Loading

அதிர்வு – 5

தூயவன் இரண்டு தவறு செய்ததாக சோகமாக கூறவும் அதில் புரியாமல் விழித்த மாதவனும் மாதவியும் என்ன தவறென்று ஒரு சேர கேட்க அவனோ,

“வேறென்ன.. முதல் தப்பு ஸ்கூல்ல இவ கூட பிரெண்ட்ஷிப் வச்சது.. ரெண்டாவது தப்பு.. உங்க ரெண்டு பேருக்கும் இன்ட்ரோ கொடுத்தது.. அந்த ரெண்டு தப்ப அன்னைக்கு நான் செய்யாம இருந்திருந்தா.. இன்னைக்கு எனக்கு இந்த தலைவலி வந்துருக்குமா..” என்று கூற இருவரும் பாவமாக முழித்தனர்.

———————————

மாதவி. பதினோராம் வகுப்பிலிருந்து தூயவனின் தோழி. கிட்டத்தட்ட பத்து வருட நட்பு அவர்களுடையது. பள்ளிப்பருவத்தின் போது செய்யாத ஒரு குற்றத்திற்காக தூயவன் குற்றவாளியாக நின்ற போது அவனுக்கு ஆதரவாக பேசி அவன் மேல் தவறில்லை என்று நிரூபித்தவள் மாதவி. அதிலிருந்து அவர்களின் நட்பு துளிர்விட ஆரம்பித்திருந்தது. பெரிதாக யாரின் மேலும் நம்பிக்கை வைத்து பழகாத தூயவன் முதலில் நம்பி நட்பு பாராட்டியது மாதவியிடம் மட்டும் தான். 

சொல்லப்போனால் கல்லூரியில் தூயவனும் சமரும் நெருக்கமாக காரணமும் மாதவி தான். தூயவன் அவனின் விருப்பப்படி பிஎஸ்சி பயோடெக்னலாஜி பிரிவைத் தேர்ந்தெடுக்க மாதவியோ பிஏ பிரிவைத் தேர்ந்தெடுத்தாள் அதன்பின் எல்எல்பி படிக்க வேண்டும் என்ற நோக்கில். தூயவனுக்கு நம்பகத்தன்மை இல்லாத காரணம் அறிந்தவள் தன் நண்பனுக்கு அவனது பிரிவில் ஒரு நண்பன் வேண்டும் என்று நினைத்து தூயவன் வகுப்பில் பயிலும் சமரிடம் நட்பு பாராட்டி பிறகு தூயவனுக்கு பழக்கிவிட்டிருந்தாள். அன்றுதொட்டு இன்றுவரை மூவரும் மிக சிறந்த நண்பர்கள்.  

கல்லூரி சமயங்களில் தூயவனின் வீட்டிற்கு சமர் மற்றும் மாதவி அடிக்கடி வந்து போக சமரும் தூயவனும் மாதவன் மாதவி பெயர் பொருத்தத்தை வைத்தே அவ்வப்போது கேலி கிண்டல் செய்ய நாளடைவில் அதுவே அவர்களிருவருக்கும் ஈர்ப்பு ஏற்பட காரணமாகி காதலும் மலர தொடங்கி ஆறு வருடங்கள் ஆகிறது இன்றோடு. அடிக்கடி சண்டைகள் மேற்கொள்ளும் காதலான போதிலும் ஒவ்வொரு சண்டையிலும் அவர்களின் காதல் அதிகரித்ததே அன்றி குறையவில்லை. இவர்களின் சண்டையின் போது இடையில் மாட்டிக்கொள்வது தூயவனும் சமரும் தான். 

தோழியை விட்டுக்கொடுக்காமல் தூயவன் மாதவிக்கு ஆதரவாக நிற்க உடன்பிறப்பின் பாசம் அறியாத சமர் மாதவனை உடன்பிறவா சகோதரனாக மதித்து அவனுக்கு ஆதரவாக நிற்பான். இவ்வாறு அவர்கள் இருவருக்கும் ஆதரவாக பேசி தூயவனும் சமரும் வாக்குவாதத்தில் ஈடுபடும் நேரம் காதலர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து நண்பர்கள் இருவருக்கும் விபூதி அடிப்பது ஆறு வருடங்களாய் தவறாமல் நிகழ்ந்து வரும் வேடிக்கை. 

————————————————

தூயவன் மாதவன் மாதவியை அர்ச்சித்துக் கொண்டிருந்த நேரம் சரியாக சமர் உள்ளே வந்தான்.

“ஹாய் மாதவண்ணா.. ஹாய் டி மேதாவி.. ச்சீ டங்கு ஸ்லிப் ஆயிடுச்சு.. ஹாய் டி மாதவி..” என்க தூயவனோ,

“இதோ அடுத்த தலைவலி வந்துருச்சு” என்று வாய்விட்டே புலம்பினான். அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத சமரோ,

“நான் உனக்கு தலைவலி இல்ல மச்சான்.. உன் தலைவலிக்கு மருந்து.. ” என்று பெருந்தன்மையாக கூற வெளியில் முறைத்தாலும் அந்த கூற்று உண்மையென தூயவனும் அறிவான். 

“இவங்க ரெண்டு பேரு மூஞ்சிய பார்த்தா ஏதோ ஒரு சம்பவம் நடந்துருக்கு போல.. ரைட்டு என் மூளைக்கு வேலை வந்துருச்சு.. டெல் மீ வாட் இஸ் தி மேட்டர்” என்று கேட்க அவன் கூற்றில் நிஜமாகவே சிரித்துவிட்டான் தூயவன். பின் நடந்த அனைத்தையும் சமரிடம் கூற அவனோ,

“அடப்பாவிங்களா.. உங்க காதல வளர்க்க ஏதோ ஒரு பொண்ணு வாழ்க்கையைப் பணயம் வச்சுடீங்களே.. அநியாயம் அக்கிரமம்.. இதை நான் சும்மா விடமாட்டேன்.. பொறுத்தது போதும் தூயவா.. வென்குண்டெழு” என்று வசனம் பேச மாதவனோ,

“அவன் வெகுண்டெழுந்து வெக்ஸ் ஆகி போய் தான் உக்காந்துருக்கான்.. .. நீ வேற அவனை உசுப்பெத்தாத.. டேய் எப்போதும் நீ எனக்கு அவன் அவளுக்குன்னு தான டா சப்போர்ட் பண்ணுவீங்க.. இப்போ என்ன புதுசா ரெண்டு பேரும் எங்க ரெண்டு பேருக்கும் எதிரா நிக்குறீங்க..” என்க மாதவியோ,

“அதானே.. நீ அவன் பேச்சை கேட்காத தூயவா.. ஓவரா பேசுனா நைட் ஷிப்ட்டும் சேர்த்து கொடு இவனுக்கு” என்க,

“பாதகத்தி.. செய்றதெல்லாம் நீங்க ரெண்டு பேரும் செஞ்சுட்டு இப்போ என்னை சொல்றீங்களா” என்றான் காட்டமாக. மூவரின் பேச்சிலும் பொறுமையிழந்த தூயவனோ,

“மூணு பேரும் கொஞ்சம் மூடுறீங்களா” என்க,

“மூணு பேரும் மூடுங்க.. ரைமிங் நல்லா இருக்கு மச்சான்” என்று சமர் சிரிக்க தூயவனோ,

“ல்ல…. ரைமிங் நல்லா தான் இருக்கு.. பட் உனக்கு தான் டைமிங் சரி இல்ல மச்சான்.. அடங்குறியா கொஞ்சம்” என்று கூற பிறகு  தனது கிண்டல் பேச்சுகளை ஓரமாக வைத்தவன்,

“சரி டா கோச்சுக்காத.. இப்போ என்ன செய்ய போறோம்..” என்றான் மும்முரமாக. 

“அதான் தெரியல யோசிப்போம்..” என்றான் தூயவன். மாதவனோ,

“நீ அந்த பொண்ணுகிட்ட கொஞ்சம் பேசி பாரேன்.. நிலைமையை சொன்னா அந்த பொண்ணு புரிஞ்சுக்கும்னு தோணுது..” என்க,

“ஓஹோ.. சார் செஞ்ச தப்புக்கு நீங்க நம்ம வீட்டுல நல்ல பேரு வாங்குவீங்க.. அந்த பொண்ணு இப்போ பிடிக்கல வேணாம்னு சொல்லி அவங்க வீட்டுல கெட்ட பெயர் வாங்கணும்.. அதானே” என்று எகிறினான் தூயவன். 

“இல்ல டா அப்படி சொல்லல.. நம்ம வீட்டுல நான் உண்மைய சொல்லிக்குறேன்.. அதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. பட் அவங்க வீட்டுல அவ அப்பா அம்மா வருத்தப்பட கூடாது தான” 

“ஆமா இதெல்லாம் வக்கணையா இப்போ பேசு” என்றான் தூயவன் எரிச்சலாய். மாதவியோ,

“நாங்க தான் தெரியாம செஞ்சுட்டோம்னு சொல்றோம்ல டா.. அதையே மறுபடியும் குத்திக்காமிக்காத.. மாதவ் ஏற்கனவே இதை நெனச்சு கவலையா இருக்கான்.. உனக்கிட்ட சொன்னா அவனுக்கு கொஞ்சம் தைரியம் வரும்னு தான் வந்தோம்..” 

“ஓஹோ.. இல்லனா என்ன பண்ணிருப்பீங்க மேடம்.. மண்டபம் வரைக்கும் போய் அவமானப்படுத்திருப்பீங்க அப்படி தான” என்றவனுக்கு இன்னுமே கோபம் குறையவில்லை. அவர்கள் செய்ததும் நியாயமில்லை தானே. நிலைமை உணர்ந்த சமரோ,

“சரி விடு மச்சான்… ஏதோ சின்னஞ்சிறுசுங்க.. தெரியாம செஞ்சிருச்சுங்க.. நாம தான ஏதாச்சும் பார்த்து செய்யணும்.. திட்டுறத விட்டுட்டு நடக்கவேண்டியத யோசிப்போம்” என்று சமாதானம் செய்ய அதன் பிறகு சற்று மட்டுப்பட்ட தூயவன் யோசனையில் ஆழ்ந்தான். மாதவியோ,

“நான் வேணா அந்த பொண்ணுகிட்ட பேசி பார்க்கவா..” என்று கேட்க சமரோ,

“எதுக்கு இருக்குற பிரச்சனையா ரெண்டாக்கவா.. கம்முன்னு கிட டி நீ.. உனக்கு பேச தெரியாது” என்க,

“டேய் நான் ஒரு லாயர் டா.. எல்லாரும் அதை மறந்துட்டு பேசுறீங்க..” என்று கூற அதில் மற்ற மூவருமே சிரித்துவிட மாதவனோ,

“செல்லம் நீ ஊர் கதையை எல்லாம் நல்லா தான் பேசி வாதாடுவ.. ஆனா உன் சொந்தக்கதைன்னு வந்தா மட்டும் கோட்டை விட்டுருவ.. இருக்குற பிரச்சனைல நீ எக்குத்தப்பா பேசிட்டா அப்புறம் நம்ம லவ்வுக்கு நாமம் போட வேண்டிதான்.. நீ வேணா பாரு நம்ம சமர் தம்பி நல்ல ஐடியா கொடுப்பான்” என்று கூறிவிட்டு அவனைப் பார்க்க அவனோ,

“எனக்கொரு ஐடியா இருக்கு.. ஆனா அதை சொன்னா என் பாஸ் என்னை சாவடிப்பானே” என்று கூறிவிட்டு பார்க்க தூயவனோ,

“நீ முதல்ல ஐடியாவை சொல்லு.. அப்புறம் நான் சாவடிக்குறதா இல்ல சவுக்கால அடிக்குறதான்னு யோசிக்குறேன்” என்றவன் கேட்க எச்சிலை விழுங்கிய சமரோ,

“இல்ல மச்சான்.. இந்த விஷயத்தை அப்படியே விட்ருவோம்.. கல்யாணத்தன்னைக்கு மாதவன் அண்ணா மாதவிக்கு தாலி கட்டட்டும்.. அந்த பொண்ணோட அப்பா இப்படி ஏமாத்திட்டங்களேன்னு கதறும் போது.. அண்ணனுக்காக தியாகம் பண்ணி நீ அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ..  அவங்க லவ் சேர்ந்த மாதிரியும் ஆச்சு.. பிரச்சனையும் சால்வ் ஆன மாதிரியும் ஆச்சு.. எப்படி என் ஐடியா..” என்றவன் இல்லாத காலரைத் தூக்க அவனின் கழுத்தைப் பிடித்த தூயவன்,

“ஏண்டா நாயே… இதுங்க லவ்வுக்காக நான் என் லவ்வ தியாகம் பண்ணனுமா.. கொன்றுவேன் உன்னை” என்றவன் ஒரு வேகத்தில் உளறிவிட மாதவன் மற்றும் மாதவிக்கு பேரதிர்ச்சி. சமரோ,

‘மாட்டுனியா டா பம்பரக்கட்டை மண்டையா’ என்றபடி தூயவனைப் பார்க்க மற்ற இருவரும்,

“என்னது தூயவன் லவ் பண்றானா..” அதிர்ந்து கேட்க தூயவன் தலையிலடித்து கொண்டான் உளறியதை எண்ணி. பின்,

“இல்ல அது.. பியூச்சர்ல லவ் பண்ணலாம்னு” என்று கூறி சமாளிக்க எத்தனிக்க சமரோ,

“டேய் டேய் நல்லவனே.. கேவலமா சமாளிக்காத.. எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்துச்சு.. அதனால தான் இப்படி சொல்லி போட்டு வாங்குனேன்.. ஒழுங்கா உண்மைய சொல்லு.. ” என்றிட,

“சரி ஓகே.. நான் சொல்றேன்.. ஆனா இப்போ இல்ல.. முதல்ல மாதவன் பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டுவோம்.. அப்புறம் பொறுமையா சொல்றேன்..” என்று கூறிக் கொண்டிருக்க தூயவனின் அலைப்பேசி அலறியது. அவனின் அன்னை இந்திரா தான் அழைத்திருந்தார். மாதவனிடம்,

“டேய் அம்மா தான் கால் பண்ணிருக்காங்க” என்றவன் அழைப்பை ஏற்று பேச அவரோ,

“டேய் கண்ணா.. இன்னைக்கு மாதவன் சென்னை தான் வந்துருக்கான்.. உன் அண்ணியைப் பார்க்க போனாலும் போவான்.. தனியா போக கூச்சமா இருக்குன்னு உன்னை வர சொன்னா கூட போயிட்டு வா டா.. நீயும் அவளை பார்க்கல தான.. நான் நீங்க வருவீங்கன்னு அந்த பொண்ணுகிட்ட சொல்லிட்டேன்” என்றவர் விவரம் தெரியாமல் கூற அவனோ,

“அண்ணி தான மா.. இதோ பார்த்துட்டே இருக்கேன்” என்றவன் பல்லைக் கடித்தபடி மாதவியைப் பார்த்து கூற அவரோ,

“என்ன பா புரியல” என்று கேட்க,

“ஒண்ணுமில்ல மா போறேன்னு சொன்னேன்.. சரி நான் அப்புறம் கூப்பிடுறேன்” என்று கூறி அழைப்பைத் துண்டிக்க,

“அப்போ ஒரு பிளானோட தான் வந்துருக்க.. என்ன பேசன்னு ஐடியா கேட்க மட்டும் தான் நான்.. அப்படி தான” என்று மாதவனிடம் கேட்டான்.

“அதெல்லாம் இல்ல டா.. ஏன் அப்படி சொல்ற அம்மா என்ன சொன்னாங்க” என்று கேட்க தூயவனும் கூறினான். அதனைக் கேட்ட மாதவனோ,

“உண்மை தான்.. ஆனா உன் அண்ணி மாதவியைப் பார்த்து பேச தான் வந்தேன்.. அம்மாகிட்ட நான் எதுவுமே சொல்லல.. அவங்களா ஒன்னு புரிஞ்சு பேசுறாங்க.. பிலிவ் மீ டா தம்பி” என்றான் பாவமாக. சமர்,

“ரைட்டு.. அப்போ நாம இப்போ அவங்கள பார்க்க கண்டிப்பா போயே ஆகணும்.. அப்படி தான.. கச்சேரி கன்ஃபார்ம்” என்று சிரிக்க மாதவியோ,

“இதுவும் நல்லது தான்.. ஏதாச்சும் பேசி பாப்போமே.. ஒருவேளை அந்த பொண்ணுக்கும் லவ் ஏதும் இருந்து வீட்டுல கம்பெல் பண்ணதால கூட ஓகே சொல்லிருக்கலாம்ல.. அப்படி ஏதாச்சும் இருந்தா அவளே நமக்கு ஐடியா குடுப்பா தானே” என்று அவளது யோசனையைக் கூற தூயவனுக்கும் அது யோசிக்கும்படியாக இருந்தது. 

“அடியே நீ நிஜமாவே மேதாவின்னு இன்னைக்கு தான் நிரூபிச்சுருக்க..” என்க மாதவனோ,

“ஐடியா ஓகே தான்.. பட் பொண்ணு பார்க்க போன அப்போ அந்த பொண்ணு ஓகேங்குற மாதிரி தான் பேசுச்சு… அதான் யோசனையா இருக்கு” என்றிட மாதவியோ,

“அப்படி பார்த்தா கோவில்ல வச்சு நீ தான் வான்டெடா அந்த பொண்ண பிடிச்சுருக்குன்னு சொல்லி பேசுன.. அப்போ நீ பிடிச்சு தான் சொன்னியா..” என்று அவனிடமே திருப்பினாள்.

“பாயிண்ட்டு பிடிச்சு பேசுறீங்க வக்கீலம்மா” என்று சமர் கூறி சிரிக்க,

‘இவகிட்ட கொஞ்சம் கேர்புல்லா தான் பேசணும்.. நம்ம கேள்வியை நமக்கே திருப்புறா ராட்சசி..’ என்று மனதினுள் நினைத்த மாதவனோ,

“ஓ அப்போ என்னை மாதிரியே அவளுக்கும் ஏதாச்சும் சிட்டுவேஷன் இருக்கலாம்னு சொல்ற அப்படி தானே.. சரி ஓகே ட்ரை பண்ணி பாப்போமே.. நீ என்ன சொல்ற தூயவா..” என்க தூயவனோ,

‘அதுங்களே எதோ பண்ணுச்சுங்க.. அதுங்களே வந்து ஹெல்ப் பண்ணுன்னு காலுல விழுந்துச்சுங்க.. இப்போ அதுங்களே ஒரு ஐடியா யோசிச்சு சொல்லுதுங்க’ என்ற ரீதியில் அவர்களைப் பார்க்க சமரோ,

“மச்சான் உன் மைண்ட்வாய்ஸ் எனக்கு கேக்குது மச்சான்..” என்றிட அதில் சிரித்த தூயவனோ,

“ஆகமொத்தம் என்னை இன்னைக்கு வேலை செய்ய விடக்கூடாதுன்னு முடிவு பண்ணிடீங்க.. வாங்க போவோம்.. போய் பேசி பாப்போம்.. வேறென்ன செய்ய.. அந்த பொண்ணு செருப்பால அடிக்காம இருந்தா சரி தான்..” 

“அடிச்சாலும் அண்ணன் வாங்கிப்பாரு டா.. யு டோன்ட் வொர்ரி” என்ற சமருக்கு முறைப்பை பரிசாக அளித்த மாதவன் ஆதினிக்கு அழைப்பு விடுத்தான். அழைப்பை ஏற்ற ஆதினியோ,

“சொல்லுங்க மாதவன்.. உங்க அம்மா ஏற்கனவே சொன்னாங்க.. நீங்க வருவீங்கன்னு” 

“ஆமா ஆதினி.. கொஞ்சம் பர்சனலா பேசணும்.. அன்னைக்கு சரியா பேச முடியல அதான்.. வரலாம் தானே”

“ஓ தாராளமா வாங்க..”

“எப்போ வரது.. இப்போவே நேரா உங்க பேங்க்-க்கு வந்துரவா”

“இல்ல இல்ல பேங்குக்கு வர வேணாம்.. இன்னும் நான் இங்க யாருக்கும் மேரேஜ் விஷயத்தைப் பத்தி சொல்லல.. லன்ச் டைம் ஏதாச்சும் ஹோட்டல்ல மீட் பண்ணுவோம்.. நான் ஒன் ஹார்ல லொகேஷன் அனுப்புறேன்..” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்து கதம்பரியை அழைத்தவள்,

“ஹே காது.. மாதவன் என்னை பார்க்க வாறாராம் டி.. நீயும் என்கூட வா.. லன்ச் வெளிய சாப்பிட்டுக்கலாம்..” என்றிட அவளோ,

“என்னடி ரெண்டு நாள் முன்னாடி தான பார்த்துருக்கீங்க.. அதுக்குள்ள தேடலா.. நீ நடத்து நடத்து”

“அடச்சீ.. மூடிட்டு வேலைய பாரு.. ” என்று பேச்சைத் துண்டித்தாள்.

‘மாதவன் ஏன் திடிர்னு தனியா பேசணும்னு கூப்பிடுறாரு.. என்னவா இருக்கும்’ என்ற யோசனையில் சிறிது நேரம் ஆதினி கண்மூடி அமர மூடிய இமைகளுக்குள் “உன்ன ஒருத்தன் கல்யாணம் பண்ணிக்க போறான்னு தெரிஞ்சாலே உன்னைப்பத்தி சொல்லி அவனை ஓட விட்டுருவேன்” என்று கூறிவனின் முகபாவனையும் காதில் அவன் கூறிய வார்த்தைகளும் ஒலிக்க சட்டென கண்விழித்தவளுக்கு இதயம் லேசாக அதிர தொடங்கியது. 

‘இந்த உர்ராங்கொட்டான் சொன்னது வேற அடிக்கடி வந்துட்டு போது.. எதனால இப்படி எல்லாம் நடக்குது.. கல்யாணத்துல ஏதும் பிரச்சனை வந்துருமா.. இல்ல இவனால பிரச்சனை வரும்னு கடவுள் நமக்கு சிம்பாலிக்கா சிக்னல் கொடுக்குறாரா..’ என்று ஒரு மனம் யோசிக்க மறு மனமோ,

‘உனக்கு அவன் பேரு தெரியாது அவனுக்கும் உன் பேரு தெரியாது.. சென்னைல ஏதோ ஒரு மூளைல இருக்கறவன் ஏன் உன் கல்யாணத்தை நிறுத்தணும்.. சும்மா நீயே கற்பனைப் பண்ணிக்காத..’ என்றிட அதுவும் சரியாக தான் தோன்றியது பெண்ணவளுக்கு. 

‘சரி ஓகே.. இன்னும் கொஞ்ச நேரத்துல மாதவன் எதுக்கு வராருன்னு தெரிஞ்சுற போகுது.. அதுவரை பொறுமையா இருப்போம்’ என்றவள் மாதவனுக்கு உணவகத்தின் அட்ரஸை அனுப்ப சிறிது நேரத்தில் அங்கு நால்வரும் கிளம்ப ஆயத்தமாயினர். 

தொடரும் அதிர்வுகள்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்