Loading

இதயம் 14 : (காதல் நரகாசுகமல்லவா!)

வந்ததிலிருந்து ஆதியும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். ஹரியின் பார்வை வட்டம் முழுவதும் ஆதினியை சுற்றியே இருந்தது.

எப்போதும் ஆதிப்பா என்று அவனின் பின்னாலேயே சுற்றும் ஹரி இன்று அவர் புறம் திரும்ப கூட இல்லை.

‘தான் கேட்டதற்கு ஆதி ஒப்புக்கொண்டால் பரவாயில்லை. சம்மதிக்கவில்லை என்றால், இன்றோடு ஆதினியை பார்ப்பதே கடைசி’ என நினைத்தவன் அங்கிருக்கும் யாரையும் பொருட்படுத்தாது ஆதினியை தன்னுடைய இதயத்தின் ஆழத்தில் சேமித்துக் கொண்டிருந்தான்.

ருக்கு மாமி, ஹரிணியும் மருத்துவமனையிலிருந்து வந்ததிலிருந்து ஹரியிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.

தன்னை விட தன் வீட்டிலிருப்போருக்கு ஆதினி முக்கியம் என்று அவர்களின் விலகளில் புரிந்துகொண்ட ஹரிக்கு மகிழ்வே. அதில் துளியும் வருத்தமில்லை.

அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, அவர்களுக்கு பழரசம் கொண்டு வர கிச்சனிற்குள் வரு செல்வதை பார்த்த யாதவ் யாரின் கவனத்தையும் ஈர்க்காது அவளின் பின்னோடு சென்றான்.

ட்ரேயில் தம்ளர்கள் வைத்தவள் அதில் பழச்சாறு நிரப்பி திரும்பிய வரு அங்கு யாதுவை எதிர்பாராது அதிர்ந்தாள். சட்டென பின்னால் அவனை கண்டதும் உடலில் நடுக்கம் பரவ, அவளின் கையிலிருந்த ட்ரே ஆடியது.

“என்ன பார்த்தால் பிசாசு மாதிரி இருக்கா?” எனக் கேட்டவாறு ட்ரேயினை தன் கையில் வாங்கிக்கொண்டவன், “நீதான் குட்டிப்பிசாசு மாதிரி இருக்க” என்று சிரியாது சொல்ல வருவின் நினைவுகள் பின்னோக்கிச் சென்று, அந்த நாள் மீண்டும் வராதா என்று ஏக்கம் கொண்டது.

“மிஸ் யூ மாமா.” அவளையும் அறியாது சொல்லிட, யாதவிற்கு தெளிவாகவே கேட்டது. இருப்பினும் அவன் காட்டிக்கொள்ளவில்லை.

“என்ன சொன்ன?”

“ஒன்னுமில்லையே” என்றவள் அவனிடமிருந்து ட்ரேயினை திரும்ப பெற்று, “தள்ளுங்க, நான் போகணும்” என்றாள்.

“சரி போ” என்றவன் பக்கவாட்டில் நிற்க அவளுக்கு மலைப்பாக வந்தது.

ஏனெனில் எப்படியும் வரு அவன் விட்ட வழியில் சென்றால் நிச்சயம் அவன் மீது உடல் உரசும். சட்டமாக நிற்பவனை என்ன சொல்லி நகர்த்துவது தெரியாமல் அப்படியே நின்றாள்.

கையில் ஒரு குவளையை எடுத்து பருகியவன், “போ” என்று வேண்டுமென்றே வம்பு செய்தான்.

“இதுல எப்படி போக?” வருவிற்கு அயர்ந்து வந்தது.

“நீ அவ்வளவு குண்டு இல்லையே! உனக்கு இந்த வழியே அதிகம்” என்றவனின் பார்வை வஞ்சனையில்லாது அவளின் உடலில் மேய்ந்தது.

“த்ரீ டேஸா பேச்சும் சரியில்லை பார்வையும் சரியில்லை.” முணுமுணுத்தவள் அவனை உரசாது ஜாக்கிரதையாக செல்ல நினைத்தாலும் முடியாது போனது.

அவனின் மார்போடு அவளின் தோள் உரச சென்றவளின் நடை நின்றது. அவளின் புஜம் பற்றி தடுத்திருந்தான்.

அவனின் உயரத்திற்கு அவள் தலை உயர்த்தி முகம் பார்க்க வேண்டியிருந்தது.

“நீ சொன்னது எனக்கு கேட்டுச்சு.”

வருவிடம் எவ்வித எதிர்வினையும் இல்லை. அவளின் கருவிழிகள் அவனின் முகத்தில் அலை பாய்ந்தது. இருவருக்கும் நூலிழை அளவே இடைவெளி. அவன் அவளை விடுவதாக இல்லை.

வருவின் பின்னல் அவளின் வலது பக்க தோள் வழியாக முன் விழுந்திருக்க. அங்கு கழுத்து குழிக்கு கீழே நெஞ்சுக்கு மேலிருக்கும் அடர் நிற புள்ளி மறைக்கப்பட்டிருக்க, பின்னலை தூக்கி அவளின் பின்னால் போட்ட யாதவ், சுட்டு விரலை மட்டும் நீட்டி மச்சத்தை மென்மையாய் வருட… மொத்தமாக தன்னிலை இழந்து, அவளின் கண்கள் தானாக மூடிக் கொண்டது. கையில் வைத்திருக்கும் ட்ரேயில் பிடியின் அழுத்தம் கூடியது.

அவளின் அந்நிலை அவனுக்குள் உணர்வுகளத் தூண்டுவதாய்.

“என் பேச்சு, பார்வைக்கான காரணம் இன்னுமா உன்னால் புரிஞ்சிக்க முடியல” என்று கரகரத்த குரலில் வினவினான்.

வருவிற்கு யாதவின் நெருக்கமும், தீண்டலும் அவளை சொல்ல முடியாத உணர்வு குவியலில் சிக்க வைத்தது.

“மாமா…” காற்றாகிப்போனக் குரலில் வெளிவந்தது அவளின் வார்த்தை.

“சொல்லுடா…”

“யாராவது வந்தால் தப்பாகிடும்.”

“வரட்டும்… ஆகட்டும்.”

மூடியிருந்த வருவின் விழிகள் படக்கென திறந்தன.

காதல் வந்துவிட்டால் எதற்கும் துணிவு தான்.

“யாது…”

அருகில் யாரின் அழைப்போ ஒலிக்க, நகர்ந்து வருவிற்கு வழி விட்டவன்… “நாளைக்கு ஒன்பது மணிக்கு கிளம்பி இரு. வெளியில் போகலாம்” எனக்கூறி வருவின் கன்னம் தட்டி அவளுக்கு முன் சென்றான்.

யாது கன்னம் தட்டியதில் சிலிர்த்து அடங்கிய உணர்வுகளை உதரித்தள்ளியவள் மெல்ல நகர்ந்தாள்.

தன்னை அழைத்தது விஷால் என்றதும் யாதவ் தேங்கிட… அவர்களை கடந்து முன் சென்றாள் வருணவி.

“என்னடா பண்ண இப்போ. ஆமாம் நீயெப்போ வருவிடம் பேச ஆரம்பிச்ச?” அப்படியொரு ஆச்சரியம் விஷாலிடம்.

எவ்வளவு முறை யாதுவை வருவிடம் பேச வைத்துவிட வேண்டுமென விஷால் முயற்சித்திருப்பான். அப்போதெல்லாம் பேசாமல் இருப்பது தான் நல்லதென்று சொல்லிச் செல்பவன் இன்று அவளின் கன்னம் தீண்டும் நெருக்கத்தில் நின்று பேசுவதை காண்கையில் அதிர்ச்சியாகத்தானே இருக்கும்.

யாதவ் சிரித்தபடி பழச்சாறினை பருகினானே தவிர விஷாலின் கேள்விக்கு பதில் சொல்லவில்லை.

“உண்மையான காதலை உணர்ந்துவட்ட போலிருக்கே!”

விஷாலின் கேள்வியில் யாதவிற்கு குடித்துக் கொண்டிருந்தது புரை ஏறியது.

யாதவின் தலையில் தட்டிய விஷால், “கவலைப்படாதே, ஆதிப்பாவே உன் மனம் தெரிந்து அமைதியா இருக்கும்போது நிச்சயம் நானா வருவிடம் சொல்ல மாட்டேன்” என்று கூற, எப்போதும் சிறுபிள்ளையென நடந்து கொள்ளும் விஷாலிடம் இதனை யாதவ் எதிர்பார்க்கவில்லை.

“உனக்கு எப்படி?”

“உன்னை பிறந்ததிலிருந்தே எனக்குத் தெரியும்” என்ற விஷாலிற்கு யாதவின் இந்த காதல் அதீத மகிழ்வைத் தர, வரு நிகிலாவின் எண் கேட்டதை அந்நொடி மறந்திருந்தான்.

“உனக்கு முன்பு என்னால் வருவிற்கு உன் காதல் தெரிந்துவிடுமென்று தானே, ஜானிடம் என்னிடம் சொல்ல வேண்டாமென்றாய்?”

விஷாலிடம் இந்தளவிற்க்கு புரிதலை யாதவ் எதிர்பார்க்கவில்லை.

விஷாலை அணைத்துக் கொண்ட யாதவ்… “தேன்க்ஸ் டா மச்சி” என்க,

“போடா” என்று சூழலை இலகுவாக்கினான் விஷால்.

“ஜானை இன்வைட் பண்ணலையாடா?”

“உன் ஆளுக்கிட்ட தான் கேட்கணும். வரு தான் அரேஞ்சமெண்ட்ஸ் எல்லாம் செய்தாள்.”

இருவரும் பேசிக்கொண்டே மற்றவர்களுடன் வந்து சேர்ந்துகொண்டனர்.

அனைவரும் சிரித்தபடி பேசிக்கொண்டிருக்க… ஆதி பேச்சினைத் துவங்கினார்.

“எல்லாரும் இருக்கும் போதே சொல்லிடலாம் நினைக்குறேன்” என்ற ஆதியின் பார்வை முழுக்க ஹரியின் மீதே.

“சொல்லுங்க மாமா.” சூர்யா ஆர்வமாக வினவினார்.

“உன் மருமகளுக்கு கல்யாணம் முடிவாகிருக்கு.”

ஆதி அவ்வாறு சொல்லியதும்… ஆதினி மற்றும் ஹரி இருவரும் ஒரே நேரத்தில் விலுக்கென நிமிர்ந்து அதிர்ந்த பார்வையை வீசினர் ஆதியின் மீது.

“பையன் யாரு மாமா?”

தங்கள் குடும்பத்தின் முதல் வாரிசின் திருமணம் என்றதும் சூர்யா உற்சாகமாகினார்.

“எல்லாம் நமக்கு வேண்டிய பையன் தான் சூர்யா. நல்ல ஜாப். அதைவிட நல்ல குணம். நிச்சயம் ஆதுவை சந்தோஷமா பார்த்துப்பான். நாளை பொண்ணு பார்க்க வர்றாங்க.”

ஆதி அவ்வாறு சொல்லிய நொடி ஹரி அங்கிருக்க முடியாது வெளியேறினான்.

ஆது மட்டுமில்லை அனைவரின் பார்வையும் ஹரியின் முதுகை துளைத்தது.

“என்னடா உனக்கு சம்மதம் தானே!”

மகளிடம் கேள்விகேட்டு அனைவரின் கவனைத்தையும் தன் பக்கம் திருப்பினார் ஆதி.

தான் செய்த செயலுக்கு, காரணம் கேட்டால் தான் வருந்துவேனென்று… என்ன காரணமென்று கூட கேட்காது தன் மனமறிந்து செயல்படும் தந்தையின் பேச்சிற்கு அவளால் மறுப்பு கூற முடியவில்லை.

“உங்க இஷ்டம்ப்பா” என்றவள் அதற்குமேல் அங்கு இருக்க முடியாது தன்னறைக்கு சென்றுவிட்டாள்.

யாதவிற்கு கூட ஆதியின் இப்போதைய பேச்சிற்க்கான காரணம் தெரியவில்லை. மருத்துவமனையில் யாதவ் ஆதியிடம் கேட்டதற்கு கூட ஹரிக்கு சம்மதமென்று சொல்லியவர் இப்போது மாற்றி பேசுவது அவனையே குழப்பியது.

சூர்யா கூட வாய் திறந்து கேட்டுவிட்டார்.

“ஆது ஹரியை விரும்புறாள் மாமா!”

“தெரியும்” என்றதோடு ஆதி முடித்துக்கொண்டார்.

“என்னடா லவ் மேரேஜ் பண்ணிக்கிட்ட ஆதிப்பாவே ஆது லவ்வுக்கு வில்லன் வேலை பார்க்கிறார்.” விஷால் யாதவின் காதை கடித்தார்.

“அதான்டா எனக்கும் குழப்பமா இருக்கு.”

ஆனால் அந்த குழப்பம் வருவிற்கு இல்லை.

“என்ன மாமா பிளான் பெருசோ?”

ஆதினி அவ்வாறு கேட்டதும், கையால் சைகை காண்பித்து தன்னருகே வருமாறு கூறியவர், வருவை தன் பக்கத்தில் அமர வைத்தார்.

“நானென்ன செய்தாலும் நீ மட்டும் ஈஸியா கண்டுபிடிச்சிடுற எப்படி குட்டிம்மா? உன் அத்தை கூட முழிக்கிறாள் பாரு” என்றார் ஆதி.

“யாரு? அத்தை உங்க பிளான் தெரியாது முழிக்கிறாங்களா? நல்ல கதை தான். நீங்க முடிவெடுக்கும் முன்னமே அத்தைக்கிட்ட சொல்லியிருப்பீங்க.

இந்த தேவாவாவது பேபிகிட்ட சொல்லாமல் ஒரு முடிவு எடுக்கிறதாவது” என்று கேலி செய்தாள்.

“உனக்கு புரிஞ்சிடுச்சா குட்டிம்மா?”

ஆதியின் கேள்விக்கு ஆமென்ற வரு, “நாளைக்கு ரெண்டு பேருக்கும் ஷாக் ட்ரீட்மெண்ட்” என்றாள்.

“நீங்க நடத்துற கேஸ் தான் சில நேரத்தில் என்னை மண்டை காயவிடுதுன்னா… நீங்க பேசறதும் சில நேரத்தில் அப்படித்தான் இருக்கு சீனியர்.” ராகவ் வெளிப்படையாக நொந்து கொண்டார்.

அதில் அட்டகாசமாக சிரித்த ஆதி, மாமியின் பக்கம் திரும்பி,

“ஹரிக்கு ஆதுவுக்கும் தான் திருமணம். நாளைக்கு எல்லாரும் ஒன்று சேர்ந்து நமக்குள் பேசி, நிச்சயம் கல்யாணத்திற்கு தேதி முடிவு செய்யலாம்” என்க, மாமியின் முகத்தில் கண்ணீரும் மகிழ்வும் ஒருங்கே தோன்றியது.

“ரொம்ப சந்தோஷம் டா அம்பி” என்று மாமி சேலை தலைப்பால் தன் கண்களை துடைத்து,

“நீ பண்றதுக்கெல்லாம் என்ன கைம்மாறு செய்யப்போறேன் தெரியல” என்று தழுதழுத்தார்.

“எனக்கு எதுவும் வேண்டாம் மாமி. கொஞ்சமே கொஞ்சம் பால் கொழுக்கட்டை மட்டும் செஞ்சு தாங்கோ” என்று வேடிக்கையாக பேசி அவரின் மனநிலை மாற்றினார்.

யாதவிற்கு அத்தனை மகிழ்வு… சகோதரியின் காதல் ஈடேறுவதில்.

“உங்களுக்கு ஹரி மேல் கோபமில்லையே ஆதிப்பா?” ஹரிணி தன் உடன்பிறப்பிற்காக வினவினாள்.

“எனக்கு முதல் குழந்தை நீங்க ரெண்டு பேரும் தான். எனக்கு பலநாள் என் தனிமையை விரட்டியடிக்க காரணமா இருந்தது நீங்க தான். சொல்லப்போனால் ஹரி சம்த்திங் ஸ்பெஷல் டூ மீ.

அவன்கிட்ட நல்ல பிரண்டாதான் பழகியிருக்கேன். அப்படியிருக்கும் போது நானெப்படி அவனுடைய காதலுக்கு தடையா இருப்பேன்னு நினைத்தான். அது கொஞ்சம் வருத்தம் தானே தவிர, அவன்மீது கோபமென்றெல்லாம் எதுவுமில்லை.

நேற்று ஹாஸ்பிட்டலில் கேட்ட கேள்வியை அவன் வெளிநாட்டிற்கு செல்வதற்கு முன்பு உரிமையாகவே என்னிடம் கேட்டிருக்கலாம்.

அப்படி கேட்டிருந்தால் என் சந்தோஷத்திற்கு அளவே இருந்திருக்காது.

அத்தோடு இவ்வளவு வலி வேதனை அவர்கள் இருவருக்குள்ளும் வந்திருக்காது” என்று நீண்டு பேசிய ஆதி, “ரொம்ப லேட் நைட் ஆகிருச்சு… தூங்கலாம்.நாளைக்கு பேசிக்கலாம்” என்று எழுந்து சென்றவர்…

யாதுவை கடக்கும்போது மென்குரலில் அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில், “என்ன யாது லவ் சொல்லிட்டியா?” என ஆதி கேட்க, அவன் புரியாது விழித்தான்.

“அவ்வளவு வேகமா குட்டிம்மா பின்னால் கிச்சனுக்குள் போனியே. சொல்லிட்டியா கேட்டேன்” என்றவரிடத்தில் அத்தனை குறும்பு.

“அவள் ஃபர்ஸ்ட் சொல்லட்டும் டாட்” என்றவனின் எதிர்பார்ப்பு ஆதிக்கு புரிந்தது. அவரும் அதைத்தானே அவரின் மனைவியிடம் எதிர்பார்த்து காத்திருந்தார்.

“கவலைப்படாமல் போங்க மாமி. எல்லாம் சரியாகிடும். நாளைக்கு ஹரியை எப்படியாவது கூட்டி வந்திடுங்க” என்ற நிரலி ஆதியின் பின்னோடு சென்றார்.

சூர்யாவும் கல்பனாவும் கூட விருந்தினர் அறைக்குள் சென்று முடங்க, ராகவும் தன் குடும்பத்தை கூட்டிக்கொண்டு பக்கத்து வீட்டிற்கு செல்ல, ஹரிணியும் மாமியும் அவர்களோடு வெளியில் வந்து எதிர்வீட்டிற்குள் நுழைந்தனர்.

வரு யாதுவை மறந்தவளாக ஹப்பாடா என்று தன்னை ஆசுவாசப்படுத்தியவாறு இருக்கையில் பின் சாய்ந்து கால்களை அகட்டி உடலை தளர்த்தி கண் மூடினாள்.

வருவிற்கு சோர்வாக இருந்தது. படியேறி மாடிக்கு தன்னறைக்குக்கூட செல்ல முடியுமென்று தோன்றவில்லை. அதனால் அங்கேயே அப்படியே சரிந்தாள்.

சென்றவர்களை வழியனுப்ப வாசல்வரை சென்ற யாதவ் உள்ளே வரும்போது வருவின் அந்நிலையை கண்டு, ‘யாரு இவளை எல்லாம் இழுத்துப்போட்டு செய்ய சொன்னது’ என்று கடிந்தான்.

‘பிளட் கொடுத்த டயர்ட்னஸ் வேற இருக்கும்’ என்றவனாக அவளின் அருகில் வந்தவன்,

“எல்லாருக்கும் கொடுத்த நீ குடிக்கலையா” எனக்கேட்டு, டீபாயிலிருந்த ஜூஸ் அடங்கிய தம்ளரை அவளின் வாயருகே கொண்டு சென்றான்.

அருகில் கேட்ட யாதவின் அதட்டலான குரலில் கண் திறந்து மருண்டு விழித்தாள்.

அவள் மறுக்க மறுக்க புகட்டிவிட்டே ஓய்ந்தான். அவளின் அருகே அமர்ந்தவன். தன்னவளின் கையினை தனது கரங்களுக்குள் பொத்திக்கொண்டான்.

ரத்தம் எடுப்பதற்காக கையில் ஐவி சொருகிய பகுதியை மெல்ல வருடியவன், “பெயின் இருக்கா?” என்று வினவினான்.

அவளிடம் பதிலின்றி போகவே நிமிர்ந்து பார்த்தவன், வருவிடம் கண்ணீரை எதிர்பார்க்கவில்லை.

“என்னடா” எனக் கேட்டவாறு இரு கரம் கொண்டு அவளின் கன்னம் தாங்கியவன், பெரு விரல் கொண்டு கண்ணீரைத் துடைத்தான்.

“ஏன் மாமா இதெல்லாம்?” யாதவின் செயல்களை காதலாய் இயல்பாய் ஏற்க முடியாத தன்னுடைய நிலையை அறவே வெறுத்தாள்.

இதெல்லாம் நிகிலா என்றொருவள் யாதவின் வாழ்வில் வருவதற்கு முன்பு நடந்திருக்கக்கூடாதா என்று அவளின் மனம் அடித்துக் கொண்டது.

தற்போதைய அவனின் நெருக்கமும், அக்கறையும், கனிவான பேச்சும் வருவின் இதயத்தில் யுத்தம் செய்தது.

வருவின் கேள்விக்கு பதில் சொல்லாது… தெரியாது யாதவ் அவளையே பார்த்திருக்க அவளே தொடர்ந்தாள்.

“லவ் யூ மாமா. லவ் யூ ஃபார் எவர் அண்ட் எவர்.”

யாதவின் கண்களை நேருக்கு நேர் சந்தித்து, எவ்வித தடுமாற்றமுமின்று மொழிந்து விட்டாள். யாதவ் அவள் வாயிலாக கேட்கத் துடித்த வார்த்தைகள். சொல்லியும்விட்டாள். அவன் கேட்டும் விட்டான்.

ஆனால், வரு அவனின் காதலை உணர்ந்து தன் காதலை வெளிப்படுத்தினாளா? யாதவின் மனம் பதில் வேண்டிட, வருவே தொடர்ந்தாள்.

“நீங்க ஒரு பெண்ணை லவ் பண்றீங்கன்னு தெரிஞ்சும் நான் காதலை சொல்வதில் எனக்கு எந்த அசிங்கமும் இல்லை மாமா.

ஏன்னா இங்க முழுக்க நீங்க தான் இருக்கீங்க.

என்னுடைய காதல் தோல்விதான்னு எனக்கு தெரிஞ்சுப்போச்சு. ஆனால் அது சொல்லாமலே தோத்துப்போனதா இருக்கக் கூடாது. அதான் சொல்லிட்டேன்.

கழுத்தளவுக்கு உங்க மேல் காதலிருக்கு மாமா. உங்களை அப்படி காதலிக்கிறேன். அவ்வளவு பிடிக்கும்.

ஆனால் நீங்க எனக்கில்லை. இதை என் மனசை ஏற்க வைப்பதற்குள் எனக்குள்ள அவ்வளவு யுத்தம். எனக்கு அவ்வளவுதான்னு நான் புரிஞ்சிக்க ஆரம்பிச்ச நொடி… நானெடுத்த முடிவில் என்னால் திடமா இருக்க முடியல மாமா.” மெல்ல விசும்பினாள். வழியும் கண்ணீரை துடைக்க வந்தவனை தடுத்துவிட்டு இம்முறை அவளே துடைத்துக்கொண்டாள்.

“இவ்வளவு நாள் நான் உங்களை காதலிச்சிடக் கூடாதுன்னு தானே என்கிட்ட பேசாம விலகியிருந்தீங்க?

இப்போ மட்டும் ஏன் மாமா?” என்று கையில் முகம் புதைத்து உடல் குலுங்க அழுதாள்.

“வரு… காம் டவுன், அழறதை நிறுத்து. ப்ளீஸ் ஸ்டாப்.”

வருவின் அழுகை நிற்பதைப்போல் தெரியவில்லை. விசும்பலோடு அவளின் தவிப்பு தொடர்ந்தது.

“எனக்கு புரியுது மாமா. உங்களுக்கு என் மேல் பாசமிருக்கு. இன்னமும் நீங்க என்னை உங்க குட்டிபிசாசாத்தான் பார்க்கிறீங்க தெரியுது.

இப்போ என் கை பிடிச்சு வலியிருக்கா கேட்டது கூட என்மேலிருக்கும் அக்கறை தான். ஆனால் மலையளவு காதலை உங்கமேல வைத்திருக்கும்போது இதெல்லாம் என்னையறியமலே என் மனம் வெகுவா ரசிக்குது. இதையே திரும்பத்திரும்ப எதிர்பார்க்கத் தொடங்கிட்டா அது நம்ம ரெண்டு பேருக்குமே நல்லதில்லை மாமா.

நீங்க பக்கத்தில் வந்தாலே நான் சுயமிழுந்து போறேன்.

இப்போக்கூட உங்க அருகாமை எனக்குள் அத்தனை தவிப்பை கூட்டுது. உங்க நெஞ்சில் சாஞ்சிக்கணும் போலிருக்கு.

இதோ உங்க கையை பிடிச்சிட்டு… இந்த பிடியை விட்டுடவே கூடாது. இந்த பிடிக்காக என்னவேணாலும் செய்யணும் தோணுது. ஆனால் அதுக்கான உரிமை எனக்கில்லைங்கிற போது ரொம்ப வலிக்குது மாமா.”

வருவின் ஒவ்வொரு வார்த்தையும் அவன்மீதான அவளின் காதலை அவன் உணர்வதாய். அத்தனை இன்பமாக இருந்தது அவனுக்கு. மொத்தமாக தன்னவளின் காதலை கேட்டிட நினைத்தவன் குறுக்கே எதுவும் பேசாது அவளை பேச வைத்து, அவளின் காதலை ரசித்தான். உள்ளுக்குள் அடி ஆழம் சேமித்தான்.

“சடனா ஏன் நெருக்கம் காட்டுறீங்க… உங்க காதல் நிகிலாதான்னு நானே புரிஞ்சி தள்ளியிருக்க நினைக்கையில் எதுக்கு இந்த பிடித்தம்.

என் காதலை காட்ட முடியாது… நிகிலா மீது நீங்க வைத்திருக்கும் காதலை ஏற்க முடியாது… உங்க அருகாமையில் முரண்பட்டு தவிக்கிறேன்.

மூச்சு முட்டுற மாதிரி இருக்கு.

இதுக்கு மேலும் எனக்கிந்த தவிப்பு வேண்டாம் மாமா. உங்க காதலாவது நிறைவேறட்டும்,

அதனால் இனியும் என்னைவிட்டு முதல் போல விலகியே இருங்க” என்றவள் அவன் பேச வருவதை கூட கேட்காது ஓடிவிட்டாள்.

*யுத்தம் தான்…
காதலில்…
ஒவ்வொரு நொடியும்,
ஒவ்வொரு தருணமும்,
ஒவ்வொரு நிகழ்வும்,
யுத்தம் தான்,
அழகிய யுத்தம்.
அங்கே
போர்க்களம்
காதல் கொண்ட
இரு இதயங்கள்.*

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
30
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்