Loading

இவ்வாறாக நடந்ததைக் கணபதி கூறி முடிக்க அபிராமிக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. ஏற்கனவே கணவரின் நிலை என்னவோ என்றறியாமல் தவித்தவரின் மனதில் அடுத்த இடியை இறக்க அவரோ அழுது புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

“ஐயோ.. நாங்க யாருக்கு என்ன பாவம் செஞ்சோம்.. இப்படி அடுத்து அடுத்து எங்க தலைல இடியை இறக்குறீங்களே..” என்று அழுது தீர்க்க ஆதினி சமாதானம் செய்ய முயன்று தோற்று அவளும் அழுக ஆரம்பித்துவிட்டாள். இந்திரா அபிராமிக்கும் மாதவி ஆதினிக்கும் சமாதானம் கூறினர். தூயவனுக்கோ மாதவன் ஆதினி திருமணம் தடைப்பட்டதை எண்ணி ஒரு புறம் நிம்மதி இருந்தாலும் தனக்கு ஏதேனும் சிக்கல் வந்துவிடும் என்ற பயமும் கேசவனின் உடல்நிலைக் குறித்த கவலையும் இருக்கவே செய்தது. கேசவனைப் பரிசோதித்த மருத்துவரோ, 

“பயப்படுற மாதிரி எதுவும் இல்ல.. அதிர்ச்சியான விஷயம் எதையோ கேட்டு ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகி பேனிக் அட்டாக் ஆகியிருக்கு அவ்ளோ தான்.. கொஞ்ச நேரம் அவர் ரெஸ்ட் எடுக்கட்டும்.. அப்புறம் போய் பார்க்கலாம்” என்று கூறிவிட்டு செல்ல அப்பொழுது தான் அனைவர்க்கும் நிம்மதி பிறந்தது.

அதற்கிடையில் மீனாட்சி பாட்டியின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் தெரிவதாகவும் அவர் பேச வேண்டும் என்று கூறுவதாகவும் செவிலிய பெண் அழைக்க இப்பொழுது கணபதி, இந்திரா, மாதவன், தூயவன், மாதவி, ஆதினி, சமர் ஆகியோர் உள்ளே செல்ல அவரோ நிதானமாக படுத்திருந்தார். அனைவரின் மேலும் பார்வையை செலுத்தியவரின் கண்கள் இறுதியாக ஆதினியின் மேல் படிய அவளை கைநீட்டி அழைத்தார். ஆதினியும் அருகில் செல்ல அவளது கரத்தைப் பற்றிய அந்த மூத்தவர்,

“தாயி.. நீ எங்க வீட்டுல விளக்கேத்துறத பார்த்த அப்புறம் தான் நான் கண்ண மூடனும் தாயி” என்றவரின் கண்களில் கண்ணீர் பெருகியது. என்ன பதில் கூறுவது என்று புரியாத ஆதினியோ,

“உங்களுக்கு சீக்கிரம் சரியாயிடும் பாட்டி” என்று கூறிவிட்டு நழுவ பார்க்க அவளின் கரத்தை விடாமல் பற்றிக்கொண்டே கணபதியிடம் பார்வையை செலுத்த அவரோ,

“ம்மா.. நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேப்பீங்களா” என்று கேட்க அவரோ நிதானமாக பார்த்தார். 

“ஜாதகம் தவறுதலா மாறிடுச்சு மா.. மாதவனுக்கும் ஆதினிக்கும் பொருத்தம் இல்ல.. மீறி கல்யாணம் பண்ணி வச்சா மாங்கல்ய தோஷம் ஆகிடுமாம்.. அதனால இந்த கல்யாணத்த…” என்று கூற வந்தவரை தடுத்த மீனாட்சி,

“ஜாதகம் எப்படி மாறுச்சு” என்று தட்டுத்தடுமாறி கேட்க வேறுவழியின்றி நடந்த அனைத்தையும் கணபதி கூறிமுடித்தார். அனைத்தையும் கேட்ட மீனாட்சி பாட்டிக்கு ஆத்திரம் பொங்கியது. 

“நீங்களா பொண்ணு கேட்டு போயி.. நீங்களே ஜாதகம் பார்த்தா போதும்னு நம்பிக்கை குடுத்துட்டு அந்த பொண்ண பெத்தவங்கள கல்யாண கனவு காண வச்சுட்டு கடைசில.. கடைசில” என்று கூற வந்தவர் இரும தூயவனோ,

“பாட்டி நீங்க ரிலாக்ஸ்சா இருங்க.. எதுக்கு இப்போ டென்சன் ஆகுறீங்க” என்று கூறியும் கேட்காமல் தொடர்ந்தவர்,

“கடைசில சுலபமா ஜாதகம் மாறிடுச்சுன்னு மன்னிப்பு கேட்டு அந்த நல்ல மனுஷனா படுக்க வச்சுட்டீங்க.. நம்ம வீட்டுல ஒரு பொண்ணு இருந்து இதே நிலைமை நமக்கு நடந்தா நம்மளால ஏத்துக்க முடியுமா கணபதி.. நீயும் பொறுப்பில்லாம மன்னிப்பு கேட்ருக்க.. அந்த மனுஷன் மனசு என்ன பாடு பட்டுருக்கும்.. இந்த பாவத்தை எல்லாம் கேட்குறதுக்கு நான் அப்போவே உயிரை விட்டிருப்பேன்..” என்று ஆதங்கத்தில் கூற கணபதியும் இந்திராவும் தலைக் குனிந்து நின்றனர். மாதவனுக்கும் குற்றவுணர்வாக இருந்தது. ஆனால் தூயவனோ,

“இப்போ அதுக்கு என்ன செய்ய சொல்றீங்க.. வேணும்னு தெரிஞ்சா எல்லாம் செஞ்சோம்.. நல்ல படியா நடக்கணும்ன்னு நெனச்சு தான எல்லாம் செஞ்சோம்” என்று கூற ஆதினியோ தூயவனை முறைத்துவிட்டு மாதவனை பார்க்க அவனோ,

“டேய் தூயவா.. அமைதியா இரு.. தப்பு நம்ம மேல.. நான் பாட்டிகிட்ட பேசிக்குறேன்” என்றவன்,

“பாட்டி தப்பு நம்ம மேல தான்.. ஆனா இப்போ நமக்கு வேற வழி இல்ல தான.. ஆதினியே புரிஞ்சுக்கிட்டாங்க.. என்ன ஆதினி” என்று கேட்க அவளும்,

“ஆமா பாட்டி.. விதிப்படி தான் எல்லாம் நடக்கும்.. பெரியவங்க உங்களுக்கு நான் சொல்லி புரியவைக்க அவசியம் இல்ல.. இதுக்கு மேல நான் உங்க வீட்டு மருமகளா ஆக வாய்ப்பு இல்ல.. கூடிய சீக்கிரம் நல்ல பொண்ணா வருவா உங்க வீட்டுக்கு.. கவலைப்படாம இருங்க.. அப்பா கிட்ட நான் பேசி புரியவச்சுக்குறேன்.. வரேன் பாட்டி டேக் கேர்” என்றவள் எழுந்து கேசவனின் அறைக்கு சென்றுவிட்டாள்.

சிறிது நேரத்தில் கேசவனும் கண்விழித்து விட அவருக்கும் நடந்தது புரிந்தது. கணபதியின் நிலைப் புரிந்தவர் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டார் அவரது மன்னிப்பை. பிறகு ஆதினி, கேசவன் மற்றும் அபிராமி வீட்டிற்கு செல்ல எண்ணி மீனாட்சியைப் பாட்டியை சந்தித்து விடைபெறுவதற்காக உள்ளே செல்ல அங்கு அனைவருமே இருந்தனர். கேசவனோ,

“கூடிய சீக்கிரம் குணமாகிருவீங்க மா.. கவலைப்படாதீங்க.. நடந்ததெல்லாம் விதின்னு நெனச்சுப்போம் .. சரிங்கமா நாங்க வரோம்..” என்றவர் அனைவரிடமும் இருந்து விடைபெற்று கிளம்ப எண்ணி செல்ல எத்தனிக்க மீனாட்சியோ,

“எப்பா கேசவா.. கொஞ்சம் நில்லுப்பா” என்க மூவரும் கேள்வியாய் பார்த்தனர். 

“பார்த்தியா கணபதி.. இதே இடத்துல வேற ஒரு பொண்ணு வீட்டுக்காரங்களா இருந்தா கோர்ட்டு கேஸுன்னு போயிட்டு நஷ்டயீடு கேட்டா கூட ஆச்சர்யமில்லை. ஆனா இந்த மனுஷன் எவ்ளோ பெருந்தன்மையா நடந்துக்குறாரு..” என்று கூற அனைவர்க்கும் அவரின் மீது மரியாதை ஏற்பட்டது. தூயவனும் கூட அவரது குணத்தை எண்ணி ஆச்சர்யப்பட்டான். மேலும் தொடர்ந்த மீனாட்சி பாட்டியோ,

“காசு பணம் அந்தஸ்துல வேணா நாம ஒசத்தியா இருக்கலாம்.. ஆனா மனசளவுல கேசவன் ரொம்ப ஒசத்தி பா.. இப்படிப்பட்ட ஒரு சம்மந்தம் கிடைக்க நாம தான் ராசா குடுத்து வச்சிருக்கணும்.. நாம மட்டும் இதை தவறவிட்டா நமக்கு ரொம்ப பெரிய இழப்புயா” என்று மனதார கூற தூயவனோ,

‘இப்போ எதுக்கு இந்த கிழவி இவ்ளோ டயலாக் பேசுது.. ஜாதகம் பிடிக்கலைன்னு தெரிஞ்சும் கல்யாணம் பண்ணி வைக்குற அளவுக்கு இந்த கிழவி டெவெலப் ஆகிருச்சா.. இல்லையே அதுக்கு வாய்ப்பு இல்லையே.. ஜாதகம் தான் உயிர் மூச்சுன்னு கொடி பிடிக்குற ஆளாச்சே இது.. என்ன செய்ய காத்திருக்குன்னு தெரியலையே’ என்று யோசித்தபடி பார்த்துக்கொண்டிருந்தான். கேசவனோ,

“ரொம்ப நன்றிங்க மா.. ஆனா ஜாதகத்தை மீறி கல்யாணம் செஞ்சி வைக்குற அளவுக்கு என் மனசு இன்னும் பக்குவப்படல.. நின்னது நின்னதாவே இருக்கட்டும்.. எங்களை நெனச்சு கவலைப்படாதீங்க.. நாம ஒன்னு நெனச்சா அந்த தெய்வம் வேற ஒன்னு நெனச்சுருக்கு.. அதுபடியே போவோம்..” என்க தூயவனுக்கு நிம்மதி பிறந்தது. ஆனால் மீனாட்சியோ,

“நானும் ஜாதகத்தை ரொம்ப நம்புறவ தான் பா.. ஜாதகத்தை மீறி கல்யாணம் செஞ்சி வைக்குற அளவுக்கு நான் எப்போதுமே போக மாட்டேன்.. நீ சொன்னியே நாம ஒன்னு நெனச்சா கடவுள் ஒன்னு நெனச்சுருக்காருன்னு.. நாம கடவுள் விட்ட வழில போகலாம் தான.. ” என்று கூற அனைவரும் புரியாமல் முழித்தனர். கணபதியோ,

“என்னமா சொல்றீங்க.. புரியல.. ஏற்கனவே அவங்க குடும்பத்துக்கு பாவம் செஞ்சுட்டோமேன்னு என் மனசு குற்றஉணர்வுல தவிக்குது.. உங்க வார்த்தை அதுக்கு மருந்தா இருக்கும்னு நினைக்குறேன்.. தெளிவா சொலுங்கமா” என்க,

“டேய் கணபதி.. நாம மாதவனுக்கும் ஆதினிக்கும் கல்யாணம் செஞ்சு வைக்க நெனச்சு எல்லா ஏற்பாடும் செஞ்சோம்.. ஆனா அந்த கடவுள் நம்ம தூயவனுக்கும் ஆதினிக்கும் தான் முடிச்சு போடணும்னு முடிவு பண்ணிட்டான்.. இப்போ வாய்ப்பு இருக்கு தான” என்று கூற பெரியவர்களின் முகங்கள் பளிச்சென்று பிரகாசமாக இளசுகளின் முகங்களோ அதிர்ச்சியில் வெளிறியது. அதிலும் தூயவன் மற்றும் ஆதினிக்கு கூறவா வேண்டும். மீனாட்சி பாட்டியை மனதில் அர்ச்சித்தபடி ஆதினியை முறைத்தான் அவளின் உராங்குட்டான். கணபதியோ,

“அம்மா ரொம்ப நல்ல யோசனை சொன்னிங்க.. நான் இதை யோசிக்கவே இல்ல..” என்றவர் கேசவனிடம்,

“கேசவன்.. தயவு செஞ்சி முடியாதுன்னு சொல்லி என்னை பாவக்காரன் ஆக்கிடாதீங்க.. ” என்று வேண்ட கேசவனோ,

“ஐயோ என்ன நீங்க பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு.. வாழப்போறது பிள்ளைங்க தான்.. அவங்க கிட்ட தான் முதல்ல கேட்கணும்.. பிள்ளைகளுக்கு சரின்னா எனக்கும் சந்தோஷம்” என்று கூற,

“என் பையன் நான் சொன்னா மறுவார்த்தை பேச மாட்டான்..” என்று கூற வந்த கணபதியை பாதியிலேயே தடுத்த தூயவனோ,

“அப்பா ஒருநிமிஷம்.. நான் உங்க கூட பேசணும்” என்க,

“ஒரு நிமிஷம் இதோ வந்துருறோம்” என்றபடி தூயவனைத் தனியே அழைத்து சென்றார். 

“என்ன தூயவா..”

“யார கேட்டு நீங்க பாட்டுக்கு பேசிக்கிட்டே போறீங்க.. எனக்கு அவளை கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்ல” என்று சற்றும் யோசிக்காமல் கூறிவிட கணபதியோ,

“கரெக்ட் தான் தூயவா.. சூழ்நிலை எல்லாம் சரியா இருந்துச்சுன்னா கண்டிப்பா உன்னை கேட்காம முடிவு எடுக்குற அளவுக்கு நான் மனசாட்சி இல்லாதவன் இல்ல.. ஆனா நடந்த எல்லாம் உனக்கு புரியும்னு நினைக்குறேன்.. நமக்கு வேற வழி இல்ல தூயவா.. நாம செஞ்ச பாவத்துக்கு நாம தான் பிராயச்சித்தம் செய்யணும்..”

“டாடி ப்ளீஸ் ட்ரை டூ அண்டர்ஸ்டெண்ட் மீ.. திடிர்னு வந்து அவளை கல்யாணம் பண்ணனும்னு சொன்னா என்ன நியாயம்” 

“தூயவா.. உன்கிட்ட நான் இதுவரை எதுமே கேட்டது இல்ல.. படிப்புல இருந்து பிசினஸ் வரைக்கும் எல்லாமே உன் இஷ்ட்டபடி தான விட்டுருக்கேன்.. கல்யாணமும் என் பிள்ளைங்க இஷ்ட்டபடி நடக்கணும்னு தான் ஆசைப்படுவேன்னு உனக்கே தெரியும்.. அப்படி நெனச்சு ஏற்பாடு பண்ண விஷயம் இது.. ஆனா எல்லாம் மாறிடுச்சு.. நான் இந்த அளவுக்கு உங்கிட்ட கேட்குறேன்னா என்னோட நிலைமையைக் கொஞ்சம் யோசிச்சு பாரு..”

“டாடி.. எனக்கு உங்க நிலைமை புரியுது.. ஆனா அந்த ஆதினி…” என்று கூறுவர அதற்குள் அவனைத் தடுத்த கணபதியே,

“சரி தூயவா.. இவ்ளோ சொல்லியும் உனக்கு இஷ்டமில்லன்னா தாராளமா வந்து இஷ்டமில்லன்னு சொல்லு.. ஆனா இதுக்கு அப்புறம் யாராச்சு ஒருத்தர் ஏற்கனவே ஒரு பொண்ணு வீட ஆசைகாட்டி மோசம் பண்ணிட்டீங்க தானன்னு என்னை பார்த்து கேட்டா அன்னைக்கு தான் உன் அப்பாவை நீ கடைசியா பார்க்குறதா இருக்குங்குறத மறந்துராத.. நான் இதை உன்ன ப்ளாக்மெயில் பண்ண சொல்லல.. ஏற்கனவே நடந்த விஷயத்தை நெனச்சு குற்ற உணர்வு கொஞ்சம் கொஞ்சமா என்னைக் கொன்னுட்டு தான் இருக்கும்.. அவங்க வார்த்தை மொத்தமா கொன்னுரும்.. அவ்ளோதான்… எல்லாத்தையும் மனசுல வச்சுட்டு வந்து ஒரு பதிலை சொல்லு..” என்றவர் விறுவிறுவென்று சென்றுவிட்டார். 

தூயவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஒருபுறம் தனது மதிப்புமிக்க தந்தை. இன்னொருபுறம் தான் இதுவரை அறியாத தன் மானசீக காதலி மித்ரா இவர்கள் இருவரை தாண்டி தனக்கு எள்ளளவும் பிடிக்காத ஆதினி. பிரியமுள்ள தந்தைக்காக பிரியமுள்ள காதலியை மறந்து பிடிக்காத பெண்ணவளை திருமணம் செய்யும் நிர்பந்தம் என்பது எந்த ஒரு மனிதனுக்கும் கொடுமை தானே. செய்வதறியாது தவித்தவன் கோபத்தில் கைமுஷ்டியை மடக்கி சுவற்றில் தன் கோபத்தைப் பறைசாற்ற அதற்கு பரிசாக அவன் விரல்களின் இடையே உதிரம் கசிய தொடங்கியது. பிறகு சிந்தித்தவன் வேகமாக உள்ளே சென்று,

“நான் ஆதினி கூட தனியா பேசணும்” என்று கூற இருவரும் தனித்துவிடப்பட்டனர். ஆதினி ஏதோ பேச வர அவளை தடுத்தவன்,

“இங்க பாரு.. என்னால எங்க அப்பாவை கன்வின்ஸ் பண்ண முடியல.. ஆனா நீ நெனச்சா பண்ணலாம்.. எனக்கு உன்ன கல்யாணம் செஞ்சிக்க துளி அளவும் விருப்பமில்லை.. ஒழுங்கு மரியாதையா வெளிய வந்து உனக்கு இஷ்டமில்லைன்னு சொல்ற..” என்று மிரட்டும் தோனியில் கேட்க அதில் அவளது தன்மானம் தலைத்தூக்கியது. 

“ஹெலோ.. என்ன விட்ட ஓவரா மிரட்டுற.. நான் ஒன்னும் உன்ன கட்டிக்க பல நாள் தவம் கிடக்கல.. இவர் பெரிய மைனரு.. இவரை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டுட்டாலும்.. ஆனாலும் உனக்கு எப்படி வழியில்லையோ அதே மாதிரி தான் எனக்கும்.. ஏற்கனவே கல்யாணம் நின்னுருச்சேன்னு அப்பாக்கு அப்படி ஆயிடுச்சு.. பாட்டி நம்ம விஷயம் பத்தி சொன்னதுமே என் அப்பா முகத்துல பிரகாசத்தை பார்த்தேன்.. அது அணைய நான் காரணமா இருக்க மாட்டேன்.. எனக்கும் உன்ன சுத்தமா பிடிக்கல.. ஆனா என் அப்பக்காக தான் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்குறேன்.. உனக்கு விருப்பமில்லைனா தாராளமா வந்து இல்லன்னு சொல்லிக்கோ.. என்னால முடியாது..” என்று தீர்க்கமாக கூறியவள் உள்ளே சென்று அனைவரிடமும் அவளுக்கு சம்மதம் என்று கூறிவிட அனைவரும் தூயவனின் முகத்தை ஏறிட்டனர். 

கணபதியின் வார்த்தைகள் வேறு அவன் செவியில் விடாமல் ஒலிக்க வேறு வழியின்றி ஆதினியை முறைத்தவாறே,

“எனக்கும் சம்மதம்” என்று கூற பெரியவர்களின் மனதில் மீண்டும் சந்தோஷம் கலைக்கட்டியது. ஆனால் தூயவனோ, 

“ஆனா எனக்கொரு கண்டிஷன் இருக்கு” என்க கணபதியோ,

“என்ன கண்டிஷன் தூயவா..” என்க கேள்வியோடு நோக்கினர் அனைவரும் தூயவனை.

 

தொடரும் அதிர்வுகள்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்