Loading

இதயம் 21 : (அவனவள்)

கையிலிருந்த புகைப்படத்தையே யாதவ் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனால் அப்புகைப்படக் காட்சியினை சற்றும் நம்ப முடியவில்லை. அதைவிட நிஜத்தை அவனால் ஏற்க முடியவில்லை என்பதே உண்மை.

நிஜமும் ஒருநாள் நிழல் தான். ஆனால் மாயைவிட அத்தகைய நிழலாகிய நிஜத்திற்கு வலிமை அதிகம் அல்லவா. அத்தகைய வலிமை அவனின் மனதினை கூறுபோட்டது.

“உன் சரிபாதி அவள்.” ஆதி சொல்லியதை கிஞ்சித்துக்கும் யாதவால் நம்ப முடியவில்லை. சிலையென இறுகி நின்றவன் எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தானோ… ஏற்கனவே அடிபட்ட கால், சற்று நேரத்திற்கெல்லாம் வலி கொடுக்க அப்படியே அருகில் கிடந்த உணவுமேசை இருக்கையிலையே அமர்ந்தான்.

யோசித்தான்… தன்னுடைய மறந்துபோன பக்கங்களை தேடி தேடி கலைத்து தனக்குள்ளே தோற்றுப்போனான்.

உள்ளுக்குள்ளே நிஜத்தை தேடி போராடினான். இதயத்தோடு யுத்தம் புரிந்தான். தொலைந்து போன நினைவை மீட்டிட வேள்வி செய்தான். ஒன்றுக்கும் பலனில்லை. தலைவலி வந்தது தான் மிச்சம். இரு கைகளாலும் தலையை பிடித்துக்கொண்டு மேசையில் கை முட்டி ஊன்றி தாங்கியவன், “வரு” என்று வீடே அதிர கத்தினான்.

அவனின் கத்தலில் அவ்வளவு வலி. அப்பட்டமாக தெரிந்தது.

சுயம் தொலைத்து மீண்டவருக்கே அத்தகைய வலி புரியும்.

அவனின் கத்தலில் கிச்சனிலிருந்த நிரலியும், வள்ளியக்காவும் என்னவோ ஏதோவென்று ஓடிவர, அலுவலக அறையிலிருந்து எட்டி பார்த்த ஆதி இருவரையும் போகுமாறு ஜாடை செய்தார்.

“வரு கிராமத்திற்கு சென்றிருக்கிறாள் யாதவ்.”

“ஏன்?” கேள்வி சுமந்த பார்வை மட்டுமே அவனிடம்.

“நம் உயிருக்கு இணையானவங்க பாரமுகம் காட்டும்போது அவங்க பக்கத்துல எப்படிப்பா இருக்க முடியும்?”

“நீங்க சொல்லுறது உண்மை தானா டாட்? நான் வருவை…” அடுத்து வாக்கியத்தை எப்படி முடிப்பதென்று தெரியாது யாதவ் திணற,

“காதலித்து… உன் விருப்பத்தோடு தான் கல்யாணம் பண்ணிக்கிட்ட” என்று அவன் கேட்க வந்ததற்கு பதில் அளித்தார்.

“அப்போ நிகிலா?”

“அதை நீயாதான் புரிஞ்சிக்கணும் யாதவ்” என்ற ஆதி தான் கையோடு கொண்டு வந்திருந்த வரு அறையின் சாவியை அவன் முன் வைத்தார்.

“என்னது டாட்?”

“உன்னோட நினைவுகள். வரு ரூம் கீ” என்றவர் சென்றுவிட்டார்.

யாதவால் நம்ப முடியவில்லை என்றாலும் தன்னுடைய தந்தையே சொல்வதால் அவனுக்கும் வருவுக்குமான திருமணத்தை நம்ப முயற்சி செய்தான்.

ஆனால் மனதில் நிகிலா வண்டாகக் குடைந்தாள்.

மருத்துவமனையில் நினைவு திரும்பிய யாதவின் நினைவுகள் நிகிலாவிடம் காதலுக்கு சம்மதம் சொல்லிய நிகழ்வோடு நின்று போயிருந்தது.

ஒரு மருத்துவனாக அவனின் நிலை அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது. யாரும் சொல்லாமலே அவன் அனுமதிக்கப்பட்டிருந்த அறையிலிருந்த நாட்காட்டியை வைத்து தன்னுடைய நினைவுகள் ஐந்தாறு வருடங்கள் பின்தங்கி இருக்கிறது என்பதை புரிந்துகொண்டான்.

அவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அவனின் உடல் நலன் பற்றி கூறுவர… “என்னுடைய ரிப்போர்ட்ஸ் கொடுங்க?” என்று கேட்டு வாங்கியவன் அந்நிலையிலும் அதனை படித்த பிறகே ஓய்ந்தான்.

படித்துவிட்டு அமைதியாக படுத்துக்கொண்டவன் கண்களை மூடி மறந்தவைகளை நினைவு படுத்த முயற்சித்தான். பின்னந்தலை யாரோ ஒருவரால் சுத்தியல் கொண்டு அடிப்பதை போல் உணர நினைவுபடுத்துவதை நிறுத்திக்கொண்டான். அதனால் ஏற்படும் விளைவு இதைக்காட்டிலும் மோசமாக இருக்குமென்று மருத்துவனாக அறிந்தவன் அப்போதைக்கு அமைதியாக இருந்தான்.

தன்னை காண வந்த யாரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை.

மருத்துவர் ஏற்கனவே யாதவின் அறிக்கை மற்றும் அவனின் நடவடிக்கையை வைத்து அவனிற்கு செலக்டிவ் அம்னீசியா வந்திருப்பதை அவனின் குடும்பத்தாரிடம் தெரிவித்திருக்க… கணவனை காண தவித்தாலும் தன்னை அந்நிய பார்வை பார்த்து விடுவானோ என்று அஞ்சி உள்ளே செல்லாமல் இருக்க…

ஆதி, “நடந்ததை கூறலாம். அவன் ஏற்றுக்கொள்வான்” என்று சொல்ல,

“மறந்தவை அவருக்கா நினைவு வருவது தான் நல்லது. நாம் நினைவுபடுத்த முயற்சித்தால் நிஜத்திற்கும் நினைவுக்கும் இடையில் அவருக்குள்ளே போராடி மன அழுத்தத்திற்கு ஆளாவார். அத்தோடு நரம்பு மண்டலம் பாதிக்கவும் வாய்ப்புள்ளது” என மருத்துவர் சொல்லிவிட ஆதியிடம் வரு நிர்தாட்சன்யமாக மறுத்துவிட்டாள்.

“அவங்களுக்கு நினைவு வரும்போது வரட்டும். அவங்களை பார்த்திட்டு இருந்தால் மட்டும் போதும்” என்று வரு சொல்லிவிட ஆதியும் யாதவிடம் உண்மையை கூறும் பேச்சினை அத்தோடு விட்டார்.

யாதவ் உறங்கும் நேரத்தில் அவனை பார்த்துக்கொள்பவள், அவன் விழித்திருக்கும்போது வெளியவே காத்திருப்பாள்.

அவளின் நிலை குடும்பத்தாருக்கு பெரும் வலியாக இருந்தபோதும் ஏதும் செய்வதற்கு இல்லை.

ஒருமுறை யாதவின் அருகிலேயே அமர்ந்திருந்த வரு… நீண்டநாள் சரியான உறக்கமில்லாமல் இருந்ததால் தன்னைமீறி கண்ணயர்ந்திருக்க யாதவ் விழித்துக் கொண்டான்.

இமை திறந்தவன் வருவை நிச்சயம் எதிர் பார்க்கவில்லை. அவள் விழிக்கும்வரை மௌனமாக இருந்தவன், வரு எழுந்ததும்…

“நீ எப்போ வந்த?” எனக் கேட்க வரு திருதிருத்தாள்.

“காலேஜ் இல்லையா?” அவன் அடுத்த கேள்வியைக் கேட்டான்.

“காலேஜ்… அது வந்து…” அவளின் பதில் அவனுக்கு வேண்டியதாக இல்லை.

“வேற யாருமில்லையா?”

“விஷ் கூப்பிடவா?”

“அவனுக்கு ட்யூட்டி டைம் முடிஞ்சிருச்சா?”

அவள் இல்லையென்று தலையசைக்க அவன் வேதனையாக கண்களை மூடிக்கொண்டான்.

“எதாவது வேண்டுமா?”

அவன் எதற்கோ தவிக்கிறான் என்பதை புரிந்துகொண்டவள் வினவ அவனிடம் பதிலில்லை.

“தண்ணீர் வேணுமா?”

“பெயின் இருக்கா?”

அவள் பதறிப்போனாள். அவனின் தேவையை அறிந்து செய்திடும் வேகம் அவளிடம்.

“கொஞ்சம் சும்மா இருக்கியா?” யாதவ் கத்திவிட்டான்.

சட்டென்று அவளின் கண்கள் துளிர்த்தன. அவளின் கண்ணீர் அவனுக்கு என்னவோ போலிருக்க,

“ரெஸ்ட் ரூம் போகணும்” என்று சுவரை வெறித்தபடி கூறினான்.

யாதவ் மிகுந்த தயக்கத்துடன் தான் கூறினான். ஆனால் அவனின் தயக்கம் அவளுக்கு சற்றுமில்லை.

இருக்கையிலிருந்து எழுந்தவள் யாதவின் தோளைச்சுற்றி அணைத்தவாறு கரம் போட்டு, அவனின் அடிபடாத கையை பிடித்து படுக்கையிலிருந்து கீழிறங்க உதவினாள்.

யாதவின் மொத்த உடலும் அவளின் மேல் சாய்ந்திருந்தது. அவர்களின் நெருக்கம் உடல் தீண்டல் அவளுக்கு ஒன்றுமில்லை. ஆனால் அவனுக்கோ, பெரும் அவஸ்தையாய். வெடித்து சிதறிக்கொண்டிருந்த இதயம் அமைதியை உணர்ந்தது. மெல்லிய இதத்தை அறிந்தான்.

வருவிடம் இத்தகைய உணர்வு ஏனென்று தான் அவனுக்கு புரியவில்லை.

மீண்டும் படுக்கையில் வந்து விழும் வரை ஒருவித யோசனையிலேயே இருந்தான்.

யாதவ் அமைதியாக அவளையே ஆராய்ந்தபடி இருந்தான்.

“என்னைப் பார்க்கத்தான் வந்தியா?”

இதற்கு என்ன பதில் அவள் சொல்வது. உன்னுடனே தான் இருக்கிறேன் என்றா சொல்வாள்.

சிறு யோசனைக்குப் பிறகு,

“நான் இங்கதான் இருக்கேன். டான்ஸ் ஸ்கூல் ஜாயின் பண்ணியிருக்கேன்” என்று மென் குரலில் கூறினாள்.

அவனிடம் ஆமோதிப்பாய் சிறு தலையாட்டால்.

நிமிடங்கள் பல கடந்திருக்க…

“நான்… நான் வெளியில் இருக்கிறேன்” என்றவள் வேகமாக சென்றுவிட்டாள்.

யாதவின் பார்வை வரு சென்ற திசையிலேயே நிலைத்திருந்தது.

‘சம்த்திங் ராங்’ என்று சொல்லிக்கொண்டவன் எதையும் யோசிக்க பயந்தவனாக உறங்க முயன்றான்.

கிட்டத்தட்ட இருபது நாட்களுக்கும் மேல் மருத்துவமனையில் இருந்துவிட்டு வீட்டிற்கு வந்திருந்தான். ஓரளவு உடல் தேறியிருந்தது.

“மாம் என்னோட மொபைல் கொடுங்க?”

யாதவ் கேட்டதும் நிரலி ஆதியை பார்த்தார். அலைபேசியை பார்த்ததும் அவனுக்கு தெரிந்துவிடும். ஏனென்றால் அலைபேசியில் பின்பக்க உரையே அவனும் அவனவளும் உள்ள புகைப்படம் தான். அதனாலே நிரலி தயங்கினார்.

ஆதியும் என்ன சொல்வதென்று தெரியாது யோசிக்க…

சூழ்நிலையை சட்டென சமாளிக்க “அது அப்பவே மிஸ் ஆகிடுச்சு மாமா” என்றாள் வரு.

“எப்படி?” என்ற யாதவ் அன்றைய நாளை நினைவில் கொண்டுவர முயற்சிக்க…

“இப்போ எதுவும் யோசிக்காதடா… உன்னுடைய திங்க்ஸ் நான்தான் கலெக்ட் பண்ணேன். அதில் மொபைல் இல்லை” என்றபடி வந்தான் விஷ்.

“ஹோ” என்று விஷால் சொல்லியதை ஏற்ற யாதவ், “கிவ் யூவர் மொபைல்” என்றான்.

விஷாலும் யோசிக்காது ஏனென்று கேட்காது தன்னுடைய சட்டை பையிலிருந்து எடுத்து நீட்டினான்.

நிகிலாவின் எண் விஷாலும் வைத்திருக்க உடனடியாக அனைவரின் முன்பும் அவளுக்கு அழைத்துவிட்டான்.

‘தன்னை காதலிக்கிறாள். தனக்காக உயிரைவிடவும் துணிந்திருக்கிறாள். ஆனால் தான் மருத்துவமனையில் இருக்கும்போது ஒருநாள் கூட வந்து பார்க்கவில்லையே! இடைப்பட்ட நாளில் ஏதேனும் நடந்துவிட்டதா?’ என்று தனக்குள்ளே குழப்பம் ஏற்பட, வீட்டில் இருப்பவர்களிடமோ ஜான் மற்றும் விஷாலிடமோ கேட்டால் சொல்ல மாட்டார்களென்று அவர்களிடமே பேசி தெரிந்துகொள்ள நினைத்தான்.

மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டது. யாதவ் ஹலோ என்றுகூட சொல்லி தன்னை அடையாளப்படுத்தவில்லை. நிகிலாவே பேசினாள்.

எடுத்ததும் “எதுக்கு கால் பண்ணியிருக்க… இந்தமுறை உன் ஃபிரண்ட் உன்னை தூது பேச சொன்னானா” என்று ஆரம்பித்தவள், “அதான் அவன் வேண்டான்னு முகத்துக்கு நேராக சொல்லிட்டனே அப்புறமும் எதுக்கு காதலிக்கவே தெரியாதவனுக்காக ஆளாளுக்கு என்கிட்ட கெஞ்சிட்டு இருக்கீங்க” என்று மிதப்பாகக் கேட்டு, “இனி அவனை ஏத்துக்கன்னு யாராவது வந்தீங்க அவ்வளவுதான்” என்றவள் அவனை பேசவே விடாது வைத்துவிட்டாள்.

யாதவின் முகத்தையே பார்த்திருந்தவர்களுக்கு அவனின் முகம் பிரதிபலித்த பாவனைகளுக்கு அர்த்தம் விளங்கவில்லை.

நிகிலாவின் குரல் கேட்டதும்… உள்ளுக்குள் அருவெறுப்பை அவனை அறியாது உணர்ந்தவன், அவள் பேச பேச… அன்று கடற்கரையில் அவள் பேசிச் சென்றது… அதற்கு அவன் அழுது கரைந்தது வரை காட்சி பிம்பங்களாக கண் முன்னே விரிய… அதனை தாங்க இயலாது மனதில் அழுத்தம் ஏற்பட்டு தலையில் வலியெடுக்க அவனின் நினைவுகள் அத்தோடு நின்றுவிட்டது.

அடுத்து என்னவென்று எவ்வளவோ முயன்றும் வலி அதிகமாகியதே தவிர அதற்கடுத்த நிகழ்வுகள் உருவம் கொள்ளவில்லை.

அழுத்தத்தின் தாக்கத்தில் யாதவின் உடல் முழுக்க வியர்த்து கொட்ட அனைவரும் பதறி அவனின் அருகில் வர கைநீட்டி தடுத்தவன், விஷாலிடம் அலைபேசியை நீட்டினான்.

யாதவின் கண்கள் சிவந்து அதில் அவ்வளவு கோபம் தென்பட்டது.

கை நீட்டிய விஷாலின் கையில் போனை வைத்த யாதவ்…

“நிகிலாவோடு பிரேக்கப் ஆகிருச்சா? ஏன்?” என்று சாதரணமாகக் கேட்டான். நொடியில் மாறியிருந்தான்.

யாதவின் கேள்வியில் வரு உயிரோடு மரித்தாள். பொங்கி வரும் அழுகையை அடக்க வழியின்றி அங்கிருந்து வேகமாக ஓடிவிட்டாள்.

ஆதி கண்ஜாடை செய்ய…

“ம்… பட் உங்களுக்குள்ள என்ன பிராபிளம், ரீசன் எங்களுக்கு தெரியாது” என்ற விஷால் விட்டால் போதுமென்று அங்கிருந்து நழுவினான்.

அதனை இப்போது நினைத்த யாதவிற்கு அதேபோன்று வருவின் நினைவுகளும் வந்தால் நன்றாகயிருக்குமென்று தோன்றியது. எவ்வளவோ யோசித்தும் கலங்கிய பிம்பங்கள் தெளிவில்லாமல் முற்றுபெற மனதளவில் வெகுவாக சோர்ந்து போனான்.

தன் முன்னே மேசையில் வீற்றிருந்த வருவின் அறையின் திறவுகோலை கையிலெடுத்தவன் மெல்ல மாடியேறினான்.

அவனுள் திக் திக் நிமிடங்கள் தான். கதவை திறந்ததும் என்ன பூதம் வருமோ என்கிற படபடப்பு.

மெல்ல கதவினை திறந்தவன் உள் நுழைய… அடுத்த கணமே கண்கள் விரிய உறை நிலைக்குச் சென்றிருந்தான்.

அறை முழுவதும் அவர்களின் பிம்பங்களே சட்டத்தில் அடைக்கப்பட்டு மாட்டியிருந்தன. அவனால் கற்பனையிலும் நம்பிட முடியா காட்சிகள்.

இவையனைத்தும் இருவரும் ஒன்றாக வாழ்ந்த யாதவின் அறையில் இருந்தவை. அவனுக்கு அவளே நினைவில் இல்லாதபோது இவையெல்லாம் அங்கெதற்கென்று அவன் மருத்துவமனைவிட்டு வருவதற்கு முன் அனைத்தையும் மாற்றியிருந்தாள்.

ஒவ்வொரு புகைப்படத்தின் அருகிலும் சென்றவன் நம்ப முடியாது தொட்டு தொட்டு பார்த்தான். அத்தனையும் அவ்வளவு நெருக்கமாக, அவர்களின் காதலை வெளிப்படுத்துவதாய்.

அவன் கண்களே அவற்றை நம்புவதா வேண்டாமாயென்று குழம்பியது.

யாதவ் வருவின் கழுத்தில் தாலியிடும் அழகிய தருணம் புகைப்படத்தில் இருக்க… அம்மம்மா இருவரின் கண்களிலும் தான் எத்தனை காதல். விழிகள் நான்கும் ஒன்றையொன்று சந்தித்திருக்க அப்பட்டமாக காதல் மின்னியது.

‘வரு மீது தனக்கு இவ்வளவு காதலா?’ அவனின் மனமே அவனிடம் கேள்வி கேட்டது.

திருமண புகைப்படங்கள் மட்டுமில்லாது இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட பல சுயமிகள் இடம் பெற்றிருக்க… அவை யாவும் அவர்களின் மண வாழ்கையின் சந்தோஷத்தை அவனுக்கு எடுத்துக் கூறியது.

அதிலும் யாதவின் கன்னத்தில் வரு கிள்ளுவதை போன்றிருந்த படம் அவர்களின் நெருக்கத்தின் ஆழ உணர்வுகளை எடுத்துக்காட்ட யாதவிற்கு உள்ளுக்குள் ஏதோவொன்று உடைந்தது.

இதயம் பிளந்து வெளியே எகிறி குதிக்கும் போலிருந்தது.

‘வருவின் மீது அத்தனை காதலா எனக்கு. நானா இது?’

கேட்டவனுக்கு உண்மையென சாட்சியாக புகைப்படங்கள். அவன் கண்கள் பொய் கூறவில்லையே!

தலையை தாங்கி மெத்தையில் அமர்ந்துவிட்டான். தலையணை அடியில் ஏதோ தென்பட என்னவென்று எடுத்து பார்த்தவனுள் மாபெரும் பிரளயம்.

திருமண ஆல்பம். திருமணத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளும் ஆல்பத்தில் இடைபெற்றிருக்க ஒவ்வொன்றையும் திருப்பி திருப்பி பார்த்தான். அனைத்திலும் அவர்கள் இருவருக்குமிடையே வெளிப்படையாய் காட்சியளித்த அவர்களின் காதலே தெரிந்தது.

காதல் காதல் காதல் மட்டுமே. வருவின் கண்களில் வழியும் காதல் அவனின் நெஞ்சத்தை ஊடுருவியது. அவனை போட்டு தாக்கியது.

வருவின் காதில் யாதவ் ஏதோ ரகசியம் பேச… அதற்கு அவள் ஓரப்பார்வையால் அவனை முறைத்தபடி ஒருவிரல் நீட்டி மிரட்டும் தருணம் புகைப்படத்தில் இருக்க… ‘அந்நேரம் என்ன பேசியிருப்போம்’ என்று சிந்தனை ஓட அதனை கையில் எடுத்துக்கொண்டான்.

“காதலை கூட சொல்லவிடாத எனக்குள் இத்தனை காதலா?” நெற்றி விண்ணென்று தெறிக்க பால்கனிக்கு வந்தவன் அங்கிருந்த கூடை நாற்காலியில் அமர்ந்து புகைப்படத்தை வெறிக்கத் துவங்கினான்.

இத்தனை காதல் இருக்கும்போது இந்த இடைப்பட்ட நாட்களில் தன்னுடைய விலகல் உதாசீனம் அத்தோடு நேற்றைய பேச்சு வருவிற்கு எவ்வளவு வலியை கொடுத்திருக்கும்.

நினைக்கவே அவனின் முகம் சுருங்கியது.

அதுவரை அவளின் அருகில் அவன் உணர்ந்த உணர்வுகளுக்கு அர்த்தம் விளங்கிற்று.

‘எனகெப்படி வருவின் மீது காதல் வந்தது? எனக்கா நினைவு வராமல் யாரும் சொல்லப்போவதில்லை.’ என்று நினைத்தவனிடம் வேதனையின் சாயல்.

யாதவிடத்தில் பல கேள்விகள். வருவை எண்ணி சற்று கலங்கித்தான் போனான்.

‘எல்லாம் மறந்த நிலையில் தனக்கே இவ்வளவு வேதனை என்றால்… தங்களின் காதல் வாழ்க்கை நினைவிலிருக்கும் வருவிற்கு எந்தளவிற்கு வேதனை இருக்கும். அதிலும் என்னுடைய செயல்கள்.’ அவனின் நிலையைவிட இப்போது உண்மை தெரிந்த பட்சத்தில் அவனவளுக்காகத்தான் அதிகம் யோசித்தான். ஆனால் மற்றவருக்கான இந்த தவிப்பு தான் காதலென்று அவனுக்கு புரியவில்லை.

‘காதலில்லாத நிகிலாவின் நினைவே மறக்காதபோது இத்தனை தூரம் காதலித்து இரண்டு மாதங்கள் ஒன்றாக வாழ்ந்த வருவின் நினைப்பு மட்டும் ஏன் நினைவில் இல்லை?’ விதியின் விளையாட்டில் சில கேள்விகளுக்கு பதில் கிடைத்திடாது. அதுபோல் யாதவின் இக்கேள்விக்கும் விடையில்லை.

உச்சி வெயில் முகத்தில் சுள்ளென்று மோத… ‘இவ்வளவு நேரமாகிவிட்டதா?’ என்று உள்ளே வந்தவனின் விழிகளில் பட்டது மெத்தைக்கு அருகிலிருந்த சிறு மேசையிலிருந்த அவனின் அலைபேசி.

அலைபேசியை எடுத்துக்கொண்டு திரும்பும் போது தான் கவனித்தான் அருகிலிருந்த ஒன்றை.

எடுத்து பார்த்தவனின் கண்களில் கண்ணீர் கரை உடைத்தது.

*நிஜம் தொலைந்திட்ட தேடலில்
நிழலாய் அவள்.

நிஜம் உணரும் தருணத்தில்
காட்சிப்பிழையாய் அவள்.

நிஜம் உரசும் இதயத்தில்
மொத்த காதலுமாய் அவள்.*

 

   

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
35
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment