இதயம் 17 : (இன்ப வலி)
வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் உற்சாகத்தோடு வளைய வந்து கொண்டிருந்தனர். ஆதியின் வீடே பரபரப்பாகக் காட்சியளித்தது.
பெண்கள் எல்லோரும் விருந்து சமைப்பதில் தங்களின் கை வரிசையை காட்டிக்கொண்டிருக்க, ஆண்கள் வீட்டை அலங்காரம் செய்வதாக பெயர் பண்ணிக்கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.
ஆதியும், ராகவும் ஒரு வழக்கு விடயமாக தங்களின் பேச்சினைத் துவங்க,
“இன்னைக்கும் இதை பேசனுமா?” என்று சூர்யா ராகவிடம் கடிந்துகொள்ள,
“அதை உன் மாமாவிடம் சொல்லு” என்றதும் சூர்யா கப்சிப்.
எத்தனை வயதானாலும் சூர்யாவுக்கு ஆதியிடமிருக்கும் பயம் கலந்த மரியாதை சற்றும் குறையவில்லை.
ஹரிணி ஆதியின் அருகில் வந்து,
“ஆதிப்பா ஹரி?” என கேள்வியாய் இழுக்க,
ஆதி வாசலை கை காட்ட, சரியாக ஹரி உள் நுழைந்தான்.
“ஷப்பா, இப்போதான் நிம்மதியா இருக்கு ஆதிப்பா… கடைசியில் அவனில்லாமால் சொதப்பிடுமோன்னு படப்படப்பா இருந்துச்சு” என்றபடி ஹரிணி எழுந்து சென்றாள்.
தயக்கத்தோடு வந்த ஹரியை தன்னருகில் அமர்த்திக்கொண்ட ஆதி, ராகவ் மற்றும் சூர்யாவிடம் தன் பேச்சினைத் தொடர்ந்தார்.
அங்கு நடைபெறும் யாவும் ஹரியை முள் மேல் நிற்க வைத்தது. சுருக்கென்று இதயம் தைத்துக்கொண்டே இருந்தது.
இதனையெல்லாம் காண முடியாதென்றுதான் ஹரி வெளியில் சென்றிருந்தான். ஆனால் ஆதி அதற்கு விடவில்லை.
“ஆதும்மா சும்மா சாதாரண புடவையை கட்டாதே! நான் இப்போ கொடுத்து விடுறேன்” என்று ஆதினியிடம் இன்டர்காமில் சொல்லியபடி நிரலி வரவேற்பறையில் அமர்ந்திருந்த ஆதியிடம் வந்தார்.
நிரலி பேசியது ஹரிக்கு தெளிவாகவே கேட்டிருக்க… மனம் கனத்தது.
‘அய்யோ.’ ஹரியின் மனம் சத்தமில்லாது அரற்றியது.
“இதை ஆதுகிட்ட கொண்டு போய் கொடுங்க… எனக்கு கிச்சனில் வேலையிருக்கு” என்று ஆதியிடம் புடவையை கொடுத்த நிரலி பார்வையால் ஏதோ கணவனிடம் பேசிச்செல்ல, ‘உன் பார்வை மொழி எனக்கு புரிந்தது’ எனும் விதமாக ஆதி அதனை பிரகடனம் செய்தார்.
“ஹரி இதை கொஞ்சம் கொடுத்துட்டு வாயேன்” என்றவர், புடவை இருந்த கையினை ஹரியிடம் நீட்டியபடியே இருக்க, ஹரியிடம் பெரும் யோசனை மற்றும் தயக்கம்.
‘தன்னோடு பேசவே விருப்பமில்லாது இருப்பவளின் அறைக்கு எப்படி செல்வது. அப்படியே சென்றாலும் முகம் காண்பிப்பாளா அல்லது முகம் திருப்புவாளா? அத்தோடு இப்போது தானிருக்கும் நிலையில் அவளை பார்ப்பதென்பது முடியவே முடியாத விடயம்’ என்று ஹரி தனக்குள் போராடிக்கொண்டிருக்க, ஆதியின் கை சற்றும் கீழிறங்கவில்லை.
ஒருமுறை இருவரும் தனித்துப் பேசிக்கொண்டால் எல்லாம் சரியாகும் எண்ணம். அதற்கு வழி செய்ய நினைத்தார் ஆதி.
“கொடுங்க மாமா நான் போறேன்” என்ற சூர்யா, ஆதி பதில் பேசுமுன்னே அவரின் கையிலிருந்த புடவையை வாங்கிக்கொண்டு மேலே சென்றார்.
“இப்படி கிடைக்கிற வாய்ப்பெல்லாம் தட்டிவிட்டுட்டே இருந்தால் உனக்கு தான் நஷ்டம்” என ஹரியிடம் இருபொருள்பட கூறியவர் ராகவிடம் திரும்பிக் கொண்டார்.
ஆதி சொல்லியதில் ஹரி குழம்பியதுதான் மிச்சம்.
அந்நேரம் விஷால் அங்கு வர,
“அவங்க வந்துட்டாங்களாம் நீ போய் அழைச்சிட்டு வா விஷ்” என்று பணித்தார் ஆதி.
“ஓகே ஆதிப்பா”என்ற விஷால் துள்ளளோடு சென்றான்.
விஷாலின் துள்ளல் ஹரிக்கு கடுப்பாக இருந்தது. சகோதரிக்கு திருமணமென்று விஷால் கொண்ட உற்சாகம் ஹரிக்கு உண்மையில் எரிச்சலாகத்தான் இருந்தது.
‘இந்நிலைக்கு தான் மட்டுமே காரணம்’ என நினைத்தவன், அங்கிருக்க முடியாது செல்ல எழ முயல்கையில்…
“எங்க போற” என்று அங்கு வந்த யாதவ் ஹரியின் தோளில் கைவைத்து அவனை அமர வைத்தான்.
‘என்னடா இது’ என்பதைப்போல் யாதவ் அவனருகில் வந்து அமர்ந்ததை உலக அதிசயமாக ஹரி பார்த்திருக்க… அதுவே அவனுக்கு அதிர்ச்சியாக இருந்த நிலையில் மேலும் யாதவ் தன்னுடைய வார்த்தையின் மூலம் அதிர்ச்சி ஊட்டினான்.
“அப்புறம் மச்சான் என்ன இந்தப்பக்கம்?”
….
“என்ன மச்சான் இப்படி பாக்குற?”
….
நான் உனக்கொரு சீக்ரட் சொல்லவா?”
யாதவ் தன்னிடம் வந்து பேசியதையே நம்ப முடியாமல் இருந்த ஹரி… அப்படி என்ன ரகசியம் அவன் கூறப்போகிறான் என்று ஆர்வமாக ஏறிட்டான்.
ஹரியின் காதருகே முகத்தை கொண்டு சென்ற யாது…
“சின்ன வயதில் ஆது உன்னோடு க்ளோஸா இருக்கான்னு தான் நமக்குள்ள அடிக்கடி சண்டை வந்திருக்கு…
அப்போலாம் ஒரு தம்பியா உன்கிட்ட சண்டை போட்டிருக்கேன்.
இனி மச்சானா நிறைய போடப்போறேன்” என்றவன் கண் சிமிட்ட… ஹரிக்கு மொத்தமாக விளங்கியது.
புரிந்த கணம் கண்கள் முழுக்க சந்தோஷம் ஊற்றெடுக்க யாதுவை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
ஹரியின் மகிழ்வை காணும் போது யாதவிற்கு தானும் இத்தகைய இன்பத்தை அனுபவிக்க இருக்கிறோம் என்ற நினைவே பேரின்பத்தை அள்ளித்தந்தது.
ஆதி சொல்லிய… வருத்தத்திற்கு பிறகான சந்தோஷம் அளப்பரியது என்பதை ஹரி அனுபவித்தான்.
“போதும் போதும்.”
கைமீறிச் சென்று விட்டதாக தவித்த காதல் இதயம் சேர்ந்தது. ஹரி உணர்ச்சியின் பிடியில். அவ்வளவு நெகிழ்ந்திருந்தான். உணர்வின் எல்லையில் பற்றிட கிடைத்த தோளினை விட்டு விலக மனமின்றி சாய்ந்திருந்தவனை யாதவ் பிரித்தெடுத்தான்.
“நீயே காட்டிக்கொடுத்திடுவ போலிருக்கே! இவ்வளவு நேரம் எப்படி சோகமாக முகத்தை வைத்திருந்தாயோ இனியும் அப்படியே இரு. டாட் சொல்லும் வரை தேவதாஸ் எஃபெக்ட்டையே கன்ட்னியூ பண்ணு” என்றான் யாதவ்.
சரியென்ற ஹரி… “ஆது” என்று இழுத்தான்.
யாதவ் கேட்க வந்ததை முழுவதுமாக கேட்டிடுமாறு ஹரியையே பார்த்திருக்க…
“அல்ரெடி நான் நிறைய கஷ்டப்படுத்திட்டேன். இப்பவும் உண்மை தெரியாது ரொம்ப கஷ்டப்படுவாள்…”
“பாருடா, சாருக்கு ரொம்பத்தான் அக்கறை.”
ஹரி சொல்லி முடிக்கவில்லை யாதவ் நக்கல் செய்திருந்தான். ஆது காதலை சொல்லியபோதே ஏற்றிருந்தால் இடையிலான தேவையில்லா நிகழ்வுகள் இல்லாமல் போயிருக்குமே என்கிற சிறு ஆதங்கம் ஹரியின் மீது யாதவிற்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் தானும் அதே தவறைத்தான் செய்திருக்கிறோம் என்கிற மனதின் சுட்டலே ஹரியின் கவலையை போக்கிட உண்மையை சொல்ல வைத்தது.
ஹரி மன்னிப்பை தன் பார்வையின் மூலம் வேண்டிட…
“இந்நேரம், ஆது வருந்துவது பிடிக்காமல் வரு உண்மையை சொல்லியிருப்பாள். சோ… சில்.”
யாதவின் வார்த்தையில் நிம்மதி கொண்டான் ஹரி.
அப்போது விஷ்வா ஆர்பாட்டமாக உள்ளே வர, அவன் பின்னே வேலுவும், செல்வியும் வருகை தந்தனர். நிரலியின் பெற்றோர். வீட்டின் தற்போதைய மூத்த தலைமுறையினர்.
‘இவங்களை கூட்டிவரத்தான் போனானா? நான் கூட இல்லாத மாப்பிள்ளையை நினைத்தேன்’ என தனக்குள் சிரித்தான்.
வீட்டில் நடக்கும் முதல் விசேடம். மூத்த தலைமுறை இல்லாது எப்படி? இரவே வேலுவுக்கு அழைத்து நிகழ்வினை கூறி வரவழைத்துவிட்டார் ஆதி.
அனைவரும் அவர்களை வரவேற்று நலம் விசாரித்த வண்ணம் இருக்க… யாதவ் கண்காட்ட ஹரி மேலேறிச் சென்றான்.
யார் கண்ணிலும் படாது மறைந்து சென்றவன் ஆதினியின் அறையின் முன்பு நின்றான்.
‘உள்ளே செல்லலாமா? வேண்டாமா?’ ஹரி மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்க,
கீழே கேட்ட சத்தத்தில் ஆதினியிடம் பேசிக் கொண்டிருந்த வரு கதவை திறந்து வெளியில் வந்தாள்.
அங்கு வருவை கண்டதும் ஹரி அசடு வழிய,
“மாமா உண்மையை சொல்லிட்டாறா?” எனக் கேட்டாள்.
ஹரி “ம்” என்று சொல்ல,
“டார்லிங்க்கும் தெரியும். உள்ளே போங்க” என சொல்லிய வரு… “கதவு திறந்துதான் இருக்கணும்” என்று ஒரு விரல் நீட்டி மிரட்டினாள்.
“நான் அடி வாங்குவதை நீயும் பார்க்கணுமென்று விதி இருந்தால் என்ன செய்ய?” என்று சீரியஸாக அவன் சொல்லிய விதத்தில் வருவிற்கு அப்படியொரு சிரிப்பு.
ஹரி ஆதினியிடம் பேச நகர்ந்த பிறகே வருவிற்கு தான் செய்ய வேண்டியது நினைவிற்கு வந்தது.
யாதவின் காதலை உணர்ந்ததும் ஆதியிடம் பேசிட நினைத்திருந்தவள், இப்போதுஅனைவரும் ஒன்றாக இருக்கும்போது எல்லோரிடமும் பேசிட முடிவு செய்து கீழே விரைந்தாள்.
இன்று எப்படியும் கேட்டிட வேண்டும் என்ற தீவிரம் வருவிடம்.
வரு வரும்போது அனைத்தும் தயார் நிலையில் இருக்க… வேலு நிச்சயம் மற்றும் திருமணத்திற்கான நல்ல நாளினை பார்த்துக் கொண்டிருக்க, அவள் கேட்க வந்தது தடைபட்டது.
‘இது முடிந்ததும் பார்த்துக்கொள்ளலாம்’ என நினைத்தவளின் பார்வை யாதுவை தேட, அவனோ விஷாலிடம் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தான். யாதவின் மற்றோரு புறம் இடம் காலியாயிருக்க கல்பனா தன் பக்கம் அமருமாறு கூறியதை காதில் வங்காதவளாக யாதவின் அருகில் சென்று அமர்ந்தாள்.
யாதவின் தோளோடு வருவின் தோள் உரசும் நெருக்கம்.
மகளையே பார்த்திருந்த சூர்யாவுக்கு அவர்களின் நெருக்கம் அத்தனை மகிழ்வை கொடுத்தது. பல வருடங்களாக எண்ணிக் கொண்டிருப்பது நடந்து முடிந்ததாகவே பேருவகை கொண்டார்.
ஜாடையாக கல்பனாவிடம் பார்வையால் பேசினார். கல்பனாவிற்கு அதீத ஆனந்தம்.
‘நாம் நினைத்தது நடந்திடும் போலிருக்கே!’ கல்பனாவின் மனகுரல் இதுவாகத்தான் இருந்தது.
வரு ஒட்டி அமர்ந்ததுமே யாதவ் விஷாலிடம் பேசியவாறே அவளின் கையை தன் கையோடு கோர்த்து இறுக்கிக் கொண்டான். ஏனென்றே தெரியாது வருவின் கண்கள் பனித்தன.
வருவின் தலை கவிழ்ந்திருக்க, யாதவின் கரத்தில் வருவின் ஒருதுளி கண்ணீர் பட்டுத் தெறித்தது.
ஈரம் உணர்ந்தவன் தன் பார்வையை வருவின் முகத்தில் நிலைக்கச்செய்ய,
அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“இந்த கையை இப்படி பிடிச்சிக்கணும் எத்தனை நாள் ஏங்கியிருக்கேன் தெரியுமா மாமா?” எனக் கேட்க, யாதவின் இதயத்திற்குள் சொல்ல முடியாத வலியொன்று பரவியது.
அவனும் அவளும் காதலை சொல்லிக்கொள்ளாமலே உணர்ந்து கொண்டிருந்தனர்.
“வாழ்க்கையில் எவ்வளவோ வந்தாலும் இந்த கையை மட்டும் விட்டுடாதீங்க மாமா.” இப்படியும் காதலை சொல்ல முடியுமா? யாதவ் மொத்தமாக உடைந்து போனான்.
காதலென்றால் இன்பம் மட்டுமில்லை. அதில் ஏற்றப்படும் வலிகள் கூட சுகமானது. வலி கொடுத்து வேதனைக்கொள்ளச் செய்து சுகம் சேர்த்து சுகமளித்து சுகம் பெறச்செய்யும்.
யாதவ் எதிர்பார்த்த தருணம். அவளே எதிர்பாராது நிகழ்ந்தது. சொல்லிட கூடாதென்றில்லை, ஆனால் அவனே மறுத்த ஒன்றை அவனிடம் சொல்லிவிட வேண்டுமென்ற எண்ணத்தை மட்டும் தோற்றுவிக்காமல் இருந்தது.
‘ஐ லவ் யூ’ என்று சொல்வது மட்டும் காதலில்லை. சிறு பார்வையில், சிறு புன்னகையில், சிறு பிடியில், சிறு நெருக்கத்தில் நானிருக்கின்றேன் என காட்டுவதும் காதல் தான்.
இங்கு காதலிக்கிறேன் என்ற வார்த்தையின் பயனின்றி தன் காதலை மொழிந்துவிட்டாள்.
“கிடைச்ச கையை விடுவதற்கு நானென்ன முட்டாளா?” யாதவுடையது சாதாரண கேள்வி தான் ஆனால் வருவிற்கு வேண்டிய பதில் அதில் பொதிந்திருந்தது.
ஏங்கித் தவித்த காதல், கிடைக்கப்பெற்ற நிம்மதியில் வரு யாதவின் தோள் சாய, அவனின் மற்றொரு கரம் அவளின் தோள் சுற்றியது.
அனைவரும் தீவிரமாக கலந்தாலோசித்துக் கொண்டிருக்க, விஷால் மட்டுமே இவர்களை கவனித்தது.
ஆதியின் பார்வை இவர்கள் புறம் திரும்புமாறு இருக்க, யாதவின் விலாவில் இடித்து அவர்களின் கவனத்தை திருப்பியிருந்தான் விஷால்.
“ஆதும்மா…”
“உனக்கும் ஹரிக்கும் தான் திருமண ஏற்பாடு நடக்கிறது.” வரு சொல்லியபோது ஆதினி அப்படியொன்றும் மகிழ்ந்திடவில்லை. ஹரியின் தொல்லை என்கிற வார்த்தை மட்டுமே இதயத்தில் யுத்தம் நிகழ்த்தியது.
நடப்பது நடக்கட்டுமென்கிற அமைதி அவளிடம்.
‘இந்த திருமணத்தை ஏற்க வேண்டுமா? வேண்டாமா?’ ஆதினி தனக்குள் உழன்று கொண்டிருக்கும்போதுதான் ஹரி அவளின் அறைக்குள் வந்தான்.
இப்படி ஹரி தன்னறைக்குள் வருவானென்று எதிர்பார்க்காத ஆது அவனை கண்ட கணம் தன் சிரம் தாழ்த்திக் கொண்டாள்.
பார்வையால் கோபத்தையோ, வெறுப்பையோ அப்பட்டமாகக் காட்டியிருந்தால் கூட தேவலாம் என்றிருந்தது அவளின் இந்த பாராத் தன்மை.
எவ்வளவு நேரம் அவளை பார்த்தவாறு நின்றிருந்தானோ அவளின் இந்த பாரமுகம் வலி கொடுக்க, மென் குரலில் அவளை அழைத்திருந்தான்.
“ப்ளீஸ்…”
ஹரியின் விளிப்பு செவி நுழைந்ததும் மெத்தையில் அமர்ந்திருந்த ஆது சரிந்து தரையில் மண்டியிட்டு இரு கரத்தில் முகம் புதைத்து விசும்பினாள்.
“டேய்… ஆது…” வேகமாக சென்று அவளின் தோள் தொட்டு தூக்கியவன் அவளை தனக்குள் புதைந்துக் கொள்ள, வாகாக அவனுள் அடங்கினாள்.
“சாரிடா… சாரி…”
அவனின் மார்பு, கை என சரமாரியாக அடி கொடுத்தாள்.
“எனக்கு நீ வேண்டாம் போ… வேண்டாம்… போ… போ… போ…” குரல் கூடாது கத்தினாள்.
“நிஜமா நான் போகட்டுமா?”
“போடா…” குரல் அழுகையில் தொய்ந்திருந்தது.
“நான் போயிட்டால் நீதான் பித்துப்பிடித்து போவ!” ஹரி எந்த அர்த்தத்தில் கூறினானோ ஆனால் அவனின் வார்த்தைகள் அவளை பலமாகத் தாக்கியது.
“அப்போ நானில்லாமல் நீ நல்லாதானே இருப்பாய். அப்புறம் நானெதற்கு? போ!” அவனை விட்டு விலகியிருந்தாள்.
“ம்ப்ச்… நானொன்று சொன்னால்…”
அவனை கைநீட்டி தடுத்தவள், “என் காதல் யாருக்கும் தொல்லையாக இருக்க வேண்டாம்” என ஆவேசமாகக் கூறியவள் அவனுக்கு முதுகுக்காட்டி நின்றுகொண்டாள்.
முற்றும் முதலாய் அவனின் முகம் பார்ப்பதை தவிர்த்திருந்தாள்.
தன்னுடைய வார்த்தை எந்தளவிற்கு அவளை காயப்படுத்தியுள்ளது என்பதை அக்கணம் புரிந்துகொண்டவன் உள்ளுக்குள் தன்னையே நிந்தித்தான்.
அங்கிருந்து வெளியேற முயன்றவனிடம்,
“இந்த கல்யாணத்தை நிறுத்திடு. டாட் விருப்பத்தை மறுக்க என்னால் முடியாது” என்றாள்.
தன்னுடைய ஆதும்மாவை தக்க வைத்துக்கொள்ள இதையே பயன்படுத்திக்கொள்ள நினைத்த ஹரி,
“முடிந்தால் நீயே நிறுத்திக்கோ!” என்று சொல்லிவிட்டு வெளியேறியிருந்தான்.
“ப்ளீஸ் ஹரி… இந்த கல்யாணம் வேண்டாம். உன்மீது கரை கடந்து காதல் இருக்கு. ஆனால் உன் வார்த்தைகளை மீறி உன்னோடு என்னால் வாழ முடியுமென்றுத் தோன்றவில்லை. இருவருக்கும் வாழ்வு நரகமாகிவிடும். இது வேண்டாம்.” மெத்தையில் கவிழ்ந்து அழுதாள். புலம்பினாள். அரற்றினாள்.
வெளியேறியவன் சென்றிடாது அவளின் வார்த்தைகளை கேட்டபடி வலி சுமந்து நின்றிருக்க… ஆதுவை அழைக்க ஹரிணி வந்தாள்.
“இங்கு உனக்கென்னடா வேலை. அதான் வேண்டான்னு முடிச்சிக்கிட்டியே!” என்ற ஹரிணி ஹரியை அங்கிருந்து துரத்தினாள்.
கீழே வந்த ஹரி யாரின் கவனத்தையும் ஈர்க்காது விஷாலுக்கு அருகில் சென்றமர்ந்தான்.
சற்று நேரத்திற்கு முன்பிருந்த ஒளி ஹரியின் முகத்தில் இப்போதில்லை.
யாதவ் ஹரியை ஆராய, “அடி பலமோ?” எனக் கேட்டிருந்தான் விஷால். ஹரியின் பதில் சன்னமான சிரிப்பு.
அதன் பின்னர் ஹரிணி ஆதுவை அழைத்துவர, நடக்க வேண்டியவை அனைத்தும் நடந்தேறின.
இன்னும் இரண்டு மாதங்களில் திருமணத்திற்கு நாள் குறித்திருந்தனர்.
மகிழ்வுகொள்ள வேண்டியவர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் சந்தோஷத்தில் திளைத்திருந்தனர்.
ஆதி யாதுவை பார்க்க, அவன் தன் பாக்கெட்டிலிருந்து மோதிரம் அடங்கிய சிறு பெட்டியை கொடுத்தான்.
ஆதுவையும், ஹரியையும் முன்னழைத்து மோதிரம் மாற்ற சொல்ல… அப்போதும் கூட இருவரிடமும் சிறு அதிர்வோ, வியப்போ இல்லை. அதுவே இருவருக்கும் முன்பே நடக்கவிருப்பது தெரிந்துவிட்டது என்று பறைசாற்றியது.
இருவரும் மோதிரத்தை வைத்துக்கொண்டு நின்றிருக்க,
“என்னடா பார்த்துண்டே நின்னுண்டு இருக்க, கையை பிடித்து போடுடா” என்று மாமி அதட்டினார்.
ஆதுவின் விழி அசைவிற்காகக் காத்திருந்தவன், அது கிடைக்கப்போவதில்லையென அறிந்து மென்மையிலும் மென்மையாய் அவளின் பிஞ்சு விரல் பிடித்து அனைத்தையும் ஒதுக்கி வைத்தவனாக காதலோடு மோதிரம் அணிவித்தான்.
நிரலி ஆதுவின் அருகில் வந்து தோள் தொட, ஏதோ இயந்திர கதியில் ஹரியின் விரலில் மோதிரத்தை மாட்டியவள், அங்கிருந்து வேகமாக தன்னறைக்குள் சென்றுவிட்டாள். அனைவரும் வெட்கம் என்று எண்ணியிருக்க, அவர்களையே ஆராய்ந்து கொண்டிருந்த யாதவுக்கும், ஆதுவின் நிலை அறிந்த ஹரிக்கும் எப்படி சரி செய்வதென்று சிந்தனை ஓடியது.
மகளின் திருமணம் என்ற சந்தோஷத்திலேயே ஆதி அவர்களை கவனிக்கத் தவறினார்.
ஒன்றாக பார்த்து வளர்ந்தவர்கள் எதிரெதிர் வீடு என்பதாலும், இப்போதே மோதிரம் மாற்றிக் கொண்டதாலும், நிச்சயம் வேண்டாம் திருமணத்திற்கு முதல் நாள் வரவேற்பு வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.
அதன் பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டு பேசிக்கொண்டிருக்க, மாமி தன் மக்களுடன் சொல்லிக் கொண்டு கிளம்பினார்.
ராகவும் ஸ்வேதாவுடன் சென்றிட விஷால் பிறகு வருவதாக அங்கேயே தங்கிவிட்டான்.
வேலு உறக்கம் வருவதாக சொல்லி இருக்கையிலிருந்து எழ, அவருக்கு அருகிலிருந்த ஆதிக்கு முன் வந்து நின்றாள் வருணவி.
“தாத்தா கொஞ்சம் உட்காருங்க. அப்புறம் தூங்கலாம்” என்றவள் ஆதியை நேருக்கு நேர் பார்த்தாள்.
“என்னடா… என்ன குட்டிம்மா?” ஆதி கேட்க, நிரலியை அழைத்த வரு இருவரையும் ஒன்றாக வைத்து… யாதுவை ஒரு பார்வை பார்த்தால்.
யாதவிற்கும் வருவின் செயலுக்கான காரணம் தெரியவில்லை. அவனும் என்னவென்று அறிந்திட ஆர்வமாக பார்த்திருக்க வரு கேட்டே விட்டாள்.
*நானென்று நீயாகிட
துடித்திட்ட நிமிடங்கள்
நாமென்று ஆகுமுன்பே
வதைத்து கொல்கிறதே!*
Epi 18 https://thoorigaitamilnovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af-15/
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
22
+1
+1
சூப்பர்