Loading

இதயம் 22 : (உயிர் உருகுதடி)

இரண்டு நாட்களாக தனக்குள் சுய அலசலில் ஈடுபட்ட யாதவ் கிராமத்திற்கு செல்வதாக முடிவெடுத்திருந்தான்.

தான் அறிந்த விடயத்தை இன்னும் தந்தையிடம் கூட அவன் சொல்லவில்லை.

அந்த விடயம் அறிந்த கணம் வருவின் மீது சொல்ல முடியாத கோபம் முகிழ்த்தது.

‘இதற்கேனுமாவது தன்னிடம் அவள் உண்மையை சொல்லியிருக்க வேண்டும்’ என்று அதீத கோபம் கொண்டான்.

‘பெரியதாக காதலித்தால் மட்டும் போதுமா. எப்போது எந்நிலையில் இருப்பான், ஒரு செயலின் போது எப்படி நடந்து கொள்வான்’ என்று கூடவா தன்னைப்பற்றி அவளுக்குத் தெரியாது.

‘இந்நிலையில் கூட அவளை ஏற்காது ஒதுக்கிவிடுவேன் என்று என்னைப்பற்றி தவறாக எண்ணிக்கொண்டாளா?’ அவனின் மனம் அமைதி கொள்வதாக இல்லை.

கண் முன்னே இருக்கும் காதல் காட்சிகள்… அவர்களின் காதலுக்கு சாட்சியாய் அவனின் கையிலிருக்கும் ஒன்று. இவையெல்லாம் அவனின் மனைவி மீது முன்பிருந்த கோபத்தை விட அதிகமாக்கியது.

இப்போது வருவின் மீது காதல் இருக்கிறதா? எனக் கேட்டால் இல்லையென்று தான் சொல்லுவான். மனதின் அடி ஆழத்தில் புதைந்து போன காதல் இன்னும் அவனுள் உயிர்த்தெழவில்லையே. அவனுக்கு உணர்த்தவில்லையே!

ஆதி மனைவி என்று சொன்னது முதல் நம்ப மறுத்தானே ஒழிய ஏற்க மறுக்கவில்லை. அவளின் அறையை பார்த்த பின்னர், தங்களின் காதல் வாழ்க்கையை அறிந்த பின்னர் கொஞ்சமும் யோசியாது வருவை மனைவியாக இதயத்தில் ஸ்வீகரித்துக் கொண்டான்.

உடனடியாக எவ்வித யோசனையுமின்றி ஒருத்தியை மனைவியாக ஏற்றுக்கொள்ள முடிகிறது என்றால் அது காதல் இருந்தால் மட்டுமே சத்தியமென்று அவனுக்கு யார் சொல்லுவது?

இந்த இரண்டு நாட்களாய் வருவின் அறையில் தான் அவனின் வாசம். அவர்களின் காதலுக்கு ஆதாரமாக விளங்கிய பொருட்களை பார்க்கும் போதெல்லாம் இதயத்தில் ததும்பும் ஆனந்தத்தை உணர்ந்தே இருந்தான் யாதவ். அதற்கான காரணம் தான் காதலென்று அவனுக்கு விளங்கவில்லை.

காதல் நினைவுகளில் நீங்கியிருந்தாலும் அவனின் உயிர் உணர்வுகளோடு கலந்திருக்கிறது.

அவனின் அலைபேசி கடவுச்சொல்லின்றி இருக்க எளிதாக திறந்து விட்டான்.

தொடு திரையில், ஸ்க்ரீன் நேம் செல்லம்மா என்று இருக்க அவனுள் கேள்வி தான்.

“யார் இந்த செல்லம்மா?” கேட்டுக்கொண்டவன் பக்கங்களை நகர்த்த யாவும் வருவின் புகைப்படங்களே! அவள் முறைப்பது சிரிப்பது கோபமாக இருப்பது அழுவது சிணுங்குவது இப்படி பல பாவனைகளில் அவளின் படங்கள் இருந்தன.

ஒவ்வொன்றையும் சுவாரஸ்யமாக ரசித்து பார்த்தான்.

“செமயா லவ் பண்ணியிருப்பேன் போலிருக்கே!” அப்போதுதான் கவனித்தான் தொடுதிரையில் கன்னம் தாங்கி வருயிருந்த புகைப்படத்தில் அவளின் விரலில் யாதவின் பெயர் டாட்டூ வரைந்திருப்பதை…

அது அவன் நினைவடுக்கில் ஒளிர்ந்தது.

மௌனமாக அந்நொடியை கடந்து விட்டான். எதையும் ஆழ சிந்திக்க அவன் விரும்பவில்லை. இப்போதிருக்கும் இலகுத்தன்மையை இழக்கக்கூடாது என்பதில் கவனமானான்.

புலனம் உள் சென்றவன் ஒவ்வொரு சாட் பகுதியையும் பார்க்க… அவை யாவும் மருத்துவ துறை சார்ந்த அவனின் நண்பர்கள் மற்றும் நோயாளிகளுடனான உரையாடலாகவே இருந்தது.

செல்லம்மா என்கிற பெயரிலிருந்த சாட் மட்டும் பின் செய்திருக்க… அது யாரென்று அவனால் இப்போது ஓரளவு  யூகித்திருக்க திறக்கலாமா வேண்டாமா என்று தனக்குள்ளே வாதிட்டான்.

இறுதியில் அவனுள் பதுங்கியிருந்த காதல் மனதின் கட்டளையால் திறந்திருந்தான்.

இறுதியாக அவன் அனுப்பியிருந்த தகவலிலேயே நிலைக்குத்தி நின்றுவிட்டான்.

“வில் கம் சூன் டி பொண்டாட்டி. அன்டில் தென் வெய்ட் பார் மீ. லவ் யூ டி செல்லம்மா❤️.”

அன்றைய நாளில் இறுதியாக அவன் அனுப்பியிருக்க…

“போடா! மிஸ் யூ லாட்” என அவள் பதில் அனுப்பியிருந்தாள்.

அவனின் காதல் அவனே உணர்வதாய்.

தலையை உலுக்கி தன்னை சமன் செய்தவன்… மறந்த காலத்தின் மிச்சம் ஏதேனும் இருக்கிறதா என்று யோசனையில் ஆழ்ந்தான்.

அடுத்த கணம் அழையா விருந்தாளியாக தலைவலி உடன் வர… வலியை பொறுத்துக்கொண்டு வருவுடனான வாழ்வை நினைவுகளில் தேடினான். நரம்புகள் முறுக்கி எழ… வியர்த்து வடிய அப்படியே மயங்கியிருந்தான்.

வெகு நேரமாக மகனை காணவில்லையே என்று அவனைத்தேடி வந்த நிரலி முகத்தில் குளிர்ந்த நீர் தெளித்தும் அவனிடம் அசைவின்றி போக… உடனடியாக மருத்துவமனை விரைந்தார்.

ஒரு வழக்கு விடயமாக ஆதி கோர்டிற்கு சென்றிருக்க அவரை அழைத்து சொல்லிய நிரலி வராண்டாவில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர அவருக்கு துணையாக ஜான் வந்து சேர்ந்தான்.

விஷால் இன்னும் ஊரிலிருந்து வந்திருக்கவில்லை.

யாதவிற்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் பரிசோதனை முடித்து வெளியில் வந்து…

“பயப்படும்படி ஒன்றுமில்லை. மன அழுத்தத்தினால் வந்த மயக்கம். டூ த்ரி ஹவர்ஸில் கண் விழித்திடுவார்” என்று  நல்ல விதமாக முதலில் கூறியவர்,

“அவர் பழைய நினைவுகளை தட்டியெழுப்ப முயற்சி செய்கிறார். அதான் காரணம் இந்நிலைக்கு. இது தொடர்ந்தால் முன்பு சொன்னதுதான் மொத்த நினைவுகளும் அழிந்துவிடும். அது இன்னும் சிக்கல்” என்று வார்த்தையால் பயமூட்டினார்.

“டாக்டர்?” நிரலி அதிர்ந்து அழைக்க…

“இங்கு சரிசெய்ய முடியாதுன்னு எதுவுமில்லை மேடம்… அவருடைய மன அமைதி ரொம்ப முக்கியம்” என்று நிரலியிடம் கூறியவர், ஜான் பக்கம் திரும்பி “நீங்க கவுன்சிலிங் ட்ரை பண்ணி பாருங்க ஜான். அவருடைய க்ளோஸ் ஃபிரண்ட் நீங்க, அது உங்களுக்கு இன்னும் பிளஸ்” என்றவர் தன் பணி அவ்வளவுதான் என்பதைப்போல் சென்றுவிட்டார்.

“எல்லாம் இந்த மாமாவால் வந்தது! வரு போனதில் எனக்கும் தான் வருத்தம். யாதுவை ரெண்டு அடி கூட அடிக்கலாம் தோணுச்சு. அவன் கோபப்படுறான், வருவை கஷ்டப்படுத்துறான்னு உண்மையை சொல்லிட்டார்.

இப்போ பாரு அவனுக்குள்ளே போராடி எங்க வந்து முடிஞ்சிருக்குன்னு.” அந்நொடி தானும் அவனிடம் உண்மையை சொல்லிவிடலாம் என்று சொல்லியதை ஏனோ அவர் மறந்துபோனார்.

மெல்ல விசும்பினார்.

“ஆண்ட்டி டோன்ட் ஃபீல். சரியாப்போகும்” என்ற ஜான்… “நான் கவுன்சிலிங் கொடுக்கிறேன்” என்று நிரலியை ஆறுதல் படுத்தினான்.

அந்நேரம் அங்கு வந்த ஆதி மகனின் நலனை ஜானின் மூலம் தெரிந்து சற்று ஆசுவாசமடைந்தார்.

ஆதியின் தோற்றமே அவர் கோர்ட்டிலிருந்து அப்படியே வந்திருப்பதை சுட்டிக்காட்டியது. வெகுவாக களைத்துப் போயிருந்தார்.

அங்கிருந்த கூலரில் நீர் பிடித்து அவரிடம் நீட்ட… அப்போது அது அவருக்கு தேவையாக இருக்க… நன்றி கலந்த பார்வை ஒன்றை ஜானிடம் வீசி பெற்றுக்கொண்டார்.

சற்று தெம்பாக உணர்ந்தவர்,

“நான் இப்படி நடக்கும் எதிர்பார்க்கல ஜான்” என்றார்.

“அம்னீசியாவில் மயக்கம் வருவது சகஜம் தான் ஆதிப்பா. அவங்க உடலால் ஒரு நபராக இருந்தாலும் உள்ளத்தால் இரு வேறு நினைவுகளுடன் போராடிக் கொண்டிருப்பார்கள். அதன் தாக்கம் தான் மயக்கம். இதில் பயப்பட ஒன்றுமில்லை” என்று அவரையும் தேற்றியவன் யாதவ் கண் விழிப்பதற்காக அவர் அருகே அமர்ந்து கொண்டான்.

வருவிற்கு இவ்விடயம் தெரியக்கூடாதென்று நிரலியிடம் கட்டளையாகவே சொல்லிவிட்டார் ஆதி.

அங்கு சென்றாவது அவள் நிம்மதியாக இருக்கட்டுமென்கிற எண்ணம். ஆனால் அவளின் எண்ணம் முழுக்க யாதவ் தானே! அவனின் நினைவின்றி அவளின் நொடிகள் கடந்திடுமா?

“படத்திலெல்லாம் காட்டுவதைப்போல் இந்த மயக்கத்தால் அவனுக்கு நினைவு திரும்பியிருக்குமா?” நிரலி எதிர்பார்ப்போடு வினவினார்.

“நடந்தால் நன்றாகத்தான் இருக்கும்” என்ற ஜானின் மனமும் அதனை வெகுவாய் எதிர்பார்த்தது.

நண்பன் காதல் வாழ்க்கையில் எத்தனை சந்தோஷமாக இருந்தானென்று அவனுக்குத்தான் தெரியுமே! அவை நினைவிற்கு வந்து மீண்டும் அதே சந்தோஷத்தோடு நண்பன் வாழ வேண்டுமென்று பிரார்த்தித்துக் கொண்டான்.

யாதவ் கண் திறந்து விட்டதாக செவிலி வந்து சொல்லியதும் மூவரும் அவனை காணச் சென்றனர்.

நிரலியின் முகத்தில் வேதனையை கண்ட யாதவ்… “மாம் அம் ஓகே நவ்” என்று சிரிப்போடு சொல்ல அவர்களுக்கு அதுவே போதுமானதாக இருந்தது.

மருத்துவர் வந்து பார்த்தவர்… “எனி சேன்ஞ்சஸ் மிஸ்டர்.யாதவ்” என்றிட, “எல்லாம் அப்படியேதான் இருக்கு டாக்டர்” என்றான்.

அவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவர் வெளியேறிவிட்டார்.

யாதவ் ஆதியிடம் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. அவரும் பேச விழையவில்லை.

“வீட்டுக்கு போகலாமா?”

யாதவ் அவ்வாறு கேட்டதும்…

“போலாம்டா… அதுக்கு முன்னடி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று ஜான் சொல்ல,

“என்னடா கவுன்சிலிங்கா?” எனக் கேட்டிருந்தான்.

“அப்படியும் வச்சுக்கலாம்” என்ற ஜான், “நான் என் ஃபிரண்ட்கிட்ட பேச விருப்பப்படுறேன்” என்றான்.

அதற்கடுத்து யாதவால் மீறிட முடியுமா என்ன?

“பேசலாம்” என்றிட, நிரலியும் ஆதியும் வெளியேறினர்.

“சொல்லுடா என்ன பேசணும்?” யாதவ் தான் பேச்சினை தொடங்கினான்.

“நீயொரு டாக்டர் யாது. அதுவுமில்லாமல் நியூரோ சர்ஜன். உன்னுடைய நோயைப்பற்றி உன்னைவிட யாருக்கு அதிகம் தெரிந்துவிடப் போகிறது.

அப்படியிருந்தும் எதுக்கு உனக்குள்ளே போராடுற?”

“நானொரு டாக்டரா இருக்கலாம். பட் நானும் சாதரண மனிதன் தான் ஜான். எனக்கும் உணர்வுகள் இருக்கு” என்ற யாதவின் முகத்தில் தன்னிலை எண்ணிய வருத்தத்தின் சாயல்.

“உனக்கு நடந்திருக்கக்கூடாது தான். நடந்திருச்சு. என்ன பண்ண? உன்னுடைய நிலையில் இருக்கும் பேஷண்ட்டுக்கு டாக்டரா நீயென்ன சொல்லுவ?”

யாதவின் போக்கிலே சென்று அவனை சகஜமாக்க நினைத்தான் ஜான்.

“பேச்சிற்கு ஒத்துவரும் சில… நடைமுறைக்கு சாத்தியப்படாது டா?” யாதவிடத்தில் இயலாமை மட்டுமே.

“என்ன சொன்னாலும் இப்படித்தானென்று நினைத்துவிட்டால் அதை மாற்ற முடியாது யாது.”

“என்னால முடியல ஜான். ரொம்ப அழுத்தமா இருக்கு.”

“அதான் எதுக்கு?”

“வரு.”

“புரியல?”

“எனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆகிருச்சு.”

“அதான் தெரிஞ்சிடுச்சே! பிறகென்ன?”

“அதுதான் பிரச்சனையே!”

“என்ன சொல்லுற?”

“பாக்குற காட்சியெல்லாம் அவளை நான் எந்தளவுக்கு லவ் பண்ணினேன்னு சொல்லுது. ஆனால் அதில் கொஞ்சம் கூட எனக்கு நினைவே இல்லை. இதையெல்லாம் யோசிக்கக்கூடாதுன்னு அறிவுக்கு தெரிந்தாலும், கண் முன்னே படத்திலிருக்கும் காதல் நிஜத்தில் எப்படியிருக்கும் என்ற எண்ணமே என்னை நானா இருக்க விடமாட்டேங்குது.

ஒருமுறை வரு என்னிடம் லவ் சொல்ல வந்தப்போ நானேதான் அவளை சொல்லவிடாது தடுத்தேன். ஆனால் இப்போ அவள் லவ் எப்படி சொல்லியிருப்பாள். நானெப்படி சம்மதித்தேன். எங்க லவ் லைஃப் எப்படியிருந்திருக்கும்? இப்படி மண்டைக்குள்ள ஓடுற கேள்விக்கெல்லாம் என்னை மீறி மனம் பதில் தேடும்போது நானென்ன செய்வேன்?”

யாதவின் தெளிவான கேள்விகளே ஜானுக்கு அவன்மீது சந்தேகத்தை தோற்றுவிக்க… மனதில் தோன்றும் காரணமிருக்காதென்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டு மேற்கொண்டு பேசினான் ஜான்.

“டோன்ட் கெட் எமோஷனல் டா! ஆள் இஸ் வெல்.”

“ம்.”

“நானொன்று சொல்லவா?”

“என்னடா பெர்மிஷன்லாம்.”

“உனக்கு உன்னுடைய லவ் தெரியணும். வருவோட லவ் ஃபீல் பண்ணனும். நீங்க எப்படி வாழ்ந்தீங்கன்னு தெரியணும். அதானே உன் பிராப்ளம்?”

“எக்ஸ்சாக்ட்லி.”

“ஏன் நீ தொலைஞ்சதை தேடுற… வரு இப்போ உன் லவ்வர் மட்டுமில்லை, உன்னுடைய வைஃப். சோ, திரும்ப லவ் பண்ணு. உன் லவ் அவளுக்கு சொல்லு. உன்னை லவ் பண்ண வை. பிறகென்ன முடிஞ்சிருச்சுன்னு நீ தேடுற வாழ்க்கையை திரும்ப வாழுங்க” என்றவன் “இங்கு தீர்க்க முடியாதுன்னு எதுவுமில்லை யாது. எல்லாமே நம் எண்ணத்தை பொறுத்துதான். காம் டவுன் மேன். மனசை அமைதியா வச்சிக்கோ. நீ சில மாத நினைவுகளை மட்டும் தான் இழந்திருக்க” என்று சாதரணமாகக் கூறினான்.

“ஆனால் இழக்கக்கூடாத நினைவுகள் டா.” யாதவின் முகம் கசங்கியது.

“லவ் ஹெர் டா” என்று சொல்லிய ஜான் மேற்கொண்டு யாதவ் அமைதியடையுமாறு பேசிவிட்டு செல்ல…

“ஒருத்தர் சொல்வதால் காதல் வந்திடுமா? காதலித்திட முடியுமா?” என்று கேள்வி எழுப்பினான் தனக்குள்.

இருப்பினும் வருவை விட்டுவிடக் கூடாதென்று மனதின் ஆழத்தில் முடிவெடுத்திருந்தான்.

தன்னைவிட அவளுக்குத்தான் வலி அதிகமென்று ஏற்கனவே உணர்ந்தவன் அதனை எப்படியாவது போக்கிட வேண்டுமென்று கணவனாக எண்ணம் கொண்டான்.

கணவனாக மட்டுமே வருவை ஏற்றுக்கொண்டான்.

வீட்டிற்கு வந்து சேர்ந்தவன் கிராமத்திற்கு சென்று வருவை காண முடிவெடுத்துவிட்டாலும், எப்படி என்ன காரணம் சொல்லி செல்வதென்று தீவிரமாக யோசித்தான்.

இதே காதல் கொண்ட யாதவாக இருந்திருந்தால் வருவை பார்க்க வேண்டுமென்று தோன்றியதும் உடனடியாகக் கிளம்பியிருப்பான். ஆனால் இப்போதிருப்பது வருவிற்கு தாலி கட்டிய கணவன் யாதவ் ஆயிற்றே. அதனாலே இவ்வளவு யோசனை.

காதலுக்கு இல்லாத வலிமை மஞ்சள் கயிருக்கு உள்ளது. மஞ்சள் கயிறு மேஜிக் தான் யாதவிற்கு அவனின் காதலை வெளிக்கொண்டு வர வேண்டும்.

நீண்ட யோசனைக்கு பிறகு மூளையில் மணியடிக்க ஜானிற்கு அழைத்தவன் தனக்கு வேண்டிய பதிலை தெரிந்து கொண்டு ஆதியை தேடி வந்தான்.

“வாட்ஸப் டாட்” என்று தன் முன்னே வந்தமர்ந்த மகனை ஆராய்ச்சி பார்வை பார்த்தார் ஆதி.

“டூயூட்டியில் ஜாயின் பண்ணலாம் இருக்கேன் டாட். எவ்வளவு நாள் வீட்டிலே இருக்கிறது பிராக்டிஸ் பண்ண ஹாஸ்பிட்டல் போகணும்” என்றான்.

“நீ இப்போ ஓகே தானே யாது?”

“அம் பெர்பெக்ட்லி ஆல்ரைட் டாட்.” முகத்தில் ஒரு தேஜஸ்.

உடலின் பலம் மனதில் தான் இருக்கிறது. குழப்பத்துடன் சுற்றியபோது வராத உடம்பின் பலம், மனம் சற்று தெளிந்ததும் அனைத்தும் சரியாகிவிட்டத்தை போல் உணர்ந்தான். அதுவே யாதுவை முழுமையாக இல்லாவிட்டாலும் தேவையானளவு குணமடையச் செய்திருந்தது.

“சரிப்பா. பட் கேர்புல்” என்றார் ஆதி.

அர்த்தமாக சிரித்துக்கொண்ட யாதவ், “எனக்கு உண்மை தெரிஞ்சிடுச்சுன்னு உங்க மருமகக்கிட்ட சொல்லிட்டிங்களா டாட்?” எனக் கேட்டிருந்தான்.

அவர் இல்லையென தலையாட்ட, “இனியும் சொல்லிடாதீங்க” என குறும்பு சிரிப்புடன் சொல்லிவிட்டுச் சென்றான்.

ஆதியால் மகனை கணிக்கவே முடியவில்லை. அடுத்தநாள் யாதவ் சொல்லிய செய்தியில் தன் மகன் தன்னுடைய கணிப்பிற்கு அப்பாற்பட்டவனென்று புரிந்துகொண்டார்.

“இங்கு இருந்தவரை அவளை வார்த்தையால் நோக வச்சது பத்தாதுன்னு இப்போ நேரில் போய் கஷ்டப்படுத்தபோறீயா யாது?” விட்டால் நிரலி வருவிற்காக மகனிடம் சண்டைக்கூட போடுவார் போல.

“மாம் இது என்னோட ப்ரொஃபெஸன். இதுக்கும் அதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.” யாதவிடம் அன்னையை சமாளிக்க வேண்டுமே என்கிற தீவிரம்.

அப்போதும் நிரலி முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள அவரின் கன்னம் பற்றி கொஞ்சியவன்…

“நான் அங்கு போகவே இல்லை மாம். வேலு தாத்தா வீட்டிலே இருந்துக்கிறேன்.” கிட்டத்தட்ட கெஞ்சினான்.

இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஆதிக்கு மகன் மீது சந்தேகம் எழுந்த அதே வேலை, அவனின் திட்டம் என்னவாகயிருக்குமென்று யோசனை இல்லாமல் இல்லை.

“விடு பேபி. போகட்டும்.” ஆதி சொல்லியதும் அவரிடம் பார்வையை திருப்பிய நிரலி,

“அப்படியே உங்க வீட்டுக்கும், எங்க வீட்டுக்கும் மலைக்கும் மடுவுக்கும் இருக்கும் தூரம் பாருங்க” என்றார்.

“மாம்.” யாதவ் சிணுங்கினான்.

சிறுப்பிள்ளையில் பிடிவாதம் செய்யும் யாதவின் நினைவுதான் அவருக்கு வந்தது.

“கேம்ப் போட உனக்கு வேறு ஊரே கிடைக்கலையா?”

“மாம் அது நம்ம வில்லேஜ். நாம் தானே சர்வீஸ் பண்ணனும்.”

இருவருக்குமிடையேயான விவாதம் ஆதிக்கு சுவாரஸ்யமாக இருந்தது.

நிரலி தன் பிடியில் உறுதியாக இருக்க,

“நானும் வருவும் சேருவதில் உனக்கு விருப்பமில்லையா மாம்” என்று கேட்டு நிரலியின் வாயினை அடைத்து சம்மதம் பெற்றவன் இருவரிடமும் சொல்லிக்கொண்டு தன்னுடைய மருத்துவ குழுவுடன் தங்களது கிராமத்தை நோக்கி புறப்பட்டான்.

நான்கு மாதத்திற்கு ஒருமுறை யாதவ் தன் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுடன் ஒவ்வொரு சிறு கிராமங்களிலும் முகாமிடுவது வழக்கம். இப்போது தன்னவளை காண்பதற்கு அதையே பயன்படுத்திக் கொண்டான்.

அதைத்தான் ஜானிடம் நேற்று அழைத்து உறுதி செய்து அதற்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்துவிட்டு தன் பெற்றோரிடம் பேசினான்.

மற்ற மருத்துவர்களும் தேவையான மருந்துகள் உபகரணங்கள் யாவும் வேனில் செல்ல… அவனின் உடல்நலன் கருதி யாதவ் காரில் சென்றுகொண்டிருந்தான்.

அவனுடைய காரினை அவனைத்தவிர யாரையும் ஓட்ட அனுமதிக்க மாட்டான். அது அவனுக்கு பிடித்தமும் இல்லை. அவனின் உடலிருக்கும் நிலையில் அவன் வாகனம் ஓட்டுவதை ஆதி அனுமதிக்கவில்லை.

அதனால் வேறொரு காரில் டிரைவர் போட்டு யாதவிற்கு ஆயிரம் பத்திரங்கள் சொல்லி வழியனுப்பி வைத்தார் ஆதி.

தன்னுடைய பிள்ளைகளின் வாழ்வு சீராகிட வேண்டுமென்ற வேண்டுதலுடன்.

*என் மனம்…
ஓர் நிலையில்லாது ஏங்குதடி!

என் விழிகள்
உனைக் கண்டிட அலையுதடி!

என் உயிர்
உன்னில் உறைந்திட தவிக்குதடி!*

 

இதயம் 23 : (அரசியே! அடிமையே!)

இரண்டு மாதங்களுக்கு முன்பு,

விடிந்தால் திருமணம். உறவுகள் அனைவரும் அந்த பிரம்மாண்ட கல்யாண மண்டபத்தில் உறக்கத்தின் பிடியில் இருந்தனர்.

அப்போதுதான் மணமக்களுக்கான பிரத்யேகமான ஃபோட்டோ ஷூட் முடித்து தத்தம் அறைக்குள் சென்று முடங்கினர்.

தன்னுடன் தனது அன்னை கல்பனாவும், ஸ்வேதாவும் இருக்க அவர்களின் ஆழ்ந்த நித்திரையை உறுதி செய்தபடி மெத்தையிலிருந்து இறங்கிய வருணவி அறையைவிட்டு வெளியேற அடியெடுத்து வைக்க,

“மொட்டைமாடிக்கு போவதற்கு நடுவில் நிறைய பேர் இருக்காங்க. கொலுசை கழட்டி வச்சிட்டு போ.” ஸ்வேதாவின் குரலில் நாக்கை கடித்துக்கொண்டு அவர் பக்கம் திரும்பிய வரு அசடு வழிந்தாள்.

“சாரி அத்தை.”

“இட்ஸ் ஓகே. லவ்வுல இதெல்லாம் சாதாரணம்” என்று சொல்லிய ஸ்வேதா கண்களை மூடிக்கொள்ள… கொலுசினை கழட்டி மேசையின் மீது வைத்தவள், பாதி கதவு மட்டும் திறந்து தலையை வெளியே நீட்டி யாராவது இருக்கிறார்களா என்று பார்வையை சுழல விட்டாள்.

மேடை அலங்காரம் நடைபெற்று கொண்டிருக்க… ஆங்காங்கே உறவினர்கள் ஒருசிலர் இருக்கையிலேயே கண்ணயர்ந்து இருந்தனர்.

யாரின் கண்ணிலும் படாது லாவகமாக மாடி செல்லும் படிகளுக்கு அருகில் வந்தவள்,

“வரு” என்ற அழைப்பில் திடுக்கிட்டாள்.

கண்களை உருட்டியபடி திரும்பியவள் தன்னை அழைத்தது ஜான் என்றதும் மூச்சினை ஆழ்ந்து வெளியேற்றி தன்னை சமன் செய்தாள்.

“தூங்கலையா?”

அவள் திருதிருக்க…

“மேலே கிங் வெயிட்டிங் டா… சோ குயின் கோயிங்” என்று கேலி செய்தபடி ஜானின் பின்னாலிருந்து வந்தான் விஷால்.

வருவிற்கு இருவரையும் பார்த்து சிரித்து வைப்பதைவிட வேறு வழியில்லை.

“ஹோ… கூப்பிட்டு டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்ற ஜான்,

“பார்த்தும்மா பய செம லவ்வுல இருக்கான்” என்று சொல்லி ஏதோ சொல்ல வந்த விஷாலையும் இழுத்துக்கொண்டு நகர்ந்தான்.

“ஷ்ஷ்ஷ்…” என்று வாயினால் காற்றை ஊதியவள் “மாமா” என்று பற்களை கடித்தாள்.

“இன்னும் வேறு யாராவது பார்த்திட்டு கேட்பதற்குள் சீக்கிரம் போடா” என்ற குரலில் அவள் அதிர, ஆதியோடு சூர்யாவும் ராகவும் நின்று சிரித்துக் கொண்டிருந்தனர்.

“அச்சோ” என்று நெற்றியில் தட்டிக்கொண்டவள் யாரையும் பாராது வேகமாக படியேறினாள்.

“நீங்க என்ன தான் மாமா நினைச்சிட்டு இருக்கீங்க?”

மொட்டை மாடிக்கு வந்தவள், முதுகுக்காட்டி நின்றிருந்த யாதவிற்கு முன் சென்று இடுப்பில் கை வைத்தவாறு முறைத்து பார்த்து வினவினாள்.

தன்னவளை பாதாதிகேசம் வரை பார்வையால் தீண்டி ரசித்தவன், அவளின் இடையோடு கையிட்டு சேர்த்து அணைத்து…

“உன்னைத்தாண்டி பொண்டாட்டி நினைச்சிட்டு இருக்கேன்” என்க, அவனின் பேச்சில் எழுந்த நாணத்தை மறைக்க, அவனிடமிருந்து பிரிந்து வேறு பக்கம் பார்த்தாள்.

“ஜூவ்வெல்ஸ் எல்லாம் கழட்டிட்டியா?”

அவளை ரசித்தவாறே வினவினான்.

“சரி எதுக்கு வரசொன்னீங்க? எல்லாரும் பார்த்துட்டாங்க. மானமே போச்சு!” என்று தலையில் தட்டிக்கொள்ள… யாதவ் அட்டகாசமாக சிரித்தான்.

“சிரிக்காதீங்க மாமா. இன்னும் மூணு மணி நேரத்தில் தாலிகட்ட போறீங்க. இவ்வளவு நேரமும் உங்கக்கூடத்தானே நின்னுட்டு இருந்தேன். ரூமுக்கு போய் ட்ரெஸ் தான் சேன்ஜ் பண்ணேன். அதுக்குள்ள கால் பண்ணி மொட்டைமாடிக்கு வான்னு மிரட்டுறீங்க.”

“யாரு, நான் உன்னை மிரட்டுறனா?”

“ஆமாம்” என்றவள் மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவனுக்கு முதுகு காண்பித்து நின்றுவிட்டாள்.

“இன்னும் திரீ ஹவர்ஸ் தான் நம்ம லவ்வர்ஸ் அதுக்கப்புறம் யாரும் லவ்வர்ஸ் சொல்லமாட்டாங்க, புருஷன் பொண்டாட்டி தான் சொல்லுவாங்க. அதான் கடைசியா ஒருமுறை லவ் பண்ணலாம் கூப்பிட்டால் ரொம்ப அலுத்துக்குற” என்றவனிடமும் அவளுக்கு குறையாத கோபம்.

அவன் கோபம் கொண்டதும் இவளின் கோபம் பனியாய் கரைந்திருந்தது.

“உங்களை பார்க்க வரேன்னு எல்லோருக்கும் தெரிஞ்சிடுச்சு. இதுல மாமா வேறு பார்த்திட்டாங்க”என்றவள் அவனின் அருகில் வந்து சட்டை பட்டனை திருக்கிக்கொண்டே சொல்ல அவனின் இதழில் புன்னகை மலர்ந்தது.

“சிரிச்சிட்டீங்களா?” என்றவள், “சரி நான் போகட்டுமா?” என்க… “போ” என்றான் யாதவ்.

அவன் சட்டென்று சொன்ன விதமே தான் செல்வது அவனுக்கு பிடிக்கவில்லை என்று உணர்ந்தவள் மாடிச்சுவற்றின் மீது ஏறி அமர முயற்சிக்க…

அவளைத் தடுத்தவன்…

“கீழே பார்த்தியா? எவ்வளவு ஹைட்” என்று அவளின் தலையில் கொட்டி… தான் கீழே தரையில் அமர்ந்தான்.

“சுவரில் உட்காருவதற்கே பயந்தால் எப்படி மாமா?” எனக் கேட்டவள் அவனின் முன்னே அமர்ந்தாள்.

“உன் விஷயத்தில் கவனமா இருக்கத்தான் தோணுது. கொஞ்சம் சிலிப் ஆனாலும்…” அதற்குமேல் சொல்ல பயந்தவன் கண்களை மூடிக்கொண்டான்.

அவன் காதல் அவள் உணர்வதாய். ஏங்கி தவித்த காதல் அவளின் மடியில்.

காதலில் திளைத்தவள், அவனின் முகத்தருகே தன் முகத்தை கொண்டு சென்று மூடிய அவனது விழிகளில் தன் இதழ் கொண்டு ஒற்றி எடுத்தாள்.

“லவ் யூ செல்லம்மா!” தன்னைப்போல் அவனின் அதரங்கள் உதிர்த்தன.

அவனின் கரம் பற்றியவள்,

“என்னால் இந்த நொடியை நம்பவே முடியல மாமா” என்றவள் அவனின் இதயம் சாய்ந்தாள்.

வருவின் குரல் வெகுவாய் நெகிழ்ந்திருந்தது.

பட்டென்று அவளின் இதழை சிறை செய்தவன் வன்மையாய் முத்தம் கொடுத்து விலக… அவள் கண் விரித்து அதிர்ந்து பார்த்தாள்.

“இப்போ நம்புறியா செல்லம்மா” என்றவன் மீண்டும் அவளின் இதழ் நோக்கி பார்வையை செலுத்த அவனின் நெஞ்சில் கை வைத்து தள்ளியவள் இரண்டடி நகர்ந்து அமர்ந்தாள்.

அவளின் காலினை எடுத்து தன் மடியில் வைத்தவன் அவளின் பாதம் வருட… “சாருக்கு பேஷண்ட்ஸ் மட்டும் தான் பார்க்கத் தெரியும் நினைச்சேன்” என்றவளின் பேச்சினை காதில் வங்காதவன்,

தன் சட்டை பையிலிருந்து நிறைய முத்துக்கள் அடங்கிய ஒரு ஜோடி தங்க கொலுசினை எடுத்து அவளின் காலில் மாட்டி முத்தம் பதித்து நிமிர்ந்தான்.

“பிடிச்சிருக்கா பொண்டாட்டி?”

கையில் கன்னத்தை தாங்கியவாறு அவனின் செய்கைகளை பார்த்தவாறு இருந்தவள்… “ரொம்ப” என்று சொல்ல,

“நான் கொலுசை கேட்டேன்” என்றான்.

“நானும் அதைத்தான் சொன்னேன்” என்றவளின் பார்வை மட்டும் அவனின் முகத்தைவிட்டு அகலவில்லை.

“இப்படி பார்த்து டெம்ப்ட் பண்ணாதே! அப்புறம் எதாவது ஏடாகூடமாகிடும்.”

அவன் மிரட்டியதில் தன்னிலை அடைந்தவள், “அந்த ஏடாகூடத்தை நைட் தெரிஞ்சிக்கிறேன்” என்று யாதவின் காதுக்குள் சொல்லியவள்… அவனின் கன்னத்தை அழுந்த கடித்து, அவன் சுதாரிப்பதற்குள் ஓடிவிட்டாள்.

“வாலு” என்றவன் தன்னறை நோக்கிச் சென்றான்.

*****

முதல் முகூர்த்தத்தில் ஆதினி ஹரியின் திருமணம் முடிவடைந்திருக்க… இரண்டாவது முகூர்த்தத்தில் யாதவ் வருவின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் துரித நிலையில் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

“ஓமகுண்டம் முன்பு அமர்ந்திருந்தது. சோர்வா இருக்கும். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ ஆதும்மா” என்று நிரலி சொல்வதையெல்லாம் பொருட்படுத்தாது வருவுடன் சுயமிகள் எடுத்துக் கொண்டிருந்தாள் ஆதினி.

ஹரி தாலி கட்டும்போது கூட இறுக்கமாக இருந்தவள், தவித்த ஒன்று கை சேர்ந்துவிட்டது என்பதால் உற்சாகமாகியிருந்தாளோ! வருவுடன் அவ்வளவு கொட்டம் அடித்தாள்.

கர்ம சிரத்தையாக ஐயர் சொல்லிய மந்திரங்களையெல்லாம் அக்னிக்கு முன்பு சொல்லிக் கொண்டிருந்தான் யாதவ்.

அவனின் கண்கள் மணப்பெண் அறை இருக்கும் பகுதியை அடிக்கடி தொட்டு மீண்டது.

“எல்லார் கண்ணும் உன்மேல் தான் இருக்கும். சோ, உன் கண்ணை கொஞ்சம் திருப்பாமல் வை.” யாதவிற்கு பின்னால் நின்றிருந்த ஜான் குனிந்து அவனின் காதில் சொல்ல…

“யாது” என்று அவர்களுக்கு அருகில் வந்த விஷால் அலைபேசியை அவர்களுக்கு முன் காட்டினான்.

வீடியோ காலில் ரூபி.

“ஹாப்பி மேரிட் லைஃப் யாதுண்ணா” என்று சந்தோஷமாக முகம் மலர்ந்து கூறியவள், திரையில் யாதுக்கு பக்கத்தில் தெரிந்த ஜானின் முகத்தைக் கண்டதும் கூம்பி போனது.

“தேன்க்ஸ் டா” என்று சொல்லிய யாதவ் அதனை கவனிக்கத் தவறவில்லை.

ரூபியையே சில கணங்கள் கண்கொட்டாமல் பார்த்திருந்த ஜான், அவள் பார்க்கின்றாள் என்றதும் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

ரூபியின் முகம் நொடியில் சோர்ந்து போனதை உணர்ந்த யாது…

“எல்லாம் சரியாகும் டா” என்று சொல்ல, ரூபி உடனே தனது முகத்தை மாற்றிக்கொண்டு மீண்டுமொருமுறை அவனுக்கு வாழ்த்து சொல்லி அழைப்பை துண்டித்திருந்தாள்.

அடுத்து ஐயர் பெண்ணை அழைத்துவர சொல்ல… ஹரிணியும், ஆதினியுமே வருவை மணமேடைக்கு அழைத்து வந்தனர்.

யாதுவின் பார்வை அவனவளிடமே!

வரு அருகில் அமர்ந்ததும்…

அவளின் காதருகே, “செமயா இருக்கடி… ஒரு கிஸ் பண்ணிக்கவா?” என்று அவன் கிசுகிசுக்க, வரு ஒற்றை விரல் நீட்டி பத்திரம் காண்பிக்க யாதவின் முகத்தில் அவ்வளவு சிரிப்பு. அக்காட்சி கவிதையாய் இருக்க… புகைப்படக் கலைஞர் தன் காமிராவிற்குள் பதிந்து கொண்டார்.

அவர்களின் காதலை வீட்டு உறுப்பினர்கள் மட்டுமல்லாது மண்டபத்தில் கூடியிருந்த உறவினர்கள் அனைவரும் ஒருவித நிறைவுடன் பார்த்தனர்.

ஐயர் மந்திரங்கள் சொல்லிக்கொண்டே சடங்குகளை செய்து கொண்டிருக்க… ஒரு கட்டத்திற்கு மேல் வருவால் ஓமகுண்டத்தின் புகையை தாங்கிக்கொள்ள முடியாது போக, கண்களை கசக்கிக்கொண்டே இருந்ததில் நன்கு சிவந்து போயின.

“கசக்காதே செல்லம்மா” என்றவன், அவளின் இரு கண்களையும் தன் விரல் கொண்டு விரித்து தானே ஊதி விட்டான்.

அவனின் செய்கையில் கல்பனா நாணம் கொண்டு சிரிக்க… மற்றவர்களின் நிலையும் அங்கு அதுவாகத்தான் இருந்தது.

அவளுக்கு ஒன்றுமில்லைதான். ஆனால் யாதவ் துடித்துப்போனான்.

“ஐயரே மந்திரம் சொன்னது போதும்.தாலியை கொடுங்கோ!” என்று வாய்விட்டுக் கேட்டிருந்தான்.

அவனது அப்பேச்சு மற்றவர்களுக்கு அவனின் காதல் வேகமாகத் தெரிய, கொல்லென்று அனைவரும் ஒரே நேரத்தில் சிரித்து வைத்தனர்.

ஒவ்வொரு தருணமும் பொக்கிஷமானது. எதையும் புகைப்படக்காரர் தவறவிடாது சேமித்துக்கொண்டே இருந்தார்.

“மானத்தை வாங்காதடா!” என்று யாதவின் மாலையை சரி செய்வது போல் ஜான் மீண்டும் அவனின் காதில் கிசுகிசுக்க… யாதவ் கண்டுகொள்ளவே இல்லை.

“ஐயரே இப்போ தாலியை நீங்க கொடுக்குறீங்களா? இல்லை நானே எடுத்து கட்டிடவா?” என்றான்.

“யாது பொறுமையா இருப்பா! சடங்குன்னு ஒன்னு இருக்கில்லையா?” என்று ஆதி கேட்ட பின்னரே யாது அமைதியாக இருந்தான். அப்போதும் ஐயரை முறைப்பதை மட்டும் நிறுத்தாது அவர் சொல்வதையெல்லாம் தன்னவளுடன் சேர்ந்து செய்தான்.

“கெட்டிமெளம்… கெட்டிமேளம்…” என்ற ஐயர்,

“புள்ளையாண்டா ரொம்பத்தான் அவசரப்படுறேல்” என்றவாறே தாலியை கொடுக்க…

தன் செல்லமாவின் கழுத்தில் மூன்றாவது முடிச்சிட வந்த ஆதினியை தவிர்த்து தானே மூன்று முடிச்சிட்டு தன்னில் சரிபாதியாக்கிக் கொண்டான்.

“தலைக்கு பின்னால் கையை சுத்திக் கொண்டு வந்து உம்ம ஆம்படையாள் நெத்தியில குங்குமம் வைங்கோ!”

ஐயர் சொல்லியவாறு மனைவியின் கண்களை சந்தித்தவாறே குங்குமத்தை வைத்தவன்… யாரையும் கருத்தில் கொள்ளாது வருவின் நெற்றியில் அழுந்த முத்தம் வைத்து விலகினான்.

அவனின் அதீத காதலில் பனித்த கண்ணீரை, அவனின் தலையாட்டாலுக்கு இசைந்து கண்களுக்குள்ளே அடக்கிக்கொண்டாள்.

முத்தமிட்டதில் அவளின் நெற்றியிலிருந்த குங்குமம், யாதவின் அதரத்தில் ஒட்டியிருக்க, தன் கைகொண்டு பாவையவள் துடைத்திட்டாள்.

நடந்திட்ட காட்சியில், அங்கு கூடியிருந்த அனைவரின் கண்களுக்கும் யாதவ் வருவின் காதலே தெரிந்தது.

அந்நொடி ஹரியின் பார்வை ஆதுவை ஏக்கமாகத் தழுவிச் சென்றது. ஹரியின் பார்வை உணர்ந்தும் ஆது அவன் புறம் திரும்பவில்லை.

“உன் பையன் காதலில் உன்னையேயே மிஞ்சிடுவான் போலிருக்கேடா அம்பி!” மாமி சொல்ல ஆதியிடத்தில் அப்படியொரு புன்னகை.

“வீட்டுக்கு போனதும் புள்ளைங்களுக்கு சுத்திப்போடணும்… என் கண்ணே பட்டுடுச்சி” என்றவாறு தன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய பேரன் பேத்தியின் கன்னம் வழித்தார் செல்வி.

வேலுவின் எண்ணம் ஆதி நிரலியின் திருமணத்திற்கு சென்று வந்தது.

தன் பக்கத்தில் நின்றிருந்த ஆதியை பெருமையாய் பார்த்தார்.

மண்டபத்தை காலி செய்து மணமக்களை வீட்டிற்கு அழைத்துவர மதியம் மூன்றாகிவிட்டது.

ஆதினி ஹரியை மாமியின் வீட்டில் விட்டுவிட்டு, யாதுவையும் வருவையும் ஆதியின் வீட்டு வாசலில் வைத்து ஆரத்தி எடுத்தனர்.

நிரலி இருவருக்கும் பொட்டு வைத்து நகர, வரு யாதவின் தோளிலே மயங்கி சரிந்தாள்.

அனைவரும் பதற,

“கல்யாணத்தில் புள்ளை சோர்ந்து போயிருக்கும். நீ தூக்கிட்டு வாப்பா” என்று செல்வி பாட்டி சொல்லிட… அனைவரும் நிம்மதியாக உள்ளே செல்ல… யாதவ் மனைவியை கையில் ஏந்தினான்.

“வரு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் யாதவ், இங்க கெஸ்ட் ரூமில் படுக்க வை” என்று சொல்லிய நிரலியிடம்,

“ஓகே மாம்” என்றவன், மாடியேற…

வாய் பிளந்து நின்ற நிரலியை கண்டு அனைவரும் சிரித்தனர்.

“நீ சொல்லாமல் இருந்திருந்தாலும் அவன் இங்கே சோபாவிலாவது அமர வைத்திருப்பான்” என்று ஆதி சொல்ல நிரலி அசடு வழிந்தார்.

“மாமா இப்போ? நைட் தானே! அதுக்குள்ள…”

“எல்லாம் அவனுக்குத் தெரியும் பேபி. நைட் வர வருவை கண்ணுல கூட காட்டிடமாட்டிங்கன்னு தான் இப்போ தூக்கிட்டு போயிட்டான்” என்றார் ஆதி.

“சரி எல்லோரும் செத்த ஓய்வெடுப்போம்” என்று வேலு சொல்ல, மாலை மற்ற வேலைகள் இருப்பதால் அனைவரும் ஓய்வெடுக்கச் சென்றனர். விஷால், ஜானும் கூட புறப்பட்டிருந்தனர்.

தன்னுடைய அறைக்குள் வந்ததும், வருவை கைகளில் தாங்கியவாறே காலினால் உதைத்து கதவினை சாற்றினான். ஆட்டோமேட்டிக் டோர் என்பதால், சாற்றிய வேகத்திற்கு பூட்டிக்கொண்டது.

“நடித்தது போதும் கண்ணைத் திறடி பொண்டாட்டி.”

தன்னுடைய சூடான மூச்சுக்காற்று அவளின் கன்னம் உரச கூறினான்.

“எப்படி மாமா கண்டுபிடிச்சிங்க” என்றவாறு கண்களைத் திறந்தவள், அவனின் கைகளிலிருந்து இறங்கினாள்.

“அதான் நான் தூக்கினதும் நெலிஞ்சியே” என்றவன் ஒய்யாரமாக அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து வருவை சுண்டி இழுத்தான். வாகாக அவன் மடி சேர்ந்தாள்.

அவனின் மார்பு அவளின் முதுகோடு உறவாடியது.

“இந்த ரூமுக்குள்ள நீங்க தூக்கி நான் வரணும் ஆசை மாமா. அதான் மயக்கம் வந்ததுபோல் நடிச்சேன். பாசத்துல மாமாவோ இல்லை எங்கப்பாவோ தூக்கிடுவங்களோன்னு பயம். அதான் உங்க மேலேயே விழுந்துட்டேன்.”

அவள் சொல்ல அவனிடம் பிரதிபலிப்பு இல்லை. மாறாக அவன் வேறொரு உலகத்தில் இருந்தான்.

“என்னை எவ்வளோ பிடிக்கும் பேபி?”

“நீங்களும் பேபி ஆரம்பிச்சிட்டிங்களா!” அலுத்துக்கொண்டாள்.

“பேபியில் என்னயிருக்குன்னு பேபி சொல்லும்போது தான் பேபி தெரியுது பேபி” என்றவன் அவளிடம் பேசிக்கொண்டே மெல்ல அவளின் தலை அலங்காரத்தை கலைத்து… அவளின் நீண்ட கருந்தோகையை பிரித்து படர விட்டான்.

“தேன்க்ஸ் மாமா” என்றவள், “இப்போ தான் ஃபிரியா இருக்கு. இவ்வளவு நேரமும் ஏதோ கல்லை தூக்கி தலையில் கட்டியிருந்த மாதிரி இருந்துச்சு” என்றாள்.

இன்னும் தன்னோடு நெருக்கியவன்,

அவளின் குழலை ஒதுக்கி… கழுத்தோடு உறவாடிக் கொண்டிருந்த ஆபரணங்களை ஒவ்வொன்றாய் கழட்டத் துவங்கினான்.

அவளின் கழுத்தில் அவனின் விரல்கள் ஊற… பெண்ணவளின் பேச்சு நின்று தேகம் சிலிர்த்து கிறங்கினாள்.

அவனுக்கும் இதுதானே வேண்டும்.

மனைவியின் கிறங்கிய நிலையை கணவனாய் ரசித்திட்டான்.

உயிருக்கு உரித்தானவர்களின் சிறு தீண்டல் கூட உயிர் உறைய வைக்கும். வருவும் இப்போது அந்நிலையில்.

தான் கட்டிய தாலியை மட்டும் விட்டு வைத்தவனின் விரல்கள் ஊர்ந்து அவளின் காதைத் தீண்டின.

“மாமா.” உச்சரித்தவள் அவனின் மார்பு சாய்ந்திருந்தாள்.

காதில் ஊசலாடிக் கொண்டிருந்த ஜிமிக்கியை நீக்கியவன்… மெல்ல அவளின் கன்னம் வருடி கிறங்கினான்.

“செல்லம்மா…” அவள் பித்து அவனுக்கு முற்றிலும் ஏறியிருந்தது.

விரலை நகர்த்தியவன் தன் இதழ் கொண்டு உரசினான். உடல் அதிர கணவனை மேலும் ஒன்றினாள்.

எப்போதும் பார்த்த நொடி அவனை தடுமாறச் செய்யும் அவளின் கழுத்து குழி இறங்கிய ஒற்றை மச்சத்தில் மென்மையாய் முத்தம் வைத்தவன்… அவளுள் புதைந்துப்போக வேட்கை கொண்டவனாய். அவளோ அவனின் உயிர் சேர தவித்தவளாய்.

கருமேகப் புள்ளியில் தன் பற்களை பதித்தவன், அவளின் கண்கள் சொருகிய நிலை கண்டு… “செல்லம்மா… ஷல் ஐ…” என்று அவனவளின் சம்மதம் வேண்டி நின்றான்.

“பாட்டிக்கு தெரிந்தால்…” மறுப்புத் தெரிவித்தாலும் அவளுக்கும் அவனை பிரிய மனமில்லை.

வருவின் சம்மதம் அவள் இன்னும் அவனது பிடியிலிருப்பதே உணர்த்த… மீண்டும் அவளை கைகளில் ஏந்தியவன்… அவ்வறையிலிருந்த தடுப்பினைத் தாண்டியிருந்த படுக்கையை நோக்கிச் சென்றான்.

இங்கு பால்கனி கதவுகள் மற்றும் திரைசீலைகள் அனைத்தும் மூடி… சூரிய வெளிச்சமின்றி அரை இருளில் இருக்க… தன்னவளை பூவென மெத்தையில் இறக்கியவன்… அவளின் பாதம் தொட்டு தொடர்ந்தான்.

சிருங்கார ஒலிகள் மட்டுமே அறையை நிரப்ப… ஒருவருக்கொருவர் போட்டியிட்டு காதலை காட்டிட… மூழ்கி, புதைந்து, திளைத்து, களைத்தனர்.

*எனை ஆளும் அரசி அவளுக்கு…
சேவகம் செய்திடும் அடிமை நான்.*

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
43
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்