இதயம் 15 : (இதயங்களில் ஓலம்)
பேசிவிட்டாள்…
மொத்தமாக பேசிச் சென்றுவிட்டாள்.
உள்ளத்து உணர்வுகளையெல்லாம், அவனின் காலில் கொட்டி கவிழ்த்து விட்டாள்.
அவனை நெருங்கவும் முடியாது விலகவும் முடியாது முரண்பட்டு தவிக்கும் மனதின் நிலையை அவனுக்கு தெளிவாக்கிவிட்டாள்.
ஆனால் கேட்டவனுக்கோ மனதில் பாரமேறியது.
தன்னுடைய அறையின் பால்கனியில் நின்றிருந்தவன், பரந்து விரிந்து எல்லையின்று நீண்டிருந்த இருள் வானினின் தூரப்புள்ளியை வெறித்திருந்தான்.
காதல் சொல்லியவளின் காதலை ஆழ்ந்து அனுபவித்திட யாதவின் இதயம் ஏங்கியது.
எந்தளவிற்கு தன்னவளை உள்ளுக்குள் வேதனை கொள்ள செய்திருக்கிறோம் என்று புரிந்துகொண்டவனுக்கு வருவின் வார்த்தைகளில் இருந்த வலி இரட்டிப்பானது. அவனின் இதயம் அவனவளுக்காக ஓலமிட்டது.
“ராட்சசி படுத்தாதடி.” இதயம் தவிக்க நின்றான்.
யாதவிற்கு ஒருநொடி போதும்… தான் காதலிப்பதாக சொல்லிட, ஆனால் ‘அவளில்லை என்றானப்பிறகு நானா அல்லது நான் உங்களுக்கு பேக்கப் ஆப்ஷனா’ என்று வரு கேட்டுவிட்டாள் அக்கணமே அவனின் காதல் மரித்துவிடுமல்லவா! அதற்கே தயங்குகிறான்.
வரு கேட்காவிட்டாலும், ‘அவள் மனதில், தான் அவனுக்கு முதல் காதல் இல்லையே’ என்று அவள் நினைத்தாலும் யாதவ் மனதோடு உயிர் துறந்திடுவான்.
நிகிலாவின் பக்கங்களை யாதவ் வருவிடம் புரட்டி காண்பித்திடலாம், ஆனால் அனைத்தும் தெரிந்த பின் தன்னையும் தன் காதலையும் ஏற்பதற்கு முன்… வரு அவனின் காதலை இதயத்தின் ஆழம் வரை உணர வேண்டுமென நினைக்கின்றான்.
நிறை மட்டுமே பார்க்குமிடத்தில் காதல் சறுக்கி விடும். ஒருவரின் நிலையில் அவரை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதனையே இங்கு யாதவும் எதிர்பார்க்கின்றான்.
நாளை நடக்கப்போகும் நிகழ்வு தெரிந்திருந்தால், இப்போதே வருவிடம் அனைத்தும் சொல்லியிருப்பானோ! தன் காதல் உட்பட.
‘முதலில் காதலை காட்டிடுவோம். எனக்கு உன் மீதிருப்பது அக்கறையும் அன்பும் மட்டுமல்ல அதையும் தாண்டிய காதலென்று உணர வைக்கின்றேன்’ என்று மனதோடு தன்னவளிடம் பேசியவன் தன்னிலையில் உறுதியாக இருந்தான்.
உரியவனிடம் காதலின் தவிப்பினை காட்டிவிட்டதாலோ என்னவோ எப்பவும் ஆர்பரித்துக் கொண்டிருக்கும் வருவின் மனம் இப்போது தெளிந்த நீரோடையாக நிர்மலமாக இருந்தது.
யாதவ் அந்நேர இருளில் தெரியும் கீற்றான ஒளியை கிரஹிக்க முயன்றானென்றால், வருவோ கண் முன் தெரியும் வெளிச்சத்தை விரட்டியடித்து இருளில் மூழ்க முனைந்தாள்.
“லவ் யூ மாமா. மிஸ் யூ.” வருவிற்கு உள்ளம் வெகுவாக கனத்து போயிருந்தது.
பால்கனி கூடை நாற்காலியில் அமர்ந்திருந்தவள் தன் கையிலிருந்த பொருளோடு அப்படியே தன்னை சுருக்கி இருக்கையின் பின் தலை சாய்த்து கண் மூட, விரைவில் உறங்கியும் போனாள்.
இங்கு யாதவ் முற்றும் முதலுமாய் உறக்கம் தொலைத்து நின்றான்.
ஓர் இணை இதயங்கள் காதல் கொண்டு யுத்தம் நடத்திக் கொண்டிருக்க… மற்றொரு இணை இதயங்கள் நாளை நடக்கவிருக்கும் நிகழ்வின் உண்மை அறியாது, சேரும் வழியிருந்தும் இதயம் நொறுங்கும் வலியில் திளைத்திருந்தன.
என்ன தான் ஆதினி ஹரியிடம் இனி தன்னுடைய காதலை காட்டிடக் கூடாதென்று முடிவு செய்திருந்தாலும் வேறொருவனை அவனின் இடத்தில் வைத்து பார்க்க நினைக்கவில்லை.
அப்படி நினைத்திட முடியுமா என்ன?
வாழ்வில் காதல் என்பது ஒருத்தர் மீது ஒருமுறை மட்டுமே வரும் என்பதல்ல… யாருக்கும் யார் மீதும் எத்தனை முறை வேண்டுமானாலும் வரலாம். ஒரு குழந்தை மண்ணில் உதிர்த்தது முதல் மீண்டும் மண்ணிற்குள் செல்லும் வரை யாரோ ஒருவரால் நேசிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கும்.
இணை மீது தோன்றும் உணர்வுக்கு பெயர் காதலென்றால், மற்ற உறவுகளிடம் மலரும் உணர்வு அன்பு. இங்கு வார்த்தைகளில் மட்டுமே மாற்றம்.நேசத்தில் கொண்ட உணர்வு ஒன்று தான்.
அந்நிலையில் ஒருத்தருக்கு ஒரு காதல் தான் என்பது அபத்தம். ஒரு காதல் மடிந்து சருகாகிப்போன இடத்தில் இன்னொரு காதல் துளிர் விடுவது இயற்கை.
ஆனால் உயிர்த்து அணு அணுவாய் இதயத்தின் ஆழம் வரை சேமித்த காதலை எளிதில் கடந்திட முடியுமா என்ன? நாம் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் காதலில் மட்டும் முரண்பட்டு நிற்கும். இப்போது அந்நிலையில் தான் இருக்கிறாள் ஆதினி.
“எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்” என்று கத்தி சொல்ல வேண்டுமென துடித்தாள்.
“ஹரி.” மனதின் செல்கள் அனைத்தும் முணுமுணுத்துக் கொண்டிருந்தன.
“என்னை ஏன்டா உனக்கு பிடிக்காமல் போனது?” மெத்தையில் கால்களைக் கட்டிக்கொண்டு சன்னலின் வழியே வெளியில் பார்த்துக் கொண்டிருந்தவளின் மனம் கரு வானில் ஊர்வலம் செல்லும் மேகத்தோடு சேர்ந்து பயணித்தது.
அவனோடு சுற்றித் திரிந்த காலங்கள் மேலெழும்ப கவிழ்ந்து தலையணையில் முகம் புதைத்து விம்மி அழுதாள்.
இந்த இரவு நீண்டு பகல் ஒன்று வராது இருந்திடாதோ! நடக்காதென்று தெரிந்தும் எதிர்பார்த்தாள்.
ஆதி, “பெண் பார்க்க வருகிறார்கள்” என்றதும் ஆதினி ஹரியைத் தான் ஏறிட்டாள்.
இவ்வளவு நாள் அவனுக்கு தன்மீது காதல் வந்திடாதா என்று காத்திருந்தவளுக்கு, பட்டென்று வெளியேறிய அவனின் நடை மாறிய தோற்றமே அவள் மீதி அவன் கொண்ட காதலை பறைசாற்ற தளர்ந்து போனாள்.
போராடிய போது கிடைக்காத காதல்… தள்ளி நிற்க நினைக்கும்போது கிட்டுவது என்ன நிலையோ!
காலத்தில் கிடைப்பதே சரியாக இருக்கும். அது எதுவாகினும். பசிக்கும் வேளையில் உணவு கிடைப்பதே நிறைவு. அது யாவற்றிற்கும் பொருந்தும்.
ஹரியின் ஓய்ந்த நிலை கவலைகொள்ளச் செய்த போதும்… காதலை தொல்லையென்று சொன்னவனிடம் மீண்டும் காதலை காட்டிடும் எண்ணமின்றி ஆதிக்கு சம்மதம் வழங்கியவள், இப்போது தனிமையில் காதலோடு யுத்தம் புரிகிறாள்.
அறை இருளில் மூழ்கியிருக்க, உள்ளே கீற்றென வெளிச்சம் பாய்ந்தது.
யாரோ வீட்டிற்கு வெளியிலிருந்து வெளிச்சம் அடிக்கிறார்கள் என்று பார்த்ததும் புரிய, பால்கனியை திறந்து கொண்டு செல்ல தயங்கியவள், சன்னல் திரை நீக்கி பார்க்க, ஹரி தான் அவளை இம்முறையில் அழைத்திருந்தான்.
ஆதினி பார்க்கின்றாள் என்றதும் பாக்கெட்டிலிருந்து அலைபேசியை எடுத்தவன், அவளிடம் தூக்கி காண்பித்து குறுந்தகவல் ஒன்றை அனுப்பினான்.
அப்போது தான் மொபைலின் நினைவே வர எடுத்து பார்த்தாள். இரண்டு நாட்கள் அதன் நினைவே இன்றி இருந்தவள் எடுக்க அது உயிரை விட்டிருந்தது. வேகமாக சார்ஜரில் பொருத்தியவள் இரண்டு நிமிடங்கள் காத்திருந்து ஆன் செய்தாள்.
உடனடியாக வந்து விழுந்தது ஹரி அனுப்பிய தகவல்.
“ஐ வான்ட் டூ டாக் டூ யூ.”
“ஹரி எதற்காக வேண்டுமானாலும் அழைத்திருக்கட்டும், நிச்சயம் அவனின் அருகாமையில் தொலைந்து போவது உறுதி. நேசத்தை தன்னை அறியாமல் கண்கள் காட்டிவிடும். அது மீண்டும் தன்னுடைய காதலுக்கு கிடைத்த அடியாக அமைந்துவிடும். ஆதலால் செல்லாமல் இருப்பதே நன்று” என்று கருதியவள்
“ஐ ஹேவ் நத்திங் டூ ஸ்பீக் டூ யூ” என்று அனுப்பியிருந்தாள்.
“ப்ளீஸ் டி.” அவனின் பதிலை வாசித்தவளுக்கு செவியோரம் அவனது குரல் ஒலிப்பதை போன்றிருக்க அலைபேசியை அதனிடத்தில் வைத்துவிட்டு காதுகளை பொத்திக்கொண்டு படுத்துவிட்டாள்.
ஹரிக்கு இறுதியாக ஒரேயொரு முறை அவளிடம் பேசிட வேண்டுமென்று இருந்தது.
ஆனால் அதற்கு வாய்ப்பளிக்காத ஆதினி தன் எண்ணத்தோடு உறங்கியிருந்தாள்.
ஆதினியிடமிருந்து எவ்வித பதிலுமின்றி போக ஒருமணி நேரத்திற்கு மேல் வீதியில் தன் வீட்டு முன்பாகவே நின்று அவளின் அறையை பார்த்திருந்தவன் வேதனையோடு வீட்டிற்குள் சென்றான்.
‘எல்லாம் உனக்குத் தேவைதான்.’ அவனின் மனமே அவனை இடித்துரைத்தது.
‘கையிலிருக்கும் போது புரியாத தெரியாத ஒன்றின் மதிப்பு, நம்மைவிட்டு விலகையில் தெரியும்.’ அந்நிலையில் தான் இப்போது ஹரி.
ஆதியை மீறி எதுவும் செய்திட நினைத்திட மாட்டான். அதனாலேயே ஆதினியின் காதலை மறுத்து வந்தவனுக்கு, அந்நேரம் ஆதியின் வார்த்தைகளைக் கேட்டு வெளியில் வந்திருந்தாலும், இந்நொடி ஆதினி வேண்டுமென தவித்தான்.
அவள் வேண்டாமென்று தள்ளியிருந்த போதும் அவன் திடமாக இருந்ததற்கு காரணம் ஆதினியின் குறுஞ்செய்திகள் தான். இப்போது அதுவும் இல்லையெனும் நிலையில் துடித்துதான் போனான்.
அவனின் விலகளில் புரியாத அவளின் வலி, அவளின் விலகல் அவனுக்கு புரிய வைப்பதாய்.
ஆதினி அவனுக்கில்லை என்கிற ஒவ்வொரு நொடியும் ஹரியை உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்தது.
“கொல்லாதடி.” உயிர் உருகி நின்றான்.
இம்மையுமின்றி மறுமையுமின்றி காதலோடு சிதைந்து கொண்டிருந்தவனின் மனச்சோர்வு அவனை உறக்கத்திற்கு இட்டுச்சென்றது.
****
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக பொழுது புலர்ந்திருக்க, வருவிற்கு மட்டும் யாதவின் ஆர்ப்பாட்டத்தோடு துவங்கியிருந்தது.
வரு கண் விழித்த போது அவளுக்கு எதிரிலிருந்த இருக்கையில் முகத்தை தாங்கியவாறு அவளையே பார்த்தவாறு யாதவ் அமர்ந்திருந்தான்.
பதறி இருக்கையின் பின்னால் சாய்ந்தவள் ‘தூக்க கலக்கமோ அல்லது கனவோ’ என்கிற யோசனையில் கண்களை தேய்த்து பார்க்க அப்போதும் யாதவின் நிலையில் மாற்றமில்லை.
“நிஜம் தான்.” உள்ளர்த்தம் வைத்து கூறினானோ!
“எதுக்கு வந்தீங்க?” என்று கேட்டவாறே வரு அறையின் கதவை பார்க்க அது நன்கு திறந்திருந்தது.
“டோர் லாக் பண்ண மாட்டியா?”
“மிட் நைட்டில் எப்போவாவது டார்லிங் வருவாள். அதான்.” அவனை பார்க்க தயங்கியவாறே பதில் அளித்தாள்.
“அது எனக்கு வசதியா போச்சு” என்றவன், “நைட் முழுக்க இப்படியேவா தூங்கின?” என்று கேட்க, அப்போதுதான் தன்னிலை உணர்ந்து, இரவு கூடை நாற்காலியிலேயே அப்படியே உறங்கிவிட்டது நினைவு வர, கீழே குனிந்து தன்னை பார்த்தாள்.
முட்டி வரையுள்ள பேன்ட் மற்றும் டி சர்ட் அணிந்திருந்தாள். தன் தலையில் தட்டிக்கொண்டவள், அவனின் பார்வையை கவனிக்க அதுவோ அவளின் கால்களில் பதிந்திருந்தது.
வாழைத்தண்டு போல் வழவழவென நீண்டு காணப்பட்ட தன்னவளின் காலினை ரசித்தவனின் மனம், காதலை அக்காலின் முடிவில் சமர்பித்திட சொல்லி முரண்டியது.
அதனை தட்டி அடக்கியவன் இப்போது வருவின் பாதத்தை பார்வையால் தொட்டிருந்தான்.
அதனை உணர்ந்தவள் பட்டென்று நீண்டிருந்த கால்களை இருக்கையில் மடக்கி வைத்தாள்.
அவளின் செயலில் சிறு புன்னகை அவனிடம்.
“நீ கொலுசெல்லாம் போடமாட்டியா?”
அவளுக்கு அவனின் அருகாமையில் இருக்கும் பதட்டம், அவனுக்கு அவளிடம் இல்லை.
“சலங்கை கட்டும்போது கழட்ட வேண்டியிருக்கும். அப்பப்போ கழட்டி மாட்டனும், அதான் போடுறதில்லை.” அவள் விளக்கம் சொல்ல அவனிடம் மௌனம்.
மௌனத்தை கலைத்து அவனே பேசினான்.
“உன் காலுக்கு கொலுசு போட்டால் சூப்பரா இருக்கும்.” யாதவின் வார்த்தைகளிலேயே அத்தனை ரசிப்பு.
அவனின் விழி வீச்சில் அவளால் தலையாட்ட மட்டுமே முடிந்தது.
“இன்னைக்கு கிளாஸ் இருக்கா?”
“எதுக்கு” எனக்கேட்டாலும், “போகணும்” என்று அவனுக்கான பதிலை வழங்கினாள்.
“அப்போ என்னோட வரலையா நீ?”
யாதவ் அவ்வாறு கேட்டதும் அவளுக்கு அதிர்ச்சி.
“எங்கே?”
“நைட் சொன்னேன் தானே!”
அப்போதுதான் வருவிற்கு இரவு அவன் அவளை காலை வெளியில் செல்ல கிளம்பியிருக்க சொன்னதே நினைவு வந்தது.
“என்ன முழிக்கிற?” என்றவன், “உன்னை கூட்டிப் போகத்தான் நான் ரெடியா வந்திருக்கேன்” எனக்கூற, அப்போதுதான் அவனின் தோற்றத்தையே கருத்தில் வாங்கினாள்.
வெளியில் செல்வதற்கு ஏற்றவாறு இளமஞ்சள் வண்ண வி நெக் டி சர்ட்டும், கரு நிற ஜீன்சும் அணிந்திருந்தான்.
சுற்றம் மறந்து நொடியில் அவனில் லயித்துவிட்டாள்.
அவளின் பார்வை புரிந்த போதும், அமைதியாக அமர்ந்திருந்தான்.
வரு நினைவு மீள்பவளாக தெரியவில்லை.
“இப்படியே பார்த்திட்டு இருக்க நான் ரெடி. பட் எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்திருக்க?” என்ற யாதவின் கேள்வியில் அடித்து பிடித்து சுயம் மீண்டவள், இரவு அவன் தயாராக இருக்க சொல்லிய நேரம் நினைவுக்கு வர… “ஒன்பது மணி ஆகிருச்சா” எனக் கேட்டவாறே தன்னுடைய அலைபேசியை தேட, அது அவளின் அருகிலில்லை.
“அது ஆச்சு. ஆகி ஒருமணி நேரமிருக்கும்” என்றவன் கால் மேல் காலிட்டு பின்னால் சாய்ந்து அமர்ந்து இரு கைகளையும் தலைக்கு பின் கோர்த்து பிடித்திருந்தான்.
“அச்சோ கிளாஸ்” என்றவள் இருக்கையிலிருந்து இறங்க,
“அப்போ என்னோட வரல?” எனக் கேட்டான்.
“அல்ரெடி டூ டேஸ் லீவ் போட்டுட்டேன்” என்று தயங்கியவாறு அவள் சொல்ல,
“சரி போ” என்றவன் கண்களை மூடிக்கொண்டு, “ஆனால் நீ வரும்வரை இங்க தான் உனக்காக காத்திருப்பேன்” என்றான் சட்டமாக.
‘அய்யோ இதென்ன பிடிவாதம்’ என்று இருந்தது வருவிற்கு.
நின்று பார்த்தவள் அவனின் நிலையில் மாற்றமில்லை என்றதும், “ரொம்ப பண்றீங்க மாமா” என சொல்லி, “போங்க வரேன்” என்றாள்.
“ஷ்யூர்” என்றவன் அவள் ஆமென்றதும் அங்கிருந்து சென்றான்.
யாதவ் கீழே செல்ல வரு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். அவனின் பிடிவாதம், இந்த உரிமை எல்லாம் அவளுக்கு பிடித்துதான் இருந்தது. அவளின் மனமும் ரசித்தது. ஆனால் நிகிலா என்று வரும்போது இதயம் சுருங்கி போனாள்.
“வாடா எப்போ வந்த?”
தந்தையுடன் ஜான் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை கவனித்தவாறு படியிறங்கி வந்த யாதவ் நண்பனிடம் கேட்டிருந்தான்.
“ஆதிப்பாக்கும் ஆன்டிக்கும் விஷ் பண்ணிட்டு போலாம் வந்தேன்.”
“ஏன் நைட் வரல?”
“அந்த சூசைட் கேஸ்… திரும்ப ஹாஸ்பிட்டலில் வைத்து சூசைட் ட்ரை பண்ணிருக்கு டா! நைட் முழுக்க அங்கேயே போச்சு. எவ்வளவு கவுன்சிலிங் கொடுத்தாலும் வேலைக்கு ஆகல” என்ற ஜான் “வரு இன்வைட் பண்ணி நான் வரல, அவகிட்ட சாரி கேட்கணும்” என்றான்.
மூவரும் பேசியபடி இருக்க, மாலை நடக்கவிருக்கும் நிகழ்வை பற்றி அத்திசையில் அவர்களின் பேச்சு பயணித்தது.
அந்நேரம் யாதவின் அலைபேசி ஒலிக்க, திரையில் ரூபியின் எண் ஒளிர்ந்தது.
“ஹாய் ரூபி.”
அழைப்பை ஏற்று காதில் வைத்து யாதவ் பேச்சினைத் துவங்க, ஆதியிடம் பேசிக்கொண்டிருந்தாலும், யாதவிடம் ஜானின் காதுகள் கூர்மை பெற்றன.
…..
அம்முனையில் என்ன சொல்லப்பட்டதோ, “நான் பேசுறேன்” என்றவன் வைத்துவிட்டான்.
யாதவின் பார்வை ஜானை அர்த்தமாக துளைத்தது.
அப்போது விஷாலும் அங்கு வந்திட பேச்சுக்கள் நீண்டன.
“மூணு பேரும் இங்கிருந்தால், அங்க ஹாஸ்பிட்டலில் யார் இருப்பா?” என்று நிரலி அதட்ட, அவர் கொண்டு வந்த தேநீரை எடுத்து ஒரே விழுங்காக விழுங்கிய விஷால் வாசலை நோக்கி நகர்ந்தான்.
“உங்களுக்கு பயந்த மாதிரி எப்படி நடிக்குறான் பாருங்க” என்று நிரலியிடம் கேட்ட ஜான், தானும் புறப்படுவதாக சொல்ல… “மாலை கட்டாயம் வரவேண்டும்” என்று சொல்லியே அனுப்பி வைத்தார்.
“போகலாமா?” கிளம்பித் தயாராக வந்த வரு யாதவின் அருகில் சென்று கேட்க, அவனும் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு எழுந்துகொண்டான்.
ஆதி மகனை குறுகுறுவென்று பார்க்க, “அய்யோ டாட் என்னை ஷை’யா ஃபீல் பண்ண வைக்காதீங்க” என்று அவருக்கு மட்டும் கேட்குமாறு அவரின் காதருகில் குனிந்து சொன்னான்.
மகனின் கன்னத்தை தட்டியவர், “போயிட்டு வா” என்றார்.
யாதவ் வெளியில் வரும்போது ஜான் வருவிடம் பேசிக் கொண்டிருந்தான்.
இரவு அவள் அழைத்தும் வராததற்கான காரணத்தை சொல்லிக் கொண்டிருந்தான்.
“என்னடா ஹாஸ்பிட்டல் வரலையா?” யாதவின் உடையை வைத்து ஜான் கேட்க, “இல்லை மச்சி… ஒரு முக்கியமான வேலையிருக்கு” என்று வரு அறியாது ஜானிற்கு அவளை காட்டி ஜாடை செய்தான்.
“என்ஜாய்” என்ற ஜான் மாலை சந்திப்பதாக சொல்லிச்செல்ல, இருவரும் நகரத்தின் பிரபலமான மால் ஒன்றை நோக்கிச் சென்றனர்.
செல்லும் வழி யாவும் வருவின் அருகாமையில் யாதவ் தவித்துப்போனான். அவளோ அமைதியாக வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, அவனோ தன் உணர்வுகளை கட்டுப்படுத்த ஸ்டியரிங்கில் தாளமிட்டவாறு வண்டியை செலுத்திக்கொண்டே அவளை ஓரவிழியால் பார்த்தபடி இருந்தான்.
மாலின் முன் வருவை இறக்கிவிட்டவன், வண்டியை பார்க் செய்துவிட்டு வருவதாக சொல்லிச்செல்ல… அதுவரை ஏன் வெளியில் நிற்க வேண்டுமென வரு உள்ளே நுழைய யாரோ மீது மோதியிருந்தாள்.
யாரென்று நிமிர்ந்து பார்க்க நிகிலா.
யாரோ ஒரு ஆடவனுடன் அதீத நெருக்கத்தில் நின்றிருந்தாள்.
அவள் யாரென்று வரு அறிந்த போதும் தன்னைக் காட்டிக்கொள்ளாது நிகிலாவை உறுத்து விழிக்க,
“நீதானே எனக்கு மெசேஜ் செய்தாய். நேம்… வருணவி” எனக் கேட்டிருந்தாள் வரு.
ஆமென்று வரு தலையாட்ட… நிகிலாவுடன் இருந்தவன் அவளை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டான். இருவரும் மாலில் உள்ள தியேட்டருக்கு செல்ல… ‘எப்படியும் அவள் படம் முடிந்து வருவதற்குள் மாமாவை இங்கிருந்து அழைத்துச் சென்றிட வேண்டும்’ என நினைத்தவள் யாதவ் வந்ததும் “வீட்டிற்கு போகலாமா?” எனக் கேட்டிருந்தாள்.
*காதல்…
பித்துப்பிடித்த நிலையில்
வெந்து தணிகிறது
நெஞ்சுக்கூடு.
காதல்…
பித்துப்பிடித்த நிலையில்
மரித்து மீள்கிறது
நெஞ்சுக்கூடு.
காதல்…
பித்துப்பிடித்த நிலையில்
யுத்தத்தில் தவிக்கிறது
நெஞ்சுக்கூடு.*
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
24
+1
1
+1