்குள் என் வரு” என்று சொல்லியவனின் முகத்தில் தான் எத்தனை காதல்.
பார்த்த கால்பனாவிற்கே வியப்புத் தோன்றி வெட்கம் வந்தது.
“சீக்கிரம் சரி செய்துடுறேன் அத்தை” என்றவனின் மீது நம்பிக்கைக் கொண்டவராக அங்கிருந்து சென்றார்.
சென்றவர் திரும்பி வந்து…
“அப்படியே அவளுக்கு ஒரு கொலுசு வாங்கிக் கொடுத்திடுங்க. என்னால் வீட்டை பார்த்தாலே மலைப்பா இருக்கு” என்று அவர் சொல்லிச்செல்ல யாதவின் இதழ் அழகாக விரிந்தது.
‘இந்த கொலுசு ரொம்ப பண்ணுதே’ என்றவன் கீழிறங்கி வர, முகத்தை மாற்றிக் கொண்டான்.
“நான்தான் நைட்டே சொன்னனே வேற வாங்கிக்கலான்னு” என்று அழுத்தமாக வருவை பார்த்துக் கூறினான்.
யாதவின் இந்த அதட்டலான பேச்சு கடுமையான முகம் விஷாலுக்கு புதிது.
“ஹேய் யாது… எதுக்குடா இப்போ அவளை அதட்டுற?” பாசமிகு அண்ணனாக தங்கைக்கு ஆதரவாக வந்தான்.
“உன்னை கேம்ப் வேலையைத்தானே பார்க்க சொன்னேன். நீயென்ன இங்கு இருக்க… சொன்ன வேலையை சரியா செய். போ. இன்று ஒழுங்கா எல்லாம் நடந்திருக்கணும். பக்கத்து கிராமங்களுக்கும் தகவல் போகுமாறு ஏற்பாடு செய்” என்று விஷாலையும் அதட்டியிருந்தான் யாதவ்.
சற்று முன்னர் வருவை உரிமையாய் விஷால் நெருங்கியதில் உண்டான பொறாமையால் இப்படி அவனை பழிவாங்கினான் யாதவ்.
விஷாலின் குழப்பமான அதிர்ந்த முகம் யாதவிற்கு சிறு மகிழ்வை கொடுத்தது.
சரியென்று யாதவ் சொல்லியதை செய்ய, அவனை கடந்து விஷால் செல்லும் போது…
“ஷீ இஸ் மைன். ஸ்ட்ரிக்ட்லி மைன். உன் அண்ணன் தங்கை பாசத்தையெல்லாம் நானில்லாதப்போ வைத்துக்கொள்” என்று விஷாலிற்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லியிருந்தான் யாதவ்.
யாதவ் அவ்வாறு சொல்லியதில் விஷாலுக்கு ஏதோவொன்று புரிந்தது. யாதுவை பார்த்துக்கொண்டே வெளியேறிய விஷால் ஆதிக்கு அழைத்திருந்தான்.
“எவ்வளவு நேரம் இப்படியே இருக்க போற?” யாதவின் கேள்வியில் அவனை ஏறிட்ட வரு எதுவும் பேசாது அமைதியாகச் செல்ல…
“ஒரு காலில் மட்டும் எதுக்கு… அந்த கால் கொலுசையும் கழட்டிடு” என்றான். (ஒரு கொலுசை வச்சிக்கிட்டு நீங்க போடுற அலும்பல் என்னாலையே முடியலடா!)
உடல் நடுங்க திரும்பியவள், அவனின் பார்வையில் கொலுசினை கழட்ட கீழே குனிய…
“நானே கழட்டுறேன்” என்றவன் மண்டியிட்டு அமர்ந்து அவளின் பாதத்தை தன் தொடையில் ஏந்தி கழட்ட போகும் சமயம்,
“தம்பி கழட்டாதீங்க” என்ற குரல் ஒலித்தது.
அது வேறுயாருமில்லை மாரி தான்.
“வயலில் தண்ணீர் தொட்டிக்குள் கிடந்துச்சு கண்ணு. காலையில் மோட்டார் எடுத்து விடும்போதுதான் பார்த்தேன். நேத்து வரப்புல உனக்கு பின்னாடி போகும்போது பார்த்தேன். அதான் உன்னோடதுன்னு உடனே கொண்டு வந்தேன்” என்று சொல்லி அவளின் கையில் கொடுத்தவர் அவர்கள் இருந்த நிலையை உணர்ந்து அங்கு நிற்காது சென்றுவிட்டார்.
வரு அப்படியே கொலுசினை வருடிக்கொண்டு நிற்க, தன் தொடையில் இருக்கும் காலினை கீழே வைத்து மற்றொரு காலை தொடையில் வைத்தவன், அவளின் கையிலிருந்த கொலுசை வாங்கி போட்டுவிட்டே எழுந்து நின்றான்.
வருவின் முகத்தில் அவ்வளவு மகிழ்வு. உடல் மொழியில் ஒரு துள்ளல். சற்று நேரத்தில் அவளின் முகமே தனி தேஜஸில் மிளிர்ந்தது.
கொலுசு கிடைத்ததும் அவளின் முகத்தில் தோன்றிய வர்ணஜாலங்களை கண்டு அதிசயத்த யாது…
“அப்படியென்ன அந்த கொலுசு ஸ்பெஷல்” எனக் கேட்டான்.
சிறிது தயங்கினாலும், “இப்போ நீங்க என்ன பண்ணீங்களோ அதுதான் ஸ்பெஷல்” என்று சொல்லி அறைக்குள் புகுந்து கொண்டாள்.
அவள் சொல்லிச் சென்றது விளங்கியதும் யாதவின் முகத்தில் நிறைவான புன்னகை படர்ந்தது.
*உன்னைத் தொட்ட
காற்றும் கூட
என்னை
உரசிச் சென்றால்
இன்பமடா(டி)!
உன் பார்வையில்
கரைந்திட தவிக்கும்
இதயத்தின் யுத்தத்தை
நிறுத்திட முயன்றால்
கொள்ளை இன்பமடா(டி)!*
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
45
+1
1
+1
செம