Loading

 

இதயத்தில் யுத்தம் செய்யாதே

****************

விழிகள் சங்கமித்த முதல் நொடி,
அவளின் இதயம் தடம் பெயர…
அவனின் இதயம் நின்று துடித்தது.
வெப்பக்காற்று சடுதியில் குளிராக மாறிப்போக…
நீல வானம் கருமை பூசியது.
இடி முழக்கம் மத்தளம் கொட்ட…
மனங்களில் மின்னலின் அதிர்வு.
மழைத்துளி தேகம் நனைக்க…
மனம் இரண்டும் சில்லிட்டது.
ஒரு இதயம் மற்றொன்றில் மொத்தமாய் வீழ்ந்திட…
பார்வை மொழி பேசியது,
இதயத்தில் யுத்தம் செய்யாதே!

*****************

இதயம் 1 : (முதல் வலி)

அந்தி மாலைப் பொழுது…

வானம் வெய்யோனிடம் நாணம் கொண்டு தன் உடற்பரப்பில் செம்மை பூசிக்கொள்ள… வான் மகளின் வெட்கம் பார்ப்பதற்கு கண்களுக்குள் குளிர்ச்சியை பாய்ச்சியது. மனதில் இதத்தை பரப்பியது.

தென்றல் உப்புக்காற்றோடு கலந்து உறவாடியது.

சூரியன் தன்னை கடலன்னைக்குள் புகுத்திக்கொள்ளும் காட்சி, அங்கு மேலும் ரம்மியத்தை சேர்த்துக் கொண்டிருந்தது.

ஆனால் அத்தகைய அழகு ததும்பும் காட்சி எதுவும் கருத்தில் ஏற்றிக் கொள்ளாது வான் தொடும் தூர கடலினில் மிதக்கும் நாவாயினை வெறித்துக் கொண்டிருந்தான்.

கடல் அலை அவனின் பாதத்தோடு உறவாடிய வண்ணம் இருக்க… அதிலிருந்து அடியெடுத்து வைக்க மறுத்தவனாக நீர் பெண்ணிடம் மனதின் தவிப்பை கொட்டிக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்திற்கு முன்பு அவள் சொல்லிச் சென்ற வார்த்தைகள் இதயத்தை ரணமாக்கியிருந்தது. இடப்பக்கம் ரத்தத்தோடு சதையாய் ஒட்டியிருக்கும் இதயத்தை வேரோடு பிடுங்கி எடுத்திடும் வேகம். அது தரும் வலியை தாங்கிக்கொள்ள முடியாது துடி துடித்துக் கொண்டிருக்கிறான். உண்மையிலேயே காதல் தரும் வலியா அல்லது ஏமாற்றத்தின் வலியா என்பது புரியாமல் போனது அவனின் துரதிஷ்டம்.

சுற்றம் மறந்து தன்னுடைய கம்பீரம் தொலைத்து கன்னங்களில் நீர் வழிவதையும் அறியாது மனதோடு வெம்பினான்.

காதல் சுகமான வலி என்று யார் சொன்னது? அது தரும் சுகத்தை விட வலியின் அளவு பன் மடங்காக இருக்கும் என்பதை கடந்து கொண்டிருக்கும் நிமிடங்கள் அவனுக்கு உணர்த்தின. ஏமாற்றங்கள் தரும் வலியும் காதல் வலிக்கு நிகரானது என்பது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

இதுவரை ஏமாற்றத்தை அவன் சந்தித்தது இல்லையே. அதனால் காதல் பிரிவுக்கும், ஏமாற்றத்திற்கும் உள்ள வலியை அவனால் பிரித்தறிய முடியவில்லை.

வலி வலி வலி மட்டுமே அவனுள் நிறைந்திருந்தது.

மூச்சு விடுவதையே மறந்தவனாக அவன் நின்றிருந்தான்.

“யாதவ்…”

தன் பெயர் விளிப்போடு தோளில் பதிந்த கரத்தினை இனம் கண்டு கொண்டவன்… சடாரென திரும்பி அவரை இடையோடு கட்டிக்கொண்டு கதறி அழுதான். இந்த அழுகை காதல் தோல்விக்கானது அல்ல.

யாதவின் முகம் அந்நபரின் தோளில் பதிந்திருக்க… அவரின் சட்டையில் அவனது கண்ணீர் துளிகளின் ஈரம்.

மகனின் கண்ணீரை எந்த தந்தையால் தான் காண இயலும். அவரின் மனமும் நொடியில் கலங்கிப் போனது.

வாழ்வில் முதல் முறையாக தான் போற்றி வளர்த்த தன் மகன் அழுவதை காண்கிறார் அவர்.

“டாட் முடியல… ரொம்ப வலிக்குது.”

சிறு பிள்ளையென அவன் அழுததில் தன் உயரம் மறந்து அவரது விழிகளிலும் நீர் கோர்த்தது. மகனின் வலியில் பல பேரை நடுங்கச் செய்பவர் மனம் நடுங்க நின்றிருந்தார்.

ஆசை மகனின் வலி என்ற சொல்லில் மொத்தமாக உடைந்திருந்தார்.

“காதல் எவ்வளவு சந்தோஷத்தை தருமென்று உங்களையும் அம்மாவையும் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். உங்களை போல் என்னால் காதலிக்க முடியவில்லை. நான் ஏமாந்துட்டேன் டாட்.”

குரல் அழுகையில் கரைய மிழற்றினான்.

“ஏமாற்றம் இவ்வளவு வலியை கொடுக்கும் எனக்கு ஏன் சொல்லவில்லை டாட்?

யூ ஆர் சீட்டர் டாட். என்னை நீங்களும் ஏமாத்திட்டீங்க!

காதல்… இந்த வார்த்தையே பொய்” என்று கத்தியவன் அவரிடமிருந்து பிரிந்து… மணலில் மண்டியிட்டு தலையை உயர்த்தி இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு சற்று இருட்டிய வானத்தை பார்த்து வெறிப்பிடித்தவனாகக் கத்தினான்.

மனதில் உள்ள வலி பறந்தோடும் வகையில் ஓலமிட்டான். சட்டென்று அவனின் கண்ணீர் நின்றது.

ஒவ்வொரு நொடியும் காதலில் திளைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் யாதவின் தந்தைக்கு மகனின் காதல் கை கூடாதது வருத்தமே. அதைவிட அந்த காதல் மகனை படுத்தும் பாட்டை கண் கொண்டு காண முடியாது… மகனை தேற்றும் வழி தெரியாது வாழ்வில் முதல் முறையாக தடுமாறி நின்றார்.

அவர் ஆதிதேவ். யாதவின் தந்தை. நகரத்தின் மிக பிரபலமான புகழ் பெற்ற வழக்கறிஞர். காதலிக்கும் முன்பே தடைகளை சந்தித்து, காதல் தொடங்கிய பின் தன்னவளையே மணந்து இருந்தாலும், அவருக்கும் காதல் வாழ்க்கை கை கூடிட நான்கு வருடங்களாகிற்றே. ஆதலால் காதலில் பிரிவின் வலி அவருக்கும் நன்கு தெரியும். அதனாலே அவரிடம் தடுமாற்றம்.

காதல் வலிக்கு காதல் ஒன்றே நிவாரணம். அதனை மகனுக்கு கொடுக்கக்கூடிய நிலையில் அவரில்லையே. அதைவிட மகனுக்கு காதலை காட்டியவள் இப்போது அந்த காதல் வேண்டாமென்று சென்ற பின் அவரும் தான் என்ன செய்வார்.

மகனின் காதல் எத்தகைய சூழலில் உருவானது என்பதை அறிந்திடாத ஆதிக்கு அப்பெண் யாதவிற்கு காட்டியது காதல் என்று தான் எண்ணத் தோன்றியது.

“அம் இன் லவ்” என்று எவ்வித தயக்கமுமின்றி தந்தையிடம் சொல்லிய யாதவ்… காதல் அரங்கேறிய விதத்தையும் சேர்த்து சொல்லியிருந்தால், “நீ கொண்டது காதலில்லை” என்று எப்போதோ மகனுக்கு புரிய வைத்திருப்பார். இன்று அவனும் இப்படி கலங்கி போகும் நிலை வந்திருக்காது.

தினம் தினம் அன்னை தந்தையின் காதலை பார்த்து கேட்டு வளர்ந்ததாலேயே யாதவிற்கும் காதலின் மேல் அலாதி ஈர்ப்பு.

உயிருக்கு உயிராக உருகி காதலித்து தன் மனைவியை உள்ளங்கையில் வைத்து தாங்கி… தான் ஆதிதேவின் மகனென்று நிரூபித்து, “தந்தையை மகன் காதலில் மிஞ்சிவிட்டான்” என்று பிறர் கூற கேட்டிட ஆசை கொண்டான்.

ஆசை கொண்டானேத் தவிர காதலென்று தன்னை நெருங்கும் பெண்களையெல்லாம் பார்வையாலேயே விலக்கி வைத்தான். யாரிடமும் சிறு ஈர்ப்பு கூட அவனுக்கு எழவில்லை.

தந்தையை பார்த்தே வளர்ந்ததால் ஆதியிடமிருக்கும் மிடுக்கும் தோரணையும், பார்வையாலேயே பிறரை எடை போடும் திறனும் சிறு வயதிலேயே எளிதாக யாதவிடம் ஒட்டிக்கொண்டது.

ஆதியின் மறு பிறப்பாகத்தான் யாதவ் இருந்தான். அனைத்திலும் தந்தையை பிரதிபலிக்கும் யாதவின் கனவு மட்டும் வேறாக இருந்தது.

விருப்பப்பட்டு மருத்துவம் பயின்றான். ஐந்தாம் வருடம் ஹவுஸ் சர்ஜனில் இருந்த போது, அக்கல்லூரியிலேயே மூன்றாம் ஆண்டு படிக்கும் நிகிலா எவ்வித உட்பூச்சும் இல்லாது காதலை சொல்ல… அந்நொடி ஏற்காது பதிலேதும் சொல்லாது கடந்து சென்றுவிட்டான்.

நிகிலாவால் யாதவின் மனதில் சிறு சலனத்தைக் கூட ஏற்படுத்த முடியவில்லை.

யாதவின் மனம் எந்தவொரு பெண்ணிடமும் சரணடையவில்லை. ஆனால் காதலென்றாலே அவன் மனம் சொல்லும் பெயர் அவனின் செவிகளை சென்றடையவில்லை.

ஆதி ஆரம்பத்தில் எவ்வாறு தன் காதல் யாரென்று தெரியாது இருந்தானோ அதேபோல் யாதவும் தன் மனம் செல்லும் பாதையை உணராது தன் காதல் யாரென்று அறிய முயலாது இருந்தான்.

காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று இருந்தானே தவிர, காதலை மனம் எப்படி அறியும் என்பதை பற்றி சிறு எண்ணமும் இன்றி படிப்பு ஒன்றில் மட்டுமே கவனமாக இருந்தான்.

வெளிநாடு சென்று மேலே படித்து நியூரோ சர்ஜன் ஆக வேண்டுமென்பதே யாதவின் பெரும் கனவு. அதற்கான முயற்சியோடு பயிற்சியில் இருந்த போதுதான் நிகிலாவை சந்தித்தது.

மூன்று வருடங்கள் ஒரே கல்லூரி என்ற போதும் ஒருமுறை கூட யாதவ் நிகிலாவை பார்த்ததில்லை. ஆனால் நிகிலாவின் தினம் யாதவின் முகம் பார்த்த பின்னரே முடிவடையும்.

யாதவின் மீது அவள் கொண்ட விருப்பத்திற்கு அவளாக வைத்துக்கொண்ட பெயர் தான் காதல். அவனின் பின்புலம் மற்றும் கல்லூரியின் முதல் மாணவன் அத்தோடு அங்கு பயிலும் பெண்களின் கனவு நாயகன் இந்த விடயங்களே அவளை அவன்பால் சாய்த்திருந்தது.

நிகிலா காதல் சொல்லி இரண்டு நாட்கள் சென்றிருந்தது. யாதவிற்கு அவள் நினைவு சிறிதுமில்லை.

அதன் பின்னர் அவள் செய்த ஒன்று… நிகிலா மீது தனக்கு காதல் இருக்கிறதா என்று அவனின் மனதை ஆராய விடாது மூளை சம்மதம் வழங்கியது.

மற்ற காதலர்கள் போல் அல்லாது அவளிடம் தான் வேறென்று ஒவ்வொரு செயலிலும் நிரூபித்தான். தந்தையை போன்று மனைவியைத்தான் மூச்சு முட்ட காதலினால் ஆராதிக்க வேண்டுமென்று இருந்தவனால் காதலியாக மட்டுமே பெயர்கொண்ட நிகிலாவிடம் அதிகப்படியான காதலை வார்த்தைகளில் கூட காட்ட இயலாது கண்ணியம் மட்டுமே காக்க முடிந்தது. நண்பர்களை போல் தான் இருந்தது அவர்களின் உறவு.

இதுதான் காதலென்று யாதவ் நம்பியது தான் இங்கு விந்தை.

திருமணம் முடிந்து தான் மொத்த காதலையும் காட்டிட வேண்டுமென்று இருந்தவனுக்கு புரியாது போன ஒன்று, தனக்கு இணையானவளிடம் மட்டுமே எந்நிலையிலும் மனம் லயித்து காதலை காட்டிட முடியும் என்று. மனம் மனதோடு மட்டுமே சேரும்.

நண்பர்களுக்குள் இருக்கும் சாதாரண உரிமை பேச்சினைக் கூட அவனால் அவளிடம் பேச முடியாது. படிப்பில் மட்டுமே அந்நேரம் முழு மூச்சாக இருந்தவனுக்கு அதனை ஆராயும் நேரமின்றி போனது.

தன் நண்பர்கள் காதலிக்கிறார்கள் என்பது தெரியும். ஆனால் அவர்களின் பேச்சுக்கள், நடவடிக்கைகள், காதல் வந்தால் மனதில் எழும் உணர்வு மாற்றங்கள் யாவும் எப்படி இருக்குமென்று கேட்டதில்லை. அதைப்பற்றி பேசியதும் இல்லை. அப்படி பேசியிருந்தால் கேட்டிருந்தால் யாதவிற்கும் காதல் என்பது யாதென்று தெரிந்திருக்குமோ!

அவனைப் பொறுத்தவரை படிக்கும் மருத்துவத்தின் வாயிலாக அறிந்தது, காதலென்றால் ஹார்மோன் மாற்றம். ஆனால் அதனைக்கூட நிகிலாவிடம் அவன் உணரவில்லை.

தன் தந்தை தன்னுடைய தாயினை எந்தளவிற்கு காதலிக்கிறார் என்று தெரிந்து கொண்டவனுக்கு காதல் என்பது என்ன என்று தெரியவில்லை.

காதல் எப்படி மனதில் தடம் பதிக்கும் என்பதை அறியாமலேயே… அவனுக்காக அவள் செய்த ஒன்று வெறும் வார்த்தையாக மட்டுமே அவனை காதல் சொல்ல வைத்தது. அதுதான் காதலென்று நினைத்தும் கொண்டான்.

நிகிலாவின் அருகில் ஆதி சொல்லும் மேஜிக்கினை யாதவால் உணர முடியவில்லை. அந்த மேஜிக் மனதால் ஒன்றுபட்ட காதலில் மட்டுமே சாத்தியமென்று அவன் அறியாது போனான்.

‘தந்தை சொல்லும் காதல் வெறும் வார்த்தைகள் மட்டுமே’ என்று நினைத்தவனுக்கு மனதால் ஒன்றினையும் நேசம் ஆழிப் பேரலையாய் இதயத்தை சுருட்டிச் செல்லும். ஒவ்வொரு கணத்தையும் திக்குமுக்காட வைக்குமென்று தெரிந்திருக்கவில்லை.

அதனால் நிகிலாவின் செயலால் அனுதாபத்தினால் தான் சொல்லியது காதலில்லை வெறும் வார்த்தைகள் மட்டுமே என்று யாதவ் உணரவில்லை.

கண்களை அழுந்த மூடியவன் நிகிலாவிடம் தன் சம்மதத்தை சொல்லிய தருணத்தையும் அப்போது நேர்ந்த நிகழ்வையும் நினைத்து பார்க்க…

‘உண்மையில் இதுதான் காதலா?’ என்ற கேள்வி மனதில் எழுந்தது.

காலம் கடந்த எதற்கும் பலனில்லை என்பதை அவனிற்கு யார் சொல்வது.

அதன் பின்னர் கடந்து சென்ற ஐந்து வருடங்களைப்பற்றி சிந்திக்க விருப்பமில்லாது எழுந்து நின்றவன் கண்களை அழுந்த துடைத்து தன் தந்தையை நேருக்கு நேர் பார்த்தான்.

அவனின் முகம் எப்போதும் புன்னகைத்திருக்கும். இப்போது அங்கு அழுத்தம் மட்டுமே காணப்பட்டது.

“சாரி டாட்.”

ஆதிக்கு முன்னால் வேக எட்டுக்கள் வைத்து சென்றவன், பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது வண்டியை கிளப்பிக்கொண்டு அசுர வேகத்தில் காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்தான். நொடியில் ஆதியின் கண்களிலிருந்து மறைந்திருந்தான் யாதவ்.

ஆதிக்கு மகனின் நிலை தெள்ளென புரிந்தது.

இவ்வளவு நேரமும் வெடித்து சிதறி கொண்டிருந்தவனின் இந்த திடீர் மாற்றம் ஆதியை யோசிக்க வைத்தது.

‘யாது அப்பெண் மீது கொண்டது காதல் தானா?’

இந்த வயதிலும் மனைவியிடம் காதலை கொட்டி வழங்கிடும் ஆதிக்கு உண்மை காதல் யாதென்று தெரியாமலா இருக்கும்.

ஒருவனால் காதலின் வலியை எளிதில் ஏற்க முடிகிறதென்றால் நிச்சயம் அந்த காதலுக்கு உண்டான ஆழம் மிகக் குறைவே. அது வெறும் ஈர்ப்பு.

இங்கு யாதவிடம் அத்தகைய ஈர்ப்பு கூட இல்லாமல் வெறும் வாயால் சொல்லப்பட்டது எப்படி காதலாகும்.

நிகிலா சொல்லிய காதலை ஏற்றானேத் தவிர, தன் மனதில் அவளுக்கான காதல் இருக்கிறதா என்பதை பற்றி சற்றும் யோசியாது விட்டுவிட்டான். இங்கு யாதவ் மிகவும் சறுக்கி விட்டான்.

இப்போது அவன் மனம் முழுக்க ஏமாற்றப்பட்ட வலி மட்டுமே! காதலே செய்யாதவனிடம் எப்படி காதலின் வலி இருக்கும். இதனை அவன் உணர உண்மையாக அவனை காதல் ஆட்கொள்ள வேண்டும்.

இதனை ஆதி நொடியில் புரிந்து கொண்டார்.

‘இதிலிருந்து அவனாகத்தான் தெளிந்து வரவேண்டும்.’ மனதில் நினைத்தவர் மகனை எண்ணி வருத்தம் கொண்டவராக அங்கிருந்து சென்றார்.

ஆதி பாதிவழி சென்றிருக்கும் போது அவரின் அலைபேசி சப்தம் எழுப்ப… ஒலித்த பாடலை வைத்தே யாரென்று அறிந்தவரின் இதழில் மெல்லிய புன்னகை.

“சொல்லுடாம்மா…”

“மாமா யாது?”

அழைத்தது அவனவள். ஆதியின் சரிபாதி.

சில நொடிகளுக்கு முன் தான் யாதவ் வீட்டிற்குள் புயல் போல் நுழைந்திருந்தான். எதிர்பட்ட அன்னையிடம் கூட முகம் காட்டாது வேகமாக மாடியேறி தன்னறைக்குள் புகுந்தவன் வீடே அதிர கதவினை அறைந்து சாற்றினான்.

மகனின் இத்தகைய செயல் முற்றிலும் புதிது.

யாதவ் அதிர்ந்து கூட பேசிடாதவன். தன்னுடைய விருப்பமின்மை மற்றும் கோபத்தை கூட அழுத்தமான அமைதியின் மூலமே சுட்டிக் காட்டுவான். அப்படிப்பட்டவனின் இன்றைய செயல் நிரலிக்கு பயத்தை தோற்றுவிக்க கணவனுக்கு அழைத்துவிட்டார்.

“யாதவ் வீட்டிற்கு வந்துவிட்டானா?அதற்குள்ளா?” என்று சற்று ஆச்சர்யமாக வினவிய ஆதிக்கு யாதவின் வேகம் பயத்தையே அளித்தது.

“ஒன்றுமில்லை பேபி… நேரில் வந்து சொல்லுகிறேன்” என்று அழைப்பை வைத்த ஆதி தனது வேகத்தை அதிகரித்தான்.

யாதவ் அறைக்குள் புகுந்த சில நொடிகளில் பொருட்கள் சிதறி உடையும் சத்தம் கேட்டு அரண்டு போன நிரலி மாடியேறி சென்று மகனின் அறைக்கு முன் கைகளை பிசைந்து கொண்டு நின்றார்.

தன் மீதே உண்டான கோபம் முழுவதையும் அறையிலிருந்த பொருட்களில் காண்பித்தவன் தன் முழு உயர பிம்பத்தையும் காட்டிக் கொண்டிருந்த ஆளுயரக் கண்ணாடியை தனது கை முஷ்டியை மடக்கி ஒரே குத்திலே சில்லு சில்லாக உடைந்து சிதறச் செய்திருந்தான். ரத்தம் கசிவதை பொருட்படுத்தவே இல்லை.

அந்த சத்தத்தில் வெளியே நிரலி பதறி துடித்தார்.

“யாது…”

அன்னையின் குரலில் சற்று நிதானத்திற்கு வந்தவன் குளியலறைக்குள் புகுந்து ஷவருக்கடியில் நின்று கொண்டான்.

மனதின் வெம்மை நீரில் கரைந்து செல்ல… எவ்வளவு நேரம் நின்றிருந்தானோ மனம் இறுகி அனைத்தையும் தனக்குள் புதைத்தவனாக நீருக்கடியிலிருந்து வெளியில் வந்தான்.

அலங்கோலமாகக் கிடந்த அறை அவன் காதல் என்ற பெயரினால் ஏமாற்றப்பட்டதன் சுவடு. அதனை புறம் தள்ளினான். கை முஷ்டியை மடக்க… அடிபட்ட இடத்தில் தோய்ந்திருந்த ரத்தம் மீண்டும் எட்டிப்பார்த்தது.

படாரென்று கதவினை திறந்துகொண்டு வெளியில் வந்தவன் அன்னையின் நிலை கண்டு தன்னையே உள்ளுக்குள் நிந்தித்தான். ஆனால் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.

“டெல் தி பிரஸ் டூ கிளீன் தி ரூம் மாம்.”

அன்னையை காணாது தனக்கு முன்னிருந்த சுவற்றை வெறித்தவனாகக் கூறியவன் எதுவும் நடந்திடாததை போன்று மருத்துவமனைக்கு சென்றுவிட்டான்.

அன்றைக்கு அவனுக்கு எவ்வித அறுவை சிகிச்சையோ அல்லது நோயாளிகளின் பார்வை நேரமோ எதுவுமில்லை.

இருப்பினும் இந்நிலையில் வீட்டில் இருக்க முடியாதென கிளம்பி மருத்துவமனைக்கு வந்திருந்தான்.

நகரத்தில் மிகவும் பிரபலமான  மருத்துவமனை. அனைத்து விதமான நோய்களுக்கும் வேண்டிய சகலவிதமான வசதிகளும் அந்த மருத்துவமனையில் உள்ளது.

மகனின் விருப்பம் மருத்துவம் என்று தெரிந்ததும்… யாதவிற்காக மருத்துவமனை ஒன்றை கட்டித்தர வேண்டுமென ஆசைகொண்ட ஆதி, யாதவ் படிப்பினை முடித்து வரும்போது தன்னால் கட்டப்பட்ட மருத்துவமனைக்கு மகனை உரிமையாளராக அமர வைத்தார்.

அதில் யாதவிற்கு பெரும் மகிழ்வு.

தன்னைப்பற்றி அனைத்தும் தெரிந்து தனக்கு உற்ற நண்பர்களாக இருக்கும் விஷாலையும், ஜானையும் தன்னுடனே அழைத்துக் கொண்டான்.

அப்போது தான் நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்துவிட்டு மருத்துவர்களின் கன்சல்டிங் அறை பகுதிக்குள் நுழைந்த கார்டியாலிஜிஸ்ட் விஷால்… யாதவின் அறையில் விளக்கு ஒளிர்வதை கண்டு அங்கு சென்றான்.

கதவினை தட்டியவன் உள்ளிருந்து எவ்வித சத்தமுமின்றி இருக்க,

“யாதவுக்கு இன்றிரவு ட்யூட்டி இல்லையே!” என்று சொல்லிக்கொண்டே கதவினை திறந்து உள் செல்ல… சீலிங்கில் சுற்றும் மின்விசிறியையே வெறித்து பார்த்தபடி இருக்கையில் பின் சாய்ந்து அமர்ந்திருந்தான் யாதவ்.

அவனின் கண்களில் நீர் நிரம்பி கன்னம் தாண்டி வழிந்திருந்தது.

நண்பனின் கண்களில் இதுவரை கண்டிடாத கண்ணீரை காண்கின்றான். பதறிய விஷால் யாதவின் அருகில் சென்று அவன் கண்ணீரைத் துடைக்க கண்களை மூடிக்கொண்டான் யாதவ்.

யாதவின் பொக்கிஷ நீர்த்துளிகள் நிச்சயம் அந்த நிகிலாவிற்காக அல்ல.

எதையோ விரட்டும் எண்ணத்தில் இமை மூடியவனின் விழிகளுக்கு நடுவில்… தன் மூரல்கள் மின்ன அழகாய் சிரித்தாள் யாதவின் வருணவி.

 

Epi 2

இதயத்தில் யுத்தம் செய்யாதே 2

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
23
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments