இதயம் 2 : (காதலின் அணைப்பு கண்ணீர்)
ஆதி வீட்டிற்கு வந்த போது நிரலி வரவேற்பறை நீள் இருக்கையில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தாள்.
அவர்களின் காதலுக்கு சாட்சியாக முதலில் உருவெடுத்த மூத்த பெண் மகவு ஆதினி முகத்தில் கலக்கம் சுமந்து அன்னையையே பார்த்தவாறு இருந்தாள்.
தந்தையை கண்டதும்…
“மாம்…”
ஆதினியின் அழைப்பு நிரலியை தீண்டவே இல்லை.
அன்னையின் தோளை தொட்டு ஆதினி உலுக்க… சுயம் மீண்ட நிரலி மலங்க மலங்க விழித்தார்.
எப்போது கணவர் தன்னருகில் வந்தமர்ந்தார் என்ற நினைவே நிரலிக்கு இல்லை.
“தேவா… யாதவ்?”
வாழ்வில் முதல் முறை மகனின் வருத்தத்தையும், கோபத்தையும் ஒருங்கே காண்கிறார். அதனால் எழுந்த அதிர்ச்சியே நிரலியின் இந்நிலைக்கு காரணம்.
ஆதியை போல் யாதவின் கண்ணீரை கண்டிருந்தால் எந்நிலைக்குச் சென்றிருப்பாரோ?
மனதில் ஏற்பட்ட ரணத்தின் அதீத சோர்வால் உறங்கிக் கொண்டிருந்த ஆதினிக்கு வெகு தொலைவில் ஏதேதோ சத்தம் கேட்டு பெரும் சிரமத்துடன் எழுந்து அறையிலிருந்து வெளி வந்தவள் கண்டது வேக எட்டுக்களுடன் வீட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்த யாதவைத் தான்.
அப்போது கீழிறங்கி வந்த நிரலி பணிப்பெண்ணிடம் யாதவின் அறையை சுத்தம் செய்ய சொல்லிவிட்டு இருக்கையில் தொப்பென்று அமர்ந்தவள் மகனின் நிலையை எண்ணியவாறு மனதால் எங்கோ சென்றுவிட்டார்.
அதிகம் உணர்ச்சிவசப்படும் தருணங்களில் மட்டுமே, அது கோபம், அழுகை, மகிழ்வு இப்படி போன்ற தருணங்களில் மட்டுமே நிரலி ஆதியை பெயர் சொல்லி தேவா என்றழைப்பாள்.
இப்போது அவள் சொல்லிய தேவா என்ற விளிப்பே மனதால் மகனை நினைத்து மனைவி கொண்டிருக்கும் கலக்கம் ஆதிக்கு புரிந்தது.
“வள்ளி அக்கா.”
சுவர் கடிகாரத்தில் மணியை பார்த்துவிட்டு, கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக அவர்கள் வீட்டில் சமையல் வேலை செய்யும் வள்ளியை அழைத்தான்.
அவர் வந்ததும்,
“குட்டிம்மா இன்னும் வரலயாக்கா?” என்று தன் மருமகளை கேட்டார்.
“வரு பாப்பா இன்னும் வரல தம்பி…” என்று வள்ளியக்கா சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“அவ வர லேட்டாகும் கால் பண்ணா(ள்) டாட்” என்று ஆதினி பதில் அளித்தாள்.
“ம்… எனக்கும் கால் செய்து சொன்னாள். நான் தான் மறந்துட்டேன்” என்ற ஆதி
“ஆதும்மா பசி தாங்கமாட்டாள். அவளை சாப்பிட வையுங்கக்கா” என்ற வள்ளியிடம் சொல்லி, போகுமாறு மகளிடம் கண் காட்டினார்.
‘தந்தை தாயிடம் தனித்து பேசிட விரும்புகிறார்’ என்பதை உணர்ந்த ஆதினியும் தாய் தந்தை இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தபடி உணவு மேசை பகுதிக்குச் சென்றாள்.
மகள் சென்று உணவு தட்டில் கை வைக்கும் வரை ஆதினியையே பார்த்திருந்த ஆதி, மனைவியின் மீது பார்வையை பதித்து அவரின் கரத்தினை தன் கரங்களுக்குள் பொத்தி வைத்தபடி பேசினார்.
“யாது லவ் தான் காரணமா மாமா?”
ஏற்கனவே நிரலி யூகித்தது தான். ஆனால் அதனை கேட்பதற்குள் மனதோடு பெரிதும் போராடிவிட்டார். காதலின் வலி அவருக்கும் தெரியுமல்லாவா! இப்போது அந்த வலியை அனுபவித்துக் கொண்டிருக்கும் மகனின் மனம் எத்தகைய ரணத்தை அனுபவிக்கும் என்று ஒரு தாயாகக் கவலைக் கொண்டார்.
மனைவியின் கேள்விக்கு ஆமென்று தலையசைத்த ஆதி, மகனின் திடத்தில், தான் கண்டு கொண்டதை சொல்லி…
“எல்லாவற்றையும் நான் சரி செய்கிறேன் பேபி” என்று நம்பிக்கை அளித்தார்.
“எனக்கு சுத்தமா புரியலங்க… நம்ம யாதவ் எப்படிங்க இதில் தெளிவில்லாமல்…”
காதலில் திளைக்கும் தங்கள் மகன் காதல் எதுவென்றே அறியாது இருப்பதில் சொல்ல வந்ததை முடிக்காது பேச்சினை நிறுத்தினார்.
“அவனுக்கு ஏற்ற மனம் எதுவென்று அறியும் போது உண்மையான காதலை அவன் உணர்வான் பேபி” என்ற ஆதி மேலும் பல விடயங்கள் பேசி மனைவியின் எண்ணவோட்டத்தை மாற்றிய பின்னரே தங்கள் அறைக்குச் சென்று ரெஃபிரஷ் செய்து வந்தான்.
ஆதி உணவு உண்ண செல்லும் வரையிலுமே ஆதினி உணவினை அளந்தவளாக அமர்ந்திருந்தாள்.
“என்னடா இன்னும் சாப்பிடலையா?”
மகளின் தலையில் வருடியவராக ஆதி வினவ,
“இப்போ மாம் ஓகேவா டாட்” என்று அவரின் கேள்விக்கு பதில் அளிக்காது தன் அன்னையின் நலன் வேண்டினாள்.
“எனக்கு என்னடி… நான் நல்லாத்தான் இருக்கேன்” என்று அவர்களுக்கு அருகில் வந்த நிரலி ஆதிக்கு ஒரு தட்டினை எடுத்து உணவை வைக்க, ஆதி மகளுக்கு ஊட்டிவிடத் துவங்கினார்.
“யாது பாவம்ப்பா?”
மனதிலிருக்கும் காதலைக்கூட சொல்ல முடியாத வலியோடு இருக்கும் ஆதினிக்கு தமையனின் காதல் பிரிவு எத்தகைய ரணத்தை கொடுக்குமென்று தெரிந்து தான் இருந்தது.
அத்தோடு அக்குடும்பத்தின் ஒட்டு மொத்த சந்தோஷமாக இருப்பவனின் வேதனையை அவர்களால் உணர முடிந்தது.
“ஹீ வில் பீ ஆல்ரைட் டா, நீ அவனை நினைத்து ஃபீல் பண்ணாத” என்று மகளுக்கு உணவு வழங்கிக்கொண்டே ஆறுதல் படுத்திக் கொண்டிருந்த ஆதிக்கும், அவர்களின் அருகில் நின்றிருந்த நிரலிக்கும் யாதவ் இதிலிருந்து மீண்டு வருவது எப்போதென்று சற்று கலக்கமாகத்தான் இருந்தது.
அந்நேரம் துள்ளிக்கொண்டு வீட்டிற்குள் ஓடிவந்த வருணவி, மூவரும் உணவு கூடத்தில் இருப்பதைக் கண்டு அங்கு சென்றாள்.
வருணவி… ஆதியின் அக்கா மகன் அதாவது நிரலியின் சித்தி மகன் சூர்யாவின் ஒரே மகள்.
வருணவிக்கு நடனத்தில் சிறு வயது முதலே அதீத விருப்பம். அவளின் அன்னை கல்பனா மறுத்த போதும், சூர்யாவிற்கு சிறு தயக்கம் இருப்பதையும் அறிந்தவள் தனக்கு ஆதரவாக அழைத்தது அவளின் விருப்பமான மாமன் ஆதியைத் தான்.
ஆதியின் பேச்சிற்கு அவர்கள் குடும்பத்தில் என்றுமே மறுப்பு இருந்ததில்லை.
ஆனால் சூர்யா இட்ட ஒரே நிபந்தனை,
“அவள் முதலில் படிப்பை முடிக்கட்டும். அதன் பிறகு டான்ஸ் பாட்டுன்னு எது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளட்டும்” என்று சொல்ல வருணவிக்கு இப்போவாவது ஒப்புக் கொண்டாரே என்று நிம்மதியாகத்தான் இருந்தது.
ஆனால் எப்போதடா டிகிரியை முடித்து கையில் வாங்குவோம்… காலில் சலங்கையை கட்டுவோம் என்று காத்திருந்தவள் இளநிலை படிப்பை முடித்ததும் தன்னுடைய கிராமத்தை விட்டு ஆதியின் வீட்டிற்கு ஓடோடி வந்துவிட்டாள்.
நடனத்தில் அனைத்தையும் கற்றுக்கொள்ள மிகுந்த விருப்பம். ஆனால் அவள் முதலில் தேர்ந்தெடுத்தது பரதம். இப்போது அரங்கேற்றம் செய்யும் நிலையில் இருக்கின்றாள்.
அருகில் நெருங்கும் போதே அவர்களுக்குள் ஏதோ சரியில்லை என்று நொடியில் கண்டு கொண்டாள்.
ஆதினியின் காதல் வரு அறிந்தது தான். அதனால் அவள் எப்போதும் சுருங்கிய முகத்துடன் இருப்பது வருவிற்கு தெரிந்தது தான். ஆனால் இன்று ஆதி மற்றும் நிரலியின் முகமும் சரியில்லை என்பதை பார்த்ததும் புரிந்து கொண்டவளுக்கு காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளுவதற்கு முன் அவர்களின் மனநிலையை மாற்ற வேண்டுமென எண்ணினாள். அதற்கு தக்கவாறு நடந்தும் கொண்டாள்.
“ஹாய் தேவா” என்ற உற்சாகக் குரலோடு ஆதியின் பின்னிருந்து அவனின் கழுத்தைக் கட்டிக்கொண்டவள்,
“என்ன பேபி, தேவா இன்னைக்கு ஐ லவ் யூ சொல்லலையா?” எனக் கேட்டு நிரலியை வம்பிற்கு இழுத்தாள்.
“ஆமாண்டி ஆமாம். ஏன் நீ சொல்லப்போறீயா?”
“சொல்லிடலாமே” என்ற வரு “லவ் யூ தேவா” எனக்கூறி ஆதியின் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு நிரலியை பார்த்து கண்ணடித்தாள்.
வருவின் செயலில் ஆதியும் ஆதினியும் வாய்விட்டு சிரிக்க…
“அடிக் கழுதை” என்ற நிரலி வருவை அடிக்க கை ஓங்க… வரு மீண்டும் ஆதியின் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு ஓட, அவளைத் துரத்திக்கொண்டு ஓடினாள் நிரலி.
அத்தையும் மருமகளும் ஓடிபிடித்து விளையாடுவதை பார்த்த ஆதிக்கு… முதன் முதலாக பூக்குவியலாக வருவை கையிலேந்திய நொடி கண் முன் வந்து போனது.
“தந்தை இருக்கும்போது நானெப்படி” என்று ஆதி எவ்வளவோ மறுத்தும் “என் மகளை நீங்க தான் மாமா முதலில் கையில் வாங்க வேண்டும்” என்று சூர்யா பிடிவாதமாக சொல்லிவிட, சிசுவை கையிலேந்திட அவனுக்கு கசக்குமா என்ன? அத்தோடு அது அவனின் சூர்யாவின் மகவன்றோ! ஆனந்தமாகவே செவிலியின் கையிலிருந்த குழந்தையை தன் கையில் வாங்கினான்.
ஆதினியை வாங்கிய போதிருந்த அதே உணர்வு. தேகம் சிலிர்த்தது.
“என்ன இருந்தாலும் வரு உங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல் இல்லையாப்பா?”
ஆதினியிடம் அதில் சிறதேனும் கூட பொறாமை இல்லை. சோகம் மீள முடியாத சூழ்நிலையில் கூட அவர்கள் அதை மறந்து சிரிக்க காரணம் அவளல்லவா!
“எனக்கு நீயும் வருவும் ஒன்னு தான்டா!”
ஆதுரமாகக் கூறியவனின் பார்வை புன்னகையுடன் ஓடிக் கொண்டிருக்கும் வருவின் மீதிருந்து விலகவேயில்லை.
“அப்போ யாதுக்கு வருவையே கல்யாணம் செய்து வைத்துடலாம் ப்பா!”
“நமக்கு அந்த எண்ணம் இருந்தால் மட்டும் போதாதுடா… அவங்க ரெண்டு பேருக்கும் இருக்கணும்.
எனக்கும் அந்த ஆசை இருந்தது தான்” என்ற ஆதி தன் கண்களை ஒருமுறை மூடி திறந்து, யாதுவிடம் தான் பேசிய நினைவை விரட்டினான்.
“யாது வருகிட்ட பேசியே நான் பார்த்ததில்லை. அவங்களுக்குள் எப்படிடா? அதுவும் யாது இந்நிலையில்… எனக்குத் தெரியவில்லை” என்றவருக்கு ‘இருவருக்கும் திருமணம் நடந்தால் நன்றாகத்தான் இருக்கும்’ என்று அந்நொடி தோன்றாமலில்லை.
“இந்த நிலையில் தான் ப்பா யாதுக்கு வரு வேண்டும். நிச்சயம் வரு யாதுவை இதிலிருந்து மீட்டிடுவாள் ப்பா.” தன் தம்பியின் வாழ்வு சீராகிட வேண்டுமே என்கிற தவிப்பு அவளுக்கு. அக்கா என்பவள் இன்னொரு தாய் உறவு அல்லவா! இங்கு அவளும் யாதவின் நலன் வேண்டி அன்னையாக யோசித்தாள்.
“யாதுக்கு கொஞ்சம் டைம் கொடுப்போம் டா… உனக்கு முடிச்சிட்டு தான் அவனுக்கு” என்று ஆதினியின் தலையில் இடியை இறக்கிச் சென்றார் ஆதி.
டீபாயினை சுற்றி வட்டமிட்டு ஓடிக் கொண்டிருந்த மனைவியை பிடித்து நிறுத்திய ஆதி,
“போதும் பேபி… குட்டிம்மா பாவம் விட்டுடு” என்றார்.
“உங்களுக்கு எப்பவும் அவள் தான்” என்று போலியாகக் கோபம் கொண்ட நிரலி… “உங்க செல்ல மருமகப்பொண்ணை ஒன்னும் சொல்லிடக் கூடாதே” என்றார்.
அதில் சத்தமாக சிரித்த வரு இருவரின் அருகிலும் வந்து…
“மாமா என்னைக் காப்பாற்றவில்லை அத்தை, என்னை துரத்தி உங்களுக்கு கால் வலி வந்திடுமேன்னு தான் நிறுத்தினார்” என்று உண்மையை சொல்ல… நிரலி கணவனை அப்படியா என்பதைப்போல் பார்த்தார்.
ஆதியும் ஆமோதிப்பாக தலையசைக்க… அங்கே பார்வைகள் மௌன மொழி பேசின.
“ம்க்கும்.” வரு ஆதியின் தோளில் கை போட்டு செருமி தன்னிருப்பைக் காட்டினாள்.
“நீ இன்னும் போகலையா?” நிரலி கிண்டலாகக் கேட்டாள்.
“இங்கு இப்படியொரு ஸீன் போயிட்டு இருக்கும்போது எப்படி போறதாம்?” என்று வரு எதிர் கேள்வி கேட்க அவளின் தலையில் செல்லமாக வலிக்காது கொட்டினான் ஆதி.
“ஆஆஆஆ… மாமா வலிக்குது.”
வரு கத்தியதில் எங்கே வேகமாகக் கொட்டிவிட்டோமோ என்று ஆதி பதறி அவளின் தலையை தேய்த்துவிட அவள் சத்தமாக சிரித்தாள்.
அவள் நடிக்கின்றாள் என்பது புரிந்ததும், “வாலு” என்று முதுகிலே ஒரு அடி வைத்தார்.
“இப்போ நீங்க ஓகே தான மாமா?”
அவளின் கேள்வி இருவருக்குமே புரியவில்லை.
“நான் வரும்போது எதையோ நினைத்து ஃபீல் பண்ணிட்டு இருந்தீங்களே!”
வரு கேள்வியாய் இழுக்க…
“பெட்டர் நவ் டா குட்டிம்மா” என்ற ஆதி, “என்னைவிட உன் அத்தை தான் ரொம்ப வருத்தத்தில் இருந்தாள்” என்றான்.
“எதுவா இருந்தாலும் அதையே நினைத்துக்கொண்டு இருந்தால் சரியாகிடுமா என்ன? நடப்பதெல்லாம் நன்மைக்கே! அப்படி நினைச்சிட்டு போயிட்டே இருக்கணும்” என்றவள்,
“சாரி மாமா வித் யூர் பெர்மிஷன்” எனக்கூற…
ஆதி எதற்கு எனும் விதமாக பார்க்க, வரு நிரலியின் கன்னத்தில் அழுந்த முத்த வைத்து,
“உங்களுக்கு மட்டும் கொடுத்தன்னு எங்க அத்தை கோச்சிப்பாங்களே” என்றவளாகத் தன்னறை நோக்கிச் சென்றாள்.
“யாதவ்க்கு வரு மேல் காதல் வந்திருக்கலாம் மாமா!” ஏக்கமாக சொல்லிச் செல்லும் மனைவியையே யோசனையோடு பார்த்திருந்த ஆதிக்கும் அதுவே தோன்றியது.
ஆதியிடம் மகனை நினைத்து பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது.
அறைக்குள் சென்ற பத்து நிமிடத்தில் தன்னை சுத்தம் செய்துகொண்டு வெளியில் வந்த வருவின் பார்வை அவளின் அறைக்கு எதிரே இருக்கும் யாதவின் அறையைத் தொட்டு மீண்டது. வெளிச்சமின்றி அறை மூடியிருக்க, அவனில்லை என்பதை பறைசாற்றியது.
‘மாமாக்கு நைட் ட்யூட்டி இல்லையே?’ தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் உணவு உண்ண கீழே செல்ல படியில் கால் வைக்க, மாடி லானில் இருந்த இருக்கையில் மருண்ட பார்வையுடன் அமர்ந்திருந்த ஆதினியை பார்த்துவிட்டு அவளருகில் சென்றாள்.
“ஹாய் டார்லிங்… ஒய் டல்?”
ஆதினியை இடித்துக்கொண்டு அமர்ந்தாள்.
சட்டென்று ஆதினியின் விழிகள் கலங்கிவிட்டன. அவள் அழுவாளென்று எதிர்பார்த்திடாத வரு பதறிப்போனாள்.
“ஹரி அண்ணாவா?”
ஆதினி மறுப்பாய் தலையசைத்தாள்.
“யாதவ்…” ஆதினி திணறலோடு ஆரம்பிக்க… அதில் அவனின் பெயரை மட்டும் சொல்லிய நிலையில்,
‘அச்சோ மாமாக்கு என்னாச்சு’ என்று நொடிப்பொழுதில் உள்ளுக்குள் மருகினாள் வரு. அவளின் முகம் அவனுக்கு என்னவோ ஏதோவென்று அறியும் படபடப்பை வெளிக்காட்டியது.
ஆதினி இருந்த நிலையில் வருவின் முகம் கருத்தில் பதியவில்லை.
இருப்பினும்,
தன் பதட்டத்தை நொடியில் மறைத்தவளாக ஆதினி சொல்ல வருவதை கேட்டாள்.
“யாதவ் லவ் பிரேக்கப் ஆகிருச்சு.”
ஆதினி சொல்லியதில் வருவின் உலகம் ஸ்தம்பித்தது. தலை சுற்றி கண்கள் இருட்டின.
பிரேக்கப் என்பது ஒரு அதிர்ச்சி என்றால் அவனின் மனம் ஒரு பெண்ணை விரும்பியது என்பது அவளுக்கு பேரதிர்ச்சி.
அந்நொடி வேண்டாத நினைவாக அவள் அவனிடம் தன் விருப்பத்தை சொல்லியதும் அதற்கு அவனளித்த பதிலும் நினைவலையில் எழுந்து அவளின் இதயத்தை வலிக்கச் செய்தது.
இந்த வலி தேவையில்லா ஒன்றென்று அவளுக்கு யார் சொல்வது. யாதவின் மனம் இன்னும் காதலின் வண்ணம் தீண்டிடாத வெள்ளை காகிதம் என்பதை அவனே அறிந்திடாத போது, இவளிடம் என்ன சொல்லித் தேற்ற?
யாதவின் மூளை எந்நிலையில் காதலை ஏற்றது என்பதை அறியும் வரை இவ்வலியினை அவள் அனுபவித்திடத்தான் வேண்டும்.
“இதுவரை தன்மீது அப்படியொரு எண்ணம் வராமல் இருந்திருக்கலாம். இனி, தன் மனம் தெரிந்த பின்னர் ஏதேனும் உள்ளுக்குள் மலரலாம்” என்று வரு காத்திருக்க… ‘அவன் ஏற்கனவே ஒரு பெண்ணிடம் காதல் கொண்டதால் தான் தன்னை நிராகரித்து விட்டான்’ என்கிற உண்மை தெரிந்த கணம் அவளின் கண்கள் அருவியாய் கொட்டின.
சில நிமிடங்களுக்கு முன் மலர்ந்து சிரிப்பினை தாங்கியிருந்த முகமென்று சொன்னால் அவளாலே இப்போது இக்கணம் அதனை ஏற்க முடியாது.
அதுவும் வருவிற்கு அழத் தெரியுமென்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஏன் உனக்கும் அழ வரும் என்று சொல்லியிருந்தால் அவளே ஜோக்கென எண்ணி சிரித்திருப்பாள்.
ஆனால் இப்போது?
ஆதினி அருகிலிருப்பதால் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவள், முகத்தை சாதாரணமாக வைத்துக்கொள்ள பெரும்பாடு பட்டாள்.
“சரி நீ எதுக்கு அழற?”
வீட்டிற்கு யாதவ் வந்தது முதல் அவன் அறையை போர்க்களமாக்கிச் சென்றது… நிரலியின் வருத்தம் வரை சொல்லியவள், ஆதியிடம் வரு, யாதவ் திருமணம் பற்றி பேசியதை தவிர்த்து…
“யாதவ்க்கு கல்யாணம் செய்து வைத்தால் இதிலிருந்து அவன் வெளிவந்திடுவான் அப்பாவிடம் சொன்னேன்” என்று நிறுத்தினாள்.
“அதற்கு மாமா என்ன சொன்னாங்க?”
கலங்கும் குரலை வெளிக்காட்டாது வெகு சிரமத்துடன் கேட்டாள் வரு.
“எனக்கு செய்துட்டு தான் யாதவ்க்கு செய்யணும்மாம்” என்றவள் குலுங்கி அழுதாள்.
“அச்சோ டார்லிங் இதுக்கா அழுவாங்க?” தன் மனதின் வலியை மறைத்துக்கொண்டு ஆதினியை தேற்ற முயற்சித்தாள்.
“இப்போ என்ன உனக்கு செய்யணும் சொன்னார் அவ்வளவுதானே! ஹரி அண்ணாவைப் பற்றி மாமாகிட்ட சொல்லு, காதலைப் பற்றி அவருக்குத் தெரியாததா… புரிந்து கொள்வார். பிறகென்ன,
மாலை டம் டம் மஞ்சர டம் டம்
மாத்து அடிக்க மங்கள டம் டம்
ஓல டம் டம் ஒதுக்கு டம் டம்
ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம் டம்… தான்” என்று வராத சிரிப்பை உதிர்த்தாள்.
மனம் கலங்கியிருக்க அவள் உதடுகள் பொய்யாக புன்னகைத்தன.
வரு பாடியதில் ஆதினிக்கு வெட்கம் கூட வந்தது. ஆனால் மீண்டும் அவள் முகம் கலக்கத்தை சுமந்தது.
அவளின் நினைவு அவளவனிடம் சென்றது.
*ஓர் இதயம் வலியில் நின்று துடிக்க,
ஓர் இதயம் முழுதாய் மரித்து போனது.
ஓர் இதயம் காதலை யாசிக்க,
ஓர் இதயம் காதலை மறுத்துச் சென்றது.*
Epi 3
https://thoorigaitamilnovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af-3/
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
24
+1
3
+1
1 Comment