Loading

இதயம் 19 : (காதலோடு போராட்டம்)

இரண்டு மாதங்களில் அனைவரின் ஆசீர்வாதத்தோடு இரண்டு ஜோடிகளுக்கும் திருமணம் நன்முறையில் நடைபெற, செல்வி வருணவி சூர்யா திருமதி.யாதவாகவும், செல்வி. ஆதினி ஆதிதேவ், திருமதி.ஹரியாகவும் வாழ்வின் அடுத்த அத்தியாயத்திற்குள் அடி எடுத்து வைத்தனர்.

மேலும் இரண்டு மாதங்கள் கடந்திருந்தன…

உடலைத் துளைக்கும் குளிர் காற்றையும் பொருட்படுத்தாது… மனதின் புழுக்கத்தை அகற்ற மார்க்கமின்றி, வலி நிறைந்திட்ட கனத்த இதயத்தை வேரோடு பிடுங்கி எறிந்திடும் துணிவுமின்றி கருமை பூசிக்கொண்ட தன் சந்தோஷத்தின் வெளிச்சத்தை கரிய இருளில் தேடிக் கொண்டிருந்தாள் வருணவி யாதவ்.

மார்புக்கூட்டில் ஊசலாடிக் கொண்டிருந்த பொன் தாலி அவளின் வலியை மேலும் மேலும் கூட்டிக் கொண்டிருந்தது.

நேரம் கடந்து கரைய,

அவளைத் தேடி வந்தான் விஷால். அவளின் நிலையை எண்ணி அனைவராலும் வருந்த மட்டுமே முடிந்தது.

எத்தனை அழகாய் தொடங்கிய வாழ்வு. இப்படி பாதியில் ஊசலாடும் நிலையை யாரும் எதிர்பார்க்கவில்லை. இப்படி நேருமென்று முன்கூட்டியே அறிந்திருந்தால் தடுத்திருந்திருப்பரோ!

எல்லாம் விதி செய்யும் மாயம். அதில் காதல் பெரும்பாடு படுத்துகிறது.

இரண்டு மாதங்கள் வரு யாதவின் மண(ன) வாழ்வை கண் முன்னே கண்டவர்களுக்கு, வருவின் இன்றைய நிலை பரிதாபத்தை உண்டாக்கியது.

கண்களில் வழியும் கண்ணீரை பொருட்படுத்தும் நிலையில் அவளில்லை.

இதயம் அவளவனுக்காகத் துடித்துக் கொண்டிருக்க… அவளின் சிந்தை முழுதும் யாதவிடமே!

“எவ்வளவு நேரம் இப்படியே நின்னுட்டு இருக்கப்போற குட்டிம்மா?”

பின்னால் கேட்ட விஷாலின் குரலில் நினைவுகளை ஒதுக்கி வைத்து திரும்பியவள்,

“எப்போ வந்த?” எனக்கேட்டு அருகிலிருந்த கல் மேடையில் அமர்ந்தாள்.

“நான் வரது இருக்கட்டும். எதுக்கு இப்படி உன்னையே வருத்திக்கிற?” அவளின் அருகில் அமர்ந்தான்.

“ரொம்ப வலிக்குது விஷ்” என்றவள் அவனின் தோள் சாய்ந்தாள்.

“கிடைக்கவோ கிடைக்காதோன்னு ஏங்கி தவித்த என் மாமாவோட காதல். கிடைத்ததும் இல்லையென்று ஆனது அவ்வளவு வலிக்குது.

கண் இல்லாதவனுக்கு கண் கிடைத்து உடனே பறிபோன நிலை தான் எனக்கு.”

அவளிடம் ஒரு விரக்தி புன்னகை.

“மனசு விட்டுடாதே குட்டிம்மா! எல்லாம் சரியாப்போகும்.”

“எப்போ?”

….

“பதிலில்லை தானே!”

“குட்டிம்மா!”

“சரி மாமாக்கு எப்போ சரியாகும்?”

“இந்த நொடி கூட சரியாகலாம் அல்லது…”

விஷால் முடிக்காது இழுக்க,

“சொல்லு விஷ். இதுக்குமேல நான் கஷ்டப்பட என்னயிருக்கு?” எனக்கேட்டு அவன் சொல்ல வந்ததை சொல்லிட சொல்லி ஊக்கினாள்.

“வாழ்நாள் முழுக்க சரியாகாதும் போகலாம்.”

“அப்போ எல்லாம் அவ்வளவுதானில்லையா?”

“நம்பிக்கையை இழக்காதடா! உன் காதல் அவனை உன்னிடம் சேர்க்கும்.”

“அந்த நம்பிக்கையில் தான் நடமாடுறேன்” என்றவள், “மாமாக்கு மருந்து கொடுக்கணும்” எனக்கூறி நகர்ந்தாள்.

விஷாலிற்கு கண்ணீர் வரும் போலிருந்தது. ஆண்டவனை நிந்திக்கத் தோன்றியது. இந்நிலைக்கு யாதவிற்கு வருவின் மீது காதல் வராமலே இருந்திருக்கலாமே என்றிருந்தது. காதலை காட்டி அதை பறித்துக்கொண்டானே என்று யாதவின் மீது ஆத்திரமாக வந்தது. ஆனால் அவனும் என்ன செய்வான். யாதவின் நிலையறிந்தவன் விரைந்து சரியாக வேண்டுமென வேண்டிக்கொண்டான்.

தோட்டத்திலிருந்து வீட்டிற்குள் வந்த வரு எதிர்ப்பட்ட நிரலியிடம், “சாப்பாடு கொடுத்திட்டீங்களா அத்தை?” என்று வினவினாள்.

“அழைத்தேன். பிறகு சாப்பிடுவதா சொல்லிட்டான்.”

“ஹோ” என்றவள் தொய்ந்து போனவளாக நீள் இருக்கையில் அமர்ந்தாள்.

அப்போது அங்கு வந்த ஆதி தன்னுடைய செல்ல மருமகளின் தோற்றம் கண்டு வருந்தினார். இந்த சிறு பெண்ணை காதல் படுத்தி வைக்கிறதே என்று கவலை கொண்டார்.

வருவின் அருகில் வந்தவர், அவளின் தலை வருடி…

“வேண்டுமென்றால் யாதவிடம் நடந்ததை சொல்லிடலாம் டா. நீ இப்படியிருப்பதை பார்க்க முடியல” என்று தழுதழுத்தார்.

“வேண்டாம் மாமா” என்றவள் ஆதியின் மடியில் தலை சாய்த்து கண்களை மூடிக்கொண்டாள்.

“மாமா சொல்லுவதை கேளு வரு. இப்படி பிடிவாதம் பிடிக்காதே!” நிரலி வேதனையோடு கூறினார்.

“மாமாக்கு என்மீதிருக்கும் காதல் ஆழமானது அத்தை. அது அவரோட உணர்வுகளோடு, உயிரோடு கலந்திருக்கு. நிச்சயம் அவர் நினைப்பைவிட்டு போயிருக்காது. என்னைக்காவது மீண்டு வரும். நான் காத்திருக்கிறேன்.

நான் அவருடைய மனைவி. எங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்ற உண்மை தெரிந்து கடமையோடு அவங்க என்னுடன் வாழும் வாழ்க்கை எனக்கு வேண்டாம்.

எனக்கு என் மாமா முழுசா வேண்டும். காதலால் என்னைத் தாங்கிய என் யது எனக்கு வேணும்” என்றாள்.

“அதற்காக எத்தனை காலம் இப்படியே இருப்பது?” நிரலிக்கு இப்போது சிறு கோபம் வந்தது.

“பேபி…” ஆதி மனைவியை அதட்டினார்.

“பின்ன என்ன மாமா, அவனுக்கு இவங்களுக்கு கல்யாணம் ஆனதே நினைவிலில்லை. இவளிடம் ஆரம்பத்தில் விலகி இருந்த மாதிரி விலகியிருக்கான். இப்போ தான் அந்த நிகிலாவிடம் காதலை சொஎன்னவன் மாதிரி அவள் நினைவா சுத்துறான்.

உண்மையை சொல்லலாம் என்றால் இவ விடமாட்டேங்கிறா.” சலிப்பாகக் கூறினார்.

“உண்மையை சொல்லிடலாம் அத்தை. ஆனால், அதன் பின்னர் அவங்க உணர்வோடு போராடி. நிஜத்திற்கும் நினைவிற்கும் இடையில் அல்லாடி மன அழுத்தத்திற்கு போயிடுவார். அது அவருக்கு நல்லதில்லை. மொத்தமா அவரின் நினைவுகள் அழிய காரணமாகிடும். டாக்டர்ஸ் சொன்னது நினைவில்லையா?”

“இல்லாமல் என்ன? உன்னை இப்படி பார்க்க முடியலையே குட்டிம்மா!” நிரலியிடம் கேவல் வெளிப்பட்டது.

“பேபி…”

“அய்யோ சாமி… நான் அழல போதுமா? அழக்கூட உரிமையில்லாமல் போய்விட்டது. மாமனும் மருமகளும் என்னவும் பண்ணுங்க” என்றவர் கோபத்தோடு அங்கிருந்து சென்றிட, அங்கே பேரமைதி.

“வரு…”

அந்த அமைதியை கிழித்துக்கொண்டு ஒலித்தது யாதவின் குரல்.

ஆதியின் மடியில் தலை வைத்திருந்தவள் பதறி எழுந்து, யாதவின் அறை நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள்.

“மாமா?”

“நீதானே எனக்கு டேப்லெட்ஸ் எல்லாம் கொடுக்குற. நேரமானா அதை சரியா செய்ய முடியாதா?” என்று கோபமாகக் கேட்டவன்,

“தலைவலி உயிர் போகுது” என்று தலையை இரு கைகளாலும் தாங்கியவாறு மெத்தையில் அமர்ந்தான்.

“அச்சோ தலை வலிக்குதா மாமா. சாரி… சாரி” என்றவள் வேகமாக அவனின் மாத்திரைகள் அடங்கிய பெட்டியைத் திறந்து தலைவலி வந்தால் கொடுக்க வேண்டிய மாத்திரையை எடுத்து அவனின் கையில் கொடுத்தவள் மற்றொரு கையில் நீர் நிறைந்த கண்ணாடி குவளையை கொடுத்து… அவன் மாத்திரை போடுகிறானா என்பதை கவனியாது அங்கிருந்து வேகமாக வெளி வந்தாள்.

வந்தவள் கிச்சனிற்குள் நுழைந்து பிளேட் ஒன்றை எடுத்து அதில் அவன் உண்ணுமளவிற்கு உணவினை வைத்தவள் அதே வேகத்தோடு யாதவின் அறைக்குச் சென்றிருந்தாள்.

வரவேற்பறையில் அமர்ந்திருந்த ஆதிக்கு வரு அறைக்குள் நுழைந்ததும் அவன் கத்தியதும் கேட்டது, இப்போது வருவின் செயலும் புரிந்தது. வருவின் காதல் ஆதியையே பிரமிக்க வைத்தது.

உண்மையில் வரு மனைவியாக அமைய யாதவ் தவமிருந்திருக்க வேண்டுமென்றே ஆதிக்குத் தோன்றியது.

மாத்திரையை விழுங்கிய யாதவ், வலி கொஞ்சம் மட்டுப்படவும் ஆசுவாசமடைந்தான். தலையணையை உயர்த்தி வைத்து, கால் நீட்டி சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டான்.

பால்கனி கதவு திறந்திருக்க சில்லென்ற வாடை காற்று அவன் மேனி தீண்டியது. அதன் இதம் அவன் உணரவில்லை. அவனின் மனதின் அலைப்புறுதல் அவனை நிகழ் தொலைக்கச் செய்திருந்தது.

இப்போதிருக்கும் யாதவ் வருவுடன் கூடிய காதல் வாழ்வை முற்றிலும் மறந்தவன். அவன் நினைவில் காதலியாக இருப்பது நிகிலா. நிகிலா அவனை வேண்டாமென்று விட்டுச்சென்ற இடத்தில் அவனின் நினைவுகள் தேங்கிவிட்டன.

இப்போதும் நிகிலா மீது காதல் இருக்கிறதா என்றால் இல்லையென்று தான் சொல்வான். காதலியென்று சொல்லிக்கொண்டிருந்த காலங்களிலேயே நிகிலாவின் நினைவின்றி இருந்தவன், வேண்டாமென்று சென்றவளையா நினைத்துக் கொண்டிருப்பான். ஆனால் அப்போது அடுத்து என்னவென்று சிந்தித்து உண்மையான அன்பினை புரிந்துகொண்ட யாதவின் மனம் இப்போது நிகிலாவின் மீது கோபம் மட்டுமே கொண்டு, அடுத்து என்பதை யோசிக்க மறந்து போனது.

ஆனால் வருவை பார்க்கும் போதெல்லாம் இடியென இடிக்கும் இதயத்தின் அதிர்வு தெரியாது குழம்பினான்.

வரு அவனிடம் காதல் சொல்ல வந்தது, சொல்லவிடாது மறுத்து இவன் சென்றது. திரும்பி வந்தபோது நடனம் கற்றுக்கொள்வதற்காக வரு தன் வீட்டில் தங்கியிருக்கிறாள் என்பது வரை நினைவு இருக்கிறது. ஆனால் அவளுடன் கொண்ட காதல் வாழ்ந்த வாழ்வு யாவும் நினைவிலிருந்து வெகுதூரம் சென்றிருக்க, அவளிடம் அப்போது காண்பித்த விலகளையே இப்போதும் காண்பிக்கிறான்.

ஆனால் இப்போது காண்பிக்கும் இந்த விலகல் அவனை வதைக்கிறது. கொல்லாமல் கொல்லுகிறது. வருவின் அருகாமை எதையோ உணர்த்த முற்படுகிறது. அவளின் வாசம் மூச்சடைக்கச் செய்கிறது. அவனை மீறிய அவனின் உணர்வுகள் அவளிடம் சரணடையத் துடிக்கிறது. காரணம் புரியாது தவிக்கிறான்.

அதனாலே அவளிடத்தில் கோபம் எனும் திரையை முன் காட்டுகிறான்.

வேறொருத்தியை காதலியாக நினைத்த இடத்தில் இன்னொருத்தியை வைத்து பார்க்க… காதல் பெற்றோருக்கு பிறந்த அவனால் முடியவில்லை.

முன்னது கொண்டது காதலேயில்லை என்று ஆராயும் நிலையில் இப்போது அவனில்லை என்பதே உண்மை.

கண்களை மூடியவனின் நினைவுகளில் கடந்த சில தினங்களாக  வரு அவனிடம் காட்டும் அக்கறையும், பார்வையால் வீசும் காதலும், ஏதோ சொல்லத்துடிக்கும் அவளது இதழ்களும் வந்து வந்து போக… மொத்தமாக நிலை குலைந்து போனான்.

‘குட்டிப்பிசாசு…’ அவனின் நினைவுகளை மழுங்கச் செய்யும் வருவின் மீது கோபம் கோபமாக வந்தது.

“மாமா…”

“என்ன?” கண்களைத் திறக்காது கேட்டான்.

“சாப்பாடு…”

“நான் கேட்கலையே!”

“டேப்லெட்ஸ் போட்டீங்களே! ஹெவி டோஸ்…”

“ஓகே… வெல்” என்றவன் இமை திறந்து அவளின் கையிலிருந்த தட்டினை வாங்கி உண்ணத் துவங்கினான்.

நகர போனவளை… “வெயிட் பண்ணு பிளேட் எடுத்திட்டு போயிடு” எனக்கூறி தடுத்திருந்தான்.

மெல்ல தலையசைத்தவள் அவனுக்கு நேரெதிர் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள். கையால் அனைத்தும் செய்ய முடிந்தாலும் இன்னும் வலி இருந்தது. அதனால் பொறுமையாகவே உட்கொண்டான்.

அவ்வறை அவளுக்கு அவனுடனான வாழ்வை நினைவு படுத்த, தானாக கண்கள் கலங்கின. அவனுக்குத் தெரியாது அதனை துடைத்தவள், இருவரும் ஒருவரது அணைப்பில் மற்றொருவர் அமர்ந்து பல மணி நேரம் கதை பேசும் பால்கனி இருக்கையில் தொடர்ந்து அவர்களின் ஆனந்த வாழ்விற்கு சாட்சியாக இருந்த அறையின் ஒவ்வொரு மூலையும் வலம் வந்தவளின் பார்வை யாதவின் மீது நிலைக்குத்தியது.

உண்டு முடித்தவன் நிமிர்ந்து பார்க்க… கன்னம் தாங்கி அமர்ந்து தன்னையே பார்த்திருக்கும் வருவின் தோற்றம் அவனின் மனதை பிசைவதாய். அவளின் பார்வை அவனின் இதயத்தை பிளப்பதாய்.

‘செல்லம்மா…’ அவனின் காதில் அவனது குரலில் ஓங்கி ஒலிக்க, யாதவின் உடல் நடுங்கியது.

“என்னதிது?” என்று கேட்டுக்கொண்டவன், தலையை உலுக்கி தன்னை சமன் செய்தான்.

அவனே ஒரு நரம்பியல் நிபுணர். அவனுக்கும் அவனின் நிலை தெள்ளத்தெளிவாக தெரிந்தது தான். குறுகிய காலம் நினைவில் இல்லை என்பது தெரிந்தும்… அதனை யோசிப்பதால் மன அழுத்தம் ஏற்படும், தலைவலிக்கும் அதனால் மூளையில் நரம்பு மண்டலம் பாதிக்கலாம் என்று தன்னைக் கட்டுப்படுத்தி யோசிக்காமல் இருக்க பெரும்பாடு பட்டுக்கொண்டிருக்க…

நினையா நினைவாக வரு ஊர்வலம் போக,

என்ன ஏதென்றே புரியாத தன்னுடைய இயலாமையை வருவிடத்தில் கோபமாக வெளிப்படுத்தினான்.

“பார்த்து முடிச்சிட்டன்னா இந்த பிளேட் எடுத்திட்டு போ!”

அவனின் குரலில் திடுக்கிட்டவள் சுயம் மீண்டு, “சாரி” எனக்கூறி அவனருகில் வந்து பிளேட்டினை எடுத்துக்கொண்டு திரும்ப…

“இன்னுமா நீ என்னை காதலிக்கிற?” எனக் கேட்ட அவனின் வார்த்தையில் அதிர்ந்து சமைந்து நின்றாள்.

****

“உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.”

தான் அறைக்குள் வந்ததும் வழக்கம்போல் வெளியே செல்லும் மனைவியிடம் பேசினான் ஹரி.

திருமணத்தன்று ஆதினி ஹரியின் அருகில் இருந்தது. அதன் பின்னர் அவனிருக்குமிடத்தில் நிச்சயம் அவள் இருக்க மாட்டாள். அவனிருக்கும் நேரம் அவள் அறைக்குள் வருவது உறங்க மட்டுமே! மெத்தையில் இவள் ஒரு புறம் அவன் மறு புறம்.

இந்த இரண்டு மாதங்களில் இருவரும் பார்த்துக்கொண்ட நேரத்தையே விரல் விட்டு எண்ணி விடலாம்.

முடிந்தவரை ஹரியை பார்ப்பதையே தவிர்த்தவள் அவனுடன் இருக்கும் நிகழ்வுகள் நேராமல் பார்த்துக்கொண்டாள்.

ஆதினிக்காக வெளிநாடு செல்வதை தவிர்த்தவன் இங்கேயே தன் பணியை மாற்றிக்கொண்டான்.

அவளின் ஒரு பார்வை கிட்டாதா என தினம் தினம் ஏங்குகிறான். பேச முயற்சிக்கையில் கண்டுகொள்ளாது செல்லும் மனைவியை என்ன செய்து சமாதானம் செய்வதென்று தெரியாதவன் இன்று எப்படியும் பேசி எல்லாம் சரிசெய்திட வேண்டுமென்ற முடிவுடன் அவளை நிறுத்திவிட்டான்.

“எனக்கு பேச ஒன்னுமில்லை.”

“பட் எனக்கு நிறைய இருக்கு” என்றவன், “என்னை கொஞ்சம் பாரு” என்று இரைஞ்சினான்.

ஆதினி அசையாது நின்றாள்.

“என்ன பேசணும். பேசிட்டால் கிளம்பிடுவேன்.”

ஹரிக்கு பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக எல்லை கடந்தது.

கை விரல்களை மடக்கி சுவற்றில் ஓங்கி குத்தியவன், “நீ போலாம்” என்றான்.

குத்தியதில் அவனுக்கு வலித்ததோ இல்லையோ அவளுக்கு நிறையவே வலித்தது.

“உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?” கேட்டவளுக்கு அவனின் அருகில் சென்று கையினை தடவிக் கொடுக்கும் வேகம். முயன்று கட்டுப்படுத்தி விலகி நின்றாள்.

“ஆமான்டி பைத்தியம் தான். உன் மேல்.” அவன் சொல்லிய வேகம் கண்டு அவளே அஞ்சினாள்.

“டயலாக் நல்லாத்தான் இருக்கு.” அவளிடம் நக்கல் தொனித்ததோ!

வேகமாக அவளருகில் வந்தவன், அவள் தாடையை அழுந்த பற்றி… சுவற்றில் சாய்த்து, “எதுடி டயலாக்… இன்னும் கொஞ்சநாள் நீ இப்படியே இருந்தாக்கா முழு பைத்தியம் ஆகிடுவேன்டி. ஏன்டி இப்படி படுத்துற?” என ஆவேசமாக வினவினான்.

அவளின் இமை தாழ்ந்தே இருக்க…

“என்னை பாருடி” என்று அதட்டினான்.

அவள் அவனுக்கு உடன்படுவதாக இல்லை.

“பிளீஸ் டி. புரிஞ்சிக்கோ. நீயில்லாம முடியலடி. அட்லீஸ்ட் என்னை பார்க்கவாவது செய். நான் சொன்னது தப்புதான். மன்னிச்சிடுடி. வேணுன்னா உன் காலில் விழவா?” எனக் கேட்டவன், அடுத்த கணம் சொன்னதை செய்திருந்தான்.

கணவன் காலில் விழுந்ததும் பதறி விலகியவள்,

“அச்சோ என்ன பண்ற… எழுந்திரு… எழுந்திருடா” என்றாள்.

“என் ஆதும்மா எனக்கு வேணும். சரி சொல்லு எழுந்துக்கிறேன்.” அவனது பிடியில் அவன் நிலையாக நின்றான்.

“ஏன்டா இப்படி தொல்லை பண்ணுற” கேட்டவள் தரையில் அவன் முன் அமர்ந்து கொண்டாள்.

“சாரிடி” என்றவன் நிமிர்ந்து அவள் முகம் காண, அவளோ முகம் திருப்பினாள்.

“இன்னும் என்னடி பண்ணனும். நான் பண்ணதுக்கு ரிவெஞ்சா?” என அவன் கேட்க,

“ஆமா” என்று டக்கென பதில் கூறினாள் அவள்.

“ராட்சசி” என்று முணுமுணுத்தவன் “லவ் யூ டி” என்க,

“ஐ ஹேட் யூ” என்று பதில் வழங்கியவள் எழுந்து சென்று மெத்தையில் படுத்துக்கொண்டாள்.

“மேடமுக்கு மன்னிக்குற ஐடியா இல்லையா?”

“சுத்தமா இல்லை” என்றவள் போர்வையை இழுத்து போர்த்தினாள்.

“சரி அப்போ நான் திரும்ப ஃபாரின் போறேன்.”

“கொன்னுடுவேன்.” அவன் சொல்லி முடிக்குமுன் எழுந்து அமர்ந்தவளின் முகத்தில் அப்படியொரு கோபம்.

“உனக்குத்தான் என்னை பார்க்கவே பிடிக்கலையே, அப்புறம் எதுக்கு நான் இங்கிருக்கணும்.”

“நான் சொன்னனாடா… உன்னை பிடிக்கலன்னு” என்றவள் எழுந்து வந்து அவனின் டி ஷர்டை இரு கைகளாலும் பற்றி, அவனின் முகம் பார்த்து “உன்னை… இந்த மூஞ்சியை ரொம்ப பிடிக்கும். உன்னை பிடிச்சளவிற்கு யாரையும் பிடிக்காது.

உன் மேல அப்படியொரு லவ். எப்படின்னு எனக்கே தெரியல. நீ பேசிட மாட்டியா? என் லவ் அக்செப்ட் பண்ணிக்க மாட்டியான்னு எத்தனை நாள் தவிச்சிருக்கேன் தெரியுமாடா?

ஒரு ரெண்டு மாசமே உன்னால தாங்கிக்க முடியலையே! ரெண்டு வருசத்துக்கு மேல நான் காத்திருந்தேனே அதுக்கு என்னடா பதில் சொல்லப்போற… ஹாங்…

என்னோட லவ் உனக்கு தொல்லையா தான தெரிஞ்சுது. அப்போ நான் இப்படித்தானே ரியாக்ட் பண்ண முடியும்.

பெருசா வந்துட்டான். போடா போ. எங்கையோ போறேன்னு சொன்னியே போ.”

மனதில் இருந்த அழுத்தம் வெளியேறிவிட்டதால் அவள் தெளிவடைந்திருந்தாள்.

அவள் வெளிப்படையாக பேசியதில் ஹரிக்கு தான் அதிக நிம்மதி.

“அதான் சாரி சொல்லிட்டனேடி.”

“உன் சாரியை நீயே வச்சிக்கோ” என்றவள் அங்கிருந்த இருக்கையில் சென்று அமர, அவளின் பின்னே சென்று அவளின் காலுக்கு கீழே அமர்ந்தவன் அவள் மீது அவன் கொண்ட காதலை கூறலானான்.

*இதயம் சில்லு சில்லாய்
நொறுங்கிட…

காயம் தந்த காதலே,
மருந்தாய்!

மரிக்க காரணமாகிய காதலே,
சுவாசமாய்!

நொறுங்கியது
இதயமல்ல,
நேசம் விளைத்த
காதல்.*

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
28
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்