Loading

அதிர்வு – 6

அதிர்வு – 6

ஆதினியை சந்திக்க நால்வரும் தூயவனோடு அவனது காரில் புறப்பட்டனர். செல்லும் வழியில் மாதவியோ,

“டேய் தூயவா.. போர் அடிக்குது.. உன் லவ் மேட்டர ஓபன் பண்ணிவிடேன்..” என்று கேட்க அவனோ,

“ஏன் டி பிசாசே.. உன் வாழ்க்கையே அங்க அந்தரத்துல தொங்கிட்டு இருக்கு.. நீ போர் அடிக்குன்னு என் கதையை வேற கேக்கியா.. வெக்கமாவே இல்லல உனக்கு”

“அதெல்லாம் இருந்தா உங்க கூட ஏன் நான் கூட்டு வச்சுக்க போறேன்.. நீ மூடிட்டு பதிலை சொல்லு டா” என்க தூயவனோ சிரிக்க மட்டுமே செய்தான். 

“டேய் சமர் இவன் என்ன டா சிரிக்குறான்.. நீயாச்சு சொல்லேன்” என்றவள் பதில் வேண்டி சமரை நோக்க மாதவனும் அதே கேள்வியோடு தான் பார்த்தான். 

“நான் என்னன்னு சொல்லுவேன் ஏதுன்னு சொல்லுவேன்.. சொல்றதுக்கு ஏதாவது தெரிஞ்சா தான சொல்லுவேன்..” என்று நடிகர் திலகம் தொனியில் பேசியவனை முறைத்தவள்,

“டேய் அப்போ உனக்கு கூட இவன் சொல்லலையா யாருன்னு” என்று புரியாமல் கேட்க சமரோ,

“அவனுக்கே இன்னும் அவன் சொல்லிக்கல அந்த பொண்ணு யாருன்னு” என்க அதில் பொறுமையிழந்த மாதவனோ,

“என்ன டா உளறுற.. அட சீ தெளிவா சொல்லி தொல” என்று எரிச்சலாக கேட்க தூயவனோ,

“இப்போ எதுக்கு எல்லாரும் இப்படி மண்டைக் காயுறீங்க.. இப்போ அவ யாருன்னு உங்களுக்கு தெரியணும் அப்படி தான.. வெயிட்” என்றவன் காரில் இருக்கும் ப்ளூடூத் ஒலிபெருக்கியைத் தனது அலைபேசியுடன் இணைத்து யூட்யூபில் நுழைந்து எதையோ தேடியவன் சிறு சிரிப்புடன் ஒரு காணொளியை ஒலிக்கவிட்டான். அதில் குயிலினும் இனிய குரலொன்று மிக கம்பிரமாய் பேச தொடங்கியது.

ஹாய் ஹெலோ மக்களே நான் தான் உங்க மித்லெஸ்(கட்டுக்கதையற்ற) மித்ரா. என்னோட பெயருல வேணா மித் (கட்டுக்கதை)இருக்கும்.. ஆனா என்னோட ஜர்னல்ல எப்போதுமே மித் இருக்காது. 

சோ இந்த வாரம் நாம தெரிஞ்சுக்க போற அந்த நபர் யாருன்னு எல்லாரும் ரொம்ப ஆவளா இருப்பீங்கன்னு நினைக்குறேன்.. பிரபல தொழிலதிபர் சதாசிவம்.. எந்த சதாசிவம்னு யோசிக்குறீங்களா என்ன.. அட நம்ம சதா டிடெர்ஜென்ட்ஸ், சதா ஹேண்ட்வஷேஸ், சதா சேனிடைசர்ஸ், சதா பியூடிகேர் ப்ராடக்ட்ஸ் எட்செட்ரா எட்செட்ரா போன்ற பல பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனத்தின் ஒரே தானே தலைவர் சதாசிவத்தைப் பத்தி தான் இன்னைக்கு என்னோட ஜர்னல் இருக்க போகுது..” என்று அவள் கூறிக்கொண்டிருக்க தூயவனும் சமரும் அர்த்தமாய் பார்த்துக் கொண்டனர். மாதவனோ,

“டேய் சதாசிவம்னா உங்க தொழில்துறை எதிரி தான.. பணம் தரேன் உங்க கம்பெனியை இழுத்து மூடுன்னு சொன்னானே.. அந்த கிழவன் தான..” என்று கேட்க தூயவனோ,

“ஆமா மாதவா.. அவனே தான்.. அவன் பண்ற கேப்மாரி தனத்தை மித்ரா கண்டிப்பா ஒருநாள் பேசுவான்னு நெனச்சுட்டு தான் இருந்தேன்.. நான் நெனச்ச மாதிரியே பேச போறா.. எங்களுக்குள்ள எவ்ளோ வேவ்லென்த் பாரேன்” என்றவன் வெட்கப்பட்டு சிரிக்க அதுவரை இவன் முகத்தில் வெட்கம் என்ற ஒன்றைக் கண்டிராத மாதவன் மாதவிக்கு ஆச்சர்யமாய் இருந்தது. தூயவன் காதலிக்கிறான் என்பதே அவர்களுக்கு அதிர்ச்சி தான். அதிலும் அவன் மித்ராவைக் காதலிக்கிறான் என்று கேட்ட கணமே பேரதிர்ச்சியில் உறைந்துவிட்டனர் மாதவனும் மாதவியும். மேலும் மாதவன் ஏதோ கேட்க வர,

“எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்.. இப்போ என் மித்ரா என்ன சொல்றான்னு கேப்போம்” என்று தடுத்துவிட மீண்டும் மித்ராவின் குரல் ஒலிக்கப்பட்டது. 

“சமுதாயத்துல பெரிய அந்தஸ்துல ரொம்ப கவுரவமா இருக்குறவராச்சே.. அவரோட பொருட்களெல்லாம் கூட ரொம்ப தரமா இருக்குதே.. இப்படிப்பட்டவர பத்தி ஏன் மித்ரா பேச போறான்னு நீங்க எல்லாரும் நெனைக்குறது எனக்கு நல்லாவே கேட்குது. ஏன்னா இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி சதாசிவத்தைப் பத்தி சொன்ன எல்லாம் முற்றிலும் கட்டுக்கதை. 

அவரோட தயாரிப்புகள் எல்லாம் பார்க்க மட்டும் தான் தரமா இருக்கு. நிஜமா அவரோட தயாரிப்புகள்ல முழுக்க முழுக்க உடலுக்கு தீங்குவிளைவிக்க கூடிய ரசாயனங்கள் தான் அதிகம். எஸ்எல்எஸ் (SLS) கேள்வி பட்ருக்கீங்களா.. சோடியம் லாரைல் சல்பேட் (sodium lauryl  sulphate). நெறய பேர் அவரோட ப்ராடக்ட்டுக்கு நல்ல ரிவியூ கொடுத்துருந்தீங்க.. உடனே ரிசல்ட் கிடைக்குது, நல்ல அழுக்கு போகுது, நம்மள நிறமா காட்டுது.. இப்படி ஏகப்பட்ட நல்ல ரிவியூஸ் பார்த்தேன்.. 

எப்போ ஒரு விஷயத்துல எல்லாமே நல்லதா தெரியுதோ அப்போ தான் நாம அங்க சந்தேகப்பட ஆரம்பிக்கணும்.. அப்படி எனக்கு ஏற்பட்ட சந்தேகத்துல நான் ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிச்சது தான் இந்த சோடியம் லாரைல் சல்பேட். இது தோல் அலற்சி, வறட்டுத்தன்மை, கண் எரிச்சல், சுவாசக்குழாய் பிரச்சனைகள், நுரையீரல் பிரச்சனைகள் போன்றவற்றை ஏற்படுத்த அதிக வாய்ப்பு இருக்கு. இந்த எஸ்எல்எஸ் எல்லா ப்ரொடக்ட்டுலயும் இருக்குறது தான.. ஏன் இவரோட ப்ராடக்ட்ட மட்டும் குறிப்பிட்டு சொல்றீங்கன்னு சிலர் வருவீங்க.. அதுக்கு என்கிட்டே ரெண்டு காரணம் இருக்கு.

ஒன்னு இவர் வழக்கமா பயன்படுத்த வேண்டிய அளவை விட அதிகமா எஸ்எல்எஸ்ஸ உபயோகிக்குறாரு.. இன்னொன்னு இதை இவர் பயன்படுத்துறேன்னு மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் தெரியப்படுத்தாம திருட்டுத்தனமா பயன்படுத்துறாரு.. சோதனை செய்ய வந்த அரசு அதிகாரிகள் கண்களில் இது சிக்கவில்லையா.. அல்ல அவர்கள் விசேஷமாக ஏதேனும் கவனிக்கப்பட்டார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

சோ மக்களே நீங்க தான் விழிப்புணர்வோட செயல்படனும். நடக்கும் மறைமுக குற்றங்களை நாட்டு மக்களுக்கு சேர்ப்பது என்னோட கடமை. இதைத் தடுத்து நிறுத்துறதும் தொடர்ந்து அவர்களை ஊக்குவிக்குறதும் உங்களோட கைல தான் இருக்கு.. அரசாங்கம் கூடிய சீக்கிரம் இதுக்கு நடவடிக்கை எடுக்கும்னு எதிர்பார்க்குறேன். 

இந்த ஜர்னல் இதோட நிறைவடையுது. எப்போதும் எந்த ஒரு தீய விஷயத்தைப் பத்தி சொன்னாலும் அதுக்கு அடுத்த பதிவிலேயே இதற்கு நேர் எதிராக இருக்கும் நல்ல விஷயம் பத்தி சொல்றது என்னோட வழக்கம்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.. அடுத்த பதிவுல நேர்மையான முறையில் ரசாயனங்கள் இன்றி தயாரிக்கப்படும் பொருட்கள் குறித்து பார்ப்போம். விரைவில். அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் மித்லெஸ் மித்ரா. என்னோட  பெயருல  வேணா மித் (கட்டுக்கதை) இருக்கும்..  ஆனா  என்னோட ஜர்னல்ல  எப்போதுமே  மித் இருக்காது. வரட்டா….”

இவ்வாறாக மித்ராவின் உரை முடிய தூயவனோ,

‘எப்படி இவ்ளோ தைரியமா இவ்ளோ தெளிவா ஒரு பொண்ணால பேச முடியுதோ.. ஸச் அ பிரேவ் கேர்ள்’ என்று யோசித்தபடியே தூயவன் காரினை ஓட்ட அவ்வளவு நேரம் அழைத்து கொண்டிருந்த மாதவியின் குரல் அப்பொழுது தான் அவன் செவியை எட்டியது. 

“கூப்பிட்டியா மாதவி” என்க மற்ற மூவரும்,

“எதேய் கூப்பிட்டியாவா” என்ற ரீதியில் பார்த்தனர் அவனை. மாதவனோ,

“டேய் இதெல்லாம் சரி பட்டு வராது டா.. இதுக்கு பேரு காதல் இல்ல தூயவா.. அவளுக்கு நீ ரசிகனா இருக்க அவ்ளோ தான்.. காதலுக்கும் ரசனைக்கும் உனக்கு வித்தியாசம் தெரியல. ஊர் பெயர் தெரியாத யாரோ ஒருத்திய காதலிக்குறேன்னு சொல்றியே.. அவளை எப்படி நீ கண்டுபிடிப்ப. அவளோட ஜர்னல் எல்லாம் இருக்குற முக்காவாசி அரசியல் தலைவர்கள், நியாயமில்லாத தொழிலதிபர்கள பத்தி தான். அதுவும் அவங்களுக்கு எதிரா இருக்கு. அதனால அவளோட உண்மையான அடையாளம் வெளிய தெரிய வாய்ப்பே இல்ல. அப்படி வெளிய தெரிஞ்சா இவனுங்க எல்லாம் அவளை உயிரோட விட்டு வைக்க மாட்டாங்க.” என்று தன் தம்பியின் நிலையை எண்ணி வருந்தி கூற மாதவியும் அதை ஆமோதிக்க சமரோ,

“இதை தான் நானும் நெனச்சேன்..” என்று சமர் தூயவனை வறுத்தெடுக்க பொறுமையிழந்த தூயவனோ,

“இங்க பாருங்க.. மூணு பேருக்கும் சேர்த்து சொல்றேன்.. மித்ரா தான் என்னோட காதலி. அவளை தான் நான் காதலிக்குறேன்.. நமக்கு காதல்னு ஒரு உணர்வு வந்தா அது நாம காதலிக்குறவங்களுக்கும் வரணும்னு எந்த ஒரு அவசியமும் இல்ல. அவங்ககிட்ட இருந்து பதிலுக்கு காதலை வாங்கணும்னும் அவசியம் இல்ல. நான் கொடுக்குற அன்ப கூட பதிலுக்கு எதிர்பார்க்காத எதிர்பார்ப்பில்லாத அன்பு தான் என்னோடது.

சோ மித்ரா யாருன்னு தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. தெரிஞ்சுக்க நான் விரும்பவும் இல்ல. அவளோட பெயரும் அவளோட குரலும் போதும் என்னை உயிர்ப்போட வச்சுருக்க. அண்ட் ஆல்சோ நான் வேற எந்த ஒரு பெண்ணையும் கல்யாணம் பண்ற ஐடியாலயும் இல்ல.. கல்யாணம்னு ஒன்னு நடந்தா மித்ரா தான். இல்லனா காலமுழுக்க நான் என் மித்ராவோட குரலை மட்டும் கேட்டுட்டு வாழ்ந்துருவேன். என் காதல் உண்மையா இருந்தா அவளே என்கிட்ட வருவா..” என்க மற்ற மூவரும்,

“இது காதலே இல்லங்குறோம்.. இதுல உண்மையான காதலாம்.. கடவுளே நீங்க தான் இவனுக்கு இது காதல் இல்லன்னு புரிய வைக்கணும்.. இல்லனா கட்டாயப்படுத்தியாச்சு இவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுருங்க ப்ளீஸ்..” என்று மூவரும் மனதினுள் வேண்டினர். மேலும் தொடர்ந்தவன்,

“இதுக்கு மேல யாரும் இதைப்பத்தி பேச கூடாது. டாட்” என்றவன் தன் உரையை முடிக்கவும் மற்ற மூவரும் இவன் கூற்று புரியாமல் முழிக்கவும் அவர்கள் வந்து சேர வேண்டிய இடம் வரவும் சரியாக இருந்தது. 

—————————————————————-

மித்ரா. சிறுவயதிலிருந்து கண்முன்னே நடக்கும் அநியாயங்களையும் கேள்விப்படுகிற அக்கிரமங்களையும் எதிர்த்து கேட்க தோன்றி முடியாமல் போன ஏக்கங்களை எல்லாம் வளர்ந்த பின் ஒன்றுதிரட்டி தைரியமாக குரல் கொடுக்கும் மறைமுக சாதனைப் பெண் இவள். நடக்கும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் தனிமனிதியாக தடுப்பது என்பது முடியாத காரியம் என்றறிந்தவள் குறைந்தபட்சம் மக்களிடம் கொண்டு சேர்ப்பதாவது ஏதேனும் மாற்றம் ஏற்படுத்தும் என்று நம்பி ஆரம்பித்தது தான் இந்த மித்லெஸ் மித்ரா ஜர்னல்.

மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒன்று எனும் இடைவெளியில் தனக்கு கிடைக்கும் நேரங்களில் பதிவிடுவது அவளது வழக்கம். இடைப்பட்ட நேரமெல்லாம் அவளது தகவல் சேகரிப்பு காலம். இவ்வாறே தொடர்ந்து மேற்கொண்ட கடின உழைப்பில் அவள் நினைத்தது போன்றே அவளின் குரல் மக்களிடையே ஒலிக்க மக்களிடம் இருந்து பதில் வந்ததும் அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொண்டதும் அவளது முதல் வெற்றி.

தனது வீர உரையால் பல்லாயிர மக்களின் கவனத்தை ஈர்த்தவள் ஒரு வருடத்திலேயே பெரும் அளவு வளர்ச்சி கண்டாள். அதன் விளைவு யூட்யூப், இன்ஸ்டாகிராம், முகப்புத்தகம் போன்ற அனைத்து சமூக வலைத்தளங்களிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இவளைப் பின்தொடர ஆரம்பித்தனர். ஆயினும் இப்பொழுது வரை மித்ரா யாருமறியா ஒரு சமூக பட்டாம்பூச்சி. 

—————————————————————-

நால்வரும் உணவகத்தில் நுழைந்து ஆதினிக்காக காத்திருந்தினர். அப்பொழுது சமர் வேந்தனுக்கு அவனின் அன்னை அழைப்பு விடுக்க அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் மறுமுனையில் வந்த பதிலைக் கேட்டு ஒரு நிமிடம் முகம் சுருங்க நொடியில் சகஜமாகியவன்,

“ஓகே மா அடுத்து பாத்துக்கலாம்” என்று அழைப்பைத் துண்டித்தான். அவனைக் கவனித்து கொண்டிருந்த தூயவனோ,

“என்ன டா ஆச்சு.. அம்மா என்ன சொன்னாங்க” என்று கேட்க,

‘எப்படி தான் இவன் மட்டும் கண்டுபிடிக்குறானோ’ என்று நினைத்து சிரித்தவன்,

“ஒன்னுமில்ல டா.. இன்னைக்கு பொண்ணு பார்க்க போறேன்னு சொல்லிருந்தேன்ல அதுக்கு அவசியம் இல்ல. அந்த பொண்ணுக்கு என்னைப் பிடிக்கலையாம்..” என்க,

“என்ன டா சொல்ற.. இது எப்பவும் நீ செய்றது தான.. இந்த வாட்டி அதிசயமா அங்க இருந்து வந்துருக்கு”

“ஆமா டா.. நான் வேணாம் வேணாம்னு நெறய பொண்ண ரிஜெக்ட் பண்ணிருக்கேன்.. ஆனா என்னை ஒருத்தங்க ரிஜெக்ட் பண்ணும் போது தான் அதோட வலி புரியுது.. ரொம்ப லான் கஷ்டமா இல்ல.. ஆனா கொஞ்சம்” என்றவன் பெருமூச்சுவிட அவனை அவ்வாறு காணப் பொறுக்காத மாதவியோ,

“விடுடா.. அந்த பொண்ணு யாரையாச்சும் லவ் பண்ணிருக்கும்.. அதனால தான் வேணாம்னு சொல்லிருக்கும்.. உனக்கான தேவதைக் கூடிய சீக்கிரம் உன்னை தேடி வருவா பாரு” என்று கூறிக்கொண்டிருக்க சமருக்கு திடீரென குளிர் காற்று வீசுவது போன்ற பிரம்மை ஏற்பட நிமிர்ந்தவனின் கண்களில் எழிலோவியமாக நடந்து வந்த காதம்பரி மட்டுமே தெரிந்தாள். 

நெஞ்சை பூப்போல் கொய்தவளே..
என்னை ஏதோ செய்தவளே..

எனும் ஹரிஷ் ராகவேந்திராவின் குரல் பின்னணியில் சமர் வேந்தனுக்கு மட்டும் ஒலிக்க தன் பேச்சுக்கு பதில் வரவில்லை என்று மாதவி அவனை உலுக்கினாள். 

“டேய் உன்ன தான் என்னாச்சு”

“தேவதை வந்துட்டா டி”  என்று முப்பத்திரண்டு பற்களும் தெரிய சிரித்தான் அவன். அவனின் பார்வை போன போக்கில் மற்ற மூவரும் திரும்ப முதலில் காதம்பரியும் அவளின் பின்னே ஆதினியும் வந்து கொண்டிருந்தனர். சமருக்கு முகம் முழுக்க மகிழ்ச்சியும் மாதவன் மாதவிக்கு பேச போகும் விஷயத்தைப் பற்றிய கவலையும் இருக்க தூயவனின் முகம் மட்டும் சந்தேகத்தில் சுருங்கியது. 

‘இவ.. அவ தான’ எனும் யோசனையோடு தூயவன் ஆதினியைப் பார்க்க ஆதினியின் கண்களும் அதே யோசனையோடு அதிர்ச்சியில் விரிந்தது. 

“நீயா..” என்று தூயவனும் ஆதினியும் ஒருசேர ஒருவரையொருவர் பார்த்து அதிர்ச்சி மற்றும் எரிச்சலோடு இதயங்கள் அதிர கேட்க மாதவன், மாதவி, சமர் மற்றும் காதம்பரி இவர்கள் செயல் புரியாமல் முழித்தனர். 

தொடரும் அதிர்வுகள்..

ஹாய் மக்களே.. நீங்க எதிர்பார்த்தது சரி தான்.. ஆதினியை மிரட்டினவன் சாட்ஷாத் நம்ம தூயவனே தான். அப்படி அவங்களுக்குள்ள என்ன தான் நடந்துச்சுன்னு போக போக பார்ப்போம்.. ஆனா என்ன நடந்துச்சுன்னு தெரியுறதுக்கு முன்னாடியே பல சம்பவங்கள் நடக்க வேண்டியிருக்கு.. பொறுத்திருந்து பாருங்க..

கதை எப்படி போகுது மக்களே.. உங்களுக்கு பிடிச்சிருக்கா.. மறக்காம கமெண்ட் பண்ணுங்க .. உங்க கமெண்ட் தான் எனக்கு உத்வேகத்தை தரும்.. நன்றி மக்களே😍😍

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
7
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்