Loading

அதிர்வு – 9

ஜோசியரைப் பார்க்க அங்கு சென்ற பிறகு தான் கேசவன் தன்னுடைய அலைபேசியில் தானே மாதவனின் ஜாதகம் உள்ளது அதனை எடுத்து வர மறந்துவிட்டோமே என்று யோசித்தவர் கணபதியிடம்,

“சம்மந்தி.. என் மொபைலை எடுத்துட்டு வரல.. மாப்பிளையோட ஜாதகம் உங்க கிட்ட இருக்கு தான” என்று கேட்க,

“அப்படிங்களா பரவாயில்ல.. காலைல தான் நிச்சய தேதி குறிக்க போலாம்னு ஜாதகத்தை எடுத்து வச்சு உங்கள கூப்பிட்டு போகலாம்னு உங்க வீட்டுக்கு கிளம்பிட்டு இருந்தேன்.. ஆனா அதுக்குள்ள தான் அம்மாக்கு இப்படி ஆகிடுச்சு.. கார்ல தான் இருக்கு நான் எடுத்துட்டு வரேன்..” என்று கூறிவிட்டு அதனை எடுத்து வந்தார். ஆனால் கேசவனோ,

“சம்மந்தி மாப்பிள்ளை ஜாதகம் ஓகே.. ஆதினி ஜாதகத்துக்கு என்ன செய்ய” என்க,

“அட ஆமால.. இப்போ என்ன செய்றது.. ஹான் அன்னைக்கு நீங்க எனக்கு அனுப்புனது என்னோட வாட்சப்ல தானே இருக்கும்.. இருங்க தேடி பாக்குறேன்” என்றபடி பார்க்க அதில் இருந்தது. ஜோசியரோ,

“என்ன கேசவன் இந்த நேரத்துல வந்துருக்கேள்.. எதுவும் அவசரமா..” என்று யோசனையாக கேட்க,

“ஆமா ஜோசியரே..” என்றவர் நடந்ததைக் கூறிவிட்டு, “அதான் அவங்க ஜாதக கட்டப்படி நாளைக்கு கல்யாணம் வைக்குறதுனால எதுவும் பிரச்சனை இல்ல தானன்னு பார்த்து சொல்லணும்” என்று கூற,

“உங்க அவசரம் புரியுது.. வந்து உட்காருங்கோ.. இப்போவே பார்த்து சொல்றேன்” என்றபடி மாதவனின் ஜாதகத்தைப் புத்தகத்திலும் ஆதினியின் ஜாதகத்தை அலைபேசியில் பார்த்தும் கணிக்க ஆரம்பித்தவரின் நெற்றியில் சிந்தனை ரேகைப் படர ஒருமுறை கேசவனை ஏறிட்டவர் மீண்டும் எதையோ தீவிரமாக கணித்தார். 

“என்ன கேசவன்.. இந்த ஜாதகம் ரெண்டுக்கும் சுத்தமா பொருத்தமே இல்லைங்களே.. அன்னைக்கு பொருத்தம் பார்த்துட்டு போன வரன் இல்லையா இது” என்று கேட்க கணபதியும் கேசவனும் குழம்பி போயினர். கணபதியோ,

“என்னங்க சொல்றீங்க.. அன்னைக்கு பார்த்த அதே பையனுக்கு தான் இப்போ கேட்க வந்துருக்கோம்.. அன்னைக்கு பத்துக்கு பத்து பொருத்தம் இருக்குன்னு சொன்னீங்க.. இந்த ஜாதகருக்கு பொறந்த பொருத்தமான ஜாதகி இவங்க தான்னு சொன்னீங்கன்னு சொன்னாங்க.. இப்போ என்னடான்னா இப்படி சொல்றீங்க” என்று கேட்க அதே கேள்வியோடு தான் கேசவனும் பார்த்தார். ஜோசியரோ,

“ஆமாங்க.. அன்னைக்கு பார்த்த ஜாதகமும் இந்த பொண்ணோட ஜாதகமும் அவ்ளோ கச்சிதமா பொருந்துச்சு.. ஆனா இது அந்த ஜாதகம் இல்ல..” என்க மேலும் குழம்பிய கேசவனோ,

“எங்களுக்கு புரியல ஜோசியரே..”

“அன்னைக்கு பார்த்த அதே பொண்ணு ஜாதகம் தான் இது.. ஆனா மாப்பிள்ளை ஜாதகம் அது இல்ல.. அந்த பையனோட ஜாதகம் பரணி நட்சத்திரம்.. இந்த பையனோட ஜாதகம் அவிட்டம் நட்சத்திரம்.. அசுவினிக்கும் பரணிக்கும் தான் பத்துக்கு பத்து பொருத்தம்.. அசுவினிக்கும் அவிட்டதுக்கும் ஆகவே ஆகாதுங்க..” என்க கணபதிக்கோ,

‘பரணி நட்சத்திரமா..’ என்று யோசித்தவர் சட்டென தன் அலைபேசியில் அன்று கேசவனுக்கு தான் அனுப்பிய ஜாதகம் நினைவிற்கு வர அதனை எடுத்தவர் ஜோசியரிடம் காண்பித்து,

“இந்த ஜாதகம் தான அன்னைக்கு பொருத்தம் பார்த்தீங்க” என்க அதனை வாங்கி பார்த்தவர்,

“சாட்ஷாத் இதுவே தான்.. இந்த ரெண்டு ஜாதகத்துக்கும் நாளைக்கு நீங்க தாராளமா கல்யாணம் வச்சுக்கலாம்” என்று கூற கணபதியோ,

“இது ரெண்டு ஒரே ஜாதகம் இல்லையா..”

“இல்ல. இது வேற இது வேற” என கூற தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டார் கணபதி. இதனைக் கண்ட கேசவனோ,

“என்னாச்சு சம்மந்தி..” என்க அவரின் கையைப்பற்றியவர்,

“ஐயோ என்னை மன்னிச்சுருங்க சம்மந்தி.. என்னோட கவனக்குறைவால ஒரு பெரிய தப்பு நடந்துருச்சு.. அன்னைக்கு மாதவனோட ஜாதகத்துக்கு பதிலா உங்களுக்கு என் சின்ன பையன் தூயவனோட ஜாதகத்தைத் தெரியாம மாத்தி அனுப்பிட்டேன்..” என்று கலக்கமாக கூற,

“என்ன சொல்றீங்க” என அதிர்ந்தார் கேசவன். 

“ஆமா.. நீங்க சம்மதம் சொன்ன சந்தோஷத்துல  அன்னைக்கு எனக்கு கையும் ஓடல காலும் ஓடல.. அதான் சீக்கிரமா அனுப்பனுமேன்னு பெயர் எழுதிருக்குற முகப்பு அட்டையைக் கூட பார்க்காம வெறும் கட்டத்தை மட்டும் போட்டோ எடுத்து அனுப்பிட்டேன்.. இப்ப தான் புரியுது அது தூயவனோட ஜாதகம்னு” என்றவர் கையைப் பிசைய கேசவனுக்கு தலையில் இடி இறங்கியது. அதனைக் கண்டு வருந்திய கணபதியோ ஜோசியரிடம், 

“ஜோசியரே சிரமத்துக்கு மன்னிக்கணும்.. என் பெரிய பையன் ஜாதகத்துக்கும் இந்த பொண்ணு ஜாதகத்துக்கும் கல்யாணம் நடத்தி வைக்க எதுவும் வாய்ப்பு இருக்கான்னு பார்த்து சொல்லுங்க ப்ளீஸ்” என்று வேண்டுகோள் விடுக்க அதற்கிணங்க கணித்த ஜோசியர்,

“இல்லைங்க சுத்தமா பொருத்தம் இல்ல.. கண்டிப்பா இருக்க வேண்டிய அடிப்படை பொருத்தம் கூட இல்ல.. இது மாங்கல்யத்துக்கு ஆபத்தை உண்டாக்கும்” என்று கூறிவிட கேசவனோ அதற்கு மேல் கேட்க விரும்பாமல்,

“நன்றி ஜோசியரே.. நாங்க வரோம்” என்றபடி வெளியில் வந்து நின்றார். அவரை அந்நிலையில் பார்க்க கணபதிக்கு சங்கடமாக இருந்தது.

தன் மகளின் வாழ்க்கைக் குறித்து பெரிய கனவு கோட்டையல்லவா கட்டி வைத்திருந்தார். நல்ல குடும்பத்தில் தன் மகள் மருமகளாக போகிறாள் என்று எத்தனை முறை கற்பனை செய்து மகிழ்ந்திருப்பார். அதெல்லாம் ஒரே நொடியில் தவிடுபொடியாகி விட ஒரு தந்தையாய் அவரின் மனம் கதறியது. அதில் அவருக்கு லேசாக இதயக்கூட்டில் வலியெடுத்து நெஞ்சைப் பிடித்தபடி அமர்ந்துவிட கணபதியோ,

“ஐயோ கேசவன்.. என்னாச்சு உங்களுக்கு” என்று பதறியபடி அவரைக் காரில் ஏற்றி மின்னல் வேகத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். 

இவ்வாறாக நடந்ததைக் கணபதி கூறி முடிக்க அபிராமிக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. ஏற்கனவே கணவரின் நிலை என்னவோ என்றறியாமல் தவித்தவரின் மனதில் அடுத்த இடியை இறக்க அவரோ அழுது புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

“ஐயோ.. நாங்க யாருக்கு என்ன பாவம் செஞ்சோம்.. இப்படி அடுத்து அடுத்து எங்க தலைல இடியை இறக்குறீங்களே..” என்று அழுது தீர்க்க ஆதினி சமாதானம் செய்ய முயன்று தோற்று அவளும் அழுக ஆரம்பித்துவிட்டாள். இந்திரா அபிராமிக்கும் மாதவி ஆதினிக்கும் சமாதானம் கூறினர். தூயவனுக்கோ மாதவன் ஆதினி திருமணம் தடைப்பட்டதை எண்ணி ஒரு புறம் நிம்மதி இருந்தாலும் கேசவனின் உடல்நிலைக் குறித்த கவலையும் இருக்கவே செய்தது. கேசவனைப் பரிசோதித்த மருத்துவரோ, 

“பயப்படுற மாதிரி எதுவும் இல்ல.. அதிர்ச்சியான விஷயம் எதையோ கேட்டு ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகி பேனிக் அட்டாக் ஆகியிருக்கு அவ்ளோ தான்.. கொஞ்ச நேரம் அவர் ரெஸ்ட் எடுக்கட்டும்.. அப்புறம் போய் பார்க்கலாம்” என்று கூறிவிட்டு செல்ல அப்பொழுது தான் அனைவர்க்கும் நிம்மதி பிறந்தது.

அதற்கிடையில் மீனாட்சி பாட்டியின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் தெரிவதாகவும் அவர் பேச வேண்டும் என்று கூறுவதாகவும் செவிலிய பெண் அழைக்க இப்பொழுது கணபதி, இந்திரா, மாதவன், தூயவன், மாதவி, ஆதினி, சமர் ஆகியோர் உள்ளே செல்ல அவரோ நிதானமாக படுத்திருந்தார். அனைவரின் மேலும் பார்வையை செலுத்தியவரின் கண்கள் இறுதியாக ஆதினியின் மேல் படிய அவளை கைநீட்டி அழைத்தார். ஆதினியும் அருகில் செல்ல அவளது கரத்தைப் பற்றிய அந்த மூத்தவர்,

“தாயி.. நீ எங்க வீட்டுல விளக்கேத்துறத பார்த்த அப்புறம் தான் நான் கண்ண மூடனும் தாயி” என்றவரின் கண்களில் கண்ணீர் பெருகியது. என்ன பதில் கூறுவது என்று புரியாத ஆதினியோ,

“உங்களுக்கு சீக்கிரம் சரியாயிடும் பாட்டி” என்று கூறிவிட்டு நழுவ பார்க்க அவளின் கரத்தை விடாமல் பற்றிக்கொண்டே கணபதியிடம் பார்வையை செலுத்த அவரோ,

“ம்மா.. நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேப்பீங்களா” என்று கேட்க அவரோ நிதானமாக பார்த்தார். 

“ஜாதகம் தவறுதலா மாறிடுச்சு மா.. மாதவனுக்கும் ஆதினிக்கும் பொருத்தம் இல்ல.. மீறி கல்யாணம் பண்ணி வச்சா மாங்கல்ய தோஷம் ஆகிடுமாம்.. அதனால இந்த கல்யாணத்த…” என்று கூற வந்தவரை தடுத்த மீனாட்சி,

“ஜாதகம் எப்படி மாறுச்சு” என்று தட்டுத்தடுமாறி கேட்க வேறுவழியின்றி நடந்த அனைத்தையும் கணபதி கூறிமுடித்தார். அனைத்தையும் கேட்ட மீனாட்சி பாட்டிக்கு ஆத்திரம் பொங்கியது. 

“நீங்களா பொண்ணு கேட்டு போயி.. நீங்களே ஜாதகம் பார்த்தா போதும்னு நம்பிக்கை குடுத்துட்டு அந்த பொண்ண பெத்தவங்கள கல்யாண கனவு காண வச்சுட்டு கடைசில.. கடைசில” என்று கூற வந்தவர் இரும தூயவனோ,

“பாட்டி நீங்க ரிலாக்ஸ்சா இருங்க.. எதுக்கு இப்போ டென்சன் ஆகுறீங்க” என்று கூறியும் கேட்காமல் தொடர்ந்தவர்,

“கடைசில சுலபமா ஜாதகம் மாறிடுச்சுன்னு மன்னிப்பு கேட்டு அந்த நல்ல மனுஷனா படுக்க வச்சுட்டீங்க.. நம்ம வீட்டுல ஒரு பொண்ணு இருந்து இதே நிலைமை நமக்கு நடந்தா நம்மளால ஏத்துக்க முடியுமா கணபதி.. நீயும் பொறுப்பில்லாம மன்னிப்பு கேட்ருக்க.. அந்த மனுஷன் மனசு என்ன பாடு பட்டுருக்கும்.. இந்த பாவத்தை எல்லாம் கேட்குறதுக்கு நான் அப்போவே உயிரை விட்டிருப்பேன்..” என்று ஆதங்கத்தில் கூற கணபதியும் இந்திராவும் தலைக் குனிந்து நின்றனர். மாதவனுக்கும் குற்றவுணர்வாக இருந்தது. ஆனால் தூயவனோ,

“இப்போ அதுக்கு என்ன செய்ய சொல்றீங்க.. வேணும்னு தெரிஞ்சா எல்லாம் செஞ்சோம்.. நல்ல படியா நடக்கணும்ன்னு நெனச்சு தான எல்லாம் செஞ்சோம்” என்று கூற ஆதினியோ தூயவனை முறைத்துவிட்டு மாதவனை பார்க்க அவனோ,

“டேய் தூயவா.. அமைதியா இரு.. தப்பு நம்ம மேல.. நான் பாட்டிகிட்ட பேசிக்குறேன்” என்றவன்,

“பாட்டி தப்பு நம்ம மேல தான்.. ஆனா இப்போ நமக்கு வேற வழி இல்ல தான.. ஆதினியே புரிஞ்சுக்கிட்டாங்க.. என்ன ஆதினி” என்று கேட்க அவளும்,

“ஆமா பாட்டி.. விதிப்படி தான் எல்லாம் நடக்கும்.. பெரியவங்க உங்களுக்கு நான் சொல்லி புரியவைக்க அவசியம் இல்ல.. இதுக்கு மேல நான் உங்க வீட்டு மருமகளா ஆக வாய்ப்பு இல்ல.. கூடிய சீக்கிரம் நல்ல பொண்ணா வருவா உங்க வீட்டுக்கு.. கவலைப்படாம இருங்க.. அப்பா கிட்ட நான் பேசி புரியவச்சுக்குறேன்.. வரேன் பாட்டி டேக் கேர்” என்றவள் எழுந்து கேசவனின் அறைக்கு சென்றுவிட்டாள்.

சிறிது நேரத்தில் கேசவனும் கண்விழித்து விட அவருக்கும் நடந்தது புரிந்தது. கணபதியின் நிலைப் புரிந்தவர் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டார் அவரது மன்னிப்பை. பிறகு ஆதினி, கேசவன் மற்றும் அபிராமி வீட்டிற்கு செல்ல எண்ணி மீனாட்சியைப் பாட்டியை சந்தித்து விடைபெறுவதற்காக உள்ளே செல்ல அங்கு அனைவருமே இருந்தனர். கேசவனோ,

“கூடிய சீக்கிரம் குணமாகிருவீங்க மா.. கவலைப்படாதீங்க.. நடந்ததெல்லாம் விதின்னு நெனச்சுப்போம் .. சரிங்கமா நாங்க வரோம்..” என்றவர் அனைவரிடமும் இருந்து விடைபெற்று கிளம்ப எண்ணி செல்ல எத்தனிக்க மீனாட்சியோ,

“எப்பா கேசவா.. கொஞ்சம் நில்லுப்பா” என்க மூவரும் கேள்வியாய் பார்த்தனர். 

“பார்த்தியா கணபதி.. இதே இடத்துல வேற ஒரு பொண்ணு வீட்டுக்காரங்களா இருந்தா கோர்ட்டு கேஸுன்னு போயிட்டு நஷ்டயீடு கேட்டா கூட ஆச்சர்யமில்லை. ஆனா இந்த மனுஷன் எவ்ளோ பெருந்தன்மையா நடந்துக்குறாரு..” என்று கூற அனைவர்க்கும் அவரின் மீது மரியாதை ஏற்பட்டது. தூயவனும் கூட அவரது குணத்தை எண்ணி ஆச்சர்யப்பட்டான். மேலும் தொடர்ந்த மீனாட்சி பாட்டியோ,

“காசு பணம் அந்தஸ்துல வேணா நாம ஒசத்தியா இருக்கலாம்.. ஆனா மனசளவுல கேசவன் ரொம்ப ஒசத்தி பா.. இப்படிப்பட்ட ஒரு சம்மந்தம் கிடைக்க நாம தான் ராசா குடுத்து வச்சிருக்கணும்.. நாம மட்டும் இதை தவறவிட்டா நமக்கு ரொம்ப பெரிய இழப்புயா” என்று மனதார கூற தூயவனோ,

‘இப்போ எதுக்கு இந்த கிழவி இவ்ளோ டயலாக் பேசுது.. ஜாதகம் பிடிக்கலைன்னு தெரிஞ்சும் கல்யாணம் பண்ணி வைக்குற அளவுக்கு இந்த கிழவி டெவெலப் ஆகிருச்சா.. இல்லையே அதுக்கு வாய்ப்பு இல்லையே.. ஜாதகம் தான் உயிர் மூச்சுன்னு கொடி பிடிக்குற ஆளாச்சே இது.. என்ன செய்ய காத்திருக்குன்னு தெரியலையே’ என்று யோசித்தபடி பார்த்துக்கொண்டிருந்தான். கேசவனோ,

“ரொம்ப நன்றிங்க மா.. ஆனா ஜாதகத்தை மீறி கல்யாணம் செஞ்சி வைக்குற அளவுக்கு என் மனசு இன்னும் பக்குவப்படல.. நின்னது நின்னதாவே இருக்கட்டும்.. எங்களை நெனச்சு கவலைப்படாதீங்க.. நாம ஒன்னு நெனச்சா அந்த தெய்வம் வேற ஒன்னு நெனச்சுருக்கு.. அதுபடியே போவோம்..” என்க தூயவனுக்கு நிம்மதி பிறந்தது. ஆனால் மீனாட்சியோ,

“நானும் ஜாதகத்தை ரொம்ப நம்புறவ தான் பா.. ஜாதகத்தை மீறி கல்யாணம் செஞ்சி வைக்குற அளவுக்கு நான் எப்போதுமே போக மாட்டேன்.. நீ சொன்னியே நாம ஒன்னு நெனச்சா கடவுள் ஒன்னு நெனச்சுருக்காருன்னு.. நாம கடவுள் விட்ட வழில போகலாம் தான.. ” என்று கூற தூயவனோ,

“வாட் டூ யூ மீன்” என்று நினைத்தபடி குறுகுறுவென பார்த்தான். அனைவரும் புரியாமல் முழித்தனர். கணபதியோ,

“என்னமா சொல்றீங்க.. புரியல.. ஏற்கனவே அவங்க குடும்பத்துக்கு பாவம் செஞ்சுட்டோமேன்னு என் மனசு குற்ற உணர்வுல தவிக்குது.. உங்க வார்த்தை அதுக்கு மருந்தா இருக்கும்னு நினைக்குறேன்.. தெளிவா சொலுங்கமா” என்க,

“டேய் கணபதி.. நாம மாதவனுக்கும் ஆதினிக்கும் கல்யாணம் செஞ்சு வைக்க நெனச்சு எல்லா ஏற்பாடும் செஞ்சோம்.. ஆனா அந்த கடவுள் நம்ம தூயவனுக்கும் ஆதினிக்கும் தான் முடிச்சு போடணும்னு முடிவு பண்ணிட்டான்.. இப்போ வாய்ப்பு இருக்கு தான” என்று கூற பெரியவர்களின் முகங்கள் பளிச்சென்று பிரகாசமாக இளசுகளின் முகங்களோ அதிர்ச்சியில் வெளிறியது. அதிலும் தூயவன் மற்றும் ஆதினிக்கு கூறவா வேண்டும். மீனாட்சி பாட்டியை மனதில் அர்ச்சித்தபடி ஆதினியை முறைத்தான் அவளின் உராங்குட்டான். கணபதியோ,

“அம்மா ரொம்ப நல்ல யோசனை சொன்னிங்க.. நான் இதை யோசிக்கவே இல்ல..” என்றவர் கேசவனிடம்,

“கேசவன்.. தயவு செஞ்சி முடியாதுன்னு சொல்லி என்னை பாவக்காரன் ஆக்கிடாதீங்க.. ” என்று வேண்ட கேசவனோ,

“ஐயோ என்ன நீங்க பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு.. வாழப்போறது பிள்ளைங்க தான்.. அவங்க கிட்ட தான் முதல்ல கேட்கணும்.. பிள்ளைகளுக்கு சரின்னா எனக்கும் சந்தோஷம்” என்று கூற,

“என் பையன் நான் சொன்னா மறுவார்த்தை பேச மாட்டான்..” என்று கூற வந்த கணபதியை பாதியிலேயே தடுத்த தூயவனோ,

“அப்பா ஒருநிமிஷம்.. நான் உங்க கூட பேசணும்” என்க,

“ஒரு நிமிஷம் இதோ வந்துருறோம்” என்றபடி தூயவனைத் தனியே அழைத்து சென்றார். 

தொடரும் அதிர்வுகள்..

மறக்காம கமெண்ட் பண்ணுங்க😍😍 நன்றி.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
7
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்