Loading

இதயம் 24 : (என் சுவாசக்காற்றே)

பொழுது மங்கிய வேளை…

ஒருவரது அணைப்பில் மற்றொருவர்.

இன்டர்காம் ஒலியில் கண் பிரித்த யாதவ்… தன் மேல் சயனித்திருக்கும் மனைவியின் முகத்தில் விழுந்திருக்கும் முடிக்கற்றையை ஒதுக்கி நெற்றியில் வன்மையில்லா முத்தம் ஒன்று வைக்க… இதழ் விரித்து கன்னத்தை அவனது மார்பினிலேயே தேய்க்க, அவன் தான் தடுமாறி போனான்.

யாதவின் விழிகள் மனைவியின் மீதே ரசனையாய்.

“பார்த்தது போதும் யது… இன்டர்காம் ரிங்கிங்.” சொல்லியவள் அவனை மேலும் ஒட்டி படுத்தாள்.

“நீ பண்ணுறதை பார்த்தால்… எனக்கு வேறென்னவோ தோணுது” என்றவன் அர்த்தமாய் சிரிக்க… அவனின் முகத்தை தலை தூக்கி பார்த்தவள், அவனின் மீசை நுனியை பிடித்து இழுத்தாள்.

“ஹா… அய்யோ ராட்சசி வலிக்குது விடுடி” என்று அலறியவன் அப்படியே அவளின் இடையூடு கைவிட்டு அவளைத் தூக்கி சுழற்றி உட்கார வைத்து தானும் எழுந்து அமர்ந்தான்.

மீண்டும் இன்டர்காம் ஒலிக்க… வாயில் விரல் வைத்து அமைதியாக இருக்கும்படி சைகை செய்து… இன்டர்காமிற்கு செவி மடுத்தான்.

“யாது… என்னப்பா இன்னும் கீழ வரல, பாட்டி ஏதோ சடங்கு இருக்குன்னு சொல்லுறாங்க.” நிரலி சங்கடமாகக் கூறினார். மூன்று மணியளவில் அறைக்குள் சென்றவர்கள் ஆறு மணியாகியும் வெளியே வராததால், அனைத்தும் முறையாக நடக்க வேண்டுமே என்ற கவலை அவரிடம்.

“ஹெவி டயர்ட் மாம். சோ, வந்ததும் தூங்கிட்டோம். இன்டர்காம் சவுண்ட் கேட்டு தான் எழுந்தேன். உங்க மருமகள் இன்னும் தூங்கிட்டு தான் இருக்காள். டென் மினிட்ஸ், வந்துடுறோம் மாம்” என்றவன் அடுத்து அவர் பேசுவதற்குள் வைத்திருந்தான்.

அவன் சொல்லிய பொய்யினை வாய் பிளந்து அதிர்ச்சியாக பார்த்திருந்த வருவை அப்படியே தூக்கிக்கொண்டு குளியலறைக்குள் புகுந்து ஷவருக்கு அடியில் நிற்க வைத்தவன், தண்ணீரை திறந்துவிட… மேனியில் நீர் பட்டதும் சுயம் மீண்டு துள்ளி விலகினாள்.

“அச்சோ மாமா… என்னதிது?” என்று இருவரின் நிலை கண்டு சிணுங்கியவள் அவனுள்ளே தன்னை மறைத்தாள்.

“மாம் சீக்கிரம் வர சொன்னாங்கடா… ரெண்டு பேரும் தனி தனியா குளிச்சால் டைம் வேஸ்ட் தானே” என்றவன் “ஐயா ஐடியா எப்படி?” என்று கேட்க… அவனை பார்த்து முகம் சுளித்தாள்.

“நீயென்ன பண்ணாலும் நான் வெளியே போக மாட்டேன்” என்றவன் அவன் நிலையில் சாதித்த பின்னரே அவளை விட்டான்.

அவன் விட்டதும் போதுமென்று வேக வேகமாக ட்ரெசிங் அறைக்குள் நுழைந்தவள், ஏற்கனவே அவளது ஆடைகள் அங்கு இடம்பெயர்ந்திருந்ததால் கைக்கு கிட்டிய புடவை ஒன்றை கட்டிக்கொண்டு… ஈர கூந்தலை அவசரமாக ட்ரையரில் காயவைத்து, தளர பின்னலிட்டு அறையை விட்டு ஓடினாள்.

மனைவியின் அவசர செயல்களை ரசித்தவன் தானும் கிளம்பி, கையில் எதையோ எடுத்துக்கொண்டு வேகமாக கீழேச் சென்றான்.

அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க, பொதுவாக சாரி ஒன்றை சொல்லியவள் ஆதியின் அருகில் வந்து அமர…

“புடவையை மாத்திடியா?” என்று கேள்வி கேட்டார் செல்வி.

“டயர்டா இருந்துச்சு அப்பத்தா. அதான் குளிச்சேன்” என்று யாதவ் சொல்லிய அதே காரணத்தை அவளும் சொல்ல, கல்பனாவின் பார்வை வருவின் நெற்றியில் பதிந்தது.

“கல்யாணம் ஆன அன்னைக்கே என்னடி இது?” என்று கோவமாக அவர் கேட்டுக்கொண்டிருக்க அருகில் வந்தான் யாதவ்.

அவனும் வீட்டில் இருப்பதற்கு ஏற்றவாறு உடை அணிந்திருந்தான்.

“என்னடா நீயும் பட்டு வேட்டி சட்டையை மாத்திட்ட” என்று செல்வி சத்தமாக வினவ,

“வரு சொல்லிய அதே ரீசன் தான் அம்மத்தா” என்றவன், “அத்தை கொஞ்சம் தள்ளுங்க” என்று வருவிற்கு முன் கோபமாக இருந்த கல்பனாவை நகர செய்தவன்…

“பொட்டு வைக்க மறந்துட்டடா… அதான் அத்தை கத்துறாங்க” என்று சொல்லி வருவின் நெற்றியில் தான் கையோடு கொண்டு வந்திருந்த பொட்டினை சரியாக வைத்துவிட்டு, அவளை பார்த்து கண்ணடிக்க… அவளோ இதழ் குவித்து முத்தத்தை பறக்கவிட்டாள்.

“நாங்க எதுவும் பார்க்கலப்பா” என்று சூர்யா சொல்ல… “நீங்க பார்த்தாலும் எங்களுக்கு கவலை இல்லை மாமா. உங்க பொண்ணும் மாப்பிள்ளையும் சந்தோஷமா இருக்கிறதை பார்த்தால் உங்களுக்கும் சந்தோஷம் தானே” என்றவன் வருவின் அருகிலிருந்த ஆதியை கைபிடித்து எழுப்பினான்.

அவன் ஏதோ காரணமாக எழுப்புகிறானென்று எழுந்து நகர… இப்போது தந்தை அமர்ந்திருந்த இடத்தில் மகன்.

“உனக்கு வேற இடமே இல்லையா யாது. அப்பாவை எழுப்பிட்டு உட்காருர” என்று வேலு அதட்டினார்.

“அதான் அவருக்கு அம்மா இருக்காங்கலே. அவங்க பக்கத்துல உட்காருறது. அதென்ன எப்போ பாரு என் பொண்டாட்டியையே கொஞ்சிட்டு” என்று ஆதியை முறைத்தான் யாதவ்.

“உனக்கு முன்னாடியே குட்டிம்மாவை என் கையில் தாங்கினேன்டா நான். என்கிட்டவே போட்டியா?” என்று ஆதி புன்னகைக்க…

“நான் நெஞ்சுல தாங்குற டாட். ஷீ இஸ் மைன். ஸ்ட்ரிக்ட்லி மைன். மை சோல் பிராப்பர்ட்டி. சோ, எனக்கு பிறகு தான் எல்லோரும்” என்றான் யாதவ்.

வருவிற்கு அவனின் வார்த்தைகள் சில்லென்று இதயம் நனைத்தது.

மற்றவர்களுக்கு அவனது விளையாட்டைவிட வருவின் மீது அவன் கொண்ட காதல் தான் தெரிந்தது.

வந்ததிலிருந்து தனது அன்னை தன்னை குறுகுறுவென்று பார்ப்பதை உணர்ந்த யாதவ்,

“என்ன மாம் ஏதோ சடங்குன்னு சொன்னீங்க… என்ன பண்ணனும்?” எனக் கேட்டான்.

நிரலி பதில் சொல்லாது பூஜை அறைக்குள் சென்றிட…

“நீயும் வருவும் போங்கப்பா” என்று செல்வி இருவரையும் சாமி கும்பிட அனுப்பி வைத்தார்.

“மாம் என்ன எதுவுமே பேசாமல் வந்துட்டீங்க?”

“என்னப்பா பேசணும். பொறுமையா இருக்கவங்களுக்குத்தான் சடங்கு சம்பிரதாயமெல்லாம்” என்ற நிரலி “அத்தை” என்று காரணம் சொல்ல வந்த வருவிடம் தீப்பெட்டியை கொடுத்து விளக்கேற்ற சொல்ல அவளும் செய்தாள்.

“எப்படி மாம் கண்டுபிடிச்சீங்க?”

பிள்ளையிடம் தாய் அறியா சூல் உண்டா? என்ன?

வருவின் கழுத்தை காண்பித்தார்.

அவ்வளவுதான் இருவருமே அதிர்ந்தனர்.

“மாம்…”

“அத்தை…”

வருவின் கழுத்து மச்சத்தில் யாதவின் பல் தடம். லேசாக சிவந்திருந்தது.

இருவரும் திருதிருவென விழிக்க, நிரலி அடக்கமாட்டது சிரித்துவிட்டார். இப்போது வருவிடம் நாணம் ஒட்டிக்கொண்டது.

“அப்போ மாம் உங்களுக்கு கோபமில்லையா?” என்று அப்பாவியாகக் கேட்ட மகனின் கன்னம் வழித்த நிரலி…

“பசங்க சந்தோஷத்தைவிட வேற என்ன இருக்கப்போகுது யாது. என்ன பெரியவங்க சொல்லுற வர கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம்” என்றார்.

“ஐ லவ் ஹெர் மோர் மாம். இவ பக்கத்துல இருந்தாலே ஐ கான்ட்… ஐ கான்ட் கன்ட்ரோல் மைசெல்ஃப் மாம்” என்றவன், “ஐ வில் நெவர் ஆஸ்க் அப்பாலஜிஸ் மாம். பிகாஸ் ஷீ இஸ் மை வைஃப்” என்று அழுத்தமாக சொல்லிய மகன் மருமகளிடம் கொண்ட காதலை சற்று கர்வமாகவே எண்ணினார்.

“மொத்தமா அவள் காலுல விழுந்துட்ட சொல்லு.” நிரலி வேண்டுமென்றே கேலி பேச… வரு சிணுங்கினாள்.

“எஸ் அஃப்கோர்ஸ் மாம்” என்று அவர் சொல்லியதை உண்மையென கூறினான்.

“சரி சரி சாமி கும்பிட்டு தாத்தா அம்மத்தா கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோங்க” என்ற நிரலி வருவின் பின்னலை எடுத்து அவளின் மச்சம் மறையுமாறு முன்னால் விட்டார்.

அதன் பின்னர் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு காதல் தான். காதல் காதல் காதல் மட்டுமே அவர்களிடம் ஆட்சி செய்தது.

இவ்வுலகிலேயே அவர்களைப்போல் யாரும் காதலிக்க முடியாதென்று, காதலில் கரைகண்ட ஆதியே தன்னுடைய பேபியிடம் சொல்லி சிலாகிக்கும் அளவிற்கு அவர்களின் வாழ்வு மகிழ்வாக சென்றது.

வரவிருக்கும் துன்பத்திற்காகத்தான் இவ்வளவு இன்பத்தையும் இறைவன் அக்காதலர்களுக்கு வாரிவழங்கினாரோ!

திருமணம் முடிந்து இருபதாவது நாள்.

அன்று இருவரும் தேனிலவிற்கு மாலத்தீவு சென்று திரும்பியிருந்தனர்.

இருவரின் முகத்தில் பரவி விரவியிருந்த பொலிவே இருவரின் சந்தோஷத்தை பறைசாற்றியது.

யாதவ் தன் மனைவியை எப்படியெல்லாம் தாங்க முடியுமோ அப்படி தாங்கினான். மற்றவர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு அவர்களின் வாழ்வு இருந்தது.

“உங்களை மாதிரி லவ் பண்ணனும் டா மச்சி” என்று விஷாலே ஒருமுறை அவர்களை பார்த்து கண் வைத்திருந்தான்.

காலை ஒன்பது மணிக்கு வருவையையும் கூட்டிக்கொண்டு கிளம்புபவன், அவளை கலைலயாவில் விட்டுவிட்டு மருத்துவமனைக்கு சென்றிடுவான்.

மதியம் வருவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வருபவன், அவளுடன் சேர்ந்து என்பதைவிட… அவளுக்கு ஊட்டிவிட்டபடி அவனும் சாப்பிட்டு, சிறு ஓய்விற்கு பின் மருத்துவமனை செல்பவன் சரியாக எட்டு மணிக்கெல்லாம் வீட்டில் தன் மனைவியின் மடியில் தலை சாய்த்திருப்பான்.

அன்றைய கதைகளை அவளை சொல்ல வைத்து அவனும் சொல்லி… காதலில் மூழ்கி விடியும் தருவாயில் ஒருவரது பிடியில் ஒருவர் அடங்கி உறக்கம் கொள்வர்.

வள்ளியக்கா இருக்கிறார் என்பதைக்கூட பொருட்படுத்தாது அவனுக்குத் தோன்றினால் அடுத்த நொடி வருவிற்கு முத்தமிட்டிருப்பான். அவனின் அதிரடியான ஆர்பாட்டமான காதலில் மங்கையவள் தான் திணறிப்போவாள்.

தந்தையைப்போல் தன் மனைவியை காதலிக்க வேண்டுமென ஆசைகொண்டவன் அவரைவிட காதலில் பல படிகள் முன் சென்றிருந்தான்.

மனைவியைத் தங்கத் தட்டில் வைத்து தாங்கும் கணவனாக யாது இருந்தான்.

“யது” என்னும் ஒற்றை அழைப்பு போதும்… அவனின் செல்லம்மாவின் பாதத்தில் சரணடைந்திடுவான்.

அவனின் காதலுக்காக ஏங்கியவளுக்கு தங்கு தடையின்றி கொள்ளை கொள்ளையாய் கொட்டி கொடுத்திட்டான்.

மனைவியின் மீது காதல் கொண்ட அதே நேரத்தில் தன் தொழிலிலும் கவனமாக இருந்தான்.

இரவில் மனைவியிடம் சேயாய் அடங்குபவன் பகலில் தாயாய் தாங்கினான்.

நாட்கள் அவர்களின் காதலில் றெக்கைக்கட்டி பறந்தது. திருமணமாகி இரண்டாம் மாத முடிவில் இருந்தனர்.

“செல்லம்மா பத்திரமா இருக்கணும். ஒழுங்கா சாப்பிடணும். கிளாஸ் போயிட்டு சீக்கிரம் வந்திடனும். ஐஸ்கிரீம் சாப்பிடக் கூடாது. லேட் நைட் முழிச்சிருக்கக் கூடாது” என்று யாதவ் வருவை தன் மடியில் அமர்த்தி சிறு பிள்ளைக்கு சொல்லுவதைப்போல் சொல்லுவதை ஆதியும் நிரலியும் சின்ன சிரிப்புடன் பார்த்திருந்தனர்.

வருவின் முகம் தெளிவில்லாமல் இருந்தது. அவனது முகத்தையே இமைக்காது பார்த்தபடி இருந்தாள்.

“செல்லம்மா… என்னடா?” என்றவன் அவளின் நெற்றி முட்டினான்.

“நாங்க பார்த்துக்குறோம் நீ கிளம்பு யாது உனக்கு டைம் ஆகுது” என்றார் ஆதி.

“செல்லம்மா தனியா இருந்தப்ப தானே” என்று யாது மீண்டும் ஆரம்பிக்க…

“அப்படியே அமேசான் காட்டுக்குள்ள விட்டுட்டு போற பில்டப் கொடுக்குறான் பாருங்க” என்று ஆதியிடம் முறையிட்ட நிரலி, “உனக்குத்தான் அவளைவிட்டு போக மனசில்லைன்னு நினைக்குறேன்” என்றார்.

“வேண்டாமென்றால் போகாதே யாது!” ஆதிக்கு என்னத் தோன்றியதோ மகனை தடுக்க பார்த்தார். கொஞ்சம் அழுத்தமாக சொல்லி அவனின் பயணத்தை தடை செய்திருக்க வேண்டுமோ! விதி வலியது.

“நீ ஏன் இப்படியிருக்க?” என்ற யாதவ் தன்னுடைய பெற்றோரை பார்க்க… அவர்கள் யாதுவின் சிறு பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றனர்.

“டேய்… என்னடாம்மா? ஜஸ்ட் திரீ டேஸ்’டாம்மா. கான்ஃபிரன்ஸ் முடிஞ்சதும் கிளம்பிடுவேன்” என்று அவன் எவ்வளவோ பொறுமையாக சொல்லியும் அவள் இதழ் திறக்கவில்லை.

“நீ இப்படியிருந்தால் நானெப்படி போக”   என்றவன் அப்படியே இருக்கையின் பின்னால் தலை சாய்த்து கண்களை மூடிட, அவனின் நெஞ்சில் முத்தமிட்டவள்… “ரொம்ப வெயிட் பண்ண வச்சிடாத மாமா” என்றாள்.

அவன் காக்க வைக்கப்போகிறான் என்பதை முன்கூட்டியே அறிந்தாளோ!

அவளின் கன்னம் தாண்டி கண்ணீர் உருண்டோடியது.

தன் இதழ் கொண்டு அவளின் உப்புநீர் சுவைத்தவன், இதழில் இளைப்பாறினான்.

தொடங்கியது அவனாக இருந்தாலும், முடிவென்பதே இல்லை என்பதைப்போல் இதழ் யுத்தத்தை தனதாக்கிக் கொண்டு வரு நீடித்திருக்க… அவள் விடுவதாக இல்லை. யாதவ் தான் வலுக்காட்டயமாக பிரியும்படி ஆனது.

“இவ்வளவு எமோஷனல் எதுக்குடா?” அவளைவிட அவளைவிட்டு மூன்று நாட்கள் இருப்பதை நினைத்தாலே அவனுக்கு மனம் கனத்தது.

இருப்பினும் ஏற்கனவே தான் செல்வதை நினைத்து கலங்கிக் கொண்டிருப்பவளிடம் தன் வருத்தத்தைக் காட்டிட அவன் விரும்பவில்லை.

அவன் அவ்வாறு கேட்டதும் அவளின் கண்கள் உடைப்பெடுக்க…

“டேய்… இதென்ன குழந்தைத்தனமா. நானென்ன திரும்பி வர முடியாத இடத்திற்கா போகப்போறேன்.” விரைந்து அவனின் வாயினை கரம் கொண்டு மூடியவள், “போயிட்டு வந்திடு மாமா” என்று சுரத்தே இல்லாது கூறினாள்.

“உன்கிட்ட வராமல் எங்கடி போகப்போறேன்?” என்றவன் அவளை எழுப்பி தானும் எழுந்து ஒருமுறை இறுக்கமாக அணைத்து விடுத்தான்.

இருவரும் வெளியில் வரும்போது அவனின் பயணம் தொடங்க கார் தயார் நிலையில் இருந்தது.

“உன் சூட்கேஸ் பேக் சீட்டில் இருக்கு யாது… வாட்டர் பாட்டில் வச்சிருக்கேன்” என்று நிரலி சொல்லியதும், வருவிடமிருந்து முயன்று தன் கையை விடுவித்து காரில் ஏறினான்.

“பை மாம்… பை டாட்” என்றவன், வருவை அருகே அழைத்தான்.

அவன் ஏதோ சொல்லப்போகிறானென்று அவனின் முகத்திற்கு நேராக வரு குனிய, அவளின் கன்னத்தில் பற்கள் பதிய அழுந்த கடித்தவன்… “லவ் யூ செல்லம்மா” என அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் கூறி… “பை டி பொண்டாட்டி” என்று சத்தமாகக் கூறினான்.

வருவை இரண்டடி தள்ளி நிற்கக் கூறியவன், அவள் செய்ததும்… காரினை இயக்கி, “என் பொண்டாட்டியை பத்திரமா பார்த்துக்கோங்கா மாம்” என்று சொல்லி கேட்டினைத் தாண்டி பாதையில் சீறினான்.

மூன்று நாட்கள் பெங்களூருக்கு கான்பிரன்ஸ் விடயமாகச் செல்கிறான். அவன் போகப்போறேன் என்று சொல்லியதிலிருந்தே அவள் அப்படித்தான் இருக்கின்றாள். சரியாகிவிடுமென்று, அவளை சாப்பிட வைத்து அறைக்குள் அனுப்பினார் நிரலி.

அறைக்குள் வந்தவள் அவளவனின் புகைப்படத்தை எடுத்து கட்டிக்கொண்டு படுத்துவிட்டாள்.

யாது பெங்களூர் சென்று அழைப்பு விடுக்கும் வரை அவளின் நிலை மாறவில்லை.

“அம் ரீச்சிடு” என்று அவன் தகவல் அனுப்பிய மறுநொடி அவள் பார்த்துவிட்டதற்கான புளூ டிக் காட்ட… யாது வருவை அழைத்திருந்தான் வீடியோ கால் மூலமாக.

கட் செய்தவள் அவனுக்கு தகவல் அனுப்பினாள்.

“உங்களை பார்த்தாலோ உங்க குரல் கேட்டாலோ நானும் கிளம்பி அங்கு வந்திடுவேன்.”

படித்தவனின் மனம் அப்போதே அவள் வேண்டுமென்று தவித்தது. வந்த வேலை நினைவு கொண்டவன் கட்டுப்படுத்தினான்.

“ஒகேடி… அப்போ திரீ டேஸ் திரும்ப லவ்வர்ஸா லவ் பண்ணுவோம்.”

அவன் அனுப்ப…

“எப்படி?” என்று அவள் பதில் கேள்வி அனுப்பினாள்.

“இப்படித்தான்” என்று அவன் இருவரின் சாட்டினை சுட்டிக்கூற அவளும் சம்மதித்தாள்.

மூன்று நாளும் இருவரும் புலனம் வழியே ஒவ்வொன்றையும் பகிர்ந்து கொண்டனர். மீண்டும் காதலர்களாக காதலில் திளைத்தனர்.

மூன்றாம் நாள் இறுதி நாள் என்பதால் கான்பிரன்ஸ் முடிய இரவு வெகு நேரமாகியது. முடிந்த பின்னர் பார்ட்டி என்று அவனது மருத்துவத்துறை நண்பர்கள் பிடித்துக்கொள்ள மறுக்க முடியாது அதில் பங்கேற்றவன் யாருடனும் ஒட்ட முடியாது தன்னுடைய செல்லம்மா தன்னை கட்டி இழுப்பதை உணர்ந்தவன் நள்ளிரவில் கிளம்பினான்.

கிளம்பியதும் வருவிற்கு தகவல் அனுப்பினான்.

“வில் கம் சூன் டி பொண்டாட்டி. அன்டில் தென் வெய்ட் பார் மீ. லவ் யூ டி செல்லம்மா❤️.”

உறக்கத்தில் தன்னவனின் நினைவில் இருந்தவள், அவன் அனுப்பிய தகவலின் சத்தம் கேட்டு திறந்து பார்த்தவள்…

“போடா! மிஸ் யூ லாட்” என்று அனுப்பிவிட்டு மீண்டும் உறக்கத்தின் பிடியில் சென்றவள்… அதிர்ந்து எழுந்தாள்.

உடல் முழுக்க வியர்வையில் குளித்திருந்தது. சொல்ல முடியாத வலி ஒன்று உள்ளுக்குள் ஊடுருவுவதை உணர்ந்தவள், யாதுவிற்கு அழைக்க… அழைப்பு செல்லவில்லை.

வருவிற்கு பயம் தொற்றிக்கொண்டது.

சுவாசம் தடைப்படுவது போல் இருந்தது அவளுக்கு. அவளின் சுவாசகாற்றான அவளவனுக்கு ஏதோ என்று மனம் அறிவுறுத்தியது.

வேகமாக ஆதியின் அறை நோக்கி சென்றவள்… கதவினை தட்டினாள். இந்நேரத்தில் அவளின் கலங்கியத் தோற்றம் கண்டு பயந்த ஆதி…

“என்னம்மா?” என்று வினவினார்.

“மாமா… மா..மா…” என்று ஜெபம் போல் அதையே சொல்லிக் கொண்டிருந்தவள் மயங்கி சரிய… என்ன செய்வதென்று தெரியாது தடுமாறினார்.

வருவை கைகளில் தூக்கியவர், வரவேற்பறை நீள் இருக்கையில் கிடத்த, நிரலி வருவின் முகத்தில் தண்ணீர் தெளித்தார்.

வருவிடம் எவ்வித அசைவுமில்லை.

அந்நேரத்தில் ஸ்வேதாவிற்கு அழைத்து  விடயத்தைக்கூற… விரைந்து வந்தவர், பரிசோதனை செய்து ஊசியின் மூலம் மருந்து ஒன்றை செலுத்த ஒரு மணி நேரத்தில் கண் விழித்தாள் வருணவி.

வருணவி கண்கள் திறக்க… யாதவ்  கண்கள் மூடினான்.

*உன்னைத்தொட்டு
மீண்ட காற்று…
என்னை பரிட்சிக்கும் வரை,
என்னுயிர் உனதடி!*

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
34
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்