இதயம் 27 : (உயிர் தீண்டும் நேசம்)
“என்ன மாம் சொல்றீங்க, நிஜமாவா?”
“நீயேன் ஆதும்மா இவ்வளவு ஷாக் ஆகுற?”
“ஐயோ மாம். யாதுக்கு ஒருவேளை நினைவு வந்திருக்குமோ!” ஆதினி சந்தேகமாக இழுத்தாள்.
ஆதினியால் இன்னும் நம்ப முடியவில்லை. நிரலி சொல்லியது முதல் இதோடு பத்து தடவைக்கும் மேல் கேட்டுவிட்டாள்.
யாதவ் மருத்துவ முகாமினை காரணமாகக் கொண்டு வருவை பார்க்கத்தான் செண்டிருக்கிறான் என்பது அவளின் எண்ணம்.
அதனை சொன்னால் நிரலி ஒப்புக்கொள்ளவில்லை.
யாதவ் வருவிடம் நடந்துகொண்ட முறை அவர் நேரில் பார்த்தவராயிற்றே! அதனால் ஆதினி சொல்வதை அவரால் ஒப்புக்கொள்ள இயலவில்லை.
இருவர் பேசிக்கொண்டிருப்பதையும் ஆதியும் ஹரியும் அமைதியாய் பார்த்திருந்தனர்.
என்னதான் ஆதினி எதிர்வீட்டிலேயே இருந்தாலும், அடிக்கடி பிறந்த வீட்டிற்கு வர மாட்டாள். தன்னுடைய வாழ்வு பெற்றோருக்கு தெரிவதில் அவள் விருப்புக்கொள்ளவில்லை. ஆதினியின் முகம் வைத்தே அவளை கணித்துவிடுவார் நிரலி. அதனாலேயே பெற்றோர் வீட்டிற்கு செல்வதையோ, தன் உறவுகளை சந்திப்பதையோ தவிர்த்து வந்தாள்.
மாமியிடமும் தன் வீட்டு உறவுகளைப் பொறுத்த வரை தானிங்கு காதல் வாழ்க்கையில் நன்றாகத்தான் இருக்கின்றேன் என்ற செய்தி மட்டுமே செல்ல வேண்டும் என்று ஆதினி கேட்டுக்கொள்ள மாமியும் மற்றவர்களிடம் எதுவும் சொல்லியதில்லை.
ஆதியோ நிரலியோ ஆதினியின் வாழ்வை பற்றிக் கேட்டால்,
“காதலித்தவனையே கட்டிக்கிட்டாள். சந்தோஷத்துக்கு குறையா இருக்கப்போவது” என்று சொல்லி பேச்சினை மாமியும் முடித்துக்கொள்வார்.
எல்லாம் சரியாகி தன் வாழ்வு சந்தோஷத்தில் சென்று கொண்டிருக்க… இரண்டரை மாதங்களுக்குப் பிறகு அன்று தான் வீட்டிற்கு வந்தாள் தன் கணவனுடன்.
யாதுவை அவள் பார்த்தது மருத்துவமனையிலிருந்து வீடு வந்த அன்று. அதன் பிறகு, வருவிடம் அலைபேசியில் அவனின் நலனை கேட்டுத் தெரிந்துகொள்வாள்.
மகள் வந்ததும் வீட்டில் நடந்த அனைத்தையும் நிரலி சொல்லி முடிக்க, ஆதினியால் தன் தம்பியின் செயல்கள் மற்றும் வருவிடம் பேசிய பேச்சுக்களை அவளால் நம்ப முடியவில்லை.
“அதைவிட அவன் கிராமத்திற்கு சென்றிருப்பதற்கு என்ன காரணமிருக்கும், உண்மையிலேயே கேம்ப் தானா? இல்லை, இதை சாக்காக வைத்து வருவை பார்க்கச் சென்றிருக்கிறானா? அப்படி வருவை காண சென்றது தான் உண்மையென்றால் அவனுக்கு உடல் நலம் பெற்று மறந்த விடயங்கள் நினைவுக்கு வந்துவிட்டனவா?”
ஆதினி தொடுத்த அத்தனை கேள்விகளும் ஆதிக்கும் உண்டு. விடைதான் கிட்டவில்லை.
“இப்போ எதுக்கு ஆதும்மா இவ்வளவு திங்க் பண்ற, இதில் எது நடந்தாலும் நல்லது தான்” என்று ஆதி சொல்ல மௌனமாக தலையசைத்தாள்.
“என்ன ஹரி எதாவது சொல்லனுமா?”
ஹரி வந்ததிலிருந்து எதையோ சொல்ல தயங்குவதை கண்டுகொண்ட ஆதி நேரடியாகக் கேட்டிருந்தார்.
“அது வந்து ஆதிப்பா…” என்று இழுத்தவன் ஆதினியை பார்த்துக்கொண்டே கூறினான்.
“என்னை திரும்ப கன்னடா அனுப்புறாங்க ஆதிப்பா!”
ஆதினி முகத்தில் அப்படியொரு முறைப்பு.
“அதான் சார் எதிர்பார்த்தது நடந்திருச்சே இனி இங்க இருந்தால் என்ன இல்லைன்னா என்ன?” ஆதினி குரலே அவள் அழுகையை அடக்குகிறாள் என்பதை காட்டியது.
“ஆதும்மா” என்ற விளிப்போடு ஆதினியின் அருகில் வந்து அமர்ந்தவன், அவளின் தோளினைச்சுற்றி கைபோட்டு… “போக வேண்டிய கட்டாயம்டா” என்றான்.
“ஏன் முன்னாடியே சொல்லலை?” மெல்லிய தேம்பல் அவளிடம்.
“இப்படி அழுவன்னு தான்.”
“கண்டிப்பா போகனுமா ஹரி.”
“எஸ் ஆண்ட்டி. நியூ ப்ரொஜெக்ட். எங்க எம்.டி போறதா இருந்தது. கடைசி நேரத்தில் அவரோட அப்பாக்கு ரொம்ப உடம்பு முடியல. அவர் உயிரோட இருக்க மாட்டேன்னு பயப்படுறார் போல, மகன் எங்கையும் போகக்கூடாதுன்னு சொல்லிட்டாராம்.” விளக்கமாகக் கூறினான்.
“வேற யாரும்?”
“ப்ரொஜெக்ட் மேனேஜர் நான்தான் ஆதிப்பா” என்றான்.
“டூ இயர்ஸ் ப்ரொஜெக்ட். ஹை அமௌன்ட் இன்வெஸ்ட்மெண்ட்.”
“என்னது ரெண்டு வருசமா? நீ போகவே வேண்டாம். வேற வேலை தேடிக்கோ!” ஆதினி கோபமாக மொழிந்தாள்.
“இது எனக்கு ரொம்ப பிடித்த வேலை ஆது. நானில்லாமல் எப்படி உன்னால் இருக்க முடியாதோ அதேபோல் தான் எனக்கும். நீயில்லாமல் என்னால் முடியாது. உனக்கு விருப்பமிருந்தால் நீயும் என்னோடு வா” என்று கூறியவன், ஆதியிடம் தலையசைத்துவிட்டு வெளியேறிவிட்டான்.
தனக்கு பிடித்த ஒன்றை புரிந்துக்கொள்ளாது தன் மனைவி வேண்டாமென்று சொல்லியதும் ஹரிக்கு சற்று சினத்தை ஏற்படுத்திவிட்டது.
ஆதினியையும் மாமியையும் தன்னோடு அழைத்து சென்றிட வேண்டுமென்று தான் அவன் எண்ணியிருந்தான். அதனை முழுதாக சொல்லவிடாது அவள் பேசியதால் அவனும் சற்று குரலுயர்த்தி பேசிவிட்டான்.
“என்ன ஆதும்மா அவசரப்பட்டுட்ட” என்று நிரலி கேட்க,
“உனக்காக வேண்டாமென்று இருந்தவன் இப்போது செல்ல வேண்டுமென்று சொன்னால் அவன் பக்கம் எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்பதை புரிந்துகொள்” என்று ஆதி மகளுக்கு தன்மையாய் எடுத்துக் கூறினார்.
“அவன் என்னையும் கூட்டிப்போறான் என்பதை முதலில் சொல்வது தானே டாட்” என்றவள், “நான் போய் சார் கோபத்தை மலையிறக்குறேன்” என்று தங்களது வீடு நோக்கி ஓடினாள்.
“ஒரு பிள்ளையோட வாழ்வு மலர்ந்துவிட்டதேன்னு சந்தோஷப்பட முடியல மாமா. யாதுவும், வருவும் வாழ்ந்த வாழ்வு நம்ம கண்ணே பட்டிருக்கும் போல” என்று சொல்லி கலங்கிய மனைவியை ஆதி ஆறுதல் படுத்தினார்.
*****
நினைவு இருக்கும் வரை இன்று தான் யாதவ் வருவை முதல் முறை புடவையில் காண்கிறான்.
‘சாரியில நல்லாவே இருக்காள்.’ அவனின் மனம் வஞ்சனை இல்லாது ரசித்தது.
“எவ்வளவு நேரம் நின்னுட்டே இருப்ப?”
யாதவின் குரலில் நிமிர்ந்து அவனை பார்த்தவள், அருகிலிருந்த தூணிற்கு கீழ் தரையில் அமர்ந்தாள்.
அது பழைய கால தொட்டி வீடு வடிவில் இருக்கும் இக்காலத்திற்கேற்ற வீடு. நடுவில் வானம் நன்கு பரந்து தெரியுமளவிற்கு முற்றம்.
“என்னப்பா திடுதிப்புன்னு” என்றவராய், அங்கு வந்த கல்பனா அவனிடம் மோர் அடங்கிய குவளையை கொடுத்தார்.
“நான் வரக்கூடாதா அத்தை?”
அவன் கேட்டதும் பதறியவர்,
“நீங்க வறீங்கன்னு அண்ணாவும் சொல்லலை அதான் ஏதோ கூறுக்கெட்டு கேட்டுட்டேன்” என்றவர்,
“தம்பி பெட்டியை மேல் அறையில் கொண்டுபோய் வை வரு” என்றார்.
“இல்லை வேண்டாம் அத்தை. நான் தாத்தா வீட்டில் தங்கிக்கிறேன்” என்றவன் எழ…
“அத்தையும் மாமாவும் தீர்த்த யாத்திரை போயிருக்காங்க யாது. வர மாதமாகும். நீ இங்கவே தங்கிக்கோ” என்றவர் அவன் மறுக்க இடம் கொடுக்காது அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.
அப்போது உள்ளே வந்தான் விஷால்.
“என்னடா இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட. டாக்டர்ஸ் குரூப் வந்துட்டாங்கடா” என்று யாதவிடம் கூறினான்.
“வேலு தாத்தா வீட்டில் அவங்களை தங்க வை டா” என்ற யாதவ் வெளியே செல்ல, அங்கு வாசலில் பெரிய வேன் நின்றிருந்தது.
மூன்று மருத்துவர்கள், ஐந்து செவிலியர், இரண்டு கம்பவுண்டர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மருந்து பொருட்கள் என்று அனைத்திற்கும் தயாராக வந்திருந்தனர்.
“ஜான் வரலையாடா?”
“அவனும் வந்துட்டால் ஹாஸ்பிட்டலை யார் பார்த்துக்கிறது. நீதான் சொல்லாமல் கொள்ளாமல் இங்கு வந்துட்ட” என்றான் யாதவ்.
விஷாலுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“சரிடா, நான் இவர்களை கவனிக்கிறேன்” என்று நகர்ந்தவனிடம் அவர்களின் பேச்சினை கவனித்தவளாய் பண்ணை வீட்டின் சாவியை கொண்டு வந்து கொடுத்தவள், “நான் ஒன்னு சொல்லட்டும்மா?” எனக் கேட்டிருந்தாள்.
யாதவ் சொல்லு என்பதைப்போல் பார்க்க,
“நம்ம பண்ணைவீட்டில் தங்க வைக்கலாம். அங்க முன்னாடி களமிருக்கு, அப்படியே தென்னந்தோப்பில் கேம்ப் வச்சுக்கலாம். மக்கள் வந்துபோக நல்லாயிருக்கும். நிழல் இருந்துட்டே இருக்கும்” என்றாள்.
அவள் சொல்லுவதும் சரியெனப்பட யாதவ் விஷாலை அர்த்தமாக பார்க்க,
“வரு சொல்ற மாதிரியே செஞ்சிடலாம் டா” என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வருவின் பண்ணையை நோக்கிச் சென்றான்.
யாதவ் வீட்டிற்குள் செல்ல திரும்பியதும் வேகமாக உள்ளே சென்றவள், அவனின் பெட்டியை எடுத்துக்கொண்டு மேலே சென்றவள், அவன் எப்போதும் வந்தால் தங்கும் அறையை சுத்தப்படுத்தி அவனுக்குத் தேவையானவற்றை சரிசெய்து வைத்துவிட்டு வந்தாள்.
அதுவரை யாதவ் கீழே அமர்ந்திருந்தான்.
“ரூம் ரெடி” என்றவள் அவனின் பார்வைக்காகக் காத்திருக்க அவனோ அவளை பாராது சென்றிருந்தான்.
“இந்தா வரு, இதை போய் தம்பிகிட்ட கொடு” என்றபடி வந்த கல்பனா யாதவிற்கு பிடித்த கருப்பட்டி பணியாரத்தை அவளிடம் நீட்டினார்.
“போம்மா” என்ற வரு, சற்று முன்னர் வரை யாதவ் அமர்ந்திருந்த இருக்கையில் பொத்தென்று அமர்ந்தாள்.
“உன் மாப்பிள்ளை மாமியார் கையால் சாப்பிட்டு மருமகன்னு சீராட வரல, மெடிக்கல் கேம்ப் போட வந்திருக்கிறார்” என்று கோபமாகக் கூறினாள்.
கணவன் தன்னைத்தேடி வரவில்லையே என்கிற ஆதங்கம் அவளுக்கு.
“யாருக்காக வந்திருந்தால் என்ன? அவரு இந்த வீட்டு மாப்பிள்ளை அதாவது எனக்கு மருமகன் இல்லைன்னு ஆகிடுமா என்ன?” எனக் கேட்டவர் அவள் கையில் தட்டினை வைத்துவிட்டேச் சென்றார்.
அறைக்குள் வந்த யாதவிற்குள் சந்தோஷம் கரை புரண்டது.
அவன் வீட்டிற்குள் வரும்போது, “என்னோட மாமா” என்று கல்பனாவிடம் வரு அழுத்தமாக சொல்லியது அவனின் காதில் நன்கு விழுந்தது.
அவ்வார்த்தைகளே அவனின் சந்தோஷத்திற்கு காரணம்.
கோபத்தில் வேகமாக படியேறி வந்தவள், யாதவின் அறைக்குள் செல்ல கதவினை தட்ட போக, யாதவே திறந்திருந்தான்.
அது மரத்தாலான படி. வருவின் தடதட வேக நடை நன்கு சத்தத்தை ஏற்படுத்த அதில் மோன நிலை கலைந்தே கதவை திறந்திருந்தான்.
அவனுக்கோ வரு தான் அவ்வளவு வேகமாக வந்திருக்கிறாள் என்றதும் கோபம் துளிர்த்தது.
“எதுக்கு இவ்வளவு வேகம்?” என்றவனின் பார்வை அவளின் வயிற்றில் படிந்து மீண்டது.
யாதவின் பார்வை தொட்டுச்சென்ற இடத்தை வரு கவனிக்கவில்லை.
‘சத்தத்தால் தன்னை வினவுகிறான்’ என்று எண்ணியவள் அவன் கேட்டதற்கு பதிலளிக்காது, அவள் கொண்டு வந்த தட்டை அவன் பார்க்க அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு சென்றாள்.
“இனிமேல் மெதுவா ஏறு இறங்கு” என்று சொல்லியவன் குரலில் இருந்தது கட்டளையா அக்கறையா அவளுக்கு விளங்கவில்லை.
அடுத்தமுறை அவளது அறைக்கு மேலே வந்தவளிடம்,
“எனக்கு பிரைவசி ரொம்ப முக்கியம். சோ, நீ கீழவே தங்கிக்கோ” என்று கூறியிருந்தான்.
சரியென தலையசைப்பதைத் தவிர அவளுக்கும் வேறு வழியிருக்கவில்லை.
அவள் சொல்லாவிட்டாலும், அவள்மீது அவ்விடயத்தில் கோபமிருந்தாலும் ஒவ்வொன்றிலும் அக்கறையை காண்பித்தான் யாதவ். ஆனால் புரிய வேண்டியவளுக்கு அவையெல்லாம் கோபமாகத்தான் தெரிந்தது.
சிறிது நேரத்திற்கெல்லாம் வீட்டிற்கு வந்த சூர்யா யாதவின் வருகை அறிந்து நிம்மதி அடைந்தார். இதுநாள் வரை இல்லாத நம்பிக்கை இப்போது அவருக்கு வந்திருந்தது. எல்லாம் சரியாகிவிடுமென்று திடம் கொண்டார்.
யாதவின் அறைக்குச் சென்றவர் அவனின் உடல் நலம் அறிந்து, கொஞ்ச நேரம் அவனோடு மற்ற விடயங்கள் பேசி கீழே வந்தார்.
அவர் படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் போது, வரு கீழுள்ள அறை ஒன்றிலிருந்து வெளிவர,
“என்னம்மா அங்கிருந்து வர?” என்றார்.
“மேல மாமா இருக்கிறார் ப்பா” என்று மட்டும் சொல்லியவள் கல்பனாவைத் தேடிச் சென்றாள்.
வந்தவர்களுக்கு வசதி செய்து கொடுத்துவிட்டு விஷால் வீட்டிற்கு வர இரவு உணவு நேரம் வந்திருந்தது.
“டேய் வாடா சாப்பிடலாம். சித்தி கூப்பிட்டாங்க” என்ற விஷாலிடம் ஒரு நிமிடமென்று விரல் காட்டிய யாதவ் ஆதியிடம் அலைபேசியில் உரையாடினான்.
“அம் ஷுயூர் டாட். உங்க மருமகளுக்கு என்னால் எந்த கஷ்டமும் வராது” எனக்கூறி அழைப்பைத் துண்டித்தவன் தன்னையே பார்த்திருக்கும் விஷாலை தோள் தொட்டு மீட்டான்.
“யாது உனக்கு…?”
“ம், தெரியும். மேடமே சொல்லட்டுமென்று தான் வெயிட்டிங்” என்ற யாதவ், “நீ எதாவது உளருனன்னு தெரிஞ்சுது” என விரல் நீட்டி எச்சரித்தான்.
“புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேருமே மிரட்டுறதில் ஒரே மாதிரி இருங்க” என்ற விஷால் யாதுவை இழுத்துக்கொண்டு கீழே வந்தான்.
ஆண்கள் மூவரும் உணவு கூடத்தில் அமர்ந்திருக்க,
“நீயும் உட்காரு வரு” என்ற கல்பனா சூர்யாவிற்கு அருகில் வருவை அமர வைத்தார்.
எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, பாதி உணவில் வரு எழுந்து தோட்டத்து பக்கம் ஓடினாள்.
சில நிமிடங்களில் உள்ளே வந்தவள்,
“எனக்கு சாப்பாடு வேண்டாம்மா, மதியம் சாப்பிட்டதே சேரல” என்று தான் வாந்தி எடுத்ததற்கான உண்மை காரணத்தை மறைத்து, “கொஞ்சம் நேரம் கழித்து பால் மட்டும் கொடும்மா” என்று சொல்லி கீழே இருக்கும் தன்னுடைய அறைக்குள் புகுந்துகொண்டாள்.
“நேற்றும் இப்படித்தான் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதே வாமிட் பண்ணா சித்தி” என்றான் விஷால்.
தற்போதைய நிலையில் ஏதும் நல்ல காரியம் இருக்குமென்று கல்பனாவால் எண்ண முடியவில்லை. அதனால் அவரும் உணவு வருவிற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றே எண்ணிக்கொண்டார்.
“நாளைக்கு கேம்பில் வருவையும் செக் பண்ணிடலாம் அத்தை” என்ற விஷால் உணவில் கவனமாக, யாதவ் போதுமென்று பாதி உணவில் எழுந்து கொண்டான்.
நினைக்க நினைக்க யாதவிற்கு கோபம் பல்கி பெருகியது.
‘மறைக்கக்கூடிய விடயமா அது.’ ஆத்திரம் அவனின் உள்ளே சுழன்றடித்தது.
அன்று தன்னுடைய வீட்டில் வருவின் அறையில் அவன் கண்டெடுத்த பொருளை தன் கைக்குள் வைத்து பார்த்தவன்,
‘இதற்காகவேணும் நமக்குத் திருமணம் ஆனதை யார் என்ன சொல்லியிருந்தாலும் மறுத்து, நீ என்னிடம் சொல்லியிருக்க வேண்டும் வரு’ என்றவன் அப்பொருளை தன் கைக்குள் பொத்தி வைத்து இறுக மூடினான்.
அவனுள் ஓர் சிலிர்ப்பு ஓடி அடங்கியது.
கண்கள் மூடி சில கணங்கள் அது தந்த இதத்தை உள் வாங்கியவன், கையிலிருக்கும் பொருளை பத்திரப்படுத்திவிட்டு கீழே வந்தான்.
“வருவுக்கு பால் கொடுக்கும் போது இந்த டேப்லெட் சேர்த்து கொடுங்க அத்தை.” கல்பனாவிடம் யாதவ் சொல்லிக் கொண்டிருக்க, சூர்யா அழைக்கும் சத்தம் கேட்டு,
“நீயே கொடுத்திடு யாது” என்று பால் குவளையை அவனின் கையில் திணித்தவர் கணவனை நோக்கி சென்றிட, ஒரு கணம் யோசித்த யாது வருவின் அறைக்குச் சென்றான்.
கதவினைத்தட்டி அவன் காத்திருக்க,
“தாழ் போடலம்மா. உள்ள வாங்க” என்று குரல் கொடுத்தாள் வரு.
மேசையின் முன்பு நாற்காலியில் யாதவிற்கு முதுகுக்காட்டி அமர்ந்திருந்தவள், மேசை மீதிருந்த புகைப்படத்தையும் தன் விரலிலிருக்கும் மோதிரத்தையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.
“பால் தானம்மா. அங்கு வச்சிடு. நான் அப்புறம் குடிச்சிக்கிறேன்.” யாரென்று பாராது சொல்லிய வரு பதிலின்றி போக திரும்பி பார்க்க, யாதவென்றதும் அதிர்ந்தாள்.
நிச்சயம் அந்நேரத்தில் அவனை அவளது அறையில் எதிர்பார்க்கவில்லை என்பதை அவளின் அதிர்ந்த தோற்றமே கூறியது.
வேகமாக மேசை மீதிருந்த புகைப்படத்தை அவனுக்குத் தெரியாமல் கவிழ்த்து வைத்தாள்.
ஆனால் பார்க்க வேண்டியவன் பார்த்துதானே ஆகவேண்டும்.
அவன் உள்ளே வந்ததும் அவனின் பார்வையில் முதலில் பட்டது அவளும் அவள் பார்த்துக்கொண்டிருந்த புகைப்படமும் தான். ஆனால் தான் பார்த்துவிட்டேன் என்பது அவளுக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டான்.
“நீங்க…”
“பால்” என்று அவள் முன் நீட்டினான்.
வாங்கி ஒரே மூச்சில் குடித்தாள்.
“இப்படி மூச்சை தம் கட்டி குடிக்கக் கூடாது” என்றவன், அவளிடம் மாத்திரையை கொடுத்தான்.
‘எதற்கு இது?’ என்று பார்த்தவளின் விழிகளில் தன் கூரிய பார்வையை கலந்தவன்,
“வாமிட் வர மாதிரி இருக்கும்போதெல்லாம் எடுத்துக்கோ! இப்போ ஒன்னு போட்டுக்கோ” என்று சொல்ல… அவளோ திருதிருத்தாள்.
“நானும் டாக்டர் தான்ம்மா. எப்போ என்ன டேப்லெட் கொடுக்கணும் எனக்கும் தெரியும்” என்றான். அவனின் குரலில் நக்கல் வழிந்ததோ.
“அது… அது வந்து…”
வரு சொல்ல முடியாது திணறினாள்.
“நானென்ன உனக்கு விஷத்தையா கொடுத்துவிடப் போகிறேன்?”
யாதவின் வார்த்தை எரிமலை குழம்பென வெளிவந்தது.
அப்போதும் அவனை அடிபட்ட பார்வை ஒன்று பார்த்தாலே தவிர தன்னிலை பற்றி கூறாது, அவன் சொல்லிய வார்த்தையின் வீரியம் தாங்காது கண்கள் சிவக்க நின்றிருந்தாள்.
“இப்போ கூட உன்னால் சொல்ல முடியாது இல்லையா” என்று கத்திய யாதவ் தன் கோப உணர்வுகளை அடக்க வழி தெரியாது பின்னந்தலையை தடவினான்.
அவனின் நிலை புரியாது பெண்ணவள் முழித்து நின்றாள். கண்கள் துளிர்த்தது.
“ஓ காட்” என்று மேல்நோக்கி கூறியவன்,
“அழாதடி” என்று அதட்டினான்.
அதில் கலங்கிய அவளின் கண்கள் நீரினை சொறிந்திடாது பட்டென்று வடிந்திட,
“நம் பேபிக்கு ஒன்றும் ஆகாது. ப்ரெக்னென்சி டைம்ல எடுத்துக்கிற டேப்லெட் தான் இது” எனக்கூறி விழிகள் தெறிக்க அதிர்ந்து நிற்கும் அவளை கண்டுகொள்ளாது தன்னுணர்வுகளை அடக்கும் மார்க்கமின்றி அங்கிருந்து வேகமாக வெளியேறிவிட்டான்.
“மாமா.”
அவன் சொல்லிச் சென்றதில் அவள் தான் விக்கித்து நின்றாள்.
*நிழலிலும்
உனைத் தீண்டிடும்
நிஜம் வேண்டும்.
கனவிலும்
உனை கண்டிடும்
கண்கள் வேண்டும்.
வலியிலும்
உனை நீங்கா
மனம் வேண்டும்.
மரணத்திலும்
உனை பிரியா
வரம் வேண்டும்.*
இதயம் 28 : (எதுவரை நீ அதுவரை நான்.)
மாமி கோவிலுக்கு சென்றிருக்க, வீட்டில் ஹரி மற்றும் ஆதினி மட்டுமே.
ஹரிக்கு ஆதினி தன்னை புரிந்துகொள்ளவில்லையே, தன்னுடைய விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் கோபத்தைக் கூட பொறுமையாக வார்த்தைகளில் காட்டிவிட்டு வந்துவிட்டான்.
இருப்பினும் அவனின் மனம் ஆறவில்லை.
“ஹரி…” ஆதினி அவனின் அருகில் வந்து தோள் உரச அமர்ந்தாள்.
ஹரி அவளின் அருகில் தன் கோபத்தை இழுத்து பிடித்தான்.
“கோபமாடா?”
“போடி” என்றவன் எழுந்து பால்கனிக்கு சென்று விட்டான்.
அவனின் பின்னால் வந்து அணைத்தவள், ஹரியின் முதுகில் கன்னம் வைத்து…
“திரும்பவும் உன்னை பிரிஞ்சி இருக்கணும்மோன்னு பயந்துட்டேன். அதான் உன் வேலை உனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரிஞ்சும் அப்படி சொல்லிட்டேன்” என்றவள் தன் கன்னம் வைத்திருந்த இடத்தில் இதழ் ஒற்றினாள்.
“இருந்தாலும் உனக்கு என்னைவிட உன் வேலை தான் பர்ஸ்ட்ல. கொஞ்சம் கடுப்பா இருக்கு” எனக்கூறி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
அவளை திரும்பி பார்த்த ஹரி… பால்கனி கம்பியில் சாய்ந்து நின்றான்.
“எனக்கு நீ முதலா இல்லையான்னு எந்த இடத்திலுமே என் காதல் ஒருமுறை கூட உனக்கு சொல்லலையா?” மிதமிஞ்சிய ஆதங்கம் அவனிடம்.
“உன் விடயத்தில் மட்டும் நிதானம் இருக்க மாட்டேங்குது. என்ன பண்ண?” முகம் சுருங்கினாள்.
“லவ்வுல ஒவ்வொரு நொடியையும் புரிய வச்சிட்டே இருக்க முடியாதுடா! உனக்காக நான் எல்லாம் செய்வேன். நான் எது செய்தாலும் உன்னை மனதில் வைத்து முன்னிறுத்தி தான் செய்வேன் அப்படின்னு நீ உணரனும். உனக்காத் தெரியணும்.” தீர்க்கமாக மனைவியின் விழிகளை நேருக்கு நேர் சந்தித்துக் கூறினான்.
“உன் அளவுக்கு புரிதல் என்னிடம் இல்லை தானே!”
சிறுப்பிள்ளையென வினவியவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன்,
“காதலில் எல்லாம் சரியாக அமைந்துவிட்டால் சுவாரஸ்யம் இருக்காது கண்ணம்மா” என்றதோடு, “இந்த மாதிரி சின்ன சின்ன சண்டைக்கு பிறகு வர சமாதானம் ரொம்ப அழகானது” என்றான் அவளின் நெற்றி முட்டி.
“சார் எதுக்கோ அடி போடுற மாதிரி இருக்கே!” அவள் ராகம் பாடினாள்.
“தெரியுது தானே, பிறகென்ன பேச்சு” என்றவன் அறைக்குள் தூக்கி வந்து மெத்தையில் கிடத்தி செயலில் இறங்கி தன்னவளையும் செயல்பட வைத்தான்.
“போடா… இனி உன்னிடம் சண்டையே போட மாட்டேன்.” செயலின் இறுதியில் அவனின் நெஞ்சில் குத்தி பிதற்றியவளின் கன்னம் வலிக்க கடித்தான்.
“சரி எப்போ கன்னடா கிளம்புறோம்?”
“திஸ் மந்த் எண்ட்.”
“அவ்வளவு சீக்கிரமா?”
“ஹே இன்னும் எய்ட் டேஸ் இருக்குடி” என்ற ஹரி கன்னடாக்கு செல்வதைப்பற்றி பேசிக்கொண்டிருக்க,
“அதுக்குள்ள நாம் கிராமத்துக்கு போய் வருவை ஒரு முறை பார்த்திட்டு வந்திடலாமா?” என்று கேட்டாள் ஆதினி.
“ஃபிரைடே நைட் கிளம்பலாம். டூ டேஸ் அங்க இருந்துட்டு, சண்டே நைட் ரிட்டர்ன்” என்றான் ஹரி.
“மாம் அண்ட் டாட் வறாங்களா நாளை கேட்டுக்கலாம்” என்றவள், கணவனின் மார்பில் புதைந்து சுகமான உறக்கத்தை தழுவ, ஹரியும் தன்னவளை அணைத்து ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றான்.
*****
“நம் பேபிக்கு ஒன்றும் ஆகாது. ப்ரெக்னென்சி டைம்ல எடுத்துக்கிற டேப்லெட் தான் இது.”
சொல்லிவிட்டு வந்துவிட்டான். தனக்கு நீ மறைத்தது தெரியுமென்று நேரடியாகவே சொல்லிவிட்டான்.
அவளின் அதிர்ந்த பார்வை, ‘நீ கண்டுகொண்டாயா?’ என்று கேளாமல் கேட்ட அவளின் விழிகள்… ஏனோ கண்ட நொடி அவ்வளவு ஆத்திரம். அருகிலிருந்தால் தன்னிடம் மறைத்ததற்கு, உண்மையை சொன்னால் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்கிற அவளின் எண்ணம், தன் உணர்வுகளோடு போராட வைத்ததற்கு, எல்லாவற்றிற்கும் சேர்த்து அவளை வார்த்தையாலோ அல்லது கையாலோ வதைத்திடுவோம் என்று அஞ்சியே அடுத்த கணம் அவளை ஏறிட்டும் பாராது வெளியேறியிருந்தான்.
அறைக்குள் வந்தவனின் மனம் ஆர்ப்பரித்தது. சமன்பட மறுத்தது. அவனால் வருவை மன்னிக்க இயலவில்லை. அது எப்போதும் முடியாது என்பதை அவனின் மனம் நன்கு அறிந்தே இருந்தது.
மனதின் கொதிப்பு நினைக்க நினைக்க தாளவில்லை. எங்கே தன்னவளை வெறுத்துவிடுவோமோ… இந்த கோபம் வெறுப்பாக மாறிடுமோ என்று அஞ்சினான்.
அது முடியாத ஒன்றென்று அவனின் மனம் கட்டியம் கூறியது. விடையறிந்து நாட்கள் கடந்திருக்க, கேள்வியைத் தேடி மனதிற்குள் யுத்தம் புரிந்து கொண்டிருந்தான்.
யுத்தம்… காதலில் மட்டுமே அழகானது. வலி கொடுத்து இன்பத்தில் திளைக்க வைக்கும் வல்லமை காதல் போரில் மட்டுமே சாத்தியம். இங்கு காயம் தந்தவர்களே மருந்தாக முடியும். விந்தையிலும் விந்தை, காதல் வலி தந்தவர்களே சுகத்தையும் வாரி வழங்குவர்.
மனதில் ரணமாகக் கீறப்பட்ட வலிக்கு ஆறுதலாக தன்னவளின் மடி வேண்டுமென தவித்தான். சொல்ல முடியாத சிலவற்றை உணர்வுகளால் உணர்த்திட எண்ணினான்.
நினைக்க நினைக்க அவளின் அருகாமை வேண்டுமென மனம் பேயாட்டம் போட, அதற்கு மூளை தடைவிதிக்க…
‘தான் இல்லாமல் அவளால் இருக்க முடியும் எனும்போது என்னாலும் அவளின்றி இருக்க முடியும்.’ அழுத்தமாக தனக்குத்தானே கூறிக்கொண்டவன், அவனின் அறைக்குள்ளே இருக்கும் படிகளை பயன்படுத்தி மொட்டை மாடிக்கு வந்தான்.
கரிய வானில் கலைந்திட்ட மேகங்கள் நீர் தடங்களாக ஊர்வலம் செல்ல, அவனின் மனமும் அவனின் கடந்த வாழ்வை எண்ணி ஊர்வலம் சென்றது.
நினைக்க நினைக்க தித்திப்பை மட்டுமே அள்ளி கொடுத்த வாழ்வு நினைவாகிப்போனதில் யாரை நிந்திக்க? அவனில் நினைவாகக் கூட இல்லையே!
தலை வலிப்பதைப்போல் இருக்க… குளிர் காற்றை ஆழ்ந்து உள்ளிழுத்து சுவாசித்தவன், மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு கால்களை சற்று அகட்டி வைத்து தலை உயர்த்தி இருளில் தூரத்தில் நிழலாகத் தெரியும் மலை முகட்டின் உச்சியை வெறித்தான்.
எவ்வளவு நேரம் நின்றிருந்தானோ… போட்டிருந்த டீசர்ட்டையும் தாண்டி குளிர் உடலை துளைத்தது. இருந்தபோதும் தன்னிலையில் மாற்றம் இல்லை என்பதைப்போல் நின்றிருந்தான். தகிக்கும் மனதை சில்லென்ற இரவு காற்றில் குளிர்விக்க நினைத்தானோ!
அவனின் கண்களில் துளிர்த்த நீரே அவனை நிகழ் திருப்பியது.
“லவ் யூ டி.” வாய்விட்டு சொன்னவனுக்கும் தெரிந்துதான் இருந்தது தன்னவளை தன் இதயம் எந்தளவிற்கு விரும்புகிறது என்பதை.
உயிர் வரை உறைந்திட்ட காதல் மரணத்திலும் மறையாது. இங்கு யாதவின் காதலை தட்டியெழுப்பியதும் அதுதான்.
‘மாமாக்கு தெரியுமா? எப்படி?’
வருவிடம் பேசிவிட்டு யாதவ் சென்றதிலிருந்து அவள் மனம் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி. இடைவிடாது ஒலித்தது.
‘அப்போ அவரது நினைவு?’ அவனின் காதலற்ற பார்வை இல்லையென்றே கூறியது.
“இப்போ கூட உன்னால் சொல்ல முடியாது இல்லையா?” பொங்கும் உணர்வில் யாதவ் கேட்டது மனதை தைய்க்க, அவனின் மடியில் அனைத்தையும் கதறி கரைத்திட வேண்டுமென்று தோன்ற மின்னலென அவனின் அறை நோக்கி பாய்ந்தாள்.
கதவில் கை வைக்க தாழிடப்படாதக் கதவு திறந்து கொண்டது. அறை முழுக்க வருவின் பார்வை அலைந்தது. அவன் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.
மாடிக்கு செல்லும் கதவு திறந்திருக்க அங்கு சென்றிருப்பான் என்று யூகித்து வேகமாக இரண்டு படிகள் தாவியவள்,
“மெதுவா ஏறு இறங்கு.” மாலை அவன் சொல்லியது நினைவில் வர மெல்ல ஒவ்வொரு படியாக நிதானமாக அடி வைத்து ஏறினாள்.
கொலுசின் ஒலி வைத்தே வருவது யாரென்று கண்டு கொண்ட யாது முயன்று தன் முகத்தையும் உடலையும் இறுக்கமாக வைத்துக் கொண்டான்.
வரு சிறு தயக்கத்துடன் அவன் அருகில் வந்து நின்றாள்.
அவளின் வருகை அறிந்தும் அசையாது சிற்பம் போல் நின்றிருந்தான்.
வரு எப்படி பேச்சினை ஆரம்பிப்பது என்று தெரியாது கைகளை பிசைந்தபடி அவனையே பார்த்திருக்க,
“இப்போ என்ன சொல்ல வந்திருக்க?” என யாதவே பேச்சினை துவங்கியிருந்தான்.
“அது…!
நான் மறைக்கணும் சொல்லாமல் இல்லை.”
“வேறெப்படி?” அவள் சொல்லி முடிப்பதற்குள் அடக்கப்பட்ட சினத்துடன் அவள் முன் திரும்பியிருந்தான்.
அவன் முகத்தில் கண்ட ஜூவாலையில் இரண்டடி பின்னால் நகர்ந்திருந்தாள் வருணவி.
எந்தவொரு ஆணுக்கும் தான் தந்தையாகப் போகிறேன் என்ற செய்தியை விட வேறொன்று இவ்வுலகில் பெரியதாக இருந்திடாது. மற்ற உறவுகளை காட்டிலும் தந்தை என்ற உறவு அன்பு மட்டுமில்லாது முதன் முதலில் பாதுகாப்பை உணர்த்தும் உறவல்லவா! பிள்ளைகளுக்கு முதல் நாயகனும் தந்தையல்லவா! அதையே தன்னிடம் மறைத்து விட்டாளே என்கிற கோபம் தான் அவனுக்கு.
“இவனுக்கு எல்லாம் மறந்து போச்சு, இப்போ போய் சொன்னால் நம்புவானோ நம்பமாட்டானோ, இல்லை நீ பொய் சொல்லுறன்னு சொல்லிடுவானோன்னு தானே என்னிடம் சொல்லல?
சரி என்கிட்ட தான் சொல்லல, உன் அப்பா அம்மாவிடமாவது இல்லையா என் அப்பா அம்மாவிடமாவது சொல்லியிருக்கலாமே?
மறைக்க கூடிய விடயமா இது.
இல்லை, இவனுக்கு கல்யாணம் ஆனதே ஞாபகம் இல்லை… இவனுக்கு எதுக்கு குழந்தை கலைத்துவிடலாமென்று நினைத்து சொல்லாமல் மறைத்தாயா?”
“மாமா.” இருளை கிழித்துக்கொண்டு வெளியில் வந்தது வருவின் உரக்கமான குரல்.
“என்ன சொன்னீங்க…” என்றவள் ஆக்ரோஷமாக அவனின் டீசர்ட் காலர் பகுதியை தன்னிரு கரம் கொண்டு பற்றியிருந்தாள்.
அவளின் கண்களில் மிளிர்ந்த கோபத்தை கண்டு யாதவே ஒரு நொடி அரண்டு விட்டான்.
‘இது தான் சொல்லிய வார்த்தையின் பிரதிபலிப்பு’ என்று அவனுக்கு புரியாமல் இல்லை.
அவளின் தற்போதைய கோபத்தை பயன்படுத்தி அவள் தன்மீது வைத்துள்ள காதலை அவள் வாய் வார்த்தையாக சொல்லக் கேட்டிட நினைத்தானோ!
“அப்புறம் எதுக்குடி சொல்லாம இருந்த?” அவளின் கோபத்திற்கு சற்றும் குறையாது அவனிடமும் கோபம் கனன்றது.
“உங்களை என் உயிருக்குள்ள வச்சிருக்க நானா உங்க உயிரை அழிக்க நினைப்பேன்” என்றவள் சற்று நேரத்திற்கு முன் காட்டிய கோபம் பிரம்மையோ எனும் வகையில் அவனை எண்ண வைக்குமாறு, தரையில் மண்டியிட்டு அமர்ந்தவள் கைகளில் முகம் புதைத்து அழுதாள்.
அவள் பேசிய வார்த்தையில் அவளின் மொத்த காதலையும் உணர்ந்தான். அவனின் கோபம் அந்நொடி எங்கோ பறந்து போனது. அவள் அழுவதை கூட பொருட்படுத்தாது அவள் சொல்லிய வார்த்தைகள் தந்த இதத்தை இதயத்தின் அடிவரை கொண்டு சென்று ஆழ்ந்து அனுபவித்தான்.
“உங்கக்கிட்ட சொல்லாம வேறு யாரிடமும் சொல்ல எனக்குத் தோணலை மாமா!
நாம அப்பா அம்மா ஆகப்போறோம் தெரிந்த நிமிஷம், எனக்குள்ள மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
உங்களுக்கு நம் காதல் நினைவில்லையென்றால் என்ன, அதற்கு சாட்சியா நம் குழந்தை இருக்கே! அதை சொல்லி உங்க காதலை மீண்டும் அனுபவிக்கணும் எவ்வளவு ஆசையா உங்கள பார்க்க வந்தேன் தெரியுமா?” என்று கேட்டவள் அன்று அவன் சொல்லிய வார்த்தைகளை இன்றும் நினைத்து மனதோடு மரித்துப்போனாள்.
அவளின் அழுகை கூடியது.
தன்னவளின் கதறல் கேட்டு ஆண்மகன் அவனே உள்ளுக்குள் ஆட்டம் கண்டான்.
அன்று அவன் வீசிய கூர் வார்த்தைகளை அச்சு மாறாமல் அப்படியே கூறினாள்.
“உங்களுக்கு சாப்பாடு கொடுத்திட்டு அப்படியே உங்ககிட்ட சொல்ல வேண்டுமென்றுதான் கையில் தட்டோடு வந்தேன்.
நீங்களும் எனக்கேற்றவாறு, சாப்பிட்ட உடன் தட்டினை எடுத்துக்கொண்டே செல் என்றதும். சொல்ல வந்தததை உங்களிடம் எப்படி சொல்வதென்று மனதிற்குள் உருப்போட்டுக்கொண்டிருந்த போது தான் நீங்க அந்த கேள்வியை கேட்டிங்க.
இன்னுமா நீயென்னை காதலிக்கிறாய்?
அதிலே நான் காணாமல் போய்விட்டேன்.
அடுத்து நீங்க பேசியதெல்லாம் நான் கனவிலும் கற்பனை செய்து பார்த்திடாத ஒன்று” என்று அதனை கூறினாள்.
“இப்போ உனக்கு வசதிதான் இல்லையா?
இல்லை நான் காதலித்தவள் என்னைவிட்டு போய்விட்டாள். இப்போ இவனை பார்த்துக்கொண்டால் தன்பக்கம் ஈசியா சாய்ந்திடுவான்னு தானே இந்த அக்கறை கவனிப்பெல்லாம்.”
அன்று அவன் சொல்லியபோது தெரியாத வலி இன்று அவள் சொல்லிக்காட்டும் போது அவனுக்குத் தெரிந்தது.
“என்கிட்டவே வந்து இன்னொரு பெண்ணை லவ் பன்றேன்னு சொல்றீங்க.
எனக்குத் தெரியும். நடந்த எதுவுமே தெரியாமல் நீங்க சொன்னதுன்னு, ஆனால் மூளை சொல்லுவதை மனம் ஏற்கவில்லையே!
அதன் பிறகும் என்னால் எப்படி மாமா சொல்லியிருக்க முடியும்” என்று கேட்டவளின் கண்ணீர் மட்டும் நிற்காது வழிந்து கொண்டு இருந்தது.
“மனசு முழுக்க உங்களை மட்டுமே வச்சிக்கிட்டு உங்க உதாசீனத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் தான் இங்கு வந்தேன். உங்களிடம் மறைக்கணும் இல்லை” என்றவள் அடுத்து என்ன விளக்கம் கொடுப்பதென்று தெரியாமல் முகம் உயர்த்தி அவன் முகம் பார்த்தாள்.
அவளுக்கு அருகில் மண்டியிட்டு அமர்ந்தவன்,
“சாரி” என்று ஒற்றையாகக் கூறி அவளின் கண்ணீரைத் துடைத்தான்.
“என்னை மன்னிச்சிட்டீங்களா மாமா?”
அவளின் கேள்விக்கு இல்லையென்றே அவன் தலை ஆடியது.
“இப்போ அழுது கொடுக்குற விளக்கத்தை, அன்றே நான் அவ்வாறு சொல்லியதும் என் சட்டையை பிடித்து…
“உன் குழந்தையை சுமக்குற நான் உன்னை கவனித்துக்கொள்ளாது உன்மீது அக்கறை காட்டாது வேறு யார் செய்வார்கள் என்று உரிமையா கேட்டிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன்” என அமைதியாகக் கூறினான்.
“நான் நிஜம் தொலைத்து உன்னை விலக்கி வைத்தேன். ஆனால் நீ… எல்லாம் தெரிந்தும் என்னிடமிருந்து விலகி நின்றாய்.”
யாதவ் சொல்லியது… அவள் நடு மண்டையில் ஓங்கி குட்டிய உணர்வு. இதயத்தின் மையத்தில் ஊசியை இறக்கிய வலி.
‘அவன் கேட்பதும் சரிதானே! என்ன இருந்தாலும் நீ என் கணவனென்று நான் நெருங்கியிருக்க வேண்டுமே!’ காலம் கடந்து சிந்தித்தாள்.
“நீ சொல்லாததற்கு என் உடல்நிலை காரணமென்று நீ சொல்லலாம். ஆனால் உண்மை காரணம் அதுவல்ல” என்றவன் அவளின் கலங்கிய விழிகளில் தன் கூர் விழிகளை கலந்து “காரணம்… நான் சொல்லட்டுமா?” என்றான்.
பதிலின்றிய அவளின் அமைதியே அவனை சொல்ல வைத்தது.
“நான் எல்லாம் மறந்த நிலையில் உன்னால் என்னை உன் யாதவாக பார்க்க முடியவில்லை. அந்த பழைய யாதுவை தான் உன் மனம் தேடுகிறது. இப்போதிருக்கும் இந்த யாதவை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.”
யாதவ் சொல்லியதில் அவள் தலை தானாக கவிழ்ந்தது. அவன் சொல்லுவதும் உண்மை தானே. இவனிடத்தில் அவளை கொள்ளை கொண்ட யாதவைத் தேடித்தானே உள்ளுக்குள் மருகினாள்.
“அவங்க, என் மாமா. எப்படியிருந்தாலும் எனக்கு வேணும் என்று அன்று நிகிலா விடயத்தில் சொல்ல முடிந்த உன்னால் இன்று என் மாமாக்கு என்னவாகியிருந்தாலும் எனக்கு வேணும் நீ சொல்லவில்லையே!” என்றவன் “இந்த கோபம் எனக்கு எப்போதும் போகாது” என்றான் திடமாக.
யாதவின் பேச்சுக்கள் மட்டுமே காதில் ஒலிக்க… இந்நொடி அவனிடம் ஒன்றை கவனிக்கத் தவறிவிட்டாள்.
கவனித்த அவனும், ஒரு வேகத்தில் தன்னை காட்டிக்கொடுத்திட்டாலும் அவளின் கருத்தில் பதியவில்லை என்பதை குறித்துக் கொண்டான்.
“காதலித்த மனதை எதிர்பார்க்கிறது தப்பில்லையே மாமா?”
தன் தவறு புரிந்தாலும் அவளால் இக்கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை.
“எதிர்பார்ப்பு வந்துவிட்டால் அங்கு காதல் செத்துப்போகும்.”
யாதவின் பதிலில் நெஞ்சம் விம்மி நின்றாள்.
“மாமா…”
“உனக்கு உன்னை நேசிக்கும் யாதவ் தான் வேணும் இல்லையா?” எனக் கேட்டவன், அவளை உற்று நோக்கி “நீ நேசிக்கத் துவங்கிய காலத்தில் உன்னை விட்டு அந்த யாதவ் விலகி தான் இருந்தான்” என்றதோடு, “நீ நேசித்த யாதவ் உனக்கு வேண்டாமென்றால்… உன்னை விலக்கி வைத்த இந்த யாதவிற்கு நீயும் வேண்டாம். போடி!” என்றான்.
“அவ்வளவு தானா மாமா?”
“இப்பவும் நான் நிஜம் மறந்திட்ட யாதவ் தான்.”
“எனக்கு நீங்க எப்படியிருந்தாலும் வேணும்.”
“இந்த வார்த்தை மூன்று வாரங்களுக்கு முன்பு உன்னிடமிருந்து வரவில்லையே!” அவனிடமிருந்தது என்ன ஏக்கமா, வருத்தமா, ஆற்றாமையா பிரித்தறிய முடியா நிலையில் அவள்.
யாதவும் வருவின் மீது கொண்டிருந்த காதலை உணர்ந்து கொண்டான். அதனால் தான் தன் நலனுக்காக என்றாலும் தன்னை தன்னிலையில் ஏற்காது விலகி வந்தவளை மன்னிக்க அவனால் இயலாது போனான்.
அழுது கொண்டிருப்பவளை தேற்ற சொல்லி மனம் அறிவுறுத்தினாலும் கைகளை கட்டிக்கொண்டு நின்றான்.
“சில காயங்களை காலம் அதுவாவே மாற்றும். அதுவரை காத்திருக்கலாம்.”
‘என்ன சொல்கிறான். அப்படியென்றால் பிரிந்திருக்கலாம் என்றா அர்த்தம். காயம் ஆறவில்லை என்றால். வாழ்வு முழுமைக்கும் பிரிவு தான் தீர்வா?’ மனதில் எழுந்த வினாவில் கணவனை ஏக்கமாக ஏறிட்டாள்.
“பனி அதிகமாகுது உள்ள போ!”
ஏக்கம் சுமந்த அவளின் முகம் அவனின் திடத்தை அசைப்பதை உணர்ந்தவன் அவளை உள்ளே செல்லக் கூறினான்.
“மாமா…”
“ஐ நீட் சம் ஸ்பேஸ்.”
அதற்குமேல் அவன் முன் நின்று அவனின் மனதை மேலும் காயப்படுத்த வேண்டாமென்று திரும்பி நடந்தாள்.
அவளின் கொலுசின் ஒலி அவனுள் பல நிகழ்வுகளை தட்டியெழுப்ப முயற்சித்தன. அப்போதுதான் ஒலியில் வரும் மாற்றத்தை அறிந்தவன்,
“ஒரு காலில் கொலுசு இல்லையா?” எனக் கேட்டிருந்தான் யாதவ்.
“இருக்கே” என்று குனிந்து கால்களை ஆராய்ந்தவள் ஒரு காலில் மட்டும் கொலுசு இருப்பதை பார்த்து,
“இன்னொரு கொலுசு” என்று தன் பின்னால் வந்த வழியை நோட்டமிட இருட்டில் ஒன்றும் தெரியவில்லை.
யாதவ் தன் கையிலிருந்த அலைபேசியை ஒளிரச் செய்து மொட்டை மாடி முழுக்கத் தேடியும் கொலுசில்லை.
அவனளித்த முதல் பரிசு… அந்த நாள் நிகழ்வும் பேச்சும் அவன் அவளுடைய காலில் கொலுசினை அணிவித்த தருணமும் கண் முன் தோன்றி அவளை இம்சித்தது.
அவளின் முகத்தையே பார்த்திருந்த யாதவிற்கும் ஏதோ புரிந்தும் புரியா நிலை. அதிகம் யோசிக்காது விட்டான்.
கொலுசு தொலைந்தது அவனே தொலைந்துவிடுவதைப் போல் மாயத் தோற்றம் மனதில் எழ யாதவ் திட்டினாலும் பரவாயில்லையென்று அவனை இடையோடு கட்டிக்கொண்டாள்.
“உங்களை விடமாட்டேன் மாமா” என்று விடாது அரற்றினாள்.
மனைவியின் உன்னை விடமாட்டேன் என்ற அவளின் அணைப்பிலும் வார்த்தையிலும் யாதவ் தடுமாறிப்போனான்.
*நிஜம் தேடி
நிழல் மாண்டு
உயிர் தீண்ட
கொண்ட காதல்
இதயத்தில்
நின் உயிர் கொண்டு
யுத்தம் செய்கிறதடி(டா)!*
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
38
+1
2
+1