Loading

இதயம் 18 : (முதல் காதல்)

ஆதியும் நிரலியும் அருகருகே நின்றிருக்க… அவர்களுக்கு முன் வரு நிமிர்ந்து நின்றாள்.

அனைவரின் பார்வையும் வருவின் மீதே!

காதலை மன உணர்வுகளால் பரிமாறிக் கொண்ட பின்னர்… அவளின் அடுத்த கட்டம் என்னவாக இருக்குமென்று ஓரளவு யூகித்திருந்த யாதவ் இமை கொட்டாது தன் பார்வையை ஆர்வத்துடன் தன்னவளின் மீது நிலைக்கச் செய்திருந்தான்.

ஆதியையும் நிரலியையும் நேருக்கு நேர் பார்த்தவள்,

தனக்கு பின்னால் சற்று தள்ளி விஷாலுடன் நின்றிருக்கும் யாதுவை திரும்பி ஒரு கணம் ஆழ்ந்து நோக்கினாள். தன் இதயத்தில் தினம் தினம் ஆயிரமாயிரம் யுத்தங்கள் புரிந்து கொண்டிருப்பவனிடமிருந்து பார்வையை விலக்காது…

“எனக்கு மாமாவை கட்டிக்கணும் ஆசை. கட்டித்தறீங்களா?” வார்த்தையில் அவ்வளவு தெளிவு. குரலில் சிறு பிசிறின்றி யாசிப்பையும் நேர்கொண்டு கேட்டிருந்தாள்.

யாசித்தல்… காதலில் மட்டுமே கர்வம் வாய்ந்தது. தானென்கிற அனைத்தும் துறந்து தான் கொண்ட காதல் வேண்டுமென்று நிற்பது அவ்வளவு எளிதல்ல. அதனையும் எளிதாய் கையாண்டாள் வருணவி.

அவளின் யாசிப்பில் அவள் கொண்ட அளப்பரிய காதலை உணர்ந்த யாதவின் கண்களும் பனித்தன. அசைவின்றி அவனவள் கொண்ட காதலால் உறைந்து போனான். நகர்ந்து அவளிடம் செல்ல மூளை அறிவுறுத்தியும் மனம் செயலின்றி நின்றது.

“எனக்கு மாமான்னா அவ்வளவு இஷ்டம். சின்ன வயதிலிருந்தே! எனக்கு மாமாவை கட்டிக்கணும். அவங்க கையால் என் கழுத்தில் தொங்க தொங்க தாலியை கட்டிக்கணும். அவங்க விரலால் வைக்குற நெற்றி குங்குமம் எனக்கு வேணும். இதெல்லாம் இது மட்டும் தான் என்னோட விருப்பம், கனவு. இதை நிறைவேற்றித் தறீங்களா?”

சற்றும் யாதவின் முகத்திலிருந்து தன் பார்வையை வரு மாற்றவில்லை.

வரு “யாதுவை கட்டித்தறீங்களா?” என்று கேட்டதுமே ஆதியின் இதழில் உதயமான மென் புன்னகை வரு கேட்டு முடித்த பின்னரும் நீடித்தது.

நிரலி தன் மருமகளை வாரி அணைத்துக் கொண்டார். முகம் முழுக்க முத்தமிட்டு தன் மகிழ்வையும் சந்தோஷத்தையும் ஒருங்கே காட்டினார்.

பெரியவர்களின் முகத்தில் விரவிய சிரிப்பே வருவிற்கும், யாதவிற்கும் அவர்களின் சம்மதத்தைக் கூறிட, விஷால் நண்பனை தூக்கி சுற்றினான்.

கல்பனா மகளின் அருகில் வந்து அவளின் கரம் பற்றிக்கொள்ள, சூர்யா மகளின் தலை வருடினார்.

“அப்புறம் என்னப்பா ஆதி… ரெண்டு கல்யாணத்தையும் ஒட்டுக்கா நடத்திடுவோம்.” வேலு தன் மீசையை நீவியபடி கூறினார்.

“எவ்வளவு தைரியம். மாமாவிடமே வந்து அவரு பையனையே கட்டிக்க கேட்குற?” நிரலி வருவை கேலி செய்ய,

“பின்ன உன்னை போலவே மறைந்து நின்னு பார்க்க மட்டும் செய்யனுமா?” என்று மனைவியை வார்த்தையால் ஆதி வார, அங்கே ஒரு சிரிப்பலை எழுந்து அடங்கியது.

தான் நின்ற இடத்திலிருந்து வருவை பார்வையால் அழைத்த ஆதி, இருக்கையில் அவளை அமர வைத்து, தானும் அமர்ந்தார்.

“உனக்கு யாதுவை கட்டிக்க சம்மதம். அவனுக்கு?” மகனின் காதல் தெரிந்தும் கேள்வியாய் மகனை நோக்கினார்.

“மாமாக்கும் சம்மதம்.” மெல்லொலியில் மொழிந்தாள் பாவை.

“அவனே சொன்னானா?”

“காதலை வாய் வார்த்தையா சொல்ல வேண்டுமென்று இல்லை.”

“அப்போ யாது உன்மீதான காதலை உணர்த்திட்டான்னு சொல்ற!”

“ம்.”

“எந்தவொரு பெண்ணுக்கும் தன்னுடைய கணவனுக்கு தான்தான் முதலாவதாக, முதல் காதலாக இருக்க வேண்டுமென்று ஆசை இருக்கும். அது தான் இயல்பு” என்ற ஆதி சிறு இடைவெளிவிட்டு,

“யாதுக்கு நீ முதல் காதல் இல்லை. தெரியுமா?” எனக் கேட்டார்.

ஆதி கேட்டதில் அங்கிருந்த அனைவரின் முகமும் சுருங்கி விட்டது. யாதுவைத் தவிர.

“உன் காதலுக்கு ஆதிப்பா எமனாக முடிவு பண்ணிட்டாரு நினைக்கிறேன்.” விஷால் யாதவின் காதில் முணுமுணுக்க, தந்தையின் மனமறிந்த யாதவ் சன்னமாக சிரித்து வைத்தான்.

இப்போது அவனுக்கு வேண்டியது வருவின் பதில் தான்.

முதலில் தான் கொண்டது காதலேயில்லையென யாதவால் வருவிடம் சொல்லிட முடியும். ஆனால் உண்மை தெரிந்து அவள் காட்டும் காதல் அவனுக்கு வேண்டாம். அவனின் நிறை குறைகளோடு வரு தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமென பேராசை கொண்டான். அதுவே வாழப்போகும் வாழ்விற்கு அடித்தளமாக அமையுமென்று நம்பினான். இதில் வரு கொண்ட புரிதல் தான் பின்னாளில் அவனின் முன் காதலை வார்த்தையால் கூட காட்டிடாத அன்யோன்யத்தை இருவருக்குள்ளும் ஏற்படுத்தும். ஒரு இடத்தில், நீ ஏற்கனவே வேறொரு பெண்ணை காதலித்தவன் தானே என்று வரு சிறு பார்வை பார்த்தாலும் யாதவ் இதயத்தில் மரித்திடுவான். அதற்காகவே தந்தையும் இவ்வாறு கேட்கிறார் என்பது புரிந்து வரு சொல்லப்போகும் பதிலுக்காகக் காத்திருந்தான்.

“தெரியும்.”

“தெரிந்தும்… அவன் தான் வேணுமா?”

“அவங்க, என் மாமா. எப்படியிருந்தாலும் எனக்கு வேணும்.” அழுத்தமாக திடமுடன் கூறினாள்.

அவள் திடம் கண்டு ஆதிக்கே வியப்பாக இருந்தது.

யாதவ் அந்நொடியே அவளை காற்றுக்கூட புக முடியா அளவிற்கு கட்டிக்கொள்ள வேண்டுமென பரபரத்தான்.

“முதல் காதலின் தேடலை உன்னிடம் காண்பித்தால்?”

“என் காதல் அவங்க முதல் காதலை மறக்கச் செய்திடும்.”

“திருமணத்திற்கு பிறகு ஏதோ ஒரு சூழலில் யாதவின் முதல் காதலை உன் மனம் சுட்டிக்காட்டினால் இருவரின் வாழ்வும் வீணாப்போகுமே!”

“வீணாகாமல் தாங்கி பிடிக்க… என் காதல் மட்டுமே போதுமானது.”

“ஆர் யூ ஷ்யர்?”

“எஸ்… டென் பெர்சென்ட்.”

ஆதியின் கேள்விகளுக்கு வரு சற்றும் சளைக்கவில்லை. எந்த இடத்திலும் யாதுவை விட்டும் கொடுக்கவில்லை.

“என்ன யாது… குட்டிம்மா செம ஸ்ட்ராங். நீயெப்படி?”

வருவின் பதில்கள் அனைத்தும் ஆதிக்கு நிறைவைத்தர மகனிடம் வினவினார்.

“நானும் ஸ்ட்ராங் தான் டாட்.”

யாதவ் சொல்லியதும் அனைவருக்கும் மன நிறைவு.

இரண்டு திருமணத்தையும் ஒரே நாளில் அடுத்தடுத்த முகூர்த்தத்தில் நடத்திட முடிவு செய்து கலைந்து சென்றனர்.

விஷாலிற்கு எல்லோரையும் விட அதிக மகிழ்வு.

வீணாக இருந்த தன்னுடைய நண்பனின் வாழ்வு வளம் பெறுவதை எண்ணி. அதனை உடனே ஜானிடம் பகிர்ந்துகொள்ள நினைத்தவன், அப்போதே புறப்பட்டு விட்டான்.

அனைவரும் தத்தம் அறைக்குள் சென்றதை உறுதி செய்த வரு, இன்னமும் தன்னிலை மாறாது தன்னையே பார்த்து நிற்கும் யாதவின் அருகில் வந்தாள்.

யாதவின் உயரத்திற்கு முகம் உயர்த்தி எறிட்டவள், அவனின் கன்னங்களை தன்னிரு உள்ளங்கையில் ஏந்தி, கண்ணோடு கண்கள் கலந்து…

“உங்களுக்கும் நானெதாவது சொல்லிக்காட்டிடுவேன் சந்தேகம் இருக்கா மாமா?” கண்களில் நீரில்லை. குரல் கரகரத்தது.

“அப்படியிருந்தால் சொல்லிடுங்க. கல்யாணமே வேண்டாம். இவ்வளவு நாள் காத்திருந்ததை போல் என்மீது நம்பிக்கை வரும்வரை இனியும் என்னால் காத்திருக்க முடியும்.

எனக்கு நீங்கதான் என்கிற நினைப்பு நெஞ்சுக்குழியில் இருக்கும் வரை, உங்க மீது நான் வைத்திருக்கும் காதல் மாறாது. குறையாது.”

வருவின் பேச்சில் யாதவ் வெகுவாய் நெகிழ்ந்திருந்தான். உண்மை காதல் ஒவ்வொரு நொடியும் எத்தகைய இன்பத்தை வாரி வழங்குமென்று வருவின் செயல்களாலும் பேச்சுக்களாலும் ஆழ்ந்து உணர்ந்து அனுபவித்தான்.

இதயத்தில் ஒருங்கே கொட்டும் மழையையும், சுட்டெரிக்கும் வெயிலின் நிலையையும் கண்டு ரசித்தான்.

அடுத்த நொடி, தன் விழி பார்த்து பேசியவளை இடையோடு கைகள் கோர்த்து இறுக்கி அணைத்து தன் உயரத்திற்கு தூக்கியவன் அவளின் நெற்றியோடு தன் நெற்றி முட்டி…

“இப்போவே கட்டிக்கலாம். நான் ரெடிடி பொண்டாட்டி” என்றான்.

“நிஜமா?”

“போலாமா?”

“எங்கே?”

“கட்டிக்க!”

பரவிய இதம் இதயம் தீண்ட இருவருமே அடுத்த வார்த்தைகளற்று மௌனம் காத்தனர்.

இரு மனங்களின் மத்தளம், நிசப்தத்தில் இருவரின் செவிகளை நிறைத்தது.

நீண்ட நிலையை கலைத்து இருவரின் நிலை மாற்றாது, தன்னுள் தன்னவளை பிணைத்தவாறே மெல்ல அடி வைத்து வீட்டு வாயில் கடந்து தோட்டத்திற்கு வந்திருந்தான் யாதவ்.

குளிர்காற்று ஊசியாய் உடலை குத்தியது.

“அச்சோ மாமா. இங்கெதற்கு? ரொம்ப குளிருது.”

மேலும் அவளை தன்னோடு ஒட்டிக்கொண்டவன், “இப்பவுமா?” என்றான் விஷமமாக.

“இப்போ இல்லை” என்றவள் அவனுக்குள் நெலிந்தாள்.

அவளின் அவஸ்தையை ரசித்தவன், தன்னவளின் உடல் மொழி அறிந்திட தவித்தான். தன் சுயம் மெல்ல கரைவதை தானே உணர்ந்தவன், மனமேயின்றி வருவை தோட்டத்தில் காற்றில் ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலில் அமர வைத்தான். இரண்டடி தள்ளி நின்றுகொண்டான்.

யாதவை விட்டு தள்ளியிருந்த போதும்… அவனின் உடல் உரசிய இடங்கள் அவளுக்கு குறுகுறுத்தன. அவனை பார்க்கவே அவளின் விழிகள் தயக்கம் காட்டின. இருவரின் மனமும் இருவரது ஸ்பரிசத்தை வெகுவாய் எதிர்பார்த்தது.

மீண்டும் அவனின் மார்போடு ஒட்டிக்கொள்ள பேரவா கொண்டாள். இருப்பினும் பெண்ணெனும் நாணம் தடுக்க கட்டுப்பாடாய் அமர்ந்திருந்தாள்.

அவளுக்கு முதுகு காட்டி, மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்றவனின் சிந்தனை வெகுதூரம் சென்றிருந்தது.

அவனின் அருகாமை எந்நொடியும் அவளின் கட்டுப்பாட்டை தகர்பதாய் இருக்க… அங்கிருந்து சென்றால் போதுமென்று தோன்றியது.

அவள் ஊஞ்சலிலிருந்து இறங்க முற்பட, இருளின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு ஒலித்தது யாதவின் குரல்.

“என்னுடைய முதலும் முடிவும் நீதான் சொன்னால் நம்புவியா செல்லம்மா?”

“மாமா!”

இதுவரை இல்லாத ஓர் நிம்மதி இதயத்தில் தானாய் முகிழ்ப்பதை வருவால் உணர முடிந்தது.

“என் முதல் காதல் நீதான். நீ மட்டும் தான்.” வெறி பிடித்தவன் போல் தலையை பிடித்துக்கொண்டு வானோக்கி கத்தினான்.

“யாதவ் காதல் கொண்டது வருவிடத்தில் மட்டுமே!” இயற்கையின் ஒவ்வொரு இடுக்கிலும் நுழையும்படி உரக்கக் கூறினான்.

“மாமா!”

“ஆமா செல்லம்மா…”

காதலென்று யாதவ் எண்ணிய காலத்திற்கு அவனின் நினைவுகள் சென்றன.

யாதவ் மூன்றாம் வருட கல்லூரி படிப்பில் இருந்த நேரம்,

நிகிலா முதல் வருடம்.

“ஹாய்.”

அன்று கல்லூரிக்கு தாமதமாக வந்த யாதவ், செய்முறை வகுப்பினை தவற விட்டுவிடக் கூடாதென்று அரக்கப்பரக்க நீண்ட எட்டுக்கள் வைத்து சென்று கொண்டிருக்க, அவனை தடுத்து நிறுத்தியது நிகிலாவின் குரல்.

கையில் கட்டியிருந்த வாட்சில் மணியை பார்த்தவன், நீ யார் என்பதைப்போல் வினா அடங்கிய ஆராய்ச்சிப் பார்வையை நிகிலாவின் மீது வீசினான் யாதவ்.

அவசரமாக இருந்த போதிலும் தன்னை மதித்து பேசுபவரை அவமதிக்க மனமின்றி நின்றிருந்தான்.

“அம் நிகிலா. பர்ஸ்ட் இயர்.”

“வெல்…”

நிகிலா கைகளை பிசைந்துகொண்டு தயங்கி நிற்க,

“நோட்ஸ் வேணுமா?”

ஜூனியர் மாணவர்கள் சீனியர் மாணவர்களிடம் முந்தைய வருட பாடக்குறிப்புகள் கேட்டு வருவதுண்டு, அந்த வகையில் தான் நிகிலாவும் வந்திருப்பதாக நினைத்து வினவினான்.

“ஐ லவ் யூ!”

மேற்கொண்டு யாதவ் பலவற்றை யூகித்து கேட்பதற்கு முன் சொல்லிவிட வேண்டுமென அவனை சந்தித்ததற்கான காரணத்தை கூறினாள்.

அவள் சொல்லியதும் அவ்வளவுதானே என்பது போல், நிகிலாவை பாராது கூட தன்னுடைய வேக எட்டுக்களுடன் சென்றிருந்தான்.

வகுப்பு முடிந்து இடைவேளையில் ஜான் மற்றும் விஷாலுடன் யாதவ் மரத்தடியில் அமர்ந்திருந்த போது அங்கு வந்தாள் நிகிலா.

“என்னடா நம்மளைத்தேடி ஒரு பொண்ணு வருது.” விஷால் ஜானின் காதை கடிக்க ஜானும் அதிசயமாக நோக்கினான்.

பெண்களிடத்தில் யாதவ் எவ்வளவு பிரபலமோ அதே அளவிற்கு அவர்களை நெருங்க விடாது தள்ளி வைப்பதிலும் யாதவ் பிரபலம். பெண்கள் என்றாலே பத்தடி விலக்கித்தான் வைப்பான். அதற்கு காரணம் தன் நிழல் கூட தன் மனதினை கொள்ளை கொள்பவளுக்குத்தான் என்றிருந்தான்.

யாதவ் உடன் வளர்ந்ததாலே மற்ற இருவருக்கும் பெண்கள் நட்பின்றி போனது. அதில் விதிவிலக்கு ரூபி. இவர்களுக்கு ஒரு வருடம் ஜூனியர்.

“யாராவது ரூபி ஃபிரண்டா இருக்கும் டா” என்ற ஜான், யாதவ் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தில் கண்ணை பதிக்க,

“யாதவ்” என்கிற நிகிலாவின் அழைப்பில் மூவரும் நிமிர்ந்து அவளை பார்த்தனர்.

“நீங்க?” யாதவ் கையிலிருந்த பென்சிலால் நெற்றியைத் தட்டினான்.

காலையில் பார்த்து அவனிடம் காதலை  சொல்லியிருக்க அவனோ தன் நினைவுகூட இல்லாது இருப்பது நிகிலாவின் அகங்காரத்தை சீண்டியது. இருப்பினும் அதனை வெளியில் காட்டாது தன்மையாக பேசினாள்.

“மார்னிங்… லவ்…”

“ஹோ…” என்றவன் எழுந்து சென்றுவிட்டான்.

அவனின் செயலில் மற்ற இருவரும் குழம்பி நிற்க, நிகிலா எப்படியும் அவனை தன்னிடம் காதல் சொல்ல வைத்திட வேண்டுமென்று வெறி கொண்டாள்.

உதாசீனம்… யாதவின் அப்பட்டமான உதாசீனம். அவளால் ஏற்க முடியவில்லை. அந்நொடி அவள் யாதவ் மீது கொண்ட காதலெல்லாம் எங்கோ சென்றிருந்தது.

படிப்பில் மட்டுமே பிடியாய் இருந்தவனுக்கு… காதலிக்க நேரமில்லை எனும் நிலைதான். அது அவளுக்கு உதாசீனமாகத் தெரிந்தது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, யாதவின் வகுப்பைத் தேடி மூச்சு வாங்க ஓடி வந்தாள் ரூபி.

ரூபி மூச்சு வாங்குவதை கண்டு ஜான் தண்ணீர் அடங்கிய போத்திலை அவள் முன் நீட்ட, அதனை மறுத்தவள்…

“யாதுண்ணா” என்றழைத்தாள்.

அப்போதுதான் அவளை கவனித்தவன்,

“ஹேய் ரூபி… உனக்கு கிளாஸ் இல்லையா?” என்றபடி எழுந்து வந்தவனை கைபிடித்து இழுத்துக்கொண்டு ஓடினாள்.

என்ன ஏதென்றே தெரியாது அவளின் பின்னால், ஜானும் விஷாலும் ஓடினார்கள்.

கல்லூரி மைதானத்தின் நடுவில் வானளவு உயர்ந்து நின்றிருந்த மிக உயரமான கடிகார கோபுரத்தின் உச்சியில் நின்றிருந்தாள் நிகிலா.

கல்லூரியின் மொத்த மாணவர்களும் அங்குதான் குழுமியிருந்தனர்.

“அங்க என்னடா செய்றாள் அவள்?”

விஷாலின் கேள்வியில் ஜான் அவனை முறைக்க,

“யாதுண்ணா லவ் பண்றன்னு சொல்லலைன்னா அவள் அங்கிருந்து குதிச்சிடுவாளாம்” என்றாள் ரூபி.

“ஹோ” என்று இழுத்த விஷால், ரூபி சொல்லியது புரிந்ததும் “என்னாது” என அதிர்ந்தான். ஜானிற்கு கூட அதிர்வு தான்.

ஆனால் யாதவ் படு கூலாக இருந்தான்.

அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் சென்று அமர்ந்தவன், “அவளை சீக்கிரம் குதிக்க சொல்லுடா” என்றான்.

“டேய் இவன் கொலை கேஸில் நம்மை உள்ளத்தள்ள பார்க்கிறான் டா.” விஷாலிற்கு பயந்து வந்தது.

“ச்ச… சும்மா இருடா!” ஜான் கத்தியிருந்தான்.

“இங்க பாருங்க எதுவா இருந்தாலும் பேசிக்கலாம். நீங்க இறங்கி வாங்க.” கிட்டத்தட்ட ஜான் நிகிலாவிடம் கெஞ்சினான்.

சுற்றியிருப்போர் அனைவரும் என்ன நடக்குமென்று ஆர்வமாக பார்த்திருந்தனர்.

“முடியாது. அவரை என்னை லவ் பண்ணுறேன்னு சொல்ல சொல்லுங்க!”

“டேய் ஒரு லவ் யூ தான்டா சொல்லிட்டு வாடா!” விஷால் யாதவிடம் சலிப்பாகக் கூறினான்.

சாதரணமாக சொல்லிடக்கூடிய வார்த்தையா அது.

“முடியாது.” பட்டென்று மொழிந்தான் யாதவ்.

“அவ முதலில் கீழிறங்கி வரட்டும். அதற்காகவாவது சொல்லுங்கண்ணா, மேனேஜமென்டிற்கு நியூஸ் போனால் உங்க படிப்பும் பாதிக்கும்.” ரூபி யாதவிடம் மன்றாடினாள்.

நிமிடங்கள் கடந்து செல்ல அவரவர் அவரவரது பிடியில் நிலையாய் நின்றனர்.

நேரம் நீள்வதை அறிந்த நிகிலா, ‘இவன் சொல்ல மாட்டான் போலிருக்கே! கீழே குதிச்சே ஆகணும் போலிருக்கே!’ என்று யாதுவை மனதில் வறுத்தெடுத்தாள்.

நிமிடம் ஒரு மணியாக மாறியதுதான் மிச்சம்.

“இது வேளைக்கு ஆகாது” என்ற யாதவ் “கிளாஸ் இருக்கு வாங்கடா” என அங்கிருந்து நகர…

யாதவ் திரும்பி செல்லயிருப்பதை உணர்ந்த நிகிலா… அவமானத்தோடு கீழே இறங்க திரும்பி அடி வைக்க முயற்சிக்கையில் கால் இடறி தரையில் தொப்பென்று விழுந்திருந்தாள்.

கீழிருந்து பார்ப்பதற்கு அவளாக விழுந்தது போலவே இருக்க… இதனை எதிர்பார்க்காத அனைவரும் அதிர்ந்து போயினர்.

யாதவ் கூட இவ்விடத்தில் தடுமாறி விட்டான்.

தலையில் ரத்தம் வழிய விழுந்து கிடைந்தவளை கண்டு பதறியவன், அவளை தூக்க முயற்சிக்க…

“டூ யூ லவ் மீ?” என திக்கித்திணறி வினவினாள்.

“இப்போ இதுவா முக்கியம்?” என்று அப்போதும் யாதவ் எரிந்து விழத்தான் செய்தான்.

“என்ன யாதவ் உனக்காக உயிரையே கொடுக்க குதிச்சிருக்காள்” என்று பலரும் நிகிலாவிற்கு ஆதரவு கரம் நீட்ட யாதவின் தலை தானாக சம்மதமென ஆடியது.

அதன் பின்னர் நிகிலா நலன் தேறி வரும்வரை யாதவ் தன்னால் தானென்று கடமையாக பார்த்துக்கொண்டான்.

அந்நாளில் காதலை சொல்லிவிட்டோம். இனி இவள் தான் தன்னுடைய காதலியென தன் மனதை சமன் செய்துகொண்டான்.

உணர்வுகளோடு அவனின் போராட்டம் உணர்ந்த ஜான், இது காதலில்லை என்று எத்தனை முறை எடுத்து சொல்லியும் யாதவ் அதனை ஆராயவில்லை.

“அந்த வயதில் அதுதான் காதலென்று இருந்துவிட்டேன்.” யாதவ் கூறி முடித்ததும் பின்னோடு அவனை பாய்ந்து அணைத்திருந்தாள் யாதவின் வருணவி.

“இதை முன்பே உன்னிடம் சொல்லியிருக்கலாம். ஆனால் எனது குறைகளோடு நீ என்னை ஏற்க வேண்டுமென நினைத்தேன்.”

“உன்கிட்ட உணர்ந்த காதலை வேறு யாரிடமும் என்னால் பெற முடியாது செல்லம்மா” என்றவன் திரும்பி அவளை இறுக்கிக்கொண்டான்.

இருவரின் கண்களையும் கண்ணீர் நிறைத்திருந்தது.

“லவ் யூ மாமா!”

“லவ் யூ டூ டா!” காற்றில் மரத்திலிருந்து அவர்கள் மீது கொட்டிய பூக்கள் இயற்கையின் ஆசீர்வாதமாய்.

நேசத்தால் இணைந்த காதல் வார்த்தைகளால் பகிரப்பட்டிருந்தது.

*முதலாகி
முடிவாகி நீ!

ஆதியில்
அந்தமாகி நீ!

நேசத்தில்
காதலாகி நீ!

மொத்தத்தில்
என்னுலகாகி நீ!*

Epi 19

இதயத்தில் யுத்தம் செய்யாதே 19

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
23
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்