இதயம் 16 : (நெஞ்சம் நனைந்திடுதே)
ஹரிணி…
“இதோ வறேன் பாட்டி.”
“செய்து வைத்த பலகாரத்தை எல்லாம் மறக்காமல் கொண்டு போகணும்.
“சரி பாட்டி. இப்போவே நிரலி ஆன்ட்டியிடம் கொடுத்துட்டு வரவா?”
“போகும்போது எடுத்துக்கலாம்டி.”
“ஆதுமாக்கு பாலில் ஊறிய பூர்ணம் வைத்த பூரின்னா ரொம்ப இஷ்டம். இப்போ இதை போய் கொடுத்துட்டு வா. இன்னும் வேற எதாவது செய்யணுமான்னு அப்படியே நிரலியாண்ட கேட்டுட்டு வந்திடு” என்றவர், அடுப்பிலிருந்த நட்ஸ் ஹல்வாவை பதம் பார்த்தார்.
“பையன் வீட்டுக்காரங்களுக்கு செய்யணுமென்றாலும் சொல்ல சொல்லு செய்திடுவோம். நம்ம ஆதுக்கு செய்யாமல் யாருக்கு செய்ய” என்றவர் ஹரியை முறைத்துவிட்டு தன் வேலையை தொடர்ந்தார்.
“அங்கு அவங்க வீட்டுகுத்தானே பெண் பார்க்க வராங்க. நம்ம வீட்டுக்கு இல்லையே?” என்று சொல்லியவனின் மனம் பொறுமை இழந்தது.
இருவரும் செய்யும் ஆர்ப்பாட்டத்தை கண்டும் காணாது இருக்கையில் அமர்ந்திருந்த ஹரியின் கையில் டிவி ரிமோட் படாதபாடு பட்டுக் கொண்டிருக்க… அவனால் நடப்பதை ஏற்க முடியவில்லை.
“அவனை என்னண்ட பேச வேணாம் சொல்லுடி” என்ற மாமி, “நமக்குதான் கொடுத்து வைக்கல” என்று ஹரியை வார்த்ததையால் குத்தினார்.
“பாட்டி போதும். அவனை சீண்டாதீங்கோ” என்று அவரின் காதில் கிசுகிசுத்த ஹரிணி ஆதி வீட்டிற்கு சென்றாள்.
நடப்பதையெல்லாம் பார்க்கும்போது ஹரிக்கு மூச்சடைக்கும் உணர்வு. ‘இங்கிருந்தால் ஆதிக்கு எதிராக எதுவும் செய்திடுவோம்’ என நினைத்தவன் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
“இவன் போகும் வேகம் பார்த்தால் மாலை வீட்டிற்கே வரமாட்டான் போலிருக்கே!” என்று நினைத்த மாமியும் வேகமாக ஆதி வீட்டிற்கு சென்று ஆதியிடம் சொல்ல,
“நான் பார்த்துக்கிறேன் மாமி. சரியான நேரத்திற்கு ஹரி இங்கிருப்பான்” என்ற ஆதி மாமிக்கு திடம் அளித்தார்.
“இப்படி அவங்களை வருத்தனுமா மாமா. அவங்ககிட்ட சொல்லி சந்தோஷமாவே செய்யலாமே!” மருமகள் வருந்துவது பிடிக்காது கூறினார் சூர்யா.
“வருத்தத்திற்கு பிறகு உண்டாகும் சந்தோஷத்திற்கு மதிப்பு அதிகம் சூர்யா. அந்த நொடி அனுபவிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என ஆதி சொல்ல, அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்குமென சூர்யாவும் மேற்கொண்டு பேசவில்லை.
“மாமா, இன்னைக்கே நாள் நல்ல நாளா இருக்கு அப்படியே தாம்பூலம் மாற்றிக்கொள்ளலாமா” என்று கேட்டபடி நிரலி வர, மாமியும் அதனை ஆமோதித்தார்.
“ஹ்ம்… பண்ணலாமே” என்று ஆதி சம்மதம் வழங்கிட, “அப்போ இப்போதைக்கு ரெண்டு பேருக்கும் மோதிரம் மட்டும் போடலாம்” என்றார் கல்பனா.
“அண்ணி சொல்லுறதும் சரிதான் மாமா” என்ற நிரலி, “யாதுக்கு போன் செய்து ரெண்டு பேருக்கும் ரிங் வாங்கிட்டு வர சொல்லுங்க. வெளியில் தானே போயிருக்கான்” என யோசனை வழங்கினார்.
“நான் வேணுன்னா போயிட்டு வறேன் அம்மு” என்று சூர்யா முன்வர,
“வருவும் யாதுவுடன் தான் இருக்கிறாள் சூர்யா. அவங்களே பார்த்து வாங்கி வரட்டும். இதுக்காக நீயெதுக்கு தேவையில்லாம அலைய வேண்டும்” என்ற ஆதியின் பேச்சில் சூர்யா சரியென்றார்.
ஆதியும் யாதவிற்கு போன் செய்து சொல்ல,
“ஓகே டாட். வாங்கிட்டு வர்றேன்.”
மொபைலை அணைத்து பாக்கெட்டில் வைத்தவன், மாலிற்குள் அப்போது தான் நுழைந்தான்.
அவன் சென்ற சமயம், நிகிலாவை கண்டதில் அதிர்ந்து நின்றிருந்தாள் வரு.
“என்னாச்சு ஏன் இப்படி நின்னுட்டு இருக்க?”
“ஆங்க்… ஒன்னுமில்லை மாமா. வீட்டுக்கு போகலாமா?”
“ஏன்?” அவளை ஆராயும் பார்வை பார்த்தான்.
“ப்ளீஸ்…” அவள் முகம் சுருக்கியதில் அவனின் நெஞ்சமும் சுருங்கியது.
“சரி போகலாம். பட் அதுக்கு முன்ன ஒருவேளை இருக்கு” என்ற யாதவ் அங்கிருக்கும் நகைக்கடை ஒன்றிற்கு அவளை அழைத்துச் சென்றான்.
“இங்கு எதற்கு?”
“டாட் கால் பண்ணாங்க. ஆது அண்ட் ஹரிக்கு ரிங் வாங்க சொன்னார்.”
“ஹோ” என்றவள் அமைதியாக அவனுக்கு முன் சென்றாலும், அவளின் பார்வை அலைப்புற்றபடி இருந்தது.
‘சமத்திங் ராங்’ என சொல்லிக்கொண்டவன், “எனி ப்ராப்ளம்?” எனக் கேட்க அவள் இல்லையென மறுத்துவிட்டாள்.
அங்கு பணி புரிபவரிடம் கேட்டுவிட்டு மோதிர பிரிவிற்குள் அவளை விட்டவன், “நீயே செலக்ட் பண்ணிடு, ஜஸ்ட் டென் மினிட்ஸ். வில் பீ பேக்” எனக்கூறிச் சென்றான்.
நிகிலாவின் நினைவில் அசூசையாக சிப்பந்தி காண்பித்த மோதிரங்களை பார்வையிடத் துவங்கியவள் சில மணித்துளிகளில் அதில் ஆழ்ந்தும் போனாள்.
கிட்டத்தட்ட இருபது நிமிடங்களுக்குப் பிறகு வருவிடம் வந்து சேர்ந்தான் யாதவ்.
“செலக்ட் பண்ணிட்டியா?” இயல்பாய் அவளின் அருகில் இருக்கையை இழுத்துப்போட்டு தோள் உரச அமர்ந்தான்.
அவனுக்கு இருக்கும் இயல்பு அவளுக்கில்லை.
“கப்பிள் ரிங் டூ செட்ஸ் செலக்ட் பண்ணியிருக்கேன். உங்களுக்கு எது ஓக்கேன்னு பாருங்க” என்றவள் தனியாக எடுத்து வைத்திருந்ததை அவனிடம் காண்பித்தாள்.
வெகு நேரம் அவன் எதையும் சொல்லாது கணையாழிகளை பார்வையிட்டுக் கொண்டேயிருக்க,
“நிறைய கலெக்ஷன்ஸ் இருக்கு. நீங்க அதையும் பார்க்குறதுன்னா பாருங்க” என்று வரு சொல்ல,
“ரெண்டையுமே பில் போடுங்க” என்று கடை சிப்பந்தியிடம் கூறினான்.
‘எதுக்கு’ என்று தொண்டை வரை வார்த்தை வந்துவிட்டாலும் வெளியே கேட்கவில்லை.
கடையை விட்டு வெளியில் வந்ததும்,
“ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?”
எதிரிலிருந்த பார்லரை பார்த்து ஆர்வமாக யாதவ் கேட்க, வருவால் மறுக்க முடியாது போனாது.
இருவரும் சென்று அமர, வருவிற்கு மட்டும் அவளுக்கு பிடித்த சுவையிலான ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தவன், முன்னிருந்த வட்ட மேசையில் கை முட்டி ஊன்றி கன்னத்தை தாங்கியவாறு அமர்ந்து இமைக்காது வருவை பார்க்கத் தொடங்கிவிட்டான்.
அவனின் பார்வை உள்ளுக்குள் இதயத்தை துளைக்க அவஸ்தையாக நெளிந்தாள்.
ஐஸ்கிரீம் வந்ததும், “உங்களுக்கு” என்றாள்.
“நீ சாப்பிடு. எப்படியும் முழுசா நீ சாப்பிட போவதில்லை” என்று அவளைப்பற்றி தெரிந்து கூறினான்.
வருவிற்கு ஐஸ்கிரீம் என்றால் அதீத பிடித்தம். ஆனால் இரண்டு மூன்று வாய் சுவைத்ததுமே பல் கிட்டி உதடுகள் நடுங்கத் தொடங்கிவிடும். அதைத்தான் யாதவ் இப்போது சொல்லியிருந்தான்.
“உங்களுக்கு…?”
“எல்லாம் ஞாபகம் இருக்கு.”
வரு கேட்பதற்குள் யாதவ் பதில் வழங்கியிருந்தான்.
“ஒவ்வொரு முறையும் கேட்கணும் அவசியமில்லை. கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் உன்னோடு பேசாமல் இருந்திருப்பேன். அவ்வளவு தான். ஆனால் பதினேழு வருடங்கள் ஒன்றாகத்தான் இருந்தோம்” என்று அவளுக்கு நன்கு புரியும்படி தங்கள் உறவின் ஆழத்தை சொல்ல புரிய வேண்டியவளுக்கோ புரிந்திடாத நிலை தான்.
“ரொம்ப குழம்பாதே… அப்புறம் உனக்கிருக்கும் கொஞ்ச மூளையும் உருகி வழிந்திடப் போகுது” என்று அவன் சொல்ல, அனைத்தும் மறந்து சிணுங்கினாள்.
“சாப்பிடு” என்றவன், ஒரு கிஃப்ட் பாக்சினை அவளிடம் கொடுத்து, மாம் அண்ட் டாட்க்கு கொடுத்திடு” என்றான்.
அவள் எதற்கு எனும் விதமாக பார்க்க,
“நீ வாங்கியதை நான் கொடுத்தேனே அதற்கு” என்றான்.
“புரியுது” என்ற வரு, “நீங்க வேற நான் வேற அதானே” எனக்கேட்டு அவன் அதற்கு விளக்கம் அளிக்கிறேனென்று எதாவது பேசி எங்கு கலங்கிட நேரிடுமோ என வாஷ் ரூம் நோக்கி வேகமாக சென்றுவிட்டாள்.
வரு கேட்டது… இருவரையும் அவள் ஒன்றாக எண்ணுவதாய் இருக்க அவனுள் அத்தனை உவகை.
‘லவ் யூ டி பட்டு’ என சொல்லிக் கொண்டவன் அவள் மிச்சம் வைத்துவிட்டு சென்ற ஐஸ்கிரீமினை சுவைக்க ஆரம்பித்தான்.
என்றுமில்லாமல் இன்று அந்த ஐஸ்கிரீம் அத்தனை பிடித்தது அவனுக்கு.
“லவ் பண்ணத் தெரியலனா இப்படித்தான் ஜோடியா சாப்பிட வேண்டியதை சிங்கிளா சாப்பிடணும்.” அருகில் கேட்ட குரலில் யாதவ் நிமிர்ந்து பார்க்க நிகிலா ஆடவனுடன். பொது இடமென்கிற எண்ணமில்லாது நாகரீகம் என்கிற பெயரில் அவனோடு ஒட்டி உரச பாதி உடல் ஆவன்மீது சரிந்திருப்பதை கண்ட யாதவிற்கு முகம் தானாக சுளித்தது.
படம் பார்க்க விருப்பமேயின்றி அவளுடன் இருப்பவன் கேட்டதற்காக படத்திற்கு சென்ற நிகிலா தலைவலியை காரணம் காட்டி பாதியிலேயே வெளியில் வந்திருந்தாள்.
“உன்னை நான் ஏத்துக்கலன்னு ஏதோ கதறி கதறி அழுதியாமே!” அவ்வளவு கர்வம் நிகிலாவின் பேச்சில்.
“நியூஸ் வந்துச்சு. சார் தேவதாசுக்கே டஃப் கொடுக்குறீங்கன்னு. என்ன பண்றது காதலிக்கத் தெரியாத உன்னை நம்பியிருந்தால் என் பேபி எனக்கு கிடைத்திருக்கமாட்டாரே!”
புது காதலன் முன்பு தன்னை இறக்கிக்கொள்ள மனமின்றி, ஏதோ யாதவ் தான் அவள் பின்னால் சுற்றியதைப்போன்றும் அவனின் காதலை அவள் நிராகரித்ததைப்போன்று பேசினாள்.
அவள் பேசியதற்கெல்லாம் யாதவ் அமைதியாகவே இருக்க, அவள் மேலும் தொடர்ந்தாள்.
“உன் வீட்டிலிருந்து ஒரு ஆள் என்னிடம் பேசினாங்க, உனக்காக உன்னை ஏத்துக்கோங்கன்னு என்னிடம் கெஞ்சினாங்க. என் நினைவா சோகமா நீ சுத்துறது பார்க்க வருத்தமா இருக்குன்னு கதறினாங்க. நேரில் இருந்திருந்தால் என் காலிலேயே விழுந்திருப்பார்கள்” என்றவள், யாதுவை ஏளனமாக பார்த்து, “பீலிங்ஸே இல்லாத உன்னையெல்லாம் எந்த பெண்ணும் கல்யாணம் செய்துக்க மாட்டாள்” எனக்கூறியவள், தன்மீது சாய்ந்திருந்தவனை விலக்கி நிறுத்தி ஏதோ ஒன்றை சொல்லி அங்கிருந்து அனுப்பிவிட்டு மீண்டும் யாதவின் பக்கம் திரும்பினாள்.
“என்னை மாதிரி ஒரு பெண்ணிடமே உனக்கு உணர்வுகள் வரவில்லையென்றால், வேறு எந்த பெண்ணிடமும் மற்ற உணர்வுகளெல்லாம் எப்படி உனக்குத் தோன்றும்.”
ஆறு வருடக்காதலில் யாதவிடமிருந்து சிறு ஓரப்பார்வையை கூட கண்டிடாதவளுக்கு அப்படித்தான் எண்ண வைத்தது.
“அழகாய் இருந்துவிட்டால் மட்டும் போதாது. நீ டாக்டர் தானே, உனக்கு நான் சொல்ல வேண்டாம். உன்னை எதற்கும் செக் செய்துகொள்ளேன்.”
நிகிலாவின் வார்த்தைகள் எல்லை மீறின.
காதலுக்கு சம்மதம் மட்டுமே அளித்தவன் தன் பிரிவில் வாடுகிறான் என்று தவறான செய்தியைக் கேட்டு தானேதோ உலகழகி என்னும் உயரத்திற்கு கர்வம் கொண்டவள் பேச்சில் முறையற்று போனாள்.
நிகிலாவின் பேச்சின் ஆரம்பித்திலேயே அங்கு வந்திருந்த வரு, அவர்கள் ஏதேனும் பெர்சனலாக பேச நேரிடுமென்று சற்று தள்ளியே நின்று கொண்டாள்.
ஆனால் வரு ஒன்று எதிர்பார்க்க, அங்கு நடந்ததே வேறொன்று. உண்மையில் நிகிலாவிடம் வரு இதனை எதிர்பார்க்கவில்லை. நிகிலாவின் உண்மை முகம் தெரிந்திருந்தால் நேற்றிரவு வரு அவளிடம் பேசியே இருக்க மாட்டாள்.
நிகிலா வரு அனுப்பிய மெசேஜிற்கு பதில் அனுப்பியதுமே யாதவின் அன்றைய நிலையை மட்டும் நினைவில் வைத்து, காதலில் பிரிவு வேண்டாமென்று இன்ஸ்டா மெசேஜ் பகுதியிலேயே வரு அத்தனை பேசியிருக்க, நிகிலாவிடம் முடியாது என்பது மட்டுமே பதிலாக இருந்தது.
‘தான் சொல்லுவதை அவள் கேட்கவாவது செய்கிறாளே நேரில் பார்த்து பேசினால் எப்படியும் அவளின் மனதை மாற்றிடலாம்’ என்று வரு நினைத்திருக்க… வருவால் இப்போது நடந்துகொண்டிருப்பதை நிச்சயம் நம்ப முடியவில்லை.
நிகிலாவின் பேச்சினிலேயே இனி அவளாக வந்தாலும் தன் மாமாவிற்கு அவள் வேண்டாமென்கிற முடிவிற்கு வரு வந்திருந்தாள்.
“உனக்குத் தெரியாததா? நீயே பெரிய டாக்டர், ஃபீலிங்ஸ் இல்லாமல் உன்னை நம்பி வரும் பெண்ணை எப்படி…”
நிகிலா வார்த்தையை முடிக்கவில்லை, அதற்குள் அவளின் கன்னத்தில் அறை விழுந்த சத்தம் அவ்விடத்தையே நிறைத்தது.
அடித்தது யாதவ் அல்ல அவனவள்.
“வரு.”
“நீங்க சும்மா இருங்க மாமா!”
தடுக்க வந்த யாதுவை தள்ளி நிறுத்தியவள் நிகிலாவின் மற்றொரு கன்னத்திலும் பளாரென்று ஒன்று கொடுத்திருந்தாள்.
“காதலென்றால் என்னவென்று தெரியாமலே தான் கொண்ட ஒன்றை காதலென்று நினைப்பவளிடம் எங்கே காதல் இருக்கப்போகிறது” என்று யாதவிடம் சொல்லிய வரு நிகிலாவை பார்த்து,
“உணர்ச்சிக்கு இடமளிக்கும் உனக்கெல்லாம் என் மாமா அதிகம். காதலித்துவிட்டாலே ஒட்டிக்கொண்டும் உடல் உரச திரிவதும் தான் காதலென்றால் அதுக்கு பெயர் வேறு. இப்போ நீ அதைத்தான் செய்கிறாய்.
என்ன தான் காதலியாக இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு தான் அனைத்துமென்று தள்ளி நிற்கும் ராமன் உன் போன்றோர் கண்ணிற்கு நீ சொல்லுவதைப்போல் தான் தோன்றும்.
இப்போ சுத்திட்டு இருக்கவன்கிட்டையாவது காதலை மட்டும் காட்டு” என்று வார்த்தையால் சூறாவளியென சுழன்றடித்த வரு, யாதவின் கை பிடித்து,
“வாங்க மாமா போகலாம்” என்று இழுத்துச் சென்றாள்.
நிகிலாவின் பேச்சிலேயே யாதவ் எவ்வளவு கண்ணியமாக அவளிடம் நடந்திருக்கிறான் என்பதை வரு புரிந்துகொண்டாள். ஆனால் இதற்காக நல்லவன் ஒருவனை ஒரு பெண் வேண்டாமென்கிறாளென்றால் அவளுடையது உண்மையான காதலாக இருக்காதென்று தோன்றியதாலேயே யாதவிற்கு முன் வரு அவளை கை நீட்டியிருந்தாள்.
“என்னா பேச்சு பேசுறாள் அவள். இவங்க பார்த்துகிட்டு நிக்குறாங்க” என்று வாய்விட்டு முணுமுணுத்தவள், காரில் ஓட்டுனர் இருக்கையில் அமர போன யாதுவை தள்ளிவிட்டு, “நான் ட்ரைவ் பண்ணுறேன்” என்று ஏறி அமர்ந்தாள்.
நிகிலாவின் பேச்சுக்கள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்க, வருவின் மனம் சமன்பட மறுத்தது. அமைதியாக இருந்த யாதவின் மீது கோபம் கனன்றது. மொத்த கோபத்தையும், காரின் வேகத்தில் காண்பித்தாள்.
“ரொம்ப சூடா இருக்கப்போல?”
“ஏன் சூட்டில் தோசை வார்க்கப் போறீங்களா?” அதே சூட்டோடு திருப்பிக் கேட்டாள்.
“வாயெல்லாம் வீட்டில் இருப்பவர்களிடம் தான்.” அவள் சொன்னது அவனுக்குத் தெளிவாகக் கேட்டது.
“அவள் அந்த பேச்சு பேசுறாள். ஓங்கி ஒன்னு கொடுக்காமல், இன்னும் பேசுன்னு இருக்கீங்க?” என்ன முயன்றும் நிகிலா பேசியதிலிருந்து வருவால் வெளிவர முடியவில்லை.
“அவள் பேசுறான்னு நானும் திருப்பி பேசினாள் அவளுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்” எனக்கேட்ட யாதவ், “என்னைப்பற்றி என்னை விரும்புபவர்களுக்குத் தெரிந்தால் போதும்” என்றதோடு “எனக்காக இவ்வளவு பெரிய சப்போர்ட்டெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை” என வரு பேசியதை பற்றி கூறினான்.
“இவளை எப்படி லவ் பண்ணீங்க?” கேட்கக்கூடாதென்று நினைத்தாலும், அவளால் கேட்காமல் இருக்க முடியவில்லை.
யாதவிடம் மௌனம் மௌனம் மட்டுமே. கண்களை மூடி பின்னால் சாய்ந்து விட்டான்.
‘அவளை லவ் பண்ணலன்னு சொன்னால் நம்புவியா செல்லம்மா?’ விடை அறிந்திடத் தவித்தவனுக்கு ஏனோ அதனை வாய்விட்டுக் கேட்கத் தோன்றவில்லை.
‘வருவின் காதல் கிடைத்திடாதோ’ என்று அந்நொடி வருந்தியவனின் முகம் ஆழ்ந்த சோகத்தை பிரதிபலிக்க… நிகிலா பேசியவை தான் காரணமென நினைத்த வரு ஒரு முடிவை எடுத்தாள்.
அது நல்லதா கெட்டதா என்று அவள் சொல்லும்போது தான் தெரியும்.
நிகிலா அவ்வளவு பேசிச்சென்றும் அவள் மீது சிறு கோபம்கூட யாதவிற்கு எழவில்லை. அதற்கு காரணம், நாம் நேசிக்கும் உரிமை உடையவர்களிடம் மட்டுமே கோபம் கூட வரும் என்கிற அவனின் எண்ணம்.
கோபத்தைக்கூட தனக்கு வேண்டாதவர்களிடம் காட்டிடக் கூடாதென்று அந்நேரம் தெளிவாக அமைதியாக இருந்தான்.
கடந்த சில நாட்களாக அவனது இதயத்தில் மொத்தமாக யுத்தம் செய்து கொண்டிருப்பவள் அவளின் செல்லம்மா மட்டுமே. பலதடவை பலமுறை காதலை அவளிடம் காட்டிவிட்டான். ஆனால் அவள் தான் நிகிலா என்கிற திரை கொண்டு அதனை புரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டாள்.
‘நீ அவ்வளவு மக்காடி’ என்று கேட்டுக் கொண்டவனுக்கு தனக்காக வரிந்துகட்டிக்கொண்டு பேசிய வருவை ரொம்பவே பிடித்தது.
“மாமா.” வருவின் அழைப்பில் கண் திறந்தவனுக்கு அப்போதுதான் வீடு வந்துவிட்டதே தெரிந்தது.
‘இந்த குட்டிபிசாசை நினைத்தால் நேரம் போறதே தெரிய மாட்டேங்குது.’ என்று சொல்லியவன், காரிலிருந்து இறங்கத் தயாரான வருவின் கை பிடித்து தடுத்து…
“காலர் வைத்த டாப்பெல்லாம் இனி போடாதே!” என்று சொல்லிவிட்டு, தான் சொல்லியதில் அவள் அதிர்ந்து நிற்பதை கண்டு கொள்ளாது இறங்கிச் சென்றுவிட்டான்.
யாதவ் ஏன் அப்படி சொல்லுகிறானென்று வருவிற்கு புரிந்துதான் இருந்தது. இப்போதெல்லாம் யாதவ் அவளின் அருகில் வந்தாலே அவனின் பார்வை நிலைப்பது அவளின் மச்சத்தில் தான்.
அப்பார்வை ஒன்றும் விரசமாகத் தோன்றாத போதும்… “இது என்னை ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணுது” என்று அவன் சொல்லியது அவனைவிட அவளை அதிகம் தொல்லை செய்தது. அதனாலேயே இன்று அவனுடன் செல்ல வேண்டுமென்று கழுத்தை மூடியவாறு இருக்கும் உடையை அணிந்தாள்.
அதனை கண்டுகொண்டதுபோல் அவன் சொல்லிச் சென்றதும், “தான் அவனைத் தவறாக எண்ணி இப்படி செய்ததாக நினைத்துவிட்டானோ” என்று விக்கித்துப்போனாள்.
அதிலேயே உழன்றவள் எப்படி வீட்டிற்குள் நுழைந்து அறைக்குள் வந்தாளென்றே தெரியவில்லை. மெத்தையில் அமர்ந்தவள், கடந்த தினங்களாய் யாதவ் காட்டும் நெருக்கத்தை மனதில் அசைபோட… ஏதோ புரிந்தும் புரியாத நிலையில் தத்தளித்தாள்.
‘காதலை ஏற்காததே அவ்வளவு வலி நிறைந்ததாக இருக்கும்போது. உயிருக்கு உயிராக காதலித்திருந்தால் இப்படி ஒரு நாளிலேயே சகஜ நிலைக்கு திரும்பியிருக்க முடியுமா?’
நிகிலாவின் காதல் பற்றிய பிம்பம் வருவின் மனதில் முழுதாய் உடைந்து போக… யாதவின் காதலை பற்றி ஆராய்ந்தாள்.
‘நிகிலாவை மாமா காதலித்திருந்தால் இப்படி அவளை நேரில் பார்த்து நிர்மலமாக இருக்க முடியுமா?’ காதல் வைத்த அவனருகில் இதயம் மத்தள வாசிப்பை உணர்ந்தவளுக்கு இது புதிராகத்தான் இருந்தது.
வரு சரியான கோணத்தில் பயணிக்கத் தொடங்க, யாதவின் மனதில் அவளுக்கான இடம் எதுவென்று, இப்போது அவன் அவளிடம் காட்டிடும் முகம் நினைவில் வலம் வர, கொஞ்சம் கொஞ்சமாக புரியத் தொடங்கியது.
ஏனென்றால் காதலென்று சொல்லிக் கொண்டிருந்தவளுடன் பேசவே தயங்கி இருந்தவன் (நிகிலாவின் பேச்சால் வரு அறிந்தது.) அவளிடம் மட்டும் அதீத நெருக்கத்தை காட்டுவது அவளுக்கு அவனுடைய செயலுக்கான காரணத்தை தெளிவாக்கியது.
‘நெருங்கி வருவது. முத்தம் கொடுப்பது. ரசனையாக பேசுவது. இவையெல்லாம் காதலில்லாமல் ஒரு பெண்ணிடம் இயல்பாகத் தோன்றாது’ என சரியாக சிந்தித்தவள், ‘மாமாவும் என்னை விரும்புறாரா?’ தனக்குத்தானே கேட்டுக்கொண்டு அத்தனை மகிழ்வு கொண்டாள்.
இப்போதும் அவன் விரல் வைத்த கார்மேகப்புள்ளி இருக்கும் இடம் குறுகுறுத்தது. அவனின் காதலை உணர்ந்தவளுக்கு கண்ணீர் பெருகி வழிந்தது.
வருந்தி வேண்டிய ஒன்று கிடைக்கும் தருணத்தில்… மகிழ்வின் உச்சத்தில் வெளிப்படும் கண்ணீர் அது.
யாதவின் மனம் இப்போது தெளிவாய் அவளுக்கு புரிவதாய். நெஞ்சத்தில் குளிர் காற்றும், தகிக்கும் சூட்டையும் ஒருங்கே அனுபவித்தாள். சில்லென்று காதலில் கரையத் தொடங்கினாள்.
சில நாட்களாக யாதவ் காட்டிய காதல் இப்போது அவளின் நெஞ்சத்தை மொத்தமாக நனைத்தது.
நிகிலா பேசியதிலேயே ஒரு முடிவுக்கு வந்திருந்தவள் இப்போது அதனை செயல்படுத்தும் தீவிரத்தோடு ஆதியை காணச் சென்றாள்.
*கானல்நீரென…
நினைத்திட்ட காதல்,
ஜீவனதியாக…
பாய்ந்தோடுகிறது.
சேர்ந்திடாதென…
நினைத்திட்ட காதல்,
ஆதி அந்தமாகி…
சங்கமித்தது.*
Epi 17https://thoorigaitamilnovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af-14/
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
27
+1
+1