இதயம் 13 : (ஆனந்தம்)
“மாம் எங்க கிளம்பிட்டீங்க?”
“ஆதி வீட்டுக்கு.”
“இந்நேரத்தில் எதுக்கு?”
“ஏன் போகக் கூடாதா?”
“பேய் வர நேரத்தில் ஏன் போறீங்க?”
“என்ன ராகவ் இவன். இவ்வளவு கேள்வி கேட்கிறான்.”
மகனின் தொடர் கேள்வியில் ஸ்வேதா கடுப்பாகினார்.
“நீங்க கடுப்பாவதை பார்த்தால் எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு.” விஷால் தன் தாய் தந்தை இருவரையும் ஆராய்ச்சியுடன் பார்த்தான்.
“என்னடா… என்ன சந்தேகம்.”
“இந்த நேரத்தில் லவ் பண்ணிட்டே வாக்கிங் போகத்தானே பொய் சொல்லிட்டு வெளியில் போறீங்க?” சிறு பிள்ளையாய் கேட்டிருந்தான்.
“டேய் நீயொரு டாக்டர் டா. அதுக்கேத்த மாதிரி நடந்துக்கோ!” ராகவ் நொந்து கொண்டார்.
“பக்கத்து வீட்டுக்கு போறதுக்காடா இவ்வளவு கேள்வி?” செல்ல விடாது மல்லுக்கு நிற்கும் மகனை முறைத்தார் ஸ்வேதா.
தொழிலில் தன்னுடனேயே இருக்கும் ராகவை உறவுகளற்று தனித்து விடாது தன்னுடனே வைத்துக்கொள்ள ஆதி நினைக்க, ஒரே வீட்டிலிருக்க ராகவ் மறுத்துவிட்டான். இருப்பினும் ஆதியுடனே இருக்க வேண்டுமென எண்ணிய ராகவ் ஆதியின் பக்கத்து வீட்டை வாங்கி திருமணமாகிய புதியதிலேயே இங்கு வந்து விட்டார்.
“இப்போ போறீங்களே அதான் என் டவுட்.” அந்நேரம் விஷாலின் அலைபேசி ஒலிக்க எடுத்து பேசியவன், “வாங்க போகலாம்” என்றான்.
“போனில் யாரு?” இம்முறை கேள்வி கேட்பது ஸ்வேதாவின் முறையாயிற்று.
“வரு ம்மா… ஆதிப்பாக்கு வெட்டிங் டே செலெப்ரேஷனுக்கு கூப்பிடுறாள்” என்றான்.
“நாங்களும் அதுக்குத்தான் போறோம்.”
“இதை முன்னவே சொல்லியிருக்க வேண்டியது தானே!”
“எங்கடா நீ சொல்ல விட்ட” என்ற ராகவ் இருவரையும் அழைத்துக் கொண்டு ஆதியின் வீட்டிற்கு சென்றார்.
கேட்டிற்கு உள்ளே வீட்டு வாயிலில் நின்றபடி யாருக்கோ அலைபேசியில் அழைக்க முயற்சித்துக் கொண்டிருந்த வரு இவர்கள் மூவரையும் கண்டு வாங்க என்று வரவேற்றவள்,
“விஷ் நீ போய் ருக்கு பாட்டி வீட்டில் எல்லோரையும் கூட்டி வா” என அனுப்பி வைத்தாள்.
ராகவும், ஸ்வேதாவும் உள்ளே நுழைந்த போது வீடே இருட்டில் இருந்தது. இரவு விளக்கு ஒன்று மட்டும் பெயருக்கு ஒளிர்ந்தது.
“வாடா ராகவ்.” இருட்டில் யாரோ தன்னை அணைப்பதை உணர்ந்த ராகவ், “டேய் யாருடா அது” என்று சத்தம் போட… “நான்தான்டா சூர்யா, கத்தி மாமாவை எழுப்பி விட்டுடாதே” ராகவின் வாயினை பொத்த ஸ்வேதா மெதுவாக சிரித்தாள்.
“நீங்க எப்போ வந்தீங்க?” என்ற ஸ்வேதாவின் கேள்விக்கு, “ஈவ்வினிங்” என்று பதிலளித்த சூர்யா, “கல்பனா கேக் ரெடி செய்கிறாள்… நீ போய் என்னன்னு பாரும்மா” என்று கிச்சனிற்குள் ஸ்வேதாவை அனுப்பி வைத்தார்.
“எதுக்குடா லைட் போடாமல் சுத்திட்டு இருக்கீங்க?”
“வா இருட்டில் நிக்காமல் அப்படி போய் உட்கார்ந்து பேசுவோம்” என்று ராகவை அழைத்துச் சென்று இருட்டில் தட்டுத் தடுமாறி நீள் இருக்கையை கண்டுபிடித்து அமர்ந்த பின்னர் ராகவ் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார் சூர்யா.
“மாமா ரொம்ப ஷார்ப். லைட் எரிந்தால் நாம் செய்வதை ஈசியாக கண்டுபிடித்திடுவார் அதான்.”
விஷாலும் மாமி, ஹரி மற்றும் ஹரிணியை அழைத்து வந்துவிட்டான்.
அனைவரும் ஒன்றாக அமர்ந்து சத்தம் வராது மெல்லொலியில் பேசியபடி பனிரெண்டு மணிக்காக காத்திருந்தனர்.
வரு எவ்வளவோ முறை முயன்றும் யாதவ் அழைப்பை ஏற்கவில்லை. மாலை அறைக்குள் புகுந்தவன், உணவு உண்ணக்கூட வரவில்லை. சாப்பிட அழைக்கச் சென்ற வள்ளியக்காவிடம் கூட, “நீங்க கிளம்புங்க ஆண்ட்டி, நானே எடுத்து வைத்து சாப்பிட்டுக் கொள்கிறேன்” எனக்கூறி அனுப்பி விட்டான்.
யாதவ் படிப்பு முடிந்து ஒரு வருடம் அங்கேயே பயிற்சிக்காக புகழ் பெற்ற மருத்துவமனையில் வேலை பார்த்தான். அங்கு யாதவ் என்றால் அனைவருக்கும் பரிட்சயம். அவனின் திறமை அங்கு நன்கு மெருகேற பெரிய பெரிய மருத்துவர்களுக்குக்கூட யாதவ் என்றால் பிடித்தம்.
விருப்பப்பட்டு மிகுந்த ஆசையோடு படித்ததாலோ என்னவோ, காப்பாற்ற முடியாத நிலையென்று வந்தாலும் முயற்சித்து பார்த்து வெற்றி காணும் அளவில் மருத்துவ வித்தைகளை தன் விரல் நுனியில் வைத்திருந்தான்.
யாதவ் இந்தியா செல்கிறேன் என்ற போது, அவனை விட மனதில்லாமல் தான் அனுப்பி வைத்தது அந்த மருத்துவமனை நிர்வாகம்.
இப்போதும் ஏதேனும் பல சிக்கலான வழக்குகள் வரும் போது யாதவின் ஜூனியர் டாக்டர்ஸ் இவனிடம் கலந்து ஆலோசிப்பது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
அந்த வகையில் யாதுவை வீடியோ காலில் அழைத்த அவனின் ஜூனியர் டாக்டர் ஒருவர், சிறு மூளையில் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள கட்டியை அகற்றுவதில் இருக்கும் சிக்கலைப்பற்றி யாதவிடம் ஆலோசித்துக் கொண்டிருக்க நேரம் போனதே தெரியவில்லை.
நடுவில் ஒருமுறை வள்ளி வந்து சென்றது மட்டும் நினைவிலிருக்க, அவர் என்ன கேட்டார் தான் என்ன பதில் சொன்னோம் என்பது சுத்தமாக நினைவில் இல்லை.
மருத்துவமனையில் இருக்கும் போது அலைபேசியை மியூட்டில் வைத்தவன் வீட்டிற்கு வந்து சார்ஜரில் போட்டு விட்டு அமர்ந்தவன் இப்போது தான் அசைந்தான்.
பை (bye) சொல்லி அழைப்பை வைத்தவன் மடிக்கணினியை மூடிய படி நேரத்தை பார்க்க பதினொன்று ஐம்பது என்றது.
அப்போதுதான் உணர்ந்தான் அறையில் அவனிருந்த முன் பகுதி மட்டும் விளக்கு போடப்பட்டு மற்ற உட்பகுதிகள் அனைத்தும் இருளில் இருப்பதை.
‘இவ்வளவு நேரம் ஆகிவிட்டதா?’ என்றவன் அலைபேசியை எடுக்க, செல்லம்மா என்று பதிவு செய்திருந்த அவனின் வருவிடமிருந்து எட்டுக்கும் மேற்பட்ட தவறவிடப்பட்ட அழைப்புகள் இடம் பெற்றிருந்தன.
‘வரு?’ சிந்தித்தவன் அறை கதவை திறந்து வெளியில் செல்ல கதவில் கை வைக்க, பால்கனி பக்கமிருந்து ஏதோ சத்தம் கேட்டது.
என்னவென்று பார்க்க பால்கனி பக்கம் செல்ல, கம்பியை பிடித்து உள் பக்கமாக உருவம் ஒன்று தாவியது. இருட்டில் யாரென்று தெரியவில்லை. இப்போது விளக்கை ஒளிரச்செய்தால் அவ்வுருவம் உஷாராகிவிடுமென எண்ணியவன் மெல்ல பால்கனியின் கண்ணாடி கதவை திறக்க, அவ்வுருவம் அருகிலிருந்த சன்னல் வழியாக அறைக்குள் குதித்தது.
அவ்வுருவம் உள் நுழைந்து விட்டதை அறிந்த யாதவ் மீண்டும் அறைக்குள் வந்து அவ்வுருவத்தின் பின்னால் நிற்க, அவ்வுருவம் அறையை பார்வையால் அலசிக்கொண்டிருந்தது.
‘ஏதோ வேலையா இருக்காருன்னு வள்ளிம்மா சொன்னாங்க, இங்க பார்த்தால் லைட் கூட போடாமல் இருக்கு. தூங்கிட்டாங்களோ!’ என்று உள்ளுக்குள் அவ்வுருவம் நினைத்த வேளையில் யாதவ் பின்னாலிருந்து அணைத்தபடி பிடித்திருந்தான்.
பிடித்ததும் பெண்னென்று அறிந்தவனின் கைகள் தன்னால் தளர்ந்து விலகியது. இருப்பினும் உடலில் மெல்லிய இதம் பரவுவதை உணர முடிந்தது அவனால்.
யாதவின் பிடியில் சிலிர்த்து அடங்கிய தேகத்தை கட்டுக்குள் கொண்டுவர அவ்வுருவம் மனதோடு போராட,
“யாரு?” என்று கேட்டுக்கொண்டே யாதவ் மின்விளக்கை உயிர்பித்தான்.
இருளில் கருமை பூசியிருந்த அறை நொடியில் பளீரென வெளிச்சத்துக்கு மாற… அவ்வுருவம் யாரென முன் வந்து பார்க்க வருணவி.
‘செல்லம்மா நீயா? அதனால் தான் இந்த இதமா?’ எனத் தனக்குத்தானே கேட்டுக்கொண்டவன், ‘நீயென்று தெரிந்திருந்தால் விலகியிருக்க மாட்டேனே’ என்றவனின் உள்ளம் மீண்டும் அவ்விதத்தை உணர தவித்தது.
மார்பிற்கு குறுக்காக கைகட்டி நின்றவன், “நீ நேராவே அறைக்குள் வந்திருக்கலாமே! எதுக்கு இப்படி குரங்கு வேலையெல்லாம்” என்று பால்கனி கம்பியை சுட்டி கேலி செய்தான்.
“நான்… நா…ஆங்” யாதவின் தீர்க்கமான பார்வையில் வருவின் நா குழறியது.
அவளின் தடுமாற்றம் உணர்ந்தவன் தன் பார்வையை மாற்றிக்கொண்டான்.
“அத்தை மாமா வெட்டிங் டே.”
கையிலிருந்த அலைபேசியில் தேதியை பார்த்தவன், ‘ஆதினியால் இதனை மறந்து விட்டேனே’ என நெற்றியில் தட்டிக்கொண்டான்.
“சர்ப்ரைஸ் ரெடி பண்ணிருக்கு. ஸ்வேதா அத்தை, ராகவ் மாமா, ருக்கு பாட்டிலாம் கூட வந்திருக்காங்க.”
“எல்லாருமா?” என்று ஆச்சரியமாக வினவியவன், “ஆனால் சத்தம் வரவேயில்லையே?” என்றான்.
“மாமாக்கு தெரியக்கூடாதுன்னு எல்லாரும் அமைதியா டெக்கரேட் பண்ணிட்டு இருக்காங்க. லைட் கூட போடல.”
வருவின் குரல் அவ்வளவு மெல்லியதாக வெளி வந்தது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று தான் அவனின் அறைக்குள் வந்திருக்கிறாள். அவனுடன் தனிமையில் இவ்வறையில் இருப்பதைப்போல் பல நாள் கற்பனையில் கண்ட காட்சிகள் யாவும் இப்போது கண்முன் தோன்றி அவளை இம்சை செய்தன.
அவளை சீண்டிப்பார்க்க ஆர்வம் கொள்பவன், அவளுடனான தனிமை உள்ளுக்குள் பல மாற்றங்களை உருவாக்க, அதோடு அவனை எப்போதும் கவர்ந்திழுக்கும் மச்சம் இப்போதும் அவனை அவள் புறம் சுண்டியிழுக்க, கொஞ்சம் கொஞ்சமாக தன் வசம் இழந்து கொண்டிருந்தவன் தன்னிலை முற்றிலும் தொலைந்து விடும் என்பது அறிந்து,
“சரி நீ போ! நான் வர்றேன்” என்று அமைதியாகக் கூறினான்.
அவள் செல்லாது தயங்கவும்,
“இன்னும் எதாவது சொல்லணுமா?” எனக் கேட்டிருந்தான். அவளின் கழுத்துக்கு கீழ் தாவும் கண்களை முயன்று முகத்தில் பதித்திருந்தான்.
“அது… மாமா” என்று தடுமாறியவள், தன்னுடைய இரவு உடை பான்ட் பாக்கெட்டிலிருந்து சிறு பெட்டியை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
பார்த்ததும் அது கிஃப்ட் என அவனுக்கு புரிந்தது.
“எதுக்கு?”
தன் உணர்வுகளுடன் விளையாடுபவளின் மீது கோபம் துளிர்க்க, சற்று சத்தமாகவே கேட்டான்.
அதில் நடுக்கம் பெற்றவள்,
“அத்தை மாமாக்கு கிஃப்ட்” என்று திக்கித்திணறிக் கூறினாள்.
“அதை என்கிட்ட ஏன் கொடுக்குற?” என்ற கேள்வியுடன் யாதவ் அவளை பார்க்க,
“லாஸ்ட் த்ரீ இயர்ஸ் நீங்க இங்க இல்லை. சோ, என்ன கிஃப்ட் நீங்க கொடுப்பீங்கன்னு அவங்க எக்ஸ்பெக்ட் பண்ணி நீங்க தரலன்னா அவங்களுக்கு ஏமாற்றம் தானே!” என்றவள், “அப்புறம் கூட கொடுக்கலாம் தான், இருந்தாலும் எல்லாரும் கொடுக்கும் போது நீங்க சும்மா…” என வார்த்தையை முடிக்க முடியாது இழுத்தாள்.
தனக்காக யோசிப்பவளின் அன்பில் உருகித்தான் போனான்.
“ம்.”
அவ்வளவுதான் என்பதைப்போல் வரு வந்த வழியே செல்லத் திரும்பி நடக்க,
“டோர் ஓபன் பண்ணியே போகலாம். எதுக்கு இந்த சர்க்கஸ்” என சிரியாது கிண்டல் செய்தான்.
“சாரி” என்ற வரு, “உங்களுக்கு கால் பண்ணேன், இண்டர்காமில் கூட அழைத்து பார்த்தேன். எடுக்கல… கதவை கூட தட்டினேன்” என்றாள் விளக்கமாக.
இப்போது சாரி சொல்வது அவனது முறையாயிற்று.
“வள்ளி ஆண்ட்டி வந்து போனதும் டிஸ்டர்ப் ஆகக்கூடாதுன்னு நான்தான் டோர் லாக் பண்ணிட்டேன். தென் ஹெட் போன் யூஸ் பண்ணதுல சவுண்ட் கேட்கல” என்று கூறியவன் சென்று கதவினை திறந்து நேராகவே செல்லுமாறு கை காண்பித்தான்.
சரியென தலையசைத்தவள் அவனை கடந்து செல்ல அங்கு மேசையில் வீற்றிருந்த சிறு புகைப்படத்தை அவளை அறியாது கையால் எடுத்திருந்தாள்.
அது வெளிநாட்டில் இருந்த போது யாதவ் எடுத்துக்கொண்ட புகைப்படம். கருப்பு நிற கார் கதவினை திறந்து ஒரு காலை நீட்டி வெளியில் வைத்து, கண்ணுக்கு கருநிற கூளர்ஸ் மற்றும் வெள்ளை நிற டிசர்டில் காரிலிருந்து இறங்குவது போலிருந்த புகைப்படத்தில் லயித்துவிட்டாள்.
அதில் அத்தனை அட்டகாசமாக இருந்தான் அவளவன். பாரபட்சமின்றி ஜொல்லியது அவளின் மன்ம. முகத்தில் அப்பட்டமான ரசனை. ரசனையை மீறிய காதல்.
சட்டத்தில் இருக்கும் அவனின் முகத்தை விரல்களால் மென் வருடலாகத் தீண்டியவாறு “செமயா இருக்கீங்க மாமா.” தன்னை அறியாது சொல்லியும் விட்டாள்.
“ஆஹாங்…”
யாதவின் பிரதிபலிப்பில் தன்னை மீட்டவள், புகைப்படத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பியும் பாராது ஓடிவிட்டாள்.
‘லவ் யூ செல்லம்மா.’ வரு வருடிய புகைப்படத்தை கையிலெடுத்துக் கூறியவன்,
“நிஜமிருக்க நிழலெதற்கு. நிழல் நிஜமாவது உன்னாலேயே” என்றவன், “நிஜம் தொலைக்கும் அளவிற்கு என்னை பிடிக்குமா செல்லம்மா” எனக் கேட்டிருந்தான்.
பதில் அறிந்திருந்த போதும் அவள் வாய் மொழியாகக் கேட்டிட தவம் இருக்கின்றான். ஆம் இதுவும் ஒருவகையில் தவம் தான். அவனவளிடம் காதல் வரம் வேண்டிய தவம்.
“என்னடா வறியா இல்லையா?” காதோரம் ஒலித்த கிசுகிசுப்பான குரலில் யாதவ் அதிர்ந்து இரண்டடி விலகி நிற்க, அவனை பார்த்து அசடு வழிந்தபடி நின்றிருந்தான் விஷால்.
“சாரிடா மச்சான்” என்ற விஷால், “வாடா போகலாம்” என அவனின் கை பிடித்து இழுத்துச் சென்றான்.
“இருடா” என்ற யாதவ் மேசையில் வைத்த கிஃப்ட் பாக்ஸை எட்டி எடுத்தவாறு அவனின் இழுப்பிற்கு சென்றான்.
வரவேற்பறை முழுவதும் பலூன், வண்ண காகிதங்கள், மினுக்கும் ஒளி விளக்குகள் என அலங்கரிக்கப்பட்டிருந்தன.
“ஏற்பாடெல்லாம் பலமா இருக்கே!” யாதவ் வியப்போடு கூறினான்.
“ஆதினி விடயம் நிச்சயம் ஆதிப்பாவை வருத்தியிருக்கும். அவர் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் கவலை கொண்டிருப்பார் தானே. அதான் இந்த இறுக்கமான சூழலை மாற்ற இவ்வளவு ஏற்பாடு. எல்லாம் வரு பிளான் தான்.”
தன் சொந்தத்திற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் வருவை யாதவிற்கு இன்னமும் அதிகம் பிடித்தது.
ஆதினி கையில் வலி இருப்பதாக சொல்லி இருக்கையில் அமர்ந்திருக்க, மற்ற அனைவரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.
“ஒரு கேக் கட்டிங்கிக்கு எவ்வளவு அலப்பறைய கூட்டுறாய்ங்க பார்த்தியா மச்சான்.” விஷால் கிண்டல் செய்ய, அவனின் முதுகிலேயே வேகமாக அடி வைத்தார் ராகவ்.
“ஆதி மாமா விடயமென்றால் எங்களுக்கு எப்பவும் ஸ்பெஷல் தான்டா” என்று சூர்யா கூற,
தலைக்குமேல் கையை உயர்த்தி குவித்த விஷால் “ஆதிப்பாவுடைய தீவிர ரசிகர்கள் நீங்கள் இருப்பதை மறந்து வாய்விட்டது என் தவறு தான்” என்று சொல்ல அங்கே சிரிப்பலை எழுந்து அடங்கியது.
அந்நேரம் கிச்சனிலிருந்து கேக்குடன் வந்த வரு, அலங்கரிக்கப்பட்ட வட்ட வடிவ சிறு மேசையின் நடுவில் வைத்தவாறு, “இன்னும் சத்தம் வரட்டுமே! அப்போதான் ரெண்டு பேரும் எழுந்துவர சரியா இருக்கும்” என்க அனைவரும் அமைதியாகினர்.
“ப்பா… நீங்களும் ராகவ் மாமாவும் போய் அவங்களை கூட்டி வாங்க.” வரு சொன்னதும் சூர்யா பம்மினார்.
“என் வயசுக்கு நான் இதெல்லாம் செய்தேன்னு தெரிந்தால் அம்முவே என்னை அண்ணன்னு கூட பார்க்காமல் கலாய்த்து தள்ளிடுவாள். வேறு யாராவது போங்க” என்றார்.
ஆதினியை எறிட்டவள் அவளின் சோர்ந்த முகத்தை கண்டு வேண்டாமென அப்படியே பார்வையை சுழற்ற எல்லோருமே ஆதியின் கிண்டலுக்கு பயந்து முடியாதென மறுத்தனர்.
அந்நிலையில் கூட ஹரி ஆதினியை மட்டுமே பார்த்திருந்தான்.
“ஹரி அண்ணா நீங்க?”
“நான் முக்கியமான வேலையில் இருக்கேன் வரு” என்றவனின் அந்த முக்கிய வேலையை அறிந்தவள் “யூ கண்டினியூ அண்ணா” என்றவாறு யாதுவை பார்த்தாள்.
அவன் அப்போதுதான் தீவிரமாக விஷாலிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். அவளுக்கு வேண்டியதும் இதுதானே! அவளே சென்று அழைத்துவர வேண்டும்.
“சரி நானே போறேன்” என்று வரு நகர, “இரு நானும் வர்றேன்” என்று யாதவும் அவளுடன் நடந்தான்.
“அவங்க கண்களை திறந்ததும் லைட் ஆன் பண்ணிடுங்க ஹரிணிக்கா” என்ற வரு கைகளை பிசைந்தவாறு சென்றாள்.
“நான் மட்டும் போய் அழைத்து வரவா?”
அவ்வாறு கேட்ட வருவை கேள்வியாய் நோக்கியவன், தன் நடையை நிறுத்தவில்லை.
கீழ் தளத்திலேயே நன்கு தள்ளி உள்ளிருக்கும் ஆதியின் அறைக்கு அருகில் வந்திட்ட வரு மேற்கொண்டு செல்லாது அப்படியே நிற்க, யாதவ் கதவினை திறக்க கையை உயர்த்தினான்.
“மாமா.”
உயர்த்திய கையை இறக்கிய யாதவ் என்னவென்று பார்க்க,
“கதவு திறந்துதானிருக்கு” என்றாள்.
“வாட்.”
“நம்ம அரேஞ்சமெண்ட்ஸ் மாமாக்கு தெரியும்.” காற்றாகிப்போனக் குரலில் கூறினாள்.
மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டவன் கால்களை அகட்டி தோரணையாக நின்று,
“ஏதோ சர்ப்ரைஸ் சொன்னீங்க” எனக் கேட்டான்.
“சர்ப்ரைஸ் தான். இந்த டைம் கிராண்டா பண்ணலாம் பிளான் பண்ணியிருந்தோம். டார்லிங் (ஆதினி) பண்ணதால மொத்த பிளானும் சொதப்பி வீட்டிலே செய்யுற மாதிரி ஆகிருச்சு. ஈவ்வினிங் நாங்க பேசியதை மாமா கேட்டுட்டாங்க.
இப்போ இருக்க மனநிலையில் இதெல்லாம் வேண்டான்னு என்கிட்ட சொன்னாங்க. பட் நான்தான் எல்லாரும் விருப்பப்படுறாங்க அவங்களுக்காகவாவது செய்யலாம். நீங்க சர்ப்ரைஸ் ஆன மாதிரி காட்டிக்கோங்கன்னு…” அதற்கு மேல் எப்படி விளக்குவதென்று தெரியாது வரு இழுக்க,
“மாமனும் மருமகளும் சேர்ந்து எல்லாரையும் முட்டாளாக்கா பார்த்திருக்கீங்க?” என்றான்.
“அச்சோ இல்லை” என்று வரு பதற,
“சும்மா” என்று கண்ணடித்தான் யாதவ்.
“சரி வா நானும் உங்க பிளானில் மெர்ஜ் ஆகிக்கிறேன்” என்றுகூறி யாதவ் அறைக்குள் செல்ல, ஆதியும் நிரலியும் பேசிக் கொண்டிருந்தனர்.
“ஹேப்பி அனிவெர்சரி தேவா” என்று யாதவையும் மறந்து ஆதியை அணைத்து உற்சாகமாகக் கூறிய வரு, வழக்கம்போல் நிரலியை சீண்டுவதற்காக ஆதியின் கன்னத்தில் முத்தம் வைக்க, அவள் எதிர்பார்த்தது போலவே நிரலி அவளிடம் சண்டைக்கு வந்தார்.
அதனை ரசிப்பதற்கு பதிலாக யாதவிற்கு தன் தந்தையின் மீது பொறாமையாக இருந்தது.
‘எனக்கு கொடுக்க வேண்டியதை என் அப்பாவுக்கு கொடுக்கிறாளே’ என்று மேல்நோக்கி புலம்பியவன், இன்னமும் வரு ஆதியின் அணைப்பிலேயே இருப்பதை தந்தையாக இருப்பினும் ஏற்க முடியாது “எல்லாரும் வெயிட்டிங்” எனக்கூறியதோடு தன்னுடைய வாழ்த்தை தாய் தந்தை இருவருக்கும் சொல்லி அவர்களை திசை திருப்பினான்.
“நான் மாமா கண்ணை மூடிக்கிறேன். நீங்க அத்தை கண்ணை மூடிக்கோங்க” என்ற வரு மீண்டும் ஆதியின் அருகில் செல்ல,
யாதவினுள் உரிமை உணர்வு கொழுந்து விட்டு எரிந்தது.
“உனக்கு ஹைட் பிராப்ளம் ஆகும். நீ மாம் கிட்ட போ” என்று வருவை நிரலியின் கண்களை பொத்தக் கூறியவன், ஆதியின் கண்களை தன் இரண்டு கை கொண்டு மூடினான்.
“என்கிட்டவே பொறாமையா யாது?” யாதவிடம் ஆதி மெல்லிய குரலில் கேட்க, “கண்டிப்பா டாட்” எனக்கூறி ஆதியையே அதிர வைத்தான்.
அதன் பின்னர் அனைவரின் உற்சாகக் கூச்சலில் துவங்கிய வாழ்த்து, மலர்கள் , பரிசுப்பொருட்கள் ஆட்டம் பாட்டமென்று அந்நேரம் அங்கு மிக மிக சந்தோஷமாகவே கழிந்தது.
வரு சொல்லியது போலவே யாதவ் அவள் கொடுத்த கிஃப்ட்டை இருவருக்கும் கொடுக்க நிரலியிடம் எல்லையற்ற மகிழ்வு. அதற்காக பார்வையாலேயே தன்னவளுக்கு யாதவ் நன்றி தெரிவித்தான்.
எல்லோருடைய பரிசுகளையும் பார்த்து வியந்த ஆதி, “குட்டிம்மா உன் கிஃப்ட் எங்கடா” என்று வருவிடம் வினவ,
“இதோ தரேன் மாமா” என்று வரு அருகில் வர, அப்படியென்ன அவள் தரப்போகிறாளென்று யாதவ் உட்பட அனைவரும் ஆர்வமாக ஏறிட, ஆதி மற்றும் நிரலிக்கு இடையில் வந்து நின்றவள் “ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் எனக்கு கிஸ் கொடுங்க நான் உங்க கிஃப்ட் கொடுக்கிறேன்” என்றாள்.
“அவ்வளவு பெரிய கிஃப்ட்டா என்ன” என்று விஷால் கேட்க, “பார்க்கத்தானே போற இந்த வருவோட பரிசை” என்று தலைவர் தோரணையில் சொல்லி அனைவரையும் அதிர வைத்தவள், “சீக்கிரம் கொடுங்க” என்று இருவரிடமும் தன் கன்னத்தை காண்பித்தாள்.
ஆதியும், நிரலியும் ஒன்று போல் அவளுக்கு முத்தம் வைக்க வர, சடுதியில் அவள் விலகிக்கொள்ள, இருவரின் இதழ்களும் உரசிக் கொண்டன.
நிரலி “அனைவரின் முன்னிலையில் என்னதிது விளையாட்டு” என்று வருவைத் துரத்த, “என் கிஃப்ட் எப்படி பேபி” என்று கேட்டபடி வரு ஓட, ஆதி அட்டகாசமாக சிரித்தார். அவரைத் தொடர்ந்து அனைவரும் சிரிப்பில் மூழ்க, அங்கே ஆனந்தம் பொங்கி ததும்பியது.
அனைத்தும் அடங்கி அனைவரும் சற்று ஆசுவாசமாக அமர்ந்திருக்க ஆதி சொன்ன செய்தியில் ஒரு ஜோடி இதயம் நொறுங்கியது.
எதுவும் பேசிடாது தன் காதலை தனக்குள்ளே புதைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான் ஹரி.
*நெருக்கம்…
விலகிக்கொள்ளச் செய்யும்,
விலகல்…
நெருங்கி வர வைக்கும்
மாயம்… காதல்.
கை தொடும் தொலைவு
அருகில் செல்ல செல்ல
நீளும் மாயம்… காதல்.
வலி கொடுத்து
மருந்தாகும்
மாயம்… காதல்.*
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
24
+1
1
+1